காலையிலிருந்து அந்த தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் வினோதமாய் குறைத்துக் கொண்டிருந்தன. தன் வீட்டில் அடுப்படியில் அங்கும் இங்கும் நகர முடியாத படி பரபரப்பாய் காலை நேர வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு மனம் படபடவென்று இருந்தது.

அந்த நாய்களின் ஓலம் காதில் விழுந்து நெஞ்சை பிசைந்தது. ஏதோ தவறாக இருப்பதாக தோன்றி மனதை சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது. என்ன ஏதென்று எட்டிப் பார்க்கலாம் என்றாலோ ஒரு நொடி கூட நகர முடியாதபடி வேலைகள் வரிசையாய் வந்து கொண்டே இருந்தன. தன் கணவனுக்கு, குழந்தைகளுக்கு மாமியாருக்கு என அனைவருக்கும் தேவையானவற்றை செய்து அவர்களுக்கான மதிய உணவுகளையும் ரெடி செய்து அவற்றை பேக் செய்து எடுத்து வைத்து விட்டு அவளும் வேலைக்கு கிளம்ப வேண்டும். தினம் தினம் நான்கு வீடுகளில் பாத்திரம் துலக்கி துணி துவைத்து, கோலம் போட்டு அவள் கொண்டுவரும் சம்பாத்தியம் அந்த வீட்டின் அச்சாணி நிற்காமல் சுழல்வதற்கு வழிவகை செய்தது கொண்டிருந்தது.

அவள் கடிகார முள் போன்றவள்.. ஓய்வு என்பதே இல்லாதவள். அவளது ஓய்வு மொத்த குடும்பத்தையும் ஸ்தம்பிக்கச் செய்து விடும். ஆனாலும் நாய்களின் இந்த வித்தியாசமான குரல் ஏதோ சங்கடப்படுத்தவே கிடைத்த ஒரு சிறு இடைவெளியில் வீட்டிலிருந்து வெளியே எட்டி பார்த்தாள்.

அங்கு அவர்கள் தெரு குப்பைத் தொட்டியின் முன் நாய்கள் சுற்றி நின்று ஒன்றோடொன்று அடித்துக் கொண்டிருக்க, ஒரு நாய் குப்பைத் தொட்டிக்குள் எதையோ கீழே பார்த்துக் கொண்டிருக்க சுற்றிலும் அன்றைக்கு ஏதும் வேலை இல்லாத மக்கள் வேடிக்கை பார்த்த படி நின்றிருந்தனர்.

என்னவோ ஏதோ என்று ஒரு பரபரப்பில் அவளது கணவனும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான சுந்தரம் சென்று என்ன ஏது என்று பார்த்து விட்டு உடனே வந்தவன் “கழிசடைக, இதுக அரிப்புக்கு ஊர் சுத்திட்டு ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ண இப்படி கொண்டு வந்து போட்ருக்குக.. இதுகளுக்கெல்லாம் நல்ல சாவு வருமா? எங்கேயும் சிக்கி சீரழிஞ்சு ஒன்னும் இல்லாம தான் போகும்” என வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்து கொண்டு வந்தான்.

“யோவ்.. என்னாத்துக்கு யா இப்படி கத்துக்கிட்டு வர்றே?” எனக் கேட்டார் மீனாட்சி.

“ஏதோ ஒரு கழுத பிள்ள பெத்து கொண்டு வந்து குப்பை தொட்டியில் போட்டு போயிருக்கு.. அந்த பிஞ்சு போட்டு கடிக்கிறதுக்கு நாய் எல்லாம் கூடியிருக்கு மா” என்றார் சுந்தரம்.

“அடப்பாவமே, பச்சை பிள்ளையே குப்ப தொட்டில போட்டுட்டு போயிட்டாளா? நாய் கடிக்கப் போகுது.. எத்தனை பேரு சுத்தி நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்காங்க? குழந்தையை தூக்கலாம் இல்லையா?”

“தூக்கிட்டு என்ன செய்ய? யாராவது போலீசுக்கு தகவல் கொடுத்தால் அவங்க வந்து குழந்தையை தூக்கும் வரைக்கும் எல்லாரும் எனக்கு என்னன்னு நின்னு வேடிக்கை பார்க்கத் தான் செய்வார்கள்.. ஆள் ஆளுக்கு ஆயிரம் கவல.. ஆயிரம் வேலைகள் அவரவர் குடும்பம் குட்டிகளை பாக்கவே முடியாம கிடக்குறப்போ குப்பைத் தொட்டியில் இருந்த பிள்ளைகளை யாரு தூங்குவா? மனிதாபிமானம்னு ஒன்னு செத்துப் போயி பலகாலம் ஆயிடுச்சு மீனாட்சி” என பேசிக் கொண்டே திரும்பியவர் அங்கே தன் மனைவியை காணாது கண்களை சுழற்றினார்.

