நள்ளிரவு ஒரு மணி இருபது நிமிடம்… என்ன முயன்றும் உறக்கம் வர மறுத்தது இளமாறனுக்கு… அவனது உள்ளம் முழுதும் அவளே நிறைந்திருந்தாள்… அவனது சிந்தனைகள் அனைத்தும் அவளைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தன. மாயா…மாயா…மாயா… அவனது ஒவ்வொரு அணுவிலும் அவளே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாள். எந்தவித சலனமும் இன்றி தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவி மாயாவைப் பார்த்தான். அவளைப் பார்த்த நொடியே அவனையும் அறியாமல் அவன் இதழில் புன்முறுவல் பூத்தது. அவனது திண்ணிய கரங்களால் அவள் தலையை மென்மையாக கோதினான். அவனிடமிருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று ஏக்கமாக வெளிப்பட்டது

மாயாவை பெண் பார்க்க சென்ற போது எந்தவித ஆர்வமும் இல்லாமல் பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே உடன் சென்றான். இன்னும் சிறிது தாமதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்பதே அவன் எண்ணம். ஆனால் அவளைக் கண்டவுடனேயே அவனது எண்ணம் ஆட்டம் கண்டது. முதல் சந்திப்பிலேயே அவனிடத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள் அவள். எதனால் பார்த்தவுடனேயே அவளை நோக்கி இவ்வாறு ஈர்க்கப்படுகிறோம் என்று யோசித்தாலும், விடை தான் கிடைக்க மறுத்தது அவனுக்கு. ஒரு வேளை அவளது அழகினால் ஏற்பட்ட ஈர்ப்போ?… அவ்வாறு அழகினால் அவளின் மேல் என் மனம் ஈர்க்கப் பட்டிருக்குமாயின் இதை திருமணம் வரை கொண்டு செல்வது சரியா?…. என்ற ரீதியில் அவனது மூளை யோசித்துக் கொண்டிருக்க அவனது மனமோ அவளின் மீதான தனது கவர்ச்சி அவளது புற அழகின் காரணமாக ஏற்பட்ட உணர்வு அல்ல என்று அடித்துக் கூறியது. ஒரு வேளை இவளை எனக்கு மிகவும் பிடித்ததன் காரணத்தினால் தான் இவள் என் கண்களுக்கு மிகவும் அழகாக தெரிகிறாளோ?… என நினைத்தான்… அவளது பார்வையிலும், நடையிலும் ஒரு நிமிர்வு இருப்பது போன்றே தோன்றியது அவனுக்கு. ஏதோ ஒரு தனித்துவம் அவளிடம் தென்படுவதாக உறுதியாக நம்பினான். காண்போர் அனைவரையும் ஒற்றைப் பார்வையிலே இவள் தன்னை நோக்கி கட்டி இழுத்துவிடுவாளோ?.. அல்லது என்னை மட்டும் இவ்வளவு எளிதில் தன்வசப்படுத்தினாளோ?… என்று தன் சிந்தனைகளை பலவாறு அலையவிட்டவாறு அமர்ந்திருந்தான் அவன்… எது எப்படியோ தான் முழுவதுமாக அவளிடம் சரண் புகுந்து விட்டோம் என்பது மட்டும் அவனுக்கு இந்த நொடியில் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

இருவீட்டாருக்கும் எல்லாம் பிடித்துப் போக இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண நாளும் வந்தது.

என்னடா இப்போ கல்யாணம் வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு அடம்பிடிச்சுட்டு மாயா-வ பார்த்தவுடனே ஓகே சொல்லிட்டியாமே!…. என்னடா மாறா?… கண்டதும் காதலா என்று மணமேடையில் மணமகனிடம் வளவளத்தனர் மாறனின் நட்புகள். சிறு புன்னகையை மட்டுமே அவர்களுக்கு விடையாக அளித்தவனின் மனம் அவர்கள் கேட்ட கண்டதும் காதலா-வில் உழன்று கொண்டிருந்தது. மாயாவைக் கண்ட பொழுதிலிருந்து அவள் மீது ஒரு ஈடுபாடு விருப்பம், பற்றுதல் ஏற்பட்டது உண்மை தான் என்றாலும் அதற்கு அவன் காதல் என்று இதுவரையில் உருவம் கொடுக்கவில்லை. காதல் என்றால் என்ன?.. அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து எந்தவித கருதுகோள்களும் தற்போது வரை அவனிடத்தில் இல்லை. அவளை முதல் முதலில் பார்த்த போது இவளே என்னவள், எனக்கானவள், என்னில் சரி பாதி என்கிற உரிமை உணர்வு தான் தோன்றியது. வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவளுடனேயே பயணிக்க வேண்டும் என்று ஆழ் மனத்தில் சிறு வித்தென தோன்றிய ஆவல் பெருவிருட்சமென வளர்ந்து நின்றது. அவளைக் கண்ட பின் தான் திருமணத்தின் மீது ஏன் வாழ்வின் மீதுமே ஒரு பிடிப்பு வந்தது என்பதை அவன் மறுப்பதற்கில்லை…. ஒருவரை கண்ட நொடிப்பொழுதில் இந்தளவு பற்றுதல், என்னவள் என்ற உரிமையுணர்வு எப்படி ஏற்பட முடியும்…? ஒரு வேளை இந்த உணர்வின் பெயர் தான் காதலோ?… என்ற தீவிர சிந்தனையில் ஈடுபட்டிருந்தவனின் கவனத்தை கலைத்தனர் அவனது மித்திரர்கள்.

கொஞ்சம் அங்க பாருடா!….

திரும்பினான். மாயா தான். மணமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். புன்னகை பூத்த முகத்துடன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தவள் அவனை கண்டதும் இன்னும் பெரிதாக புன்னகைத்தாள். மாறன் அதிர்ந்து தான் போனான், ஆனால் இன்பமாய். புன்னகைத்ததோடு மட்டுமல்லாது தானகவே மாறனிடமும் வெகுஇயல்பாய் பேசத்துவங்கினாள். மேலும் அவனது நண்பர்களிடமும் மிகவும் இலகுவாய் அவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஈடு கொடுத்துப் பேசினாள். நீ இவ்வளவு ஈசியா புதுசா பார்க்கிறவங்க கிட்ட பழகுபவள்தானா?… பின்ன ஏன் என் கிட்ட மட்டும் சரியா பேசல? இப்ப மட்டும் ஏன் என்னை பார்த்து சிரிச்ச?… என்று மனதிற்குள் அவளிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தான்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வது என்பது மிகவும் இயல்பானதொரு விஷயமாகி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மாயாவோ இவனுடன் பேசுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இவனாக அவளுடன் பேச முயற்சிகள் எடுத்த போதும் அவர்களது உரையாடல்கள் இயல்பான நட்பு முறையில் மட்டுமே இருக்க வருங்கால கணவன் மனைவி என்ற ரீதியில் இருக்கவில்லை. மாறனுக்கோ மாயாவிடம் பேசவும் அவனை உணர்த்தவும் அவளை உணரவும் எவ்வளவோ பேச வேண்டும் என்றிருக்க, மாயாவின் ஆர்வமின்மையால் அவனும் தன் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ஏன் தன்னை விலக்கி நிறுத்துகிறாள்?.. ஒரு வேளை இந்த திருமணத்தில் இவளுக்கு விருப்பம் இல்லையோ!.. என்ற ஐயம் எழுந்தது அவனுள்… ஒரு வேளை அவள் வேறு யாரையேனும் என்ற ரீதியில் சென்ற அவனது எண்ணம் போகும் போக்கு அவனுக்கே பிடிக்கவில்லை என்றாலும் கூட அவ்வாறு தோன்றும் எண்ணத்தை அவனால் தடுக்க இயலவில்லை… இருப்பினும் திருமணத்தில் சம்மதமா என்று மாயாவிடம் கேட்க அவனுக்கு துளியும் எண்ணமில்லை… இவன் கேட்டு அவள் “ஆமாம், எனக்கு சம்மதம் இல்லை” என்று கூறி விட்டால் என்ன செய்வது?… தன் வாழ்வில் மனைவி என்று ஒருத்தி உண்டென்றால் அது மாயாவே!.. என்பதில் அவன் உறுதியாக இருந்தமையால் மாயாவிடம் எதையும் (அவளின் விருப்பத்தைக் கூட) கேட்க அவன் விரும்பவில்லை. விஷயம் எதுவாக இருப்பினும் அதனை திருமணத்திற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றெண்ணினான் மாறன். தற்போது அவள் சிரித்த முகத்தோடு மகிழ்ச்சியாக அனைவரிடமும் பேசுவதை பார்த்தவுடன் அவனது அச்சம் மறைந்து, ஒருவித நிம்மதி உணர்வு தோன்றியது… தன் பார்வையை அவள் புறம் திருப்பினான். அவளது உறவுப்பெண் ஒருத்தியுடன் பேசிக் கொண்டிருந்தவள் தற்செயலாக தானும் அவன் புறம் திரும்பினாள். அவன் கவனம் தன்னிடம் மட்டுமே நிலைத்திருப்பதைக் கண்டவள் என்ன என்பது போல் பார்வையை உயர்த்தினாள். ஒன்றுமில்லை என்பது போல் இவன் தலையை ஆட்டி புன்னகைத்தான். அவளும் பெரிதாக புன்னகைத்து கண் சிமிட்டினாள். இவனுள்ளோ விவரிக்க முடியா புது உணர்வு… அந்த நொடியில் நிறைவாக உணர்ந்தான் அவன். இருப்பினும் “உன்னை புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டமாருக்கு மாயா” என்ற எண்ணம் மேலெழுந்தது அவனுக்கு…

திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இன்றைய பொழுது விடிந்து இரவும் முடிந்தால் இருவரின் முதல் வருட திருமண நாள்… இந்த ஒரு வருடத்தில் மாறன் மாயாவை புரிந்து கொள்ள முயன்று வென்றது சில முறை தோற்றது பல முறை. சில சமயம் மிகவும் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வாள். சிறுபிள்ளை தானே என்று அவன் நினைத்தால் நானும் பெரியவ தான்டா என்று வாயால் கூறாமல் அவளது செயல்களின் மூலம் ஆணித்தரமாக உணர்த்திவிடுவாள். எந்த விஷயங்களுக்கு எப்படி எதிர் செயல் ஆற்றுவாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதென கூறி சில சமயம் சண்டையிடுவாள். சில சமயங்களில் பெரிய விஷயத்தைக் கூட பரவாயில்லை ஃப்ரியா விடு என்று விட்டுவிடுவாள். புரிந்தும் புரியாதது போல் தோன்றும் இயற்பியலைப் போன்று அவனை குழப்பினாள். ஆனால் என்றுமே அவனது எதிர்பார்ப்பை மட்டும் தவறாமல் பொய்யாக்கினாள். இருவரும் எல்லா விஷயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர். இருவருக்குமிடையில் அழகான சண்டைகளும், தீவிரமான வாக்குவாதங்களும், ஆரோக்கியமான விவாதங்களும் நடக்கும். எஃப்.பி மீம்ஸ்-ல் தொடங்கி பார்க்கும் படங்கள் வரை எல்லாவற்றை பற்றியும் அவரவர் கருத்தை வெளிப்படுத்திக் கொள்வர். அதில் இருவருக்குமிடையில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவளின் கருத்தை, அவள் கூற விளைவதை அவன் புரிந்து கொள்ளும் வரை அவனை விடமாட்டாள். அவள் கூற வருவதை அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டே இருப்பாள். அதே போல அவனது கருத்தையும் தனக்கு புரியும்படி தெளிவு படுத்தச் சொல்லி அடம் பிடிப்பாள்.. ஒவ்வொரு நாளும் அவள் மாறனுக்கு புதிதாகத் தான் தெரிந்தாள். மாறனை பொறுத்தவரை அவள் ஆர்வத்தைத் தூண்டும் முற்று பெறாத புத்தகம். அப்புத்தகம் முற்று பெறுவதை அவனுமே என்றும் விரும்பியதில்லை. இனி விரும்பப்போவதும் இல்லை… படிக்க படிக்க அவளை மென்மேலும் பிடித்தது. மென்மேலும் காதலில் திளைத்தான்…

அன்று ஒரு நாள், வெகு நாட்களாக தனக்குள் உழன்று கொண்டிருக்கும் சந்தேகத்தை அவளிடம் தீர்த்துக் கொள்ள விரும்பினான் மாறன்…

மாயா…

ம்ம் என்ன?..

மாய்ய்ய்ய்யா…..

ஏய்ய்ய் லூசு… என்னனு தான் கேட்டுட்டு இருக்கேன்ல?.. ஏன்டா இப்படி காதுக்குள்ள வந்து கத்துற?… நான் கத்த ஆரம்பிச்சேனா நீ தாங்க மாட்ட சொல்லிட்டேன்…..

பின்ன என்னடி?.. என்கிட்ட பேசும் போது என்னை பார்த்து பேசு… என்னனு மொபைல நோண்டிட்டே கேட்டுட்டிருக்க?…

ம்ம்ம்… சரி… சரி.. வச்சுட்டேன் சொல்லு..

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்…

என்ன சந்தேகம்…? எதுனாலும் கேளு… தி கிரேட் மாயாவுக்கு தெரியாததுன்னு எதாச்சும் இருக்கா என்ன?… யூ மே ப்ரொசீட்…

கொஞ்சம் ஹேப் கிடைச்சாலும் பெர்ஃபாமென்ஸ் பண்ணிடுவியே!.. என்று மெலிதாக முணுமுணுத்தான்.

ஹே! என்ன முணுமணுப்பு…?

ஒண்ணுல்லடா… மாயாவ மட்டும் ஏன் இவ்வ்வ்வ்வளோ அறிவாவும், அழகாவும் படைச்சனு அந்த ஆண்டவன கேட்டுட்டிருந்தேன்.

இஸ் இட்???…..

இஸ் இட்…. இஸ் இட்…

நம்பிட்டோம் நம்பிட்டோம்… நீங்க விஷயத்துக்கு வாங்க….

அறிவுடா நீ கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே!…. அதென்னனா… நான் என்ன கேக்க வந்தேன்னா!!… அது வந்து…. என்று தயங்கினான்.

ஷப்ப்பா…. முடியல்ல…. இப்போ என்ன என்னைய கடுப்பேத்தணும்னே பண்ணிட்டிருக்கியாடா…? கேட்கிறதுன்னா கேளு இல்லன்னா போ நான் இம்பார்ட்டண்டா ஒரு வீடியோ பார்த்துட்டிருந்தேன் அதையாச்சும் பார்க்கிறேன்.

அட இரு இரு… மறுபடி செல்ல தூக்கி வச்சுசுட்டு உட்காந்துடாத… அது பெருசா ஒண்ணுல்லடா நம்ம கல்யாணத்துக்கு முன்ன நான் உன்கிட்ட பேச முயற்சி பண்ணப்ப, ஏன் நீ சரியா பேசல… நான் கூட உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோன்னு தப்பா நினைச்சுட்டேன்…

தப்பா எங்க நினைச்ச?… சரியா தான நினைச்சுருக்க…

என்னடாமா இப்படி சொல்ற?… அப்போ உனக்கு விருப்பம் இல்லாம தான் நம்ம கல்யாணம் நடந்துச்சா?…

ஆமா…

ஆனா, கல்யாணத்தப்போ நீ நல்லா தானடா இருந்த… நல்லா எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசி சந்தோசமா தானடா இருந்த?… என்றான் நிஜமான வருத்தத்துடன்.

டேய்… நீ ஏன்டா இப்போ சோக கீதம் வாசிக்கிற?… நீ பீல் பண்ணுற அளவுக்கு அப்படி நான் என்ன சொல்லிட்டேன்.

என்னை பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியாடா?… ஒரு வித ஏமாற்றத்துடன் வெளி வந்தது அவனது குரல்.

ச்ச்சீ… ச்ச்சீ… உன்னைய பிடிக்கல்லனெல்லாம் சொல்லிட முடியாது….

ம்ம்ம்…. வேற எப்படி சொல்லலாம்?… ஏமாற்றம் மறைந்து துள்ளல் அரும்பியது அவன் குரலில்.

வேற எப்படினா?…

என்னை பிடிக்கல்லன்னு இல்ல… அப்போ பிடிச்சுருந்தது அப்படி தான?..

நான் எப்போ அப்படி சொன்னேன்…?

அப்போ பிடிக்கலையா?… என்னை பிடிக்காததால தான் என்ன அவாய்ட் பண்ணியா?

டேய் அப்படில்லாம் ஒண்ணும் இல்லை… உன்னை பிடிக்கல்லன்ற மாதிரிலாம் எனக்கு என்னைக்குமே தோணுணது இல்லடா…. அதே போல எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்குன்றது மாதிரியும் தோணல…. நல்ல பையன்னு சொன்னாங்க… பார்க்கவும் நல்லா இருந்த… உனக்கு நோ சொல்ல எனக்கு எந்த காரணமும் பெருசா இல்ல…

ம்ம்ம்….

ஆனால் எனக்கு அப்போதைக்கு மேரேஜ் பண்ணிக்க விருப்பமே இல்ல… நீயே சொல்லு எவ்வளோ சின்ன பொண்ணு நான்… மேரேஜ்-ன்றது எவ்வளவு பெரிய பொறுப்பு… கண்டிப்பா நான் அதுக்கு தயாரா இல்லன்னு தோணுச்சு… அதான் கல்யாணத்த பத்திலாம் அப்பறமா யோசிக்கலாம்ன்னு நினைச்சுட்டிருந்தேன்… ஆனால், இருபத்தி நாலு வயசாகிடுச்சு இன்னும் என்ன நான் சின்ன புள்ள, இப்போ கல்யாணம் வேணாணு கதை அளந்துட்டு இருக்க?…. கல்யாண வயசு வந்திடுச்சுன்னு சொல்லி கல்யாணமும் பண்ணி வச்சுட்டாங்க….

ம்க்க்கூம்ம்…. ரொம்ப சின்ன பொண்ணு தான்டி நீ… என்று செல்லமாய் தனக்குள் தன் மனைவியை சீராட்டிக்கொண்ட போதிலும் தான் அவளைக் கண்ட போது ஏற்பட்ட உணர்வு எதுவும் அவளிடத்தில் ஏற்படவில்லை என்று நினைத்தவன், ஏமாற்றமாக உணர்ந்தான்… தான் உணர்ந்த காதல் என்னவளிடத்தில் ஏற்படவில்லையே என்ற உணர்வு பெருமூச்சாக வெளிப்பட்டது. ஆனாலும் அவனைப் பற்றி அவளை சிந்திக்க வைக்க வேண்டிய அவசியத்தில் இருந்தான்… தன் முயற்சி எதுவுமின்றி இவளாக தன் காதலை உணர மாட்டாள் என்றுணர்ந்தவன் அவளை குழப்பி தெளிய வைக்க முயன்றான்.

அப்போ உனக்கு நம்ம கல்யாணத்துல சுத்தமா இஷ்டமில்ல… சோ, என்னைய அவாய்ட் பண்ணிருக்க!… அப்படியே இருந்தாலும், நீ நம்ம கல்யாணத்தன்னைக்கு வருத்தமா இருந்தது போல எனக்கு தெரியலையேடா… என்னைய விட நீ தான் ரொம்ப ஜாலியா இருந்த…

ம்ம்!?… அப்போ ஏன் அழுகாம சிரிச்சுட்டிருந்தன்னு கேட்கிறீயா நீ..?

