மெய்ஞானம் தானே!
“நதியிசைந்த நாட்களில்”… என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருவது ஹிந்தி பாப் என்ற களம் தொடர்பானது என யாரும் நினைக்க வேண்டாம். தமிழகத்தைப் பொறுத்த வரை இசை, பாடல்கள் என்றாலே திரைப்பட இசை மற்றும் பாடல்கள் என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, சுஃபி, சாஸ்திரிய சங்கீதம், நாட்டுப்புற பாடல்கள் (Folk) நீங்கலாக பிற தளங்களில் புழங்கும் இசை பற்றி எழுதுவதே என் நோக்கம். அதையும் நாம் ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குண்டு. ஹிந்தி பாப் மீது அதிகளவில் ஈர்ப்பும் ரசிப்பும் இருந்ததால் அது தொடர்பான இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அதிக அளவில் இத்தொகுப்பில் வளைய வருகிறார்கள்.
இந்த விஷயத்தை நினைவில் நிறுத்தி இந்த அத்தியாயத்தைப் படிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், தொடர்கள் போன்றவை நம் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தமான இரு தொடர்களில் ஒலித்த இசை மற்றும் பாடல் பற்றி பார்ப்போம்.
Byomkesh Bakshi
இது ஒரு டிடெக்டிவ் கதாபாத்திரத்தின் பெயர். எழுத்தாளர் ஷரதிந்து பந்யோபாத்யா அவர்கள் பெங்காலி மொழியில் இக்கதாபத்திரத்தை முக்கிய கதை மாந்தராக சித்தரித்து, அவர் புலனாய்வு செய்து குற்றங்களை எப்படி கண்டுபிடித்தார் என்னும் அடிப்படையில் பல மர்மக் கதைகளை எழுதி இருக்கிறார். 90’s களில் இது தொலைக்காட்சித் தொடராக படமாக்கப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. தொடர் மிக சுவாரசியமானதாக இருக்கும். அது தனிக் கதை.
இத்தொடருக்கான முகப்பு இசை குறித்து பார்ப்போம். அந்த இசையே என்னை இத்தொடரைப் பார்க்கத் தூண்டியது. அனந்த ஷங்கர் என்கிற இசையமைப்பாளர் சுமார் தொண்ணூறு வினாடிகளுக்கு ஒலிக்கும் இசைக்காக மிகவும் மெனக்கெட்டிருப்பார்.
சந்தூர், புல்லாங்குழல் என இரு வாத்திய இசைக்கருவிகளை வைத்து இசை ஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார். பாரம்பரியமான இசை, அதில் மர்மமான விஷயங்களை யோசிக்கத் தூண்டும் உணர்வைத் தரும் சூழல் என கனகச்சிதமான இசையை நமக்குள் புகுத்துவார்.
இத்தோடரைப் பார்க்காதவர்கள், இந்த இசையை கேட்காமல் இருப்பவர்கள் முதல் முறை கேட்டால் நிச்சயம் செவிக்கும் கேட்பவர்களின் மனதையும் ஈர்க்கும். தொடரைப் பார்ப்போமே என்ற ஆவலும் துளிர்க்கும்.
சில வருடங்களுக்கு முன்பு இதே தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு இரவு நேரங்களில் பொதிகை தொலைக்காட்சி அலைவரிசையில் தினமும் ஒளிபரப்பானது.
முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளிவந்த காலத்தில் தான் ஒளிபரப்பானது.
தினமும் நள்ளிரவு தாண்டியும் உறக்கம் வராத நாட்கள் அவை. முதல்வரின் உடல்நிலை பற்றி மருத்துவமனை ஏதேனும் தகவல் சொல்லி இருக்கிறதா? அவர் உடல் தேறி எப்போது வீடு திரும்புவார்? தலைமைச் செயலகம் வந்து தன் அலுவலகப் பணிகளை எப்போது பார்ப்பார்? மக்கள் நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை எப்போது தொலைக்காட்சிகளில் தம் காந்தக் குரலில் சொல்லுவார் என்ற ஆவல் மேலிட பரிதவிப்புடன் செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனம் இளைப்பாற வழி செய்தது போல் மாற்றம் தேடி அலையும் மனதிற்கு மருந்தாக இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அமைந்தது.
முதல் முறை சிறு வயதில் பார்க்கும் போது சில நினைவுகள், சில அனுபவங்கள், இரண்டாம் முறை தமிழில் டப் செய்யப்பட்டு பார்க்கும் போது சில நினைவுகள், அனுபவங்கள். இரண்டாம் முறை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது இன்றைய நிலையை நினைத்து மனம் பூசிக் கொள்ளும் வெறுமை என கலவையான உணர்வுகளை இந்தத் தொடரும், முகப்பு இசையும் வெளிப்படுத்தும் காரணியாக அமைகின்றன.
