கரு 1
அந்த காம்பவுண்டு கேட்டு முன் நின்ற ஆட்டோ, ஹாரன் சத்தத்தை எழுப்பியது
“ரொம்ப பழமையான கட்டடம்மா ஆனா எப்படி அதோட கம்பீரம் குறையாம இருக்குது பாருங்க” என்று ஓட்டுனர் கூறியதும் தன் நினைவுகளில் இருந்து மீண்டவளாய் அந்த கட்டிடத்தை பார்த்தாள் தாருண்யா ..
அங்கிள் கூறியது போல நூறு வருட பழமை அதற்கு கம்பீரத்தை அதிகமாகவே அளித்திருந்தது, பல தலைமுறைகளை சுமந்து வாழ்ந்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது போல் கர்வமாய் வீற்றிருந்து அந்த வெள்ளை யானை. கற்பனைகளை கட்டியவள் அங்கிருந்த காவலாளி ஓடி வந்து அவளிடம் விவரம் கேடடறிந்து கதவை திறந்துவிட தன் பொருட்களுடன் இறங்கியவளின் கால்கள் முன்னே செல்ல தயங்கியது,
“நம்ப மனசு தான் மா எல்லாத்துக்கும் அடிப்படை நீ இனிமே தைரியமா இருக்கணும் என்ற எண்ணத்தை வளர்த்துகணும், அது உன்னை முன்னேற்றும்”
சிதம்பரம் அங்கிள் சொன்னது நினைவில் வர, உள்ளே சென்றவளை ஒரு பெண் எதிர்கொண்டாள்
“ வாங்கம்மா, நீங்க வர்றீங்கனு லெட்டர் வந்தது , இந்த சோபால உக்காருங்க இப்ப பெரியம்மா வருவாங்க”,
அங்கு அமர்ந்திருந்தவளுக்கு ஒருவர் மோர் கொண்டு வந்து கொடுத்தார், அதை பருகியவளளின் பார்வை அந்த வீட்டின் கலைநயத்தை ரசித்தது இயல்பாகவே ரசனை மனம் இருப்பதால் அங்கு மாட்டியிருந்த ஓவியங்களும், கலைபொருட்களும் அவள் மனதை கவர்ந்தது நிச்சயம் இங்குள்ள மனிதர்கள் கலைநயமிகவர்கள் அது போல நல்ல மனமும் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவள் மனம் பிரார்த்தித்து.
அவள் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் வீல் சேரில் வந்தார். அவரை பார்த்ததும் கால்கள் தானாக எழுந்து நிற்க அவர் அருகில் வந்து அவளை அமர சொன்னார்.
“வாம்மா, நீ வருவேனு சிதம்பரம் போனில் சொன்னார், உன் வேலை ரொம்ப கஷ்டமானது இல்ல ஏற்கனவே நான் பார்த்துட்டு இருந்தது தான், உடம்பு சரி இல்லாம போகவே நான் நம்பிக்கையான ஆள் கேட்டேன் அவரும் உனக்கும் இப்ப ஒரு பாதுகாப்பு வேணும் உன் வேலயோட இதையும் பார்த்துப்பேன்னு சொன்னாரு, பரத் இதை பார்த்துக்கறேன்னு சொன்னான் நான்தான் அவனுகிருந்த டென்ஷன்ல இதையும் சேர்க்க வேண்டாம்னு பார்த்தேன். மேலும்” என்று ஏதோ சொல்ல ஆரமித்தவர் தயங்கி
“ நீ இப்பதானமா வந்திருக்க கொஞ்சம் ரெஸ்ட் எடு வேலை விஷயம்லாம் நாளைக்கு பேசிக்கலாம், உனக்கு தங்கர இடம் சாப்பாடு எல்லாம் தங்கம் சொல்லுவா” என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றுவிட்டார்.
அன்று முழுவதும் தன் பொருட்களை அடுக்கி, ரூமை ஒதுக்கி வைத்தவள் குளித்து விட்டு தங்கம் கொண்டு வந்த உணவை அங்கேயே உண்டுவிட்டு மறக்காமல் சிதம்பரத்திற்கு போன் செய்து பேசினாள்
“தரும்மா, நீ வந்தது எல்லாம் பெரியம்மா போனில் சொன்னாங்க அங்க எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா இரும்மா” என்றவரிடம் நன்றி தோன்றியது என்னதான் போதிய பணம் வசதி இருந்தாலும் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகும் பொழுதுதான் தீயவர்களுக்கும் நல்லவர்களுக்கும் அடையாளம் தெரிகிறது.
அந்தி சாயும் நேரம் வரை புத்தகத்துடன் பொழுதை கழித்துக் கொண்டிருந்தவள், அவள் அங்கு வரும் பொழுது பார்த்த தோட்டத்தை சுற்றி பார்க்க வெளியில் வந்தாள்.