எக்ஸாக்டா அப்படி கேட்க வரல்ல நான்… பட், கிட்ட தட்ட அப்படி தான்னு வச்சுக்கோயேன்… யாராச்சும் பிடிக்காத கல்யாணத்துல சிரிச்சுட்டே இருந்து பார்த்துருக்கியா நீ?… நானெல்லாம் பார்த்தது இல்லப்பா….

ம்ம்ம்..? என்று சிந்தித்தவள்… கல்யாணம் பிடிக்கலைனா சிரிக்க கூடாதுன்னு எதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன?… சிரிக்காம அவ்வளவு பேர் முன்ன அழுவாங்களா?… என்றவள், அடுத்த நொடியே நீ சொல்லுறதும் சரி தான் கல்யாணம் பிடிக்கலைன்னா அழுகை வரும் தான?… ஆனா எனக்கு அழுகைல்லாம் வரலையே…. எல்லாத்தையும் விட எனக்கு வருத்தமா கூட இல்லையே ஏன்டா?… என்றாள் குழப்பத்தோடு.

சிறுபிள்ளையென அப்பாவியாய் அவள் கேட்ட கேள்வியில், அவளது முகபாவனையில் தன்னை மறந்தவன், மறுமொழி ஆற்றாது அவளை பார்த்தபடியே இல்லை இல்லை ரசித்த படியே அமர்ந்திருந்தான்.

டேய் பக்கி எரும மாடுஉ….. நான் கத்திட்டே இருக்கேன்ல?… கண்ணைத் தொறந்து வச்சிக்கிட்டே தூங்கிட்டிருக்கியாடா?… என்று அவனை உலுக்கினாள்.

அவளது செயலால் சுய நினைவிற்கு வந்தவன், ஐயோ அடிக்கடி கண்ட்ரோல மிஸ் பண்ணிடுறியேடா… இப்போ இவ என்ன ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாளே!… என்றெண்ணியவாறு அவளை எதிர் கொண்டான்.

ஆனால் அவளோ அவன் வழக்கம் போல் அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் பொருட்டு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா என்றாள்.

என்ன கேட்டா இவ?.. என்று சில நொடிகள் சிந்தித்தவனுக்கு அவளது கேள்வியும் பாவனையும் நினைவிற்கு வர நன்றாக வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான்.

மாயா ஒன்றும் பேசாது அமைதியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன், தான் சிரிப்பதை நிறுத்தினான்.

போச்சுடா… சீரியஸ் மோட்-கு போயிட்டா… இவ எப்போ எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவா-ன்றது அவளுக்கு மட்டும் தான் தெரியும். இப்போ எதுக்குடி நீ சீரியஸ் மோட்-கு போற!… என்று புலம்பியவன் (மனதிற்குள் தான்) அல்ரெடி மேடம் புலி பதுங்கறது பாயுறதுக்கு தான்றது போல எந்நேரமும் பொறிஞ்சுடுவேன்னு தயாரா இருக்காங்க நீ மட்டும் இப்போ ரூட்ட மாத்தல!… சரவெடி போல பட பட படன்னு வெடிச்சுட்டு போயிடுவாடா என்று மூளை அறிவுறுத்த அவளை சமநிலைக்கு கொண்டு வர வார்த்தைகளைத் தேடினான்.

மாயா பேபி… மாயா டார்லிங்…

…………………….

மாயாம்மா…..

……………………….

என்னடாம்மா?… நான் உன்கிட்ட கேட்க வேண்டியதையெல்லாம் நீ என்கிட்ட கேட்டா நான் என்னடா பதில் சொல்ல முடியும்?…. நீயே சொல்லு…

……………………..

ஒருவேளை இப்படி இருக்குமோடா?…

………………………

ப்ச்ச்….எப்படின்னு கூட கேட்க மாட்டியா?….

மாட்டேன் என்பது போல அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும் தானே பேசத் தொடங்கினான்.

நீ என்னை பார்த்ததுமே உனக்கு என்னை ரொம்ப பிடிச்சுடுச்சு… கல்யாணம் பண்ணிக்கிட்டா இவன தான் பண்ணிக்கனும் அப்படின்னு நீ என்னை பார்த்த செகண்ட்லயே முடிவு பண்ணிட்ட… நீ கல்யாணத்த பார்த்து பயந்தாலும், என் மேல உள்ள காதல் உன் பயத்தை தோற்கடிச்சுடுச்சு. என் மேல உள்ள நம்பிக்கையினால தான் நீ பயத்த ஒதுக்கி வச்சிட்டு கல்யாணத்தன்னைக்கு ஹாப்பியா இருந்த… லாஜிக் கரெக்ட்டா இருக்கா?…. என்று தான் உணர்ந்ததையெல்லாம் அவள் உணர்ந்ததாக கூறியவன் காதலோடும் ஒரு வித எதிர்பார்ப்போடும் தன் மனைவியை பார்த்தான்.

மாயாவோ கட்டுப்படுத்த முயன்று அது இயலாமல் போக நன்றாக சிரிக்கத் தொடங்கினாள்.

நீ ஒண்ணு பண்ணு… மெகாசீரியலுக்கு கதை எழுத போயிடு… எதை எங்க லிங்க் பண்ணுற பார்த்தியா நீ… என்றவள் இடைவிடாது சிரித்தாள். ஆனா ஒண்ணு மட்டும் உண்மைடா கல்யாணத்த பார்த்து பயம்-னு சொன்னில…. அது கரெக்ட் தான்… நீ என் லைஃப் பார்ட்னர்-ஆ வந்தது என் நல்ல நேரம்டா… நீ இல்லாம வேற யாருனாலும் எனக்கு கஷ்டம் தான். நீ கிடைச்சதுக்கு நான் எவ்ளோ ஹாப்பியா ஃப்பீல் பண்றேன் தெரியுமா??..

அவள் பேசி சிரித்த முதல் பாதி மட்டும் கவனித்து மீதியை கவனிக்காமல் தன் யோசனைகளுக்குள் புகுந்தது அவனது கெட்ட நேரம் போலும். ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தவனுக்கு அவளது பதில், ஏமாற்றத்தைக் கொடுத்தது. என்னை எப்போ தான்டா புரிஞ்சுப்ப நீ?.. என் காதலை உணரவே மாட்டியா!… உன்னை பிடிச்ச அளவுக்கு எனக்கு யாரையும் பிடிச்சதில்ல!?… உன்னை ஏன், எதுக்காக இவ்வளவோ பிடிக்குதுன்னு இப்ப வரைக்கும் எனக்கே தெரியாது… நானே நினைச்சாலும் கூட நான் உன்னை விரும்புறத என்னால நிறுத்த முடியாது…. எனக்கு என் சந்தோஷத்த விட உன் சந்தோஷம் தான் பெருசா தெரியுது… நீ இப்படி சிரிச்சுட்டே இருந்தா மட்டும் அதை நான் பார்த்துட்டே இருந்தா மட்டும் போதும்னு தோணுது…. நான் என்ன செய்யட்டும்…. ஐ அம் அவுட் ஆஃப் மை கண்ட்ரோல்… நான் ஏன் இப்படி இருக்கேனு எனக்கே தெரியல்லயே!… இந்த ஃப்பீல் தான் காதல்-னா, நீ எப்போ இதை ஃபீல் பண்ண போற?… இந்த காதல் குடுக்கிற சுகத்தை நீ எப்போ அனுபவிக்க போற?.. இது ரொம்பவே புதுசாருக்கு ஆனா நல்லாருக்கு…. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு… நான் உணர்ந்த இந்த அழகான உணர்வை இந்த இன்பத்தை நீயும் உணர வேண்டாமா?.. எனக்கு உன்னை பிடிச்சதுல ஆயிரத்துல ஒரு பங்காவது உனக்கு என்னை பிடிக்குமா மாயா?.. நான் உணர்ந்த காதல்ல ஒரு பெர்சன்ட் மட்டும் ஜஸ்ட் ஒன் பெர்சென்ட் மட்டுமே நீ உணர்ந்தா, அதுவே எனக்கு போதும்… நாம ரெண்டு பேருக்கும் சேர்த்து என்னோட காதல் மட்டுமே போதும் மாயா…. வாழ்க்கை முழுமைக்கும் அது மட்டுமே போதும்…. நான் உணர்ந்த காதலை உன்னால மட்டும் ஏன் உணர முடியாம போச்சு?… எனக்கு உன் மேல ஏற்பட்ட இந்த உணர்வு உனக்கும் ஏற்பட்டிருந்தால் ரொம்பவே நல்லாருந்திருக்கும். நான் உணர்ந்த எல்லா உணர்வையும் நீயும் அப்படியே முழுசா உணரணும்-னு கூட இல்ல… ஆனால் உனக்கு என்னை பிடிச்சா போதும்… இந்த மாறன் எப்படியோ அப்படியே பிடிச்சா மட்டும் போதும்… பிடிக்குமா?… என் மேல கொஞ்சமாச்சும் காதல் வருமா?… நான் யாரு மாயா உனக்கு?… என்னை என்னவா நினைக்கிற… இப்படியே எவ்வளவு நாளைக்கு இருக்க போகிறோம்?… உனக்கு மட்டும் ஏன் என்னை பத்தி யோசிக்கவே தோண மாட்டேங்குது?… எனக்கும் ஆசை இருக்காதா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கணும்-னு… உன்னை இப்படியே காலம் பூரா பார்த்துட்டே உன் கூட இப்படி ஒண்ணா இருக்கிறதே எனக்கு போதும் தான்டா… என்னால இப்படியே இருந்திட முடியும். ஆனால் நானும் மனுஷன் தான… அழகான இல்லற வாழ்க்கை-யை மனசுக்கு பிடிச்ச பொண்ணோட ஆரம்பிக்கணும்-னு தோணுதே!… அதுக்காக தாம்பத்யம் தான் எல்லாம் அதுக்காக தான் நான் ஆசைப்படறேனு இல்லடா… நிச்சயமா அப்படி இல்ல… நீ அழகா பேசும் போது நான் உன்னை ரசிக்கும் போது உன் கிட்ட நான் ரசிக்கிறேன்-கிறத கூட சொல்ல முடியாம இருக்கிறது தான்டா எனக்கு கஷ்டமாருக்கு. எப்போ உன் கணவனா என்னை உணர போற… இப்படியே இருக்க நாம என்ன ஃப்ரண்ட்ஸ்-ஆ? கணவன் மனைவி ஒருத்தருக்கொருத்தர் நல்ல ஃப்ரண்ட்ஸ் போல இருக்கணும்-ன்றது தான் என் எண்ணமும். பட் ஃப்ரண்ட்ஸ்-ஆ மட்டுமே இருக்க முடியாதில்லயா!… என் காதல், உன் மேல எனக்கு இருக்கிற இந்த ஃபீலிங்ஸ் எல்லாத்தையும் நான் உன்கிட்ட ஈஸியா சொல்லிடலாம்… சொல்லிட்டேனா கூட நீ என்னை பத்தி உன்னோட உணர்வுகளை யோசிக்க ஆரம்பிப்ப… ஆனாலும் அப்படி செய்ய எனக்கு விருப்பம் இல்லைடா… நான் உணர்ந்த காதலை நீயும் தானாவே உணரனும்டா…. நான் காதலிக்கிறேனு சொல்லி அதுக்கப்பறம் நீ சொல்லப் போற யெஸ் ஆர் நோ எனக்கு வேண்டாம்… உனக்கா என் மேல ஃபீலிங்ஸ் வரணும்-னு ஆசைபடறேன்… நான் என் லவ்வ எக்ஸ்போஸ் பண்ணாமலேயே உன் மனசுல இடம் பிடிக்கணும். உன் மனசு பூரா நான் மட்டுமே நிறைஞ்சுருக்கணும்… ஆனா நீ யோசிக்கவே மாட்டேங்கிறியே உன் ஃபீலிங்ஸ்-அ பத்தி… நீ என்ன நினைக்கிறனே புரிய மாட்டேங்குது. எப்போதும் இப்படியே இருந்திடலாம்-னு இருக்கியோ?.. நீ கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சாவே உனக்கு உன் மனசு புரியும்டா…. என்னவோ போ, அட்லீஸ்ட் நீ சிரிக்கவாச்சும் செஞ்சியே!… இப்போதைக்கு அதுவே போதும்… நீ மூஞ்சிய தூக்கி வச்சுட்டு உட்கார்ந்திருந்தா எனக்கு எந்த வேலையும் ஓட மாட்டேங்குது… அது ஏன்னு இது நாள் வரை எனக்கு தெரிஞ்சதுமில்ல… தெரிஞ்சுக்க விருப்பமும் இல்ல. நீ இன்னும் எவ்வளோ நாள் என் லவ்வ ஃபீல் பண்ணாம என்னை காக்க வைக்க போறியோ?… எத்தனை நாள் ஆனாலும் சரி உனக்கா என் மேல காதல் வராம, நீயாவே உன் காதலை உணராம, நான் என் காதலை வெளிப்படுத்த போறதே இல்ல…. என்றவாறு அவனது எண்ண ஓட்டங்கள் வருத்தத்தில் தொடங்கி ஏக்கத்தில் நிறைந்து புலம்பலில் நிலைத்து காதலில் முடிவடைந்தது. பொறுமையாய் அவள் பேசிய மறுபாதியையும் கேட்டிருந்தால் இப்படி வருந்த வேண்டிய நிலை வந்திருக்காது அவளிடம் பேசி இவனையும் புரிய வைத்திருக்கலாம்.

மறுபடியுமா…. டேய்ய்ய்…. என்று பல்லை கடித்தாள் அவள்… அவள் அங்கு கத்திக் கொண்டிருக்க இவனோ தன்னையே மறந்து தன் காதலை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தானே!…

சிந்தனைகள் ஒரு வாறு முடிவுக்கு வரவும் தன் எண்ணங்களின் பிடியில் இருந்து வெளியில் வந்தவன், சொல்லுடா என்றான்…

என்ன சொல்லுடா?… ஆளுகள பாரு… நீ இப்போலாம் முன்ன மாதிரி இல்லடா… அடிக்கடி இப்படி மெண்டலி ஆப்செண்ட் ஆகிடற?.. அப்படி என்ன உனக்கு யோசனை?…

ஒண்ணும் இல்லடா….

அதெப்படி ஒண்ணும் இல்லாம போகும்… நானும் கவனிச்சுட்டு தான்டா இருக்கேன்… அடிக்கடி எதையாச்சும் யோசிச்சுட்டு உட்கார்ந்துக்கிற…. சில சமயம் சிரிக்கிற… சில சமயம் சோகமாயிடற…. என்ன தான் உன் பிரச்சனை சொல்லு…

ஒரு விநாடி தான் இவ்வளவு நேரம் எண்ணிய அனைத்தையும் சொல்லி விட்டால் என்ன?.. எத்தனை நாள் தனக்குள்ளே வைத்து வருந்துவது?… என நினைத்தவன் அடுத்த நொடியே இல்லடா எடுத்த முடிவுல ஸ்ட்ராங்கா இரு… அவளுக்கா உன் மேல இன்டரஸ்ட் வரணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அதான் சொல்றேன்ல ஒண்ணும் இல்லன்னு விடேன் என்றான்.

முடியாது… நீ சொல்ற வர விட மாட்டேன்… நீ இன்னைக்கு என்கிட்ட சொல்லித் தான் ஆகணும்… என்ன விஷயம்?…

மாய்ய்ய்ய்யா…. விடுன்னா விடு மாயா…. கொஞ்சம் அழுத்தமாக குரலில் கடுமையுடன் இதற்கு மேல் நீ எதுவும் கேட்க கூடாது என்ற தோரணையில் வந்தது அவனது குரல்…

அந்த மாயாவில் அவன் கொடுத்த தனி அழுத்தமோ… இல்லை இயல்பை விட சற்றே மாறுபட்ட அவனது குரலின் இறுக்கமோ மீண்டும் அவனிடம் கேள்விகள் கேட்க முடியாமல் செய்தது… மாயா பலமுறை அவன் மீது கோபம் கொண்டிருக்கிறாள். கடிந்திருக்கிறாள். கத்தி ஆர்பாட்டம் செய்து சண்டையிட்டிருக்கிறாள். ஆனால் மாயாவிடம் இதுவரையில் கண்ணசைவில் கூட கோபத்தையோ எரிச்சலையோ காட்டியிராத மாறன் தன் குரலில் காட்டிய சிறு கடுமையுடன் கூடிய அழுத்தம் அவளை என்னவோ செய்தது. பெரிதாக கோபத்தைக் காட்டி எதுவும் திட்டாவிடினும் முதன் முதலாக அவனிடமிருந்து வெளிப்பட்ட முகச்சுளிப்பில் இதுவரை உணர்ந்திடாத ஒரு வலி அவள் உயிர் வரை தீண்டிச் சென்றது. எனவே ஒன்றும் பேசாது அமைதியாக எழுந்து சென்றாள் அவள்.

மாயாவின் முகவாட்டத்தைக் கண்ட மாறனோ தன்னைத் தானே நொந்து கொண்டான். எழுந்து சென்றவளின் கரங்களை பற்றி மீண்டும் தன்னருகே அமர்த்தினான். சற்று நெருக்கமாக… பின் அவளின் தோள்களை தன் கைகளால் பிடித்து மாயா என்னை பாரு என்றான். இதுவரையில் இருவரும் அடித்துக் கொண்டும் ஏன் உருண்டு பிரண்டு கூட சண்டை போட்டும் வம்பிழுத்துக் கொண்டும் இருந்திருந்தாலும் கூட இப்போது அவனது நெருக்கமும் தொடுதலும் புதிதாக எதையோ அவளுக்கு உணர்த்த முயன்றது. கண் இமைக்காமல் அவனையே பார்த்தபடி இருந்தாள் அவள். அவனது முகத்திலும் கண்களிலுமே இதுவரை காணாத ஏதோ ஒரு மாற்றம்… இதுவரை அவள் கண்ட மாறன் அல்ல அது. ஏனென்று புரியாமல் நெஞ்சம் படபடத்தது. வயிற்றில் ஏதோ பிசைவது போன்று இருந்தது. மூச்சு விடுவது கூட சிரமமாகத் தோன்றியது. அவளது உணர்வுகள் எதையுமே உணராது இவன் பேசத் தொடங்கினான்.

மாயா சாரிடா… ஐ அம் வெரி சாரிடா… நான் அப்படி கத்திருக்க கூடாது… தப்புதான்… ப்ளீஸ்… நான் பாவம்ல… போனா போதுன்னு மன்னிச்சு விட்ருங்கடா…

அவளோ எதுவும் பேச விரும்பவில்லை. எதையோ அவள் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்… அவனது சிறிய முகச்சுளிப்பு கூட ஏன் என்னை இவ்வளவு வருந்தச் செய்கிறது… ஏன் தாங்க முடியவில்லை என்னால் என்று முதல் முறையாக அவன் மீதான தன் உணர்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தாள். தன் படபடப்பிற்கான காரணத்தை அறிய முயன்றாள்.. இவளோ சிந்தித்தபடி தன்னிலையில் சிலை போல் அமர்ந்திருக்க அவனோ அவள் தன் மீதுள்ள வருத்தத்தில், கோபத்தில் தான் அவள் அமைதியாக அமர்ந்திருப்பதாக எண்ணி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றான். அவளை அப்படியே யோசிக்க விட்டிருந்தால் கூட அவன் மீதான தன் காதலை அவள் உணர்ந்திருப்பாளோ என்னவோ. தன் வாயால் தனக்கான ஆப்பை தானே வைத்துக் கொண்டான் அவன்.

