நதியிசைந்த நாட்களில் 11

0
136

Only U

ஏற்கனவே இதற்கு முந்தைய அத்தியாயம் ஒன்றில் ரஹ்மான் அவர்களின் தமிழ் திரைப்பட இசை அல்லாத அவரின் இசை ஆல்பம் குறித்து பார்த்தோம். அந்த அத்தியாயத்திலேயே நான் ரஹ்மான் அவர்களின் ஆல்பம் இசை தொடர்பாக மேலும் பார்ப்போம் என்றேன். இந்த “Only U ” அத்தியாயம் அந்த வகையறா தான்!

தமிழ் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் முதன் முதலாக வெளியிட்ட ஆல்பம் “வந்தே மாதரம்”.

சோனி நிறுவனம் உலகம் முழுதும் இசை உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது (ஆங்கில பாப் ஆல்பங்களை கேஸட் மற்றும் ஸிடி வடிவில் வெளியிடுவது) அந்நிறுவனம் இந்தியாவிலும் பெரிய அளவில் முத்திரை பதிக்க விரும்பியது. அதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை 1997 ஆம் ஆண்டு அணுகினார்கள். மூன்று ஆல்பங்களுக்கான ஒப்பந்தம் பரஸ்பரம் உறுதியானது. ரஹ்மான் அவர்கள் தம் நண்பர் பரத் பாலாவிடம் பாரதத்தின் ஐம்பதாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு புது பாணியில் ஏதாவது இசை சார்ந்து செய்ய வேண்டும் என்று தன் விருப்பத்தை முன்பே சொல்லி இருந்தார். சோனி நிறுவனம் அணுகியவுடன் ரஹ்மான் பரத் பாலா அவர்களும் ப்ராஜெக்டில் பங்கு பெற வேண்டும் என்றார். சோனி நிறுவனம் சம்மதித்தது. ஒரு தனி ஆல்பம் கொண்டு வர முடிவெடுத்தனர் ஆல்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று ரஹ்மான் உறுதியாக இருந்தார். அதனையும் சோனி நிறுவனம் ஏற்றது. அந்த பெயர் அதாவது ஆல்பத்தின் தலைப்பு: வந்தே மாதரம்

ஆல்பம் வெளிவந்து பெருவெற்றி பெற்றதை அனைவரும் அறிந்திருப்போம். “மா துஜே சலாம், தாய் மண்ணே வணக்கம்” பாடல்கள் ஒலிக்காத வீடுகள் இல்லை, கடைகள் இல்லை, டிவி சேனல்கள் இல்லை, ரேடியோக்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கெங்கு நோக்கினும் ரஹ்மானின் வந்தே மாதரம் தான்!

இந்த இரு பாடல்கள் அல்லாமல் “Revival (வந்தே மாதரம்)” பழைய ஒரிஜினல் வந்தே மாதரம் வர்ஷன் அதில் ரஹ்மான் ஃப்ளேவர் இசை மென்மையாக வருடிக் கொண்டு துணைக்கு வரும்.

“Missing (வந்தே மாதரம்)” முழுக்க முழுக்க இசை வடிவிலானது. யாராலும் யூகிக்க முடியாத ரஹ்மான் பாணி இசையை அடிப்படையாகக் கொண்டு வந்தே மாதர ஒரிஜினல் பாடல் வரிகளும் ஒலிக்கும்படி உருவானது.

“Gurus of peace” – உஸ்தாத் நஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப் உடன் இணைந்து ரஹ்மான் பாடிய பாடல். கருத்தம்மா படத்தில் இடம் பெற்ற போறாளே பொன்னுத்தாயி பாட்டின் சாயலைக் கொண்டது. அந்தப் பாடல் இந்த ஆல்பத்தில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்ற சங்கல்பத்துடன் இருந்ததும் ரஹ்மானே. இந்தப் பாடல் குறித்து விரிவாக நஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப் பற்றி எழுதும் அத்தியாயத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

“Tauba Tauba” பாடல் டிபிகல் ரஹ்மான் பாணி இசையில் உருவான பாடல். சுண்டி இழுக்கும் தாளக்கட்டு, மயக்கும் இசை என சகலமும் உள்ளடக்கிய தலை வாழை விருந்து.

