உறக்கமின்றி தவித்து விடியற்காலையில் தான் தூங்கினால் ஸ்ருதி. அதிகாலையிலேயே எழுந்து விடும் அவளை இன்னமும் காணோமே என்று காயத்ரி வந்து அவளை பரபரத்தாள். சிறு குழந்தைபோல அசந்து தூங்கும் அவள் முன்நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துக்களுடன் எழுப்பினால், கண்கள் சிவந்து களைப்பாக தெரிந்தவளை, “நைட் லேட்டா தூங்கினியா டா என்று கேக்க, தான் ரகுவோடு பேசியதாக அன்னை நினைப்பது புரிந்தாலும் தற்சமயம் சொல்ல வேறு பதில் இல்லையென்று வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
“ சரி சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வா” என்றுவிட்டு போனார் காயத்ரி..
குளித்து தயாராகி கீழே வந்தவளை மனம் நிறைந்த புன்னகையோடு எதிர்கொண்டார் சுந்தரம். அப்பாவை கண்டதும் தொண்டை அடைக்க விரைந்து வந்து கட்டி கொண்டவளை, “நூறு வயசுக்கு சௌக்யமா க்ஷேமமா இருக்கணும்டா செல்லம்” என்று வாழ்த்தி விபூதியிட்டு ஆஷீர்வதித்து. பரிசை கையில் தந்தார்.
ஸ்ருதி பூஜையறையில் கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள். நேற்று இரவு ரகு சொன்ன விஷயம் தன் பெற்றோருக்கும், ரகுவின் பெற்றோருக்கும் தெரியும் பட்சத்தில் வரப்போகும் பிரச்சனைகளை சமாளிக்க தனக்கு திடம் தர வேண்டுமென்று. ஏனோ அந்த நொடியில் நானும் ரகுவும் சேர்ந்து இதை சமாளிக்க வேண்டும் என்று வேண்ட தோணாது போனது விதியின் சதியோ???. அவளுக்கு அவளுடைய பெற்றோர் மீது நம்பிக்கையிருந்தது. ஆனால் ரகு வீட்டில்???
வழக்கம் போல பூஜை முடித்து பாட ஆரம்பித்தாள்.
சுகமான ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த டி.என். பாலா எழுதிய பாடல்..
விளையாட இது நேரமா முருகா-
விளையாட இது நேரமா…
என்
வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது….
களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து
உளமார உனை நாடி உனை பாடி வரும்போது
புரியாத புதிரோ நீ அறியாத கலையோ…
பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ..
விரித்தோகை மயில்மீது வருவாய் என்ரெதிர் பார்த்து..
வழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது
உள்ளம் உருகி பாடிக்கொண்டிருந்தவள் மனக்கண் முன் முருகனாய் முகுந்தன் சிரிக்க திடுக்கிட்டு கண்திறந்தால். பாடல் தொண்டை குழியிலேயே தேங்கி நின்றது.
காயத்ரி எப்போதும் செய்யும் குலாப்ஜாமூனும், ஸ்ருதிக்கு பிடிக்குமென அசோகா அல்வாவும் செய்திருந்தார். சுரத்தே இல்லாமல் வந்தமர்ந்த மகளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, “என்னமா இன்னிக்கி 2 ஸ்வீட்டா” என்று கேட்க… “ஆமான்னா, நம்ம ஸ்ருதி குட்டி நம்மளோட கொண்டாடுற கடைசி பிறந்த நாளாச்சே” என்று யதார்த்தமாய் சொல்ல ஸ்ருதிக்கு புரையேறியது.
கண்கள் கலங்க நிமிந்து பார்த்தவளை கண்டு பதறிப்போய், “அம்மா சொன்னதெல்லாம் மனசுல போட்டுக்கப்டாது டா” என்று தேற்றிக்கொண்டே மனைவியை முறையிட்டார். ஆனால் அதற்குமேல் உணவு உள்ளே செல்ல மறுக்க அறைகுறையாய் முடித்து ஆடிஷன் கிளம்ப காரில் ஏறும் சமயம் ஜீவானந்ததிடமிருந்து அழைப்பு வந்தது..
