El Arbi
என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் செவிக்கு அறிமுகமான இசைக் கலைஞர் அவர்.
“காலேத் ஹட்ஜி இப்ராஹிம்” என்று அவருடைய முழுப் பெயரை சொன்னால் “யார் அவர்?” என பலர் கேட்பார்கள். காலேத் என்றால் “ஓ அந்த அரபிக் மொழியில் பாடும் பாடகரா?” என்று பலர் சொல்வார்கள்.
காலேத் அல்ஜிரியா நாட்டில் உள்ள ஓரன் என்ற பிராந்தியத்தில் 1960 ஆம் வருடம் பிறந்தார். 2,11,20,29 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள். அதற்கு இவரும் விதிவிலக்கல்ல! ஆம் இவர் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி பிறந்தவர். நான்கு வருடங்களுக்கொருமுறை பிறந்த நாள் கொண்டாடும் பிரபலம்.
பதினான்கு வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து ஒரு மியூஸிக் ட்ரூப் அமைத்து இசை நிகழ்ச்சிகள் பல நடத்தி இருக்கிறார். இரவு விடுதிகள், கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் என்றால் காலேத் என்னும் அளவிற்கு அவர் பெயர் அல்ஜிரியா நாட்டில் பரவத் துவங்கியது. ராய் என்ற ஜானரில் கம்போஸ் செய்யும் இசைக்கலைஞர் என இவரைக் குறிப்பிடுகின்றனர்.
அவரே பல பாடல்களை கம்போஸ் செய்து அதை கேஸட்டுகளில் பதிவு செய்து நண்பர்களுக்கு துவக்கத்தில் கேட்கத் தந்திருக்கிறார். பின்னர் அது போன்ற கேஸட்டுகளை விற்பனையும் செய்திருக்கிறார். அதிகாரப்பூர்வமான இவரின் ஆல்பங்கள் 1992 ஆம் ஆண்டு முதல் வெளிவரத் துவங்கினாலும் அதற்கு முன்பு இது போன்ற கேஸட்டுகள் சிறிய அளவில் விற்பனையும் செய்யப்பட்டிருக்கின்றன. இது சாதாரண விஷயம் இல்லை, காலேத் இப்படி செய்தது பிற்காலத்தில் ஒரு வழக்கிலிருந்து அவரைக் குற்றமற்றவர் என்று காப்பாற்றியது.
ஃப்ளாஷ் பேக் :
ஃபாரூக் (கண் சிமிட்டி ஃபாரூக், இன்னொரு ஃபாரூக் இருப்பதால் இவனுக்கு இந்தப் பெயர்) என்றொரு நண்பன். அவனுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான ரசனைகள் எங்களிருவரை ஒரே புள்ளியில் நிறுத்தும். அவனின் பூர்வீகம் ஆந்திரா. தெலுங்கு, இந்தி, தமிழ், உருது, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஒடியா என பல மொழிகள் தெரிந்த அஷ்டாவதானி. அவனுக்கு நடிகர் கமல்ஹாசனைப் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். அவனுக்கும் குமார் ஸானு, ஆஷா போஸ்லே, எஸ்.பி.பி போன்ற பாடகர்கள் என்றால் கொள்ளை இஷ்டம். எனக்கும்! கபில்தேவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவான். நானும்! ஒரே ஒரு விஷயத்தில் அவனுக்கும் எனக்கும் ஒத்துப்போகாது. அது ஏ.ஆர். ரஹ்மான்! அவன் ராஜாவின் பயங்கரமான காத்தாடி. ரஹ்மான் எல்லாம் பச்சா என்பான்.
கிரிக்கெட் விளையாட அழைப்பதற்காக ஒரு நாள் மதியம் மூன்று மணியளவில் அவன் வீட்டிற்கு சென்றேன். வீட்டை ஒழுங்குபடுத்தி பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அந்தப் பாடலை முதல் முறையாக கேட்டேன்.
Didi
பாடலை முதல் முறை கேட்கும் போதே பிரமாதமாக இருந்தது. ரிச்சாக இருந்தது. ஃப்ரெஷாக இருந்தது. புது மாதிரியாக இருந்தது. கிராண்டாக அமர்க்களமாக இருந்தது. ஆர்கெஸ்ட்ரேஷனில் ஒரு தனித்துவமான துள்ளல் வெளிப்பட்டது.
“சூப்பரா இருக்கு, என்ன பாட்டுடா இது?” இவ்வளவு தாங்க கேட்டேன் ஃபாருக் கொடுத்த நீண்ட விளக்கத்தை நீங்களே பாருங்க.
“மாப்ள இவரு காலேத் அரேபியன் ஸிங்கர். ஆறு வருஷமா ஃப்ரான்ஸ்ல இருக்காரு. இது இவரோட முதல் ஆல்பம். செமயா இருக்குல்ல?
“ஆமாம் நீ எப்படி”
“ஹைதராபாத் போன போது வாங்கினேன், அந்த கடைக்காரர் தான் இவரைப் பத்தி சொன்னார், இந்த ஆல்பம் செம ஹிட் ஆகிடுச்சு, கேஸட் வாங்கி மாளலயாம் அவருக்கு ஆனா பாவம் காலேத் மேல ஒரு கேஸ் இருக்கு”
“அடப்பாவமே என்ன கேஸ்”
“யாரோ ஒருத்தரோட பாட்டை காப்பியடிச்சு இந்த பாட்டைப் போட்டுருக்காராம் கேஸ் நடக்குது அனேகமா காலேத் காம்பன்சேஷன் தர வேண்டி இருக்கும்”
ஃபாரூக் சொன்னது தான் உறுதியானது. “காலேத் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்ற தீர்ப்பு 2015 ஆம் ஆண்டு வந்தது ஆனால் அது இறுதியான தீர்ப்பு அல்ல.
1992 ஆம் ஆண்டு துவங்கிய வழக்கில் 2016 ஆம் ஆண்டு அதாவது பதினான்கு வருடங்கள் கழித்து வந்த இறுதித் தீர்ப்பில் “காலேத் குற்றமற்றவர்” என்று அவர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு காலேத் தந்த வலுவான ஆதாரமே காரணம்.
பிரான்ஸ் பிறகு மொராக்கோவில் செட்டில் ஆன காலேத் இவ்வழக்கிற்காக அல்ஜீரியா நாட்டிற்கு மீண்டும் சென்று தம்முடைய ஆதாரங்களைத் தேடினார். 1982 ஆம் ஆண்டு இதே “Didi” பாடலை அவர் கம்போஸ் செய்திருக்கிறார் அதைக் கேஸட்டில் பதிவு செய்து தம் நண்பர்கள் கேட்டு ரசிக்க வழங்கி இருக்கிறார். தன்னிடமும் அந்த கேஸட் ஒன்றை பத்திரப்படுத்தி இருக்கிறார் ஆனால் அவரிடம் உள்ள கேஸட் என்பதால் அதை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்கவில்லை. விற்பனைக்காக 1983 ஆம் வருடம் ஒரு சிறிய ஆடியோ நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்ட கேஸட் எந்த கடையிலாவது கிடைக்குமா என தேடி அலைந்தார். அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு ரசிகரிடமிருந்து அந்த கேஸட் கிடைத்தது. மேலும் கேஸட் வெளியிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கேஸட் குறித்து எழுதப்பட்ட கட்டுரை அடங்கிய பழைய உள்ளூர் பத்திரிகை போன்ற ஆதாரங்களை சமர்ப்பித்து பொய் குற்றசாட்டுகளை தகர்த்தார்.
நீதிமன்றம் காலேத் அவர்களிடம் “தங்கள் இசையைத் திருடிய நபரிடம் நஷ்ட ஈடு பெற விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர். அதற்கு காலேத் “இசை இறைவனுக்குரியது அதை எந்த தனி மனிதனும் கொண்டாடுவதை என்னால் ஏற்க முடியாது, எனக்கு நஷ்ட ஈடு எதுவும் வேண்டாம், பதினான்கு வருடங்கள் வழக்குக்காக நான் செய்த செலவினங்களுக்கு உரிய தொகையை அவரிடமிருந்து பெற்றுத் தாருங்கள்” என்றார். அத்தொகையை வழங்குமாறு தீர்ப்பும் வெளியானது.
இந்த தகவல்கள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக நான் அறிந்து கொண்டேன் இதை அனைத்தையும் கண் சிமிட்டி ஃபாரூக்கிடம் அலைபேசியில் கதைக்கும் போது பெருமை பொங்க சொன்னேன்.
ஃபாருக் அதற்கு ஒரு வரியில் பதிலளித்தான்.
“எனக்குத் தெரியும் மாப்ள, நான் படிக்காம இருப்பேனா? கேஸ் போட்ட ஆள் பேரு செப் ரபா, இன்னொரு மேட்டர் சொல்லவா?
“ம்ம்ம்”
“அந்த செப் ரபா, செப் மமியோட எழுத்துகளை திருடியதுக்காக நஷ்ட ஈடு தந்தவர்”
“Didi” பாடலைக் கேட்டு துள்ள இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=tTcnIYYeZI8
செப் ரபாவின் பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=oX3L3VAQNNM
(அடுத்த அத்தியாயத்திலும் காலேத் தொடர்வார்)
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…