என் தேசம் என்ற உன்னத அபிமான உணர்வுடன் ஆத்ம திருப்தியையும் சூட்சமாமான உணர்வுகளைத் தூண்டி விடும் தன்மையுடன் இந்த ஆல்பத்தில் இரு பாடல்கள் உண்டு அதை நான் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்பாக “வந்தே மாதரம்” ஆல்பம் பெற்ற சிறப்புகளைப் பார்ப்போம்.

1997 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, அதாவது 12/08/1997 அன்று வந்தே மாதரம் ஆல்பம் இந்தியாவில் வெளியானது. மேலும் 28 நாடுகளில் சோனி நிறுவனம் தனது லேபிளில் இயங்கும் சக நிறுவனங்களான கொலம்பியா ரெகார்ட்ஸ், எஸ்.எம்.ஈ ரெகார்ட்ஸ், எபிக் ரெகார்ட்ஸ் போன்றவற்றின் கீழ் ஆடியோ கேஸட்டுகள் மற்றும் ஆடியோ ஸிடிக்களை வெளியிட்டது.

ஆல்பத்துக்குரிய பாடல்களை ஒலிப்பதிவு செய்து ரஹ்மான் அவர்கள் சோனி நிறுவன அதிகாரிகளிடம் வழங்க அவர்கள் முதன் முறையாக கேட்கும் போதே ஆச்சரியப்பட்டு லயித்துப் போய் இருக்கிறார்கள். ஹிந்தி மொழி அறியாத பிற நாட்டு அதிகாரிகள் ரஹ்மானின் இசைக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.

ஆசியா சோனி மியூஸிக் நிறுவன தலைமை நிர்வாகி சொன்னது “It was fresh & best”

கொலம்பியா ரெகார்ட்ஸ் தலைமை நிர்வாகி சொன்னது “It’s Unbelievable, I want this one”

எபிக் ரெகார்ட்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி சொன்னது “I don’t care other things, i want this”

வந்தே மாதரம் வெளிவந்த 1997 ஆம் வருடத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் ஒன்றரை மில்லியன் என்னும் அளவிற்கு விற்பனை ஆனது (கேஸட் & ஸிடிக்கள் சேர்த்து)

உலகளவிலும் இந்த ஆலபதின் ஸிடி மற்றும் கேஸட் விற்பனை உச்சம் தொட்டது. இன்று வரை உலகளவில் ஒரு இந்திய இசையமைப்பாளரின் திரைப்பட பாடல்கள் அல்லாத இசை ஆல்பம் ஒன்று அதிகம் விற்பனையானது எனில் அது வந்தே மாதரம் மட்டுமே சுமார் இருபது மில்லியன் என்னும் அளவிற்கு விற்பனை (கேஸட் & ஸிடிக்கள் சேர்த்து)

“உயிரே” படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் ஸாங்கான “தைய்யா தைய்யா” பாடலை இந்த ஆல்பத்திற்காக ரஹ்மான் அவர்கள் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு ஏனோ அந்தப்பாடல் இந்த ஆல்பத்திற்கு பொருத்தமாக இருக்காது என மனதிற்குப் பட்டதால் அப்பாடலை சேர்க்கவில்லையாம்.

2002 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் உலகின் தலை சிறந்த பத்து பாடல்கள் குறித்து பிபிஸி சர்வதேச ஒலிபரப்பு சேவை ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம்பெற்ற “மா துஜே சலாம்” பாடல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

தொடர்ந்து ஆல்பத்திற்கு புகழ் மாலைகளையே சூடி வருகிறேன். அந்த இரண்டு பாடல்களுக்குள் மூழ்கலாமா?