“உங்காத்துக்கு தான் வரோம் மாப்ள ஆத்துல தானே இருக்கேள்”
…
“தோ ஸ்ருதியோட ஆடிஷன் கெளம்பறேன் அத்தான்” என்றார்.
“ஸ்ருதி கார்ல தானே போறா. அவ போட்டும் நாம கொஞ்சம் பேசணும் அதான்..” என்று இழுக்க.. மனமேயின்றி முதல் முறையாக ஸ்ருதியை தனியே அனுப்பினர். அதுவும் வசதி தானென்று நினைத்துக்கொண்ட அதே சமயம் ரகு தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டானோ, கல்யாணத்தை நிறுத்த தான் அத்திம்பேர் வருகிறாரா என ஏகத்துக்கு குழம்பிப்போனது பெண் மனம்.
விடிகாலையில் கதவு தட்டப்பட கதவை திறந்த ஜீவா ஆச்சர்யத்துடன் என்னடா ரகு கல்யாணம் சேர்த்தான் வருவேன்னு நெனச்சோம் இப்டி சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு வந்து நிக்கறே என்று கேட்க அந்த சத்தம் கேட்டு வந்த தேவகிக்கும் ஆச்சர்யம் தான். ரகு முகத்தில் தெரிந்த இறுக்கத்தை களைப்பு என்று நினைத்தார்கள்.
“அப்பா நான் குளிச்சுட்டு வந்துடறேன் ஸ்ருதி ஆத்து வரைக்கும் போய்ட்டு வரலாம்” என்று சொன்னதும் ஜீவாவும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கள்ள சிரிப்பு சிரித்துக் கொள்ள ரகுவுக்கு பத்திக்கொண்டு வந்தது.
‘ஆமா இங்க ஆதாரமே சேதாரமாக போறதாம், இதுல ரொமான்ஸ் ஒன்னு தான் கேடு’ என்று உள்ளுக்குள் புகைந்துகொண்டே தன்னறைக்கு வந்தவன் மனதில் ஆயிரம் குழப்பம் அத்துடன் கோபம். அவன் சேகரித்தவரையில் அந்த article ஐ பரப்ப சொன்னது முகுந்த் தான். ஆனால் ஏன்? விமானநிலையத்தில் நடந்தது ஒரு சிறு உரசல். அதற்காக ஒருவன் இவ்வளவுக்கா இறங்கி கட்டம் கட்டுவான்??
ஜீவானந்தம் அழைத்து வரப்போகிறேன் என்று சொன்னதே ஆச்சர்யம் என்று பார்த்தால் அவரோடு ரகுவும் வந்தது பேராச்சர்யமாக இருந்தது. காயத்ரி இனிப்பு கொண்டு வைத்தாள். அவஸ்தையான மௌனத்திற்கு பிறகு ரகு தான் பேச்சை ஆரம்பித்தான்.
“மாமா நேக்கு எப்படி சொல்றது தெரில. பட் நன்னா யோஜன பண்ணிதான் முடிவு பன்னிருக்கேன். நாம முடிஞ்ச அளவு கல்யாணத்தை சீக்கிரம் வெச்சிக்கலாம்” என்று சொல்ல சுந்தரம் மட்டுமல்ல ஜீவாவுக்குமே அதிர்ச்சி தான்.
