தீரா மயக்கம் தாராயோ
அதிகாலை நேரம் பறவைகள் எல்லாம் விதம் விதமாகச் சத்தமிட்டபடி பறந்து கொண்டிருக்க, ஸ்ருதியின் வீட்டுத் தோட்டத்தில் சால்வையால் போர்த்தபடி அமர்ந்திருந்தாள் பவித்திரா…
பூக்கள் எல்லாம் மலர்ந்து வாசம் பரப்பிக் கொண்டு இருக்க, அதன் மீது பனித்துளிகள் வீற்றிருக்கும் அழகே தனிதான்…
ஆனால் அந்த அழகு அவளின் கண்ணிலே பட்டாலும் கருத்திலே பதியவில்லை…
அவளது மனது இங்கே இருந்தால் தானே பூக்களையும் பறவைகளையும் இரசிக்க முடியும்…
இத்தனை மாதங்கள் சென்ற நிலையில் கூட அப்பாவுக்கு என்மேல் இரக்கம் வரவில்லையா ? நான் எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டேனென்று அவர் ஏன் நம்ப மறுக்கிறார்…
என்று மட்டுமே அவளது யோசனை ஓடிக் கொண்டிருந்தது…
விழியோரம் லேசாகக் கண்ணீர் எட்டிப் பார்த்து இறங்கவா வேண்டாமா என்பது போலத் தேங்கி நிற்க, அந்த நேரம் பார்த்து புவியும் விக்கியும் தோட்டத்தில் நடைப்பயிற்சிக்கு வந்து கொண்டிருந்ததை அவள் அறியவில்லை…
ஆனால் அவளைக் கண்டு விட்ட புவி, விக்கியைத் தட்டி போய்ப் பேசு என்பது போலக் காட்டி விட்டு, அடுத்த பக்கம் நடக்கத் தொடங்கினான்… அந்தப் பக்கமாக ஸ்ருதி பூக்கள் பறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவனது நடை வேகமானது…
சிவப்பு ரோஜாக்கள் அதிகமாக பூத்திருந்ததைப் பார்த்தவன் அவளறியாமல் அவள் பின்னே சென்று ஒற்றை ரோஜா மலரைப் பறித்து, அவளின் கூந்தலில் சூட்ட, அவள் பதறித் திரும்பிப் பார்த்து ‘ நீங்களா ‘ என்றவாறு நெஞ்சை அழுத்தி விட்ட படி அவனை முறைத்தாள்…
அவளது முறைப்பைப் பார்த்தவன் ‘ ஏய் பொம்மி என்னதிது காலையிலேயே நெற்றிக்கண்ணைத் திறக்கிறாயே இது சரியா?’ என்றபடி முகத்தைச் சோகமாகத் தூக்கி வைத்துக் கொள்ள,
‘சரி சரி ரொம்ப அலுத்துக் கொள்ளாதீர்கள் நடைப் பயிற்சியை விட்டு விட்டு, இங்கே என்ன வெட்டிப் பேச்சு வேண்டிக் கிடக்கிறது…
விக்கி அண்ணா எங்கே ஆளைக் காணோம்…’ என்ற படி பூக்கூடையுடன் வீட்டினுள் செல்லத் திரும்பியவளைத் தடுத்து, ‘ பொம்மி பொம்மி அந்தப் பக்கமாகப் போகாமல் இந்தப் பக்கமாகச் சுற்றிக் கொண்டு உள்ளே போ ‘ என்று சொன்ன புவியை மேலும் கீழுமாகப் பார்த்து ‘ ஏன் அந்தப் பக்கமாகப் போகக் கூடாது ‘ என்றபடி எட்டிப் பார்த்தவள்…
‘ ஓ அப்படியா சங்கதி’ என்ற சிறு முறுவலுடன் நீங்கள் சீக்கிரமாக வாருங்கள் நான் டீ போட்டு வைக்கிறேன் ‘ என்று விட்டு உள்ளே சென்றாள் ஸ்ருதி…
புவி, பவித்திராவுடன் சேன்று பேசுமாறு விக்கிக்கு ஜாடை காட்டி விட்டுச் சென்று விட்டான்…
அதன் பின்னரும் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தான் அவன்…
அவளது சிவந்து போன விழிகளைப் பார்த்ததும் அவள் அழுதிருப்பது அவனுக்குப் புரிந்தது…
கடந்த இந்த ஆறு மாதங்களில் பவித்திராவும் விக்கியும் ஸ்ருதி மற்றும் புவி வீட்டில் தான் இருக்கிறார்கள்…
இப்படி அடிக்கடி அவள் கவலையுடன் இருந்ததையும் விக்கி பார்த்திருக்கிறான், ஆனால் அப்பொழுதெல்லாம் ஸ்ருதியும் புவியும் தான் அவளுக்கு சமாதானமாகவும் ஆறுதலாகவும் அமர்ந்து பேசி அவளை அந்தக் கவலையில் இருந்து மீட்டு வருவார்கள்…
