மின்னல் விழியே குட்டித் திமிரே – 16

0
1292
1551018907221|679x452

மின்னல் விழியே – 16

திருவிற்கு மனதெல்லாம் பரபரப்பாக இருந்தது.. நீண்ட ஐந்து வருடங்கள் கழித்து தன் தங்கையை சந்திக்க போகிறான்… மனம் நிரம்ப சந்தோஷம் இருந்தாலும் தங்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற படபடப்போடு, தன் நடையை துரிதப்படுத்தி ரெயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். சுமி ஏற்கனவே கடிதத்தில் எந்த ரயிலில் வருகிறாள் எனக் குறிப்பிட்டுயிருந்ததால் அவனால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது,

ஹரியை டிஸ்சார்ஜ் செய்து அவனிடமும் விஷயத்தை கூறிவிட்டே வந்திருந்தான். இதோ வந்துவிட்டான்… சுமி வருவதாக சொன்ன ரயிலின் பிளாட்பார்மை அடைந்தவன் தங்கையை தேடினான்.

வேகவேகமாக அந்த பிளாட்பார்ஃம் முழுவதையும் அலசியவனின் கண்களில் தூரத்தில் தனது கையுடன் தன்னை பார்த்தவாறு நின்றிருந்த சுமித்ரா தெரிய, கண்களில் கலங்கியது…

கண்கள் கலங்கியதில், சுமியின் முகம் சரியாக தெரியாமல் போக, சிரமப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டான். அவளும் அதே நிலையில் தான் இருந்தால் போலும்…அசையாமல் தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் வேகமாக வந்தவனால் அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.. குழந்தைகள் தளிர் நடையிடுவது போல் மெதுவாக நடந்தவன் அவளை நெருங்க., “அண்ணா” என்ற கதறலுடன் அவனை அணைத்துக் கொண்டாள் அவனது தங்கை…

இருவருமே உணர்ச்சி பெருக்கில் எதுவும் பேசவில்லை…

“எப்படி இருக்க சுமி??? இந்த அண்ணனை விட்டுட்டு எங்கடா போன??? நான் ரொம்ப தவிச்சிட்டேன் மா உன்னை காணாம…” தன் அணைப்பில் இருக்கும் தங்கையின் தலையை வருடியவாறு திரு கேட்க,

“நான் இவ்வளவு நாள் கேரளாவுல இருக்கிற ஒரு ஹாஸ்பிட்டல்ல நர்ஸ்சா வொர்க் பண்ணினேன் அண்ணா… உன்னையும் ஹனியையும் பிரிஞ்சி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… உங்களை தனியா விட்டுட்டு போனதுக்கு சாரிண்ணா..” சிறு பிள்ளை போல் திருவின் நெஞ்சில் சாய்ந்து விசும்பினாள்…

சுற்றியிருப்போர் அவர்களை வேடிக்கை பார்க்க துவங்க., அவர்களுக்கு வேடிக்கை பொருளாக நிற்க மனமில்லாமல்,

“சுமி… வீட்ல போய் பேசிக்கலாம்… வா போகலாம்…” சுமியிடம் கூறியவன் அவள் பேக் கை ஒரு கையில் தூக்கிக் கொண்டும் மற்றொரு கையால் தங்கையை அணைத்தவாறும் தங்கள் காரை நோக்கி சென்றான்…. அவளும் அமைதியாக இனி எல்லாம் தன் அண்ணன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனோடு நடந்தாள்.

வீட்டுக்கு வரும்வரை இருவரும் எதுவும் பேசவில்லை.. திரு சுமியை அவர்களின் பழைய வீட்டிற்கே அழைத்து வந்திருந்தான்..திருவை போல சுமித்ராவும் வீட்டை பார்த்ததுமே அழுதாள். திரு அவளை சமாதானம் செய்யவில்லை… மாறாக கண்கள் கலங்க தங்கையின் தோற்றத்தை பார்த்திருந்தான்… மிகவும் இளைத்து , முகமெல்லாம் கறுத்துபோயிருந்தாள். ஆனால் முகத்தில் இருக்கும் பக்குவம் அவன் இதுவரை அவளிடம் கண்டிராதது.

தந்தையின் புகைப்படத்தை கண்டு கண்ணீர் சிந்தியவள் அதன் அருகிலே அமர்ந்து அழுதாள்..

“ஏன் இப்படி பண்ணின சுமி???? இந்த அண்ணாவை மறந்து எதுக்காக இப்படியொரு முடிவு????” ஐந்து வருடங்களாக தனிமையின் துயரில் காயப்பட்டிருந்தவன் தன் கேள்விகளை கேட்க., சுமி அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“என்னை மன்னிச்சிடு அண்ணா.. எல்லாம் என்னோட தப்பு தான். எல்லாத்துலயும் ரொம்ப அவசரப்பட்டுடேன்.. காதலிக்கிறதுலயும் சரி, கல்யாணம் பண்ணிக்கிறதுலயும் சரி… கு..குழந்தை பெத்துக்கிறதுலயும் சரி… அவளை பிரிஞ்சி போறதுலயும் சரி.. எல்லாதுலயும் ரொம்பவே அவசரபட்டுட்டேன்..” என்றவளின் குரலில் விரக்தியும் ஆற்றாமையும் போட்டி போட்டது.

முகத்தை மூடி அழுதவள் மேலும், “நான் ஏமாந்துட்டேன்னு சொல்ல எனக்கு தைரியம் வரல அண்ணா… அவனுக்கு வேற ஒருத்தி கூட கல்யாணம் ஆகிடுச்சுன்னு, எனக்கு தெரிஞ்சப்போ என்னால தாங்கிக்க முடியல… எனக்கு தெரியும்.. நான் உன்கிட்ட சொல்லியிருந்தா நீ கண்டிப்பா அவன்கிட்ட சண்டைபோட்டு என் வாழ்க்கையை சரி பண்ண முயற்சி பண்ணியிருப்பன்னு. ஆனா எனக்கு அப்படியெல்லாம் பண்ண மனசு வரலை… அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்க.. எனக்காக நீ உன்னோட வாழ்க்கையை அழிச்சிக்கிறதுல விருப்பம் இல்ல… அதனால தான் உன்கிட்ட எதுவும் சொல்லாம இங்க இருந்து போனேன்..” மனதில் தோன்றிய வலியோடு கூறிக்கொண்டிருந்தவளை காண்கையில் திருவுக்கும் வலித்தது.