காரைவிட்டு இறங்கி ஆடிஷன் ஃப்லோர் நோக்கி சென்றவளை ஒரு செக்யூரிட்டி வந்து “மேடம் உங்களை சாரு ஆபிஸ் ரூமுக்கு வர சொன்னாங்க” என்று சொல்லி சென்றான். ஏனென்று யோசித்தவளுக்கு நேற்றைய நினைவு வர அழைத்தது முகுந்த் தான் நாலு கேள்வி நறுக்கென கேட்க வேண்டுமென்ற ஆவேசம் வர புயலாக கதவை தட்டி அனுமதி கூட கேக்காது உள் நுழைந்தவள் சற்று நிதானித்தாள். ஏனெனில் உள்ளே இருந்தது ராகவன்.
முகுந்த் அவளை அழைத்து போலி பூச்சுகள் பல பூசி விளக்கம் சொல்வான் என்று எதிர்பார்த்த ஸ்ருதி ராகவனை அங்கு எதிர்பார்க்கவில்லை. அந்த நொடி செய்வதெல்லாம் செய்துவிட்டு தந்தையின் முதுகு பின்னால் ஒளிந்து கொண்ட கோழையாகவே முகுந்த் தெரிந்தான்.
அமைதியாக அவளை அமர சொன்னவர். “உன்கிட்ட பேசணும்னு தான்மா வர சொன்னேன்” என்று சொல்ல. “என்ன சார் பேச போறீங்க உங்க பையன் பண்ண வேலைக்கு வக்காலத்து வாங்க போறீங்களா. இல்ல அதை நியாய படுத்த போறீங்களா எதுவுமே உங்க தகுதிக்கு உகந்தது இல்லன்னு தெரியுமா சார் உங்களுக்கு” என்று உச்சஸ்தாயில் ஆரம்பித்தாள்.
“தெரியும் மா அதுனால தான் நான் மொத நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று சொல்லவும் ஸ்ருதி மேலும் கொதித்து போனாள். என்னதான் கோபமாக வந்தாலும் முகுந்த் இதுவரை பழகியதை வைத்து அவனை தவறாக நினைக்க முடியவில்லை. ஆனால் ராகவனின் மன்னிப்பு என்ற வார்த்தை அவள் நினைப்பை பொய் ஆக்கிவிட கோபம் தலைக்கேறியது. அதை உணர்ந்து ராகவனும் “நான் மன்னிப்பை கேக்றதால என் மகன் தான் இதை செஞ்சானு நான் சொல்ல வரலமா. உன் மனசு நொந்ததுக்கு தான் மன்னிப்பு கேட்டேன்” என்று விட இதை எப்படி எடுத்துக்கொள்ள என்று புரியவில்லை ஸ்ருதிக்கு. அவள் மௌனம் காக்க அதை சம்மதமாய் எடுத்து பேச ஆரம்பித்தார் ராகவன்.
“என்னடா இப்டி சொல்ற” என்று முதலில் அதிர்ச்சியை வெளிகாட்டியது ஜீவானந்தம் தான். சுந்தரம் மனதில் வேறு எண்ணங்கள் ஓடின. காலையில் மகள் எப்போதும் வரும் நேரத்துக்கு வராதது, கண்கள் சிவந்து களைப்பை காட்டியது, காயத்ரி சொன்ன இயல்பான வார்த்தைகளுக்கு எதற்குமே சட்டென கலங்கா அவர் மகளின் கண்கள் கலங்கியது. முக்கியமாய் பூஜையறையில் அவள் பாடுகையில் தடுமாறியது என எல்லாமே மனதில் தோன்றி ஏதோ நடந்திருக்கிறது என நினைத்து கொண்டார்.