விஷயம் என்னவென்று அறிந்ததும் நொடியும் தாமதிக்காது இந்த குப்பை தொட்டியில் அருகே விரைந்தாள் மீனாட்சி. சுற்றியிருந்த நாய்களை எல்லாம் விரட்டி விட்டு குப்பைத் தொட்டிக்குள் தலை நீட்டி பிஞ்சுக் குழந்தையின் கைகளை சப்பிக் கொண்டிருந்த நாயை ஒரு பெரிய கல்லாக தூக்கிப் போட்டு விரட்டினார்.

அது ஓலமிட்டுக் கொண்டே மீனாட்சியை கடிக்க வர, அதற்குள் சுதாரித்த சுற்றி நின்ற மனிதர்களும் கல்லை எடுத்து வீச பயந்து ஓடியது நாய்.

குப்பைத் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தவள், அடிவயிறு கலங்கித் தான் போனது !! தொப்புள்கொடி அறுத்து அதன் உடலில் உள்ள இரத்த கசடுகள் கூட துடைக்காமல் மேனியில் ஒரு துணி கூட போடாமல் பிறந்து ஒரு சில மணித்துளிகளே ஆன பச்சிளம் குழந்தை தொட்டிலில் வீசப்பட்டு இருந்தது. குளிருக்கும், குப்பையில் கிடந்த ஏதோ ஒன்று குத்த அந்த அசவுகரியத்துக்கும், கட்டெறும்புகள் ஊற ஆரம்பித்திருக்க அதன் வீரியம் தாங்காது குழந்தை வீறிட்டு அழுதது.

பார்க்கும் எந்த ஜீவராசியும் கண்ணீர் விட வைக்கும் அவலத்தை கண்டதுமே கண் கலங்கி விட்டது மீனாட்சிக்கு.

நொடியும் தாமதிக்காது குழந்தையை தன் கைகளில் வாரி அணைத்து அவள் தனது சேலை தலைப்பால் குழந்தையின் உடலை துடைத்து விட்டாள்.. அங்கே நின்று கொண்டிருந்த பக்கத்து விட்டு கிழவியை விளித்தவள், “ஆத்தா, சுருக்கா கொஞ்சம் வெண்ணி வெலாவி குடு.. பிள்ளைக்கு மேலுக்கு ஊத்திடுவோம்.. மேலு எல்லாம் கசடா இருக்கு” என்றாள்.

“ஏன் தாயி, போலீஸ் வந்தா நம்ம தலைய உருட்டுவாக, நம்ம சோழிய போட்டுட்டு ஸ்டேஷனுக்கும் கேசுக்கும் அழைய முடியுமா? உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? நீ வேலைக்கு போகாம, உன் வீட்டில் அடுப்பு எரியாது. இங்க இருக்க எல்லாருக்கும் அப்படித்தான்” என அங்கலாய்த்த படி, அவர் கேட்ட வெண்ணீரை வைத்துத் தந்தார் பாட்டி .

உண்மையில் அந்தக் குழந்தையின் நிலை அனைவர் கண்களிலும் கண்ணீர் வர வைப்பதாக இருந்தாலும் யாரும் அச் சுமையை தங்கள் தோளில் தூக்கிக் கொள்ள விரும்பவில்லை. அனைவர் இதயமும் கனத்துப் போய் நின்றிருக்கும் வேளையில், தேவதையாய் ஓடி வந்து அதை தன் கைகளில் தாங்கினாள் மீனாட்சி.

உடனடியாய் குழந்தைக்கு குளிக்க வைத்து, தன் வீட்டில் இருந்த ஒரு சுத்தமான துணியில் அதை சுருட்டி தாய்ப்பால் புகட்டி, தன்னுடைய ஐந்து மாத குழந்தையுடனே அக்குழந்தையையும் சீராட்டி உறங்க வைத்தாள். அவளது தாய்மை கண்டு மொத்த சனமும் கண்ணீர் விட்டபடியும், குப்பை தொட்டியில் வீசிய கொடூரர்களை வசை பாடியபடியும் கலைந்து செல்லல் ஆயிற்று.

குப்பைத் தொட்டியில் குழந்தை கிடைக்கும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினருக்கு , குழந்தை இந்நேரம் குற்றுயிராகவாவது இருக்குமோ? இல்லை உயிரையே விட்டு இருக்குமோ? என்ற கவலையே பிரதானமாக இருந்தது. கவலை தோய்ந்த முகத்துடன் தனது ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்தார் உதவி ஆய்வாளரான கௌசல்யா.