சிறுவயதில் இருந்து பாராட்டி சீராட்டி வளர்த்த தங்கை, இன்று வாழ்கையை இழந்து நிற்பதை பார்க்கும் போது இதற்கு காரணமானவனை சும்மா விடக்கூடாது என திருவிற்கு ஆத்திரமாக இருந்தது.. ஆனால் அதற்கு வழியில்லாமல் தன் கையை தங்கை கட்டிப்போட்டிருக்கிறாளே…

“இப்போவும் ஒன்னும் கெட்டு போகலை சுமி… அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சி நான் அவனுக்கு தண்டனை கொடுக்கிறேன்…” ஆவேசமாக கூறியவனை பார்த்து விரக்தியாக சிரித்தவள்,

“தண்டனை கொடுத்து எதுக்குண்ணா???? தண்டனை அப்படிங்கற பெயர்ல நான் திரும்ப அவனோட முகத்தை பார்க்க கூட விரும்பலை.. அதுக்காக நான் வரவும் இல்ல… எனக்கு என் பொண்ணு கூட இருக்கணும். அம்மாவா நான் அவளுக்கு ஒன்னுமே செய்யலை.. இனியாச்சும் அவ கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறேண்ணா.. ப்ளீஸ்….” கைக்கூப்பி கெஞ்சியளை பார்க்கும் போது திருவிற்கு, அவளின் வாழ்க்கைக்காக தன்னால் எதுவும் செய்ய முடியாத கையாலாகதனத்தை நினைத்து வருத்தமாக இருந்தது.

ஐந்து வருடங்கள் கழித்து வந்திருக்கும் தங்கையை காயப்படுத்த விரும்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என் பொண்ணு எங்கண்ணா???” தந்தையின் படத்தை கண்டதும் தன் துயரில் ஆழந்துக் கொண்டிருந்தவள் ஹனியை இவ்வளவு நேரமாகியும் காணாததால் திருவிடம் கேட்டாள்..

“ஹனி உன் அண்ணி கூட கோவிலுக்கு போயிருக்கா.. சாயங்காலம் தான் வருவாங்க…” தாலி கட்டாவிட்டாலும், என்று அவளோடு ஓருயிரானோ அந்த நொடியிலிருந்து அவளை மனைவியாகவே நினைத்தான். அதனால் தான் அவளை சுமியிடம் வினுவை அண்ணி என்றே கூறினான்.

திரு அண்ணி என்றதில் சந்தோஷம் அடைந்தவள், தன் அண்ணனின் கல்யாணத்தில் தான் இல்லாமல் போனோமே என்று வருந்தினாலும் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டு.,

“நிஜம்மாவா சொல்ற??? அண்ணி யா??? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாண்ணா???” என்றாள் தன் அண்ணனின் முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு.

“ம்ம்ம் கல்யாணம் ஆகிடுச்சு மனசளவுல, ஆனா இன்னும் தாலி தான் கட்டலை…” வினுவை பற்றி நினைக்கும் போதே முகம் மென்மையாகிவிட முகத்தில் மெலிதாக வெட்கம் கூட பரவுவது போல் உணர்நதான் திரு.

திரு கூறியதில் அவளுக்கு ஏதோ முடிச்சு இருப்பது போல் தோன்றினாலும் தன் அண்ணன் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில்.,

“ரொம்ப சந்தோஷம் ண்ணா… அண்ணி கிட்ட சொல்லியிருந்தியா நான் வரேன்னு????”

“நீ வரப்பபோறதுல அவ தான் ரொம்ப சந்தோஷமா இருந்தா… இப்போ கூட உனக்காகவும் ஹனிக்காகவும் வேண்டிக்க தான் கோவிலுக்கு போயிருக்கா..” என்றவன் தன் மொபைலில் தாங்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டினான்..

தன் குழந்தையை பார்த்தவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க, அவளது நிழல் படத்தை தொட்டுப் பார்த்தாள்.. வினுவின் தோள்களில் ஒயிலாக சாய்ந்துக் கொண்டு ஒற்றை விரலை நீட்டி அருகில் இருந்த விக்கியை மிரட்டிக் கொண்டிருந்த அழகை தான், திரு புகைப்படம் எடுத்திருந்தான்.

“என் பொண்ணு ரொம்ப வளர்ந்துட்டா.. ஆனா என்னை மாதிரி கொஞ்சம் கூட இல்லை….” என்றவளுக்கு ஹனியிடம் அகிலின் சாயல் லேசாக தெரிவது போல் தோன்றியது..

“ஆமா.. ரொம்ப சமத்து ஆனா உன் அண்ணி கூட சேர்ந்த அப்புறம் ரொம்ப சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க… எல்லாம் உன் அண்ணி கொடுக்கிற இடம்…” என்றவன், “இது தான் வினு அப்புறம் இது விக்கி அவளோட தம்பி” என்று புகைப்படத்தில் இருந்தவர்களை அடையாளம் காட்டினான்…

வினுவின் புகைப்படத்தை பார்த்தவளுக்கு அவளை பார்த்ததுமே பிடித்து போனது.. அவள் போட்டோவில் ஹனியை இதமாக அணைத்திருப்பதில் இருந்தே புரிந்தது, வினுவிற்கு ஹனி மிகவும் பிரியம் என்று.

“அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க அண்ணா… எப்போ அண்ணா அவங்கள பர்ஸ்ட் பார்த்த???” தன் அண்ணன் காதலிக்கிறான் என்பதை நம்ப முடியாமல் அவன் காதலை பற்றி சுமி ஆர்வமாக கேட்க, திரு அவளை சந்தித்த முதல் நாளில் இருந்த அனைத்தையும் கூறினான்..

