Mubarakaan
இந்தியாவில் இருக்கும் பாப் இசை, இந்தியாவில் பரிச்சயமான ஹிந்தி பாப் இசை… பிரத்தியேகமாக இக்களத்திற்கென்று சில கம்போஸர்களும், பின்னணிப் பாடகர்களும் இருக்கிறார்களா? சிலர் தவிர்த்து பெரும்பாலானோர் திரைப்பட இசை என்னும் களத்தில் இல்லையா? திரைப்படத்திற்கு இசையமைப்பவர்கள், திரைப்படப் பாடல்களுக்கு பின்னணி பாடுபவர்கள் பாப்பில் ஆளுமை செலுத்தவில்லையா? எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டு. பாப்பில் அறிமுகமாகி பிரபலமாகி பின்னர் திரை இசைக்கு போனவர்கள் நிறைய. திரைப்படங்களுக்கு இசையமைத்து தேசம் முழுதும் புகழ் பெற்று பாப் இசையிலும் முத்திரை பதித்த மேதைகள் உண்டு. முத்திரை பதித்த மேதைகளில் முக்கியமானவர் நம் ஏ.ஆர்.ரஹ்மான்…
தமிழ் திரைப்பட இசையை தேசம் முழுதும் கொண்டு சென்றவர். ஹிந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்து தன் இசை எல்லையை விரிவுபடுத்தினார். அடுத்து ஆல்பங்களுக்கு இசையமைத்து அந்த ஆல்பங்களை உலகம் முழுதும் கொண்டாட வைத்து இந்திய பாப் இசையை சர்வதேசம் அறிய செய்தார். ரஹ்மானின் சாதனை அசாதாரணமானது. இதற்கான காரணம் என்ன? ரஹ்மானின் இசையை ஆழமாக அவதானித்தால் விளங்கும்.
தமிழ்த் திரைப்பட இசை எனபது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இயங்கி வந்தது. அதைத் தாண்டி பரீட்சார்த்த முறையிலான இசை இங்கு உருவாகவில்லை. ரஹ்மானுக்கு முன்பிருந்த தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் தமிழ் தவிர்த்து ஹிந்தி உட்பட பல மொழிப் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவர்களின் இசைக்களம் குறுகியே இருந்தது. தமிழ்த் திரைப்படங்களுக்கென உருவாக்கும் ஒலிக்கலவையையே பிற மொழித் திரைப்படங்களுக்கும் பயன்படுத்தினார்கள். மேற்கத்திய பாணியின் தாக்கம் ரஹ்மான் இசையில் அதிகம் என்று ஒரு பொதுப் பார்வை இருந்தாலும் ரஹ்மான் மிகச் சாதாரணமாக அந்த எல்லையைக் கடந்து போனார். “தால்” இந்திப் படத்திற்கு பிறகு ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஹிந்திப்படங்களின் இசை மேற்கத்திய பாணி இசை என்று விமர்சித்தவர்களுக்கு தகுந்த பதிலடியாக அமைந்தது.
தமிழ் திரைப்படப் பாடல்களே இசை சார்ந்த செவிக்குணவு என்று புசிக்கும் தமிழர்கள் எத்தனை பேருக்கு நம் பாரம்பரிய கர்நாடக சங்கீதம், நாட்டுப்புற சங்கீதம் போல் நம் தேசத்தின் மற்ற பிற மாநிலங்களின் பாரம்பரிய இசை பற்றி தெரியும்? கேட்டு ரசிக்கும் சந்தர்ப்பம் கூட சாட்டிலைட் டிவி சேனல்களின் படையெடுப்புக்கு முன்பு வரை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. ரஹ்மான் இந்த வெற்றிடத்தை சரியாகப் பயன்படுத்தினார்.