ரகு நடந்த விஷயத்தை கூற விரும்பாமையாலும் சரியானதொரு காரணத்தை யோசிக்காமல் வந்ததாலும் ஜீவாவின் கேள்விக்கு சற்று தடுமாறி பின் என்றோ இவன் வேண்டாமென்று கழித்து கட்டிய ஆஸ்திரேலிய மலைவாழ் மக்களை பற்றிய ப்ரொஜெக்ட் நினைவு வர அதையே காரணமாக சொல்லிக்கொண்டான். இப்போது தான் அந்த ப்ரொஜெக்ட் வந்ததாகவும், போகவேண்டிவருமென்றும், போனால் 2 வருடம் ஆகுமென்றும் பெரியவர்களை சம்மதிக்க வைக்கக்கூடிய காரணிகளை அடுக்கினான். காரணங்கள் சரி தான் என்றாலும் சுந்தரத்துக்கு உடனே கல்யாணம் என்பதில் உடன்பாடு இல்லை. மகளை ஒரே நாட்டில் வேறு ஊரில் கட்டிகொடுக்கவே யோசித்தவருக்கு வெளி நாட்டில் அவளை தனித்து விட முடியவே முடியாது என்றே தோன்றியது.
“என்ன ரகு உன்கிட்ட நான் முன்னமே ஒரு விஷயம் பேசிருந்தேன், நீ அதுக்கே ஒன்னுமே சொல்லல இப்போ ஆப்ரிகா, ஆஸ்திரேலியா னு ஏதேதோ சொல்றியே “ என மென்று விளங்கினார். ஆம் நிச்சயம் முடிந்து ரகு டெல்லி புறப்படும் சமயம் ஸ்ருதிக்கு முன் சுந்தரம் அவனை விமான நிலையத்தில் சந்தித்தார்.
“சொல்லுங்கோ மாமா ஏதோ விஷயம் பேசனும் சொன்னேளே” என்று எடுத்து குடுத்தான்.
ஆனாலும் தயங்கி “இல்ல ரகு நோக்கே தெரியும் ஸ்ருதி எங்களுக்கு ஒரே கொழந்த அதனால அவளை விட்டு நாங்க இருந்ததே இல்ல. அதும் என்னால இருக்கவே முடியாது. இப்போதைக்கு அவளோட கச்சேரிக்கு நான் தான் துணைக்கு போய்ன்றுக்கேன். கல்யாணத்துக்கு அப்றம் அவளை உன்னோட அத்தனை தூரம் அனுப்பிட்டு நாங்க எப்படி இருக்கறது. அதனால முன்ன பாத்தது போல நீ உன் உத்யோகத்த சென்னைக்கே மாத்திண்டு வந்துட்டா நன்னாயிருக்கும்” என்று இழுக்க ரகு முதலில் ஒரு குழப்ப பார்வையும், பின் அதிருப்தியும் காட்டினான். அதில் சுந்தரம் ஒன்றை புரிந்துகொண்டார். பேசுகிறேனென்று சொன்ன அத்தான் மகனிடம் இது பற்றி மூச்சுக்கூட விடவில்லையென்று.
க்ஷண பொழுது அமைதிக்கு பிறகு ரகு தீர்க்கமாய் சொன்னான். “மாமா நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆத்துக்கார் எங்கேயோ ஆம்படையாளும் அங்க தானே இருக்கணும். அதுக்கு தானே கல்யாணம் பண்றது. என் உத்யோகம் அங்க இருக்கற்ச்சே ஸ்ருதி இங்கயும் நான் அங்கேயுமா இருக்க முடியுமா. அதோட உங்க பொண்ணுட்ட பொண்பாக்ரசேயே இது பத்தி கேட்டுண்ட்டேன். அவளுக்கு சம்மதம் ஆனா அப்பாவ பாக்க அப்போ அப்போ அனுப்பனும்னு சொல்லிட்டா. அவளுக்கே ஓகேனும் போது நீங்க இப்டி கேட்டா நான் என்ன சொல்ல” ..