மாயா!… என்று அவள் இரு கண்ணங்களிலும் தன் இரு கைகளையும் வைத்தவன் இங்க பாருடா… நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல… இதை பெருசு பண்ணாம விட்டுடேன் இதோட ப்ளீஸ் என்று கூறி அவள் கவனத்தை முழுவதுமாக அவன்புறம் திருப்பினான். அவள் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டாள். சாரிடா… நா வேணா கத்துனதுக்கு பனிஷ்மண்ட்டா நைட்டுக்கு உன் ஃபேவரெட் பூரி செஞ்சு தரேன்… பேசுடா…. மூஞ்சியை அப்படி வச்சுக்காத…. ப்ளீஸ் மாயா…. என்றான் ஒருவித கெஞ்சுதலோடு… அவன் முதலில் பேசியது எதையும் அவள் கேட்கா விட்டாலும் கூட அவன் வருந்துவது அவன் முகத்தில் இருந்தே தெரிந்தது. என்னவோ அவன் முகவாட்டத்துடன் அவளை பார்த்திருந்தது இவளையும் வருத்தியது. எதையும் யோசிக்காமல் வழக்கமான தனது சிரிப்பை மீண்டும் முகத்தில் கொண்டு வந்தாள்.

ஹா… ஹா.. உன் மூஞ்சியை கொஞ்சம் கண்ணாடில பாரேன்,… செம காமெடியா இருக்கு என்று சிரிக்கத் தொடங்கினாள்.

அவள் சிரிக்கவும் இவனுக்கு அப்பாடா என்றிருந்தது. அவள் கிண்டல் செய்வது கூட இவனுக்கு மகிழ்ச்சியைத் தான் கொடுத்தது. அவள் கண்ணங்களை பற்றியிருந்த கைகளை எடுத்து ஒரு கையால் அவள் தலையில் கொட்டினான்.

பக்கி விளையாண்டியா… நான் எவ்வளோ ஃபீல் பண்ணேன் தெரியுமா?…

எவ்வளோ?

ம்ம்?… கடுகளவு…. என்று கண்ணடித்தான்.

ம்ம்க்கூம்…. ரொம்ப நிறையத்தான் ஃப்பீல் பண்ணிருக்க!… நீ ஃப்பீல் பண்றதுல்ல அந்த பூரிய மறந்துடாத என்று தானும் கண்ணடித்தாள்.

அவளை அணைத்து கொஞ்ச வேண்டுமென்று தோன்றிய ஆவலை கட்டுப்படுத்தி அவனும் சிரித்தான்.

பழைய நினைவுகளில் மூழ்கி அதை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தவன், மாயா உறக்கத்தில் தன் கரங்களை அவன் மீது போடவும் தன் நினைவுகளிலிருந்து மீண்டான்.

ஒரு ஆணின் அணைப்பு மட்டுமே பெண்ணிற்கு நிறைவை, பாதுகாப்புணர்வைக் கொடுக்குமா என்ன?… பெண்ணின் அணைப்பு ஆணுக்கு பாதுகாப்புணர்வைத் தராதா?… மாயாவின் அந்த அணைப்பு அவனுக்கு ஒரு இதத்தை, பாதுகாப்பை, முழுமையை, அரவணைப்பைத் தந்தது. இவ்வளவு நேரம் இருந்த ஏக்கம், குழப்பம், வருத்தம் அனைத்துமே ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றியது. மனம் முழுவதும் இறுக்கம் மறைந்து ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. இவ்வளவு நேரம் என்ன முயன்றும் தூங்க இயலாமல் தவித்தவன் தானும் அவளை இதமாக அணைத்தவாறு உறங்கத் தொடங்கினான்.

இரவு உறங்க வெகு நேரம் ஆனதனால் காலை ஏழு மணிக்கே விழிப்பு வந்தது மாறனுக்கு. மாயாவோ இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

மாறன், மாயா… என மெல்லிய குரலில் அவளை அழைத்தான். அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளிடம் சிறு அசைவு கூட தென்படவில்லை. நேற்று இரவு தூங்காமல் தவித்ததன் விளைவாக தன் காதலை அவளிடம் தெரிவித்து விடலாமோ என்று யோசித்தான். இனியும் பொறுத்திருப்பது அவனால் இயலாத ஒன்றாகத் தோன்றியது. சொல்லாமல் இருந்தால் ஒவ்வொரு நாளும் சிந்தனையிலேயே கழிந்து விடுமோ என பயந்தான். பின் அவளது உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு எழுந்தான்.

தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவளுக்கும் தனக்குமாய் தேநீர் தயாரித்து எடுத்து வந்தவன் அவளை எழுப்ப முயன்றான்.

மாயா..

ம்ம் என்றவள் எழுந்திருக்கவில்லை..

மாயா…. எழுந்திருடா…

…………

மாயா……

எனக்கு தூக்கம் வருது விடு… நான் கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேன் ப்ளீஸ்…. என்றவாறு உறக்கத்தை தொடர்ந்தாள்.

மாயா லேட் ஆச்சுடாம்மா… மணி இப்போவே ஏழு இருபது… எப்போ கிளம்பி எப்போ ஆஃபிஸ் போறது?… ம்ம்???

என்னால எழுந்திருக்க முடியல்லடா… நான் இன்னைக்கு போலடா… நீயும் போகாத… வா நீயும் வந்து தூங்கு என்று அவனையும் இழுத்தாள்.

விளையாடாதாடா நான் இன்னைக்கு கண்டிப்பா போகணும்…. நீ நிஜமா போகலையா?..

ம்ம்கூம்… போகலையே!…

சரி நல்லா தூங்கி ரெஸ்ட் எடு… என்றவன் வேலைக்குச் செல்வதற்கு கிளம்பத் தொடங்கினான்.

சரியாக ஒன்பது முப்பது மணியளவில் தயாராகி அவளிடம் வந்தவன் நேற்று இரவு ஓடிய பலவித எண்ண ஓட்டங்களின் விளைவாக தானாகவே தனது காதலை அவளிடம் சொல்லி விடலாமா என்று எண்ணத் தொடங்கி இருந்தான். நாளைக்கு முதல் வருட திருமண நாள்… அவன் அவனது காதலை உணர்ந்து அனுபவித்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ஆயினும் இவள் அவனது மனதையோ அல்லது அவளது மனதையோ ஆராய முற்படவே இல்லை… மாயாவாகவே அவளது உள்ளத்தை உணர்வது நடவாத ஒன்றாக அவனுக்கு தோன்ற ஆரம்பித்ததிருந்த நிலையில் அவளிடம் இன்று தன் மனதில் இருப்பதை சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து விட்டான். அவளாகவே தன் காதலை வெளிப்படுத்தும் வரையில் தன் காதலை அவளிடம் கூறப்போவதில்லை என்ற அவனின் உறுதி ஆட்டம் கண்டது. முடிவெடுத்த உடனே சொல்லி விடுவது நல்லது இல்லையானால் பிறகு மீண்டும் சொல்ல வேண்டாமென்று தோன்ற அதனால் அவளிடம் சொல்லாமல் இருக்க மீண்டும் குழப்பத்திலேயே வாழ்வைக் கழிப்பது போல் ஆகி விடும் என்று எண்ணியவன் இவள் இப்படி தூக்க கலக்கத்துல இருக்கும் போதே சொல்லிட்டு ஓடிட்டா என்ன? என்று நினைத்து அவளை எழுப்பினான்.

மாயா…

அவளோ ம்ம்?… என்றாள் கண்களை திறக்காமல் உறக்க நிலையிலே…

மாயா…..

ம்ம்… சொல்லுடா…

என்னைய உனக்கு பிடிக்குமாடா?…

தூங்குறவள எழுப்பி இதை கேட்டாகணுமாடா?..

பதில் சொல்லு மாயா….

அரைத்தூக்கத்தில் இருந்த அவளோ… பதிலா என்றாள்…

என்னைய உனக்கு பிடிக்குமா?.. பிடிக்காதா?…

ம்ம்ம்??…தெரியல்ல போடா… தூங்கக்கூடவிடாம தொல்லை பண்ணிட்டிருக்க?…

ப்ச்ச்…. தெரியல்லயா????… உனக்கு என்ன தான் தெரிஞ்சுருக்கு என்று முணுமுணுத்தவன் நான் உன் கூட இல்லைனா என்னடா பண்ணுவ?…

இப்ப நான் என்ன சொல்லணும்னு நீ இப்படி கேட்டுட்டு இருக்க?.. அது என்னனு சொல்லு அதையே சொல்றேன்… என்னை தூங்க விடு… நிம்மதியா தூங்க கூட விட மாட்றான்… என்று புலம்பினாள்.

இதை மட்டும் யோசிடா… நான் உன் கூட இல்லைனா நீ எப்படி ஃபீல் பண்ணுவ?.. சொல்லுடா…..

ஏன்டா இப்படி படுத்துற?… தூங்க கூட விடமாடட்டியா என்னை?… என்றவள் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். ஒரு முறைப்புடனே!…

ப்ளீஸ்டா…. இத மட்டும் சொல்லு நான் வேற எதுவும் கேட்க மாட்டேன்… நான் உன் கூட இல்லைன்னா உன்ன விட்டு போய்ட்டேனா என்ன பண்ணுவ?…

நிஜமா வேற எதுவும் கேட்க மாட்ட??

ஆமாடா நிஜமா…

நீ போயிட்டனா நல்லா நிம்மதியா உன் தொல்லை இல்லாம தூங்குவேன்… இடத்தை காலி பண்ணு… போ…. என்றவள் மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தாள்…

அட கும்பகர்ணி இன்னைக்குன்னு பார்த்து என்னடி உனக்கு அப்படி ஒரு தூக்கம்.. பேசாம இப்ப ஐ லவ் யூ மாயா-னு காதுக்குள்ள கத்திட்டு ஓடிட்டா என்ன!.. என்று நினைத்தான். ஆனால் செயல்படுத்த தான் தைரியம் வரவில்லை. நல்லா தூங்கு… சாப்பாடு ரெடியா இருக்கு தூங்கி எழுந்தோன நல்லா கொட்டிக்க… என்றபடி கிளம்ப இரண்டடிகள் எடுத்து வைத்தவன் ஒரு நிமிடம் அப்படியே நின்றான். என்ன நினைத்தானோ திரும்பி வந்து மாயாவை பார்த்தான்… அவளருகில் அமர்ந்து அவள் தலையை மெதுவாக கோதி விட்டான்…

மாயா… உடம்பெதுவும் சரியில்லயாடாம்மா?.. என்றான். அவள் கண்களை திறந்து அவனை பார்த்தாள். பின் தன் தலையை எடுத்து அவன் மடியில் வைத்து படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

என்ன பண்ணுதுடா..

தெரியல்லடா… என்னவோ பண்ணுது… தூக்கம் தூக்கமா வருது. டயர்டா இருக்குடா. ஃபீவர் வர மாதிரி இருக்கு… என்றாள்.

நான் வேணா லீவ் போட்டுடட்டுமா?…

இல்லடா… நீதான் வேலையிருக்குன்னு சொன்னில நீ கிளம்பு… நான் பாத்துக்கிறேன், என்று அவன் மடியிலிருந்து தலையை எடுத்துக் கொண்டாள்.

அவளின் செய்கை அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அவளை இப்படியே விட்டு விட்டு செல்ல அவனுக்கு துளியும் விருப்பமில்லை.

அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான். காய்ச்சல் அடிப்பது போன்று தோன்றவில்லை. மாயா எழுந்திருச்சுக்கோ… போயி பல் தேய்ச்சிட்டு வா என்று கூறி அவளை படுக்கையிலிருந்து எழுப்பி அமர வைத்தான். இல்லடா நான் தூங்குறேன் என்றவளை தூங்கலாம் நீ இப்போ எழுந்திரு என்று கூறி அவன் சொல்வதை செய்ய வைத்தான். அவள் வருவதற்குள் அவளுக்கு கசாயம் தயார் செய்து எடுத்து வந்தவன், கசக்கும்டா என்று கூறி வேண்டாமென்றவளை இதை குடித்தால் தான் காய்ச்சல் வராது என்று கூறி சமாளித்து குடிக்க வைத்தான்.

குடித்து விட்டு சுவை பிடிக்காமல் முகத்தை சுளித்துக் கொண்டவளை அப்படியே அள்ளி முத்தமிட்டு அணைத்துக் கொள்ளத் தோன்றியது மாறனுக்கு. இதுக்கும் மேல என்னால பொறுமையா இருக்க முடியாதுன்னு தோணுது மாயா… இன்னைக்கு நான், என் காதலை சொல்லிடவா?.. சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவ? நானும் தான்னு சொல்லி கட்டியணைப்பியோ இல்ல நோ சொல்லி முறைப்பியோ?…. என்ற சிந்தனைகளுக்கிடையிலேயே அவளுக்கு சாப்பிட தேவையானவற்றை சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்தான். சிறிது நேரம் கழித்து உணவருந்திவிட்டு அதன் பின் சென்று உறங்குமாறு அவளை அறிவுறுத்தி விட்டு செல்ல மனமில்லாமல் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

அலுவலகத்திற்கு சென்றவனுக்கு வேலையில் கவனம் செல்ல மறுத்தது. மாயாவைப் பற்றிய எண்ணங்களே பிரதானமாக ஓடிக் கொண்டிருந்தது. சொல்லி விடுவது என்றால் எப்படி சொல்வது என்று சிந்தனைகள் பலவாறு ஓட ஆரம்பித்தது. மேலும் அவளை தனியாக விட்டு வந்திருப்பது வேறு அவள் சாப்பிட்டாளோ?… இல்லையோ?.. என்ன செய்கிறாளோ?.. என்று அவளைப் பற்றியே நினைக்க வைத்தது. இதுக்கு பேசாமல் தானும் விடுப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. பின் மாயாவை அலைபேசியில் அழைத்து அவள் உணவருந்தியதை உறுதிப்படுத்திக் கொண்டவன் முயன்று தன் கவனத்தை வேலையில் செலுத்த ஆரம்பித்து தன் முயற்சியில் வெற்றியும் கண்டான்.

மாயாவோ, உணவருந்திவிட்டு கைபேசியில் உலாவினாள். சில பல நிமிடங்கள் அதில் பொழுதைக் கழித்தவள் பிறகு அது மிகுந்த சலிப்பைத் தரவே சமைக்கலாம் என்றெண்ணி சமையலறைக்குச் சென்றாள். ஆனால் அவன் தான் சமைத்து வைத்து விட்டுச் சென்றிருந்தானே!… வேலை மிச்சம்-ன்னு சந்தோஷப்படவா இல்லை போர் அடிக்குதேன்னு வருத்தப்படவா என்றெண்ணியவள் சரி உறங்கலாம் என்று நினைத்து உறங்கச் சென்றாள். ஆனால் உறக்கம் வரவில்லை. அவன் கொடுத்த கசாயத்தை குடித்ததாலோ என்னவோ முன்பு இருந்த சோர்வு அவளிடத்தில் தற்போது இல்லை. முன்பை விட தற்போது கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள். அரை மணி அப்படி இப்படி மாறிமாறி படுத்து உறங்க முயன்றவள் அதற்கு மேல் பொறுக்க இயலாமல் படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தாள்.

நல்லா தூங்கிட்டிருந்த என்னை எழுப்பி விட்டுட்டு போயிட்டான்… இப்போ எனக்கு பயங்கரமா போர் அடிக்குது. தூக்கமும் வர மாட்டேங்குது… இதுக்கு தான் நீயும் போகாதன்னு சொன்னேன். அதையும் கேட்கல… அப்போ முடியாத மாதிரி இருந்துச்சு இப்போ அப்படி இல்லை!.. நல்லா தான் இருக்கேன்… பேசாம நானும் லீவ் போடாம ஆஃபிஸ் போயிருக்கலாமோ?.. என்று முணுமுணுத்துக் கொண்டே உள் அறையிலிருந்து வெளியே வந்து தொலைக்காட்சியை உயிர்பித்தாள் மாறனின் மனைவி. அனைத்து அலைவரிசைகளையும் உலா வந்தவள் எதிலும் மனம் லயிக்காமல் இருக்க டேய் எப்போடா வருவ?… என்றவாறே தொலைக்காட்சியை அணைத்தாள்… அவன் இல்லாம வீட்டில இருக்க பிடிக்கவே இல்ல என்று எண்ணியவள் அவனிடம் பேசுவதற்காக அலைபேசியை எடுத்தாள். அவனுக்கு அழைத்தவள் வேலையா இருப்பான்-ல, ஃப்ரியா இருந்தா அவனே அழைப்பான் என்ற எண்ணம் தோன்றவும் அவனுக்கு அழைப்பு செல்லும் முன்னே அதை அணைத்தாள்.

பின் இருவரின் திருமண நிழற்படத் தொகுப்பேட்டை (மேரேஜ் ஆல்பம்) காணலாம் என்று தோன்ற அதை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கத் தொடங்கினாள். ஆனால் அவள் பார்த்தது என்னவோ மாறனை மட்டும் தான். இந்த ஃபோட்டோல செம்ம-ய்யா இருக்கான்-ல…. இதுல தான் லூசு தூங்கிட்டான். பட் தூங்கினாலும் நம்மாளு ஹேண்ட்சம் தான்… பாதி ஃபோட்டோல என்னைய தான் பார்த்துட்டிருக்கான். என்று தன் போக்கில் அவனது நினைவுகளிலேயே ஆட்பட்டிருந்தவளை அலைபேசி அழைப்பு மீட்டுக் கொண்டு வந்தது. அழைத்தது அவன் தான். அழைப்பை உயிர்ப்பித்த நொடியே மாறா எப்போ வருவ? என்றாள். எப்பொழுதும் ஏய், டேய், ஹே, ஏன் எரும என்று கூட அழைப்பாளே ஒழிய அவனது பெயரை சொல்லி அவள் அழைத்த தருணங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மாறன் கூட சில சமயங்களில் இவள் தன் பெயரை உச்சரிக்கவே மாட்டாளா என எண்ணியதுண்டு. எனவே அவள் பெரிதாக தன் பெயரை கூறாமலேயே அழைத்து பழக்கப்பட்டிருந்தவனுக்கு அவளது மாறா என்ற விழிப்பே காதில் அமிர்தமாய் ஒலித்தது. அந்த அழைப்பே உடல் சிலிர்க்க வைத்தது. தன்னுணர்வுக்கு வர அவனுக்கு குறைந்தது அரை நிமிடம் பிடித்தது. அதற்குள் அவன் பேசுவது தனக்கு சரியாக கேட்கவில்லை என எண்ணியவள் எனக்கு எதுவும் கேட்கலடா ஹலோ லைன்-ல இருக்கியா? என்றாள்.