அனைத்தையும் கேட்டுக் கொண்டவள், “அண்ணா… அண்ணி ரொம்ப சூப்பர்… உங்களை எல்லாம் இப்படி தான் வழிக்கு கொண்டு வரணும்னு ரொம்ப அதிரடியா இறங்கிட்டாங்க.. அதோட ரொம்ப நல்லவங்கண்ணா.. நான் அவங்களை பார்க்கணும்…” பழைய உற்சாகத்துடன் பேசும் தங்கையை வாஞ்சையாக பார்த்தவன்.,

“ஆமா மா ரொம்ப நல்லவ… நானும் ஹனியும் மட்டும்னு ஒரு உலகத்துக்குள்ள வாழ்ந்துட்டு இருந்தோம், ஆனா புயல் மாதிரி உள்ள வந்து எங்க உலகத்தையே மாத்திட்டா.. எந்த பொண்ணும் செய்ய துணியாததை கூட செஞ்சிட்டா…” என்றவனின் மணக்கண்ணில் தன் துயர் துடைக்க தன்னையே கொடுத்தவளின் முகம் மின்னியது. தங்கை தன்னை கவனிக்கிறாள் என்பதை உணர்ந்தவன் வேகமாக தன்னை மீட்டுக் கொண்டு,

“வினுவோட அண்ணா ஊருக்கு வந்திருக்காங்களாம். எங்களோட காதல் விஷயம் தெரிஞ்சி இன்னைக்கு என்னை வர சொல்லியிருக்காங்க சுமி. நீயும் வர்றியா??? எனக்காக பேசுறதுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா???” தங்கை வரவேண்டும் என்று வேண்டுதலுடன் திரு அவளை பார்க்க., சுமியும் அவன் உணர்வு புரிந்தவளாக,

“கண்டிப்பா அண்ணா.. ஹனியை உன்கிட்ட கொடுத்து உன்னோட வாழ்க்கையை சிக்கலாக்கிட்டேனேனோன்னு மனச உறுத்திட்டு இருந்துச்சு ஆனா இப்போ தான் நிம்மதியா இருக்கு…. நாம அண்ணியோட அண்ணாவை பார்த்து இன்னைக்கு உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறோம் சரியா????” நம்பிக்கையுடன் சுமி கூற, திருவிற்குள்ளும் நம்பிக்கை பிறந்தது.

அதன் பிறகு பழைய விஷயங்களை பற்றியும் தங்களது சிறு வயதை பற்றியும் இருவரும் பேசினர். மறந்தும் அகிலை பற்றி பேசவில்லை… இனியாவது அவனை மறந்துவிட்டு தங்கை நலமாக இருக்க வேண்டும் என திரு அவனை பற்றி பேசுவதை தவிர்த்தான்… அவர்களுக்கும் பேசுவதற்கு நிறைய இருந்தது.. ஹனியினது சிறுவயது புகைப்படங்கள், அவள் வினுவோடு சேர்ந்துக் கொண்டு செய்யும் சேட்டைகள் என அனைத்தையும் கூறினான்..

அனைத்தையும் கேட்டவாறே தன் மகளை நினைத்து சிரித்தவாறு, திருவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் சுமி. வெகு நாள் கழித்து தன் அண்ணனை பார்த்த சந்தோஷம் அவள் மனதையும் நிரப்ப, அவன் மடியிலே தூங்கிப் போனாள்… அவள் தலையை மென்மையாக கோதியவாறு அமர்ந்திருந்தான் திரு..

தன் போனை எடுத்து பார்த்தவன் வினுவிடம் இருந்து எந்த அழைப்பும் வராது போகவும் முகத்தை சுருக்கினான். நேற்றிரவு தூங்க கூட விடாமல் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவள், இன்று காலை ஹனியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்வதாகவும், வருவதற்கு மாலையாகி விடும் என்று மட்டும் மெசேஜ் செய்திருந்தாள்.

“ம்ம்… மேடம் சாமி கும்பிடுறதுல ரொம்ப பிஸியாகிட்டாங்க போல இருக்கு…” மனதில் தன் புஜ்ஜியை நினைத்து சிரித்தவன் மாலை அவளை தன் தங்கைக்கு அறிமுகப்படுத்தபோகும் தருணத்தை எண்ணி மகிழ்ந்தான்…

அந்த பூங்காவில் அகிலோடு ஹனி விளையாடுவதை அமைதியாக பார்த்திருந்தாள் வினு… மனமோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க.. ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்கும் போதும் நெஞ்சுக்குள் பயப்பந்து உருண்டது.

இன்றுடன், தான் இவ்வளவு நாள் பாடுபட்டதற்கான பலன் தெரியப் போகிறது. அவளுக்கு தெரியும், நிச்சயம் இன்றோடு திரு தன்னை தலைமொழுகிவிட்டு செல்ல போகிறான் என்று. ஆனாலும் மனதில் ஒரு சிறு நப்பாசை… தன்னை புரிந்துக் கொள்ள மாட்டானா என்று.

கண்கொட்டாமல் ஹனியையும் அகிலையும் பார்த்திருப்பவளை கேள்வியாக நோக்கினான் விக்கி. அவனும் நேற்றிலிருந்து பார்க்கிறான் வினுவிடம் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லை… அண்ணன் தான் அவளின் காதலுக்கு ஒத்துக் கொண்டாரே.. அதன்பின்னும் ஏன் இப்படி இருக்கிறாள் எனப் புரியாமல் அவள் கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தியவன்,

“வினு” என்க,

வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் குரல் கேட்கவில்லை, அவள் கவனம் தன்னிடம் திரும்பவில்லை என்றதும் விக்கி அவளை உலுக்கினான்…

“ஹான்… என்னடா??” கனவில் இருந்து விழிப்பவள் போல் வினு அவனை பார்க்க, விக்கி அவளை யோசனையாக பார்த்தான்..

