Infinite Love
திரைப்பட இசை தவிர்த்து ரஹ்மான் அவர்கள் ஆல்பங்களுக்கு நிறைய இசையமைத்திருக்கிறார். அதிலும் சில பரீட்சார்த்த முறையிலான மாறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
கேஸட், ஸிடி போன்ற வழமையான பாணியில் இல்லாது டிஜிடல் தரவிறக்கம் என்னும் கோட்பாட்டின் கீழ் மொபைல் போனுக்காக பிரத்தியேகமாக அவர் இசையமைத்த பாடல் “Pray for me Brother” .
இந்த ஆங்கிலப் பாடல் 2007 ஆம் ஆண்டு வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் ஃபெளண்டேஷன்ஸ் என்னும் சேவை நிறுவனமும் நோக்கியா மொபைல் தயாரிப்பாளர்களும் இணைந்து வெளியிட்டார்கள்.
பாடலின் காட்சியமைப்பானது பாடல் வெளிவந்த காலகட்டத்தில் புழங்கிய மொபைல் போன் திரையில் பார்ப்பதற்கு ஏற்றவாறு படம்பிடிக்கப்பட்டிருக்கும்.
வறுமைக்கு எதிரான கீதமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு இப்பாடலைத் தேர்வு செய்தது. பாடலின் வரிகளை (பெரும்பாலானவை) ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே எழுதினார். பாடலுக்கான காட்சியை இயக்கியது ரஹ்மானின் ஸ்நேகிதர் பரத் பாலா. (வந்தே மாதரம் பாடலை இயக்கியவர்)
பாடலைக் குறித்து மேலும் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. ரஹ்மான் அவர்கள் இப்பாடல் குறித்து சொன்னதை மட்டும் குறிப்பிடுகிறேன்.
“It’s a simple song, which will be very unique in its concept. The idea behind this is to spread the message of humanity. We will tell people to preserve humanity”
வறுமைக்கு எதிரான கீதத்தைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=ndmXkyohT1M
Ginga
திருச்சியிலிருந்து மெட்ராஸுக்கு குடி வந்த பின் திரையரங்குகளில் போய் நான் பார்த்த படங்களை சின்ன பட்டியலில் அடக்கிவிடலாம். அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஆங்கிலப் படம் “பீலே”
பெரிதாக மூளையைக் கசக்கும் அளவுக்கு காரணம் இல்லை. படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். அவரின் அசத்தலான பிஜிஎம் ஜாலத்தை கேட்டு ரசிக்கவே படம் பார்க்கச் சென்றேன். அதற்கு முன்பாகவே “ginga” பாடல் தந்த மயக்கம் வேறு.
இந்தப் பாடல் குறித்து அறியாதவன் கூட பாடல் துவங்கும் அந்த இசை சில நொடிகள் முடிந்த பின் முழங்கும் அந்த தாள்ளக்கட்டைக் கேட்டவுடன் அந்த துல்லியமான இசையைக் கேட்டவுடன், செவிக்கு நிறைவான அந்த இசையைக் கேட்டவுடன் “இது ரஹ்மான் மியூஸிக் தானே?” என்பான். ரஹ்மானின் முத்திரை இம்மி பிசகாது சர்வ ரஹ்மான்ரிகா லட்சணங்களை உள்ளடக்கிய பாடல்.
பார்க்குகளில் எல்லாம் குழந்தைகள் சறுக்கு விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் உச்சிக்கு சென்று அந்த சிமெண்ட் ஸ்லாபில் அமர்ந்து கண்ணை மூடி இப்பாடலின் முதல் சரணம் முடிந்து ரஹ்மானின் ஆலாபனை ஒன்று துவங்கும். அதன் இறுதியில் வளைய வரும் அந்த தபேலா தாளக்கட்டு… இதை கேட்ட படி சறுக்கத் துவங்குங்கள். ரஹ்மானின் இசை இப்பிரபஞ்சத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். ரஹ்மானின் மிகச்சிறந்த இசை ஆளுமையை வெளிப்படுத்திய பாடல் இது என்றால் அது மிகையல்ல!