தோட்டத்தை சுற்ற ஆரமித்தவளுக்கு
அங்குள்ள மலர்கள் வரவேற்பு அளிக்கும் விதமாக காற்றில் அசைய மனம் சிறிது லேசாக ஆனது மெதுவாக நடந்து வந்தவள் தோட்டத்தின் மத்தியில் ஒரு அழகான மண்டபம் இருந்தது வெள்ளை நிறத்தில் சிறிதும் மாசு இல்லாமல் கம்பீரமாய் நின்றது. அந்த மண்டபத்தின் நான்கு தூண்களில் மட்டும் கலை வேலைப்பாடுகள் இருந்தது வேறு எந்த நிறமும் இல்லாமல் முழுவதும் வெள்ளை நிறத்தில் ஐராவதம் போல் தோட்டத்தில் நடுவில் பார்க்க தியான மண்டபம் போல் இருந்ததை பார்த்தவள் அதில் கவரபட்டு அந்த மண்டப தூணில் சாய்ந்து கண் மூடி நின்றாள்.
அவளின் மோன நிலையை ஒரு குரல் கலைத்தது “எவ்ளோ தைரியம் உனக்கு அந்த மண்டபத்தில் நிக்க, மாமா இல்லாததுனால கண்டதும் அலையுதுங்க, ச்சீ முதல்ல நல்லா தேச்சு கழுவி விடணும் இவ நின்ன இடத்தை…”
அந்த குரல் தன்னை தான் சாடுகிறது என்று உணரவே நேரம் ஆயிற்று தாருண்யாவிற்கு, வேகமாக குரல் வந்த திசை நோக்கி திரும்பியவள் திகைத்தாள், தன் வயது இல்லை தன்னை விட எப்படியும் நான்கைந்து வயது சின்ன பெண் வாயில் வந்த வார்தைகளா அது, ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டிருக்குமோ அதுதான் வார்த்தைகள் மோசமாக விழுகிறதோ..
“என்னடி சொல்லிட்டே இருக்கேன் இன்னும் மகாராணி மாதிரி பார்த்திட்டு இருக்க, வாய்ல சொன்னா பத்தாது போல, கையால சொல்லனுமோ” என்று கூறிக்கொண்டே முன்னே வரவும், சரிதான் இது திமிருபுடிச்ச கேசு போல என்று நினைத்தவள் அவளையே பார்த்தபடி மண்டபத்தை விட்டு இறங்காமல் நின்றாள்,
அந்த பெண் வேகமாக வந்ததும், அவள் கையை பிடித்து இறக்கியவள் ஓங்கி ஓர் அறை விட்டாள், அவள் அடித்த வேகத்தில் கீழே விழுந்ததும் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தவள் தன்னை சுதாரித்துக் கொண்டு சீற்றத்துடன் தாருண்யாவை நோக்கி அடி எடுத்து வைத்தாள்,
“ இன்னும் ஒரு அடி நீ முன்னாடி எடுத்து வைக்கக் கூடாது”, பார்வையில் கனல் தெறிக்க பெரியம்மாவின் வார்த்தைகள் கோபத்துடன் வந்தது.
“உன் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு என்னிக்கோ இந்த அடி நீ வாங்கி இருக்கணும், எல்லா இடத்திலேயும் உன்னோட அதிகாரம் செல்லுபடியாகாது அதை நீயும் புரிஞ்சுக்கணும், போ உள்ளே”
“ எவளோ ஒருத்தி என்ன அடிச்சு இருக்கா, அவள கண்டிக்காம என்ன திட்றீங்களே, இவ அந்த மண்டபத்துல நின்ன்னுட்டு இருந்தா, மாமாக்கு பிடிக்காது அதான் போகச்சொன்னேன், நான் சொன்னதும் அந்த இடத்தை விட்டு நகராம என்னையே அடிச்சிருக்கா, எவ்ளோ தைரியம் இருந்தா இவ என்னை அடிச்சிருப்பா, உங்களுக்குத்தான் யார எங்க வைக்கனும்னு தெரியல, மாமா வரட்டும் பாத்துக்கறேன் “
“ யாரை எங்கே வைக்கனும்னு எனக்கு தெரியும், உன் விஷயத்தில் மட்டும்தான் நான் தப்பா இருக்கேன், நீ பேசின பேச்சுக்கு நீ வாங்கின அடி கம்மிதான், இங்க நடக்குற எல்லா விஷயத்துலயும் என் கவனிப்பு இருக்குன்னு உன் மாமாவுக்கு நல்லாவே தெரியும், போ உள்ள”
கோபத்துடன் தாருண்யாவை பார்த்தவள் பெரியம்மாவை முறைத்து கொண்டே விறுவிறுவென்று உள்ளே சென்றாள். அவர்கள் பேச்சில் இருந்து அந்த பெண் பெரியம்மாவின் சொந்தம் என்று தெரிந்து கொண்டவள் தான் அவளை அடித்ததிற்கு தனக்காக பேசிய அவர்களிடம் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும் என்று நினைத்து பேச வாயெடுத்தவளை பெரியம்மாவின் குரல் தடை செய்தது
“நீ வந்தப்ப கூட இவளை விட கொஞ்சம் தான் பெரிய பெண்ணா தெரியரறியே உன்னால இவள சமாளிக்க முடியுமோன்னு கவலையா இருந்தது ஆனா இப்ப விட்ட அறையே, அவளை வழிக்கு கொண்டு வர நீ தான் சரியான ஆளுன்னு நினைக்க வெச்சிடுச்சுமா” என்று சிரித்து கொண்டே கூறினார், அந்த சிரிப்பில் வலி இருந்ததோ என்று தாருண்யாவிற்கு தோன்றியது.