மந்திரம் -1
“அண்ணா எனக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் இன்னிக்கு தேன்மிட்டாய் குடுங்கண்ணா ” என்ற அந்த குரலில் சட்டென திரும்பி பார்த்தான் வசி என்னும் வசீகரன் .
பெயருக்கு ஏற்ற வசீகரமான தோற்றம் ..அவன் தோற்றம் மட்டும் வாசிகரமானது அல்ல ..அவன் பேச்சும் தான் , அது அவனோடு பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் .ஒரு தனியார் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜராக அவன் பணியில் சேர்ந்து இரண்டாண்டு ஆகி விட்டது .அளவான குடும்பம் .அன்பான பெற்றோர் , அழகான தங்கை .குறை இல்லாத வாழ்வு. அவனை பொறுத்தவரை .
“மருமகள் வந்தால் தான் எங்கள் குறை தீரும் ” அவனது பெற்றோர் அடிக்கடி புலம்புவது இதை தான் .
அவன் அழகு தங்கை ரதிமலர் கூட அவனிடம் அடிக்கடி நச்சு செய்வது “அண்ணி வேண்டும் ” என்ற புராணத்தை தான் .
அன்று காலையும் உணவருந்தும் போது , அவன் தாய் மணிமேகலை தன் புலம்பலை தொடங்கி விட , சிரித்து அவரை சமாளித்து விட்டு தான் வந்தான் வசி .
அந்த போராட்டத்தில் ஒழுங்கானப்படி உணவு உள்ளே செல்லாததால் , பசிக்கும் வயிற்றை குளிர்விக்க குளிர்பானம் வாங்க அவன் அந்த கடையினுள் புகுந்த போது தான் , இந்த குரல் அவனின் கவனத்தை ஈர்த்தது .
ஒரு அழகான குட்டி தேவதையை எதிர்பார்த்து அந்த குரலுக்கு உரியவளை நோக்கியவனுக்கு அங்கு நின்றுகொண்டிருந்த அந்த வளர்ந்த தேவதையை கண்டு , ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது .
சாதாரணமான நூல் சேலை தான் . அதிகமான ஒப்பனைகள் இல்லாத அழகான நிர்மலமான முகம் . துரு துரு வென்ற கண்களும் கொழுகொழு கன்னமும் அவனுக்கு அவளை குழந்தையாகவே நினைக்க வைத்தது .
அதிலும் அவள் கேட்ட தேன் மிட்டாய் ? வளர்ந்த குழந்தை என்றெண்ணி சிரித்து கொண்டான் வசி. அவன் தனியாக சிரிக்கவும் அவனை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தால் அவள் .
“லூசாப்பா நீ ?” என்பது போன்ற அந்த பார்வையில் , தன்னையும் சுற்றத்தையும் சுதாரித்துக் கொண்டான் வசி .
அதற்குள் அந்த கடைகாரர் ” என்னம்மா ஆச்சு ? எப்போவும் பத்து ரூவாய்க்கு வாங்குவ ?” என்று விசாரிக்க , ” நளினி ஊருக்கு போய்ட்டாணா ..அதுனால இன்னிக்கு எனக்கு மட்டும் தான் ..” என்றவருக்கு பதில் கூறியவள் ,அவர் மடித்து குடுத்த பொட்டணத்தை வாங்கி கொண்டு கிளம்பினாள் .
“யாரிந்த தேன்மிட்டாய்காரி ?” என்று தன்னையும் அறியாமல், மைன்ட் வாய்ஸ் என்றெண்ணி அவன் சத்தமாக முணுமுணுக்க , அவனை குறுகுறுவென நோட்டமிட்டார் , அந்த கடைக்காரர் .
அவரது பார்வையில் சற்றே வெட்கியவன் , பாதி பானத்தை அப்படியே வைத்துவிட்டு ,அங்கிருந்து நடையைக்கட்டினான் .
அன்று முழுவதும் வசியின் எண்ணம் எல்லாம் அவனை வசீகரித்த அந்த தேன் மிட்டாய்க்காரியின் பின்னேயே சுற்றியது .
“யாரவள் ? எங்கிருக்கிறாள் ? அவளுக்கு மணமாகி இருக்குமோ ? ஒரு வேலை யாரையாவது அவள் காதலித்தால் ? எப்படி அவளை கண்டுபிடிப்பது ? நாளையும் அந்த கடைக்கு அவள் வருவாளா ? வருவாள் வருவாள் …அந்த கடைக்காரரிடம் அவள் பேசியதை பார்த்தால் , அவள் அங்கு தினமும் வருவாள் என்று தான் தோன்றுகிறது ….எப்படியும் நாளையும் அவளை கண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ….தினமும் கண்டால் ?” அவனையும் மீறி பெருமூச்சொன்று வெளியேறியது .
அதே நினைவோடவே உறங்கிய வசி , அடுத்த நாளும் அதே நேரத்திற்கு அதே கடையின் முன் டாணென்று ஆஜர் ஆனான் .