இப்பாடலில் திளைக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=Uvp5HHemf1w
குறுகுறு கண்களிலே
தமிழ்த் திரைப்படங்களில் உள்ள பாடல் வரிகளில் ஆங்கில சொற்கள் கலப்பது வாடிக்கை ஆனால் அதையும் தாண்டி முழு ஆங்கில மொழியில் பாடலே தமிழ் திரைப்படங்களில் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு புன்னகை மன்னன் திரைப்படத்தில் “one, two, three, four… என்ற பாடலை குறிப்பிடலாம்.
இந்தப் பாடலை அரேஞ்ச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் பாடல் என்றில்லை இதே புன்னகை மன்னன் படத்தில் மிக சிக்கலான வடிவம் கொண்ட “தோம்த தீமீதா” பாடலையும் கனகச்சிதமாக அரேஞ்ச் செய்ததும் ரஹ்மானே! மேலும் இப்படத்தில் கீ போர்ட் ப்ளேயராக பணியாற்றியதும் ரஹ்மானே!
ஒரு இசையமைப்பாளரின் கீழ் பணியாற்றும் போது தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆங்கிலப்பாடலை அரேஞ்ச் செய்த ரஹ்மான் அவரே கம்போஸராக உயர்ந்த பின் அவருக்கு கிடைத்த ஹாலிவுட் பட வாய்ப்பில் இன்னொன்றை செய்தார். ஆம் ரஹ்மான் இசையமைத்த ஆங்கிலப்படமொன்றில் தமிழ் பாடல். இது செமையா இருக்குல்ல?
2009 ஆம் ஆண்டு வெளியான “Couples Retreat” என்ற ஹாலிவுட் படத்தில் தான் இந்த “அரங்கேற்றம்” இனிதே நடந்தேறியது.
“குறு குறு கண்களிலே” என்ற தமிழ் பாடல் ரஹ்மான் அவர்களின் விருப்பப்படி ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றது. படம் வெளியாகி விமர்சகர்களால் குப்பை என்று எதிர்மறையாக பேசப்பட்டது ஆனால் வசூல் ரீதியாக படம் பெறும் வெற்றியைப் பெற்றது. படம் வெளிவருவதற்கு முன்பான ப்ரமோஷன் சம்பிரதாயங்கள் அனைத்திலும் அமெரிக்காவில் ஒலிக்கப்பட்டது “குறு குறு கண்களிலே” என்னும் தமிழ் பாடலே!
பில்போர்ட் யூ.எஸ் கவுண்ட் டவுனில் ஏழு வாரங்களுக்கு டாப் டென் வரிசையில் நின்று விளையாடியது இந்தத் தமிழ்ப் பாடல். மேலும் “couples retreat” சவுண்ட் ட்ராக் BMI லண்டன் விருதை ரஹ்மானுக்குப் பெற்றுத் தந்தது.
இப்பாடலை எழுதியதும் ரஹ்மானே!
அதிகம் யோசிக்க வேண்டாம். அலுவலகத்தில் வேலையாக இருக்கிறீர்களா? சின்ன ரெஃப்ரஷ்மெண்ட் வேண்டுமா? வீட்டில் ஞாயிற்றுக் கிழமை க்ளீனிங் வொர்க்கில் இடையே இளைப்பாற வேண்டுமா? அட டீக்கடையில் தம், டீ என்றிருக்கும் போது புத்தி துலங்க வேண்டுமா? மொபைலில் இந்தப் பாடலைக் கேளுங்கள் இன்ஸ்டன்ட் க்ளுகோஸாக இப்பாடல் உங்கள் மைண்ட் செட்டை பாஸிடிவ் மூடுக்கு மாற்றும். அதற்கு நான் உத்திரவாதம்.
இப்பாடலைக் கேட்டு ரெஃப்ரெஷ் செய்ய இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=G_YBcvhTY3Y
Infinite Love
இந்தப் பாடலும் “Pray for me Brother” போல டிஜிடல் தரவிறக்கம் தான். ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்திற்குப் பிறகு சோனி லேபிளின் கீழ் வெளிவந்த தனிப் பாடல் இது. அதாவது ஸிங்கிள் ட்ராக்.