Only U

ஆகஸ்ட் மாதம் பதினான்காம் தேதி இரவு தான் சிங்காரத்தோப்பில் (திருச்சி) உள்ள என்னுடைய வழமையான கடையான எஸ்.வி.கே ஆடியோ சென்டரில் ஒரிஜினல் கேஸட்டை வாங்கினேன். கடைக்குள் நுழையும் போதே பாய் என்னைப் பார்த்து சிரித்தபடி “நீ வருவன்னு தெரியும், கேஸட் செம சேல்ஸ் உனக்காக ஒன்னு எடுத்து தனியா வெச்சுட்டேன்” என்றார். பிறந்த குழந்தையை கவனமான உற்சாகத்துடன் கரங்களில் ஏந்துவது போல் கேஸட்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன்.

ஐம்பதாவது சுதந்திர தினத்தில் சரியாக சொல்ல வேண்டுமெனில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தில் நாம் சுதந்திரம் பெற்ற அதே நள்ளிரவு நேரத்தில் தாய் மண்ணே வணக்கம் கேட்டுக் கொண்டிருந்தேன். நள்ளிரவு ஒரு மணியளவில் உறங்க முயசித்தேன். தூக்கம் கண்ணில் வரவில்லை. சொப்பனம் காண வழியில்லை… ஆனால் ஒரு பாடலை மனம் கேட்க உத்தரவிட்டது. எழுந்து கேஸட்டை வாக் மேனில் பொருத்தி சரியாக அந்தப் பாடலுக்கு ரீல் செல்லுமாறு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து கேட்க ஆரம்பித்தேன்.

கையில் உள்ள ஐந்து விரல்களையும் குவித்து மூடுங்கள். ஒரு மேசை மீது ஒவ்வொரு விரலாகத் திறந்து மேசை மீது மோதுங்கள். ஒரு விதமான ஒலி எழும்புகிறதா? அந்த ஒலியானது இசை வடிவில் ஸ்ருதி பேதமின்றி ஒரு பாடலுடன் சங்கமித்தால் எப்படி இருக்கும்? அந்தப்பாடல் “only U”

முதல் முறை கேட்ட போது மனதில் உதித்த எண்ணம் “இப்படிக் கூட ஒரு பாடலை கம்போஸரால் உருவாக்க முடியுமா?”

“Panchathan Record Inn” ஸ்டுடியோவை ஒரு இசை மஹா சமுத்திரமாக மனம் ஆவாகனம் செய்து கொண்டது. இப்போதும் பாடல் ஒலிக்கத் துவங்கியவுடனேயே கண்கள் மேல்நோக்கி பார்வையை செலுத்த மனம் ஏதேதோ எண்ணங்களில் அலைபாய்ந்தபடி பாடலைக் கேட்டு ரசிக்கிறது.

வந்தே மாதரம் ஆல்பத்திற்கு மிக மிகப் பொருத்தமான பாடல் இது. ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்பதை இப்பாடல் ஜனிக்க காரணமாக இருந்த சில இசைக் கலைஞர்களின் பெயரைக் கேட்டால் விளங்கும்.

பாடலைப் பாடியவர் மற்றும் கம்போஸ் செய்தவர் – ஏ.ஆர். ரஹ்மான்

Percussion அதாவது தாள வாத்திய இசைக் கலைஞர் – சிவமணி

Base Guitar அதாவது பாடலுக்கு அடிப்படையான கிதார் இசைக் கருவியை வாசித்தவர் – கேய்த் பீட்டர்ஸ்

Lyricist அதாவது பாடலாசிரியர் மெஹபூப்

இப்பாடலை அற்புதமான ஒலித்தரத்தில் கேட்டு இசை மேதை ரஹ்மானின் பாண்டித்தியத்தை உணர இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=aMER6t7_EKU