காவல் வாகனத்தில் பயணித்துக் கொண்டே தன்னுடைய சினேகிதியின் வாழ்க்கையையும் இக்குழந்தையின் நிலையையும் எண்ணியபடி வந்தார் கௌசல்யா. நாட்டில் எத்தனையோ பேர் குழந்தை எனும் வரம் கிடைக்காமல் தவமாய் தவம் இருக்க குழந்தைப் பேறு என்பது மிகப் பெரிய வியாபார சந்தை ஆகிவிட்ட நிலையில், குழந்தையின்மைக்கான சிகிச்சைகளும் குழந்தைகளுக்கான பொருள்களின் வர்த்தகமும் கொடி கட்டி பறக்கும் இந்த காலத்தில், ஏங்கித் தவிக்கும் நல் உள்ளங்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் போக, அவசரத்தில் ஆசை கொண்டு காமத்தை காதல் என்று எண்ணி திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து பின், மான அவமானம் கருதி வயிற்றில் சுமந்த பிள்ளையை அழிப்பதும், அழிக்க முடியாத பட்சத்தில் குழந்தையை பெற்று இரவோடிரவாக இப்படி குப்பை தொட்டிகளில் வீசிச் செல்லும் அவலமும் ஆக, இரண்டும் நடப்பது ஒரே பூமியில் தான்!

குழந்தைகளுக்கான ஏக்கங்களும் பெற்ற பிள்ளையை தூக்கி விசிறி எறியும் இரக்கமற்ற நீசர்களும் வாழ்வது இதே மண்ணில் தான்.

இன்று நேற்று ஆரம்பித்ததா இது? முறையாய் திருமணம் முடித்து திருதிராஷ்டிரன் உடன் வாழ வந்த காந்தாரி பல ஆண்டுகள் குழந்தை பேறு இல்லாமல் தெய்வத்தை சுற்றி சுற்றி வந்து பிள்ளைப் பேறு கேட்டதும், குந்தவை விளையாட்டாய் சூரியனை அழைத்து ஒரு பிள்ளையை பெற்று அதன் அருமை தெரியாமல் அதை ஆற்றில் விட்டதுமாய் புராணங்களே சொல்லித் தந்த கொடூரம் அல்லவா இன்றும் தொடர்கிறது.

தனது மூத்த பிள்ளை கர்ணனை ஆற்றில் விட்ட பாவத்திற்கு குந்தவை வாழ்நாளெல்லாம் மனதால் கண்ணீர் வடிக்க நேர்ந்தது. தன் பிள்ளைகளே ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டு அவளுடைய சொந்த ரத்தங்களாலேயே அவளுடைய பிள்ளையை இழக்க நேர்ந்தது. ராஜகுமாரனாய் வளர வேண்டியவன், தேரோட்டியின் மகனாய் பழிச்சொல் ஏற்று எல்லா இடங்களிலும் அவமானம் தாங்கி திரிய வேண்டியிருந்தது. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது இது தானோ? கடைசி வரை அரசியாக , ராஜ மாதாவாக கௌரவமாகவே வாழ்ந்து மடிந்தார் குந்தவை. அவள் செய்த தீச்செயல் அவளை பாதிக்கவில்லை.

ஆனால் பாவப்பட்ட வயிற்றில் பிறந்ததற்காக பாவப்பட்ட ஜீவனான கர்ணன் அனைத்து கொடூரங்களையும் தாங்கினான். கூடா நட்பு கொண்டு கேடில் தன் வாழ்வை தொலைத்தான்.

திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன போதிலும் குழந்தை வரம் கிடைக்காமல், சுற்றியிருக்கும் சமூகத்தின் வாயில் அவலாக அரைபட்டு கொண்டு, மருத்துவமனைகள் கோவில்கள் என வரம் தரும் தெய்வத்திற்கு, சுற்றி சுற்றி ஓடி ஏதோ ஒரு நிமிடத்தில் அனைத்தும் சலித்து. ‘எதுவுமே வேண்டாம்.. எனக்கு நீ குழந்தை .. உனக்கு நான் குழந்தை..’ என எண்ணியபடி வாழ ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையை, தம்பதிகளின் வலியை வார்த்தைகளால் உரைக்க இயலாது. அவள் முத்துலட்சுமி கௌசல்யாவின் உற்ற தோழி!!