இன்று அவனைப் பேசச் சொல்லி விட்டுப் போனதும் எதைச் சொல்லி அவளைத் தேற்றுவது என்ற குழப்ப மேகம் அவனைச் சூழ்ந்து கொள்ளக் கொஞ்சம் தடுமாறித் தான் போனான் விக்கி…
பின்னர் தானே ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை நோக்கிச் சென்றான்…
அவன் வந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தவளின் முன்பாகக் கையை அசைத்து பவித்திரா என்று அழைத்தவனுக்கு அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை…
பவித்திரா என்று மீண்டும் பலமாக அழைக்க, திடுக்கிட்டு பதறிப் போய் ‘அப்பா என்னப்பா’ என்றபடி வேகமாக எழுந்தவளுக்கு அப்போது தான் சுற்றுப் புறமே உறைத்தது…
அருகில் விக்கியைப் பார்த்ததும் மெலிதாக ‘ஸாரி… நான் ஏதோ நினைவில் இருந்து விட்டேன்’ என்று பதற்றத்துடன் கூறியவளை , ஏறிட்டவன் ‘ பரவாயில்லை… இதற்கெல்லாம் எதற்கு ஸாரி நான் ஒன்றும் சொல்லவில்லையே ‘ என்றபடி நின்றவனை லேசாக நிமிர்ந்து பார்த்தவள் அவனது விழிகளைப் பார்த்ததும் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்…
அவளது செய்கையை இரசித்தவன் , அங்கு போடப் பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவளையும் அமரச் சொன்னான்…
அவனது சொல்லுக்குப் பணிந்து நாற்காலியின் விளிம்பில் பட்டும் படாமலும் அமர்ந்து கொண்டவளைப் பார்த்தவன்… ‘ பரவாயில்லை நன்றாகவே சாய்ந்தே அமரலாம் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் ‘ என்றபடி புன்னகைத்தான்…
அவனது புன்னகையில் தன்னுள் ஒரு புத்துணர்ச்சி பரவுவதை உணர்ந்தவள் பதிலுக்கு ஒரு புன்னகையுடன் நாற்காலியில் நன்றாகத் தள்ளி அமர்ந்தபடி அவனைப் பார்த்து முறுவலித்தாள்…
அவளது புன்னகையைப் பார்த்து ‘ இப்படி இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது, அதை விட்டு எதற்கு அந்த அழு மூஞ்சி ‘ என்று கேட்டவனிடம்
‘ நான் ஒன்றும் அழவில்லை ‘ என்று ரோசமாகத் தொடங்கியவள் அவனது பார்வையில் தலையைக் குனிந்தபடி ‘ அப்பாவின் நினைவு வந்து விட்டது, அவர் ஏன் என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்’ என்று சொன்னவள்
அதற்கான பதில் அவனிடம் தான் இருப்பது போலக் கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…
பாவையவளின் பார்வையில் தன்னைத் தொலைத்தவன் ‘ கவலைப் படாதேம்மா உன் அப்பாவுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பேச்சுத் தான் இப்பொழுது கண்ணுக்குத் தெரிகிறது,
அது மறைந்து என் மகள் எந்தச் சூழ்நிலையிலும் தவறு செய்ய மாட்டாள் என்ற எண்ணம் வரும் போது கண்டிப்பாக உன்னை வந்து அழைத்துப் போவார், அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை ‘ என்று எடுத்துச் சொல்ல,
அவளது கவலைகள் சூரியனைக் கண்ட பனி போலக் கொஞ்சம் கொஞ்சமாக மறைவது போல் இருந்தது…
அவளது முகபாவனைகளைக் கவனித்துக் கொண்டு இருந்த விக்கி ‘ அந்த நாள் வரும் போது எங்களை எல்லாம் மறக்காமல் இருந்தால் சரி தான் ‘ என்று குறும்பாகக் கூற ‘ ஐயோ அப்படிச் செய்தால் என்னை அந்தக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்,
