கரு 3
தன் அறையில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள் தாருண்யா, பெரியம்மாவிடம் பேசிய பிறகு மனம் பாரமாய் இருந்தது,, கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வந்தது
“உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு” என்ற வரிகளுக்கும் வாழ்க்கைக்கும்தான் எவ்வளவு சம்மந்தம், தன் துன்பம் பெரியது என்று நினைத்தவளுக்கு சந்தோஷியின் நிலைமை தன்னை விட மோசமாக தோன்றியது. அறைக்கு வந்து வெகு நேரம் ஆகியும் அவள் மனம் ஆறவே இல்லை, பெரியம்மாவின் வார்த்தைகள் அவளின் மனதிற்குள் வட்டமிட்டது,
அவளிடம் பேசும் பொழுது லேசாக துளிர்த்த கண்ணீரை அடக்கியவர் மேலும் தொடர்ந்தார் “பரத்திடம் நான் பேசிய பிறகு என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியல, நாளுக்கு நாள் சந்தோஷியின் நடவடிக்கைகள் மோசமாகத்தான் போய் கொண்டுஇருந்தது, அவளை என்னால் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகமுடியவில்லை, நானாக போய் இவளின் நிலமையை எடுத்து சொன்னவரை என்னிடம் டாக்டர் சொன்னது இதுதான அவள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாளோ அதை விட்டு வெளியே வரவேண்டும் என்பது மட்டும் தான், நான் முயன்று போராடி தோற்ற பிறகுதான் சிதம்பரமிடம் இதை சொன்னபோது உன்னை பற்றி சொல்லி அவள் வயதுடைய பெண்ணால் அவளை சரி செய்ய முடியும் அதனால் உன்னை அனுப்பிவைக்கிறேன் என்றார்”.
“நீ நன்றாக யோசி இது உன் வேலை இல்லை ஆனால் இந்த உதவி உன்னால் செய்ய முடியும் என்றால் எனக்கு அதை விட வேறு சந்தோஷம் இல்லை” என்று கேட்டவரிடம் யோசித்து சொல்வதாக வந்தவளின் நினைவு மட்டும் அதிலேயே யோசித்தது பெரியம்மா தன்னிடம் நாடும் உதவி தன்னால் செய்ய கூடியதா இல்லையா என்று இன்னமும் தெரியவில்லை ஆனால் சந்தோஷிக்கு ஏதாவது செய்து அவளை மாற்ற வேண்டும் என்பது மட்டும் அவளின் மனதில் உறுதியாக தோன்றியது, நாம் படி எடுத்து வைப்போம் அந்த ஆண்டவன் நம்மை வழி நடத்துவான் என்று அம்மா கூறுவார் அதன்படி நடக்க வேண்டியதுதான் என்று நினைத்தவள் அதன் வழிமுறைகளை யோசிக்க ஆரமித்தாள்.
அறையில் யோசனையுடன் கண் மூடி அமர்ந்திருந்த பெரியம்மா அரவம் கேட்டு திரும்பி பார்க்க தாருண்யா புன்னகையுடன் நின்றிருந்தாள்
அவரின் ஆவலை உணர்ந்தவள் போல்
”நான் முயற்சி செய்கிறேன் அம்மா, என்னால் எனக்கு தெரிந்தவரை கண்டிப்பாக செய்கிறேன் “
கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டு “செய்யம்மா, இப்பவும் நீ இதை சாதித்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை, ஆனால் இதை நீ செய்வதால் ஒரு அறியா பெண்ணின் வாழ்வு மலரும், உனக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னை கேள்”.என்றவர் மேற்கொண்டு அதை பற்றி அவளிடம் கேட்கவில்லை
அவளை வீல் சாரை தள்ள சொல்லியவர் தோட்டத்தின் மறு பக்கம் ஒரு சின்ன வீடு இருந்தது அங்கு சென்று “குணா” என்று குரல் கொடுத்தார் “என்ன பெரியம்மா எத்தனை தடவை தனியா வராதீங்க என்று சொன்” என்று குரல் கொடுத்து வெளி வந்தவளின் பேச்சு அவர்களை பார்த்ததும் பாதியிலேயே நின்றது ஒடி அவர்களிடம் வந்தவள் தாருண்யாவை பார்த்து
“வாங்கக்கா, சாயங்காலம் நீங்க மண்டபத்தில் இருக்கறத பார்த்துட்டு உங்க கிட்ட அங்க நிக்க வேணாம்னு சொல்லத்தான் நான் ஓடி வந்தேன் ஆனா அதுக்குள்ள அந்த பிசாசு வந்து உங்கள கத்திட்டா , நான் கூட நீங்க பயந்துடீங்கனு நெனச்சேன் ஆனா அவள விட்டீங்க பாரு ஒரு அறை, ப்பா… அசந்து போய்ட்டேன், சண்டிராணிய அடக்க சரியான ஆள் நீங்க தான்க்கா”
“ஏய் வாயாடி, சந்தடி சாக்குல என் பேத்திய பிசாசு, சண்டிராணினு சொல்றியா உன்னை இரு வெச்சிக்கறேன்” என்று சிரித்தவாறு, தாருண்யாவை பார்த்து
“இவ பேர் குணசுந்தரி நம்ம மேனேஜர் சந்திரன் பொண்ணு, என்னடா வேலை செய்றவங்களோட பொண்ணு வீட்டு பொண்ண திட்டறாளேன்னு பார்க்கரியா, இவ எங்க வீட்ல பொறக்கலயே தவிர நம்ம வீட்டு பொண்ணு தான் மா இவளும் சந்தோஷியும் ரொம்ப நெருங்கிய பிரெண்ட்ஸ், உண்ண மாதிரியே நியாயமா பேசுவா, அதான் அவள இவ இந்த திட்டு திட்டரா, உனக்கு அவள பத்தி நிறைய விவரங்கள் தருவா, நீ இவள உன்கூடவே வெச்சிக்க உனக்கு எந்த உதவினாலும் செய்வா” என்றவரிடம் சரி என்று உரைத்தவள் அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டுக்குள் வந்தனர்.
