இந்த அத்தியாயத்தில் மற்றுமொரு தனித்துவமான குரலைக் கொண்ட பாப் (டிஸ்கோ?) பாடகி ஒருவரைப் பற்றி பார்ப்போம்.
விவரம் அறியா குழந்தைப் பருவத்திலிருந்தே இவர் பாடிய பாடல்களை நான் கேட்டு வருகிறேன். இவரின் பூர்வீகம் பாகிஸ்தான். பாடகி என்பதைத் தாண்டியும் இவரிடம் பல விசேஷ அம்சங்கள் உண்டு. பொருளாதாரம் படித்தவர், வியாபார நிர்வாகம் கற்றவர், சட்டப் படிப்பைப் பயின்றவர். பத்து வயது முதல் பாட ஆரம்பித்தாலும் பள்ளி கல்லூரிகளைப் பொறுத்தமட்டில் கல்வியிலும் சிறந்த மாணவி என்று பெயர் பெற்றவர். முறையாக பாரம்பரிய சங்கீதம் பயின்றவர். படிப்பு, பாடகி என்பதைத் தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான அமைப்பை நிறுவி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியவர்.
பாடகியாக மட்டுமல்லாது தான் பாடும் பாடல்களையும் எழுதும் திறமை கொண்டவர் தான் “நாஸியா ஹசன்”
அறியாத வயதில் கேட்ட அவர் பாடல்கள் குறித்து எனக்கு நினைவில்லை ஆனால் அவர் பாடல்களைக் கேட்டு தட்டுத் தடுமாறி நடனம்? ஆடியதாக இப்போதும் என் அம்மா கிண்டலாக சிரித்தபடி சொல்லுவார்.
விவரம் தெரியாத வயதில் தடுமாறி ஆடி அவர் பாட்டை ரசித்த நான், பள்ளி செல்லும் காலத்தில் கேட்டு ரசித்து ஆடியது இப்போதும் மங்கலாக நினைவில் நிற்கிறது. அந்தப் பாடல் “Aap Jai sa koi”. 1980 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தித் திரைப்படமான “குர்பானி”யில் இடம் பெற்ற பாடல் அது. இப்படத்தின் இயக்குனர் ஃபெரோஸ் கான் அவர்கள் நாஸியாவை இங்கிலாந்தில் சந்தித்த போது, படத்தின் இசையமைப்பாளர் பிட்டு ஏற்பாடு செய்யும் குரல் தேர்வுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாஸியாவும் சென்றார். பாடினார். படமும் வெளியானது. பாடல் உலகளவில் மக்களைக் கவர்ந்தது. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியத் துணைக்கண்டமே நாஸியாவின் குரலைக் கொண்டாடத் துவங்கியது. இப்பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் நாஸியா வென்றார். மிகக் குறைந்த வயதில் ஃபிலிம் ஃ பேர் விருது பெற்ற பாடகி என்ற பெருமையும் அவர் வசமானது. பாடலைப் பாடும் போது அவருக்கு பதினைந்து வயது. அதுமட்டுமல்ல ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற முதல் பாகிஸ்தானியும் அவரே!
பிறந்தது கராச்சியில் (பாகிஸ்தான்), வளர்ந்தது லண்டனின் (இங்கிலாந்து) பொருளாதாரம், வியாபார நிர்வாகம், சட்டம் போன்ற படிப்பு, சமூக சேவை செய்யும் நற்குணம், ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நலத்திட்டப் பணிகளில் இணைந்து பணியாற்றியது… சொல்லிக் கொண்டே போகலாம்.
சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வளைய வந்தார். சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் பாடி வந்தவரின் மியூஸிக் க்ராஃப் 1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உச்சிக்குப் போகத் துவங்கியது. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்திய பாப் இசை என்னும் களத்திற்கும் நாஸியா புத்துயிர் ஊட்டினார் என்றால் அது மிகையல்ல. சினிமா, பாப் இசை போன்ற துறைகளில் ஆண்கள் பெருமளவில் (ஆசியா) கோலாச்சி வந்த காலத்தில் ஒரு பெண்ணாக சாதித்து மிளிர்ந்தவர் அவரே! அலிஷா சினாய், பார்வதி கான், சுனீதா ராவ் போன்ற பல எண்ணற்ற இந்திய பெண் பாப் இசைக் கலைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தவர் அவர்.