ஹிந்துஸ்தானி, சுஃபி, கர்நாடக சங்கீதம், கவ்வாலி, கஜல், பாங்க்ரா, ராஜஸ்தானி ஃபோக்… இப்படி அவர் கற்றறிந்த பல உன்னத இசை வடிவங்களைத் தன் திரை இசைப் பாடல்களில் புகுத்தினார். ரசிகர்களை செவிக்கு அதைப் பழக்கப்படுத்தி விரும்பி உண்ண வைத்தார். ரஹ்மான் இந்தப் உத்தியை திரைப்ப இசைக்கு மட்டும் பயன்படுத்தவில்லை. பாப் இசையிலும் பயன்படுத்தி உலகெங்கும் கொண்டு போய் சேர்த்தார்.
ரஹ்மான்… பாப் இசை… இந்த தலைப்பில் இன்னும் சில அத்தியாயங்களை நாம் காண இருக்கிறோம். அதில் முதல் கட்டமாக “பாம்பே ட்ரீம்ஸ் (Bombay Dreams) ஆல்பத்தைப் பார்ப்போம்.
2002 ஆம் ஆண்டு இந்தத் தொகுப்பு வெளிவந்தது, இதை ஆல்பம் என்று கூட சொல்ல முடியாது. ரஹ்மான். தான் இசையமைத்த திரைப்படப் பாடல்கள் சிலவற்றை ஆர்கஸ்ட்ரேஷனில் சிற் சில மாற்றங்கள் செய்ததே பாம்பே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேடை நாடக வடிவில் ஒரு தீமுடன் அரங்கேறியது “பாம்பே ட்ரீம்ஸ்”. அதில் இந்தப் பாடல்களும் இடம் பெற்றன. தனியாக ஆடியோவும் வெளியானது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஒரு இந்திய இசையமைப்பாளரின் திரைப்படம் அல்லாத இசைத்தொகுப்பு என்னும் அடிப்படையில் வந்தே மாதரம் ஆல்பத்திற்கு அடுத்தபடியாக அதிகமான ஆடியோ ஸிடிக்கள் விற்பனையான ஆல்பம் என்ற பெயரை “பாம்பே ட்ரீம்ஸ்” பெற்றது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆல்பங்கள் இரண்டும் ரஹ்மானுடயது… என்ன ஒரு இசை ஆளுமை…
ஆல்பம் மட்டுமல்ல மேடையில் திரையிடப்பட்ட “பாம்பே ட்ரீம்ஸ்”க்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு. டிக்கெட் விற்பனையிலும் பல சாதனைகள் நிகழ்ந்தேறின.
இந்தியாவிலும் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் வரவேற்பை பெற்றாலும் ரஹ்மானின் பிற இசைத் தொகுப்புகளுக்கு கிடைத்த வெளிச்சம் ஏனோ இதற்கு கிடைக்கவில்லை. தமிழகத்தின் செவிகளை பெரிய அளவில் எட்டவே இல்லை.
பல பாடல்கள் இருந்தாலும் இரண்டு பாடல்கள் என்னுடைய ப்ரெயின் ஹார்ட் டிஸ்க் உள்ளே லோக்கல் டிஸ்க் ஏஆர்ஆர் இல் நோஸ்டால்ஜிக் ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கின்றன. அதை க்ளிக் செய்து பார்ப்போம்.
சலாம் பாம்பே… (Salaam Bombay…)
இந்த ஆல்பம் வெளிவந்த போது நான் தஞ்சையில் உள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு மேன்ஷனில் தங்கி மெடிக்கல் ரெப்பாகப் பணி புரிந்து வந்தேன். திருச்சியில் இருக்கும் போது விரல் நுனியில் இசை, பாடல்கள் தொடர்பான விவரங்களை வைத்து அப்டேட்டட் ஆளாக வளைய வந்தேன். தஞ்சையில் பணி, இரு வாரத்திற்கு ஒரு முறை வார இறுதியில் திருச்சி வீட்டிற்கு வருவது என என் டைம் டேபிள் மாறிப் போனதால் இசை பாடல்கள் என்ற தொகுதியில் பின்தங்கத் துவங்கினேன். வாக்குகள் வித்தியாசம் கூடிக் கொண்டே போனது. திருச்சி போல் ஹிந்தி பாப், இங்கிலீஷ் பாப் பாடல்களை கேஸட்டில் பதிவேற்றம் செய்யும் கடை தஞ்சையில் அப்போது இருந்ததா என்பதையும் நான் அறிந்து கொள்ளவில்லை.
