“விடிந்தது…!”
அதிகாலை ஐந்து மனிக்கு அலைபேசி அலறியது. அயர்ந்த உறக்கம் விடை கொடுத்து பல
நாளாகி விட்ட செழியனுக்கு அலைபேசி அலறலில் விழிப்பதொன்றும் அத்தனை கடினமல்ல
ஒளிப் பீரிட்டு அலரிய அவ்வலைப்பேசியை கையிலெடுத்தான்.
இந்நேரத்தில் யாராக இருக்குமென அனாயாசமாக கைபேசியை கையிலெடுத்து ஒளித்திரையை
உற்று நோக்கினான் அதிர்ந்து நின்றான். ஈராண்டுகளாக கண்ணீரால் கழுவி
கரையெடுத்தபோதும் துளியளவும் அகலாமல் அகத்தில் நின்றாடும் அவளின் அழைப்பு
இது… என்ன செய்வது? வாழ்வில் எப்போதுமே எண்ணியிராத துன்பத்தை தந்தவள், உயிரை
உருவி தன்னகத்தே வைத்து வெறும் உடலை வீதியெங்கும் நடமாடவிட்டவள். அலைப்பேசியை
எடுக்கலாமா? வேண்டாமா? குழப்பத்தில் கை பச்சை பொத்தானை தடவியது.
“யாரு இந்த நேரத்துல?
” நான்…”
சப்த சுரங்களும் நர்த்தனமாடும் அதே குரல்…
“நான் னா யாரு?”
“நான் நறுமுகை…”
ஆணென்ற கர்வம் அகன்று கண்கள் நிறைந்தது செழினுக்கு.
“சரி என்ன இந்த நேரத்துல? அதுவும் இத்தனை வருசம் கழிச்சி…”
“இல்ல இதை உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சி அதான் போன் பண்ணேன்.”
“சரி சொல்லு…”
“எனக்கு குழந்தை பொறந்திருக்கு. உங்கிட்ட சொல்லணும்னு ஆசை அதான்…”
“சரி எந்த ஆஸ்பத்திரி?”
மருத்துவமனையின் விலாசத்தை கூறி அலைப்பேசியை அணைத்தாள் நறுமுகை.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப் போகிறோமென்ற மகிழ்ச்சி, ச்சீ.. அடுத்தவன்
மனைவியை பார்க்க ஏன் இத்தனை குதூகலம் வெக்கங்கெட்ட மனசே? என்று தன் தற்காலிக
மகிழ்ச்சிக்கு அவ்வப்போது கடிவாளத்தையும் போட்டுக் கொண்டான். ஒருநாளுமில்லாத
திருநாளாக பரபரப்பாக கிளம்பினான். போகும்போது வெறுங்கையோடு போகக்கூடாது.
எதேனும் வாங்க வேண்டுமென்றாலும் கடை திறக்க வேண்டுமே? ச்சே நேரம் வேறு ஆமை
போன்று…
ஒருவழியாக மணி எட்டானது. தோரணையாக உடையணிந்து கொண்டான். அவள் பெயர் பொறித்த
ஸ்கார்பியோவில் ஏறினான். வாகனம் ஊரைத்தாண்டி சாலையில் சென்றது, எங்கோ தெரிகிற
தோட்டம், இடையில் பனைமரங்கள், சாலை ஓரமெங்கும் கருவேல மரங்கள், தார்ச்சாலைதான்
ஆயினும் கரடுமுரடு. எங்கே எனது கவிதை என்ற பாடலின் ரீங்காரம். இவன் மனம்
இவயனைத்தையும் சிறிதும் கவனிக்காமல் நறுமுகையுடன் தன் கடந்தகால காதலை
அசைப்போடத் துவங்கினான்…
சுமார் ஐந்தாறு ஆண்டுகளிருக்கும். பங்குனி உத்திரத்திருநாளன்று அய்யானார்
ஆலயத்திற்கு குடும்ப சகிதமாக சென்றிருந்தான் செழியன். பனைமரக் காடுகளினூடே
அமைந்திருக்கு அந்த ஆலயத்திற்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலிருந்து மக்கள்
குவிவார்கள். ஆங்காங்கே மேளதாளங்கள் ஒரு புறம், சண்டை சச்சரவுகள் ஒரு புறம்,
குடும்பம் குடும்பமாக கூடிச் சிரித்தல் ஒரு புறம். எட்டெட்டு பேராக சீட்டாட்ட
களம் ஒருபுறம், வளையல் கடைகள், குளிர்பானக் கடைகள், சிறுவர் விளையாட்டு
ராட்டிணங்கள் குடிபோதையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் குதுகுலமாக குலாவும்
தமிழகத்தின் அமுதசுரபிகள் என திருவிழா களைகட்டியது. செழியனும் தன் தோழனும்
வேர்க்கடலை விற்கும் ஒரு பாட்டியிடம் ஐந்து ரூபாய்க்கு வேர்க்கடலையை
வாங்கிக்கொண்டு தனக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு பாட்டியிடம் பழங்காலத்தை
குறித்து கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது செழியனின் முதுகுக்குப் பின்னால்
ஒரு குரல். “பாட்டி நெலக்கடல எவ்ளவு?”