மனதில் ஏதேதோ எண்ணங்கள் உடன் விரைந்து வந்து சேர்ந்த கௌசல்யாவை வரவேற்றது குப்பைகள் மட்டுமே இருந்த குப்பைத்தொட்டி..!! குழந்தையை காணாது தவித்த அவர், ஏதும் நாய்கள் தூக்கிக் கொண்டு பிஞ்சு குழந்தையை துண்டு துண்டாகக் கடித்து தின்று விட்டது என்று நினைத்து தன்னுடைய பதவியையும் மறந்து அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய காவலர்கள் அக்கம் பக்கம் மனிதர்களை அழைத்து விசாரிக்க, குழந்தையை மீனாட்சி எடுத்து சென்று இருப்பது தெரிந்தது.

அங்கு சென்ற போது அவர்கள் கண்ட காட்சி, தன் குழந்தையை அருகில் படுக்க வைத்து அதன் வயிற்றில் தட்டியபடி, குப்பைத் தொட்டியில் இருந்து கிடைத்த செல்வத்தை மாரோடு அனைத்து தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்த மீனாட்சியை தான்..!!

கருவுற்று குழந்தை பெற்று ஐந்து மாதங்கள் கடந்து இப்போது தான் இரண்டு வாரங்களாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள் மீனாட்சி. அத்தை அம்மாள் பத்மாவதி இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள கணவனும் மனைவியும் வேலை பார்த்து குடும்பத்தை ஓட்டும் அன்றாடங்காச்சியின் வீட்டில் தன்னுடைய ஒரு நாள் வருமானத்தையும் துறந்து வீட்டில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தவளை “இப்படி செய்யாதே.. நம் குடும்பத்தை பார்..” என்று அதட்ட கூட மனம் இல்லை யாருக்கும்..!!

அனைவருக்கும் ஒரே நாளில் தேவதையாய், தெய்வமாய் உயர்ந்து தெரிந்தாள் தாய்மை உணர்வு மீதூறிய மீனாட்சி. குழந்தை அங்கு இருப்பதை கண்ட கௌசல்யாவிற்கும் மனம் நிம்மதி அடைந்தது. பின் அவர்களிடம் விசாரணை நடத்தி, “குழந்தையை ஒரு ஒரு வாரம் நீங்களே பார்த்துக் கொள்ள முடியுமா? இதற்கு யாராவது தத்தெடுக்க தயாராக இருக்கிறார்களா என விசாரித்து விட்டு குழந்தையை ஏதேனும் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.. பச்சிளம் குழந்தைக்கு நீங்கள் பால் புகட்டும் போது, குழந்தைக்கு தாய்ப்பாலே கிடைப்பதை தடுக்க மனம் வரவில்லை” என உருகி கேட்டுக் கொண்டார் கௌசல்யா.

அதிகாரியாய் வந்து “நீ எப்படி குழந்தையை எடுத்துட்டு வரலாம்?” என அதிகாரம் பண்ணாமல் அவளது தாய்மையையும் மதித்து அவளிடமே குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்ன கௌசல்யாவை நினைத்து மனம் நெகிழ்ந்தது.

ஆனால் ஒரு வாரம் தங்கள் குடும்பம் எப்படி ஓடும் என்ற கவலையும் அவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஒரு வார சம்பளத்தை தானே தருவதாக கூறினார் கௌசல்யா.. “மீனாட்சியம்மா ஒரு வாரம் மட்டும் குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க.. நான் இந்த குழந்தைக்கு ஏதாவது ஏற்பாடு பண்றேன். அது வரைக்கும் உங்க குடும்பம் ஓடுவதற்கு உங்களுக்கு தேவையான பணத்தை.. இல்ல இந்த குழந்தையை பராமரிப்பதற்கான பராமரிப்பு செலவுனு வச்சுக்கோங்க.. நான் கொடுக்கிறேன்” என்றார் கௌசல்யா.

அப்போது இடையிட்டசுந்தரத்தின் குரல் “அம்மா, தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு சின்னஞ்சிறு குழந்தையை ஒரு வாரம் பார்த்துக் கொள்வதில் ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டோம். பணம் எல்லாம் ஒன்னும் வேணாம்.. இந்த பிள்ளை வாழ்வதற்கு நல்லபடியா ஒரு இடத்தில் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.. அதுவரைக்கும் நாங்க பாத்துக்குறோம்” என்றார். அப்போது ஆண்களிலும் தேவதைகள் உண்டு என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் கௌசல்யாவின் கண்ணுக்கு தெரிந்தார் சுந்தரம்.

சரியென விடைபெற்று கணத்த மனத்துடன் தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

வழக்கம் போல அந்த மாதமும் அந்த மூன்று நாட்கள் வந்துவிடவே, தன் மன அழுத்தம் தாங்காது தனது தோழிக்கு அழைத்தாள் முத்துலட்சுமி.. “சொல்லுமா.. எப்படி இருக்க?” என கேட்ட கௌசல்யாவுக்கு எதிர்புறம் இருந்து அழுகை குரல் பதிலாக வந்தது.

