வீட்டுக்கு வந்த மாலினி தன் அறைக்குள் முடங்கியவள் தான் அழுது கரைந்து காய்ச்சலில் விழுந்தாள்.
மூன்று நாட்கள் கல்லூரியை துறந்தாள்.
அகமும் முகமும் வாட நின்றவளிடம் நளினி விபரம் கேட்க ஏதும் கூறாமல் நழுவி சென்றாள்.
‘ஏதோ சரியில்லை?’ என்று எண்ணிய நளினி ரூபிணியிடம் விசாரிக்க அவளுக்கும் விடை ‘தெரியவில்லை’ என்று தான் வந்தது.
ஆனால் மாலினி கல்லூரி வந்த அன்றைய தினம் அவளுக்கு விடை கிடைத்தது.
“ டாலு பேபி, உடம்பு பரவாயில்லையா?” என்று கேட்டபடி வசந்த் அவளை நெருங்க அவள் அவனை விட்டும் இரண்டடி தள்ளி நின்றாள்.
“ வசந்த் கால் மீ மாலினி” என்று அவள் கூற இவன் புரியாமல் பார்த்தான்.
“ என்ன ஆச்சு பேபி?” என்று மீண்டும் கேட்க,
“ஷட்அப்… அண்ட் கால் மாலினி… வேற எந்த புனை பெயரும் தேவை இல்லை.” என்று கூறினாள்
“ மாலினி என்ன ஆச்சு? வீட்ல ஏதும் பிரச்சனையா? இல்ல நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சா? அதுக்கு எதும் சொன்னாங்களா? அதான் இவ்ளோ கோவமா இருக்கியா?” என்று அவன் கேட்டான்.
உருகிய மனதை அடக்கி கொண்டு,
“ என்ன நம்ம விஷயம்? நமக்குள்ள என்ன இருக்கு வசந்த் பிரச்சனை வர அளவுக்கு? ஒன்னுமில்ல… நமக்குள்ள ஒன்னுமே இல்ல… அதை புரிஞ்சிக்கோ முதல்ல” என்று கூற அவன் அதிர்ந்து போனான்.
“ மாலினி ஆர் யூ மேட்… நம்ம காதல்ல விளையாட்டு வேணாம்.. பேச்சுக்கு கூட அப்டி சொல்லாத வலிக்குது” என்று கூறினான்.
“ ஹாஹா.. ஜோக் பண்ணாத வசந்த்… ஏதோ பாட்டு பாடுன… அது நல்ல இருந்துச்சு… பேசுனோம், பழகினோம் இதுல எங்க இருந்து காதல் வந்துச்சு?
நீ என்கிட்ட சொன்னியா என்னை காதலிக்குறேன்னு… இல்ல நான் தான் உன் கிட்ட சொன்னேனா காதல்ன்னு”
வேறு வழியில்லை அவனை அவளை விட்டு விலக்க வார்த்தையில் விஷம் தோய்க்க தான் வேண்டும்.
ஆனால் அதில் அதிகம் காயப்படுவது அவளாக போனது தான் விந்தை.
‘ பளார்’ என்ற அறையை அவள் கன்னத்தில் இறக்கினான்.
“ எதுல விளையாடனும் ஒரு அளவு இருக்கு… என்னடி நடிப்பு வேண்டி இருக்கு உனக்கு?”
“ வசந்த் கை ஓங்குற வேலை என் கிட்ட வேணாம்.. நான் இப்போவும் சொல்றேன்… நான் உன்னை காதலிக்குறேன்னு எந்த சூழ்நிலையிலும் சொல்லல.. நீயா எதையும் கற்பனை பண்ணா அதுக்கு நான் பொறுப்பில்லை. அதோட எனக்கு என்ன தலையெழுத்து உன்னை மாதிரி ஒரு ஆளை காதலிக்கணும்னு…”
“ ச்சே… நீயும் ஒரு பொண்ணா? உன்னையா உருகி உருகி காதலிச்சேன். உன்னை போல தரம் கெட்டவள காதலிச்சேன் பாரு… எனக்கு இது தேவை தான். நீயெல்லாம்…..” இன்னும் சில வார்த்தைகளை கோர்த்து திட்டிவிட்டு அவன் செல்ல
அவன் அடித்த அடி கூட வலிக்காது…. அவன் சொல்லி சென்ற வார்த்தைகள் வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தது.
இருவரின் அந்த பிரிவும் கல்லூரியில் பரவ விஷ்ணு வசந்திடம் கேட்டு பார்த்தான்.
“ என்னனு தெரியல மச்சான்?” என்ற விரக்தி தான் பதிலாக கிடைத்தது.
ரூபிணி மாலினியிடம் கேட்க அவள் ஏதும் சொல்லாமல் கடந்து சென்றாள்.
என்னதான் மாலினி சொல்லவில்லை என்றாலும் ரூபிணிக்கு ரஞ்சியின் மூலம் விபரம் வந்து சேர்ந்தது.