தன் மகள் தன்னை பிரிய சம்மதித்தாள் என்பதே பெரிய அடியாக வலித்தது சுந்தரத்துக்கு. இனி என்ன பேசி இவனுக்கு புரியும் என்று தெரியாமல் கிளம்பிவிட்டார். இப்போது அதை நினைவூட்ட அவன் அவரை எரிச்சலாக பார்த்தான். “என்ன மாமா நான் தான் அன்னிக்கே சொல்லிட்டேனே இப்போ நான் கேட்டதுக்கு ஒரு பதில் சொல்லுங்கோ. “
“ஸ்ருதிட்ட ஒரு வார்த்தை பேசிட்ரேனே அத்தான் என்று சுந்தரம்” ரகுவின் கேள்விக்கு ஜீவாவிடம் பதில் சொன்னார் . ரகுவுக்கு அது உறுத்தினாலும் உடனே இதை முடித்துக்கொண்டால் நல்லது என்று அவசரப்படுத்தினான்.
ராகவனிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஸ்ருதிக்கு கோபம் கொஞ்சம் மட்டு பட்டுதானிருந்தது.
அவள் உண்மையென்று நம்பியது கொஞ்சம் இல்லையென்று ஆனதால் கோபமும் குறைந்து தான் போனது.
வெளிவந்த பின்பு தான் தெரிந்தது இன்றைய ஷோ ரத்து செய்யப்பட்டதென்று. திரும்பி காரில் ஏரியவளை ஒரு அழகான பூங்கொத்து ஒரு வாழ்த்து அட்டையோடு அவளை பார்த்து சிரித்தது.
அதில் இறுகிய இதயங்களையும் இலகவைக்கும் இசை போல பல்லாண்டு வாழ்க நீ, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எழுதி கையெழுத்திட்டிருந்தான் முகுந்த். மூன்றாம் பிறை போல ஒரு புன்னகையோடு புறப்பட்டாள் ஸ்ருதி வீட்டில் தனக்காக காத்திருக்கும் சோதனைகளை பற்றியும், வேண்டாமென்று முடிவு செய்தும் அடக்கமுடியாமல் அவள் அறியாது அவளை கண் நிறைய பார்த்துக்கொண்டிருப்பவனையும் பற்றி அறியாமல்.
வீடு வந்தவளுக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி ரகுவின் வருகை. மகிழ்ச்சியாய் “ரகுத்தான்” என்று ஓடிவந்தவளை உயிரற்ற ஒரு பார்வை பார்த்து நிலைகுலைய வைத்தான் அவள் கண்ணாளன் (இல்லை அவள்தான் அப்படி நினைத்து கொண்டிருக்கிறாளோ)
பிரச்சனை புதுவேகமெடுத்து வந்துவிட்டதை உணர்ந்து பொதுவான குசல விசரிப்புகளோடு நிறுத்திக்கொண்டாள். இருந்தாலும் ரகுவின் வாழ்த்துகளுக்கு ஏங்கியது பாவை நெஞ்சம். அவள் கண்களில் அது அப்பட்டமாய் தெரிந்த போதும். கண்காணாது இருந்தது மனதை கடைய, அவனோடு பேச தனிமைக்காக காத்திருந்தாலும் அவள் தன் அறைக்கு சென்ற பின்னொடு ரகு வந்தது. என்னவோ போல தோணியது. வேகமாக அறைக்குள் வந்து ரகு கதவடைக்க ஒரு இனிய பரபரப்பு ஒட்டிக்கொள்ள “என்ன அத்தான் இது கீழ நம்ம ரெண்டு பேரொட தோப்பானர் இருக்கரச்சே இப்டி” என்று வெட்கம் பூசி அவள் இழுக்க. அதை பட்டென்று அறுத்தான் ரகு.
“லுக் உன்கூட கொஞ்ச நான் இப்போ வரல, மேகசின் விஷயம் ரெண்டு ஆத்துப் பெரிவாளுக்கும் நான் இன்னும் சொல்லல” என்று அவன் ஆரம்பிக்கும்போதே.
“நான் பேசிட்டேன் அத்தான் அது முகுந்த் பண்ணினது இல்லையாம்” என்று அவள் சொல்ல, “சோ மேடம் என்ன நம்பாம அவனை பாத்து பேசிட்டு தன் வந்துருக்க இல்ல” என்று காய்ந்தான்.
