மீண்டு[ம்] வருவானா?—-சிறுகதை

0
114

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்துமதி தன்னோட மருத்துவ படிப்பை தொடர்ந்து படித்து கொண்டு இருந்த சமயம் அது.அன்று அவளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி பெறும் போது ஆம்புலன்சில் இருந்து ஒரு இளைஞனை ரத்தவெள்ளத்தில் கொண்டு வந்தார்கள் .இந்து அவனது நாடித்துடிப்பை சரி பார்த்து ஆபரேஷன் அறைக்குள் அனுமதித்தாள்.நான்கைந்து டாக்டர்கள் சுற்றி நின்று அவனை பரிசோதித்து அவனது காயங்களுக்கு தையல் போடும் போது அவன் மெதுவாக கண் விழித்தான்.அவன் பார்வை அவன் அருகில் நின்ற இந்துவின் மீது விழ அதை கவனித்த இந்து அவன் அருகே சென்று “சின்ன சின்ன காயங்கள் தான்.பயப்பட வேண்டாம்.அவ்ளோ தான் சரியாகிடும்”என்றதும் தலைமை மருத்துவர் “இந்து வார்டுக்கு இவர மாத்த சொல்லிருங்க.எதுக்கும் ஒரு தடவை புல்லா ஸ்கேன் பண்ணிக்கலாம் “என்று கிளம்பினார்.

இரண்டு நாள் கழித்து அவனுடைய எல்லா ரிப்போர்ட்டும் வந்தது .அதை எடுத்துகிட்டு அவனை சந்திக்கும் போது அவனோட அம்மா உடனிருந்தார் அவரிடம் “கெளதம் ரிப்போர்ட் எல்லாமே நார்மல் .காயம் ஆறினதும் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.இனி மேலாவது பைக்க மெதுவா ஓட்ட சொல்லுங்க “என்று சொல்லிட்டு கிளம்பும் போது கெளதம் இந்துமதியை சைகை காட்டி அழைத்தான் .அவள் அருகே வந்ததும் “டாக்டர் நான் மெதுவா தான் பைக் ஓட்டிட்டு வந்தேன் .ஒரு சின்ன பையன் ரோட்டுல ஓடியாந்துட்டான்.நான் டக்குனு பிரேக் பிடிச்சுட்டேன் பின்னாடி வந்த கார் என் மேல மோதிருச்சு.தப்பு என் மேல இல்ல சரியா? “என்றதும் இந்து சிரித்துவிட்டு நகர்ந்தாள் .

இந்து தனது டீனுடன் எல்லா நோயாளிகளையும் பார்த்து கொண்டு வரும் போது கெளதமை டாக்டர் செக் பண்ணிட்டு இவரை” டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிருங்க “என்றதும் அவன் டாக்டரிடம் “சார் இன்னும் பத்து நாளாவது இருந்துட்டு போறேன் ப்ளீஸ் . எனக்கு இந்துமதி டாக்டர ரோம்ப புடிச்சிருக்கு .அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல தோணுது “என்றதும் டீன் இந்துமதியை பார்த்து முறைத்து பார்க்க மற்ற மாணவர்கள் சிரித்துவிட்டார்கள்.இந்துமதி என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள் .

கெளதம் வீட்டுக்கு கிளம்பி கொண்டு இருக்கும் போது இந்து வேகமாய் வந்து “நீ என்ன பெரிய ஹிரோன்னு நினைப்பா?எல்லார் முன்னாடியும் அப்படி சொல்ற?உன் பேர் கூட ஞாபகம் இல்ல எனக்கு.நான் தினமும் டிரிட்மெண்ட் கொடுக்குற ஆயிரத்துல ஒருத்தன் நீ அவ்ளோ தான்.இனி மேலாவது இது மாதிரி பண்ணாத.கெட் லாஸ்ட்”என்றதும் அவளை கண்களை நேருக்கு நேர் பாத்த அவன் “மனசுல பட்டத டக்குனு சொல்லணும் .புடிச்சவங்கள விட்டு தள்ளி நிக்கக்கூடாது.ஆக்சிடண்ட் ஆன நிமிஷம் நான் செத்துட்டேன்னு நினைச்சேன் .எனக்கு உயிர் இருக்குன்னு தெரிஞ்சது உன்னை பாத்த நிமிஷத்தில் இருந்து தான்.நான் பாத்த ஆயிரம் பொண்ணுல எனக்கு புடிச்ச பொண்ணு இந்து மட்டும் தான்.நீ டாக்டர இல்ல நர்ஸா இருந்தாலும் இதே மாதிரி தான் சொல்வேன் ஐ லவ் யூ”என்றவன் கிளம்பி போனான் .அவனது வார்த்தைகள் அவளை நிலைகுலைய செய்தது .