தன் சகோதரர் ஸோஹேப் உடன் இணைந்து பாப் ஆல்பங்களை வெளியிடத் துவங்கினார். 1981 ஆம் ஆண்டு வெளியான இவரின் முதல் ஆல்பமான “Disco Deewane” விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமல்லாது இங்கிலாந்திலும் ஹிட் அடித்தது. உலகளவில் சுமார் பதினான்கு நாடுகளில் டாப் 10 கவுண்ட்டவுனில் இடம் பெற்றது. ஆசிய அளவில் உள்ள பாப் இசைக் கலைஞரின் மியூஸிக் ஆல்பம் ஒன்று உலகளவில் வியக்கத்தக்க அளவு விற்பனை என்ற மணிமகுடம் நாஸியாவை வந்தடைந்தது. திரை இசை அல்லாத ஆல்பங்கள் பிரிவில் முறியடிக்கப்படாமல் இருந்த ரெகார்ட்ஸ் விற்பனை அளவை வெகு காலத்திற்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு வெளியான ஏ.ஆர்.ரஹ்மானின் “வந்தே மாதரம்” ஆல்பம் முந்தியது.
Boom Boom (1982)
Young Tarang (1984)
Hotline (1987)
அவரின் எல்லா ஆல்பங்களும் சக்கை போடு போட்டன. 1992 ஆம் ஆண்டு தன் சகோதரருடன் இணைந்து அவர் வெளியிட்ட “Camera camera” ஆல்பம் போதை மருந்துக்கு எதிரானதாக அறிவிக்கப்பட்டது.
“இத்துடன் இனி ஆல்பங்கள் வெளியிடமாட்டேன் சமூகப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன்” என்று நாஸியா அறிவிப்பு வெளியிட்டு இசை ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.
இசையமைப்பாளர் பிட்டு தான் கம்போஸ் செய்த பாடல் ஒன்றை நாஸியா அவர்கள் பாடியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக அவரிடம் கோரிக்கை வைத்தபடி இருந்தார். “பொதுச் சேவை மற்றும் தனிப்பட்ட வாழ்கையை மட்டுமே கவனிப்பேன், இனி பாட மாட்டேன்” என்று நாஸியா மறுத்தார். இறுதியில் அப்பாடலை அலிஷா பாட அப்பாடலும் மிகப் பெரியதொரு ஹிட் பாடலானது. அது : “Made in India”
ஏராளமான பாப் இசைப் பாடகிகள் உலகளவில் மட்டுமல்லாது இந்திய துணைக் கண்டத்திலும் இருக்கிறார்கள். நாஸியா மட்டும் ஏன் தனித்துவமிக்க பாடகியாக கொண்டாடப்படுகிறார்?
பொதுவாக மேற்கத்திய பாணி பாடலைப் பாடும் பெண்கள் ஆண் குரலில் பாடுவதையே வழமையாக வைத்திருந்தார்கள். தற்போது அது பாப் இசையைத் தாண்டி இந்திய சினிமா பாடல்களிலும் ஊடுருவி இருக்கிறது ஆனால நாஸியா தன் விசேஷ குரலை எக்காரணத்தைக் கொண்டும் காவு கொடுத்து பாடியதில்லை. இயல்பான முறையிலேயே பாடுவார். குரலில் ஏற்ற இறக்கங்களை மிக கவனமாக வெளிப்படுத்துவார். vibrating தரக் கூடிய விதத்தில் அலை அலையாக மாடுலேட் செய்து பாடுவார். பாடும் த்வனியில் மட்டும் வேறுபாடை வெளிப்படுத்தி, ஜீவனான குரல் சிதையாது பார்த்துக் கொள்வார்.
இந்தத் தனித்தன்மையே நாஸியா அவர்களின் சிறப்பம்சாக நான் கருதுகிறேன்.
மேலும் சுண்டி இழுக்கும் இசை, ஆழமாக மனதுள் சங்கமமாகும் வளமான குரல், ரிதமிக்கான தாளக்கட்டு போன்ற காரணிகளே ஒரு ஹிட் பாடலுக்கு போதுமானது. நடனம் என்ற பெயரில் ஆபாசமான உடல் அசைவுகளைக் கொண்டு காட்சி அமைப்பது, பெண்களை சதைக்குவியலின் அங்கமாக சித்தரிப்பதே பாடல் காட்சியமைப்பு என்ற போலி சித்தாந்தம் இல்லாது இயல்பான முறையில் காட்சிகள் அமைத்து தன் ஆல்பங்களை வெளியிட்டவர் நாஸியா. இதுவும் பரவலான மக்களின் அபிமானத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.
1965 ஆம் ஆண்டு பிறந்த நாஸியா அவர்கள் புற்று நோயால் அவதியுற்று 2000 மாவது ஆண்டில் இயற்கை எய்தினார். முப்பத்தைந்து வயதில் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். ஏராளமான இசை ரசிகர்களை தம் தனித்துவத்தால் ஈர்த்த அவர், தம் மனித நேயப் பணிகளால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆதுரமாக இருந்தவர் என உலகின் பலருக்குப் பிடித்தமானவராக இருந்தவர். கடவுளுக்கும் பிடித்துப் போனதால் தம் மகளைத் தன்னிடம் சிறு வயதிலேயே அழைத்துக் கொண்டுவிட்டார் போல!
நாஸியா அவர்களின் சமூக சேவைப் பணிகளை அவரின் குடும்பத்தார் “நாஸியா ஃபெளண்டேஷன்” என்னும் பெயரில் ஒரு ட்ரஸ்ட் அமைத்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
“எத்தனையோ நற்காரியங்களை செய்தாலும், என் தேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய பிராந்தியமான தர்பர்காரில் என்னால் இயன்ற சேவையை செய்ய இறைவன் அருளியதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன்” இதை நாஸியா அடிக்கடி சொல்வார்.
தர்பர்காரில் சிந்தி இன மக்கள் அதாவது அந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் அதிகம் வசிகத்து வந்தனர். பாகிஸ்தான் தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் தொடர்ந்து அந்நாட்டு அரசுகளால் எந்தவொரு பெரிய நலத்திட்ட உதவிகளோ, விசேஷ சலுகைகளோ, அடிப்படை கட்டமைப்போ நிறுவாது புறக்கணிக்கப்பட்டு வரும் பிராந்தியம் தர்பர்கார் என்பது குறிப்பிடத்ததக்கது.
நாஸியா அவர்கள் பாடிய ஏராளமான ஹிட் பாடல்களை இணையத்தில் கேட்டு ரசிக்க முடியும். நண்பர்களுக்காக சில பாடல்களின் கொழுவியை இங்கு தந்திருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=FYbcwWN98k0 – Aap Jaisa (Album: Aap jaisa)
https://www.youtube.com/watch?v=VxzdO0XTtuU – Disco Deewane (Album: Disco Deewane)
https://www.youtube.com/watch?v=jlGK3SDRu2o – Boom Boom Song (Film: Star – Hindi)
https://www.youtube.com/watch?v=yh2OlQUcctI – Ankhien Milane Wale nasiya (Album: Young Tarang)
https://www.youtube.com/watch?v=belCggdpLrE – Aan Han… (Album: Hot Line)
“Boom Boom” பாடலை என்னால் ஆயுள் முழுக்க மறக்க இயலாது. சிறு வயதில் பள்ளிக் கல்வி பயிலும் போது வாரம் ஒரு நாள் இரண்டு பீரியடுகள் பி.டி இருக்கும். ஒன்று காலை நேரத்திலும் மற்றொன்று பிற்பகல் நேரத்திலும் என்பது போல் அட்டவணையை வகுத்திருப்பார்கள். மதிய நேரத்தைப் பொறுத்தவரை கடைசி பீரியடுக்கு முந்தைய பீரியட் பி.டி அதற்கடுத்து ஒரு பாட வகுப்பு என்று இருக்கும். காலை நேர பி.டி. பீரியடில் கடைசி பீரியட் எடுக்கும் ஆசிரியர் அல்லது ஆசிரியையை (அவர்களுக்கு அப்போது ஃப்ரீ டைம் எனில்) கிளாஸ் எடுக்க சொல்லி கேட்டுக் கொள்வோம். அவர்களும் சம்மதித்து வகுப்பெடுப்பார்கள். கடைசி இரண்டு பீரியட் பி.டி. முதல் பீரியடில்மைதானத்தில் நன்கு விளையாடுவோம். கடைசி பீரியடுக்கான மணி அடிக்கும் போது வீட்டுக்கு சென்று விடுவோம்.
மணி அடித்தவுடன் ஷூவையும் சாக்ஸையும் கழட்டி இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையில் பாடப்புத்தகங்கள் அடங்கிய பையை பிடித்தபடி வேகமாக ஓடுவோம். பக்கவாட்டில் உள்ள பெரிய கேட் வழியாக வெளியே வந்தால் மெயின் ரோடு. எதிர்ப்புறம் சிவன் கோயில் கேட் அருகே சாலை ஓரமாக பெரிய அரச மரம். அருகே சிமெண்ட் கொண்டு பூசப்பட்ட இருக்கை. அங்கே போய் தரையில் ஷூவையும் இருக்கையில் புத்தகப் பையையும் வைத்துவிடுவேன். முதலில் அங்கு ஓடி வருபவர் வெற்றியாளர். அடுத்தடுத்து பின்னால் வருபவர்களை முதலில் வந்தவன் நக்கல் செய்வான்.
பல முறை முதலில் வந்து வெற்றியாளனாகும் நான் எனக்கு அடுத்து வரும் நண்பன் வேங்கட கிருஷ்ணனைப் பார்த்து நக்கலான அபிநயம் பிடித்து பழிப்பு காட்டி நடனமாடியபடி ஒரு பாடலைப் பாடுவேன். அந்தப் பாடல் “Boom Boom”. நான் செய்வதைப் பார்த்து கடுப்பான நண்பன் தான் முதலில் மரத்தடிக்கு வந்து வெற்றி பெறும் தருணங்களில் என் பாணியைக் கையிலெடுத்து எனக்கு பதிலடி தரத் துவங்கினான்.
விவரம் அறியாத பாஷை புரியாத வயதில் மனதில் அந்தப் பாடல் பதிந்து போனதற்கான காரணம் விளங்கவில்லை ஆனால் விவரம் அறிந்த வயது என்று சொல்லிகொள்ளும் இப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு முறை அலைபேசியில் அப்பாடலைக் கேட்கும் போதும் மனது ஆர்ப்பரிக்கிறது. “ஓஓஓ பூம் பூம்” என்று மாடுலேட் செய்து குரல் சிதையாமல், உச்சரிப்பைக் கொள்ளாமல் பாடுவதை கேட்கையில் பழைய நினைவுகளை மனம் அசைபோடுகிறது. உயிர்ப்புடன் காந்தம் போல் ஆகர்ஷணத் தன்மை கொண்ட அவர் குரல் என் புறக் கவலைகளை எல்லாம் மறக்கடிக்கிறது. அந்த தனித்துவமான குரலுக்கு மரணமே கிடையாது.
இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்கள் முக்கியமாக நாஸியா அவர்களை அறியாதவர்கள் இனி என்னைப் போல் நாஸியா ரசிகர் ஆவார்கள் என நம்புகிறேன்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…