” இப்போ என்ன ஆகிடுச்சுன்னு இப்படி அழுதுகிட்டிருக்க?”

“கௌசல்யா இந்த மாசமும் நான் தலைக்கு ஊற்றி விட்டேன்” என தேம்பழுடன் பதில் அளித்தாள் முத்துலட்சுமி.

“சரி சரி அழுகாதே .. கடவுள் ஏன் தான் இப்படி தகுதி இல்லாத இடத்துக்கு செல்வத்தை வாரி வழங்கி, தகுதியான இடத்தை வெற்றிடமாக விட்டு வைக்கிறானோ தெரியல?” என தானே புலம்பினார் கௌசல்யா.

எப்போதும் தனக்கு ஆறுதல் மொழியும் தோழி என்று அவருடன் பேசுவதை கண்ட முத்துலட்சுமி தன்னுடைய கவலைகளை சிறிது நேரம் ஒதுக்கி வைத்து “என்னாச்சு ஏன் இவ்வளவு வருத்தமா பேசுற?” எனக் கேட்டார்.

” குழந்தை இல்லாத உனக்கு எந்த கோயில் ஏறியும் எந்த டாக்டர பார்த்தும் குழந்தை இன்னும் உருவாகவில்லை.. எத்தனையோ பேர் தங்கள் சொந்த உயிர் தான் தங்களுக்கு பிள்ளையா வரணும்னு காத்துக் கிடக்கிறார்கள் அதுக்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள, இன்னொரு பெண்ணோட ஹார்மோன்களோட விளையாடி அவள் உடலுக்கு கேடு விளைவித்து.. பத்து மாதம் வயிற்றில் பிள்ளையை சுமக்க வைத்து அதை ஒரேடியா தங்களோடதுன்னு வாங்கிட்டு போயிடுறாங்க.. இல்ல குழந்தை இல்ல குழந்தை இல்லைன்னு உன்னை போல புலம்பி அழுது கொண்டே இருக்கிறார்கள். இங்க ஒன்னு ரெண்டு பேரு தான் அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளை தத்து எடுக்குறாங்க..

ஆனால், சிலர் இளமை வேகத்தில் வாலிப முறுக்குல ஒரு குழந்தையை சட்டுனு உருவாக்கி விட்டு அதை குப்பைத் தொட்டியில் எங்களுக்கு என்னன்னு கடாசிட்டு போயிடுறாங்க.. தகுதி இல்லாத இடத்தில் பிறந்த குழந்தை குப்பை தொட்டியில், கட்டெறும்புகள் கிட்டயும் நாய் கிட்டயும் கடி வாங்கி இறந்து போய்டுது” என்றாள்.

” என்ன சொல்ற? குப்பைத்தொட்டி குழந்தை நாய் கடிச்சிருச்சா” தாய்மை மீதுற பதறினாள் முத்துலட்சுமி.
“எப்பவும் அப்படித் தான் நடக்கும் ஆனா இன்னைக்கு அப்படி நடக்கலை… ஒரு ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் அந்த குழந்தையை எடுத்து குளிப்பாட்டி தன் குழந்தையை போல பாதுகாத்து தன் மடியில் போட்டு இருக்காங்க ஒரு அம்மா.. ஆனால் அந்த குழந்தையையும் சேர்த்து பார்க்கிறதுக்கு அவங்களுக்கு பொருளாதார வசதி இல்லை” என்ற கௌசல்யா, வேறு ஏதும் பேசாமல் “எனக்கு ரொம்ப வேலை இருக்கு.. அந்த குழந்தைக்கு ஒரு அப்பா அம்மாவை தேடி கண்டுபிடிக்கணும்.. அதைக் குப்பைத் தொட்டியில் வீசிட்டு போன கழுதையை புடிச்சு பொடனிலேயே நாலு சாத்து சாத்தி தூக்கி ஜெயில்ல போடணும்.. இல்ல நான் என் மனசு ஆறவே ஆறாது.. சரி வச்சுடறேண்டி ” என்ற படி போனை வைத்து விட்டார் கௌசல்யா.

முத்துலட்சுமிக்கு தீவிர சிந்தனை.. ‘கொஞ்சம் கூட வசதி இல்லாத அன்றாடங்காச்சியான ஒரு பெண் எந்த வித தயக்கமும் இல்லாமல் குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையை எடுத்து தன் மடியில் கிடத்தி தாய்ப்பால் கொடுக்கிறாள்.. எனக்கு எல்லா வசதியும் இருக்கு. சொத்து பத்துக்கு குறைவே இல்லை.. ஆஸ்தி அந்தஸ்து எவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறேன்.