“என்ன ரஞ்சி சொல்ற? நீ சொல்றது உண்மையா?”
“ நான் பொய் சொல்வேனா ரூபி… ஒரு முறைக்கு பல முறை உறுதி படுத்திட்டு தான் உன் கிட்ட சொல்றேன். அந்த மேக்னா தான் சொன்னா… ராகவி அவ கிட்ட சொன்னதா சொல்லி…
“வசந்த் அம்மா அப்டி பேசுவாங்கனு எதிர்பாக்கல… இவ இப்டி கேம் ஆடுவானு எனக்கு தெரியும்… ஆனா மாலினி எப்படியும் இவளை ஒன்னுமில்லாம ஆக்கிடுவான்னு நினைச்சேன்… இப்டி வசந்த விட்டு விலகுவான்னு எதிர்பாக்கல… நான் வேணும்னா வசந்த் கிட்ட இதை பத்தி பேசி பார்க்கவா?”ன்னு கேட்டா… நான் தான் வேணாம், “ நான் சொல்ற வரை யார் கிட்டயும் இதை பத்தி பேச வேணாம்”னு சொல்லிட்டேன்…” என்று ரஞ்சி விளக்க
“ சரியா செஞ்ச ரஞ்சி, இதை பத்தி நாம மாலினி கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வருவோம்” என்று கூறினாள் ரூபிணி.
இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள் மாலினி.
தோழியர் இருவரும் அவளையே பார்த்த வண்ணம் இருக்க,
“என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? இப்டி பாக்குறீங்க” என்றாள்.
ஏதோ கூற வந்த ரஞ்சியை தடுத்த ரூபிணி அவளிடம்,
“ ஒன்னுமில்லயே” என்றாள்.
அவர்களை உற்று பார்த்து மாலினி பின்
“ என் கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி இருக்கு… என்ன விஷயம்?” என்றாள் இருவரையும் பார்த்தபடி.
“ நாங்க மறைக்கல மாலினி… நீ தான் எங்க கிட்ட இருந்து மறைச்சுட்ட” என்று கொஞ்சம் கடின குரலில் ரூபிணி கூறவும் மாலினி அவர்களை சங்கடமாக நோக்கினாள்.
“ என்ன சொல்ற ரூபி? எனக்கு புரியல!!” என்று தலை குனிந்து கொண்டாள்.
“ ம்ம், உன் வீட்ல வளக்குற செல்ல பப்பி போன மாசம் மூணு குட்டி போட்டுச்சு… அதுல ஒரு குட்டிக்கு கூட போன வாரம் உடம்பு சரியில்லை…” என்று அவள் கூறவும்
‘என்ன?’ என்று குழம்பிய படி அவளை ஏறிட்டாள்.
அவளோ சளைக்காமல் பார்த்த படி,
“ இப்டி உன் வீட்டு நாய்க்குட்டியோட கஷ்டத்தை கூட எங்க கிட்ட சேர் பண்ணிக்கிட்ட நீ… உன்னோட வாழ்க்கையை தொலைச்ச விஷயத்தை ஏன் மறைச்சுட்ட மாலினி?” என்று கேட்டாள்.
அடுத்த நொடி ரூபிணியின் அணைப்பில் இருந்தாள் மாலினி.
அத்தனை நாட்களும் அவளின் மனதில் மட்டுமே பொத்தி வைத்திருந்த கவலை ரூபிணி ரஞ்சியிடம் கண்ணீராய் வெளி வந்து கொண்டிருந்தது.
“ என்னை மன்னிச்சுடு ரூபி… ரஞ்சி நீயும் தான்… அந்த அம்மா வந்து என்கிட்ட அவங்க பையனோட எதிர்காலம் அவங்க இஷ்டப்படி தான் நடக்கணும்னு சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும்?”
“ லூசாடி நீ? அவங்க பையன் விரும்புறதே உன்னை தான்… அதுல உன்னோட எதிர்காலமும் இருக்கு மறந்துறாத..”
கோவத்தில் கத்திய ரூபிணியை விரக்தியுடன் எதிர் கொண்டாள்.
“ ஆனா அவங்களுக்கு தான் என்னை பிடிக்கலையே” என்று கூற
“ அது அவங்க தப்பா நினைச்சுட்டு இருக்காங்க மாலு… நாம எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்”
“ வேணாம் ரஞ்சி, யாரும் எனக்காக இறங்கி போறதை நான் எப்பவும் விரும்ப மாட்டேன்.. அவங்க பையன் அவங்க விருப்பம்.. இனி எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நான் இந்த முடிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு” என்று கூறினாள்.
இருந்தும் தோழியர் மனம் வேறொரு கணக்கை போட அதை அறிந்தவள் போல்,
“ இதை பத்தி வசந்த்கிட்டயோ இல்ல அவன் அம்மாகிட்டயோ யாரும் எதுவும் பேச கூடாது… இது என்னோட நட்பின் மேல் ஆணை” என்று இடியை இறக்கினாள்.