“உனக்கு என்னாச்சு வினு?? ஏன் இப்படி இருக்க??? ஒருவேளை அகில் அண்ணாவுக்கு மச்சானை பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிக்கிறியா??? அதெல்லாம் நம்ம மச்சானை கண்டிப்பா பிடிக்கும்.. நீ வேணும்னா பாரு அகில் அண்ணா நிச்சயம் மச்சானை பார்த்து இம்பிரெஸ் ஆகிட போறாரு…” அதற்காக தான் அவள் பயந்திருப்பாள் என நினைத்த விக்கி அவளை மாற்றும் பொருட்டு கேலி போல் கூற, வினு அவனை பார்த்து வெறுமயாக சிரித்து மட்டும் வைத்தாள்.

விக்கிக்கு குழப்பமாக இருந்தது.. இவ்வளவு நாட்கள் தோன்றாத சந்தேகம் எல்லாம், இப்போது வினுவின் அமைதியில் தோன்றி அவனை அலைக்கழித்தது. சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் எதற்காக இப்படி இருக்கிறாள்?? தன்னிடம் ஏதாவது மறைக்கிறாளா?? விக்கி சந்தேகமாக அவளை பார்க்க, அதற்குள் ஹனி ஓடி வந்து வினுவின் மடியில் ஏறி அமர்ந்தாள்…

“மம்மி… எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும்…” வெளியே எதிர்புறத்தில் இருந்த கடையை காண்பித்து ஹனி கேட்க,

ஹனியை கையில் ஏந்திக் கொண்டவள், “சரிடா, வா வாங்கித் தரேன்..” ஹனியிடம் கூறியவள் விக்கியிடம் திரும்பி, “நீயும் வா டா” என்க, விக்கியும் அவளோடு செல்வதற்காக எழும்பினான்.. அகிலும் பின்னால் வர, அவனது நண்பனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது..

அலைபேசியையும் தங்கையையும் பார்த்தவன், “நீங்க போங்க… நான் பேசிட்டு வரேன்..” தன் கையில் இருந்த பைப்பேசியின் அழைப்பை ஏற்றவன் பேசத் துவங்கினான்..

வினுவும் விக்கியும் ஹனியை அழைத்துக் கொண்டு செல்லவும் திருவும் சுமியும் பூங்காவிற்குள் நுழைய சரியாக இருந்தது.

வினுவை தேடியவாறே தங்கையிடம் அவர்களை பற்றி கூறி சிரித்தவாறு வந்தான் திரு. அகில் அழைபேசியில் தன் நண்பனிடம் உரையாடியவாறே தங்கையும் தம்பியும் வருகிறார்களா என்று பார்ப்பதற்கக்காக திரும்ப, திரு சுமியோடு அவன் நின்றிருந்த திசையில் வந்துக் கொண்டிருந்தான். அவர்களை கண்டதும் அகிலின் இதயம் ஒரு நிமிடம் நின்று, மறுநிமிடம் சுமி என்று துடித்தது.

“அவள் தானா??? சுமி தானா??? வந்துட்டாளா???…என்னோட சுமி வந்துட்டாளா???” ஐந்து வருடங்கள் கழித்து பார்க்கும் மனைவியை கண் கொட்டாமல் பார்த்தான் அகில்.. போனில் மறுமுனையின் நண்பன் கத்துவது எல்லாம் அவன் காதில் விழவில்லை.. தன் முன்னால் வந்துக் கொண்டிருக்கும் நண்பனும் அவனுடன் வரும், தனது மனைவியும் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தார்கள்.

சுமியிடம் பேசியவாறு வந்த திரு, தன் எதிரில் ஐந்தடி தூரத்தில் நின்று தங்களை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த அகிலை கண்டு அதிர்ந்தான். அடுத்த கணமே கண்கள் கோபத்தில் சிவக்க, அகிலை உறுத்து விழித்தான். அசையாமல் நிற்கும் அண்ணனின் பார்வையை தொடர்ந்து சுமியும் பார்க்க, அவள் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு அதிர்வு.

யாரை தன் வாழ்நாள் முழுதும் பார்க்க கூடாது என ஓடி ஒளிந்தாளோ அவன் முன்பு தன்னை நிற்க வைத்துவிட்ட விதியை சபித்தாள்.. அவனை பார்க்கக் கூட பிடிக்காமல் அருவெறுப்பில் முகம் சுழித்தவள் திருவின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள, அதில் அகில் மனதளவில் அடி வாங்கினான்.

“அரசு..” அகில் அவர்களை கண்ட ஆனந்தத்தில் அழைக்க.,

திருவிற்குள் இத்தனை வருடங்களாக அடக்கி வைத்திருந்த கோபம், வெறி அனைத்தும் எரிமலையாக வெடித்து சிதறியது..

கண்ணை மூடி தன்னை சமன் செய்ய முயன்றவனின் மணக்கண்ணில் அகிலால், தான் தந்தையை இழந்ததும், தங்கையை இவ்வளவு நாட்கள் பிரிந்ததும் என அனைத்தும் படமாக ஓட, அடுத்த நிமிடம் சீற்றத்தோடு சென்று அகிலின் சட்டையை பற்றியிருந்தான்.

“ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து நிற்ப டா?? எங்க குடும்பத்த சீரழிச்சது போதாதுன்னு இப்போ எந்த குடும்பத்த சீரழிக்க வந்திருக்க???” அகிலின் சட்டையை பற்றி ஆக்ரோஷமாக கத்தியவன் அகிலின் முகத்தில் தன் கை முஷ்டியை மடக்கி ஒரு குத்துவிட்டான்..

அதில் அகிலின் உதடு கிழிந்து ரத்தம் வர, திரு அடங்குவதாக இல்லை.. இத்தனை வருடங்களாக மனதில் அடக்கி வைத்த கோபம் அனைத்தும் வெடிக்க, பொது இடம் என்றும் பாராமல் அகிலை அடித்து துவைத்தான். ஆனால் அவனின் அடியை தாரளமாக அகில் தாங்கிக் கொண்டானே தவிர திருவை தடுக்கவும் இல்லை திருப்பி அடிக்கவும் இல்லை…

“அரசு… நான் சொல்றதை கேளு டா…” ஒரு முறையாவது தான் சொல்வதை கேட்கமாட்டானா என்று அகில் அவனிடம் கெஞ்ச, திரு எதையும் கேட்பதாக இல்லை…

ஹனிக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்துவிட்டு அவள் சாப்பிடும் வரை அங்கே பொறுமையாக இருக்க முடியாமல் வினு அவசரமாக தன் அண்ணனிடம் விரைந்தாள். விக்கியும் ஹனியும் மட்டும் கடையில் அமர்ந்து பஞ்சுமிட்டாயை சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவசரஅவசரமாக ஓடி வந்த வினு, அங்கு தன் அண்ணனை திரு அடிப்பது கண்டு அவர்கள் அருகில் ஓடி வந்தாள். சுமி கலங்கும் கண்களை துடைக்க தோன்றாமல் அமைதியாக நின்றிருந்தாள்..