ஆனால் குழந்தை என்ற ஒரு வாரம் எனக்கு கிடைக்கவே இல்லை..!! அப்படி இருக்கிறப்போ, எத்தனையோ பிள்ளைகள் அனாதையாக இந்த நாட்டில் இருக்கிறது.. அதுல ஒரு பிள்ளையை எடுத்து அதுக்கு தாயாக மாற என்னால முடியல.. அப்போ என்னுடைய தாய்மை உணர்வில் தான் ஏதோ கோளாறு.. வீட்டில் சம்மதிக்க மாட்டார்களோ, என்னவோ ஏதோ என்று என்னென்னவோ யோசிச்சு அந்தஸ்து பார்த்து ஒரு குழந்தையை தத்து எடுக்க கூட முடியாமல் என்னை எது தடுக்குது? நாங்களும் அன்புக்காக ஏங்குறோம்.. அங்க ஒரு குழந்தையும் பரிதவித்து கிடக்கு.. ஒரு தாய் வேணும்னு ஏங்கி கிட்டு இருக்கு. கடவுள் இப்படியான குப்பைத்தொட்டி குழந்தைகளுக்காகத் தான் என்னை போல குழந்தை பாக்கியம் இல்லாத தாய்மார்களையும் வச்சிருக்காரு போல’ என பலவாறாக சிந்தித்தவள் தன் கணவனின் வரவிற்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

வீட்டிற்கு வந்த நீலனுக்கு.. தன் மனைவியின் முகமே சொன்னது அவளது நிலையை. அவளது முகத்தைக் கொண்டே அவளது பரிதவிப்பு புரிந்தவர் மெதுவாய் வந்து அவளது தலையை கோதினார். அந்த ஒரு நொடிக்காகவே காத்திருந்தது போல் சட்டென உடைந்து அழுதவள் தன் கணவனின் மார்பில் சாய்ந்து ஆதரவு தேடினாள்..

தன் மனைவியை அணைத்து அவரது தோளில் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தி.., ” விடுடா அடுத்த மாசம் பார்த்துக் கொள்ளலாம்.. நமக்குன்னு ஒரு குழந்தையை கடவுள் குடுக்காமலா போய்டுவார்” என்றார் துன்பம் மேலிட்ட குரலில்.

தன் கணவனின் குரலிலேயே அவருடைய வருத்தம் புரிய.., மேலும் உடைந்து அழுத முத்துலட்சுமியும் இம்முறை தீர்க்கமான முடிவில் இருந்தாள்.

“என்னங்க கடவுள் நமக்கான குழந்தையை அனுப்பி வைத்து விட்டார்.. அத தக்க வச்சுக்கறதும் இல்லாததும் நம்ம கையில தான் இருக்கு” என்றாள் முத்துலட்சுமி.

“நீ என்னம்மா சொல்ல வர நமக்கான குழந்தையை அனுப்பி விட்டாரா?” என கேட்டார் நீலன்.

“ஆமாங்க, நமக்கான குழந்தை அங்க நமக்காக காத்துக்கிட்டு இருக்கு. நாம உடனே நம்ம குழந்தையை கூட்டிட்டு வரணும்” என்றவரின் குரலே, அவரது உறுதியையும் முடிவையும் அழுத்தமாகச் சொல்ல.. ” என்ன நடந்துச்சு.. நீ என்ன சொல்ல வர்ற? தெளிவா சொல்லு” என நிதானித்து கேட்டார் நீலன்.

கௌசல்யா தன்னிடம் கூறியவற்றை எல்லாம் தன்னுடைய கணவனிடம் சொன்னவள், ” நமக்குன்னு என்னோட வயித்துல ஒரு புழு பூச்சி முளைக்கலனு தானே இத்தனை நாள் காத்துக் கிடந்தோம்.. அதெல்லாம் போதும். நமக்கு ஒரு குழந்தை வருதோ இல்லையோ அப்படி வரணும்னு விதி இருந்தால் அது வர்றப்போ வரட்டும்.. ஆனா இப்போ ஒரு குழந்தை தாய்க்காக ஏங்கிட்டு இருக்கு.. நான் ஒரு குழந்தை வேணும்னு ஏங்கிகிட்டு இருக்கேன்.. இதை ஏன் கௌசல்யா என்கிட்ட சொல்லணும்? இன்னைக்கு எதுக்கு எனக்கு ஒரு வாரம் முன்னாடியே தலைக்கு ஊத்தணும்? இதெல்லாம் கடவுளுடைய சித்தம்.. என்று எனக்கு தோணுது.. என் வயித்துல தங்க வேண்டிய பிள்ளை.. வேறு ஏதோ ஒரு வயத்தில் பத்து மாசம் தங்கியிருந்து விட்டு வெளியே வந்ததா தான் நினைக்கிறேன்.. கொஞ்சம் கூட காசு இல்லாத ஒரு அம்மா எந்த ஒரு முன் யோசனையும் இல்லாமல் அந்த குழந்தையை தூக்கி தன் பிள்ளைக்கான தாய்ப்பாலை பகிர்ந்து அளிக்க முடியும்னா.. ஒரே ஒரு குழந்தையோட அழுகை சத்தத்துக்கு ஏங்கிட்ருக்கிற என்னால அந்த குழந்தைக்கு நல்ல தாயாக இருக்க முடியாதா? கண்டிப்பா நான் என்னோட குழந்தையா அந்த குழந்தையை பார்த்துப்பேன்.. நீங்க எல்லாருமே என் குழந்தைய என் குழந்தையா தான் பார்க்கணும்.. நம்ம குழந்தையா நாம, அத சிறப்பா வளர்ப்போம்.. போய் நம்ம பிள்ளையை தூக்கிட்டு வரலாம்” என்ற படி கண்ணீர் விட்டார் முத்துலட்சுமி.