இருவரும் அதிர்ந்த படி அவளை பார்த்து அதன் பின் நீண்ட நேரம் வரை அவளை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர்.
அவர்களால் அது மட்டுமே முடிந்தது.
இவர்கள் மூவரும் பேசி கொண்டிருக்க அவர்களின் அருகில் வந்தாள் ஆர்த்தி.
“ மாலினி… இன்னைக்கு தான் லாஸ்ட் சாங்… நீங்க ஓகே தானே… உடம்பு சரியில்லை சொன்னாங்க” என்று தயங்கியபடி வந்தாள்.
அவர்களும் இவளுக்காக நாளை கடத்தி வந்தது புரிந்தமையால் சரியென்று தலையாட்டி அவளோடு சென்றாள்.
இந்த சமயத்தில் அவளை தனியாக விட பயந்த தோழியர் இருவரும் அவளுடன் சென்றனர்.
தன்னையே எண்ணி சிரித்து கொண்டாள்.
“காதல் தோல்வி பாட்டை பாட வேண்டும்” என்று சொன்னபோது அதை உணர முடியாமல் காலம் கடத்தி வந்தவள்…
இப்போது காதலில் தோல்வியாக நிற்கிறாள்…
“உணர முடியவில்லை” என்றவள் உணர்வுகளை துடைத்து நிற்கிறாள்.
“ரெடியா மாலினி…. ஸ்டார்ட்” என்று கூறவும் கண் மூடி பாடலில் தன்னை தொலைத்தாள்.
விழியிலேயே என் விழியிலேயே…
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே…
முத்தமிட்ட உதடுகள் உலருதே…
நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்…
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினே……ன்.
விழியிலேயே என் விழியிலேயே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
அவளின் எண்ண கூட்டினுள் அவன் நுழைந்த நாட்கள் ஒவ்வொன்றும் படமாய் ஓடியது. அவனோடு கை கோர்த்து நடந்த அந்த மர நிழல்… அவனோடு அவள் கற்பனை செய்து கனவில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மண் கோட்டை சிதறி விழ அவளின் கண்கள் நீரை சூழ்ந்து கொண்டது.
இமைகளிலே கனவுகளை
விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே
விழியிலேயே என் விழியிலேயே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
வாணி அவளை ஏசி சென்ற அந்த தினத்தில் மனம் நின்று தள்ளாட அவர் என்னை புரிந்து கொள்ளாமல் போக செய்த விதியை நொந்து கொண்டாள். வசந்த் மீதான அவளின் காதலை நொடியில் பிடுங்கி சென்றவரை தடுக்கும் வகை தெரியாமல் இவள் விழிக்க…
“ எனக்கு வசந்த் வேண்டும்” என்று கத்த வேண்டும் போல் தோன்றியதை செய்யாமலே சிலையாகி நின்று போனாள்.
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்கு தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித்திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா??
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா???
விழியிலேயே என் விழியிலேயே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
கேவல்… விழி நீர் தீரும் மட்டும் அவள் அழ… அதை பொறுக்க இயலாத தோழிகள் அவளை சமாதானம் செய்தனர்.
‘ராகவியை கொல்லும் வெறியே அவர்களை சூழ்ந்தது… ஆனால் இனி அவர்கள் என்ன செய்ய முடியும்?
நட்பெனும் அஸ்திரம் கொண்டு தங்களை ஆட்டி வைத்து விட்டாளே இந்த பைத்தியம்.’ என்று அதற்கும் அவளை தான் சாட தோன்றியது.
அதன் பின் ஒரு நாளும் கல்லூரி வரவில்லை மாலினி. வீட்டினுள் அடைந்தாள்.
விபரம் கேட்ட நளினியிடம் ரூபிணி எதோ சொல்லி சமாளிக்க பார்த்த போது…
அதட்டி உருட்டி அவர்களிடம் இருந்து விஷயத்தை கறந்தாள்.
ஆனால் பயன் தான் இல்லை.
நாட்களும் நத்தை போல் நகர்ந்தது
நளினி திருமணம் முடித்த கையோடு மாலினிக்கும் பேச தொடங்கிய வீட்டாரின் பேச்சை தட்டி கழித்தாள்.
மாலினியின் பிடிவாதம் முன் வாதிட்ட தோழியர் தோற்க…
அக்காவின் அதட்டல் பலன் அளிக்காமல் போக
தந்தையின் பேச்சும் எடுபட மறுக்க
தாயின் எல்லா வகையான எதிர்ப்புகளும் கை கொடுக்காமல் போக
விபரம் அறியாவிட்டாலும் அவளின் எதிர்காலம் குறித்தும் அவளின் திருமணம் குறித்தும் பேசிய தம்பியை திட்டி அனுப்பினாள்.