“ஒரு ஒலக்கு அஞ்சு ரூவாம்மா” என்றாள் பாட்டி. வெடுகென்று நிலக்கடலையை
பறித்தவாறே நடையைக் கட்டினாள் நறுமுகை.
“சரி பாட்டி நாங்களும் வரோம்” என இருவரும் நடந்தனர்.
ஒரு பந்தலின் நிழலில் செழியனின் குடும்பம் அமர்ந்திருந்ததில் இருவரும்
ஐக்கியமானார்கள். அதனருகினிலேயே நறுமுகையின் குடும்பதாருடன் நறுமுகை…
வாலிப வயதிற்கே உண்டான விழியோட்டத்தை நறுமுகை மீது பரவ விட்டான். நறுமுகை
திரும்பவேயில்லை. சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல இவனும் பார்வையை
மாற்றவே இல்லை.
எப்போதாவது நறுமுகை திரும்புகிற தருணம் “உன் பெயர் என்ன?” என்பது போல்
வாயசைத்தான். “சரியான பொம்பள பொறுக்கியா இருப்பானோ” என்று நினைத்தவாறே
திரும்பிக்கொண்டாள்.
இரவு நேரமானது. செழியன் குடும்பமும் அருகிலிருக்கும் நறுமுகை குடும்பமும்
ஒருவருக்குருவர் அறிமுகமானார்கள். தன் மகன் செழியனை பற்றி அவன் தாய்
அவர்களிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தாள். ” அவுங்க அப்பா அவனுக்கு 13 வயசு
இருக்கும்போதே தவறிட்டாங்க. ஒத்த புள்ள அவன் ஆசப்பட்டதெல்லாம் ஒன்னு கூட கொற
வைக்காம வாங்கி கொடுப்பாவ எங்க வூட்டுக்காரவிய. இனி நம்ம எப்படி வளக்கக்க
போறோமோனு தவிச்சிட்டு இருந்தேன். ஆனா எம்புள்ள அவனா படிச்சான், அவனா வேலைக்கு
போனான், எம்மா ஒரு பிஸினஸ் பண்ண போறேம்மா என்றான். ஏம்லே நமக்கு எதற்க்கு
அதெல்லாம்? நமக்கு தோப்பு இருக்கு நீ வேலைக்கு போயிட்டு வந்து அந்த தென்னையை
காப்பாத்தினாலே போதுமே மக்கா. தேவையில்லாம பணத்த வீணாக்கிபுடாத மக்கானு
சொன்னேன். இல்லமா கண்டிப்பா நான் வீணாக்க மாட்டேன்னு சொல்லி ஆரம்பிச்சான்.
இன்னைக்கு கொஞ்சம் நெலம் வாங்கியிருக்கான், வீட்ட கொஞ்சம் எடுத்து
கட்டியிருக்கான். என்னய நல்லா பாத்துக்குறாம்மா. எந்த கெட்டப் பழக்கமும்
இல்லாம வளந்திருக்கான்.”
“ச்சே.. இவ்வளவு நல்லவனை நாம தப்பா நெனச்சிட்டோமே” என நறுமுகை முதன்முதலாக
“கனிவு பார்வையை” வீசினாள் அந்த அகன்ற கருவிழிகளால்…
பல மாதங்களாக தவமிருந்து தெய்வத்தை கண்ட முனிவரைப் போல ஆனந்தத்தில்
ஆர்ப்பரித்தான் செழியன்.
“எத்தனையோ முறை இந்த ஆலயம் வந்துவிட்டோம், எத்தனையோ அழகிய பெண்களை
கடந்துவிட்டோம் இவளிடம் மட்டும் ஏன் இந்த ஈர்ப்பு? இந்த அயோக்கிய கண்களில்
விழுந்த கன்னிகள் ஏராளம். ஆனால் விழுந்த உருவங்கள் கண்களை தாண்டி சென்றதே
இல்லை. இவள் மட்டும் எப்படி மனதிற்குள் ஊடுருவுகிறாள்? ஏதோ இறைவன் போட்ட
முடிச்சு” என செழியன் மனதிற்குள் வழக்காடு மன்றமே நடத்தினான்.
இரு குடும்பத்தாரும் சூழ்ந்திருந்தாலும் இவரிருவரின் பார்வைகள் மட்டும்
ஒன்றுக்கொன்று பரிச்சயப்பட்டது. கதிர் பாயும் கண்களுக்கு இடையில் கடவுளே வந்து
நின்றாலும்… ம்ம்கூம் முடியாது.
strong> பனைமரக் காடுகளினுள் பல கேளிக்கைகள், மின் அலங்காரங்கள், இன்னிசை கச்சேரி,
அருள் வந்து ஆடும் சாமிகள் என எவ்வளவோ நடைபெறுகிறது ஆயினும் ஒட்டுமொத்த
சொர்கமும் நறுமுகையை சுற்றி இருப்பதாகவே நினைத்தான். அதி நுட்ப சிரத்தையோடு
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரைப் போன்று துளி நிமிடம் தவறாமல்
பார்த்துக்கொண்டே இருந்தான்.
அர்த்த சாமமாயிற்று இவரிருவரை சுற்றியிருந்த அனைவரும் உறங்கிவிட்டனர். செழியன்
மெல்ல சைகை காட்டினான். “உன் பேரு என்ன?” ஒன்றும் புரியாதவளாய் விழித்தாள்
நறுமுகை. சுண்டு விரலையும், பெருவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரலையும்
மடக்கி தன் காதருகே வைத்து “போன் நம்பர் கொடு” என்றான்.
“ஐய்யோ எங்கிட்ட போன் இல்லை”
“பரவால என் நம்பர் தரவா?”
“வேண்டாம்” என்றவள் தன் தாயின் அருகே படுத்துவிட்டாள் நறுமுகை.
என்னடா இது என்று தலைகவிழ்ந்து தன் தாடையில் கைவைத்த வாறே அமர்ந்திருந்தான்.
விடிய விடிய படித்து ஒரு மதிப்பெண்ணில் தேர்வில் தோற்றவன் போன்ற பரிதாபமான ஒரு
முகபாவம் அது. நறுமுகை பார்க்கிறாளா என மெல்ல பார்த்தான். படுபாதகி
உறங்கிவிட்டாள். “அட கெரகமே கொஞ்ச நேரத்தில் நாம எதைஎதையோ நினைச்சிட்டோமே”
என்று தன் நண்பனருகே படுத்தான். இரவு மணி மூன்று இருக்கும். உறங்கிவிட்டான்.
விடிந்தும் விடியாப் பொழுது. சுற்றிலும் இறைச்சல் இருப்பினும் அயர்ந்த
உறக்கம். யாரோ தன் காலில் மிதிப்பது போன்று ஒரு வலி கடும் அசதியுடன் யாரென்று
பார்த்தான். நறுமுகை. படபடத்து எழுந்தான். சிறிய தென்னையோலையில் மிகச் சிறிதாக
பத்து இலக்க எண்கள் வீசியெறிந்து தன் குடும்பத்தோடு சென்றாள் நறுமுகை..