கல்லும் கரைந்துவிடும் அவர் அழுத அழுகையை பார்த்தால் .. கட்டின கணவன் கலங்காமல் இருப்பானா? “நான் நாளைக்கு சொல்றேன் முத்து” என்ற படி தன் மனைவியின் தலையை ஆதரவாக கோதி விட்டு எழுந்து சென்றார் நீலன்.

தனியாய் அமர்ந்து யோசித்தவருக்கும் இதுவே சரி எனப்பட்டது. ‘உதிரத்தில் உதித்தால் தான் குழந்தையா? அன்பு பாசம் என்பதெல்லாம், தன் மனைவி தன்னுடைய உதிரம் என்பதாலா அவள் மீது வந்தது.. இல்லையே.. அப்படி இருக்க குழந்தை என்ற ஒன்று மட்டும் ஏன் தன்னுடையதாக, தனது ஜீனில் இருந்து உதித்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்? தாயில்லாத குழந்தைக்கு தாயும் தகப்பனுமாக தாங்கள் மாறினால் தான் என்ன?’ என்று அவர் உள்ளமும் சிந்திக்க.. அது உறவுகளிடம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தவர் ‘நான் என் பிள்ளை மேல பாசமா உறுதியா நின்னா என் முன்னாடி என் பிள்ளைய பேசுற தைரியம் யாருக்கு வரும்? எங்களோட வாழ்க்கையில்ந் கணவனும் மனைவியுமா நாங்கள் எங்களுக்காக ஒரு ஜீவனை எங்க வாழ்க்கை கொண்டு வர்றப்போ அதை கேட்பதற்கு யாருக்குத் தான் உரிமை இருக்கு? என நினைத்தவர்.. ஆனாலும் தன் பெற்றோரிடமும் தன் மனைவியின் பெற்றோரிடமும் அன்றிரவே பேசி தங்கள் முடிவை அறிவித்தார்.

அவர்களிடம் ‘குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளட்டுமா?’ என்று கேட்கவில்லை.. பெரியோர்கள் ஏதேனும் மறப்பாய் சொல்லி விட்டால் என்ன செய்வது என நினைத்தவர் தன்னுடைய முடிவாய் அதை அறிவிக்க மட்டுமே செய்தார்.

தன் முடிவை அனைவருக்கும் அறிவித்தவர் அன்றிரவே தன் மனைவியின் முன் வந்து நின்றார் .. “நாம நாளைக்கு கௌசல்யாட பேசி நம்ம குழந்தையை நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்மா..” என்ற அவரின் ஒற்றைச் சொல்லுக்கு காத்து இருந்தவள்.. அவ்வார்த்தை கிடைத்ததும் என்றுமில்லாத ஆதுரத்துடன் தன் கணவனை இழுத்து அணைத்து அவர் கன்னத்தில் தன் காதல் முத்திரையை பதித்தாள் முத்துலட்சுமி!

மறுநாள் கௌசல்யாவுக்கு அழைத்து அக்குழந்தையை தாங்களே தத்து எடுத்துக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினர் கணவனும் மனைவியும்.
” சரி” என ஒத்துக் கொண்டு அதற்கான பூர்வாங்க சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி விட்டு.. மீனாட்சியின் செம்மையான செயலைப் பற்றி அரசாங்கத்திற்கு விரிவாக ஓர் அறிக்கை அனுப்பினார் கௌசல்யா.

