Kaisa Lagta Hain
லெஸ்லி லிவிஸ் என்னும் இசைக்கலைஞர் ஹரிஹரனுடன் இணைந்து கலோனியல் கஸின்ஸ் என்ற பெயரில் ஹிந்தி பாப் இசை ஆல்பங்கள் வெளியிட்டதன் மூலம் எனக்கு அறிமுகமானார். முதல் கஸின்ஸ் ஆல்பம் வந்த போதே அவரின் மற்றொரு தனி ஆல்பத்தின் பாடல்களும் M TV க்களில் ஒளிக்க (ஒலிக்க) ஆரம்பித்தன.
ஆஷா போஸ்லே அம்மாவுடன் இணைந்து “ராகுல் & ஐ” (இது வேற ராகுல்!) என்ற தலைப்பில் ஒரு ஆல்பம் வெளியிட்டார்.
ஜானம் ஸம் ஜா கரோ… (Jaanam samja karo) பாடல் டிவிக்களில் ஹிட் அடித்தது. ஆஷா அம்மா பாடிய சூப்பர் ஹிட் பாடல்களான ஓ மேரே சோனா ரே, பியா தூ அப் தோ ஆஜா போன்ற பாடல்களையும் சிறப்பான முறையில் ரீமிக்ஸ் வடிவில் தந்திருக்கிறார்.
பாரம்பரிய சங்கீதம், வெஸ்டர்ன் கிளாஸிக் போன்றவற்றை முறையாகப் பயின்றவர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை பி.எல்.ராஜ் சினிமா டான்ஸ் மாஸ்டர்.
புகழ் பெற்ற இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்களான கல்யாண்ஜி – ஆனந்த்ஜி, லக்ஷ்மிகாந்த் – பியாரிலால், ஆர். டி. பர்மன் போன்றோர்களிடம் கிதார் வாசிப்பவராக இருந்திருக்கிறார்.
மேலும் விளம்பரங்களுக்கு சிறப்பாக இசையமைத்து தனி இடம் பிடித்த லூயிஸ் பேங்க்ஸ் அவர்களின் குழுவிலும் கிதார் இசைக் கலைஞராகப் பணி புரிந்திருக்கிறார்.
இவரும் விளம்பரங்களுக்கு இசை அமைப்பதிலிருந்து தான் தன் இசைப் பயணத்தை துவக்கினார்.
இந்தியப் பால்வளத் துறைக்காக இவர் இசையமைத்த பியோ ஃபுல் ஆப் கிளாஸ் தூத் விளம்பரப் பாடல் இவருக்கு பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. அத்தோடு IAAFA அமைப்பின் விருதையும் அவ்விளம்பர இசை பெற்றது.
சந்தூர் சோப்
தம்ஸ் அப் டேஸ்ட் தி தண்டர்
மேங்கோ ஃப்ரூட்டி ஃப்ரெஷ் ன் ஜூஸி
இது போன்ற விளம்பரங்களுக்கான இசை இவரைப் பிரபலமாக்கியது. இன்னொரு முக்கியமான சங்கதி. இவர் “மோதி விளையாடு, சிக்கு புக்கு” போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இவரிடம் ஒரு விசேஷமான இசைத்திறன், இசை சார்ந்த ரசனை இருப்பதாக நான் ஒரு விஷயத்தை அவதானித்து என் அளவில் புரிந்து கொண்டேன். அது உன்னதமான மெலடிக்காக மெனக்கெடுவது. அது தேர்ந்த சங்கீதப்பிரயாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
ரீமிக்ஸ் – ஒரு பழைய பாடலை எடுத்துக் கொண்டு ரிதம் பேட், ட்ரம்ஸ் இசையுடன் கொஞ்சம் கூடுதல் பேஸ் கலந்து, இடை இடையே வேகமாக ரைம்ஸ் சொல்வது போல் ஆங்கில வரிகளை ராப் பாணியில் உரக்கச் சொல்லி ஒரு பாடலை முடிப்பது என்றொரு பொதுவான பார்வை உண்டு ஆனால் லெஸ்லி அதில் மாறுபட்டவர். அவருக்கு மெலடி தான் முக்கியம். என்னுள் பெரிய அளவில் ரசவாதத்தைத் தோற்றுவித்த அவரின் இசை சாகரத்தில் இரு துளிகளை (பாடல்களை) மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
Paree Hoon Mein…
சுனிதா ராவ் என்ற ஹிந்தி பாப் பின்னணிப் பாடகி குறித்து ஏதாவது எழுதும் போதெல்லாம் இந்தப் பாடல் பற்றி பல முறை குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த “நதியசைந்த நாட்கள்” பகுதியிலும் சுனிதா அவர்களின் அத்தியாயத்தில் பிரத்தியேகமாக குறிப்பிடலாம் என்று இருக்க முடியவில்லை. காரணம் மூன்று வருடங்களுக்கு முன்பாக நான் கேள்விப்பட்ட விஷயமே!
இந்தப் பாடலுக்கு இசையமைத்தது லெஸ்லி என்ற தகவல் என்னை அதிர வைத்தது. பதின் பருவத்தில் என்னைப் பித்து பிடிக்க வைத்த பாடல்களில் இது முக்கியமானது. உயர்தரமான மெலடி, துல்லியமான இசைக் கோர்ப்பு, சீரான தாள கட்டு, சிறப்பான பாடல் வரிகள், பொருத்தமான ஜீவன் நிரம்பிய காட்சியமைப்பு என ஒரு அட்டகாசமான கலவையை உள்ளடக்கிய பாடல் இது.
சுனிதா ராவ் அவர்களின் குரல் மூலம் பரிச்சயமான பாடலுக்கு இசையும் நம் ஆள் என்று சுமார் இருபது வருடங்கள் கழித்து தகவல் அறிந்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
பூபாள ராக சாயலில் துவங்கும் பாடல் இறுதி வரை ஒரே தாள லயத்துடன் அற்புதமாக பயணித்தபடி செல்லும். இப்பாடல் என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை அசைபோட வைத்தாலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மறக்க முடியாமல் செய்தது.
திருச்சியில் வசிக்கும் போது எங்கள் வீட்டருகே ஒரு ஈழத் தமிழர் குடும்பம் வசித்து வந்தது. ஓரளவு வசதி உள்ள குடும்பமாக இருந்தாலும் அக்குடும்பத் தலைவர் ஒரு விஷயத்தில் அநியாயத்திற்குப் பிடிவாதமாக இருந்தார். அது அவர் மகளின் படிப்பு. “பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பின் மேற் படிப்பு கிடையாது. ஓரிரு வருடங்களுக்கு தாயுடன் இணைந்து வீட்டு வேலைகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் திருமணம்” என்பதே அவரின் முடிவு. இது என் போன்றவர்களுக்கு “பல ரூபத்தில்” வருத்தத்தைத் தந்தது.
அந்தப் பெண்ணும் சளைத்தவர் இல்லை. தொடர்ந்து தந்தையுடன் தர்க்கம் செய்தார். உண்ணாவிரதம் மேற்கொண்டார். பலவிதமான போராட்டங்களை வீட்டில் முன்னெடுத்தார். இறுதியில் வென்றார். ஆயிரத்தி சொச்சம் மதிப்பெண்களை ப்ளஸ் டூவில் பெற்றவர் (கணக்கில் இருநூறுக்கு இருநூறு) எஸ்.ஆர்.ஸி கல்லூரியில் பி.காம் படிக்க சேர்ந்தார்.
அவர் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போதெல்லாம் “paree hoon mein” பாடலை ஏனோ முணுமுணுப்பேன். பி.காம் முடித்து இரு வருடங்கள் கழித்து திருமணமாகி அயல்நாட்டிற்கு சென்றுவிட்டார். தற்போது அவர் இங்கிலாந்தில் வசிப்பதாக விவரம் அறிந்தேன். அங்கு இந்தியா மற்றும் குறிப்பாக தமிழகத்தில் புழங்கும் மளிகைப் பொருட்களை (சுண்டைக்காய் வத்தல், காலா நமக் இப்படி) சகல விதமான மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் தமக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றை நிர்வகித்து வருகிறாராம்.
“Paree Hoon Mein…” பாடலை உயர்ந்த ஒலித்தரத்தில் கேட்டு சுகிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் :
https://www.youtube.com/watch?v=wzB32ZScPS0
Bheegi Bheegi…
கிஷோர் தா அவர்களின் வெறித்தனமான ரசிகனாகிய நான் இந்தப் பாடலை அறியாதவன் என்று சொன்னால் தான் நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும். அஜ்னபி என்றொரு ஹிந்திப்படம். ராஜேஷ் கன்னா, ஜீனத் அமன் நடித்து, கிஷோர் தா பாடி, ஆர்.டி பர்மன் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடலான பீகி பீகி… பலரின் விருப்பமான பாடல்களில் ஒன்று.
அருமையான ஆர்கெஸ்டிரேஷன். லதா மங்கேஷ்கர் மற்றும் கிஷோர் தா இருவரும் போட்டி போட்டு பாடி இருப்பார்கள். இந்தப் பாடலை லெஸ்லி ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.
நாடி நரம்புகள், திசுக்கள், ஹார்மோன்கள், ரத்தம், வியர்வை, சிந்தனை என சகலத்திலும் உச்ச ரசனை, மெலடி என இரண்டும் இருந்தால் தான் இப்படியொரு ரீமிக்ஸ் பாடலைத் தர முடியும்.
ரீமிக்ஸ் – ஒரு பழைய பாடலை எடுத்துக் கொண்டு ரிதம், பேட், ட்ரம்ஸ், கொஞ்சம் கூடுதல் பேஸ் கலந்து, இடை இடையே வேகமாக ரைம்ஸ் சொல்வது போல் ஆங்கிலப் பாடல் வரிகளை சேர்த்து உரக்கச் சொல்லி ஒரு பாடலை முடிப்பது என்றொரு பொதுவான பார்வை உண்டு. ஆனால் லெஸ்லி அதில் மாறுபட்டவர். அவருக்கு மெலடி தான் முக்கியம்.
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் எழுதிய பத்தி… மாறுபட்டவர் என்பதை இப்பாடலில் லெஸ்லி நிரூபித்திருப்பார். ஒரிஜினல் வெர்ஷனை விட ரீமிக்ஸ் வடிவம் மனதில் பதிவது போல் இசை ஜாலத்தை காட்டி இருப்பார். மெலடியின் உச்சம் தொடும் வண்ணம் வாத்திய இசைக்கருவிகளை அடக்கி இசைத்திருப்பார்.
ஹை வே சாலைகளில் ஒரு மாநிலத்திலிருந்து பிறிதொரு மாநிலத்தை அடைய வேகமாக பிரயாணித்துக் கொண்டிருக்கையில் இப்பாடலைக் கேளுங்கள். நமக்கே நமக்காக யாருக்குமே பரிச்சயம் ஆகாத ஒரு முக்கியமான பிரபஞ்ச ரகசியத்தை நமக்குப் பிடித்தமானவர் நம்மிடையே பகிர்ந்து கொள்ளும் போது நமக்கு கிடைக்கும் பரவச உணர்வினை பாடலை கேட்கும் போது பெறலாம்.
ஆர்.டி பர்மன் இசையமைத்த ஒரிஜினல் பாடலை விட ரீமிக்ஸ் வடிவத்தை இவன் ஆஹா ஓஹோ என புகழ்கிறானே என்று யோசிப்பவர்களுக்காகவே இரண்டு பாடல்களின் கொழுவியையும் உங்கள் செவிப் பார்வைக்கு முன் வைக்கிறேன். பரவசம் அடைந்த பின்பு நிதானமாக உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.
https://www.youtube.com/watch?v=7IsvJVlFyGI
– ஆர்.டி. பர்மன்
முக்கிய குறிப்பு : ராகுல் & ஐ ஆல்பத்தில் உள்ள பியா து… பாடலை குறிப்பிட்டே ஆக வேண்டும். திரைப்படத்தில் பாடலாக வந்த போதும் ஆஷாம்மா அவர்களே பாடினார். வேவரிங் வாய்ஸ் மாடுலேஷன் என்று சொல்வார்களே அதை தன் குரலில் வடிவாகக் கொண்டுவந்திருப்பார்.
மீண்டும் ரீமிக்ஸ் வெர்ஷனுக்காக அவரே பாடினார். அசத்தலான மாடுலேஷன். இன்னும் சற்று மாறுபட்டு பல்வேறு ஜாலங்களை எல்லாம் இணைத்து பாடலை வேறொரு தளத்திற்கு கொண்டு போயிருப்பார். அப் தோ ஆஜா… இந்த ஒரு வரிக்கு அவர் தந்திருக்கும் வர்ணங்களை கேளுங்கள்.
திரைப்படப் பாடலில் மோனிகா என்ற வரியை ஆர்.டி பர்மன் பாட ரீமிக்ஸில் லெஸ்லி பாடியிருப்பார்.
மிக மிக முக்கியமான விஷயம். இந்த வீடியோ ஆல்பம் வெளிவரும் காலகட்டத்தில் அந்த நடிகை ஹிந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளைய வந்தார். வீடியோ ஆல்பம் தானே என்றெல்லாம் யோசிக்காமல் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடித்துத் தந்தார். எனக்குப் பிடித்தமானவர்கள் பிடித்தமான சிறப்பான விஷயங்களை செய்தால் நான் கொண்டாடித் தீர்ப்பவன். எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர் இந்த ஆல்பத்தில் நடித்ததற்கு சொன்ன காரணத்தை கேட்ட பின்பு கொண்டாடாமல் இருப்பேனா?
அப்படி என்ன சொன்னார்?
“ஆஷா ஜி பாட அந்த பாடலுக்கு வாயசைப்பது போல் நடிக்க நான் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்”
சொன்ன அந்த நடிகை : சோனாலி பிந்த்ரே
பாடலைக் கண்டு கேட்டு உற்சாகத்தில் துள்ள இக்கொழுவியை சொடுக்குங்கள் :
https://www.youtube.com/watch?v=35fT1PlqBPs
(தொடரும்)
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…