ம்ம் இருக்கேன்டா… எனக்கு நல்லா கேட்டுச்சு… உனக்கு கேக்குதா…

ம்ம் இப்போ தான்டா சரியா கேக்குது… நீ எப்ப வர?.. எனக்கு போர் அடிக்குது ரொம்ப… நீ இல்லாம நல்லாவே இல்லடா.. நானும் வேலைக்கே போயிருக்கலாம் போல… பிடிக்கலடா…

உடம்பு சரியில்லன்னு தானடா லீவ் போட்டிங்க.. ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான?…

அதெல்லாம் நல்லா தான் இருக்கேன். அப்போ முடியாத மாதிரி தான் இருந்தது. பட் அப்பறம் ஒண்ணும் தெரியல்லடா… எல்லாம் உன்னால தான்… நீ எழுப்பாம விட்டிருக்க வேண்டியதானடா?.. நான் அப்படியே தூங்கிட்டாச்சும் இருந்திருப்பேன். இப்போ பாரு நீயும் இல்ல, நான் என்னடா பண்ணுறது… என்று அனைத்திற்கும் அவனையே குற்றம் சாட்டினாள்.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன்னை தப்பு சொல்கிறாள் என்று கோபமா வரும்?… அவன் தான் அவள் தன்னை தேடுவதை எண்ணி உச்சகட்ட ஆனந்தத்தில் மிதந்து கொண்டு இருந்தானே!… தன்னை அவள் தேடுகிறாள் என்றதுமே தலை கால் புரியவில்லை மாறனுக்கு. அவனோ அந்த சுகத்தை முழுவதுமாய் அனுபவித்துக் கொண்டிருந்தான். என்னோட மாயா என்னை இவ்வளோ மிஸ் பண்றாளா?.. என்ற அதிர்ச்சி, ஆனந்தம் அவனை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்தது. நெஞ்செல்லாம் படபடத்தது. நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், எதாச்சும் படம் பாருடா, இல்லனா வாட்ஸ் அப், ஃபேஸ் புக், யூ ட்யூப்-னு சுத்தி சுத்தி ரவுண்ட் அடிப்பியே அதை பண்ண வேண்டியதான?.. உனக்கு நான் சொல்லணும்மா என்ன? நான் அங்க இருந்தாலுமே நீ அதைத் தான பண்ண போற?.. என்றான்.

ஆமாம்-ல என்று யோசித்தவள் தற்போது தான் அதை உணர்ந்தாள். அவன் இருந்திருந்தாலுமே அவள் அதை தான் செய்திருந்திருப்பாள். எப்போதுமே மொபைல நோண்டிட்டே இருக்காத மாயா என்று அவன் தான் அதை பிடுங்கி வைப்பான். மொபைல் யூஸ் பண்ணக் கூட எனக்கு உரிமையில்லையா என்று அதற்கும் சண்டை தான் போடுவாள். இன்று எதுவுமே செய்ய பிடிக்காதது ஏனென்று காரணம் யோசித்தவள் அது தெரியாமல் போகவே, ஏன்னே தெரியல்லடா இன்னைக்கு எனக்கு எதுலயுமே மனசு ஒட்டவே இல்ல. எது செய்யவும் பிடிக்கல்ல… நீ சீக்கிரம் வருவியா மாட்டியா? என்று அவனை வர வைப்பதில்லேயே குறியாய் இருந்தாள் அவள்.

அவளுக்குத் தான் காரணம் தெரியாதே ஒழிய அவனுக்கா தெரியாது, அவள் என்ன செய்தாலும் அந்த செயலை செய்ய நான் தேவை இல்லையென்றாலும் கூட தனது இருப்பு அவளுக்கு மிகவும் அவசியம். தான் இல்லையென்றால் அவளால் எப்பொழுதும் போல இயல்பாய் இருக்க இயலவில்லை. அவள் அவளாக இருக்க வேண்டுமென்றாலும் கூட அதற்கு தான் வேண்டும் என்பதை அவனால் நன்றாக உணர முடிந்தது. தான் அவளுடன் இல்லையென்றால் அவள் இயல்பே முற்றிலும் பாதிக்கப்படும் என உணர்ந்தவனுக்கு மனம் நிறைவாய் இருந்தது. தனது காதலை அவளாய் உணர வேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு இவளது தேடல் பூரண அமைதியை கொடுத்தது. அவளுக்கும் தன்னை பிடிக்கும் அவளையறிமாலேயே அவளும் தன்னை விரும்புகிறாள் என்பது நிச்சமாய் தெரிந்த பின் அவளாக தன் காதலை உணர வேண்டும் என்று காத்திருப்பது மடத்தனமாக தோன்றியது. முன்பே தன் காதலை கூறி விடலாமென்று யோசித்தாலும் ஒருவித பயம் குழப்பம் தயக்கம் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வந்தன… இப்போது தன் காதலை அவளிடத்தில் வெளிப்படுத்துவதில் எந்த வித குழப்பமோ தயக்கமோ அச்சமோ அவனிடத்தில் இல்லை. அவன் சிந்தனையில் இருந்தமையால் பதில் எதுவும் கூறாமலிருக்க சிறிது நேரமாக ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருந்தவள் இந்த சிம் ஒன்னு அடிக்கடி சிக்னல் கட் ஆகிடுது, நாலு வார்த்தை கண்ட்டின்னுவா பேச முடியுதா?.. பாதி நேரம் ஹலோ ஹலோன்னே போயிடுது… ச்சை என்று அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் சிம் கார்டை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கையில் இயல்புக்கு வந்தவன் எனக்கு நல்லா கேக்குதுடா…நான் தான் என்று சொல்வதற்குள் அவள் அழைப்பைத் துண்டித்து விட்டாள். மாறனோ வாய் விட்டு சிரித்தான். சிரித்தபடியே அவளுக்கு அழைக்க அழைப்புக்குறியை அழுத்த சென்றவனுக்கு அதற்குள்ளேயே அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

டேய் முதல்ல இந்த நெட்வொர்க்-அ மாத்தணும்டா.. ஒண்ணுமே கேட்க மாட்டேங்குது… வேற எது மாத்தலாம்? என்று கேட்டவள் அவன் பதில் கூறுமுன்னே சரி விடு அதை அப்பறம் பாத்துக்கலாம்… நீ இன்னைக்கு சீக்கிரமா வர முடியுமா முடியாதா?.. என்று மிரட்டினாள்.

அதான இந்த அதட்டல் மிரட்டல் தொனி இல்லையென்றால் அது மாயா இல்லையே என்றெண்ணியவன்,.. இன்னைக்கு நிச்சயமா சீக்கிரமாவே வந்துடுவேன் சரியா?.. நீ சாப்டியா?.. என்றான்.

இன்னும் இல்ல நீ வந்தா தான் சாப்பிடுவேன். நீ உடனே வா என்று மாறனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தாள் மாறனின் மனையாள்.

மாறனுக்கோ உண்மையாவே இதெல்லாம் நிகழ்கிறதா? அல்லது தான் இன்னும் விழிக்காமல் தூங்கிக் கொண்டிருக்கின்றேனோ?… இவை அனைத்தும் கனவோ?.. கண் திறந்தால் முடிந்து விடுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. கூடவே வருத்தமும்… மாயா ஒரு நிமிஷம் லைன்லே இரு என்றவன், எழுந்திரு எழுந்திரு தூக்கத்திலிருந்து முளிச்சிக்கோ என்றவாறு இரு கண்ணங்களையும் தன் கைகளால் தட்டினான். டேய் என்னடா பண்ணிட்டுருக்க லூசு என்று அவள் கத்திக் கொண்டிருக்க மாறன் அருகில் இருந்த தன் சக ஊழியரை அழைத்து என்னை அடிங்க என்றான். அவர் திடீரென்று ஏன் வித்தியாசமாக நடந்துக்கிறான் என்றபடி பார்க்க அடிங்களேன் ப்ளீஸ் என்றான். அவனை மேல்-கீழ் ஒரு முறை பார்த்தவர் என்ன நினைத்தாரோ சிரித்தபடியே மாறனின் முதுகில் தட்டிக் குடுத்து விட்டு சென்று விட்டார்.

வியப்பில் இருந்து வெளிவராதவனாய் அலைபேசியை காதில் வைத்து மாயா என்றான்.

என்னடா பண்ணிட்டு இருக்க?…

எனக்கு நடக்கிறதல்லாம் கனவா நிஜமான்னே புரியல்லடா…

ஏன் அப்படி…

ஒண்ணுல்லடா… நான் இப்போ எதையும் சொல்லி உனக்கு புரிய வைக்க முடியாது… நீ எது கேட்கணும்-னாலும் இன்னைக்கு வீட்டுக்கு வந்தோன கேளு சொல்றேன். நான் சீக்கிரமா வந்துடறேன் இப்போ நீ போயி சாப்பிடு சரியா…

ம்ம் ம்ம்…

இப்ப போன வச்சிட்டு உடனே சாப்பிடு ஓகே…?

ம்ம்க்கும் இந்த அக்கறைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. எது கேட்டாலும் சரியா ஆன்ஸர் மட்டும் பண்ணாத என்று முணங்கியவள், கல்யாண ஆல்பம் பார்த்துட்டிருக்கேன். பார்த்து முடிச்சிட்டு சாப்பிடறேன் என்றாள் செய்தி போல.

அவள் கடுப்பில் பேசுவது நன்கு புரிந்தாலும் அது தெரியாதவனாய் பார்ரா… கல்யாண ஆல்பம் பார்த்துட்டிருக்கியா?… இல்ல என்னை மட்டும் சைட் அடிச்சிட்டிருக்கியா என்றான். அவளை வம்பிழுப்பதற்காக விளையாட்டாய் கேட்ட அவனுக்கு அவள் தன்னை மட்டுமே பார்த்திருப்பாள் என்றெல்லாம் சிறிதும் எண்ணமில்லை. அவன் அவளை சீண்டுவதற்காக கேட்க அந்த கேள்வியை எதிர்கொண்ட மாயா தான் திகைப்பிற்குள் உள்ளானாள். அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதை அவள் உணராமலேயே பார்த்துக் கொண்டிருந்ததனால் அவன் அவ்வாறு கேட்டதும் ஒரு நிமிடம் வாயடைத்துப்போனாள்… ஏன் இப்படி அவனையே பார்த்துட்டிருந்தேன் என்று அவளையே அவள் மனம் கேள்வி கேட்டது.

உள்ளே ஏன் எதனால் என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருந்தாலும் வெளியே நான் ஏன் உன்னை பார்க்கப் போறேன். நான் என்னை தான் பார்த்துட்டிருக்கேன் என்றாள்.

அவன் சிரித்தான். நல்ல வேளை அவள் ஆமாம் என்று சொல்லவில்லை. அவள் தன்னை தேடுகிறாள் என்பதே அவனை மூச்சடைக்க வைக்க அவள் தன்னை தான் அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தாள் என்று தெரிந்தால் என்ன ஆவானோ!..

உங்களை நீங்களே ரசிச்சது போதும் மேடம். சாப்பிட்டுட்டு எவ்வளவு வேணாலும் ரசிங்க…

நீ இருந்திருந்தா ஏன் என்னை நானே ரசிக்க போறேன்… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியாததால தான் ஆல்பத்தை எடுத்து வச்சிட்டு உட்காந்துருக்கேன். ரொம்ப கடுப்பாகுதுடா…

இன்னைக்கு என்னடா என்னை ரொம்ப தேடற?… எனக்கே புதுசா இருக்கு.. இதுவரை நீ இப்படிலாம் பேசி நான் கேட்டதே இல்ல.

அதான்டா எனக்கும் தெரியல்ல… நீ இல்லாம வீட்ல தனியா இருந்ததே இல்லல்ல… ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம் இல்லைன்னா ரெண்டு பேருமே இருக்க மாட்டோம்… அதான் நீ இல்லாம தனியா இருக்கவும் புதுசா இருக்குன்னு நினைக்கிறேன்.

ச்ச்ச… இது தெரியாம போச்சே… தெரிஞ்சிருந்தா இதை முன்னாடியே பண்ணிருப்பேனே என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தான் மாறன்.

அது சரி… நீ ஏன் நா உன்னை மிஸ் பண்றதுக்கு இவ்வளோ எக்ஸைட் ஆகுற?.. கனவா நிஜமா-ன்னு தெரியல்ல-னெல்லாம் சொல்ற?.. ஏன்? வொய்? வொய்? வொய்? வொய்? வொய்?…

ஆமா… சந்தோசம் தான்… நீ என்னை தேடுறதுல்ல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இந்த நிமிஷம் ரொம்ப ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்றேன்… மத்த எதுவும் என்னை இப்போ கேட்காத எதுவா இருந்தாலும் ஈவினிங் சொல்றேன். 4 மணிக்கெல்லாம் கிளம்பிருவேன்டா… இன்னும் கொஞ்ச நேரம் தான… நல்லா சாப்பிட்டு படுத்து தூங்கு நீ கண் முளிக்கிறதுக்குள்ள நான் வந்துடுவேன் சரியா?

எல்லாவற்றிற்கும் ‘ஈவினிங் சொல்றேன்’ என்கிறான் அப்படி அவன் என்ன சொல்லப்போகிறான்… எதற்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று ஒன்றுமே புரியாத போதும் அவனிடம் மேலும் எதுவும் கேட்காமல் ம்ம் என்று தலையை ஆட்டினாள் மாயா…

அழைப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள், ப்ரப்போசல் என்று கத்தினாள். காலையில் அவன் தன்னை பிடிக்குமா என்று கேட்டது தற்போது பேசியது அனைத்தையும் இணைத்து பார்த்த போது அவளுக்கு தோன்றியது இது மட்டுமே!…

அவன் ப்ரப்போஸ் பண்ண போறானா?… கணவன் மனைவி உறவுக்குள்ள நுழையணும்-னு விரும்புறானா?..

ஆமா அப்படி தான் தெரியுது. அவன் பேசுனத பார்த்தா அப்படி தான் தோணுது…

ஓ மை காட்… சப்போஸ் அவன் ப்ரப்போஸ் தான் பண்ண போறானா நான் என்ன சொல்றது?…

யெஸ்ஸா?… இல்ல நோ வா?… எனக்கு அவனை பிடிக்குமா பிடிக்காதா?…

அவனை பிடிக்காமலா?… ரொம்ப பிடிக்கும்… என்ன பிடிக்கும் அவன்கிட்ட?… …. …… …… ….

என்ன யோசிச்சாலும் என்ன பிடிக்கும்-னே தெரியல்லயே!…

ஒரு வேளை பிடிக்காதோ?…

ச்சீ ச்சீ எப்படி பிடிக்காதுன்னெல்லாம் நினைக்கிறேன் நான்… மாறன பிடிக்காதுனெல்லாம் சொல்லிட முடியுமா… ஹி இஸ் ஆல்வேஸ் ஸ்பெஷல் டூ மீ. அப்போ பிடிக்கும் பட் என்ன பிடிக்கும்-னு தெரியல்ல…

அப்போ என்ன சொல்றது ஓகேவா இல்ல நோவா?… பேசாம இப்போ நான் ஆன்ஸர் பண்ணலன்னு சொல்லிடவா… எனக்கு அவனை பிடிக்கும் தான்… பட்… ஆ…. தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு… காலைலருந்து அவன் இல்லாம கடியாச்சு தான். அவன் ஃபோட்டோவயே பார்த்துட்டு இருந்தேன் தான்!..

பாத்துட்டா இருந்த?..

இல்லலல… சைட் தான் அடிச்சுட்டு இருந்தேன். அவனை பிடிக்கும் தான். ரசிக்கவும் செய்றேன் தான்… பட் எப்போலருந்து இப்படி ரசிக்கிறேனு எனக்கே தெரியல்லயே… ஒரே படபடப்பா இருக்கு… அடி வயித்த என்னவோ போட்டு பிசையுதே!.. இருபத்திநாலு வருஷமா வேலை செய்யாத ஹார்மோன்ஸெல்லாம் இப்ப தான் வேலை செய்யுதோ?… இதுக்கு பேர் தான் காதலா… இவ்வளோ தானா?… நான் அவுட்டா… விழுந்துட்டேனா?.. ஐய்யய்யோ ஒரு மாதிரி பண்ணுதே!.. பேசாம அவன் ப்ரப்போஸ் பண்ண வந்தா அவனை ப்ரப்போஸ் பண்ண விடாம பண்ணிட்டா என்ன?… ஒரு க்ளாரிட்டி கிடைக்கிற வரைக்கும்…

முதல்ல அவன் உனக்கு ப்ரப்போஸ் பண்ண போறேன்னு சொன்னானா??..

ஆமால்ல அவன் சொன்னான்னா?… நானா முடிவு பண்ணி ஏன் குழம்பிட்டிருக்கேன்…

அவன் வந்து சாதாரணமா பேசி பெரிய பல்ப்-ஆ குடுக்க போறான் வாங்கிக்க…

பட் அவன் தான் ஈவ்னிங் வந்து சொல்றேன்னு சொன்னான்ல…

ஈவ்னிங் வந்து ஏன் ஹாப்பின்னு சொல்றேன்னு சொன்னான். உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ண போறேனு சொல்லல.

சொல்லிட்டு வந்து தான் ப்ரப்போஸ் பண்ணணுமா?.. சொல்லாம வந்து கூட பண்ணாலம்ல…

அப்போ அவனுக்கே அந்த ப்ளான் இல்லன்னாலும் உனக்கு அவன் ப்ரப்போஸ் பண்ணணுணு தான் ஆசை போல?.. அவன் பண்ணாலன்னா ஏமாற்றம் தான் போல?..

சட்டென்று தன் எண்ணம் போகும் போக்கையும் வேகத்தையும் கண்டு அதிர்ந்தவள், இல்ல இல்ல… என்று நன்றாக தன் தலையை ஆட்டிக்கொண்டாள். தன் இரு கைகளாலும் இரு கண்ணங்களையும் நன்றாக தட்டி பின் கண்களை மூடி மூச்சினை நன்றாக இழுத்து விட்டவள் இயல்பு நிலைக்கு திரும்பினாள். ரெண்டு நிமிஷத்துல எங்கருந்து எங்க போயிட்டேன். அவனே வந்து எதுனாலும் சொல்லட்டும். நான் எதுவும் யோசிக்கலப்பா… யோசிக்க மாட்டேன் என்று மீண்டும் தலையை இட வலமாக பலமாக ஆட்டிக் கொண்டாள். ஆனா இந்த படபடப்பு மட்டும் குறைய மாட்டேங்குதே என்றவாறு நெஞ்சை தடவி விட்டுக்கொண்டே குனிந்தவள் மடியில் இருந்த ஆல்பத்தில் மாறன் சிரித்தபடி தனியாக உள்ள புகைப்படத்தை பார்த்தாள். மாறனிடம் பேசிய பிறகு நிழற்படத் தொகுப்பேடு தன் மடியில் இருப்பதையே மறந்து ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவள் தற்செயலாக மாறனின் முகத்தை அதில் காணவும் சட்டென்று நிழற்படத் தொகுப்பேட்டை மூடினாள். நான் பார்க்க மாட்டேன் என்று தனக்குள் அவள் பலமுறை கூறிக் கொண்டாலும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிழற்படத் தொகுப்பேட்டைத் திறக்கச் சொல்லித் தூண்டியது. வேண்டும் வேண்டாம் என்று அவளது மனது இரண்டாக பிரிந்து போராட்டம் நடத்த வேண்டும் என்ற மனமே வென்றது. நிழற்படத் தொகுப்பேட்டை எடுத்து எந்த படத்தை பார்க்க மாட்டேன் என்று மூடினாளோ அந்த படத்தை அவசரமாய் எடுத்தாள். பார்த்தவள் கண் இமைக்க மறந்து தான் போனாள். முன்பும் தான் மாறனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாலும் தற்போது பார்ப்பதற்கும் முன்பு பார்த்ததற்கும் ஏதொ வித்தியாசமாய் தெரிந்தது. அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று தோன்றியது. அப்படியே அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க மனம் விரும்பியது. அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவள் பட்டென்று அதை மூடினாள். நான் என்ன பண்ணிட்டிருக்கேன். எனக்கென்ன ஆச்சு… அவன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி கூட நான் நார்மலா தான் இருந்தேன். அவன் என்னை பத்தி என்ன நினைக்கிறான். அவனுக்கு என்னை பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் அதுல எனக்கு சந்தேகமே இல்ல. என்னை கேர் பண்றான். என்னை ரெஸ்பெக்ட் பண்றான். ஹி ஆல்வேஸ் ட்ரை டூ மேக் மீ ஹாப்பி…. பட் எனக்கு தோணுண மாதிரி அவனுக்கும் தோணிருக்குமா?… இது தான் காதலானெல்லாம் எனக்கு தெரியல்ல… ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் அவனை என் கணவனா உணர ஆரம்பிச்சுட்டேன்.. இந்த உணர்வு புதுசா இருக்கு… அவனை எப்பயும் போல இயல்பா என்னால பார்க்க முடியாது.. மாறா எப்படிடா நான் உன்னை ஃபேஸ் பண்ண போறேன்?.. நீ என்கிட்ட எப்போதும் போல சாதாரணமா பேசுனா நான் என்னடா பண்ணுவேன்?.. நான் முன்ன இருந்த மாயா இல்லடா… நீ எப்பவாவது என்னை உன் மனைவியா உணர்ந்திருக்கியாடா… அவன் இயல்பாய் இருந்து விட்டால் தான் எப்படி இயல்பாய் இருக்க முடியும் என்பதே அவளை மிகவும் வருத்தியது. இன்று தான் உணர்ந்ததை அப்படியே கூறி விடலாமென்று எண்ணினாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது. சிறிது நேரம் இப்படியே மாறிமாறி அவனை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தவள் தனது அமர்ந்த நிலையிலிருந்து எழுந்தாள். மாயா, அவன் நம்ம மாறன் மாயா… இப்ப எதுக்கு ஒண்ணுமே இல்லாததுக்கு புலம்பிட்டிருக்க… பசி வந்துட்டா சில பேர் ஹீரோயின் மாதிரி ஆகிடுறது மட்டும் இல்ல தேவையில்லாம வருத்தப்படவும் செய்வாங்க போல… நல்லா சாப்பிட்டுட்டு நல்லா தூங்கிறேன். மே பி தூங்கி எழுந்தா இந்த ஃபீல் போனாலும் போகிடலாம்… போயிட்டா நல்லது தான்… ட்ரை பண்ணி பார்ப்போம் என்று அதிபுத்திசாலித்தனமாக சிந்தித்தவள் தான் சிந்தித்ததை செயல்படுத்தவும் செய்தாள்.

இரவு சரியாக ஏழு ஐம்பது-க்கு மாறன் வீட்டினுள் நுழைந்தான். இருக்கையில் சிலையென அமர்ந்திருந்தவள் அவனைக் கண்டதும் எழுந்தாள். சாரிடா சம்திங் கேம் அப் என்றவாறு அவளை நோக்கி வந்தவனை ஓடி வந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவள் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் நிற்காமல் வந்தபடியே இருந்தது. அழறீயா?… என்னாச்சுடா… இங்க பாரு… என்னை பாரு என்று அவள் முகத்தை பார்க்க முயன்றான். அவள் பார்க்க விட்டால் அல்லவோ… இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டாள். அழுகை மட்டும் நிற்கவில்லை. தற்போது கண்ணீரோடு சேர்த்து தேம்பலும் வெளிப்பட்டது. முதல் முதலாக திருமணம் ஆகி அவள் வீட்டை விட்டு தன்னுடன் வருகையில் அவள்அழுது பார்த்தவன் எப்படி ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றுவது என்று புரியாமல் தவித்தவன் அதன் பிறகு இன்று தான் அவள் அழுது பார்க்கிறான். என்ன ஆயிற்று?… அழும் அளவிற்கு மாயாவிற்கு என்ன பிரச்சினை?.. என்று புரியாமல் தவித்தான். மாயா என்ன ஆச்சுன்னு சொல்லும்மா சொன்னா தானடாம்மா நான் ஏதாச்சும் செய்ய முடியும்… நீ எதுமே சொல்லாம இப்படி அழுதுட்டிருந்தா நான் என்னன்னுடா நினைக்கிறது. என்னன்னு சொல்லிட்டு அழுடா முதல்ல… கஷ்டமாயிருக்கு என்றவாறு அவளை தன்னிடமிருந்து விலக்க முயன்றான். அவள் இன்னும் அதிகமாக அழுதபடி மேலும் அவனிடம் ஒன்றினாள். அவன் விலக்கியதால் தான் அதிகமாக வருந்துகிறாள் என்பதை உணர்ந்தவன் அவளை தானும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அவ்வாறு அணைத்த படியே அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அவளையும் அமர வைத்தான். அவள் முதுகை மென்மையாய் தடவிக் கொடுக்க ஆரம்பித்தவன் அவளாகவே அழுகையை நிறுத்தட்டும் என எண்ணியவனாய் தடவிக் கொடுத்தபடியே அவள் அழுகையை நிறுத்துவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான். நேரம் ஆக ஆக சிறிது சிறிதாக தேய்ந்த தேம்பல் விம்மலனைத்தும் முழுமையாய் நின்று பின் கண்ணீராக மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருந்த அழுகை சரியாக பதினைந்து நிமிடங்களின் முடிவில் முற்றிலுமாக நின்றது. தன்னுணர்விற்கு வந்தவள் அவனிடமிருந்து விலகினாலும் அவனது கரங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டபடியே அவனைப் பார்த்தாள். இதுவரையில் அவள் செய்த எந்த செயலுக்குமே காரணம் புரியாதவன் தானும் அவளை பார்த்தபடியே என்னாச்சுடா… தனியா இருக்கவும் ஒரு மாதிரி ஆகிடுச்சா…? எதையாச்சும் பார்த்து பயந்துட்டியா?… என்றவன் அவள் பற்றியிருந்த தனது ஒரு கையை எடுத்து அவள் தலையை இதமாகத் தடவிக் கொடுத்தான்…

எங்கடா போன?… ஏன் இவ்வளோ நேரம்?….

அது பெரிய கதைடா… அதை அப்பறம் சொல்றேன்… உனக்கென்னாச்சு?… ஏன் அப்படியொரு அழுகை?…

நான் கேட்குறததுக்கும் மட்டும் பதில் சொல்லுடா… ஏன் லேட்?…

கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியதிருந்ததுடா… வாங்கிட்டு வரும் போது நாலு பேர் ஒரு பொண்ணுட்ட தப்பா நடந்துகிட்டாங்கடா… எப்படிடா பார்த்துட்டு சும்மா இருக்கிறது. நான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண போக அப்போ தான் ரொம்ப நாளாவே அவங்க அந்த பொண்ணுக்கு தொல்லை கொடுத்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது… அதான்டா கம்ப்ளைண்ட் கொடுத்திடலானு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டியதாகிடுச்சு… பட் பசங்களுக்கு பெரிய இடத்து இன்ஃப்ளுயன்ஸ் இருக்கும் போல… சோ கம்ப்ளைண்ட் எடுத்துக்க மாட்டேன்டாங்க… பேசி கம்ப்ளைண்ட் வாங்க வச்சு அந்த பொண்ண சேஃப்-ஆ வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு வர லேட் ஆகிடுச்சுடா…

ஒரு கால் பண்ணி சொல்றதுக்கு என்ன?…

சொல்லலானு தான்டா நினைச்சேன்… பட் பேட்டரி டெட்… அதான் சொல்ல முடியல்ல…

பக்கத்துல யார்கிட்டயாச்சும் வாங்கி பண்ணிருக்கலாம்ல?… உனக்கு என்னை பத்தின நினைப்பே வரலல்ல?… என் மேல அக்கறை குறைஞ்சிடுச்சில்ல?… நான் கவலை படுவேனு உனக்கு தோணவே இல்லயா?…

அப்படிலாம் இல்ல மாயா…

பின்ன வேற எப்படின்னு தான் சொல்லேன்!… நாலு மணிக்கு கிளம்பிறேன்னு சொன்ன!… அதிகபட்சம் நாப்பது நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடலாம் ஆனா நீ வரல. நான் தூங்கி எழுந்ததே ஆறு மணி… உன்னை காணுமேன்னு கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்… ஆஃபிஸ்-கு கூப்டா மூணு மணிக்கெல்லாம் கிளம்பிட்டன்னு சொன்னாங்க. நான் என்னன்னுடா நினைப்பேன். காலைல வேற நான் உன் கூட இல்லைன்னா என்ன பண்ணுவன்னு நீ கேட்டுட்டு போயிட்ட!… நீ ஏன் அப்படி கேட்டியோ எனக்கு தெரியாது, ஆனால் உன்னை காணலைன்னதும் எனக்கு நீ காலைல கேட்டத தவிர எதுவுமே ஓடலடா… உனக்கு எதுவும் ஆகாது நீ வந்துடுவன்னு என்னை நானே சமாதானம் செஞ்சிக்கிட்டாலும் நீ கேட்டது தான் ஓடிட்டே இருந்துச்சு. உனக்கு ஏதாச்சும் ஆகிருந்தா நான் என்னடா செய்வேன். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் நரகமா இருந்துச்சுடா… நொடிக்கு நொடி நீ நல்லாருக்கணுன்னு வேண்டிட்டே இருந்தேன்… நானே வந்து தேடலானா சுத்தமா என்னால முடியாதுன்னு தோணுச்சு… நெஞ்செல்லாம் ஒரே படபடப்பு கை காலெல்லாம் நடுங்க ஆரமிச்சுடுச்சு என்னால நிக்க முடியும்னு கூட தோணல்ல… ஒரு கால் பண்ணிருக்கலாம்ல?… ஏன்டா என்னை இப்படி அழ வச்ச? ஏன் இப்படி என்னை பயமுறுத்துன? என்று கோபத்தில் தொடங்கியவள் இறுதியில் அழத் தொடங்கினாள்.

அவள் தனக்காக தான் இவ்வளவு நேரம் அழுதிருக்கிறாள் தன்னை காணாமல் ஒவ்வொரு நொடியும் தவித்திருக்கிறாள் என்பது ஒரு வித இதத்தைக் கொடுத்தாலும் அவள் அனுபவித்த வேதனையும் அழுத அழுகையும் தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சியும் மேலெழுந்தது. அவளிடம் தாமதாகும் என்று தகவல் சொல்லியிருந்தால் அவள் இப்படி தவிக்கும் நிலை வந்திருக்காது என்று எண்ணி வருந்தியவன், நல்ல வேளை இவள் ஆறு மணிக்கு எழுந்தாள் அதற்கு முன்பே எழுந்திருந்தாலோ அல்லது உறங்கவேயில்லையென்றாலோ இன்னும் அதிகமான கஷ்டத்தை தான் அனுபவித்திருப்பாள் என்று எண்ணி இறைவனுக்கு தன் நன்றியை செலுத்தினான். பின் இனி வருந்தி பயனில்லை என உணர்ந்தவன் அவளை சமநிலைக்கு கொண்டு வர முனைந்தான்..

அழுகையை கட்டுப்படுத்த முயன்று அது இயலாமல் போக தன்னை மீறி அழுது கொண்டிருந்தவளை தன் மார்போடு சேர்த்து அணைத்தான். பின் அவள் தலையை மென்மையாய் கோதியபடி பேசத் தொடங்கினான்.

அழுகை வந்தா அழுடாமா… யாரு மாறன் தான?… என் முன்னாடி அழறதுக்கென்ன?.. அழுகையை அடக்கக்கூடாதுடா… அதுவும் என்கிட்ட அழுகையை அடக்க வேண்டிய அவசியமில்ல.. தப்பு என் மேல தான்… நான் ஒரு வார்த்தை சொல்லிருக்கணும்… சாரிடா… நானே உன்னை வருத்தப்பட வச்சிட்டேன். நான் உன்னை விட்டு எங்கடா போக போறேன் இல்ல உன்னை விட்டுட்டு எங்க போக முடியும் என்னால?… நான் இங்கயே தான்டா இருக்கேன். மாயா கூடவே… இப்ப மட்டும் இல்ல… எப்பவும்… மாறனிருக்கும் போது மாயாக்கு ஏன் அழுகை வருது? என்றவாறு அவள் முகத்தை நிமிர்த்தினான்.

தற்போது அவள் தெளிவடைந்திருந்தாள். ஆனால் எவ்வித உணர்ச்சியையும் அவள் முகத்தில் காட்டவில்லை. பார்வையை மட்டும் அவன் கண்களை விட்டு விலக்காதிருந்தாள். அவள் பார்வையில் தன்னை தொலைத்தவன், அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். வார்த்தைகளால் உணர்த்தினால் மட்டும் தான் காதலை உணர இயலுமா என்ன?… ஆயிரம் வார்த்தைகளால் கூட உணர்த்த முடியாத அவள் காதலை தன் செயல்களின் மூலம் முழுவதுமாய் உணர்த்தி விட்டாளே!.. இனியும் மாயாவிற்கு தன் மீது விருப்பமா இல்லையா என்ற ஐயம் மாறனிடம் துளியும் இல்லை. எனவே தன்னுணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லாது போனது..

மாயாவிற்குத் தான் என்ன செய்வது எப்படி அவனை எதிர் கொள்வது என்று தெரியவில்லை. இவ்வளவு நேரமாக இருந்த பதட்டத்திலும் வருத்தத்திலும் அவனது கையணைப்பில் இருந்தது உரைக்காமல் இருக்க தற்போது எதிர்பாரா அவனது முத்தம் உடல் சிலிர்க்கச் செய்தது. மீண்டும் நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது. மூச்சு விடவும் சிரமமாக இருந்தது. நெஞ்சம் படபடக்கும் சத்தம் அவனுக்கே கேட்டுவிடுமோ என்று பயந்தவள் அவன் அணைப்பிலிருந்து தன்னை விலக்கி கொண்டாள்.

ரொம்ப பசிக்குதுடா மாயா சாப்பிடலாமா?…

ம்ம்… நா எடுத்து வைக்கிறேன் நீ ஃப்ரஷ் ஆகிட்டு வா என்று அவனை பார்ப்பதை தவிர்த்தவாறு கூறியவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமையலறைக்குள் ஓடினாள். ஏன் இப்படி கிஸ் பண்ணான்?.. ஒரு வேளை அவனுக்கும் ஃபீலிங்க்ஸ் வந்துடுச்சோ?.. எப்பவா இருக்கும்?… பட் எனக்கு இருக்கிற படபடப்பு பதட்டம் எதுவுமே அவனுக்கு இல்லையே!.. எந்தவித தயக்கமும் இல்லாம கேசுவலா முத்தம் குடுத்தான், குடுத்தப்பறமும் கேசுவலா சாப்பிடலாமான்றான். இதுக்கு என்ன அர்த்தம்…? இதை நான் எப்படி எடுத்துக்கிறது?… அவன் சாதாரணமா இருக்கான்ல நீயும் நார்மலா இரு… நார்மல்…நார்மல்…நார்மல் என்று இழுத்து மூச்சு விட்டவளுக்கு மாறன் வந்து என்னடா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்னு சொன்ன?… தனியா நின்னு என்ன பேசிட்டிருக்க என்று கேட்கும் வரையிலும் கூட இரவு உணவு நாம் தயாரிக்கவில்லை என்பது தோன்றவேயில்லை.

ஹான், இதோ எடுத்து வைக்கிறேன் என்று திரும்பியவளுக்கு அப்போது தான் தாம் எதுவும் செய்யவேயில்லையே என்ற உணர்வே வந்தது. திரும்பியவள் இடத்தை விட்டு நகராமல் நிற்கவும் என்னாச்சு மாயா, சரி நீ போய் உட்காரு நானே எடுத்துட்டு வரேன் என்று அவன் அவளைத் தாண்டி செல்லவும், நான் எதுவுமே செய்யல என்றாள்.

அடிப்பாவி, பசி கொல்லுதுடி… ஏன் செய்யல்ல?.. என்றவனை முறைத்தபடியே!.. உனக்கு மட்டுமா பசிக்குது?.. எனக்கும் தான் பசிக்குது.. ஏன் செய்யல்லன்னு மட்டும் கேட்க தெரியுதுல்ல அப்போ வரதுக்கு லேட் ஆகுன்னும் சொல்ல தெரிஞ்சுருக்கனும்,.. ஆள காணுமேன்னு தேடிட்டிருக்கும் போது எப்படிடா டிஃப்பன் செய்யணும்-னு தோணும்?… என்றாள்.

கரெக்ட் தான்டா… பட் பசிக்குதுன்னவுடனே எடுத்து வைக்கிறேன்னு ஓடுனியே அப்போ தெரியல்லையா சாப்பாடு செய்யலைன்றது? என்ற படி சிரித்தான். அவனது சிரிப்பை ரசித்து அதில் மயங்கியவள் அவன் தன்னை பார்ப்பதற்குள் முகத்தை அவனிடமிருந்து திருப்பினாள். நீ போ நான் கொஞ்ச நேரத்துல பண்ணிடறேன் தள்ளு என்றபடியே வெங்காயத்தை எடுத்து தோலை உரிக்கத் தொடங்கினாள். நானும் ஏதாச்சும் பண்றேன், இதை வெட்டவா என்று உரித்து வைத்த வெங்காயத்தை எடுத்தான். அதெல்லாம் ஒன்னும் நீ செய்ய வேணாம் முதல்ல நீ தள்ளி நில்லு ஏன் இவ்வளோ நெருக்கமா வர?… நீ போயி உட்காரு நானே செஞ்சு எடுத்துட்டு வரேன் என்று கடுப்படித்தாள். அவனைப் போல இயல்பாய் தன்னால் இருக்க முடியவில்லையே என்பது அவளைக் கொன்றது. மேலும் அவனது நெருக்கம் மனதிற்கு இனித்த போதும் மனது அதை விரும்பிய போதும் அதை முழுதாக அனுபவிக்கவோ ரசிக்கவோ முடியவில்லை. மாறாக தன் மனதில் மட்டும் அழுக்கு படிந்தாற் போல் ஒருவித குற்றவுணர்ச்சியே மேலோங்கியது. தான் இவ்வாறெல்லாம் நினைக்கிறோம் என்று அவனுக்கு தெரிந்தால் அவன் என்ன நினைப்பானென்று ஏதோ தவறு செய்வதைப் போலொரு உணர்வு அவளை கொன்றது.

ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறாள்?.. ஏன் தன்னைப் பார்த்து இந்தவொரு வார்த்தையைக் கேட்டாள்?.. என்று புரியாத போதும் அவன் எதுவும் அவளிடம் பேசவில்லை… அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். மாவை எடுத்து இருவருக்குமான தோசைகளை சுட்டு ஹாட் பாக்ஸில் அடுக்க ஆரம்பித்தான். அவன் எதுவும் பேசாது அமைதியாக சென்றது இவளுக்கு குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியது. இப்படி பேசிட்டேனே என்று தோன்றவும் மீண்டும் கண்கள் கலங்கி விட்டன. அவனிடம் இப்பொழுது என்ன பேசி சரிசெய்வது என்றும் புரியவில்லை. தோசைக்கு தொட்டுக் கொள்ள காரத் துவையலைத் தயாரித்து முடித்தவள், நீ சாப்பிடு நா வந்துடறேன் என்றபடி உள்ளே சென்றாள். குளியலறைக்குள் சென்று கதவையடைத்து குழாயைத் திறந்து விட்டவள், தன்னை மீறி வாய் விட்டு அழுதாள். காலையில் உடல்நிலை சரியில்லாதது பின் அவன் இல்லாமல் அவனைத் தேடி வாடியாது அதன் பின் தன் மனதுக்குள் நடந்த அவனைப் பற்றிய காதல் போராட்டம் முடிவாக அவனுக்கு ஏதேனும் ஆனதோ என்ற பயம் என்று இன்றைய பொழுது தொடங்கியதிலிருந்தே ஒன்று மாறி ஒன்றாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த உணர்வு போராட்டங்களின் விளைவாக அவள் மிகவும் சோர்ந்து விட்டாள். உடலிலும்,மனதிலும் தெம்பில்லாததைப் போன்று உணர்ந்தாள். நான் என்ன செய்யறது இறைவா?.. நான் என்ன செய்ய?… இந்த ஃபீல் ஏன் எனக்கு முதல்ல வந்துச்சு… அவனுக்கு வந்துருக்க கூடாதா?… என்னால அவனை எப்பவும் போல ஃபேஸ் பண்ண முடியல்ல.. என்றவள் தன்னால் முடிந்த வரை அழுது தீர்த்தாள். பின் முகத்தை கழுவிக் கொண்டு தன்னையும் தேற்றிக் கொண்டு அவனிடம் வந்து சேர்ந்தாள்.

அவனோ அவள் வரும் வரை சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். நீ தான் அப்போவே பசிக்குதுன்-னீல சாப்பிட வேண்டிய தான?.. என்றாள் அவள். எதுவும் பேசாமல் சாப்பாட்டை இரு தட்டுகளில் எடுத்து வைத்து ஒன்றை அவளிடம் நீட்டினான். கைகள் அனிச்சையாய் அதை வாங்கிய போதும் கண்கள் அவனை ஆராய்ந்து கொண்டிருந்தன. முதல் முறையாக தான் ஒன்று கேட்டு பதிலளிக்காது இருக்கிறான். இதுவரையில் எத்தனையோ முறை இவள் கோபித்துக் கொண்டு அவனிடம் பேசாமல் இருந்திருந்தாலும் ஒரு முறை கூட அவன் அப்படி இருந்ததில்லை. ஏற்கனவே ஒரு முறை அவன் கடினமாக அழைத்ததையே தாங்க இயலாதவளால் அவனது இத்தகைய அணுகுமுறையை துளியும் பொறுக்க முடியவில்லை. நான் அவனிடம் பேசாதிருந்ததுவும் அவனுக்கு இப்படியொரு வலியை கொடுத்திருக்குமோ!.. என்று அவனை நினைத்து கவலையுற்றாலும் அதை புறம் தள்ளியவள், நானே காலையிலேருந்து ரொம்பவே கஷ்டப்பட்டிட்டிருக்கேன். கொஞ்சம் கூட என் ஃபீலிங்ஸ் புரியாம என்கிட்ட கோவப்படறல்ல?… போ ஒண்ணும் பேச வேணாம்!… நான் யார் பேசாததுக்கும் கவலை படல… நீயும் வேணாம் நீ சுட்ட தோசையும் வேணாம் என்று உள்ளுக்குள் பொருமியவள் சாப்பிடாமல் எழுந்தாள். என் மேல இருக்க கடுப்ப ஏன் சாப்பாட்டு மேல காட்டற?.. எதுனாலும் பேசிக்கலாம்… முதல்ல சாப்பிடு என்றான். ஐ பேசிட்டான்,.. அப்போ இனி இவன் நம்மகிட்ட கோச்சுக்கிட்டா நாமளும் இவன்கிட்ட கோச்சுக்கணும் போல.. என்று உள்ளுக்குள் திட்டம் தீட்டினாலும் அவன் அழைத்தவுடனேயே எப்படி சாப்பிடறது என்று தோன்ற அமராது அப்படியே நின்றாள். அவள் அசையாமல் இருப்பதை பார்த்து அவள் கையை பிடித்து இழுத்து சாப்பிட அமர வைத்தான். உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளிக்காட்டாது சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் இருவருமாய் சேர்ந்து பொருட்களை எடுத்து வைத்தவுடன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்ந்து விட்டான் மாறன். பேசிக்கலாமென்று சொன்னவன் ஏதாவது ஆரம்பிப்பான் என்று பொறுத்திருந்து பார்த்தவள் அவன் எதுவும் பேசாமலிருக்க தானே பேசலாமென்று அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவன் அவள் புறம் திரும்பாது தொலைக்காட்சி அலைவரிசைகளை(சேனல்களை) மாற்றிக் கொண்டிருந்தான். இந்த பாட்டு வைடா என்று மாயா சொல்லவும் அதை வைத்தவன் அவள் புறம் திரும்பினான் இல்லை.

மாறா… மாறாறாஆஆ… ஐ அம் சாரிடா.. நான் பேசுனது தப்பு தான்… உன்னை அந்த வார்த்தை நான் சொல்லிருக்கக் கூடாது… என்னை மன்னிச்சுடுடா ப்ளீஸ்ஸ்… அவன் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது அவளையும் பாராது பிடிவாதமாக அமர்ந்திருந்தான். அவள் கேட்ட கேள்வியை அவனால் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியவில்லை. செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவள் விருப்பத்தை கருத்தில் கொள்ளும் தன்னிடம் எப்படி அப்படியொரு வார்த்தையை கேட்க முடிந்தது என்ற வருத்தம் குறைவதாய் இல்லை.

இளா ப்ளீஸ்… நீ இப்படி இருக்காத!.. சண்ட போடணுன்னாலும் போடு… இப்படி அமைதியா இருந்து கொல்லாத…

இளா என்ற அவளது அழைப்பில் தன்னையும் மீறி அவளிடம் திரும்பியவன் அவள் வருந்துவதைக் கண்டதும் தன் பிடிவாதத்தைக் கைவிட்டான். இதுவரைக்கும் தப்பான எண்ணத்தோட நான் உன்கிட்ட நெருங்கிருக்கேனா மாயா?… நிஜமா நான் எந்தவொரு இன்டென்ஷனோடவும் உன் பக்கத்துல வரல… நீ பேசுனது எந்தளவு பாதிச்சதுன்னு தெரியுமா?…என்றவன் அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமானான்.

மாறா… நீ நினைக்கிற மாதிரில்லாம் இல்லடா… நான் அந்த அர்த்தத்துல சொல்லல… உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்?.. என்னை நம்புடா உன்னை நான் அப்படில்லாம் தப்பா நினைக்கக்கூட மாட்டேன். நான் அப்படி சொன்னதுக்கான காரணமே வேறடா…

என்ன காரணம்?…

காலைல நீ ஏன்டா அப்படி கேட்ட?… உன்னை பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டில்ல ஏன்?

அதை நாளைக்கு சொல்றேன். நீ இப்போ சொல்லு ஏன் அப்படி சொன்ன?..

ஏன்னா எனக்குத்தான் அப்படி தப்பு தப்பாத் தோணுது…

என்ன?…

ஆமா… நீ காலைல கேட்டில்ல பிடிக்குமான்னு… சொல்றேன்… எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குன்னு எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாத அளவு பிடிக்கும். அடுத்து நீ என் வாழ்க்கைல இல்லைன்னா நானும் இல்லனெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா நீ என் கூட இருந்தா மட்டும் தான் நான் நானாவே இருக்க முடியும். இதான் நீ கேட்ட ரெண்டு கேள்விக்கு என்னோட பதில். அப்பறம் நான் உன்னை தள்ளிப் போக சொன்னது உன் மேல நம்பிக்கையில்லாம இல்லை, என் மேல நம்பிக்கை இல்லாம… என்னால உன்கிட்ட பழைய மாறிலாம் சாதாரணமா இருக்க முடியல்லடா… காலைலருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். பட் அப்போ கூட எனக்கு உன் மேல இருக்க ஃபீலிங்ஸ்-அ நான் உணரல்ல… அப்பறம் ஆல்பம் பாத்தப்ப நான் உன்னை மட்டும் தான்டா பாத்திட்டிருந்தேன். அப்போ கூட எனக்கது தெரியல்ல… நீ கேட்டப்பறம் தான் ரியலைஸ் பண்ணேன். நீ ஃபோன் பேசினதுக்கப்பறம் வந்து ஏதோ சொல்லணுன்னு சொன்னவுடனே நான் என்ன நினைச்சேன்னா… நான்… நான் வந்து நீ எனக்கு ப்ரப்போஸ் பண்ண போறன்னு நினைச்சுட்டேன். அப்பயும் எனக்கு என் மனசுல என்ன இருக்குன்னு தெரியல்லடா.. சப்போஸ் நீ ப்ரப்போஸ் பண்ணா எஸ் சொல்லவா நோ சொல்லவான்னு யோசிச்சிட்டிருந்தேன். அப்படி யோசிக்கும் போதுதான் நான் உன்னை என் கணவனா உணர ஆரம்பிச்சுட்டேன்னு புரிஞ்சுது. நீயும் நானும் சேர்ந்து ஒரு அழகான குடும்ப வாழ்க்கைய ஆரம்பிக்கணும்-னு எனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சு. நெஞ்செல்லாம் ஒரே படபடப்புடா… மூச்சு விடக் கூட சிரமமா இருக்கிற மாறி இருந்துச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியாம சாப்டு படுத்து தூங்கிட்டேன்… அதுக்கப்பறம் உன்னை காணாம தவிச்சப்ப தான்டா காதல்-னா என்னன்னே எனக்கு புரிஞ்சுது. இது தான் காதல்-னு மனசு சொல்லிச்சு… இந்த ஒரு ஃபீல் எனக்கு எப்போ வந்துதுன்னு எனக்கு தெரியல்ல… ஆனா அதை இன்னைக்குத் தான் என்னால உணர முடிஞ்சுது. நீ என்ன பண்ணாலும் அழகா தெரியுது… உன்னை பார்த்துட்டே இருக்கத்தோணுது. உன் தோள்-ல சாஞ்சிக்கணும் போல இருக்கு… உன் கையணைப்புக்குள்ளேயே காலம் பூரா இருக்கணும் போல இருக்கு. இப்ப கூட மூச்சு முட்டுதுடா… மொத்த உடம்புலயும் பலமே இல்லாதது போலிருக்குடா… நீ என் பக்கத்துல வந்தா உனக்கொன்னுமில்லடா… நீ சாதாரணமா இருக்க… பட் நான் அப்படி இல்லையே!.. நீ என் பக்கத்துல வந்தா எனக்கு நெர்வஸ்-ஆ இருக்கு… அப்படியே உன்னை கட்டியணைச்சுக்கணும் போல இருக்கு… என்னை மட்டுமே என்னால சமாளிக்க முடியல்ல நீயும் என் பக்கத்துல வந்தா நான் என்னடா பண்ணுவேன். உன் நெருக்கம் எனக்கு பிடிச்சிருந்தாலும் அதை என்னால அனுபவிக்க முடியல்லடா.. ஏதோ தப்பு பண்றது போல குற்றவுணர்ச்சி வந்து கொல்லுதுடா… உன் அனுமதி இல்லாம உன்னை ரசிக்கிறது உன்னை வேற கண்ணோட்டத்துல பார்க்கிறதெல்லாம் உறுத்துதுடா… பட் உன்னை அப்படி பார்க்காமலும் இருக்க முடியல்ல…. ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்… என் உடம்பு மனசு எதுவுமே என் பேச்ச கேட்க மாட்டேங்குது.. நான் என்னடா செய்வேன்… அதான்டா உன்னை தள்ளி போக சொன்னேன். உன்மேல நம்பிக்கையில்லாம நான் அப்படி சொல்லலடா… என்மேல நம்பிக்கையில்லாம சொன்னேன். என்னை நம்பு… அவனை பார்க்காது தன் ஒட்டு மொத்த உணர்வுகளையும் திக்கித் திணறி அவனிடம் கொட்டித் தீர்த்தாள்.

மாயா… மாயா… மாயா… என்றதற்கு மேல் அவனுக்கு வேறு வார்த்தைகள் தோன்றவில்லை. ஆனால் அதையும் அவனால் வாயைத் திறந்து கூற முடியவில்லை. அவள் தன்னை உணர்ந்திருப்பாள் என அவன் எண்ணியிருக்கவில்லை. நாளை அவளிடம் தன் காதலை சொல்லி விடலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு அவளின் ஒவ்வொரு வார்த்தையும் காதில் தேனாய் இனித்தது. தன்னிடம் நெருங்காதேன்னு சொல்லிட்டாளேன்னு வருத்தப்பட்டவனோ அதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் கூறிய ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்த்த அவனோ முற்றிலும் செயலற்று போனான்.

அவன் நிலை புரியாத அவள், தான் இவ்வளவு பேசியும் அவன் எதுவும் பேசவில்லை என்றெண்ணினாள். ஒரு வேளை நான் இப்படி நினைக்கிறேன்னு ஓப்பனா சொல்லிருக்க கூடாதோ எனத் தனக்குள்ளே வருந்தியவள், சரிடா நான் இவ்வளவு சொல்லியும் உன் கோவம் போகலன்னா பரவால்ல உனக்கு கோவம் போனவுடனே பேசு,.. நான் உன்னை அப்படி சொன்னதுக்கு நிஜமா வருத்தப்படறேன் என்று சொல்லி எழ முயன்றாள். அவள் பேச ஆரம்பித்தது முதல் இந்த நொடி வரையிலும் கூட மாறனது முகத்தைப் பார்க்கவில்லை. பார்த்தால் நினைப்பதை பேச முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை. மாயா கொடுத்த இன்ப அதிர்ச்சியிலிருந்து வெளி வர முடியாமல் தவித்தவனால் போகாதே என்று சொல்லவும் வாயைத் திறக்க முடியவில்லை. அவளது கைகளைப் பிடித்து இழுத்து தன்னருகில் அமர வைத்தவன் அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான். அவனது செயல்களுக்கான காரணம் புரியாத போதும் அந்த நொடியை அதன் இதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தார்களோ இருவருக்கும் தெரியாது. அவன் இயல்புநிலைக்கு திரும்ப தேவைப்பட்ட நேரம் முழுதும் அணைப்பிலேயே கழிந்தது. ஒரு வாறு இயல்பிற்கு திரும்பியவன் அவளது உச்சந்தலையில் இதழ் பதித்து பின் விடுவித்தான். அவன் விடுவித்த நொடி மாயாவின் அலைபேசி ஒலித்தது. இதுவரையிலும் கூட அவன் கண்களை நேர் கொண்டு நோக்காதவள் இப்பொழுதும் நோக்கவில்லை. அலைபேசியை எடுத்தாள். மாயாவின் அன்னை தான் அழைத்திருந்தார். நாளை காலையில் இருவருமாய் கோவிலுக்குச் சென்று வரும்படி கூறினார். ஏனென்றவளிடம் நாளை திருமண நாள் என்பதை நினைவூட்டினார். அட ஆமா அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சா என்று சிந்தித்தவாறே சரிம்மா.. நாளைக்கு பேசுறேன் என்று அழைப்பை அணைத்தாள்.

நாம தான் மறந்துட்டோம் அவனாச்சும் நியாபகம் வச்சிருக்கானான்னு பார்ப்போம் என்று நினைத்தவள் எப்படி ஆரம்பிப்பது என்று தனக்குள் இரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டு திரும்பினாள். அங்கு மாறனைக் காணவில்லை. எப்படி இருப்பான் அவன் தான் தனியாக மொட்டை மாடிக்குச் சென்று வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தானே!… அவனுக்கோ வானில் பறப்பது போன்று ஒரு உணர்வு. என்ன செய்வது ஏது செய்வதென்று புரியவில்லை. அவள் சொல்லிட்டாள், நான் எப்படி சொல்லப்போறேன்?.. பேசாம இப்பயே ஓடி போயி அவளை கட்டியணைச்சு ஐ லவ் யூ-ன்னு சொல்லிடட்டுமா?.. இல்ல இல்ல… ஏற்கனவே ப்ளான் பண்ண மாறியே மாயாவை அங்க சர்ப்ரைஸ்-ஆ கூட்டிட்டு போயி ரிங் மாத்திக்கிட்டு சொல்லலாம். ஷி லவ் சர்ப்ரைசஸ். மாயா!.. ஒரு நிமிசத்துல என் வாழ்க்கையையே அழகாக்குன என் தங்கமே!.. தாங்க் யூ மாயா… என்னவோ கனவு மாறியே இருக்கு எல்லாமே!… ஓ மை காட்… ஐ காண்ட் பிளிவ் இட்… தாங்க் யூ… தாங்ஸ் அ லாட்… என்றவனின் பின்னே எதுக்கு தாங்க்ஸ் என்றபடி வந்து நின்றாள் அவள்.

எதிர்பாராத அவளது வரவால் அதிர்ந்தவன் உளறத் தொடங்கினான்.

ஒண்ணுல்ல நம்ம ராம் ஒரு ஹெல்ப் கேட்டிருந்தான்… அதை பண்ணிக் குடுத்தேன் அதான்?…

ம்ம்?… என்ன?…

இல்ல நான் ஹெல்ப் கேட்டேன். அவன் பண்ணான். அதான் என்றவன் இப்படி உளறிக் கொட்டிறியேடா என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

ஏதோ மறைக்கிறான் என்று புரிந்த போதும் அதை அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாததால் அம்மா கால் பண்ணியிருந்தாங்க, நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க என்றாள்.

ம்ம் சரி…

ஏன்-னு கேட்கல்ல?

நாளைக்கு வெட்டிங் டே-ல்ல சோ சொல்லிருப்பாங்க…

உனக்கு நியாபகம் இருக்கா… நான் மறந்துட்டேன். எனக்கும் சொல்லிருக்கலாம்-ல?… புது டிரஸ் கூட எடுக்கல… அத்தை திட்ட போறாங்க..

எதுக்குடா தேவையில்லாம?.. வெட்டி செலவு.. புது டிரஸ் தான் போடணுமா என்ன?

ஏன் இப்படி பேசுகிறான்?.. இதற்கு என்ன கூறுவதென்று புரியாமல் நின்றாள்.

சரி மாயா,.. நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும்-ல தூங்கலாமா?…

அதுக்குன்னு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கப்போறியா?

ம்ம்… ஆமாடா பயங்கரமா தூக்கம் வருது…

சரி நீ போ நான் வரல்ல…

நிஜமாவாடா?… எங்க நிக்கிறோன்றத மறந்துட்டன்னு நினைக்கிறேன்…

அட…ஆமா மாடிலல்ல நிக்கிறோம் இவன் போயிட்டா பயத்துலயே செத்துடுவோமே!.. தனியா விட்டுட்டு போயிடாதடா பாவி என்று மனதிற்குள் கெஞ்சியவள் வெளியே அதெல்லாம் மறக்கலையே!.. நீ போறதுன்னா போ என்றாள்.

ரியலி?…

ம்ம்…

அப்ப சரி நான் போறேன் என்றவன் படிக்கட்டுகளைக் கடந்து வீட்டினுள் நுழைந்தான்.

போக மாட்டான் என்று அவள் நினைத்திருக்க அவன் சென்றதும் இவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. கூடவே பயமும். அடப்பாவி இப்படி தனியா விட்டுட்டு போயிட்டியேடா… என்று புலம்பியவள் என்ன ஆனாலும் சரி அந்த பேயே வந்தாலும் சரி நீயா வந்து என்னை கூட்டிட்டு போகாம நானா கீழ வர மாட்டேன் என்று உறுதி எடுத்தவள் அதுவரைக்கும் மை டியர் காட், நீ தான் என்னை காப்பாத்தணும் என் கூடவே இரு என்று தெய்வத்தை துணைக்கழைத்தாள்.

அவள் வருவாளென்று வாசலில் அவளைப் பார்த்தவாறு பத்து நிமிடங்கள் காத்திருந்தவன் அவள் வருவதாக தெரியவில்லை என உணர்ந்து தானே மேலே வந்தான். வா மாயா… எவ்வளவு நேரம் இப்படியே நிக்க போற?… காலையிலேயே ஃபீவர் வர மாதிரி இருந்துதுல்ல?.. இப்ப பனில நின்னுட்டிருக்க வா போலாம் என்று அவள் கரங்களைப் பற்றி இழுத்தான்.

விடு ரொம்பத்தான் அக்கறை என்றபடி அவன் கைகளை தட்டிவிட்டாள்.

இப்போ எதுக்கு முரண்டு பிடிக்கிற நீ? ஏன் எனக்கு உன்மேல அக்கறையே இல்லையா?

உனக்கு என்னை பத்தி எந்த கவலையும் இல்ல… இருந்திருந்தா என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிருப்பியா?

நான் எங்கயும் போகலைடா.. அதோ அந்த கதவுகிட்ட தான் நின்னேன். நின்னு உன்னை பாத்துட்டு தான் இருந்தேன். நான் போனோன நீயும் வந்துடுவன்னு நினைச்சேன் நீ தான் வரல்ல… அதான் நானே வந்துட்டேன்.

சும்மா சொல்லாத… நீ போ நீ பழைய மாறனே கிடையாது. அவன் என்னை இப்படிலாம் தனியா விட்டுட்டு போமாட்டான். என்னை ரொம்ப கேர் பண்ணுவான். நான் அவனை பாத்துக்கிறேனோ என்னவோ அதெல்லாம் எதிர்பார்க்காம என்னை நல்லா பார்த்துப்பான். இந்த உலகத்துலயே நான் தான் ஸ்பெஷல்-னு என்னையைவே நினைக்க வைப்பான். ஆனா நீ என்னை ஹர்ட் பண்ற… நான் அவ்ளோ தூரம் என் காதல உனக்கு சொல்லியும் நீ கேட்டும் கேட்காத மாதிரியே ரியாக்ட் பண்றீல்ல?… அப்படிலாம் உனக்கு என் மேல எந்த ஃபீலிங்ஸ்-சும் இல்லனாலும் இல்லன்னு ஃப்ராங்க்-ஆ சொல்லிடு. இப்படி அதை பத்தி பேசாம கேட்காத மாதிரி இருக்காத… எனக்கு கஷ்டமாயிருக்கு. என்னை, என்னோட ஃபீலிங்ஸ்-அ இன்ஸல்ட் பண்ற மாதிரி இருக்கு. நான் என் விருப்பத்தை உன் கிட்ட சொன்னது தப்பா?… ஏன் தப்பு பண்ணிட்டோமோன்னு நினைக்க வைக்கிற?

உனக்கு சந்தோஷத்த பெருசா குடுக்கணும்-னு ஆசைப்படறேன்டா. காலையில வரைக்கும் பொறுத்தா தான் என்ன? நாளைக்கு காலைல ஆரம்பிக்கிறதுலருந்து முடியுற வரைக்கும் உனக்கு இன்ப அதிர்ச்சியா குடுத்து அசத்தலாம்-னா சோதிக்கிறியே! என்று தனக்குள் பேசியவன் என்ன சொல்வது என்று சிறிது தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.

மாயா உன்னை பிடிக்காம இருக்குமாடா எனக்கு… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். மாயா எனக்கு என்னைக்குமே ஸ்பெஷல் தான். பட் இன்னைக்கு தான நீ உனக்கு நான் எப்படின்றத உணர்ந்த அதே போல நானும் உணரனும்-ல?… சோ நான் என்னை புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் வேணும்ல?… அதான் எனக்கும் என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சோன நான் பதில் சொல்லலான்னு நினைச்சேன்… உன் ஃபீலிங்ஸ்-அ இன்ஸல்ட் பண்றேனெல்லாம் அதுக்கு அர்த்தமில்லடா… நீ என்கிட்ட உன் விருப்பத்த சொன்னதுல்லயும் எந்த தப்பும் இல்ல. பட் ஐ நீட் அ டைம்..

அவள் கூறியதனைத்தையும் கேட்டும் அவன் அது பற்றி பேசாதது அவள் உணர்வுகளை அலட்சியம் செய்வது போன்று வலியைத் தந்தது. தற்போது அவன் பேசியதை கேட்டதும் முற்றிலும் தெளிவடைந்தாள். அவன் தன்னை அலட்சியப்படுத்தவில்லை. மே பி ஹி ஆல்சோ லவ்ஸ் மி… அதை ஃபீல் பண்ணாம இருக்கான். நான் இன்னைக்கு வரைக்கும் அது தெரியாம டியூப் லைட்-ஆ தான இருந்தேன்… இவன் இன்னும் எத்தனை நாள் இருக்க போறானோ?.. பேசாம இவன் தொலைஞ்சு போன மாதிரி நாமளும் ரெண்டு நாளைக்கு சொல்லாம காணாம போயிடலாமா?.. அப்போ யோசிப்பான்ல?.. என்று யோசித்தவள் தன் சிந்தனைகளை பலவாறு பல்வேறு திசைகளில் பறக்க விட்டுக்கொண்டே இருந்தாளே தவிர பதில் பேசவில்லை.

என்னடா?…

ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல… உன்னை புரிஞ்சுக்க டைம் வேணுன்ற அதான… நீ சொல்றது சரிதான்… சரி வா போயி தூங்கலாம்… என்றபடி அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

இருவரும் உறங்குவதற்காக படுத்து விட்டாலும் இருவருக்குமே உறக்கம் வரவில்லை. அவனுக்கு சந்தோஷத்திலும் நாளைக்கு எப்படி தன் காதலை வெளிப்படுத்தலாமென்ற திட்டமிடுதலிலும் அவளுக்கு இவனை எப்படி தெளிய வைக்கலாமென்ற சிந்தனையிலும் உறக்கம் வரவில்லை.

இளா… தூங்கிட்டியா?..

ம்ம்…

தூங்குனா இதுக்கு மட்டும் எப்படிடா ஆன்ஸர் வருது.?

தூங்கலன்னு தான் உனக்கே தெரியும்-ல பின்ன எதுக்கு கேட்ட?

சிரித்தவள் கேட்க வந்த விஷயத்திற்கு நேரடியாக வந்தாள். நீ கல்யாணத்துக்கு முன்ன யாரயாச்சும் லவ் பண்ணிருக்கியாடா..?

இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம இந்த கேள்வி?

கேட்கிறதுக்கு மட்டும் ஆன்சர் பண்ணுடா… ஏன் எதுக்குன்னு எதிர்கேள்வி கேட்காம..

உத்தரவு மஹாராணி… யாரையும் லவ் பண்ணல… அடுத்த கேள்வி?..

ஏன் பண்ணல?…

ஏன்னா என்ன சொல்றது… இன்ட்ரஸ்ட் இல்ல…

லவ்லயா? இல்ல பொண்ணுங்க மேலயா?…

ரெண்டுலயும் தான்…

கைய நீட்டேன் என்றவள் அவன் நீட்டியதும் அந்த கையை தலைக்கு கீழே வைத்து நெருங்கி வந்து அவன் தோள்களில் தலையை வைத்து படுத்துக் கொண்டாள். இப்ப எப்படி இருக்கு உனக்கு ஹார்ட் பீட் அதிகமாருக்கா?

மனுசன சோதிக்கிறாளே!.. என்று நினைத்தவன் அப்படிலாம் ஒண்ணும் தோணலையே! நீ தள்ளி படு என்றான்.

அப்படியா சொல்ற?.. பட் சத்தம் எனக்கே கேட்குது… படபடப்பா இருக்கு தான?

நாதான் இல்லன்றேன்ல…

சரி விடு… ஈவினிங் என்னவோ சொல்லணும்-னு சொன்ன?… நான் வேற என்னவோ கற்பனை பண்ணேன்… என்னதது ஒண்ணுமே சொல்லல..

தூக்கம் வருதுடா நாளைக்கு சொல்றேனே!…

ம்ம்…என்னை எதுக்குடா கிஸ் பண்ண?

இப்ப தான தூக்கம் வருதுன்னு சொன்னேன்.

உனக்கு தூக்கமே வல்லனு எனக்கும் தெரியும்… ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல்லு.

ஷப்பா….நீ அழுதல்ல… அதான் ஒரு ஃப்ரண்ட சமாதானப்படுத்த ஆறுதல்-காக குடுத்தேன்.

அப்போ செகண்ட் டைம்?

அது…அது…அதுவும்… அப்போவும் நீ அழுதீல?.. அதுவும் அதுக்காகத்தான் குடுத்தேன்…

எந்த ஊர்ல ஃப்ரண்டோட ஆறுதல்-கு இப்படி கிஸ் பண்ணுவாங்களாம்?… என்று முணுமுணுத்தவள் உனக்கு இருக்க எல்லா பொண்ணுங்க ஃப்ரண்ட்ஸயும் அழுதா இப்படி தான் கிஸ் பண்ணி ஆறுதல் சொல்லுவியாடா… என்றாள்.

என்ன சொல்வது என்று தெரியாது விழித்தவன் நீ முதல்ல தள்ளி படு மாயா என்றான்.

ஏன் நான் தள்ளி படுக்கணும்…

எனக்கு தூக்கம் வருது சோ தள்ளி படு.

சரி வா தூங்கலாம். அதுக்கேன் நான் தள்ளி படுக்கணும்?..

நீ தள்ளி போனா தான் என்னால தூங்க முடியும்…

ஏன்… இதுவரை நான் உன் தோள்ல படுத்து நீ தூங்கினதே இல்லையா?…

இதுவரைக்கும் தூங்கினது வேற… இப்போ வேற மாயா!.. ப்ளீஸ் முதல்ல நீ தள்ளி போ…

முன்னாடி உள்ளதுக்கும் இப்போ உள்ளதுக்கும் எனக்கு தான வேற வேற… உனக்கேன் வேறயா தெரியுது? என்றவாறு மேலே சுவற்றை பார்த்து படுத்திருந்தவள் அவனை நோக்கி முகத்தை திருப்பினாள்.

அவனும் எவ்வளவு நேரம் தான் சமாளிப்பான். முன்பாவது அவளுக்கு தன் மீது விருப்பம் இல்லாததால் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இப்போதோ நிலைமை அப்படியில்லை. அவளும் தன் மனதில் அவன் இருப்பதை அவள் விருப்பத்தை தெரிவித்து விட்டாள். எனவே அவனைக் கட்டுப்படுத்துவது அவனுக்கே சவாலாக இருக்க முற்றிலும் இருளும் இல்லாத நன்கு ஒளியும் இல்லாத அரை வெளிச்சத்தில் தன் முகத்திற்கு வெகு அருகிலேயே அவள் முகம் இருக்க அவன் தன் கட்டுப்பாட்டை முழுவதுமாய் இழந்தான். தன்னையும் மீறி அவள் முகத்திடம் தன் முகத்தை கொண்டு சென்றவன் சட்டென்று அவளையும் தன் மீதிருந்து நகர்த்தி தானும் நகர்ந்தான்… ஏன்டா என்னை தள்ளி விட்ட என்றவள் அவன் மெத்தையில் இருந்து எழுவதைக் காணவும் எங்கடா போற என்றபடி அவனை இழுத்தாள்… இழுத்த இழுப்பில் அவள் மேலேயே விழுந்தவன் இதற்கு மேலும் கட்டுப்படுத்த இயலாதவனாய் அவள் கண்ணங்களில் அழுந்த முத்தமிட்டான்… அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை தன் விரல்களால் ஒதுக்கியவன் அவள் இதழ்களை சிறைப் பிடித்தான். என்ன தான் அவனை முற்றுமுழுதாய் நேசித்தாலும் அவன் அண்மையை மனமும் உடலும் விரும்பினாலும் ஏனோ அவனது செய்கைக்கு உடலும் மனமும் உடன்பட மறுத்தது. அவனை தடுக்கவும் இயலாமல் என்ன முயன்றும் அவனோடு ஒன்றவும் மனம் ஒப்பாமல் செயலற்றிருந்தாள் அவள். அவளது விருப்பமின்மையை அவன் உணர்ந்து கொண்டானோ என்னவோ அவளை விட்டு சட்டென்று விலகினான். இருவரும் கட்டிலின் இரு வேறு விளிம்புகளில் இருவரது முதுகுகளும் ஒன்றையொன்று நோக்கியவாறு அமர்ந்திருந்தனர்.

இருவருக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை. இருவருக்குமிடையில் பெருத்த அமைதி நிலவியது. மாயாவிற்குமே ஏனென்று காரணம் புரியவில்லை. ஏனிந்த நெருடல், முழு மனதாய் அவனோடு உடன்பட முடியவில்லை ஏன்? என்னவன் எனக்கானவன் என்ற உரிமையுணர்வு எழுவதற்கு மாறாக அவன் செயல்களில் உடன்பாடின்மை ஏற்பட்டதேன்? என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். இதற்கு முன்பும் தான் முத்தம் குடுத்தான் என்று யோசிக்கையில் ஒன்று புரிபட்டது. அப்பொழுது கொடுக்கப்பட்ட முத்தம் முழுக்க முழுக்க அவன் அன்பை பறைசாற்றியது. ஆனால் இப்பொழுது கொடுக்கப்பட்ட முத்தமோ அன்போடு இணைந்த காதல், காதலோடு இணைந்த காமத்தின் வெளிப்பாடு என்று தன் மனம் ஒவ்வாமைக்கு காரணம் கண்டுபிடித்து தெளிந்தவள் திரும்பி மாறா என்று அவனை அழைத்தாள். சரியாக அவள் அழைத்த அந்த நொடியே அவனும் மாயா என்றபடி திரும்பினான்.

மாறா… அது வந்து நான்… நீ.. நீ… என்று திணறியவள் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க அதற்குள் எழுந்து அவளருகில் சென்றவன் அவள் இதழ்களில் தன் விரல்களை வைத்து “ஷ்ஷ்… நீ ஒண்ணும் சொல்ல வேணாம்… வெயிட் நான் வரேன்” என்றவாறு விளக்கை ஒளிர விட்டுச் சென்றான்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் திரும்பியவன், அவள் முன்னே மண்டியிட்டு என் வாழ்க்கைக்கே அர்த்தத்தை கொடுத்த என் அழகு தேவதையே வில் யூ பி மை பெட்டர் ஹால்ஃப்… நம்ம கனவு வாழ்க்கையை நிஜமாக்கலாமா? என்றபடி ஒரு கையை அவள் கரங்களை ஏந்துவதற்காக நீட்டிய நிலையிலும் மற்றொரு கையில் மோதிரத்தை வைத்த நிலையிலும் இருந்தான். ஆ என்று வாயைத் திறந்து தன் கைகளால் வாயைப் பொத்தி அப்படியே சிலையென அசைய மறந்தாள் அவள். மேடம்-அ எவ்வளோ விரும்புறேன்னு வார்த்தைல்ல சொல்லி புரிய வச்சிட முடியாது… வாழ்ந்து காட்ட தான்டா முடியும். நாம சேர்ந்து வாழப் போற இந்த வாழ்க்கைல கண்டிப்பா உனக்கு என் காதல் புரியும்.. புரிய வைப்பேன்… என் ப்ரப்போசல மேடம் ஏத்துப்பிங்களா??.. அவள் ஏதேனும் கூறுவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவன் அவள் அசையாமல் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருக்கவும், ஏதாச்சும் சொல்லுங்கடா எவ்வளவு நேரம் நான் இந்த பொஷிசன்லயே இருக்கிறது?… என்று கண் சிமிட்டினான். ஓ… சாரி… சாரி… வாடா முதல்ல இப்படி வந்து உட்காரு என்று அவனை பிடித்திழுத்து தன் அருகில் அமர வைத்தவள், என்னடா இப்படி பயங்கரமா ஷாக் குடுக்கிற?… எனக்கு கொஞ்சம் டைம் குடு… நான் முதல்ல இந்த உலகத்துக்கு வந்துக்கிறேன்… கனவா நிஜமா எதுமே புரில்ல என்று சொல்லி சில நிமிடங்களுக்கு பிறகு என்னடா இதெல்லாம்….எப்ப ரியலைஸ் பண்ண? நிச்சயமா இப்போ நாம….. நாம கிஸ் பண்ணதுக்கப்பறம் இல்ல தான?.. ரிங்லாம் வாங்கியிருக்க?…. எப்போடா என்றாள். அவள் தயக்கத்தைக் கண்டு ரசித்து சிரித்தவன் ரொம்ப முன்னாடியே!… என்றான்.