அந்த இசையைக் கேட்டு உள்வாங்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=dpdo8t2F8cQ&t=90s
இரண்டாம் சாணக்யன்
தோராயமாக சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு ராஜ் டிவியில் மாலை நேரங்களில் ஒளிபரப்பான வாரத் தொடர் இது. இத்தொடரைப் பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்புக்கு நடிகர்கள் வேணு அரவிந்த், மதுரை ராஜாக்கனி, தரமான மின்பிம்பங்கள் நிர்வாகத்தின் தயாரிப்பு என பல காரணங்கள் உண்டு. இருப்பினும் பெரிய அளவில் ஈர்ப்பு விசையாக இருந்தது தொடரின் டைட்டில் ஸாங்.
டாக்டர். கிருதியாவின் பாடல் வரிகள் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது. அருமையான ஃபுயூஷன் இசை. இசையமைத்தவர் ரமணி பரத்வாஜ். அந்த காலகட்டத்திலேயே நல்ல சிறப்பான ஒலித்தரத்துடன் பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கும். சிகரம் வைத்தார் போல் உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரல்.
தனித்துவமான குரல், காந்தக் குரல், சகல ஸ்தாயிகளையும் சர்வ சாதாரணமாகக் கடந்து துல்லியமாக ஒலிக்கும் குரல், தே மதுரக் குரல், ஸ்பஷ்டமான உச்சரிப்பை வெளிப்படுத்தும் குரல்… பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சிறு வயதில் முதல் முறை பார்க்கும் போது தொடர் தந்த அனுபவங்கள் ஒரு ரகம். தற்போது வயதான பின் அத்தொடர் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக யூ டியூபில் மீண்டும் தொடரை நான்கு நாட்கள் என்ற கணக்கில் தொடர்ந்து பார்த்த போது பெற்ற அனுபவங்கள் வேறு ரகம்.
தொடர் இப்படி மாறுபட்ட கலவையான ஏராளமான அனுபவங்களை வாரி வழங்கினாலும் பாடல், இசை, பாடல் வரிகள், உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரல்… இவை தந்த பரவசத்தில் எந்த மாற்றமும் இல்லை.
பாடல் துவங்கும் போது சமஸ்கிருத வரிகளை உச்சரிக்கும் பாங்காகட்டும், அடுத்து வேதங்கள் தானே என மனதை ஆசுவாசப்படுத்தி பாடுவதிலாகட்டும், பழமைகள் தானே என்ற ஆலபனையிலாகட்டும், அடுத்து இரண்டாம் சாணக்யன் இவனோ என்னும் உச்ச ஸ்தாயியில் பவனி வரும் நீண்ட ஆலாபனையாகட்டும் பாடல் முழுக்க உன்னி கிருஷ்ணனின் அரசாட்சி தான்!
நான் சொன்னது பல்லவி என்ற ஒற்றைத் துளி மட்டுமே… தொடர்ந்து சரணம், பாடலை அவர் பாடி முடித்த விதம் என அனைத்தையும் இதுவரை இப்பாடலைக் கேட்காதவர்கள் கேட்டு லயிப்பில் மூழ்குங்கள்.
பாடலைக் கேட்டு பரிச்சயப்பட்டவர்கள் இதைப் படித்த பின் மீண்டும் ஒரு முறை கேட்டு கவனமாக அமிழ்ந்து போக முயற்சி செய்யுங்கள்.
பாடலில் மயிர்க்கூச்செறிய இக்கொழுவியை சொடுக்குங்கள் :
https://www.youtube.com/watch?v=sKkQVHtpeqg&list=PLo1pb3Ijm7icFQEi75_ah057H_fMrXPFU
பின் குறிப்பு : முதலில் குறிப்பிட்ட இசையாகட்டும், அடுத்து சொன்ன உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடலாகட்டும் தனியாக அவற்றை மட்டும் கேட்கும் விதத்தில் கொழுவியானது இணையத்தில் இல்லை என்பதால் தொடருக்கான கொழுவியை இணைத்துள்ளேன்.
பிடித்தவர்கள் இசை மற்றும் பாடலை மட்டும் கேளுங்கள். விருப்பம் மேலிட்டால் தொடரையும் கண்டு களியுங்கள்.
(தொடரும்)
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…