மஹாபாரதக் கதை

0
88

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.

“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.

கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

சுட்டது??

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here