வேகமாக வந்து திருவிடமிருந்து அகிலை வினு பிரிக்க முயல, அவளால் திருவின் பலத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை..

“அரசு.. விடு டா.. விடு …” தன் அண்ணன் அடி வாங்குவதை தாங்க முடியாமல் வினு கத்த.,

“விடு புஜ்ஜி மா… இவன இன்னைக்கு நான் கொல்லாம விட மாட்டேன்.. துரோகி இன்னைக்கு நான் கஷ்டப்படுத்துறதுக்கு இவன் தான் காரணம்.” அவளை தன்னிடமிருந்து விலக்கியவன் அகிலை அடிப்பதிலே குறியாக இருந்தான்…

“அரசு விடு டா.. அவன் என்னோட அண்ணன்… அவனை அடிக்காதே…” தன்னால் முடிந்த மட்டும் பலம் கொண்டு திருவை தள்ளியவள், தன் அண்ணனை தாங்கிப் பிடித்தாள்.

அகிலை அடித்துக் கொண்டிருந்த கை அந்தரத்தில் தொங்க, வினுவை நம்பாமல் பார்த்தான் திரு.

“எ..ன்..ன ??? என்ன சொன்ன புஜ்ஜி…” தன் காதில் தவறாக கேட்டுவிட்டதோ என நினைத்தவன் வினுவிடம் மீண்டும் கேட்க, வினுவிற்கு இதயம் தொண்டை குழியில் வந்து துடித்தது.

முடிந்தது.. அரசு தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்க போகிறோம்.. எல்லாம் முடிந்தது. அவள் மனம் கதற ஆரம்பிக்க, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை திடபடுத்தியவள் திருவின் கண்களை நேராக பார்த்தாள்.

“அரசு இது என்னோட அண்ணன் அகில் குமார்..” என்றவள் தன்னை திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் அகிலை பார்த்து, “இவர் திருநாவுக்கரசு... இவரை தான் நான் காதலிக்கிறேன்...” சொல்லிவிட்டாள் இதயம் மத்தளமடிக்க சொல்லியேவிட்டாள்.. 

அவள் கூறியதில் திருவிற்குள் எதோ உடைவது போல் இருந்தது.. ‘கடைசியில் இவளும் பொய்யா???.. தன்னை நடித்து ஏமாற்றினாளா????’ இன்னும் தான் கேட்டதை நம்ப முடியாமல் திரு நிற்க, அகிலிற்கு கோபமாக வந்தது. அவன் கண்களுக்கு திரு தன் தங்கையை ஏமாற்றிவிட்டது போல் தோன்ற.,

“நான் உன்னை நல்லவன்னு நினைச்சேன் டா.. ஆனா நீ இப்படி நமக்குள்ள இருக்கிற பகையை மனசுல வச்சிட்டு என்கிட்ட சொன்ன மாதிரியே.. என் தங்கச்சியை லவ் பண்ணி ஏமாத்திட்டியே டா..” தன் தவறுக்கான அடிகளை தாங்கியவன், தங்கையின் வாழ்க்கைக்காக திருவை திரும்ப அடித்தான்…

அவன் அடியை லாவகமாக தடுத்த திருவின் மனம் கோபத்தில் கணன்றது..

“நான் நடிச்சி ஏமாத்தினேனா??? உன் தங்கச்சி தான் என் பின்னால நாய் மாதிரி சுத்தினா… பார்த்த முதல் நாளே என்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னவள பத்தி நான் யோசிச்சிருக்கணும்.. ஆனா ரொம்ப நல்லவ மாதிரி நடிச்சி என்னை ஏமாத்திட்டா… அது சரி உன்னை மாதிரி தானே உன் தங்கச்சியும் இருப்பா… காதல் அப்படிங்கற பெயர்ல மத்தவங்கள ஏமாத்துறது… சீ…“ முகத்தில் ஒட்டு மொத்த வெறுப்பையும் காட்டியவனின் இதயம் நம்பிக்கை துரோகத்தில் துவண்டது என்றால் அவன் கூறியதை கேட்டவளின் உள்ளம் சுக்கு நூறாக உடைந்தது..

“யாரை பார்த்து என்னடா சொல்ற??? என் தங்கச்சி அப்படிபட்டவ கிடையாது. நீ தான் ஏதோ சொல்லி அவ மனச கலைச்சிருக்க… உன்னை சும்மா விட மாட்டேன் டா…” தங்கையின் மேல் அவன் சுமத்தும் குற்றத்தில் அகில் அவனிடம் சண்டையிட, திரு அவனை பார்த்து நக்கலாக சிரித்தான்..

“கிடையாது தான்… அவ உன்னை மாதிரி கிடையாது தான்.. நீயாச்சும் என் தங்கச்சிக்கு தாலி கட்டி ஏமாத்தின.. ஆனா உன் தங்கச்சி தாலி கட்டமாலே…” மேலே அவன் சொல்வதற்குள்,

“அரசு…!!!!” என்று கத்திய வினுவின் குரலில் அவன் குரல் தடைபட்டது. திரு கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து சுமி உறைந்து நின்றாள்.