அந்தளவிற்கு நான் நன்றி கெட்டவளில்லை ‘ என்று பதறித் கொண்டு பவித்திரா பதில் அளிக்க , ‘ சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் ‘ என்ற விக்கியை நிமிர்ந்து நேருக்கு நேராகப் பார்த்து ‘ விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதீர்கள்’ என்று கண்கள் கலங்கியவளை
‘ அம்மா தாயே தெரியாமல் சொல்லி விட்டேன் மன்னித்து விடு, வேண்டுமானால் பத்துத் தோப்புக்கரணம் போடுகிறேன் ‘ என்று பாவனையுடன் சொன்னவனைப் பார்த்து அவள் கவலை மறந்து சிரிக்கத் தொடங்கினாள்…
அவனும் அவளுடன் இணைந்து கொண்டான்…
வானம் கருமேகக் கூட்டங்களைச் சுமந்து கொண்டு மழையைப் பூமிக்கு அனுப்பவா வேண்டாமா என்பது போலக் காட்சி கொடுக்க, கண்ணாடி ஜன்னலின் வழியே கையில் தேநீர்க் கோப்பையுடன் அதை இரசித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா…
அவளால் இப்போதெல்லாம் இயற்கையை நிதானமாக இரசிக்க முடிகிறது…
அதன் அழகை வர்ணித்துக் கவிதை எழுத முடிகிறது… கை கூடவே கூடாது என்று நினைத்த அவளது உயிர்க் காதல் இப்பொழுது அவள் கைக்கெட்டும் தூரத்தில் என்பதை அவளால் இப்போது வரை நம்ப முடியவில்லை…
அறைக் கதவு திறக்கும் ஓசை கேட்டுத் திரும்பியவளின் முகம் பூவாக மலர்ந்தது…
‘மிது வேடிக்கை பார்த்தது எல்லாம் போதும் சாப்பிட வா…’ என்றபடி உள்ளே வந்தான் முகுந்தன்…
அவனைத் தொடர்ந்து கார்த்திக் சாப்பாட்டுக் கூடையை மேசையில் வைத்து விட்டு ஒரு சிநேகபாவத்துடன் வெளியேறினான்…
முகுந்தனைப் பார்த்ததும் அவசரமாகத் திரும்பியவளின் கால்கள் சுழுக்கிக் கொள்ளவே ஒரு நொடியில் அவளருகில் வந்தவன் அவளைத் தாங்கிக் கொண்டு ‘ எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உனக்குக் காலில் இருக்கும் காயம் ஆறும் வரைக்கும் அங்கேயும் இங்கேயும் அலையாதே என்று, சொல் பேச்சுக் கேட்கும் பழக்கம் உனக்குக் கொஞ்சம் கூட இல்லை…’ என்று கடிந்து கொண்டான்…
அவன் கடிந்ததை இமைக்க மறந்து இரசித்துக் கொண்டே ‘ இந்த அறைக்குள்ளேயே என்னை அடைத்து வைத்தால், எனக்குப் போரடிக்காதா? தனா ‘ என்றாள் சிறு பிள்ளையாக… (முகுந்தன் என்றதிலே வர்ர தன் – அது தான் தனா என்று மாறிடுச்சு)
அவளின் தலைமுடியை ஒதுக்கியபடியே ‘சீக்கிரமாக வீட்டுக்குப் போய் விடலாம் கவலைப் படாதே…’
‘இன்னமும் இரண்டு நாட்கள் தானே கொஞ்சம் பொறுத்துக் கொள்ளேன்’ என்றபடி அவளைக் கட்டிலில் அமர்த்தியவன்
அவளுக்கு உணவு ஊட்டத் தொடங்கினான்… கடந்த ஆறு மாதங்களில் அவனது மாற்றத்தையும் அன்பையும் பார்த்தவளுக்கு லேசாகக் கண்கள் கலங்கியது…
அதைக் கண்டு கொண்டவன் ஏதும் அறியாதவன் போல ‘ என்ன மிது கேசரி சரியான காரம் போல ‘ என்றபடி இடது கரத்தால் அவளது கலங்கிய கண்களைத் துடைத்து விட்டபடி எழுந்து கொண்டு ‘ மிது நான் கொஞ்சம் வேலையாக வெளியே செல்கிறேன்…
இந்த மாத்திரையை அரை மணி நேரத்திற்குப் பிறகு போட்டுக் கொள் ‘ என்று விட்டு வாசல் வரை சென்றவன் மீண்டும் திரும்பி வந்து ‘இல்லை உன்னை இந்த விஷயத்தில் நம்ப முடியாது…
நானே இருந்து மாத்திரையைக் கொடுத்து விட்டே போகிறேன் ‘ என்றபடி அவள் சொன்ன எதையும் கேட்காமல் அவளது கட்டிலின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பத்திரிகையைப் புரட்டத் தொடங்கினான்…
