அம்ரீஷ்க்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. தானே இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்த இருந்த வேளையில் வித்யுதா செய்தது அவனுக்கு பேரிடியாகவும் அமைந்தது.
சிவநாதன் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்தார். பார்வதியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் அருகில் வந்து, அம்ரீஷ், ‘அப்பா!’ என்றான் பயத்துடன்.
பார்வதி,”என்னடா நடக்குது இங்க? யாருடா இந்த பொண்ணு? கல்யாணமுனு வேற பேசுது. சொல்லுடா!. உன் அண்ண மாதிரி நீயும் பண்ணிட்டு வந்து நிக்கறியா”என்று கலக்கத்துடன் கேட்க,
அம்ரீஷ், “அம்மா இவ வித்.. வித்யுதா. என்னோட ஆபிஸ்ல மார்.. மார்..மார்க்கெட்டிங் ஹெட்டா இருக்கா. நானும் இவளும் ரெண்டு வருசமா…” என திக்கி திக்கி சொன்னவுடன் தன் தலையில் கைவைத்து அமர்ந்தாள் பார்வதி. சிவநாதன் அப்போதும் எதுவும் பேசவில்லை.
பார்வதி, ” எல்லாம் போச்சு. உன்ன நம்பினோமேடா! உன் அண்ணன் தான் இப்படி பண்ணினான். இப்ப நீயும் இப்படியே வந்து நிக்கறியேடா.இனி என்ன பண்றதுனே தெரியலையே…” என்று அழுது புலம்பியவள்,
அப்போது தன் கணவன் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து பயம்கொண்டவளாய், “என்னங்க!” என சொன்னவுடன் தலை நிமிர்ந்தார் சிவநாதன்.
சிவநாதன், “பார்வதி அவனை வீட்ட விட்டு வெளிய போக சொல்லு. கடைசி பையனும் செத்துட்டானு நினைச்சுக்கிறேன்” என்று சொன்னவுடன் பயந்து போன வித்யுதா, “அங்கிள்” என்று சொன்னாள்.
இதைக்கேட்ட சிவநாதன் சட்டென்று திரும்பி அவளை பார்த்த பார்வையில் நடுங்கி மிரண்டு போனாள். அவ்வளவு கோபம் கலந்த பார்வை.
தன் மூத்த மகன் செய்த காதலால் ஏற்பட்ட பிரச்சினைகளும் அவமானங்களும் இன்றும் தொடர்ந்து வரும் வேளையில் தன் நம்பிக்கையை காப்பாற்றுவான் என்று இருந்த அம்ரீஷ் இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ளாத ஒரு தந்தையின் கவலையே கண்களில் நெருப்பாக இருந்தது. அவரது மனமும் அப்படி தான் கொதித்துக் கொண்டு இருந்தது.
வித்யுதாவின் கையை பிடித்து வெளியே அழைத்து வந்த அம்ரீஷ், “வித்யு.. நீ வீட்டுக்கு போ. நான் பாத்துக்கிறேன். பேசிட்டு கூப்டறேன்” என்று சொல்லி அனுப்ப, அதே பயத்துடன் நடந்தாள் அந்த தைரியம் மிகுந்த பெண்.
பார்வதி, “என்னங்க இப்படி சொல்லுறீங்க. அவன் நம்ம பையன். ஏதோ தெரியாம பண்ணிட்டான். இதெல்லாம் வேணாமுனா சொன்னா புரிஞ்சுப்பான். நீங்க கோபப்படாதீங்க” என்று அருகில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்தாள்.
“டேய்.. இங்க வாடா.. நான் பண்ணினது தப்பு. இனி இந்த பொண்ண பத்தி நெனைக்க மாட்டேன். நீங்க சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிப்பேனு அப்பா கிட்ட சொல்லு” என மகனிடம் அழுதபடியே கூறினாள் கணவனின் மனம் அறிந்த மனைவியாய்.
அடுத்த பேரிடி அம்ரீஷ் தலையில் விழுந்தது. அம்மா இப்படி சொல்லுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தயங்கியபடி நின்றவனிடம் வேகமாக வந்து தோளை பிடித்து அழுதபடியே வற்புறுத்த ஆரம்பித்தாள் பார்வதி.
வித்யுதாவுடன் இருந்த நாட்கள் அவன் கண் முன் ஓடியது.அவன் நேற்று கண்ட கனவும் ஓடியது. அவன் அண்ணன் இதே மாதிரி சொல்லும் போது அப்பா சொன்ன வார்த்தைகளும் ஓடியது. தன் அக்கா கல்யாணத்தில் நடந்த அனைத்தும் நிழலாடியது.