“கண்கள் கலங்க.. தன் அரசுவா இப்படி பேசுவது” எனப் பார்த்த வினு,

“நான் உன்னை லவ் பண்றது நிஜம் டா.. இப்படியெல்லாம் பேசி என்னை வதைக்காத… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் அகிலோட தங்கச்சின்னு உன்கிட்ட மறைச்சது தப்பு தான். அதுக்காக நடிச்சேன்னு சொல்லாத டா…” குரல் கமற கூறியவளை கண்டு திருவிற்கு இரக்கமாக இருந்தாலும்… அவனால் அவளை மன்னிக்க முடியவில்லை…

“வினு நீ எதுக்காக இவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க??? இவன் தான் உன்னை ஏமாத்தியிருப்பான்.. என்னை பழி வாங்குறதுக்காக உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தியிருப்பான்.. இவன் உனக்கு வேண்டாம்…” தனக்கு வந்த அழைப்பேசி மிரட்டலுக்கும் திருவிற்கும் சம்பந்தம் இருப்பதாக அகில் நம்ப, வினுவின் வாழ்க்கையில் இருந்து திருவை விலக்க நினைத்தான்.

“அண்ணா எனக்கு இவன் தான் வேணும்ணா… நான் இல்லாட்டி அவன் சந்தோஷமா இருக்க மாட்டான்னா.. இப்போ கோவத்துல பேசுறான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல புஜ்ஜி மான்னு புலம்ப ஆரம்பிச்சிடுவாண்ணா…” திருவை பற்றி நன்கு அறிந்தவளாக வினு கூற., திருவிற்கு தான் அவளிடத்தில் அத்தனை பலவீனமாக இருப்பதை நினைத்து உள்ளம் குமுறியது..

அவள் கூறியதை கேட்டு ஆத்திரத்தில் அவன் நிற்க, சரியாக “அம்மாமாமா!!!” என்ற அழைப்பு அனைவரின் செவிகளையும் தீண்டி திரும்பி பார்க்க வைத்தது..

விக்கியுடன் வந்த ஹனி அங்கு தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் ஓடி வந்துக் கொண்டிருந்தாள்… கைக்குழந்தையாக பார்த்தவள் இன்று தன் பிஞ்சு கால்களால் தன்னை நோக்கி ஓடி வருவதை கண்ட சுமி, அவள் உயரத்திற்கு மண்டியிட்டு கைகளை விரிக்க,

“அம்மா!!!!!” என்ற கூவலுடன் வந்து சுமியின் கழுத்தை கட்டிக்கொண்டாள் ஹனி.

சுமியின் கண்களில் கண்ணீர் வழிந்தோட, அவளை வாரியணைத்து உச்சி முகர்ந்து, ஹனியின் முகமெங்கும் முத்தமிட்டாள்.. அதை பார்த்துக் கொண்டிருந்த அகிலுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

“ம்மா… ஸ்டார்ல இருந்து வந்துட்டிங்களா??? அகிலும் அங்க இருந்து தான் வந்தானாம்.. உன்னையும் அவன் தான் கூட்டிட்டு வந்தானா???” தன் தாயின் கன்னம் பற்றி, விழிகள் இரண்டையும் ஆர்வத்தில் விரித்து, ஹனி விசாரிக்க… சுமி அவளை கண்கள் கலங்க அணைத்துக் கொண்டாள்..

“ம்ம்ஹும் இந்த அம்மா எப்பவும் தனி தான் டா.. நான் தனியா தான் வந்தேன்…” மனதில் இருந்த வெறுமை அவள் வார்த்தையில் வெளிப்பட்டது.. அது புரியாத ஹனியோ.,

“ம்மா.. இனி என்னை விட்டு போக மாட்டிங்களே???” எங்கே அன்னை மீண்டும் சென்றுவிடுவாளோ என்ற பயத்தில் மேலும் சுமியோடு ஒன்றினாள்…

“இல்லை டா… இனி என் பொண்ணை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்…” என்றவள் தன் மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஹனியை யாருக்கும் விட்டு தரமாட்டேன் என்பது போல் இருந்தது அவளது அணைப்பு.

அவர்களின் பாசத்தை பார்த்து அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். அகில் மட்டும் இன்னும் தன் கண் முன்னே நடப்பதை நம்ப முடியாமல் பார்த்திருந்தான்…

“அவ உன்னோட பொண்ணு தான்…” அகிலின் திகைப்பை உணர்ந்து வினு அவனிடம் கூறினாள்… அதில் அதிர்ந்தவன் மெல்ல ஹனியை நோக்கி செல்ல… திரு இடையில் வந்து நின்றான்..

“அரசு தள்ளு டா.. என் பொண்ணு டா…” தனக்கு மகள் இருப்பதை கூட சொல்லாமல் மறைக்கும் அளவிற்கு தான் என்ன பாவம் செய்துவிட்டோம் என அவன் மனம் அரற்றியது. ஹனியை பார்த்ததும் தோன்றிய உணர்வுகள் எல்லாம் எதனால் என்பது புரிந்தது.. அவனது மகள்.. அவன் கொடுத்த உயிர் இன்று தேவதையாக கண் முன் நிற்கிறாள்…

ஹனியை கைகளில் வாங்கிக் கொள்ளும் உத்வேகத்தில் அகில் சுமியை நெருங்க. அவளோ ஹனியோடு பின் வாங்கினாள்..

“அவ சுமியோட பொண்ணு மட்டும் தான்.. நீ எப்போ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டு போனியோ, அப்போவே உனக்கு ஹனி மேல எந்த உரிமையும் கிடையாது.” இறுகிய முகத்தோடு திரு கூற, விக்கி அங்கு நடக்கும் எதுவும் புரியாமல் பார்த்தான்.

“மச்சான்.. நீங்க என்ன சொல்றிங்க??? அகில் அண்ணாவுக்கு என்னும் கல்யாணமாகல… நீங்க வேற யாரோன்னு நினைச்சி பேசுறிங்க…” விக்கி தன் அண்ணனுக்காக பேச.,

திரு கைத்தட்டினான்… “சபாஷ்.. இன்னுமாடா நடிச்சிட்டு இருக்க??? உங்க ஸ்கிரிப்ட் முடிஞ்சி பதினைஞ்சு நிமிஷமாச்சு.. உன் அக்கா கூட சேர்ந்துட்டு ரொம்ப நல்லாவே நடிச்ச டா… பரவாயில்ல.. என்னை ஏமாத்துறதக்காக குடும்பமா நடிச்சிருக்கிங்க..”. பாரட்டுவது போல் திரு அவனை கீழிறக்கி பேச, திரு ஒவ்வொரு முறை நடித்தாய் என்று கூறும் போது வினு உள்ளுக்குள் செத்துக் கொண்டிருந்தாள்.

அவன் பேசியதில் விக்கி திகைத்தான் என்றால் அகில் அவன் சட்டையை பற்றினான். “ஏன் டா இப்படி பண்ணின??? நான் என்ன தப்பு பண்ணினேன்னு… இப்படி என் பொண்ணு இருக்கிறதை என்கிட்ட மறைச்சிங்க???” ஒரு நாளில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அவனை தாக்கியதில், அகில் வெகுண்டான்..

தன் சட்டையை பற்றியிருப்பவனை விலக்கியவன், “சுமி வா மா கிளம்பலாம்.. இவங்களை எல்லாம் பார்த்தா, நம்ம வாழ்க்கையில சந்தோஷம் அப்படிங்கறது அழிஞ்சி போய்டும்…” தங்கையிடம் கூறியவன் கிளம்ப ஆயத்தமாக… வினு அவன் கரங்களை பற்றினாள்..

“அரசு.. நான் சொல்றதை கேளு டா… என்னால நீ இல்லாம வாழ முடியாது. என் அண்ணா பண்ணின தப்புக்காக என்னை தண்டிக்காதே டா…” அவன் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவளை கொன்று கூறு போட்டாலும் அவளால் அவனை விட முடியவில்லை.. காதல் கொண்ட மனது அவனை மன்னிக்கவே செய்தது.

வினு திருவிடம் செஞ்சுவது கண்டு விக்கிக்கும் அகிலிற்கும் இதயத்தில் ரத்தம் வழிந்தது..

அவர்களின் வீட்டு இளவரசி இவனிடம் கெஞ்சுவதா அதுவும் அவளை காதல் என்னும் பெயரில் ஏமாற்றி தன்னை பழி வாங்கியவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்பதா??? கோபமாக மனதில் நினைத்த அகில், வினுவை பற்றி தன்புறம் இழுத்தான்..

“அவன் உனக்கு வேண்டாம் வினு.. அவனுக்கும் அவன் தங்கச்சிக்கும் எப்பவும் அவங்க பண்றது தான் சரி. நாம சொல்றதை எல்லாம் கேட்க மாட்டாங்க… நீ அவங்ககிட்ட கெஞ்சுறதை விடு வினும்மா… நாம இங்க இருந்து போய்டலாம்.. நமக்கு பெங்களூரும் வேண்டாம்… இவங்களும் வேண்டாம்…” தன் வாழ்க்கையை விட தன் தங்கையின் வாழ்வே இப்போது முக்கியமாக தெரிய, அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்ப்பட்டான்.

“அண்ணா… ஹனின்னா…” தன்னை இழுத்து செல்லும் அண்ணனை தடுக்க வழி தெரியாது வினு கூற… அவன் நடை நின்றது…

ஒரு நிமிடம் திரும்பி சுமியையும், அவள் கையில் இருந்த ஹனியையும் பார்த்தவன், “என் பொண்ணை எப்படி வாங்கனும்னு எனக்கு தெரியும். வா போலாம்” என்றவன் திரும்பி பாராமல் சென்றான்.

அவ்வளவு நேரம் அவர்களின் வாக்குவாதத்தை பயத்தோடு பார்த்திருந்த ஹனி, அகில் வினுவை இழுத்து செல்லவும்.,

“மம்மி எங்க போற.. மம்மி… என் மம்மியை விடு” அகிலை பார்த்து ஹனி கத்த,

திரு கூறிய அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் நின்ற வினு, ஹனியின் பாசத்தை கண்டு கதறி அழத் தொடங்கினாள்.

கேவி கேவி அழும் தங்கையை இழுத்து செல்ல முடியாமல் அகில் திகைத்து நிற்க, விக்கி அவளை சமாதானம் செய்தான்.

“அழாதே வினு ப்ளீஸ்…”. இதுவரை அவள் அழுவதை அதிகம் பார்த்திராத விக்கியும் தன் அக்காவிற்க்காக கண்ணீர் சிந்தினான். அந்த நிமிடம் அவன் திருவை வெறுத்தான்.. தன் அக்காவை அழ வைக்கும் திரு அவனிற்கு பழைய ஹிட்லரைவிட மோசமாக தெரிந்தான்.

ஹனியும் வினு அழுவதை பொறுக்க முடியாமல் சுமியின் கைகளில் இருந்து திமிற, அவர்களின் பாசத்தை கண்டு திருவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனான்.

“ஷட் டப் ஹனி.. அவ உன்னோட மம்மி கிடையாது” கோபத்தில் திரு ஹனியை அதட்ட, ஹனி பயத்தில் சுமியின் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதாள்.

அதற்கு மேல் தன் அக்காவின் அழுகையை கண்கொண்டு பார்க்க முடியாமல் அவளை தன்னோடு அழைத்து சென்றான் விக்கி.

“என் பொண்ணை என்கிட்ட இருந்து மறைச்சி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட அரசு.. இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்..” திருவை பார்த்து கூறியவன் தன் தங்கையின் பின்னால் செல்ல, திருவோ உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ என்ற ரீதியில் அவனை முறைத்தான்.

தான் செல்வதை, தடுக்க கூட தோன்றாமல் தன்னை பார்த்தவாறு நிற்கும் திருவை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டும், தன் காதல் மேல் ஏன் அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது என்ற கேள்வியுடனும் தன் சகோதரர்களுடன் சென்றாள் வினு.

அவள் செல்வதை கண்களில் வலியோடு பார்த்திருந்தான் திரு.. தன்னை ஏமாற்றிவிட்டாளே என்று அவள் மீது கோபம் நிறைய இருந்தாலும், அதையெல்லாம் விட அவள் மேல் காதல் அதிகமாக இருக்கிறது. தான் அவளை தன் வீட்டில் வைத்து தவறான பெண்ணாக சித்தரித்து திட்டும் போது கூட, கல்லாக நின்று அனைத்தையும் கேட்டவள், இன்று தான் அவளை வேண்டாம் என்று கூறியதும், கதறி அழுதவாறு செல்வதை நினைத்து கண்கள் கலங்கியது மனமோ நீ ஏன் அவனின் தங்கையாக போனாய் என்று கமறியது..