“இல்ல அத்தான் அது..” என்று அவள் சொல்ல வந்ததை காதில் வாங்காது.
“இல்ல இல்ல இது சரிப்படாது ஒரு மாசம்லாம் வேண்டாம் அடுத்த முகூர்த்ததுலேயே நம்ம கல்யாணத்தை முடிச்சிக்கலாம்” என்று அவன் சொல்ல அடுத்த இடி ஸ்ருதி தலையில்.
அப்போ அத்தான் வந்தது என் பிறந்தநாள்க்கு வாழ்த்த இல்லையா என்ற ஏமாற்றம் கவ்வ, தொண்டை அடைத்தது. “என்ன அத்தான் சொல்றேள் எதுக்கு உடனே கல்யாணம்?”
“பின்ன எனக்கு நிச்சயம் பண்ணவளை இன்னொருத்தனோட சேத்து பேசுறதை வேடிக்க பாக்க சொல்றியா….”
“யாரோ ஏதோ பேசுறதுக்காவா கல்யாணத்த சீக்கரம் வெக்க சொல்றேள்” என்று காட்டமாக கேட்டாள்.
ரகுவின் இந்த அவசர முடிவு ஸ்ருதியின் தன்மானத்தை தாக்கியது.
அன்றிரவு மூன்று ஜோடி கண்கள் தூக்கம் தொலைத்து சிந்தனையில் மூழ்கி முத்தெடுத்தது.
ஸ்ருதியை திருமணம் செய்து முகுந்த் முகத்தில் எப்படி கரிபூசுவது என்று ரகு யோசித்திருக்க.
தன் பரிசை ஸ்ருதி இதழ் நீளா சிறுநகையில் சிறப்பித்த மகிழ்ச்சியில் முகுந்த் கண்மூடி சில நொடி கண்ணசர, ஸ்ருதி கையில் வீணை மீட்டி பாடினால்
அந்த சிவகாமி மகனிடம் தூது செல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி என்று…
இருவருக்கும் நேர் மாறாக, கண்களில் புயல் மையம் கொள்ள ஆழிபேரலையாய் கரைகடக்க காத்திருந்த கண்ணீரோடு படுத்து வெறித்திருந்தவள் கண்ணில் முகுந்தனின் பூங்கொத்து பட்ட அதே நேரம் எப்போதும் முதல் ஆளாய் வாழ்த்தும் ரகு அத்தான் இன்று கடைசிவரை வாழ்த்தவே இல்லையென்பது உறைத்தது.
தனக்காகவே எப்போதும் பார்த்து பார்த்து பாசம் காட்டும் அதே பால்ய நண்பன் ரகு தானா இந்த ஜெர்னலிஸ்ட் ரகு என்ற சந்தேகம் வந்து மணவாழ்க்கை பற்றிய பயம் முதல்முறையாக நெஞ்சை அழுத்தியது.
அவளின் மனவலியை பகிராது, எண்ணங்களையும் ஆசையையும் பொருட்படுத்தாது ரகு ஏற்படுத்திய காயம். தன் கொள்கைகளுக்கு மதிப்பு தந்த முகுந்தை பற்றி நினைக்க வைத்தது. TRP காக தாங்கள் சொல் படி நடக்க இனங்காத ஸ்ருதியின் கலைக்காதலை மதித்து அவளுக்கு காண்ட்ரவெர்ஷனல் டாக்பேக்கும் தர கூடாதென உத்தரவிட்டான். இதை ப்ரொகராம் மேனேஜர் மூலம் அறிந்து கொண்டபோது முகுந்த் மீது மதிப்பு தோன்றியது.
மங்கையவள் மனம் தானாகவே ரகுவையும் முகுந்த்தையும் தராசில் ஏற்றியது…
யாரு தட்டு ஏறும்.. யார் தட்டு தாழும்.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…..