ஒற்றை நிமிடத்தில் மொத்தமும் அவனுள்ளே எரிமலையை உருவாக்கியது. பைத்தியம் பிடிப்பது போல உணர்ந்தான். இதற்கிடையில் அம்மாவின் சப்தம் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்போது அப்பா சொன்ன வார்த்தைகளும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
என்ன தான் செய்ய முடியும் அவனால்.
‘மகனாக இருப்பானா? அல்லது காதலனாக இருப்பானா?’… இரண்டில் ஒன்றை நிச்சயம் இழந்தே தீரவேண்டுமே…
கருவில் உண்டான நேரம் முதல் கொட்டிய பாசமா?…. கடைசிவரை மூச்சாக இருப்பேன் என்று மனதோடு கலந்துவிட்ட காதலியின் பாசமா?….
நொடிப்பொழுதில் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம். முடிவு எதுவாயினும் விளைவுகள் அவன் எதிர்பாராத விதமாகத் தான் இருக்கும்.
ஒற்றை நொடியில் கண்ணை மூடி பெருமூச்சை விட்டனவாய்…..
அம்ரீஷ், “அப்.. அப்ப்ப்… அப்பா. நான் வித்யுதாவ கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.. ரெண்டு வருசமா லவ் பண்ணிட்டு…. இப்ப தூக்கி போட்டுட்டு… இன்னொரு பொண்ணு கூட வாழ முடியாது…. அவ… அவ இல்லனா நான் செத்து போயிடுவேன்ப்பா” என்று கனத்த குரலில் சொன்னவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போனாள் பார்வதி.
அமைதியாக இருந்த சிவநாதனோ சட்டென்று எழுந்து, “செத்துப்போ. எனக்கு ரெண்டு பசங்களும் செத்து போயிட்டாங்க. நானும் என் பொண்டாட்டியும் எப்படியோ வாழ்ந்துக்குவோம். இனிமேல் எங்க மூஞ்சிலயே முழிக்காத” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டார்.
பயந்துபோய் இருவரும் கதவை தட்டி கதறினர். சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லை உள்ளே. அந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் பார்வதி.
“அம்மா… அம்மா… என்னம்மா ஆச்சு..” என்று அம்ரீஷ் கண்கள் கலங்கி கத்த, உடனே வெளியே வந்தார் சிவநாதன். வேகமாக சமையலறை சென்று தண்ணீர் கொண்டு வந்து தெளித்தார் பார்வதியின் முகத்தில்.
மயக்கம் தெளிந்தவள் தன் கணவனை கட்டி அழ, பயந்திருந்த மூன்று மக்களை பெற்ற சிவநாதனும் அழுதார்.
கோபத்தில், “உன்னால என் பொண்டாட்டியையும் இந்நேரம் இழந்திருப்பேன்… ஒழுங்கா போயிடுடா… எங்கள உயிரோடயாவது இருக்க விடு.. ” என்று ஆக்ரோஷமாக கத்தினார். ஏற்கனவே பயந்து போன அம்ரீஷ் உடைந்து போனான். பேச முடியாமல் தொண்டை அடைத்தது.
கண்ணீர் மட்டுமே அவனிடத்தில் மொழியாக இருந்தது.எழுந்து வெளியே வந்தான். அவனை மழை வரவேற்றது. அவன் கண்ணீரை மழைநீர் துடைத்து மறைத்தது…
இரவு கண்ட கனவில் நடந்த நிகழ்வின் வலிகளோ வேறு விதமாக அவனுக்கு கிடைத்தது.
வலிகளோடு சில அடிகள் நடக்க அவனுக்காக காத்திருந்தது ஆசையாய் பிறந்தநாள் பரிசாக சிவநாதன் வாங்கி வைத்த புது வண்டி.
அப்போது தான் அவனுக்கே ஞாபகம் வந்தது இன்று அவன் 27வது பிறந்தநாள் என்று. அனைவரும் மறந்த போயினர் அந்த சில நிமிடங்களில்.
வீட்டின் அருகில் இருந்த மரத்தடியின் கீழே சென்று நின்றான்.சிறிதும் அசைவில்லை அவனிடம். அப்பா சொன்ன மாதிரி செத்து போயிடலாம் என்று மனது கூறிக்கொண்டே இருந்தது.
உள்ளே…
பார்வதி, “நீங்க உள்ள போயி கதவ சாத்துன உடனே என் ஈரக்குழை நடுங்கி போச்சுங்க. என்ன விட்டுட்டு போயிடாதீங்க… ” என்று கதறி அழ ஆரம்பித்தாள்.
சிவநாதன், “பார்வதி ஒன்னும் இல்லடி. உன்ன விட்டு போயிடுவனு பயப்படாதடி. நான் இருக்கேன்… நான் இருக்கேன் எப்பவும்..” என்று அவளின் தலையை தன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டார்.
சில நிமிடங்கள் அமைதியும் கண்ணீரும் இப்படியே தொடர்ந்தது…..