வந்தே மாதரம் ஆல்பம் வெளிவந்த போது ஏழு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. சர்வதேச பதிப்பு என்று சில நாட்கள் கழித்து இந்தியாவில் வெளிவந்த பின்பு மேலும் இரு பாடல் அந்த ஆல்பத்தில் சேர்க்கப்பட்டன

Musafir என்ற பாடலானது ரஹ்மானில் சூப்பர் ஹிட் பாடலான “ஒட்டகத்தைக் கட்டிக்கோ” பாடலின் சாயலைக் கொண்டது. அந்தப் பாடல் இடம் பெற்றே ஆக வேண்டும் என்று சோனி ஆடியோ நிர்வாகிகள் அடம் பிடித்ததால் ரஹ்மான் அதை இணைக்க ஒப்புக் கொண்டார்.

Masoom

இந்தப் பாடல் 2006 ஆம் ஆண்டு எனக்கு அறிமுகமானது. அதாவது வந்தே மாதரம் ஆல்பம் வெளிவந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து. ஒரு தனியார் வங்கியில் அடமானக் கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த கால கட்டம் அது. அப்போதெல்லாம் ஒரிஜினல் ஆடியோ ஸிடி மற்றும் திரைப்பட வீடியோ டிவிடிக்களை மெட்ராஸில் பல்வேறு இடங்களில் கிளைபரப்பி இருந்த கனெக்ஷன்ஸ் ஸ்டோரில் தான் வாங்குவேன். அக்கடை உரிமையாளரின் பூர்வீகமும் என் பூர்வீகமும் ஒன்று. மேலும் அவர் என் வங்கியின் வாடிக்கையாளர் வேறு. அக்கடையின் அண்ணா நகர் கிளையில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் என் ரசனைக் குறிப்பறிந்து பழகுபவர். ஏதேனும் ஆடியோ ஸிடி வேண்டுமெனில் அவரிடம் சொல்லுவேன். கடையில் இருப்பு இல்லையென்றாலும் எனக்காகத் தருவிப்பார். ஸிடி கடைக்கு வந்தவுடனேயே அலைபேசியில் தகவலையும் சொல்லிவிடுவார்.

என் ரஹ்மான் பித்தை அறிந்தவர். ஒரு நாள் வந்தே மாதரம் ஆல்பம் குறித்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இந்த இரண்டு பாடல்கள் குறித்து தெரியுமா என்று கேட்டார். ஒரு ரஹ்மான் ரசிகன் என்ற முறையில் எனக்கு மிக அவமானமாக இருந்தது. அந்த இரு பாடலையும் கடையில் ஒலிக்க விட்டார். ஆல்பம் வெளியான போது கேஸட் வாங்கியிருந்தேன். அதன் பின்பு ஒரிஜினல் ஸிடி வாங்கி பத்திரப்படுத்த வேண்டும் என்று கடைக்குப் போனால் இந்த அதிர்ச்சி.

இந்த Masoom பாடல் மனதை என்னமோ செய்தது. அரைகுறையாக வரிகளின் அர்த்தம் புரிந்தாலும் முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் என்று பாழாய் போன மனது பரிதவித்தது. ஸிடி வாங்கியது ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சமையல் வேலைகளை முடித்து அம்மா நண்பகல் பதினோரு மணியளவில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வந்தமர்ந்த போது இந்தப் பாடல் பற்றி சொன்னேன். “பாடலை ஆடியோ சிஸ்டத்தில் வைக்கிறேன். கேட்டு அர்த்தம் சொல்ல முடியுமா” என்றேன். சம்மதம் தெரிவித்தார்.

முதல் நாள் இரவு பல முறை எனக்கு எட்டிய அரைகுறை புரிதலுடன் பாடலைப் பல முறை கேட்டேன். இது தான், இப்படித்தான் என்று சொல்ல முடியாததொரு உணர்வு, சோகத்துக்கு நெருக்கமானதொரு மனோ நிலையை மனம் எட்டிய அனுபவம்.

