கரு-2
லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு இருந்தவளின் சிந்தனை மட்டும் பெரியம்மாவின் வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தது, அவர்கள் பேச்சில் அவள் வெறும் கணக்கு வழக்கு பார்க்க வந்ததாக தோன்றவில்லை இதில் வேறு ஏதோ இருக்கிறது, யோசித்துக் கொண்டிருக்கும்போதே தங்கம் வந்து அவளை பெரியம்மா அழைப்பதாக கூட்டி சென்றார்.
எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார் அவளின் வரவை உணர்ந்து திரும்பினார் “வாம்மா இப்படி உட்கார்”. அது தானியங்கி சூழல் நாற்காலி என்பதால் தானே நகர்ந்து அவள் எதிரில் கொண்டுவந்தார்.
“என்னம்மா , நாம அடிச்சதுக்கு திட்டுவாங்கன்னு நெனச்சா இவங்க பாராட்ராங்களேன்னு நினைக்கிறியா”
“இல்லம்மா நியாயமா யோசிக்கரவங்க தப்புன்னு கண்ணில் படுகிற விஷயங்களை தட்டி கேட்டா தப்பா நினைக்க மாடங்கன்னுதான் நினைக்கறேன்”
“உண்மைதான்மா, ஆனா ஓருவரோட பேச்ச வெச்சு அவங்கள தப்புன்னு சொலிடமுடியாது, சூழ்நிலைகள் கூட ஒருத்தர மாத்தமுடியும்”
தான்தோன்றிதனமும் திமிரும் கூட அப்படி பேசவைக்கும் என்று தான் நினைத்ததை சொல்லாமல் விட்டவள். “இருக்கலாம்மா, நான் யோசிச்சிட்டு இருந்தது அவ வார்த்தைகளை பத்தி இல்ல, ஆனா, என் வேலை வெறும் கணக்கு வழக்கு இல்லயோனு தோணிச்சு”
சிறிது நேரம் பேசாமல் இருந்தவர் ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தார் “ நீ வந்ததும் ஆரம்பிக்க வேண்டாம்னு தான் மா நான் சொல்லல, ஆனா உன்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம்தான், உன்னை அனுப்பிச்ச சிதம்பரம் என்னோட கணவரோட பிரண்டு எங்க குடும்பத்தோட எல்லா விஷயத்துலயும் அக்கறை உள்ளவர், இவக்கூட என்னால போராடமுடியலன்னு அவர்கிட்ட சொன்னப்பதான் உன்னபத்தி சொல்லி நீ அவளோட பழகி அவளை மாத்த முடியும்னு சொன்னார்”
“ எதுக்காக மா? அவள மாத்த நான் யாரு, தவிர ஒருவருடைய பிறவி குணத்தை யார் நினைச்சாலும் மாத்த முடியாது, ஏற்கனவே முதல் சந்திப்பிலேயே ரெண்டு பேருக்கும் ஏக பொருத்தம் ஆயிடுச்சு, நான் தள்ளி போனாலே பார்க்கும் போது பிரச்சினை வரும் போல இதுல அவளை மாத்தணும்னு நினைச்சு பேசினா அவ்ளோதான், நீங்க நினைக்கிற மாதிரி என்கிட்ட அவ்ளோ பெரிய திறமைலாம் இல்ல, இது சரியா வராது, இதுக்காகதான் நீங்க என்னை வேலைக்கு எடுத்திருந்தா நான் கெளம்பிடறேன் மா , சிதம்பரம் அங்கிளிற்கு பொதுவாக என்னை பத்தி நல்ல எண்ணம் அதிகம் அதுதான் உங்ககிட்ட அப்படி சொல்ல வெச்சிருக்கு ஆனா அது உண்மை இல்லம்மா”
கடகடவென்று தன் நிலையை புரிய வைக்கும் வேகத்துடன் பேசியவளை தடுத்து,
“இல்ல, அவளை மாத்துவதுக்காக மட்டும் நான் உன்னை கூப்பிடலை உன் வேலை கணக்குகளை சரி பார்ப்பது மட்டும் தான் நான் சொல்ல போறதை கேட்டு நீ முடிவெடு அப்போவும் நீ முடியாதுன்னு சொன்னாலும் சரி,ஆனால் உன் பழக்கம் அவளை மாத்தும்னா எனக்கு அதைவிட வேறு சந்தோஷமே இல்ல, முன்னது வேலை ஆனா பின்னது உதவி, முதலில் சிதம்பரம் சொன்னார் என்ற வார்தைக்காகத்தான் இந்த விஷயத்தை யோசித்தேன், நான் முதலில் உன்னை பார்த்தபோது எனக்கு நம்பிக்கையே இல்லைமா ஆனா நீ அவளை அணுகிய முறை ,அது அவளை வழிக்கு கொண்டு வரும்னு இப்ப நான் நம்பறேன்”
ஏதோ பேச ஆரமித்தவளை கையமர்த்தியவர், “பிறவி குணத்தை மாத்துவது கஷ்டம்தான் ஆனால் அதுகூட முயன்றால் முடிகிற விஷயம் தான் வழி ஒழுங்காய் இருந்தால் நிச்சயம் முடியும்னு நான் நினைக்கிறேன், இவள் விஷயத்தில் இது பிறவி குணம் இல்லைமா, நீ அவளை பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டா அவளை புரிஞ்சு சரி செய்ய முடியும்” என்றபடி அவளை பார்த்தவர் “உன்னால் முடியும் என்று நான் நன்றாகவே நம்புகிறேன் தரும்மா”
தரும்மா என்ற அழைப்பு அவளை சிறிது இளக வைக்க , அவர் தொடந்தார்,”பார்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் முன்பின் அறிந்திடாத ஒருவரிடம் சொல்லக்கூடிய விஷயமா இதுன்னு நீ யோசிக்கலாம் ஆனா எனக்கு உன்ன பார்க்கும் போது மூணாவது மனிதராக எண்ணத் தோணலை உன் அணுகுமுறையால் அவளை நீ கண்டிப்பா மாத்துவேனு நம்பி தான் இதை சொல்றேன்” என்று சிறிது இடைவெளி விட்டவர் தொடர்ந்தார்
“அவள் சந்தோஷி, என் தங்கை மகள், ரொம்ப நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறகு சந்தோஷத்தை தந்தவள் என்பதால் அந்த பேர், என் கூட பிறந்தவர்கள் ரெண்டு பேர் மூத்தவனுக்கு இரண்டு பையன், தங்கைக்கு பிறந்தவள் தான் மா இவ, எனக்கு கல்யாணமாகி குழந்தை இறந்து பிறந்தது அதுக்கப்புறம் குழந்தை தங்கவே இல்லை நான் வேதனையில் தவிக்கிறது பொறுக்காமல் என் அண்ணன் என்கிட்ட அவன் முதல் பையன விட்டுட்டு இன்னொரு பையனோட கோயம்பத்தூரில் வசிக்கிறான்,
அன்னிலேர்ந்து பரத் எங்களுக்கு வரமாய் வந்தான் அவங்க மாமா கூட பிசினஸ் பார்த்துட்டு இருந்தவன், அவர் போனதுக்கு அப்புறம் அவன்தான் மொத்த பிசினசையும் பார்த்துக்ககறான், விடுமுறைல எல்லாரும் இங்கதான் மா இருப்போம்.