ரிலையன்ஸ் நிறுவனம் செலவுகளை ஏற்றுக் கொண்டது. இப்பாடலானது இந்தியா, அமெரிக்கா, ஜமைக்கா, ஹாங் காங் என பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த இந்தப்பாடலைப் பற்றி ரஹ்மான் குறிப்பிடுவது “instill faith & optimism in people”.
ஆங்கிலத்தில் வெளிவந்த இப்பாடலின் பெரும் பகுதியை எழுதியவர் ரஹ்மான். இதே பாடல் ஹிந்தியிலும் வெளிவந்தது. ஹிந்திக்கான பாடல் வரிகளை எழுதியவர்: இர்ஷத் கமில்.
ஒவ்வொரு முறை இப்பாடலைக் கேட்கும் போதும் உலகெங்கும் அமைதி ததும்பி தீவிரவாதம் ஒழிந்து மனிதம் தழைத்தோங்குவது போன்றதொரு உணர்வு கிட்டும். பாடலுக்கான காட்சியமைப்பை ஒரு உன்னதமான கவிதை என்று சொல்லலாம்.
“எல்லைகளற்ற உலகம், ஒவ்வொரு தனிமனிதனும் கர்மாவை அறிந்து பயணிப்பது, மனிதத்தை வளர்த்துக் கொள்வது” இதை அடிப்படையாகக் கொண்டே பாடல் வரிகளை எழுதினேன், ஏன் ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத் தான் என்றார்.
பாடலைக் கேட்டு முடித்து உற்சாகம் ததும்ப, கண்கள் கசிய இப்படியொரு உலகம் சாத்தியமா என்றொரு ஏக்கம் தோன்றுவதை யாராலும் தவிர்க்க இயலாது. ப்ளேஸ் ராப் த்வனியில் பாடல் வரிகளைப் பாடி வருகையில் வயலின் இசையொன்று மென்மையாக வருடி நம் உணர்வுகளை வேறு லோகத்தில் சஞ்சரிக்க வைத்து உலுக்கும் அந்த உன்னத தருணத்தை தவற விடாமல் லயித்துக் கேளுங்கள்.
இந்தப் பாடலைப் பொறுத்தவரை எனக்கொரு பெரிய குறை உண்டு அது பாடலைப் பற்றியதல்ல. ரசிகர்களைப் பற்றியது. இந்தப் பாடலை நான் பல முறை என் அலைபேசியில் கேட்டு ரசித்திருக்கிறேன். என் மடிக்கணினியில் பார்த்துக் கேட்டு ரசித்திருக்கிறேன் ஆனால் என் சிறிய செவிக்கு எட்டிய வரை தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும், ஏன் ஆங்கிலப் பாடல்கள் அதிகமாக புழங்கும் உணவகங்கள், ஐஸ் க்ரீம் பாளர்கள், விடுதிகள் என்று எந்தவொரு சூழலிலும் நான் இப்பாடலைக் கேட்டதில்லை. நம்மவர்கள் ஏன் இப்படி? என்று மனம் வருந்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த அத்தியாயத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு சிறு கோரிக்கையை முன்வைக்கிறேன்: இப்பாடலை நீங்கள் இணையத்தின் துணையுடன் உங்கள் கணினியிலோ, அலைபேசியிலோ, பென் டிரைவிலோ சேமித்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் திரளாக பங்கு பெறும் பள்ளிக்கூட நிகழ்வுகளில், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் மைதானங்கள் மற்றும் அரங்குகளில்… என சகல இடங்களிலும் இந்தப் பாடலை சிறார்கள் கீதமாக ஒலிக்கவிடுங்கள்.
ரஹ்மான் தன் இசையின் வாயிலாக உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் நம் பாரத தேசத்தின் சார்பில் ஒரு சமாதான இசைத் தூதராக செயல்படுகிறார். அந்த உன்னதப் பணியை நம்மால் இயன்ற அளவுக்கு பரப்ப உதவுங்கள்.
இப்பாடலைக் கேட்டுணர இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=cSejvo6Pv6E
இந்தியத் திரைப்பட இசை அல்லாத இசை தொடர்பான தொடரில் ரஹ்மானுக்கு மட்டும் மூன்று அத்தியாயங்கள்… இசை மேதையாச்சே!
(தொடரும்)
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…