நீ வேணும்டா என் செல்லமே—-சிறுகதை.

0
109

கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி என்னை பத்தி சொல்லிறேன்.என் பேரு பிரபாகரன்.மிடில்கிளாஸ் குடும்பம் .எனக்கு ஆர்த்தி,ஷோபனான்னு இரண்டு தங்கச்சி இருக்காங்க .அம்மா கெளரி.அப்பா கங்காதரன்.அவ்ளோ தான் .இனி கதைக்கு போகலாம் .

என்னோட பிரச்சனையே என்னோட படிப்பு தான்னு சொன்னா நம்புவீங்களா?அதுதாங்க உண்மை.நல்லா படிச்சு ஒருத்தன் பஸ்ட் ரேங்க் வாங்கிட்டா அவன எல்லாரும் ஒதுக்கி வைக்குறீங்க?என்னங்க நியாயம் .என்னை விளையாட கூப்புட்டு போக பசங்க வந்தா என் அம்மா “அவன கூப்புடாதீங்கடா அவன் நல்லா படிக்கிற பையன்.கூட்டிட்டு போய் கெடுத்துறாதீங்க”ன்னு விரட்டிவிட்டா அடுத்து எவன் வந்து கூப்புடுவான்.

கிளாஸ்ல இதை விட கொடுமை பண்ணுவாங்க.பஸ்ட் வரிசையில் டீச்சர்ஸ் முன்னாடியே உக்காந்திருக்கணும்.அவுங்கள கவனிக்கணும்,படிக்கணும் அது தான் என் வேலை.மத்தவங்கள பாத்தா பொறாமையா இருக்கும் .எவ்ளோ ஜாலியா இருக்குறாங்க.கடிவாளம் கட்டினது மாதிரி ஒரு வாழ்க்கை எனக்கு.

எனக்கும் பொண்ணுங்கள பாத்து சைட் அடிக்க தோணும் .மெதுவா லுக்கு விடுவேன் .உடனே அந்த பொண்ணு என்கிட்ட வந்து “பிரபா இந்த மேக்ஸ் டவுட் இருக்கு கிளியர் பண்றியான்னு கேட்டா?”கடுப்பு வருமா ?வராதா?சொல்லுங்க .சரி ஸ்கூல் லைப் தான் இப்படி ஆச்சு .காலேஜ் போனா இதை விட கொடுமை .என்னை நடமாடும் சிஸ்டம் மாதிரி ஆக்கிட்டாங்க.படிப்பு ,படிப்பு என்னோட உலகமே அதுவாகி போச்சு .படிச்சு முடிச்சதும் அடுத்த மாசமே வேலை கிடைச்சிருச்சு .தொடரும் இயந்திர வாழ்க்கை.என் மேல யார் பதிச்ச அடையாளமோ தெரியல.அழியவே இல்ல .எனக்குள்ள ஒரு பெரிய ஆசை இருக்கு.அது காதலிக்கிறது.ஆமா எனக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ண கண்டுபுடுச்சு அவ பின்னாடி வெறிதனமா சுத்தி.கதற கதற காதல சொல்லி,போராடி ஜெயிக்கணும் .அவ்ளோ தான்.ஆனா இதுவரையில் எனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைக்கல .எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்.

எங்க அப்பாவுக்கு ஒரு கல்யாணபத்திரிக்கை வந்தது .அதை பாத்த அம்மா”நம்ம கல்யாணத்திற்கு அப்புறம் தஞ்சாவூர் பக்கம் போக்குவரத்தே இல்ல .இப்ப என்னவோ பத்திரிக்கை வந்திருக்கு புதுசா .யாரும் போக வேணாம் .”என்றதும் அப்பா கோபத்துடன் “உங்க வீட்டு ஆளுங்கன்னா ஒரு வாரத்திற்கு முன்னாடியே கிளம்ப சொல்லு.என் சொந்தம்ன்னா மட்டும் வேணாமோ”என்று முறைக்க பெரிய சண்டை வரக்கூடிய சூழ்நிலை உருவானதும் நான் குறுக்கிட்டு”அப்பா எனக்கு கம்பேனில பத்து நாள் லீவு வருது நான் போயிட்டு வர்றேன் “என்றதும் எல்லோரும் ஆச்சர்யமாகி போனார்கள் .இறுதியாக நானே கல்யாணத்திற்கு செல்ல முடிவாகி தஞ்சாவூர் செல்ல தயார் ஆனேன்.என்னை பற்றி அறியாத புது உலகம் காண கிளம்பினேன் .

தஞ்சாவூர் போய் தேடி கண்டுபிடித்து அங்கு போய் சேர்ந்ததும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல .பாக்குற எல்லாத்துக்கும் என்னை அறிமுகப் படுத்தியே ஒரு நாள் முடிஞ்சு போச்சு .மறுநாள் அவுங்களுக்குள் ஒருவனாய் கல்யாண வீட்டில் எல்லா வேலையையும் நானும் கலந்துகிட்டு ஆர்வமாய் செஞ்சேன் .அதோடு நான் வந்த வேலையையும் பாத்தேன் .என்னோட தேவதையை தேடிட்டு இருந்தேன் .

மூணாவது நாள் முடிவில் சுப்பு மாமா வந்து “பிரபா என் இரண்டு பொண்ணுங்களும் நைட் ரயில்ல வர்றாங்க.போய் கூட்டிட்டு வந்திடு.எனக்கு முக்கியமான வேலை இருக்கு”என்றதும் ஆர்வமாய் கிளம்பினேன் .அதில் ஒருத்தியாய் என்னவள் இருப்பாளோ?என்று.

ரயில் வந்தது .காத்திருந்தேன். .நிறைய பொண்ணுங்க வர்றாங்க .யாருன்னு தான் தெரியல.அப்போ இரண்டு பொண்ணுங்க என்கிட்ட வந்து “ஹலோ நீங்க தான பிரபாகரன் “என்றதும் நான் வேகமாய் ஆம் என்று தலையாட்ட ,அவர்களோடு கிளம்பினேன் .

சுப்பு மாமா பொண்ணுங்க இரண்டு பேரும் அழகு தான்.ஆனா எனக்கு புடுச்சது இரண்டாவது பொண்ணு திவ்யா தான்ங்க .பெருசா காரணம் சொல்ல தெரியல .அவள புடிச்சிருக்கு அவ்ளோ தான்.இனி அவள பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன் .

மறுநாள் செம ஜாலியா கிளம்புனேன்.என்னோட பார்வை திவ்யாகிட்ட இருந்து விலகவேயில்லை.அவளோட அசைவுகள் கூட கவிதை இருந்துச்சு .புது அனுபவம் எனக்கு.நிறைய தடுமாற்றம்.நிறைய பயம் .அவளோட நேரடி பார்வைகளுக்கு பயந்து ஒதுங்கினேன்.நாலாவது நாள் புது தைரியத்தோட கிளம்பினேன் .அவள நெருங்க முயற்சி பண்ணினேன்.அவ சாப்பிடும் போது பக்கத்துல எப்படியாவது இடம் புடிச்சி உக்காந்து பேச ஆரம்பிச்சேன் .என்ன பேசறதுன்னு தெரியாம நிறைய சொதப்பிட்டேன்.எனக்கு உண்மையில் ஒரு பொண்ணுகிட்ட பழக தெரியல .அடுத்தடுத்து தோத்து போனேன் .

ஐந்தாவது நாள் கல்யாணத்திற்கு முதல் நாள் என் குடும்பமே தஞ்சாவூர் வந்தது .நானே எதிர்பார்க்கல.என்னை பத்தி பெருமை பேசி என்னை பத்தி எல்லோருக்கும் சொல்லிட்டாங்க .இந்த அஞ்சு நாள் நான் எனக்கு புடுச்ச மாதிரி இருந்தேன் .அதுகப்புறம் என்கிட்ட யாரும் வேலை சொல்லலை .சரியா பேசுறதும் இல்லை.

மறுபடியும் தனியா நின்னேன் .கல்யாணம் முடிஞ்சது .நான் கிளம்ப தயார் ஆனேன் அங்க இருக்க புடிக்கல .அப்போ எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பும் போது திவ்யாவ பாத்தேன் .மனசு எதையோ சொல்ல தயங்கி நின்னத உணர்ந்தேன் .அஞ்சு நாள்ல வளர்ந்த ஒரு காதல எப்படி தைரியமா சொல்றது ?அவள தாண்டி போகும்போது அவ “என்கிட்ட சொல்ல எதுவுமே இல்லையா ?எதாவது இருக்கும்னு நினைச்சேன் “என்றதும் எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு.நான் எதிர்பார்க்கல .சுயநினைவுக்கு திரும்பவே நேரம் ஆகிருச்சு.அவகிட்ட திரும்பி போய் “என்னை பிடிச்சிருக்கா?”என்றதும் “ஆமா “என்று தலையாட்டிட்டு ஓடிட்டா.எதையோ பெருசா சாதிச்சா மாதிரி ஒரு உணர்வு.இரண்டு ஆஸ்கார் விருதுகளை கையில் வாங்கியது போன்ற உணர்வு .

ஊருக்கு கிளம்புற ஐடியாவ தூக்கி போட்டுட்டு சின்சியரா லவ் பண்ண ஆரம்பிச்சேன் .இத்தனை சொந்தங்கள் சுத்தி இருந்தாலும் நாங்க இரண்டு பேர் மட்டும் தனியா இருக்குற மாதிரி ஒரு உணர்வு .மனசு பூராவும் காதல் நிறைஞ்சு வழியுது.காதல் இவ்ளோ சீக்கிரமா எனக்கு கிடச்சது நினைச்சு சந்தோசமாய் இருந்தேன் .

ஏழாவது நாள் ராத்திரி எல்லா சொந்தமும் மொத்தமா உக்காந்து பேசிட்டு இருக்கும் போது மயில்சாமி தாத்தா பேச ஆரம்பிச்சார் “நாளைக்கு விருந்து முடிஞ்சா எல்லோரும் கிளம்பி போயிருவோம் .அதுக்கு முன்னாடி இன்னோரு நல்ல விஷயத்த பேசி முடிச்சிரலாம் .நம்ம கங்காதரனுக்கு நம்ம உறவு விட்டு போயிற கூடாதுன்னு ஆசை.அதனால நம்ம சுப்பு மகள தன்னோட மகனுக்கு கட்டி தர கேக்குறான்”என்றதும் எனக்கு வானத்துல பறக்குற பீலிங்.என் அப்பா வாழ்க்கையில முதல் முறையா என் மனச புரிஞ்சு நடந்திருக்கார்.நான் திவ்யாவ பாத்தேன் .வெட்கத்தில் சிவந்து போயிருந்தா.அப்போ சுப்பு மாமா “எனக்கும் விருப்பம் தான்.நல்லா படிச்சு நல்ல வேலையில் இருக்காப்ல.என் இரண்டாவது பொண்ணு வயசு சரியா வரும் ஆனா கழுதை +2 பேயில் ஆயி இன்னும் பாஸ் கூட ஆகல.நல்ல படிச்ச மாப்பிள்ளை அதனால என் முதல் பொண்ணு காவ்யாவ வேணா முடிக்கலாம்.ஒண்ணு,இரண்டு வயசு தான் வித்தியாசம் வரும் .அவளும் படிச்சவ.பேங்க் வேல.சரியா வரும் “என்றதும் திவ்யாவ பாத்தேன் .எந்திரிச்சு உள்ள போயிட்டா .

இது என்னடா ட்விஸ்ட் .அவ பேயில் ஆனதும் நான் பாஸ் ஆனதும் ஒரு குத்தமா?எனக்கு அவள தான் பிடிச்சிருக்கு .ஆனா இத்தனை பேர் முன்னாடி சொல்ல தைரியம் வரல.நைட் எல்லாரும் தூங்கினதும் அவள மாடிக்கு வர சொன்னேன் .அவ வந்த உடன் என்னை கட்டிபுடிச்சுகிட்டு”நான் எப்படியாவது +2 பாஸ் பண்ணிருவேன்.என்னை விட்டுட்டு என் அக்காவ கட்டிகிட்ட உங்க இரண்டு பேரையும் சோத்துல விஷம் வச்சு கொன்னுட்டு நானும் செத்துருவேன்”என்றதும் அவள இறுக்கமாக கட்டி புடிச்சுகிட்டு”எனக்கு இந்த திவ்யா தான் வேணும்.வேற எந்த படிச்சவளும் வேணாம். “என்றதும் வடிந்த கண்ணீரை என் மார்பில் துடைத்தாள்.

நான் முதல் முறையா தைரியமா பேசி தான் ஆகணும் .இல்லைன்னா திவ்யாவ இழக்கணும்.என் வாழ்க்கை இப்ப என் வாயில் தான் இருக்கு.தைரியமா போய் என் அப்பா முன்னாடி நின்னேன் .அப்போது அவர் “ஸாரி பிரபா .உன் முடிவையும் காவ்யா முடிவையும் கேட்டிருக்கணும்.இப்ப தான் சுப்பு வந்து காவ்யா வேற பையன லவ் பண்றான்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுட்டு போறான் .அப்பா தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்”என்றதும் மனசுக்குள்ள ஒரு குத்து டான்ஸ் ஆடிட்டு இருந்தேன் .அப்போது அம்மா “அப்படி எல்லாம் விட முடியாது.சபையில் வச்சு பேசியாச்சு.பெரியவ இல்லாட்டி போனா என்ன?சின்னவ இருக்கால்ல?கொடுக்க சொல்லுங்க .இல்லைன்னா நான் இந்த இடத்த விட்டு நகர மாட்டேன் .இது என் கெளரவபிரச்சினை”என்றதும் கடவுளே இப்ப தான் என் மேல கருணையே வந்துச்சா?என்றபடி அமைதியாய் அதே சமயம் ஆர்பரித்தபடி இருந்தேன் .

அப்புறம் என்னங்க என்ன மூணு மாசத்துல திவ்யாவுக்கும் எனக்கும் கல்யாணம் .நம்ம கதையில ஏகப்பட்ட ட்விஸ்ட் ஆனா எல்லாமே எனக்கு நல்லது தான் செஞ்சிருக்கு.பத்து வருஷத்து போராட்டத்தை பத்து நாள்ல அனுபவிச்சவன் நான் தான்.ஆனா ஐ எம் சோ ஹாப்பி.

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here