சந்தோஷி இருக்கற இடம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும், எல்லார்கூடயும் அவ்ளோ அன்போட பழகுவா, இவ்வளவு ஏன் அவகிட ஒருத்தர தப்பா பேசினா அவங்க பக்கம் இருக்கிற நியாயத்தை தெரிஞ்சிக்கிட்டு தான் அவங்கள தப்பா இல்லையான்னு முடிவு பண்ணனும் என்றெல்லாம் சொல்லுவா, அவளோட ஃபிரண்ட்ஸ் இங்க யார் என்றால் இங்க வேல செய்யறவங்க பசங்க தான் இப்படி இருந்தவள அவங்க அம்மா அப்பா பிஸினஸ் படிப்பு அது இது என்று சொல்லி இங்கு வருவதை கொஞ்ச நாளா நிறுத்திட்டாங்க.
திடீரென்று ஒரு நாள் எங்கள் நிம்மதியை குலைக்க அந்த கொடூரமான செய்தி வந்தது என் தங்கையும் அவள் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து.. நான் கனவாய் இருக்கும், தப்பான தகவலாக இருக்கும் என்று நம்பிக்கையும் தவிப்பும் ஒன்று சேர காத்திருந்தேன் பரத் தகவலை உறுதி செய்து என்னை அண்ணன் வீட்டில் விட்டு விட்டு அவன் தம்பியுடன் அவர்கள் இருந்த இடமான மும்பை சென்று எல்லாவற்றையும் கவனித்து விட்டு வெறும் உயிரற்ற உடல்களை கொண்டு வந்தான்
சந்தோஷியை அவன் கூட்டிக்கொண்டு வந்தபோது அவள் கண்ணில் உயிரே இல்லை, ஒருசேர பெற்றோர்களை பறிகொடுத்த வேதனையில் அப்படி இருக்கிறாள் என்று நினைத்தோம், பிறகும் எல்லாம் கொஞ்சம் ஓய்ந்த பிறகு அவளின் நடவடிக்கைகள் முன்பு போல் இல்லை என்று நான் கவனித்தேன் முதலில் எங்கேயோ இலக்கற்று வெறித்துக் கொண்டு இருந்தவள் பிறகு காரணமே இல்லாமல் கோபமாய் நடந்துகொள்ள ஆரம்பித்தாள் திமிராய் பேசினாள் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை நாங்கள் எல்லோரும் எங்களால் முயன்ற வகையில் அவளை தேற்ற முயன்று தோற்றுப் போனோம்.
கடைசியாக அவளை ஒரு நல்ல சைகரியாட்டிஸ்ட்கிட்ட கூட்டிட்டுபோகலாம் என்று அவளிடம் பேசினேன் அவள் கடைசியாய் என்னிடம் சாதாரணமான குரலில் நான் நொறுங்கும் அளவு வார்த்தைகளை சொன்னாள் “இதுவே எல்லாத்துக்கும் கடைசியாய் இருக்கட்டும் இனி என்னை மாற்ற ஏதாவது முயற்சி செஞ்சா நான் தற்கொலை செஞ்சுப்பேன் ஞாபகம் இருக்கட்டும் அந்த பழைய சந்தோஷி செத்து போய்ட்டா இனி அவ வரவும் மாட்டா”.
பயம் எப்படி இருக்கும் என்பதை அந்த வார்த்தையில் எனக்கு காட்டினாள். பரத் அப்போ ரொம்ப பிசி தன் பிஸினஸ் என்னோட கணக்கு வழக்கு தவிர என் தங்கை குடும்பம் பண்ணிட்டு இருந்த பிசினஸ் என்று எல்லாவற்றையும் பார்க்க நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இரூந்தவனை பிடித்து இவளை பற்றி கேட்டேன் அவன் சொன்னது இதுதான்
“பெரியத்தை, அவள் பார்க்க கூடாத கொடூரத்தை பார்த்திருக்கிறாள், சாவின் விளிம்பில் இருந்தவளை போராடித்தான். மீட்டோம் இதற்கு மேல் என்னிடம் எந்த விடையும் இல்லை, அவளை அவள் போக்கில் விட்டு விடுங்கள்” என்றான்.