செய்திப் பசியில் சுற்றித் திரியும் ஊடகங்களுக்கு எல்லாம் இச்செய்தி ஓர் பரபரப்பான சுவாரசியத்தை கொடுக்கவே மீனாட்சியின் வீட்டு முன் திரண்டு அவளிடம் பேட்டி காண தவித்தனர். ஆனால் பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்று அவர்களை எல்லாம் தவிர்த்தாள் நீனாட்சி.

“தாய்மை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு பொருள் இல்ல.. அந்த குழந்தையை தூக்கி குளிப்ப்டாட்டி பால் குடுத்தது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. குழந்தையோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் மாதிரியான செயல்களில் ஈடுபடாதீர்கள்” என்று ஊடகங்களை அனுப்பி வைத்தாள்.

அதுவும் கூட அவளுக்கு தேவதையான தோற்றத்தைத் தர தமிழ் நாடே கொண்டாடியது மீனாட்சியின் தாய்மையை. அவளது ஏழ்மையிலும் செம்மையை எண்ணி வியந்த முதலமைச்சர் அவளுக்கு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பராமரிக்கும் அரசாங்க வேலைக்கான உத்தரவை பிறப்பித்தார்.

முத்துலட்சுமியும் நீலனும் அக்குழந்தையை தங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ள அவர்களை வாழ்த்தி, குழந்தையை அவர்களுடன் அனுப்பி வைத்தார் மீனாட்சி.

குப்பைத்தொட்டியில் எறும்புகளுக்கிடையே மாண்டு போக இருந்த குழந்தை தன்னை ஈன்றெடுத்தவளிடம் தாய்மையை பெறாத குழந்தை.. வேறு இரு தாய்மார்களின் தாய்மையில் மூழ்கி தான் கேவலமான பிறப்பல்ல.. தான் புனிதமான தேவனுக்கு ஒப்பான ஜீவன்.. தன்னை ஈன்றெடுத்த ஈனப்பிறவி தான் கேவலமானது என உலகுக்கு உணர்த்தி தனக்கு கிடைத்த உண்மையான தாயின் கைகளில் அவளின் தாய்மையின் கதகதப்பில் நிம்மதியாய் உறக்கம் கொள்ள ஆரம்பித்தது அப்பச்சிளம் சிசு.

எந்தக் குழந்தை பிறந்ததும் அது தனக்கு வேண்டாம் என்று குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தாளோ, அதை மறைத்து திருமணம் செய்து தன் கணவனுடன் வாழப் போகும் வாழ்க்கையில் குழந்தை என்ற பாக்கியமே கிடைக்காமல் துன்புற்று நலிவுற்று கடைசிவரை பிள்ளைப்பேறு இல்லாமல் கணவனும் கைவிட்டு கடைசி காலத்தை தன்னந்தனியாய் கழிக்க போகிறாள் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை..

ஒரு பெண் கிடைத்தாள் என்று தன்னுடைய ஆண்மையை அவள் வயிற்றில் இறக்கி வைத்து பின் அவளுக்கும் குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஆண் திமிரில் திரிந்தவன் வரக்கூடாத நோயை பெற்று பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல், அவனை சீண்டவே அனைவரும் அஞ்சி ஒதுங்க யாருமற்ற அநாதையாய் பூட்டிய வீட்டினுள் செத்து புழுவரித்துப் போய் தான் இறந்து கிடப்போம் என்பதை அவனும் அறிந்திருக்கவில்லை.

அந்தந்த நாளில் அவ்வப்போதைய சுகத்திற்காக நவீன காலத்தில் சில பல கட்டுப்பாடுகளை உதறித் தள்ளி, சினிமாவிலும் கதைகளின் காட்டப்படும் மிதமிஞ்சிய காமத்தை காதலாக எண்ணி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதோடு அல்லாமல், சின்னஞ் சிறு சிசுக்களை அனாதைகளாக உருவாக்கி இப்புவியில் திரியும் அனைவரும் அசுரர்களே..

அசுரர்களை அழிக்க தேவர்கள் முயல்வதில்லை.. அசுரர்களால் விளைந்த பாதகங்களை தங்களின் நல்ல உணர்வால் மீட்டு எடுத்து அவற்றை நல்வழிப்படுத்தி தேவதைகளாக மிளிரச்செய்கிறார்கள் தேவதைகளான நல்ல உள்ளங்கள். அதனாலேயே இவ்வுலகம் இன்னும் சமநிலையுடன் சுழன்று கொண்டிருக்கிறது..

குப்பைத்தொட்டிகள் குப்பைகளை மட்டுமே பெற்றுக் கொள்வதில்லை சிலசமயம் தேவதைகளையும் தன்னுள்ளே பெற்றுக் கொண்டு சில பல நல்ல உள்ளங்களை இந்த உலகிற்கு காட்டிக் கொண்டே இருக்கிறது..!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago