கல்லூரி பெஞ்ச்சில் அமர்ந்து இருந்த வசந்த்தும் மாலினியும் ஒருவரை ஒருவர் முறைத்த படி இருந்தனர்.
“ இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் உனக்கு?” வசந்த் கேட்டான்.
“ பின்ன, எனக்கு பயமா இருக்குன்னு தானே கேட்டேன். அதுக்கு போய் இப்டி முறைக்குற?”
“ நீ இந்த ஒரு வாட்டி இதை கேக்கல… எப்போவுமே இதை தான் கேட்குற. பின்ன கோவம் வராதா?”
அப்படி என்ன கேட்டு இருப்பாள்.
சிறிது நேரத்திற்கு முன் தான் அவனிடம் எப்போதும் போல கேட்டு வைத்தாள்.
“ வசந்த், நம்ம விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? அவங்க நம்மள ஏத்துப்பாங்களா?” என்று.
அவனும் எப்போதும் போல,
“ நீ பயப்படும்ப்படி ஒன்னும் ஆகாது. ரெண்டு வீட்லயும் சம்மதிப்பாங்க” என்றான்.
ஆனாலும் அந்த பதிலில் திருப்தி அடையாமல் மீண்டும் அதையே அவள் கேட்டு வைக்க அவன் முறைத்தான்.
முகம் தொங்க தலை கவிழ்ந்தவள்,
“ என்னமோ பயமா இருக்கு வசந்த்.” என்று தன் மனக்கவலையை அவனிடம் கூற
அவன் அவளின் முகத்தை நிமிர்த்தி இரு கை கொண்டு அவளும் கன்னம் தாங்கினான்.
“ டாலு பேபி, சொன்னா நம்பனும். நமக்கு நடுல என்ன பிரச்சனை வர இருக்கு சொல்லு? அதுலாம் ஒன்னும் ஆகாது. நீ வீணா மனச போட்டு உலப்பிக்காம மாமனை நினைச்சு டூயட் பாடு. அது போதும்” என்றான் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவாறு.
“ இல்லடா, உன் அம்மாக்கு என்னை பிடிக்கும் தானே” என்று அவள் கேட்க,
“ அதுலாம் நிச்சயம் பிடிக்கும். என் செல்லத்த யாருக்காச்சும் பிடிக்காம போகுமா?” என்று அவள் தலையை முட்ட
அவள் வலிக்காத தலையை தடவி கொண்டே,
“ போடா லூசு” என்று சிணுங்கினாள்.
“ சரி சரி, வெட்கப்பட்டு என் மைண்டை மாத்தாத… டீம் சொன்ன சிட்வேஷன் சாங் ரெடி பண்ணிட்டியா?” என்று பேச்சை மாற்றினான்.
அவன் நோக்கமும் புரிய மனதிற்குள் சிரித்து கொண்டவள்,
“ இன்னும் இல்லடா, லவ் சேட் சாங் பாட சொல்லி சொன்னா… பாட்டும் கிடைக்கல… அப்டியே கிடைச்சாலும் அதை பாடுற மைண்ட் செட்டும் இப்போ இல்ல.. அதான் ஒரு வாரம் இருக்கே… அப்போ பாத்துக்கலாம்.” என்று கூறினாள்.
அவனும் சரியென்று தலையை ஆட்டினான்.
இவர்கள் எழுந்து செல்லவும் சற்று தூரம் தள்ளி இருந்த ராகவி இவர்களின் சம்பாஷனையில் கடுகடுத்து கொண்டு இருந்தாள்.
அவளின் செவியில், “ இந்த மாறி பொண்ணுங்களை கண்டாலே பிடிக்கல” என்ற வாணியின் குரல் ஒலித்து இவர்களின் காதலுக்கு அடுத்த குழியை பறிக்க வகை செய்தது.