
“வேண்டாம் அருந்ததி… நீயும் என்னோடவே சாப்பிடு… அப்போ தான் சீக்கிரமா கிளம்ப முடியும்…” என்று சொன்னதை தந்தையும் ஏற்றுக்கொண்டு தலை அசைக்க… வேறு வழியின்றி அவனுக்கு எதிரில் அமர்ந்து உணவு உண்ணத் தயாரானாள்.
தட்டை சரியாக போட்டுக் கொண்டு அமர்ந்தவளின் முன்னால் ஒரு பவுல் (Bowl) நீட்டப்பட்டது. என்ன என்று குனிந்து பார்த்தவளுக்கு அது ஏதோ புதுவிதமான உணவாக தோன்றியது… சூப் போல நீர்த் தன்மையுடனும் அதே நேரம் கொஞ்சம் கொழகொழவென்றும் இருந்த அந்த உணவை விசித்திரமாக பார்த்தவள் வேகமாக மற்றவர்களின் தட்டைப் பார்த்தாள்.
வெண் பொங்கல், இட்லி , சாம்பார், தேங்காய் சட்னி, புதினா சட்னி, வடை..என்று விதவிதமான பதார்த்தங்கள் பரப்பி வைக்கப்பட்டு இருக்க… பாவமாக நிமிர்ந்து அன்னையைப் பார்த்தாள் அருந்ததி.
‘என்னம்மா கொடுமை இதெல்லாம்?’ என்று மகள் பார்வையால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் நகர்ந்து விட… அவளது கேள்விக்கு பதில் அக்னிபுத்திரனிடம் இருந்து வந்தது.
“உன்னோட உடம்பில் தேவை இல்லாத கொழுப்பை குறைக்க. உன்னோட சாப்பாட்டு வகைகளை மாத்த சொல்லி நான் தான் அவங்க கிட்டே சொன்னேன். இனி நான் சொல்றது தான் உனக்கு சாப்பாடு…”என்று அமர்த்தலாக சொல்லி விட்டு அவன் சாப்பாட்டில் முனைப்பாக காட்டிக் கொள்ள.. முன்தினம் இரவு அவன் பார்த்த பார்வைக்கு பொருள் என்ன என்பது அவளுக்கு புரிந்து போனது.
‘இனி இந்த மாதிரி நல்ல சாப்பாட்டை நீ சாப்பிடவே முடியாதுன்னு தான் சொல்லி இருக்கான்’ என்று எண்ணியவளுக்கு இதை கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா… வேற எதுவும் ஐடியா செஞ்சு இருக்கலாம். முன்னாடியே ரூமில் உட்கார்ந்து கொஞ்சமா எதையாவது மொக்கி இருக்கலாம்.
‘சண்டாளா… கடன்காரா… உர்ராங்குட்டான்… நீ எல்லாம் உருப்படுவியா? என்னை சாப்பிட விடாம செஞ்சுட்டு என்னோட கண் எதிர்லயே இத்தனை அயிட்டத்தையும் நொட்டை விட்டுக் கொண்டு மொக்குறியே.. இதெல்லாம் உனக்கு செரிக்குமா… ஆகாது.. ஆகவே ஆகாது… அடேய்! நான் எல்லாம் பசிக்காத நேரத்திலேயே நாலு தட்டு இட்லி சாப்பிடுறவ… இப்படி கொள்ளைப் பசியில் இருக்கும் பொழுது தம்மாத்தூண்டு கொடுத்தா எப்படி பத்தும்… அய்யயோ.. பசியிலேயே செத்துடுவேனே…’ என்று பசியில் பாதியும், அவன் மீது இருந்த கோபத்தில் பாதியுமாக அவனை திட்டித் தீர்த்தாள் அருந்ததி.
தலை நிமிராமல் சாப்பாட்டில் கவனம் போல காட்டிக் கொண்டாலும் மௌனச் சிரிப்பில் குலுங்கும் அவனது உடல் கண்டு அவளுக்கு ஆத்திரம் வந்தது. கோபம் வந்து என்ன பயன்… இப்போ சாப்பிட முடியாதே… இன்னிக்கு ஒருவேளைக்கு மட்டும்னா கூட பரவாயில்லை… இவன் சொல்றதைப் பார்த்தா கடைசி வரை எனக்கு கஞ்சி தான் போலவே’ என்று எண்ணி நொந்து போனாள்.
Was waiting for this for a long time. Thanks.