தான் மட்டும் தனியாக அவளை மாற்ற வேண்டும் என்று நினைத்தவளுக்கு குணாவின் துணை பெரும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது,
அவளது மொக்கை பேச்சு உட்பட எல்லாமே தாருண்யாவிற்கு பிடித்தது.
முதல் இரண்டு நாள் அவளது வேலைகளை மட்டும் பார்த்தவளுக்கு அந்த இடம், வீடு, மனிதர்கள் எல்லாம் பழகியது, குணாவிடம் சாயங்கால வேளைகளில் அரட்டை அடித்துக் கொண்டே சந்தோஷி பற்றிய விவரங்களை பேசுவதும் வழக்கமாக இருந்தது, தவிர இந்த இரண்டு நாட்களாக சந்தோஷி தன்னை காணாத வண்ணம் பார்த்து கொண்டாள், இதனிடையில் ஒருநாள் குணா அவசரமாக தாருண்யாவை அவள் வேலை செய்து கொண்டிருந்த போது மொபைலில் அழைத்தாள்,”
அக்கா, பிசாசு பற்றி புதுசா தகவல் கேட்டீங்களே, அது இன்னைக்கு ஏதோ ஒரு ஆஸ்ரமத்துக்கு போகுது, அங்க அடிக்கடி போகுமாம் நான்தான் அவ என்கூட பேசரத நிறுத்திட்டானு அவ எங்க போரா வர்றானு தெரிஞ்சிக்கரத விட்டுட்டேன், இப்ப உங்களுக்காக டிரைவர் அண்ணாவிடம் சொல்லி இருந்தேன் அவங்க தான் விஷயம் சொன்னாங்க” என்றாள்.
“பெரியம்மாவுக்கு தெரியுமா குணா”
“தெரியும் கா, அவ எவ்வளவோ விஷயத்துல மொரடா இருந்தாலும் ஏதோ இந்த மாதிரி சேவையாவது செய்யறாளேன்னு விட்டுட்டேன், நான் எனக்கு தெரிஞ்ச ஆசிரமம்னா அவளை பார்த்துக்க ஆள் வைப்பேன் என்பதற்காகத்தான் கொஞ்சம் தள்ளி இருக்குற இடமா போரா அதான் அவள தொந்தரவு பண்ணலனு சொன்னங்கக்கா” என்றாள்
இதில் வேறு ஏதோ விஷயம் இருப்பதாக தாருண்யாவிற்கு தோன்றியது “குணா ரெடியா இரு, நான் வரேன்” என்றவள் பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு வாசலில் வந்தவள் அங்கு நின்றிருந்த குணாவை பார்த்து கை அசைத்தாள்
“வழக்கம் போலதான் அக்கா , டிரைவர் அண்ணாவை திட்டிக்கொண்டே போனா, ஆத்திரமா வந்தது இருந்தாலும் மறஞ்சு பார்த்திட்டு இருகரத தவிர வேற ஒண்ணும் பண்ண முடியல”
“சீக்கிரம் மாறிடுவா குணா பழயபடி உன்னோட பெஸ்ட் பிரெண்டா மாறிடுவா பாரு” என்று சொல்லிக்கொண்டே அழைத்திருந்த கால் டாக்ஸியில் ஏற சொன்னாள், யோசனையாக பார்த்தவளிடம்
“வீட்டு கார்ல போனா கண்டுபிடிக்க வாய்ப்புகள் அதிகம் அதான்” என்று டிரைவரிடம் குணா ஏற்கனவே கேட்டு வைத்திருந்த இல்லத்தின் விலாசத்தை சொல்லி அங்கு இறங்கினார்கள்
சுற்றிலும் மரம் சூழ்ந்தபடி பரந்து விரிந்திருந்த ஆசிரமத்தை பார்த்துக்கொண்டே சென்றவளிடம்
“அக்கா சண்டிராணியோட அலப்பறைக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமே இல்லையே அவளுக்கு இந்த இடத்துல என்ன வேலனு தெரியலையே, ஒரு வேளை சிஸ்டரை பிளாக்மைல் செஞ்சு வச்சிருக்குமோ, அந்த மொகரகட்டையலாம் பார்த்தா சோஷியல் சர்விஸ் பண்ற மூஞ்சிமாதிரி தெரியலயேக்கா “ என்றவளை முறைத்தபடி ஆசிரமத்துக்குள் போகாமல் சுத்தி வந்தாள்
அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தவள் உற்றார் உறவினர் இல்லாமல் தன் அடையாளம் தெரியாமல் இருந்தாலும் அந்த குறைகளை நினையாமல் வாழும் அவர்களிடம் தான் எத்தனை முதிர்ச்சி என்று யோசித்தவளின் பார்வை ஒரு இடத்தில் அதிர்ச்சியோடு நின்றது
அவளின் பார்வையை தொடர்ந்த குணாவும் அதிர்ந்தாள்
அங்கு கையில் ஒரு பச்சை குழந்தையை கையில் ஏந்தியபடி கண்களில் நீர் வழிய ஒரு மரத்தில் சாய்ந்து நின்றிருந்தாள் சந்தோஷி.