பேரானந்தம், உலகிலேயே இந்த அய்யனார் மட்டுமே சக்தி வாய்ந்தவர் என்று
எண்ணிக்கொண்டான். கடவுளுக்கு நன்றி கூறினான்.
ஒருவழியாக திருவிழா முடிந்தது. வீடு திரும்பினார்கள். முதல் வேலையாக போன்
செய்தான். சில பல ரிங் சென்றுவிட்டது… எடுப்பார் யாரும் இல்லை. திடீரென ஒரு
கணத்த குரல் “அலோ யாரு நீங்க?”
நா…ன்..
“அலோ சொல்லுங்க யாரு நீங்க?”
என்ன பேசுவதென்று தெரியவில்லை… மரண தண்டனை கைதியின் கடைசி நிமிடம் போன்று
அத்தனை படபடத்தது இருதயம்.
சற்றே தட்டுத்தடுமாறிய குரலில் “நான் கோயில்ல பாத்தோம்லா”
“கோயில்ல பாத்தோமே?… இழுத்தவாறே இருந்தபோது திடீரென ஒரு குரல் “அலோ சாரி
ராங் நம்பர்” என்றது.
“ஒருவேளை நம்பரை மாத்தி கொடுத்து நம்மை ஏமாத்திபுட்டாளோ?” என பல்வேறு
கேள்விகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கையில் அதே எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல்.
“Sorry Amma ph Atten pannittanga. I call u later. U don’t call me”
“ok Thank you so much”
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
இரண்டு நாட்கள் அழைப்பும் இல்லை. எந்த அழைப்பு வந்தாலும் அவளா என
எதிர்பார்த்தான். உடனிருக்கும் உறுப்பைப் போல உறக்கத்திலும் கைபேசியை கையிலேயே
வைத்திருந்தான்.
ஒருநாள் கைபேசி சிணுங்கியது…
அவளே தான். பச்சை பொத்தானை அழுத்தினான். “நறுமுகை” என்றான்.
“ம்ம்ம் நாந்தான். நல்லா இருக்கியலா?”
நான் நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்கா? இந்த ரெண்டு நாளா உன் போனுக்காக
காத்துகெடக்கேன், ரொம்ப தவிச்சிட்டேன்” இருதய படபடப்புக்கிடையே பேசிவிட்டான்.
“வீட்ல அம்மா இருந்தாக்கா பேச முடியாது. அதான் பேச முடியல…”
“சரி என்னய உனக்கு பிடிச்சிருக்கா?”
“நான் உங்ககிட்ட பிரண்ட்லியாதான் பேசுதேன். நீங்க வேற எதும் கற்பன பண்ணாதீங்க.
சரி என்ன ஒங்களுக்கு பிடிச்சிருக்கா?”
“உன் அழகு என்னய திரும்ப வச்சிச்சு, உன் குணம் எப்படீனு பாத்துதான் விரும்ப
வைக்கும்”
“என் குணம் ரொம்ப மோசமான குணம். நான் ஒரு வாயாடி, சில்லாட்ட”
என உறையாடல் நீண்டுகொண்டே சென்றது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்
துவங்கினர். ஒருநாள் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர்.
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் சந்திப்பதாக திட்டம்.
தன் தோழியின் வீட்டுக்கு செல்வதாக பொய் சொல்லி கிளம்பினாள் நறுமுகை.
பேருந்து ஏறியாகிவிட்டது. முதன்முதலாக தவறு செய்கிறோம். அம்மாவிடம் அபாண்டமான
பொய் சொல்லிவிட்டோம். கடவுளே என்னை மன்னிச்சிடு. செழியனை பார்க்கும் ஆவலில்
strong> அனைத்து துணிவும் வந்தது.
நாற்பது நிமிட பேருந்து பயணம் நிறைவு. பேருந்து நெல்லை வந்தடைந்தது.
பேருந்தை விட்டு இறங்கினாள். அவனை காணவில்லை. நெஞ்சு படபடத்து. கைப்பேசியில்
எண்களை அழுத்தினாள். எண் தொடர்பு எல்லைக்கு அப்பால்.
“கடவுளே நான் என்ன செய்வேன்? அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்ததுக்கு எனக்கு
இது தேவைதான்”
கருவிழி குளமானது. ஈக்கள் கருகும் தீகக்கும் வெயில். இருபது நிமிடமாகிவிட்டது.
கண்ணீர் தாரைதாரையாய் வடியத் துவங்கியது.
“சரி கடைசியாக ஒரு தடவை போன் பண்ணி பாத்துட்டு ஊருக்கு திரும்பிடலாம்” எண்களை
அழுத்தினாள். கிர்… கிர்… அழைப்பு செல்கிறது.
அவள் முதுகின் பின்னே “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்” பாடல்
ஒலி… திரும்பினாள்… செழியன்…
“என்ன மேடம் அவ்ளோ வாய் பேசினீங்க இப்ப இப்ப அழுறீங்க?”
“போ.. நான் ரொம்ப பயந்துட்டேன்.
நறுமுகைக்கு கண்ணீர் நிற்கவே இல்லை.
“சரி வாட்டி. கொஞ்சம் தள்ளி நின்னு பேசுவோம்”
“வேண்டாம் நான் தனியாலாம் வரமாட்டேன்”
“ஏ லூசு இங்க இந்த வெயிலுல இப்டி நின்னு பேசினா கருத்துப் போயிருவடி”
சற்றே தள்ளிச் சென்றனர்.
அங்கே ஒரு ஸ்கார்பியோ மகிழுந்து நின்றது. அதன் முன் சென்று நின்றான் செழியன்.
“வா… இந்த வண்டிக்குள்ள இருந்து பேசுவோம்”
“ஒனக்கு என்ன கிறுக்கா? எவன் வண்டிக்குள்ளயோ இருந்து பேசணும்ங்குற?
“இது நம்ம வண்டிதான்.”
“என்னது நம்ம வண்டியா? எங்கிட்ட சொல்லவே இல்ல?”
” ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனுதான் சொல்லல. சரி அதவிடு கொஞ்சம் வண்டிக்கு
பின்னாடி பாரு…”
கருப்புக் கண்ணாடியில் நீல நிற எழுத்துக்களில் நறுமுகை என்ற எழுத்து. வழக்கம்
போலவே நறுமுகைக்கு கண்ணீர் வடிந்தது. ஆனால் இந்த கண்ணீரில் பயம் இல்லை, குற்ற
உணர்ச்சி இல்லை, கவலை இல்லை மாறாக கணிந்துருகும் காதல் நிறைந்திருந்தது.
“ஏ லூசு அழாதேட்டி”
“சரி நான் அழல. நான் வீட்டுக்கு போறேன். வண்டி ஏத்தி விடு…
வாகனம் ஏறி வீடு வந்து சேர்ந்தாள்.
காதல் மேலும் அழுத்தமானது. இருவருக்கும் இஷ்ட தெய்வம் அலைபேசியேயானது. இரண்டு
கைபேசிகளும் கோடிக் கணக்காண முத்தங்களை பெற்றது.
இந்த சூழலில்தான் நறுமுகைக்கு திருமணப் பேச்சு வந்தது. “தூரத்து சொந்தம் நல்ல
பையன். பக்கத்து வீட்டு கண்ணகிக்கு தங்கச்சி மொவனாம். நம்ம நறுமுகைய
பாத்துருப்பான் போல ஒங்களால முடிஞ்ச நகைய போடுங்கனு கேக்காவ” என நறுமுகையின்
தந்தையிடம் தாய் கூறிக்கொண்டிருந்தாள். இதனை கேட்டுக் கொண்டிருந்தாள் நறுமுகை.
அடுத்த நாள் செழியனிடம் நடந்ததை கூறினாள். “சரி கவலை படாதே நான் எங்க அம்மய
கூட்டிட்டு உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வாரேன்” என்று தைரியம் ஊட்டினான்.
மறுநாள் செழியன் கூறினான் “எங்க அம்ம சம்மதிக்க மாட்டேங்குறாங்க. நம்ம பத்தி
எல்லாத்தையும் கேட்டாங்க நம்ம சந்திச்சது, சாஸ்தா கோவில்ல பாத்தது
எல்லாத்தையும் சொன்னேன். அவுங்க சம்மதிக்குற மாதிரி தெரியல. நான் சண்ட
போட்டுட்டு வந்துட்டேன்..”