பார்வதி, “என்னங்க. நம்ப புள்ள பாவமுங்க. இன்னைக்கு அவன் பொறந்த நாள். இன்னைல இருந்து இனி திட்ட மாட்டேன்னு சொன்னீங்களே காலையில… இப்போ செத்து போயிட்டான். வெளிய போன்னு சொல்லிட்டீங்களே…” என அழுதாள் அந்த தாய்.
“மூத்த பையன் அவ ஆசைப்பட்ட பொண்ணோட போன அப்போ எப்படி இந்த ஊரும் சொந்தமும் பேசுச்சுனு பாத்தோமே பார்வதி. நம்ம பொண்ணு கல்யாணத்தில பாதி சொந்தம் வராம போயி எப்படி அசிங்கப்பட்டு கூனி குறுகி நின்னோம். தாய்மாமன் பொட்டும் சீரும் கூட இல்லாம போயி தவிச்சு போயி நின்னாலே என் பொண்ணு”
“கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் எப்படி எப்படி குத்தி காட்டி பேசினாங்கனு கூட இருந்து வலிய அனுபவிச்சவளும் நீதானடி. எல்லாத்தையும் பாத்தும் இவனுக்கு எப்படி டி இவ்வளவு தைரியம் வந்துச்சு. இவன் என்னைய பொறுத்தவரை செத்து போயிட்டான்டி பார்வதி” என்று நொந்து போய் பேசினார்.
பார்வதி, “தப்பு தானுங்க.. அவன் பண்ணினது தப்பு தானுங்க.. அதுக்காக பொறந்த நாளப்போ சொத்துப்போயிட்டானு சொல்லுறீங்களே. பெத்த மனசு கதறுதுங்க… ” என கதறி அழுதாள்.
“மூத்தவனை அப்படி சொன்ன போதும் இப்படித்தான் நீ அழுத.ஆனால் அவன் நம்மள மறந்துட்டு இப்போ எங்கே இருக்கான். அது மாதிரி தான் இவனும் பண்ணுவான். நாம பெத்த ரெண்டும் உயிரோடு நம்மல கொல்லனும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்” என்று சிவநாதன் வலிகளோடு கூறினார்.
பார்வதி, “புருஷனா? புள்ளையானு? இந்த பாவி மனசு தவிக்குதே. இரண்டு பேரையும் விட்டுத்தர முடியாதே! பொம்பள மனசு தானுங்க கடைசி வரைக்கும் இப்படி அழுனும்” என்று கூற,
எதுவும் சொல்லாமல் அவளை எழுப்பி அறைக்கு அழைத்து சென்றார். தன் மடியில் அவள் தலைவைத்து தடவியபடி கண்ணீரால் தரையை நனைத்தார் சிவநாதன். தன் கண்ணீரை துடைக்க கூட முடியாமல் கிடந்தாள் பார்வதி.
பயத்தோடு உள்ளே வந்த வித்யுதா தன் அறையினுள் புகுந்து தலையணையிடம் தஞ்சம் அடைந்தாள். ஒன்றும் புரியாமல் உள்ளே வந்த வித்யுதாவின் தாயும் (ஷர்மிளா) தந்தையும் (சந்திரசேகர்) அவளை எழுப்பி பேசினர்.
ஷர்மிளா, “என்னடி ஆச்சு. நல்லா தானே போன. அம்ரீஷ் பர்த்டே. நான் போயிட்டு வர்றேன்னு போன… இப்ப இப்படி வந்து அழுதுட்டு இருக்க… சொல்லுடி…” என கேட்க,
நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் வித்யுதா.
“அறிவு இருக்கா.. நேத்துதான் எங்ககிட்ட சொல்லிட்டு போனீங்க. அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்.. இப்படி பண்ணி வச்சுட்டு வந்திருக்கிற.. செல்லம் கொடுத்து வளர்த்த உங்க அப்பாவ சொல்லணும்” என்று கடித்தாள் ஷர்மிளா.
“என்ன மன்னிச்சிடுங்கபா. இந்த மாதிரி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. அம்ரீஷ் என்ன பண்றாருன்னு தெரியல. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குப்பா” தேம்பி தேம்பி அழுதாள்.
“சரி விடும்மா. தப்பு பண்ணியாச்சு. இனி அழுது என்ன பண்ண முடியும்? சரி செய்யற வழியை பாப்போம். நீ மாப்ளைக்கு போன் பண்ணு” என்றார் சந்தர்.
” ரொம்ப பயமா இருக்குப்பா….. எதாவது சொல்லிட்டாருனா என்ன பண்றதுப்பா…”
“பயப்படாத… பேசும்மா… எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்…” என்று சந்திரசேகர் சொன்னவுடன் போனை எடுத்தாள் வித்யுதா. பயத்தோடு டயல் செய்தாள்.