அன்று வெளி நோயாளிகளை இந்து பார்த்து கொண்டு இருந்தாள் .அவள் பார்வைக்கு எதிரே கெளதம் அமர்ந்திருந்து அவளை பார்த்து கொண்டே இருந்தான் .நோயாளிகள் ஒருவர் பின் ஒருவராக வரும்போது கெளதம் அனைவரையும் அனுப்பி கொண்டே இருந்தான் .எல்லா நோயாளிகளும் கிளம்பிய பின்பு கெளதம் உள்ளே போனான் .அவனிடம் பேச அவள் தயாராக இல்லை.அமைதியாக இருந்தாள் .கெளதம் கிளம்பும் போது “சில பேருக்கு மட்டும் தான் கடவுள் தேவதைகள பரிசா தருவார் தெரியுமா ?அதுவும் உண்மையான லவ் இருந்தா மட்டும் தான்.அந்த அதிஷ்டசாலி நானா இருந்தா என்ன தப்பு”என்று சொல்லிட்டு கிளம்பியதும் இந்துமதி அருகில் இருந்த டாக்டர் “பையன் உண்மையா லவ் பண்றான் போல .நானா இருந்தா விடவே மாட்டேன் தெரியுமா?”என்றதும் இந்துமதி அவரை முறைத்துவிட்டு கிளம்பினாள் .

இந்துமதி திரும்பிய பக்கம் எல்லாம் இருந்தான் .அவள் பார்வையின் வட்டத்துக்குள் அவன் சுழன்று கொண்டு இருந்தான் .பலசமயம் அவள் வீட்டு வாசலில் கூட பார்க்க முடிந்தது அவளால் .ஒரு நாள் அவனை ஒரு காபி ஷாப் வரச்சொல்லி “சுத்த சினிமாதனமா இருக்கு கெளதம் .ஏன் இவ்ளோ டைம் வேஸ்ட் பண்ற?நான் படிச்சு முடிக்க நிறைய வருஷம் இருக்கு.இன்னும் நிறைய தூரம் போக வேண்டி இருக்கு என் வாழ்க்கையில.உன்னை லவ் பண்ணிட்டு கூட சேந்து சுத்திட்டு இருக்க முடியாது.உன்னோட லைப் ஸ்டைல்க்கு தகுந்த பொண்ண செலக்ட் பண்ணிக்கோ ப்ளீஸ் “என்று கிளம்பும் போது கெளதம் “சரிங்க டாக்டர் அப்போ நான் எல்லாம் உங்கள லவ் பண்ண கூடாதா ?எங்கள மாதிரி பசங்களுக்கு இப்படி தான்ங்க லவ் பண்ண தெரியும் .பின்னாடி சுத்துற பையன என்னைக்கு தான் மதிக்க போறீங்க ?உண்மையா லவ் பண்ற பையன இப்படி பேசியே கொன்றுங்க.டைம் பாஸ் பண்றவனுங்க நல்லா இடம் கொடுங்க.நீயா என்னை தேடி வருவ .என் லவ் மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கு.குட் பை “என்று கிளம்பி போயிட்டே இருந்தான் .

கேரளாவில் மழைக்காலம் என்றால் கோவையில் குளிர்காலம் என்றே சொல்லலாம் .விட்டுவிட்டு பெய்யும் மழை பூமியை குளிர்ச்சியூட்டும்.இந்துமதி கடந்த சில நாட்களாக கெளதமை பார்க்கவில்லை .இரண்டு நாள் வரை நிம்மதியாக இருந்தாலும் மூன்றாம் நாள் இதய கதவை அவனது ஞாபகங்கள் திறக்க தான் செய்தது .இருப்பினும் அவளுடைய கடந்த கால நினைவுகளால் துவண்டு போனான் .இந்துமதி சிறுவயதிலேயே தந்தையிடம் இருந்து பிரிந்து தாயுடன் அவரது இரண்டாவது கணவர் ஜெயராமுடன் வாழ்ந்து வரும் போது ஒரு விபத்தில் தாயும் இறந்துவிட ஜெயராமனுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது .இருவரும் இதுவரையில் பேசி கொண்டது கூட கிடையாது .இந்து தாய் இறந்தது முதல் ஹாஸ்டல் வாழ்க்கை தான்.மாதம் தவறாமல் இவளை தேடி பணம் மட்டும் வந்துவிடும் .அடுத்தடுத்த இழப்புகளால் உறவுகள் மீது பற்றில்லாமல் போனது .சிரிப்பது கூட அபூர்வமானது.நண்பர்களும் மிகவும் குறைவு .மனதில் இருப்பதை திறந்து பேச ஆளில்லாத சூழல் அவளை இறுக்கிபிடித்தது.கெளதம் அவளுக்குள் ஊடுருவ முடியாமல் போனதற்கு இதுவும் சில காரணங்கள் .

இந்துமதி ஹாஸ்டல் போகும்போது அவளுக்காக ஜெயராம் காத்திருந்தார்.தயங்கி அவரிடம் போனவுடன்”வாம்மா எப்படிம்மா இருக்க?என்னடா அதிசியமா இவன் வந்து பேசுறான்னு நினைக்குற இல்லையா?இப்ப நான் பேசி தான் ஆகணும் ஒரு அப்பாவா .இப்ப என் பொண்ணு ஏதோ தடுமாற்றத்துல இருக்குன்னு மனசால உணர முடியுது .உனக்கு உங்க அம்மா இறந்தது மட்டும் தான் இழப்பு ஆனா எனக்கு எல்லாமே இழப்பு தான்டா .உங்கம்மாவும் நானும் காலேஜ்ல இருந்து லவ் பண்ணிட்டு இருந்தோம் .

உங்கம்மா வீட்ல தெரிஞ்சு வழக்கமான முறையில் எங்கள பிரிச்சு உங்கப்பாவுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .அந்த தேவதையோட அருமை தெரியாம உங்கப்பா அவள ரோம்ப கொடுமைப்படுத்திட்டார்.பழைய காதல் வாழ்க்கையை பேசியே வாழ்ற வாழ்க்கைய நரகமாக்கிட்டார்.கிட்டத்தட்ட மனநிலை குழம்பி போய் உன்னை தூக்கிட்டு உன் அம்மா என்னை தேடி வந்தா .அவள கொஞ்சம் கொஞ்சமாக சரி பண்ணி நம்ம ஒரு குடும்பமா வாழும் போது எதிர்பாராத விதமா அவளும் நம்மள விட்டு போயிட்டா.நீ ஒரு ஆணா இருந்திருந்தால் உன்னை இவ்ளோ விலகியிருக்க வேண்டிய அவசியம் இல்ல .ஒரு அப்பாவா நான் விலகியிருந்த வலி எனக்கும் தெரியும் .சூழ்நிலை அப்படி இருந்தது .இப்ப உன் மனசுல என்னடாம்மா இருக்கு.அப்பான்னு நினைச்சா மட்டும் ஷேர் பண்ணு “என்றதும் ஓடி வந்து கட்டிபுடுச்சுகிட்டு ரோம்ப நாளைக்கு பிறகு மனசு விட்டு அழுதுட்டே “அப்பா நானும் உங்க அன்புக்கு தான் பலசமயம் ஏங்கிருக்கேன்.என்னை எதுக்கு ஒதுக்கி வச்சிருக்கீங்கன்னு எனக்கு புரியல .என்னோட வலிகளை யார்கிட்ட ஷேர் பண்றதுன்னு தெரியல .யார்கிட்டயும் நெருங்கவும் முடியல .எனக்கு கெளதம் வேணும்ப்பா.ப்ளீஸ்ப்பா அவன அவ்ளோ புடிச்சிருக்கு .அவன் தான் சிரிக்க சொல்லி தந்தான் .வெட்கப்படவச்சான்.என்னை முழுசா மாத்திட்டான்.இப்ப பாருங்க அழுகவும் வச்சுட்டான்”என்றதும் அவளோட அப்பா “இவ்ளோ தானா ?இதுக்கா அழற?அப்பா காதலுக்கு எதிரி கிடையாதும்மா அவன் நம்பர் கொடு.நான் பேசி அழைச்சுட்டு வர்றேன் “என்றதும் கண்ணீர் துடைத்து கொண்டே சிரித்தாள் .

நாட்கள் கடந்தது தவிர அவனை பற்றிய தகவல்கள் எதுவுமே கிடைக்கல .தினமும் அவனுக்காக காத்துக்கொண்டு இருந்தாள் .ஒரு நாள் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரச்சொல்லி இந்துவுக்கு போன் வந்தது .அறையில் இரத்த வெள்ளத்தில் தலையில் பலமான காயத்துடன் இருந்த அவனை முகத்த துடைக்கும் போது அறைக்குள் உள்ளே வந்த இந்துமதி நடுங்கி போனாள் .அது கெளதம் .கைகள் நடுங்கியது .முகத்தில் பயம் .கண்ணீர் தேங்கியிருந்த கண்ணீர்.கட்டுபாடுகளை கடந்து இடறும் இதயம் .சிறைப்பட்ட வார்த்தைகள் “கெளதம் “என்று சத்தமாக வெளியேற அவள் மயங்கி போனாள் .ஒரு டாக்டர் இந்த அளவுக்கு தடுமாறுவது அரிதான ஒன்று தான்.ஆனால் அன்பு என்ற உணர்வு ஒரே மாதிரி தான் இருக்கும் இல்லையா ?

மயக்கம் தெளிந்து வருவதற்குள் அறுவை சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது டாக்டர்கள் வந்து “இந்து அவருக்கு தலையில் பலமான காயம் .மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு.மற்ற உறுப்புகள் செயல்பாடு எப்படின்னு போக போக தெரியும் .ஆனால் நினைவுகள் திரும்ப எந்த உத்திரவாதமும் கிடையாது .புதுசா கூட ஆரம்பிக்க வேண்டி வரலாம் “என்று கூறினார் .ஆனால் எந்த நேரமும் அவன் அருகிலேயே இந்து கவனித்து கொண்டாள்.

பத்து நாட்கள் கழித்து கண் விழித்தவனின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்ப்பட்டது.ஆனால் பழைய விஷயங்களை ஞாபகபடுத்த முடியாமல் போனது அவனால் நண்பர்களையும் மறந்து போனான்.அப்போது அவன் முன்னாடி இந்துமதி வந்து நின்றவுடன் டாக்டர்”கெளதம் இவுங்கள யாருன்னு தெரியுதா?”என்றதும் யோசிக்காமல் “தெரியல”என்றான் .அவளால் அங்கிருக்க மனமில்லாமல் தன்னோட அறையில் சென்று கதறி கதறி அழுதாள் .மறுபடியும் கண்களை துடைத்து கொண்டு ஒரு டாக்டர் என்ற உணர்வுடன் அவன் முன்னாடி நிற்கும் போது அவன் இவளை பார்த்து கண்ணடித்தான்.இவள் தடுமாறி நின்றாள் .எல்லோரும் போன பின்பு இந்துவ பாத்து “என்னமோ தெரியல.உங்கள பாத்து இப்பவே ஒண்ணு சொல்லணும்னு தோணுது .இதுக்கு முன்னாடி உங்கள தெரியுமான்னு தெரியல .ஆனா இப்ப உங்கள ரோம்ப பிடிச்சிருக்கு .உண்மைய சொன்னா ஐ லவ் யூ”என்றதும் அவனை கட்டிபுடுச்சுகிட்டு நானும் “ஐ லவ் யூ”தான்டா முட்டாள் “என்றாள் .

[அப்புறம் என்னங்க எங்க முடிஞ்சதோ அங்கிருந்தே புதுசா ஆரம்பிச்சிருக்காங்க.உண்மையான காதலர்கள் எந்த நிலையிலும் கைவிடப்படார்]

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here