நறுமுகையால் அழுகையை அடக்க முடியவில்லை. ஒன்றும் பேசாமல் சிவப்பு பொத்தானை
அழுத்தினாள்..
செழியன் திரும்ப திரும்ப அழைப்புவிடுத்தான் அனைத்தும் தவறிய அழைப்பானது.
அன்று இரவு முழுவதும் நறுமுகை உறங்கவே இல்லை. அழுதாள், அழுதாள், அழுதுகொண்டே
இருந்தாள். மறுநாள் செழியனின் எண்ணிலிருந்து அழைப்பு.
“என்ன? ஏன் போன் பண்ணின?”
மறுமுனையில் பெண் குரல்.
“எம்மா நீதான் நறுமுகையோ?”
“ஆமா”
“நான் செழியனுக்கு அம்ம பேசுதேன். எவளும் பைத்தியகாரி பிள்ள பெத்து
போட்டுருப்பா நேக்கா அமுக்கிபுடலாம்னு இருக்கியளோ?”
படபடக்கும் இருதயம், நெஞ்சில் பாராங்கல் விழுந்தது போன்ற கணம். என்ன
பேசுவெதென்று தெரியவில்லை நறுமுகைக்கு. செழியனின் தாயார் தொடர்ந்தாள்.
“ஒருநாள் ராத்திரியில மயங்குன நீ ஏப்பேரு பட்டவளா இருப்பா. பொம்பள புள்ளையேனு
பாக்கேன் இல்லேனா வீடுதேடி வந்து மானத்த வாங்கிருவேன் சாக்கிரதையா இருந்துக்க
சொல்லிபுட்டேன்”
இதற்கு மேலும் கேட்க இயலாது கைபேசியை அணைத்தாள் நறுமுகை.
அணைத்துவைத்த கைபேசிக்கு சில நாட்கள் உயிர் கொடுக்கவே இல்லை.
செழியன் அல்லாடிக்கொண்டிருந்தான். தன் தாயார் அவனிடம் திடமாக கூறினாள்.
“நீ எவள வேணும்னாலும் கட்டிக்க. ஆனா நான் உசுரோட இருக்க மாட்டேன். எனக்கு
உன்னய வுட்டா யாரும் கெடயாது. நான் சொல்லியவள கட்டிக்க. நம்ம குடும்பத்துக்கு
தகுந்ததா நான் பாக்குறேன். இந்த ஊருல உங்க அப்பாவுக்குனு ஒரு மறுவாத உண்டு அதை
கெடுத்துதான் நான் வாழணும்னு அவசியம் இல்ல. முடிவு பண்ணிக்க”
திகைத்தான் செழியன். எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. “ஒரு ராத்திரியில
உங்கிட்ட மயங்கினவ கண்டிப்பா நல்லவளா இருக்க மாட்டா” என்ற தொனியில் பேசினாள்
அவன் தாயார்.
சரி இனி பேசி பலனில்லை. ஓடிபோய் ஏதாவது கோவில்ல கல்யாணம் பண்ணிடலாம் என
தீர்மானித்து பல முறை அலைப்பேசியில் முயன்றான். “நீங்கள் அழைத்த எண் அணைத்து
வைக்கப் பட்டுள்ளது என்ற வார்த்தையே திரும்ப திரும்ப வந்தது.
ஒரு வாரம் கழித்து நறுமுகையிடம் இருந்து அழைப்பு வந்தது.
“நறுமுகை… செல்லம்.. ஏன்டி இத்தன நாளா போன் சுவிட்ச் ஆப்ல இருந்துச்சி?
என்னால தாங்க முடியல. செத்துடலாம் போல இருக்கு” என வாய் விட்டு அழுதான்.
அழுதழுது துவண்டு போன தொண்டையில் இருந்து வரும் குரலை சற்று ஊகித்துப்
பாருங்கள். அந்த குரலில் பேசினாள் நறுமுகை “இங்க பாரு. உங்க அம்ம எது
செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வாங்க. பேசாம உங்க அம்மா பாக்குற பொண்ண
கட்டிக்க. எனக்கு உன்கூட வாழுற குடுப்பன இல்ல” என ஓ…வென கதறினாள்.
“ஏ கிறுக்கி என்ன சொல்லுற?”
“ஆமா… உண்மையதான் சொல்லுறேன். இனி எனக்கு போன் பண்ணாத. எனக்கு மாப்ள
பாத்துட்டாவ…”
“ஏ… ப்ளீஸ் இருடி. போன வைக்காத…
“என்னய மன்னிச்சிரு செழியா” என அழுது துடித்தாள்.
கைபேசியை அணைத்தாள்…
செழியன் துடிதுடித்துப் போனான். நாட்கள் வாரமாயிற்று, வாரம் மாசமாயிற்று.
மாதம் ஆண்டுகளாயிற்று. அவன் மீளவே இல்லை. தன் தாயாருடன் பேசவும் இல்லை…
கடந்த கால நினைவுகளை கண்ணீரில் கரைத்தவாரே ஸ்கார்பியோவில் சென்றுகொண்டிருந்த
செழியன் தற்காலத்துக்கு திரும்பினான். வாகனம் மருத்துவமனையிருக்கும்
நகரத்துக்கு வந்தடைந்தது. பிறந்த குழந்தைக்கு தேவையான சில பொருட்களை
வாங்கிக்கொண்டான்.
சரி இனி நறுமுகைக்கு போன் செய்து பார்க்கலாம்.
எண்களை அழுத்தினான். மறுமுனையில் நறுமுகை.
“என்ன செழியா எங்க இருக்க?”
ஆஸ்பத்திரி பக்கத்துலதான்.
“நீ மேலே மூனாவது மாடி, 23 ம் நம்பர் ரூம்’க்கு வா”
சடசடவென சென்றான். தொட்டிலில் குழந்தை, கட்டிலில் குழந்தைக்கு தாய் நறுமுகை,
அருகினில் நறுமுகையின் சித்தி.தாயார் இல்லை.கைகள் நிறைய பொருட்களோடு வாசலில்
நின்றான் செழியன். “ஏம்மா இது யாரு?” காதில் மெல்லிய குரலில் நறுமுகையின்
சித்தி கேட்டாள்.
“என் பிரண்ட் சித்ரா ஹஸ்பண்ட்ம்மா. சித்ராவுக்கு உடம்பு சரியில்ல… அதான்
இவரு வந்துருக்காரு.”
“உள்ள வாங்க தம்பி”
“சித்தி நீ போய் குடிக்க எதாவது வாங்கிட்டு வா. அப்டியே எனக்கு
சாப்டுறதுக்கும் எதாவது வாங்கிட்டு வா”
சரியென கிளம்பினாள்.
இருவருக்குள்ளும் சில நிமிட மௌவுனம்.
நான்கு கண்களும் நிறைந்து நின்றன..
யார் தொடங்குவெதென்று இருவருக்கும் தெரியவில்லை.
மெல்ல ஆரம்பித்தாள் நறுமுகை.
“எப்டி இருக்க?”
“ம்ம்ம் இருக்கேன். நீ சந்தோஷமா இருக்கியா?”
“ம்ம்ம் நான் சந்தோஷமா தான் இருக்கேன். உன்னய நான் ஏன் இன்னைக்கு வர சொன்னேன்
தெரியுமா? இந்த நாளுக்காக நான் பல நாளா வெயிட் பண்றேன்”
ஒன்றும் புரியாதவனாய் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அவள்
தொடர்ந்தாள்.
“எனக்கு கல்யாணமாகி மூனு மாசமா அவர்கிட்ட நா ஒழுங்கா பேச கூட இல்ல.. எந்த
ஆம்பளயும் பொறுக்க மாட்டான். ஆனா அவரு பரிபூரண அன்போடு நீ எப்ப வரியோ அப்ப
வா’னு சொல்லி வெயிட் பண்ணாரு. அப்புறம் எங்க குடும்பத்துல அவரையும், அவரு
குடும்பத்துல என்னையும் தப்பா பேச ஆரம்பிச்சாங்க. அப்ப கூட அவரு என்ன கட்டாயப்
படுத்தல. அப்புறம் ஒருநாள் நானே போயி மன்னிப்பு கேட்டேன்..
ஏத்துக்கிட்டாரு..
அப்புறம் பல மாசமா எங்களுக்கு கொழந்த இல்ல. எல்லா கோயிலுக்கும் போனோம். ஆனா
ஒரு விஷேஷ வீட்டுக்குக் கூட போக முடியாது. இந்த உலகமே ஒரு மாதிரியா
தெரிஞ்சுது. நல்லது, கெட்டது எதுலயும் என்னால கலந்துக்க முடியாது. எனக்கு
பிறகு கல்யாணமானவளாம் கொழந்த உண்டாயிட்டா. ஏக்கமா இருக்கும். அப்புறம் கடவுள்
புண்ணியத்துல கற்பமானேன். கற்பமான நாள்லேருந்து வாந்தி, மயக்கம், சாப்புட
முடியாது உமிழ் நீர் கூட வாயில தங்காது. பத்து மாசமா ரொம்ப கஷ்டபட்டேன்.
அப்புறம் இந்த பிரசவ வலி. யப்பா சாமி தாங்க முடியாது. குழந்தைய பெத்த பிறகும்
ஒரு நிமிஷம் கூட நிம்மதியா உறங்க முடியாது. எப்ப பிள்ள அழுமோனு கெதக்கடியிலேயே
இருப்பேன்.
இதெல்லாம் நான் உங்கிட்ட ஏன் சொல்றேன்னா ஒரு குழந்தைய பெத்து எடுக்கணும்னா
இவ்வளவு பாடு இருக்கு. குழந்தை பெக்குறதுக்கே இவ்வளவு பாடு. அதை வளத்து 29
வயசு வரைக்கும் ஆளாக்க எவ்வளவு பாடு படணும்? அந்த தாய்க்கு நம்ம எவ்வளவு
விசுவாசமா இருக்கணும்?
உங்க அப்பா சாவும்போது உனக்கு 13 வயசு. அதுக்கு பிறகு வேற ஒரு வாழ்க்கைய
தேடாம, நாடி நரம்பெல்லாம் கட்டுபடுத்தி உனக்காகவே வாழ்ந்தவங்க உங்க அம்மா. நீ
அவங்களுக்காக என்னய விட்டு கொடுத்தது என்ன தப்பு?
நமக்காக மட்டுமே வாழுறது வாழ்கையே இல்ல. அது சுயநலம், மிருகம் கூட அப்புடி
வாழாது. நம்ம மனுசங்க. கொஞ்சமாவது யோசிச்சி பாரு. கஷ்டம், கவலை இல்லாத
மனுசன்னு எவனுமே இல்ல. நமக்கு இந்த கஷ்டம் இல்லேனா வேற எதாவது ஒரு கஷ்டம்
வரத்தான் போகுது. புரிஞ்சிகிட்டு வாழு. சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணு, உங்க
அம்மாகிட்ட பேசு. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா?
திருச்செந்தூர் கோயிலுக்கு போயிருந்தேன். அப்ப உங்க அம்மாவ பாத்தேன். உங்க
அம்மா ரொம்ப அழுதாங்க, மன்னிப்பு கேட்டாங்க”
அனைத்தையும் கண்ணீர் ததும்ப கேட்ட செழியன் அவள் குழந்தையை வாரி முத்தமிட்டான்.
“என் வாழ்கை ரொம்ப நாளா விடியா வானமாவே இருந்துச்சி.
இன்னைக்கு தான் விடிச்சிருக்கு.
குழந்தையை பார்த்தவாறே சொன்னான். ஏலேய் நீ குடுத்து வச்சவன் அடுத்த சென்மத்துல
நான் நீயா பொறக்கணும்” என்று கண்ணீர்மல்க நன்றி கூறி விடைபெற்றான் செழியன்.
அழுகையை அடக்க முடியாமல், வாய் திறந்து பேச வக்கற்று புன்னகை பூத்தவாறே
தலையசைத்தாள் நறுமுகை…
(முற்றும்)
நன்றியுடன்
செ_இன்பா
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…