ரொம்ப முன்னாடின்னா?…

ஒரு வருசத்துக்கும் மேல… உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்போ!…

என்ன?…

ஆமாடா… கல்யாணத்துல ஈடுபாடில்லாம, இன்டரஸ்ட் இல்லாம தான் அன்னைக்கு வந்தேன். பட் உன்னை பார்த்தவுடனேயே நான் ஃப்ளாட். அது உன் அப்பியரன்ஸ்-னால இல்லடா. எனக்கு உன்னை பத்தி எதுவுமே தெரியாது… பட் அதை எப்படி சொல்றது… காரணமே தெரியாம உன்னை பிடிச்சது. நீ ஃபீல் பண்ணியே அந்த படபடப்பு பதட்டம் அது எல்லாமே உன்னை பார்த்த அந்த செகண்ட்-ல எனக்கு வந்துச்சு. மனைவின்ற உரிமையை என் வாழ்க்கைல குடுக்கணும்னா அது உனக்கு மட்டும் தான்-னு தோணுச்சு.. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் முட்டாள்தனம்-னு நினைச்சேன், லவ்-லயும் நம்பிக்கையில்ல அதுவும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்-ல சுத்தமா நம்பிக்கையில்ல. எந்தவொரு விஷயமும் நமக்கு நடக்குற வரைக்கும், நாம உணர வரைக்கும் அது நம்ம கண்ணுக்கு பொய்யா தான் தெரியும். யாராச்சும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்-னு சொன்னா, நான் அவங்கள ஏளனம் பண்ணிருக்கேன்… மூஞ்சிய பார்த்து லவ் பண்றிங்க இதே அழகா இல்லாத ஒருத்தவங்க மேல ஃபர்ஸ்ட் சைட்-ல லவ் வந்துதுன்னு சொல்லிருகீங்களான்னு கேட்டிருக்கேன். பட் அப்போ எனக்கு புரியல்ல… அழகு-ன்றது கண்ணுக்கு கண் மாறுபடும். அதுவும் ஒருத்தவங்கள நமக்கு ரொம்ப பிடிச்சிடுச்சின்னா அவங்க மத்தவங்க கண்ணுக்கு அசிங்கமா தெரிஞ்சாலும் நம்ம கண்ணுக்கு அழகான ஓவியமா தெரிவாங்கன்னு எனக்கு புரியல்ல… உன்னை பார்த்த அந்த செகண்ட் எல்லாமே புரிஞ்சுது.

எப்படிடா மாறா?…

என்ன எப்படிடா?…

நான் உன்னை விரும்புறேன்னு தெரிஞ்ச அந்த நிமிசத்துலருந்து ஏன் அது சரியா தெரியாம குழப்பத்துல இருந்ததுலருந்தே என்னால இயல்பா இருக்க முடியல்ல… உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல்ல. சொல்லலனா மூச்சு முட்டி மயங்கிடுவேன்ற மாதிரி இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம்… எப்படிடா?… எப்படி என்கிட்ட எதையுமே சொல்லாம பொறுமையா இருக்க முடிஞ்சது?…

உண்மையை சொல்லணும்னா நம்ம கல்யாணத்துக்கு முன்ன நான் பேச முயற்சி பண்ணப்போ நீ சரியா ரெஸ்பான்ட் பண்ணாதது கஷ்டமாதான்டா இருந்தது, என்ன நினைக்கிறதுன்னே தெரியல்ல… பட் கல்யாணத்தன்னைக்கு நீ சாதாரணமா பேசுனது ஷாக்கிங்-ஆ இருந்தது. சோ என்னை போலவே உனக்கும் கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லன்னு புரிஞ்சுது. உனக்கா என்னை பிடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணலானு முடிவு பண்ணேன். எனக்கு வேற வழியும் இல்லடா… நானா உன்கிட்ட நெருங்க முயற்சி பண்ணிருந்தாலோ இல்ல என் மனசுல உள்ளதை அப்போவே சொல்லிருந்தாலோ நீ பயந்துருப்ப.. உனக்கே புதுஇடம் இதுவரைக்கும் யாருன்னே தெரியாத ஒருத்தவனோட வாழ வந்துருக்க… கண்டிப்பா நான் ரெண்டடி முன்னாடி எடுத்து வச்சுருந்தா நீ பத்தடி பின்னாடி போயிருப்ப.. இப்படி பேசுனா நான் வேற மாதிரி எடுத்துப்பேனோ இதை சொன்னா நான் அட்வான்ட்டேஜ் எடுத்துப்பேனோன்னு நீ என்னை நினைச்சு யோசிச்சு யோசிச்சு பயந்து பயந்து பேச வேண்டி இருந்துருக்கும். என்கிட்ட உன்னால எதார்த்தமா பழக முடியாம போயிருக்கும். இப்போ பேசற மாதிரி ஒளிவு மறைவு இல்லாம மனசுல தோன்றத பேசுற கப்புள்-ஆ நாம இருந்திருக்க மாட்டோம். சோ சொல்லி உனக்கும் ஒரு கம்ஃபர்ட் இல்லாத சூழ்நிலையை க்ரீயேட் பண்ணி நானும் எப்படி உன்னை சரிபண்றதுன்னு தெரியாம முளிச்சிட்டிருக்க எனக்கு விருப்பமில்லடா… அதுவும் இல்லாம நான் என் காதலை முதல்ல சொல்லி அதுக்கப்பறம் நீ என்னை விரும்பாம நீயாவே என்னை விரும்பணுனு ஆசைபட்டேன்டா… கடைசில அதான் நடந்துருக்கு… இந்த நிமிஷம் நான் எவ்வளோ ஹாப்பியா இருக்கேன்னு தெரியுமா மாயா..

ஏன்டா இவளை லவ் பண்ணோம்னு என்னைக்காச்சும் ஃபீல் பண்ணிருக்கியாடா.?

அட ச்ச்சீ… ஏன் இப்படிலாம் கேட்டிட்டிருக்க?

சொல்லுடா… என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டில?.. அடிக்கடி ஏதாச்சும் யோசனைலையே இருப்ப… சம்டைம்ஸ் அப்செட் ஆகிருவ… என்னால தான?..

அப்படிலாம் இல்லடாமா… உண்மையை சொல்லணுனா உன்னை பத்தி தான் யோசினைக்கு போயிருவேன்… பட் அது எப்படிடா எனக்கு கஷ்டத்தை குடுக்கும்… இன்னும் சொல்லப்போன நான் ரொம்பவே ஹாப்பியா தான் இருந்தேன். எந்நேரமும் மாயா கூடவே இருக்கலாம். மாயா கூட பேசலாம், விளையாடலாம், கிண்டல் பண்ணலாம் மாயா கூடவே இருந்து நல்லபடியா என் மாயாவ பார்த்துக்கலாம் எனக்கு அதுவே போதுமானதா இருந்துச்சுடா…

நான் உன்னை பத்தி யோசிக்காம சுயநலமா இருந்துருக்கேன்ல? நான் உன்மேல பெருசா கேர் எடுத்துக்கவும் இல்ல.. நீ என் மேல காட்டுன அளவு அன்பை நான் உன் மேல காட்டல!.. உன் அளவுக்கு நான் உன்னை காதலிக்கல்லடா…

நான் வரல்லன்னதும் அழுது வடிஞ்சி உட்கார்ந்துட்டிருந்தியே அது என் மேல அன்பு இல்லாததாலயா?… யார் அதிகமா அன்பு செலுத்துறாங்கன்னு மெஷின் வச்செல்லாம் கண்டுபிடிக்க முடியாதுடா.. அளந்து அளந்து லவ் பண்ணவும் முடியாது.

மாறா…

சொல்லுடா…

எனக்கு என்ன சொல்லன்னே தெரியல்லடா… ரொம்ப தேங்க்ஸ் டா…

எதுக்குடா…

என் வாழ்க்கைல வந்ததுக்கு. என் வாழ்க்கைத் துணையா நீ வந்ததுக்கு.. நம்ம கல்யாணம் என் விருப்பமில்லாம தான்டா நடந்துச்சு… பட் என் சம்மதமில்லாம இல்ல… முழுக்க முழுக்க என் சம்மதத்தோட தான் நடந்துச்சு.. கல்யாணத்தை பார்த்து ஒருவித பயம்… முக்கியமா நான் நானா இருக்க முடியாதோன்ற பயம்.. நான் என் சுயத்தையே இழந்துடுவேனோன்ற பயம்… ஆனா உன்னை மாதிரி ஃபர்ஸ்ட் சைட் லவ்-ஆனெல்லாம் எனக்கு தெரியல்ல… ஏதோ உன்னை பார்த்தோன ஒரு நம்பிக்கை… பயம் குறைஞ்சது போல இருந்தது. நீ கூட கேட்டில ஏன் கல்யாணம் பிடிக்கலன்னா அழுகலன்னு… இப்போ வரைக்கும் ஏன்னு சரியா தெரியல்லடா… எனக்கு அழுகை வரல்ல… ஒருவேளை நான் கல்யாணம் பண்ணப்போறது நீ-ன்றதாலன்னு நினைக்கிறேன். இன்னைக்கு வரை நான் நானாவே இருக்கேன்னா அது என் வாழ்க்கைத் துணை நீ-ன்றதால… என் கல்யாண வாழ்க்கை என் சுயத்த அழிக்கலன்னா அதுவும் என் பெட்டர் ஹாஃப் நீ-ன்றதால… கல்யாண வாழ்க்கை இவ்வளவு அழகா மாறிடுச்சுன்னா அதுவும் நீ-ன்றதால…. என் கணவன் நீ-ன்றதால.. தாங்க் யூ சோ மச்டா…

ஏன்டா இப்படிலாம் பேசுற… அப்படி பார்த்தா என் வாழ்க்கைக்கே ஒரு முழுமையை குடுத்ததுக்கு அழகா மாத்துனதுக்கு நான் தான் நன்றி சொல்லணும். நீ இந்த சீரியஸ் மோட்-லருந்து ரொமான்ஸ் மோட்-கு வாடா… ரொம்ப யோசிச்சு தேவையில்லாம ஃபீல் பண்ற.

அதில்லடா என்னவோ கில்ட்டியா இருக்கு… எனக்கு எப்படி இருக்குன்னு உன்கிட்ட சொல்லத் தெரியல்ல…

மாயா…. என்னை பாரு.. நான் தான் சொல்றேன்-ல எனக்கு எதுவுமே என்னைக்கும் கஷ்டமா தெரியல்லடா… எவ்வளோ நாள் ஆனாலும் நீயா சொல்லணும்னு தான் வெயிட் பண்ணேன்.. பட் நேத்து நைட் சுத்தமா தூக்கமே வரல்ல. இத்தனை நாள் குடுத்துட்டே இருக்க ஒன்னு அதை நாமளும் வாங்கணும்-னு ஒரு ஆசை வந்துடுச்சு. சொல்லிடலாமோனு யோசிக்க ஆரம்பிச்சப்பவே மேடம் நான் இல்லாம தவிச்சு சொல்லிடலான்ற தைரியத்தை குடுத்தீங்க… சரி இன்னைக்கு சொல்லிடலானு ரிங்.. நாளைக்கு புதுடிரஸ்-லாம் வாங்கிட்டு வரும்போது அந்த ப்ராப்ளம்-ஆல லேட் ஆகிடுச்சு… சரி நாளைக்கு சொல்லலான்னு ஒரு ப்ளான் போட்டு வச்சேன் அதுக்குள்ள நீயே சொல்லிட்ட… நிஜமா நான் எதிர்பார்க்கவேயில்லடா… நீ சொல்றதுக்கு முன்னயே நீ என்னை லவ் பண்றன்றது எனக்கு புரிஞ்சுட்டாலும் நீயா அதை சொல்லும்போது ஹையோ என் கால் தரையிலயே நிக்கலடா.

எனக்கும் நீயே செலக்ட் பண்ணிட்டியா?.. என்னை கேட்காம எப்படி எடுப்ப நீ.. எனக்கு பிடிக்கலன்னா நான் போட்டுக்க மாட்டேன்…

சிரித்தவன் பிடிக்கலன்னா போட வேண்டாம், வேற எடுத்துக்கலாமென்றான்.

அது சரி ஏன் இதுவரை எனக்கு உன் மேல அப்படி எந்த ஃபீலும் தோணலைன்னு பொய் சொன்ன?

அது உனக்கு நாளைக்கு நிறைய சர்ப்ரைஸ் குடுத்து அசத்தலான்னு நினைச்சேன்டா.. சோ இப்போ சொல்லவேணானு நினைச்சேன். பட் அதுக்குள்ள இப்படியொரு ஸ்விட்சுவேஷன்,.. உனக்கு பிடிக்கலன்னோன நீ சொல்லிருக்கலாம்டா… சொல்ல முடியல்லன்னா தள்ளியாச்சும் விட்ருக்கலாம். இனி இப்படி ஒரு சூழ்நிலை வராது. சப்போஸ் வந்துச்சுன்னா உனக்கு அதுல ஈடுபாடு இல்லைன்னா என்கிட்ட சொல்லுடா… தப்பு என் மேலதான்டா… ஃபீலிங்ஸ் இல்ல லவ் இல்லன்னு சொல்லிட்டு நான் அப்படி செஞ்சது தப்பு. உனக்கும் கஷ்டமாயிருந்திருக்கும்-ல. ரெண்டுபேருமே ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில தூங்கி காலையிலயும் அதே மனநிலையில எழ எனக்கு இஷ்டமில்ல. இப்பவே சரிபண்ணிடலான்னு தோணுச்சு… அதான் மாயாக்கிட்ட லவ்வ-யும் சொல்லியாச்சு ஃபுல் ஸ்டோரியையும் சொல்லியாச்சு. வேற எதாச்சும் கேட்கணுமாடா….

ம்ம்… ம்ம்…

என்ன?

ரிங்-அ நீ எனக்கு போட்டே விடல?…

நன்றாக வாய் விட்டு சிரித்தவன், சாரிடா மறந்துட்டேன் என்றபடி மோதிரத்தை அவள் விரல்களில் புகுத்தினான். பின் மாயாவும் அவன் வாங்கியிருந்த மற்றொரு மோதிரத்தை அவனுக்கு அணிவித்தாள்.

வேற ஏதும் இருக்காடா..?

உன் தோள்-ல சாஞ்சிக்கட்டுமா?

நீ சாயாம வேற யாருடா சாயப் போறா?.. என்கிட்ட பெர்மிஷன் வேற கேட்கணுமா?.. என்று அவன் கூறவும் அவன் தோள்களில் தஞ்சம் புகுந்தவள் மாறா என்றாள்.

சொல்லுடா…

எனக்கு சர்ப்ரைஸ் பிடிக்கும்டா… ஆனா உன்னை விட இல்ல.

மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தியவாறே சரிடாமா என்றான்…

விட்டத இப்போ கன்ட்டின்யூ பண்ணலாமாடா என்று கண்ணடித்தாள்.

மாயாக்கு கன்ட்டின்யூ பண்ணனுனா பண்ணலாம்…

ஏன் உனக்கு வேண்டாமா?..

வேண்டாம்…

ஏன்?…

இப்ப நான் இதை பண்ணா இதுக்காக இப்போ ப்ரபோஸ் பண்ண மாதிரி இருக்கும்… நல்லாருக்காதுடா…

அவனது பதிலைக் கேட்டவள் பெருமிதத்துடன் அவனை நோக்கினாள். இத்தகைய பெருமைக்குரியவன் என்னவன் என்ற உரிமை உணர்வு மேலிட்டது. உன்னை… இழுத்து வச்சு….

வச்சு?

செல்லம், தங்கம்னு கொஞ்சிட்டே இருக்கணும்டா… ஒரு குழந்தைய கொஞ்சுறது போல… என் சக்கரக்கட்டிடா நீ தெரியுமா?..

ம்ம் அப்படியா…?… தெரியாதேடா.. என்று அவளை ரசித்து சிரித்தான்.

என் பட்டுடா நீ… என் பொக்கிஷம் நீ… வேற லெவல்டா நீ… உன்னை வச்சு வச்சு கொஞ்சிட்டே இருக்கலாம்டா… யூ ஆல்வேஸ் ஷெரிஷ் மீ. டேக் அ குட் கேர் ஆப் மீ. உன்கிட்ட பழகுனதுக்கு அப்பறம் தான் ஆண்கள் மேல மரியாதையே வந்துது.. யு ஆர் அ ரியல் மேன். யு ஆ மை மேன். மை ஒன் அன்ட் ஒன்லி மாறன். என் பொற்களஞ்சியம்… பொற்குவியல்…

மாயா இப்ப ஏன்டா இப்படி புகழ்ந்துட்டிருக்க?.. எனக்கென்னவோ நீ என்ன ஓட்ரியோன்னு தோணுது… என்னை கிண்டல் பண்றியாடா…

தலையை திருப்பி அவனை நோக்கியவள், என்னை பார்த்தா விளையாடற மாதிரி தெரியுதா உனக்கு என்றாள். நான் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுலருந்து வந்ததுடா… ஒவ்வொன்னையும் உணர்ந்து பேசிட்டிருக்கேன். ஐ திங்க் ஐ அம் சோ லக்கி டூ ஹேவ் யு..

சரிடா சரி… நீ உணர்ந்து தான் பேசுற… பட் போதும்… எனக்கு ரொம்ப ஓவரா தெரியுதுடா…

அட போடா உனக்கு தெரில்ல… எல்லா பொண்ணுங்களுக்கும் தனக்கு வரப்போறவன் இப்படித்தான் இருக்கணுன்னு ஒரு எக்ஸ்பெக்ட்டேஷன் இருக்கும்-ல… அதெல்லாத்தையும் ஃபுல் ஃபில் பண்றது நீயாதான்டா இருப்ப… எல்லா பொண்ணுங்களையும் விடு என் கனவு, கற்பனைகளுக்கு உயிர் குடுத்தா அது நீயா தான்டா இருப்ப… இந்த உலகத்துல இருக்க ஒட்டு மொத்த ஆண்களையும் யுனிக்-கான ஒரே ஒருத்தன் என் மாறன்… உலகத்துல எங்க தேடுனாலும் என் மாறன போல ஒருத்தன்.. ஒருத்தன் கிடைக்க மாட்டான்… நான் தேடாமலே எனக்கு கிடைச்ச தங்கப்புதையல் என் மாறன்…இந்த மாயாவோட மாறன்…

எப்பயும் நான் மாயாவோட மாறன் தான்டா… நீ இப்போ இப்படி பேசுறத நிறுத்து…

என் வெல்லக்கட்டி, என் கன்னுக்குட்டி… என் குலோப் ஜாமுன்… எனக்கே எனக்குன்னு வந்தவன்… என் லக்கி சார்ம்… என் உயிரு…

மாயா ப்ளீஸ் நிறுத்துடா… ரொம்ப ஓவரா பில்ட்-அப் பண்ற…

அவன் சொல்வதை காதில் வாங்காது அவள் போக்கில் பேசிக் கொண்டே இருந்தாள்.

மாயா… எனக்கு ஒரு மாதிரி இருக்குடா… போதுமே!…

ம்ம்கூம்… எனக்கு தோன்றதெல்லாத்தையும் சொல்லி முடிக்காம நிறுத்த மாட்டேன்… எப்போதும் ஒரு குழந்தை போல என்னை பாத்துப்பான்… மை கேர் டேக்கர், மை ஒன் அன்ட் ஒன்லி ட்ரஷர், மை ஸ்வீட் ஹார்ட், மை பெட்டர் ஹால்ஃப், என் ராஜா, என் சமத்து என்று அவள் நிறுத்தாது சொல்லிக் கொண்டிருக்க அவனோ, சாரிடாமா உன்னை நிறுத்த இதை தவிர எனக்கு வேற வழி தெரியல்ல என்று கூறியபடியே எழுந்து விளக்கை அணைத்தவன் அவள் அடுத்த வார்த்தை பேசத் தொடங்கும் முன் தன் இதழ்களால் அவள் இதழ்களை தன்வசப்படுத்தினான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago