புதிதாய் வரவிருக்கும் எம் கல்லூரி மாணவ மாணவியர்களை அன்போடு வரவேற்கிறோம்
என்ற வாசகம் தாங்கிய பேனரை வாசித்தபடி கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் மாலினி தன் தோழி ரூபிணியோடு.
ரூபிணிக்கு, என்னதான் கல்லூரி முதல் நாள் என்ற சந்தோஷம் இருந்தாலும் சீனியர்கள் ராகிங் போன்ற கேள்விப்பட்டவைகளால் பயந்தபடியே இருந்தாள்.
அவளின் பயம் தெரிந்தோ என்னவோ ஒரு பட்டாளம் இவளை அழைக்க,
“ என்னடி நம்மள கூப்பிடுறாங்க?” என்று மாலினியின் காதை கடித்தாள்.
“ எனக்கு என்ன தெரியும்? நானும் உன் கூட தானே வரேன். வா… போய் என்னனு கேட்டு வரலாம்” என்று கூறினாள்.
மாலினியின் இயல்குணம் அறிந்த ரூபிணி,
“ அம்மா தாயே, உன் லீலைகளை முதல் நாளே ஆரம்பிச்சுடாத…
சீனியர்ஸ் கிட்ட எந்த வம்பும் வைக்க கூடாதுன்னு சொல்லி தானே கூட்டி வந்தேன். நீ கூப்பிடற தோரணை சரி இல்லையே.
தயவு செஞ்சு எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணிடாத” என்று கெஞ்சினாள்.
“ அது என் கைல இல்ல. அதோ அந்த உன் சீனியர்ஸ் கைல இருக்கு” என்று கூறி ரூபிணியை இழுத்து சென்றாள்.
“ என்ன சீனியர்க்கு வணக்கம் வைக்க சொல்லி தரனுமா?” கூட்டத்தில் ஒருவன் கூற,
“ வணக்கம் சீனியர்..” என்று தானும் கூறி கொண்டு மாலினியை பார்க்க அவளும் ஒரு வணக்கம் வைக்க வேண்டியதாகி போனது.
“ எந்த டிப்பார்ட்மென்ட்?”
இவள் பதில் கூற,
“ சரி இன்னைக்கு உனக்கு முதல் நாள் அதனால கொஞ்சம் ஈஸியான வேலை கொடுக்குறேன்” என்று முதலாமவன் கூறினான்.
ரூபிணி பயந்த படி பார்க்க அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
“ அதோ அந்த நீலக்கலர் சட்டை..” இவர்கள் திரும்பி பார்க்க,
“ ம்ம், அவர் தான்… அவர் கிட்ட போய் கொறஞ்சது ஒரு அஞ்சு நிமிஷமாச்சும் பேசணும்..
அஞ்சு நிமிஷத்துக்கு குறைய கூடாது.
அப்படி குறைஞ்சுது… உனக்கு வேற கடுமையான பனிஷ்மெண்ட் தர வேண்டி இருக்கும் புரிஞ்சதா?” என்று கேட்க இவள் தலையை கிடுகிடுவென ஆட்டினாள்.
ஆனால் மாலினி அவனை முறைக்க,
“ ஏய், என்ன முறைக்குற? மச்சி இங்க பாரேன்…” என்று கூட்டத்தில் ஒருவன் எடுத்து கொடுக்க,
“ ஆமா மச்சி” என்றவன் ரூபிணியிடம்,
“ நீ போக வேண்டாம்” என்றதும் நிம்மதி அடைந்த ரூபிணி அடுத்து அவன் சொன்ன,
“ மேடம் நீங்க போங்க…” என்ற வரியில் ஆடி போனாள்.
‘ அய்யோ என்ன சரவெடி வெடிக்க போகுதோ’ என்று பயந்தபடி பார்க்க
மாலினி எதுவுமே பேசாமல் அமைதியாக கிளம்பினாள் அந்த நீல சட்டைக்காரனை நோக்கி.
“ எக்ஸ்கியூஸ் மீ”
யரோடோ போனில் பேசிக்கொண்டு இருந்தவன், திரும்பினான்.
“ எஸ், என்ன வேணும்?”
ஆனால் அவளோ எதுவும் பேசாது அமைதியாக நிற்க அவன், போனில்
“ ஒன் மினிட்… நான் திருப்பி கூப்பிடுறேன்” என்றுவிட்டு
“ என்ன வேணும்ங்க?” என்றான் மீண்டும்.
அப்போதும் பதில் இல்லாது போக,
“ நீங்க தானே கூப்பிட்டது?” இவள் ஆம் என்று தலையாட்ட..
“ தென் வாட்?” என்றான் கொஞ்சம் காரமாக
அவள் அசைந்த பாடில்லை…
அவன் அந்த இடத்தை விட்டு நகர போக இவள் மீண்டும் அவனை அழைப்பது போல் தொண்டையை செருமினாள்.
அவனும் நின்று அவளிடம்,
“ என்ன பிரச்சனை உனக்கு ?” என்றான் கொஞ்சம் குரல் உயர்த்திய படி…
இவளோ தன் கைக்கடிராத்தை பார்த்தாள்.
“ எக்ஸ்கியூஸ் மீ… எனக்கும் டைம் ஆகுது… என்னவோ நீங்க தான் ரொம்ப பிசி போல வாட்ச்ச பாக்குறீங்க…
எதுவும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க … இல்ல இப்படியே நடைய கட்டுங்க… காலைலயே கடுப்பேத்திட்டு…”
ஆனால் அவள் இவனிடம்,
இரு விரல்களையும் கோர்த்து ஒரு நிமிஷம் என்க,
அவன் தன் கைகளை கட்டி கொண்ட படி அவளையே பார்த்தான்.
‘இனி அவளாக வாய் திறக்காமல் எதும் பேச கூடாது’ என்ற முடிவுடன்.
கடிகாரத்தை பார்த்தவள்,
காற்றில் கைகளை அசைத்தபடி ஏதோ செய்ய…
இவன் தன் காதை ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டான்.
‘ அவள் பேசவில்லையா? இல்லை தனக்கு தான் எதுவும் கேட்கவில்லையா?’ என்று எண்ணியவாறு அவளை பார்த்தான்.
எதிரினில் நின்று கொண்டிருக்கும் இந்த பெண் அவன் மனம் அறியாமல் மௌனமாகவே நின்றாள்.
கொஞ்ச நேரத்தில்,
ஸ்ஸ்ஸ் அப்பா… என்ற பெரு மூச்சுடன் இவனிடம்,
“ தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.
அவனோ அவள் செய்கை ஏதும் புரியாமல் முழித்து பின் தன் செல் அழைக்க.. அதை காதில் கொடுத்த வண்ணம்… போய் கொண்டிருந்தவள் மீது பார்வையை வீசி நகர்ந்தான்.
இங்கு அந்த பட்டாளத்திடம்,
“ நீங்க சொன்ன மாறி பேசியாச்சு சீனியர்…” என்று கூறிவிட்டு தோழியை அழைத்து கொண்டு நகர்ந்தாள்.
ரூபிணிக்கு தான் ஆச்சர்யம்…
மாலினியை துளைத்தெடுத்து விட்டாள்.
“ அந்த நீல சட்டை இவளை ஒன்றும் செய்யவில்லையா?” என்று கேட்க,
நடந்ததை கூறியவள் ,
“அனேகமா என் மேல கொலை வெறி ஏறி இருக்கும். கொஞ்ச நாள் அவன் கண்ணுல மாட்டாம தப்பிச்சா போதும்… அவன் ஈஸியா மறந்துடுவான்” என்று சமாளித்தாள்.
ஆனால் அவனோ அன்று மாலையே அவளை கண்டு கொண்டு…
அவள் நடந்து கொண்டதன் பின்னணியையும் புரிந்து அமைதியாகி விட்டான் என்பதை அவள் அறியவில்லை.