செல்லும் வினுவை பார்த்தவாறு நிற்கும் அண்ணனின் மனம் சுமிக்கு புரிந்தது.

“அண்ணா… என்னோட வாழ்க்கை வேற உன்னோட வாழ்க்கை வேற… எனக்காக பார்க்காத அண்ணா..” தன் அண்ணனின் வாழ்க்கை தன்னால் அழிவதை அவளால் தாங்க முடியவில்லை. அதுவும் திரு சொன்ன தாலி கட்டமாலே என்ற வார்த்தைகளே அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. ஒரு பெண்ணாக அவளுக்கு அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது… அதனால் தான் அகிலின் குடும்பத்தை பிடிக்காவிட்டாலும் வினுவிற்காக பேசினாள்.

“இல்ல சுமி.. எனக்கு அவ வேண்டாம்.. அவனுக்கு அவன் தங்கச்சி வாழ்க்கை முக்கியம்னா.. எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம்.. வா போலாம்..” அதற்கு மேல் அதை பற்றி பேச விரும்பாதவனாக சுமியின் கையில் இருந்த ஹனியை வாங்கிக் கொண்டு முன்னே சென்றான்.

வீட்டிற்கு வந்த பின்னரும் சுமித்ரா வினுவிற்க்காக பரிந்து பேச, திரு எதையும் கேட்காமல் தனது தந்தையின் அறையில் முடங்கிக் கொண்டான். அவனது வீட்டிற்கு செல்லாமல் அவனது தந்தையின் வீட்டிற்கே அழைத்து வந்திருந்தான் சுமியையும் ஹனியையும்.

தந்தையின் அறைக்கு வந்தவன் அங்கிருந்த தந்தையின் போட்டோவின் முன் நின்று கதறினான்… வெளியே இவ்வளவு நேரம் இரும்பு போல் நின்றவன் இப்போது தன்னவளுக்காக உருகினான்..

“ஏன் டி என்னை ஏமாத்தின??? ஏன் டி என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சா??? உன் அண்ணாவுக்காக தான் நீ என்னை தேடி வந்திருக்கன்னு புரியுது ஆனா அவனுக்காக என் மனசு கூட விளையாடிட்டியே டி… யாருமே இல்லாம நான் நின்னப்போ, உனக்கு எல்லாமும் நான் தான்னு வந்து நின்ன.. இப்போ என் குடும்பம் கிடைச்சிடுச்சு ஆனாலும் நான் ஏன் இவ்ளோ தனியா ஃபீல் பண்றேன்.. என்னால நீ இல்லாம இருக்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா டி… என் கூட வாழ்ந்தியே டி அது எல்லாம் பொய்யா???” திரும்பி கட்டிலை பார்த்தவன் அது அவர்களுக்குள் நிகழ்ந்ததை ஞாபகப்படுத்தவும் அந்த அறையின் பால்கனியில் சென்று நின்று வானத்தை வெறித்து பார்த்தான்.

அவன் மனநிலையை போல வானமும் இடியும் மின்னலுடன் கருமையை பரப்பிக் கொண்டிருந்தது.

பெங்களூரிலிருந்து சென்னையை நோக்கி பஸ்சில் பயனப்பட்டுக் கொண்டிருந்தார்கள் வினுவும் விக்கியும்… அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்க பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந்திருந்தான் அகில். திருவை சந்தித்துவிட்டு வந்த, அடுத்த நிமிடமே வினுவையும் விக்கியையும் அழைத்துக் கொண்டு அகில் கிளம்பிவிட்டான்.. வினு சொன்ன எதையும் அவன் கேட்க தயாராக இல்லை. உடனடியாக கிளம்ப வேண்டும் என உறுதியாக நின்று அவர்களை இழுத்து வந்திருந்தான்.

விக்கிக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என எதுவும் புரியவில்லை… அகிலுக்கும் திருவின் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று புரிந்தது ஆனால் திரு வினுவின் மேல் கூறிய குற்றச்சாட்டு அனைத்தையும் நினைக்கையில் விக்கிக்கு அவன் மேல் கோபம் எழுந்தது. ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த அவர்களின் நடுவே தானும் சண்டையிட வேண்டாம் என்று தான் அவன் அமைதியாக இருந்தான்.

“என்னை நீ உன்னோட ஃப்ரெண்டா நினைக்கலையா வினு????” தன்னருகே ஜன்னலிருக்கையில் அமர்ந்து வெளியே தெரியும் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் விக்கி கேட்க., அவள் அவனை திரும்பி பார்த்தாள்..

இந்த நொடி வரை தனக்காக, தன்னை தவறாக நினைக்காத, தான் சொன்னதை ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் செய்தவனை நினைக்கையில், என் தம்பி என்று பெருமையாக இருந்தது வினுவிற்கு.

“சொல்லு வினு… எதுக்காக நாம பெங்களூர் வந்தோம்??? அகில் அண்ணாவுக்கும் திருவுக்கும் என்ன சம்பந்தம்???? ஹனி அகில் அண்ணாவோட பொண்ணா???? ஹிட்லரோட தங்கச்சிக்கும் நம்ம அண்ணாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா??” மூச்சு விடாமல் அனைத்து கேள்விகளையும் கேட்டவன், எனக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் தன் அக்காவின் முகத்தை பார்த்தான்.

இனியும் மறைத்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்தவள், தன் மனதில் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த உண்மையை விக்கியிடம் கூற துவங்கினாள்..

அவளை போலவே, அகில் ஜன்னல் வழியே தெரியும் இருட்டை வெறித்தவாறும், சுமி தன் வீட்டின் ஜன்னலில் தலைசாய்த்தவாறும் தங்கள் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க தொடங்கினார்கள்…

விழிகள் தொடரும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here