திருச்சி வீட்டுக்குப் போகாத ஒரு சனிக்கிழமை இரவு போஜனத்தை முடித்து பத்து மணியளவில் வழக்கமாக நண்பர்களை சந்திக்கும் கடைக்கு சென்றேன். தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து சாலையை க்ராஸ் செய்தால் ஆர்ஆர் நகர் செல்லும் நகரப் பேருந்துகள் சாலையில் புலப்படும். அந்த சாலைக்குள் நுழையாது அப்படியே இடது புறமாக நடந்தால் எங்களது வழக்கமான கொஞ்சம் தேநீர், கொஞ்சம் இளைப்பாறுதல் என்ற கடை. சாலைக்கு எதிர்ப்புறம் சற்று தொலைவில் சரபோஜி கல்லூரி. எங்கள் கடைக்கு பக்கத்தில் காலி மனை இருந்தது, அதை மைதானமாக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரம் கிரிக்கெட் விளையாட (ஆஃப் சைட் மட்டும் ரன்) உபயோகப்படுத்தினோம். அந்த மைதானத்தின் பின்னால் இரண்டாவது தெருவில் என் நண்பன் ஒருவனின் வீடு. அவன் ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மருந்து கம்பெனியில் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வந்தான்.
அவன் குடும்பம் குடியிருந்த வீட்டிற்கு அருகே மற்றொரு வீடு. அந்த வீடும் அவர்களுடையதே! அவ்வீட்டில் மூன்று மெடிக்கல் ரெப் நண்பர்களை வாடகைக்கு குடிவைத்திருந்தான். அனைவருக்கும் பூர்வீகம் வேறு. திருச்சி தாண்டி தென் மாவட்டங்களை சொந்த ஊராகக் கொண்டவர்கள். அவர்களுக்கு புதிய பேருந்து நிலையம் அருகே தங்குமிடம் என்பதில் சந்தோஷம். விடுமுறை நாட்களில் சீட்டுக் கச்சேரி, பாட்டு, கூத்து என்று அந்த வீடு எங்களால் களைகட்டும். “ஆஸ்” சீட்டு விளையாட்டில் கிங் என்றொரு பட்டத்தை அப்போது நான் பெற்றிருந்தேன்.
ஒரு சனி இரவு நண்பனின் ரெப்கள் குடியிருக்கும் வீட்டுக்கு போன போது அங்கு கச்சேரி ஏற்கனவே துவங்கி இருந்தது. பிலிப்ஸ் பவர் ஹவுஸில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பிக்க ஹம்மிங் தொடக்கம் என் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலை அப்போது தான் நான் முதல் முதலாக கேட்கிறேன். கேட்க கேட்க பரவசம். பாடல் யார் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் என்பதை ஒலித்தரத்திலும், இசைக் கோர்ப்பு ஜாலத்திலும் எளிதாக அறிய முடிந்தது. பாடலுக்கு இடையே எதுவும் பேசவில்லை. ஐந்து பேர் சீட்டாடிக் கொண்டிருக்க என் கவனம் பாடலில் நிலைபெற்றிருந்தது. பாடல் முடியும் போது விளக்குகள் அணைந்து போயின. பவர் கட். மேற்கொண்டு பாடல்களைக் கேட்க முடியவில்லை.
ச்சை என்றபடி அனைவரும் எழும்ப நான் நண்பனிடம் பேச ஆரம்பித்தேன்.
“ரஹ்மான் மியூஸிக்ன்னு தெரியுது, இது என்ன பாட்டு மாப்ள?”
“ஒரிஜினல் கேஸட் கவர் பக்கத்துல வெச்சுருந்தேனே பாக்கலியா?”
“இல்லியே”
“ரஹ்மான் மியூஸிக் தான் ஆனா வந்தே மாதரம் மாதிரி ஆல்பம்”
“ஆல்பம் பேரு?”
“பாம்பே ட்ரீம்ஸ்”
“சலாம் பாம்பேன்னு ஆரம்பிச்ச இந்தப் பாட்டு அட்டகாசமா இருக்கு, எக்ஸலன்ட் பேஸ், சுண்டி இழுக்கற ரிதம், பக்கா பீட், ஹை க்ளாரிட்டி, எப்படி இதை மிஸ் பண்ணேன்? வீட்டை விட்டு வெளிய இருக்கேனா அதான்… முன்ன மாதிரி…”
“இப்போ தெரிஞ்சு போச்சுல்ல, திருச்சி போன உடனே கேஸட் வாங்கு, ப்ராப்ளம் சால்வ்ட், இல்லை நான் கேஸட் தரேன். கேட்டுட்டு தா”
“சரி”
அனைவரும் மொட்டை மாடிக்கு சென்றோம். ஒரு மணி நேரம் பெசிக்கொண்டிருந்தும் கரண்ட் வரவில்லை, பைபாஸ் சாலையில் இருக்கும் நண்பன் ஜெகன் வீட்டிற்கு போக முடிவெடுத்தோம். ஒருவன் வர மறுத்து மொட்டை மாடியில் செட்டில் ஆக, இரண்டு டூ வீலரில் நால்வர் புறப்பட்டோம். என் மனதில் முழுக்க முழுக்க “பாம்பே ட்ரீம்ஸ்”
மறுநாள் பதினோரு மணியளவில் நண்பன் வீட்டிற்கு சென்று “சலாம் பாம்பே” பாடலை ஆசை தீர பல முறை கேட்ட பின்பே மனம் இயல்பானது.
இப்பாடலுக்கான கொழுவி : https://www.youtube.com/watch?v=sfmh-yuooUg
முபாரக்கான்… (Mubarakaan…)
ஞாயிறு காலை பதினோரு மணிக்கு நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது தான் அவன் சயனத்திலிருந்து விலகி பல் துலக்கும் முஸ்தீபுகளில் இறங்கி இருந்தான். என்னைப் பார்த்தவுடனேயே நான் வந்த நோக்கம் அவனுக்கு விளங்கிவிட்டது. பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? என்னைப் பார்த்து பேசத் துவங்கினான்.
“வா டா டிஃபன் ஆச்சா?”
“ஆச்சு”
“நான் இப்போ தான் எழுந்தேன், பல் விளக்கி முகம் கழுவி காபி குடிச்சுட்டு வரேன், பசி இல்லை, மதியம் நம்ம வீட்டுலயே சாப்பிடு”
“சண்டே உங்க வீட்டுலயா?”
“பயப்படாத, இன்னிக்கு சஷ்டி சைவம் தான், அவசியம் சாப்பிட்டே ஆகணும் ஸீன் போடாத”
“சரி மாப்ள”
“நீ எதுக்கு வந்தன்னு தெரியும், என் ரூமுக்கு போ, துக்ளக் புக் அடுக்கி வெச்சுருக்கற ஷெல்ஃப் பக்கத்துல கேஸட் நிறைய இருக்கும். அதுல நீ தேடி வந்தது இருக்கு, போட்டு கேளு”
“டேய் உனக்கும் காபி போடறேன்” – அம்மா
“வா டா நைட் நீயும் இவனோட தான் இருந்த அப்புறம் உன் ரூமுக்கு போன, இப்போ குளிச்சு மைனர் மாதிரி வந்துட்ட நான் பெத்ததுக்கு இப்போ தான் விடியுது, போ அவன் தான் சொல்லிட்டானே கச்சேரி கேளு” – அப்பா
நான் சிரித்தபடி அனைத்தையும் ஆமோதிக்கும் முகபாவத்துடன் ரூமுக்குள் சென்றேன். அசெம்ப்ள்ட் செட். ஸ்பீக்கர், வூஃபர், ட்வீட்டர் என சகலமும் பக்காவாக இருக்கும். என் நண்பன் அல்லவா அப்படித்தான்!
கேஸட் கவர் எடுத்து அந்தப் பாடல் இடம் பெற்ற இடம் பார்த்து ஃபார்வர்ட் செய்து ஸலாம் பாம்பே பாடலை ஆசை தீர பல முறை கேட்ட பின்பு மனம் நிதானமானது. பக்கத்தில் அமர்ந்து தின மலர் படித்துக் கொண்டிருந்தவன் “என்ன திருப்தியா” என்றான்.
“பரம திருப்தி”
“தம் போட்டு வரலாம் வா, வந்தப்புறம் நான் சொல்ற இன்னொரு பாட்டை கேளு, அப்படியே பறப்ப, மிதப்ப”
போனோம், திரும்பி வந்தோம். அவன் சொன்ன அந்தப் பாடலை கேட்க தயாரானேன். பாட்டு : Wedding Qawwali – (வெட்டிங் கவ்வாலி) கேட்க ஆரம்பித்தேன்.
முபாரக்கான் என்று பாடல் துவங்க ஆரம்பித்தவுடனே இனம் புரியாத உணர்வு. சுக்வீந்தர் சிங்கும், ரஹ்மானும் சர்வ சாதாரணமாக அலட்டலின்றி, பிசிறின்றி, தடுமாறாமல், ஸ்பஷ்டமான உச்சரிப்புடன் அப்படியே ஸ்பின் பெளலர் பந்தை கரங்களில் இருந்து வெளியேற்றும் போதே க்ரீஸிலிருந்து போர்க்குணத்துடன் வெளியே வந்து பந்தை சிக்ஸருக்குத் திருப்பும் செளரவ் தாதா போல் அந்தப் பாடலை அவர்கள் இருவரும் தங்கள் ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்றார்கள்.
கவ்வாலி ரகப் பாடல்கள் சுஃபி பாணியின் கீழ் வருவது. தெற்காசியாவில் பிரபலமானது. பிரிவினைக்குப் பிறகு நம் இந்தியாவில் பஞ்சாப், (பிரிவினைக்கு முன்பு சிந்த் மற்றும் மேற்கு பஞ்சாப்) தில்லி போன்ற பிராந்தியங்களில் சகல தரப்பு மக்களும் ஆழ்ந்து ரசிக்கும் இசை இது. மனதை ஆரோக்கியமான முறையில் சலனப்படுத்தும் இசையானது கடவுளுக்கு நெருக்கமானது.
கஜலானது நள்ளிரவு சமயங்களில் மெலடியை விரும்பும் காதலர்களுக்கு என்றால், கவ்வாலி எல்லா நேரத்திலும் இசையை ரசிக்கும் சாமானியர்களுக்கானது…
நம் பாரம்பரியத்தின் இசைப் பொக்கிஷங்களை தேசத்தின் பிற பகுதிகளில் சர்வ சாதாரணமாக புழங்குவதை தென் கோடித் தமிழகத்தில் பிறந்திருந்த எதையும் அறியாத என்னைப் போன்றவர்களுக்கு ஹிந்தித் திரைப்படங்கள் மூலமாகவோ, பாப் இசை ஆல்பங்கள் மூலமாக பெருமளவில் பரிச்சயப்படுத்தியதில் முதன்மையானவர் இசை மேதை ஏ.ஆர். ரஹ்மான்!
ஏ.ஆர். ரஹ்மானின் பாண்டித்தியத்தை அறிய, இக்கொழுவியை சொடுக்குங்கள்:
https://www.youtube.com/watch?v=FOLjTNcNxXs
வோர்ல்ட் ஸ்பேஸ் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் ரஹ்மான் ஒரு வாசகத்தை சொல்வார் அது : “there is so much to hear”
(தொடரும்)