அம்மா கவனமுடன் கேட்டு அர்த்தத்தை சொல்லத் துவங்கினார். இது நம்ம தேசம் குறித்த பாடல் இல்லை. நம் தேச மக்கள் குறித்த பாடல். “இந்நாட்டு மக்கள் வெள்ளந்தியானவர்கள்…” முழு அர்த்தத்தையும் அவர் சொல்லி முடித்த பின் அந்தப் பாடலை நான் கேட்கும் போது எனக்குள் இன்னும் பல மாற்றங்கள்.

“இந்தப் பையன் சாதாரணமான இசையமைப்பாளர் இல்லை” – அம்மா உதிர்த்த வாசகம் இது.

ஸிடியில் இருந்த பாடலை என்னுடைய நோக்கியா 6300 (அப்போது) மொபைலிலும் கனெக்ஷன்ஸ் பணியாளர் சேமித்துத் தந்தார்.

ஏதேனும் பெரிய பாதிப்பு என்றொரு செய்தி கேட்டு இப்பாடலைக் கேட்டால்… சொல்ல வார்த்தைகள் இல்லை.

ரஹ்மானின் குரல், ரஹ்மானின் மாறுபட்ட இசை… இவ்விரண்டும் இணைந்து இப்பாடலுக்கு ஜீவனைத் தந்திருக்கிறது என்றால் இப்பாடலில் உள்ள குல்ஸாரின் உன்னத வரிகள் அந்த ஜீவனை அழியாமல் காத்து ரட்சிக்கிறது எனலாம்.

ரஹ்மானின் இந்த anthem ஐ கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள், வரிகளின் அர்த்தம் அறிந்து மெளனித்து லயிப்பில் திளையுங்கள். https://www.youtube.com/watch?v=Q2t8xd40hT4

இந்தப் பாடலுக்கான அர்த்தம் அம்மா சொன்ன கதையெல்லாம் முடிந்து சில வருடங்கள் கழித்து ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த செய்தி வெளியானது.

அம்மாவிடம் அந்த செய்தியை முழுதாக சொல்லி முடிப்பதற்கு முன்பாக அவர் கேட்டது…

“Masoom” பாட்டுக்கு தானே அவார்ட் தந்தாங்க?

நான் ரஹ்மானின் ரசிகன் என்பதற்காக இந்த வார்த்தையை சொல்லவில்லை. இசையை பெரிதும் விரும்பும் ஒரு சாதாரண ரசிகன் என்ற பார்வையில் சொல்கிறேன்.

ரஹ்மானின் இசை பரிணாமங்களை சற்று ஆழ்ந்து அவதானிக்கத் துவங்குங்கள். மொபைல் உபயோகிக்கும் அனைவரிடமும் ஹெட் செட் இருக்கிறது. அதன் துணையுடன் அவர் இசையமைத்த பாடல்களைக் கேளுங்கள். அதில் அவர் நிகழ்த்திய இசை ஜாலங்களை பிரமிப்புடன் உள்வாங்குங்கள். அவரின் தமிழ் இந்தி திரைப்படப் பாடல்களை மீண்டும் கேளுங்கள். பல புதிய சங்கதிகளை உங்களால் உணர முடியும்.

மேலும் அவரின் திரைப் பட இசை தவிர்த்து அவர் ஆல்பங்களுக்கு தந்த இசை நோக்கி உங்கள் செவிப்பார்வையை செலுத்துங்கள்.

அவர் தளம் என்ன, அவரின் ஆளுமை என்ன, அவரின் பாண்டித்தியம் என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு புரிபடத் துவங்கும்.

(தொடரும்)

பின்குறிப்பு : வந்தே மாதரம் ஆல்பம் குறித்த தகவல்கள் எல்லாம் அந்த கேஸட் வெளிவந்த சமயங்களில் வெளிவந்த பத்திரிகைகளில் படித்து. குறிப்பாக இந்தியா டுடேயில் படித்த சங்கதிகளில் நினைவில் இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

எல்லாப் புகழும் ஈசனுக்கே!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here