** உனக்கென மட்டும் வாழும் இதயமடி……
உயிருள்ளவரை நான் உன் அடிமையடி….**
மழையில் நனைந்து கொண்டு இருந்த அம்ரீஷ் போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான்.
அதுவரையில் அழுகையும் வலியும் மட்டுமே இருந்த அவன் மனதில் கோபமும் வெறியும் ஏறியது. போனை அட்டென்ட் செய்தான்.
வித்யுதா, “அம்ரீஷ் ஐ யம் ரியலி சாரி…” என்றதும், “இப்போ சந்தோஷமா? ரொம்ப சந்தோஷமா இருக்குமே.. எத்தனை தடவை சொன்னேன் என் வீட்டை பத்தி… கொஞ்சம் கூட யோசிக்காம பண்ணிடியேடி….” என்று கத்தினான் ரோட்டில் நின்றுகொண்டு
வித்யுதா, “அம்ரீஷ் ப்ளீஸ்… என்னை மன்னிச்சிடுங்க. இந்த அளவுக்கு சீரியஸ் ஆகுமுன்னு நான் நெனைக்கல… ப்ளீஸ் அம்ரீஷ்.. சாரி அம்ரீஷ்…” அழுதுகொண்டே தொண்டை அடைக்க கூறினாள்.
“அவ்வளவு தான்… போச்சு… எல்லாம் போச்சு…
வீட்ட விட்டு வெளிய போக சொல்லிட்டாரு… நடுரோட்டில நிக்கறேன்டி உன்னால இப்போ.. இன்னைக்கு என் பர்த்டே. ரெண்டு நிமிஷம் கூட என் அப்பா அம்மா கிட்ட சந்தோஷமா பேசல… ” அழுதுகொண்டே ரோட்டிலேயே அமர்ந்தான்.
மழையில் ஊறிய மண்ணில் கவலைகளும் வலிகளும் ஏறிய அவனுக்கு எதுவும் தெரியவில்லை.
“அம்ரீஷ் இப்படி சொல்லாதீங்க… ஏதோ பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டேன்… உங்க பர்த்டே அன்னைக்கு சொன்னா பிரச்சினை வராதுன்னு நினைச்சேன் அம்ரீஷ்… ப்ளீஸ் அம்ரீஷ்… அழாதீங்க அம்ரீஷ்… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நெஞ்சு வெடிச்சிரும் போல இருக்கு..” என்று கதறினாள். அருகில் அவளின் பெற்றோர் இருப்பதும் அவளுக்கு மறந்து போனது.
அழுகையிலேயே வார்த்தைகள் பாதி தொண்டைக்குள்ளே பிரசவித்தன.
” நான் செத்து போயிட்டதா நெனைச்சுகறேன்னு சொல்லிட்டாருடி…. எவ்வளவு தான் திட்டினாலும் இப்படி ஒரு வார்த்தை வந்ததே இல்லை… அண்ணன கூட பையன் இல்லைன்னு தான் சொன்னாரு அவன் காதலை சொன்ன அப்போ… இப்படி ஒரு வார்த்தைய எனக்கு பர்த்டே கிப்டா கொடுத்துட்டியேடி… நான் என்ன பாவம் டி பண்ணேன்…” குரலின் ஓசை குறையும் அளவுக்கு அவனுள் வார்த்தைகள் வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆசையாய் வளர்த்த மகள் இன்று தன் முன்னே இவ்வாறு அழுவதை எந்த பெற்றோரால் தான் தாங்க முடியும். ஷர்மிளா கண்ணில் நீர் வடிய, சந்திரசேகர் மனதில் இரத்தம் வடிந்தது.
மகளின் மகிழ்ச்சிக்கா அவள் செய்த தவறை சரிசெய்ய வேண்டும். மீண்டும் அவளின் முகத்தில் சிரிப்பை தர வேண்டும் என்ற முடிவோடு தன் அறைக்கு சென்றார் சந்திரசேகர்.
வலியோடு இதயங்கள்
மொழிகளற்று பேசிடவே
புரியாத காயத்தில்
அவளின் பெற்றோரும்
கனத்த மனதுடனே
கடந்து வந்த பாதைகளோ
கள்ளிச்செடியாய் இருந்தனவே
கண்ணீரில் நாட்களுமே
அப்பனுக்கு மருந்தாக
சிகரத்தில் வைத்திடவே
அரலியாய் இளையவனோ
தடம்மாறி நின்றானே
அடிவயிற்றில் தாங்கியவளே
பயத்தினிலே மயங்கிடவே
மருகிய பிள்ளையவன்
அழுகையில் தெருவினிலே
விழிநீரில் காதலுமே
வழியின்றி தவிக்கிறதே
விதியென்று நினைத்தாலும்
விளைவுகளில் அடுத்தென்ன?