முகுந்தன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்ட மிருதுளாவோ தனது கடந்த நினைவுப் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினாள்…
சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு மிருதுளாவின் யோசனைக்கு அமைவாக, திருமணமான காதல் தம்பதிகளை வைத்து ஒரு நிகழ்ச்சி ஒன்றை அறிமுகம் செய்வது எப்படி என்பது பற்றிப் பெரிய விவாதமே முகுந்தனுக்கும் மிருதுளாவுக்கும் இடையே அரங்கேறியது…
இறுதியில் ஜெயித்தது என்னவோ மிருதுளா தான்…
ஸ்ருதிக்குப் பின்னால் லொங்கு லொங்கென்று முகுந்தன் ஓடியதற்கான பலன் அவனது நிறுவனத்திலேயே மிருதுளா வைத்ததுதான் சட்டம் என்றாகிப் போனதை என்னவென்று சொல்வது…
மிருதுளா சொல்வதற்கெல்லாம் முகுந்தன் பல்லைக் கடித்துக் கொண்டு தலையாட்டிப் பொம்மை போலத் தலையை உருட்டுவதும், அவள் காட்டிய இடத்தில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போடுவதும் என்று இவை எல்லாம் ஒரு சாதாரண விஷயங்களாக மாறத் தொடங்கியது…
இது பிடிக்காமல் எப்படியாவது தான் பழைய இடத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் முகுந்தன் முடிவு எடுப்பதற்கு முன்பு மிருதுளா ஒரு வெள்ளிக்கிழமை அன்று முகுந்தனைத் தன்னைச் சந்திக்குமாறு சொல்லி அனுப்ப,’ இவ பெரிய அப்பாடக்கர் எனக்கே சொல்லி அனுப்புறாளா? இருடி வந்திட்டே இருக்கேன்…
வந்து இருக்கிறது உனக்கு ‘ என்றபடி கோபத்துடன் புயலென அவளது அறையில் நுழைந்தான் முகுந்தன்…
வேலையில் மூழ்கிப் போய் இருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, ‘ ஏய் இதோ பாரு உன் மனசுலே என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாய் ‘ என்று சீறினான்…
அவனது சீற்றத்தைக் கண்டு கொள்ளாமல் ‘ நான் என் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்பது சத்தியமாக உங்களுக்குத் தெரியாதா? ‘ எனத் தானும் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தபடி, முகுந்தனின் விழிகளை ஊடுருவிய ஒரு கூர்மையான பார்வையைச் செலுத்தினாள் மிருதுளா…
அவளின் பார்வையைத் தாங்க முடியாமல் தடுமாறியவன் உடனே அவளுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் சட்டென்று இருந்து கொண்டு, ‘ எதற்கு வரச் சொன்னாய் ‘ என்று அழுத்தமாகக் கேட்க, ‘பரவாயில்லையே வரச் சொன்னதும் தாமதிக்காமல் வந்து விட்டீர்களே… ஆச்சரியம் தான்… ‘ என்றவளை அடிக்கவா உதைக்கவா என்பது போல முறைத்துக் கொண்டே ‘ வேறு வழி இல்லையே ‘ என்று முணுமுணுத்துக் கொண்டு ‘ இப்பொழுது எதற்கு அழைத்தாய் என்று சொல்லப் போகிறாயா இல்லையா…’ என்று மறுபடியும் எரிந்து விழுந்தான்…
அவனையே பார்த்தபடி ஒரு பைல் கவரை எடுத்து அவன் முன்பாகப் போட்டாள்…
யோசனையுடன் பைலை விரித்து அதில் இருந்ததைப் படித்து விட்டு அதிர்ந்து போய் அவளைப் பார்த்து ‘என்னதிது ‘ என்று அவன் முறைக்க , ‘முறைக்காதீர்கள் முகுந்தன் சேர்… படிக்கத் தெரியாதா? நாங்கள் நடத்தப் போகும் அந்தத் திருமண ஜோடிகள் தொடர்பான நிகழ்ச்சியை நானும் நீங்களும் தான் தொகுத்து வழங்கப் போகிறோம் என்று அழகாக முத்து முத்தாகத் தமிழில் தானே போடச் சொல்லி இருந்தேன் நிறுவனத்தின் எம்டி தொகுப்பாளராக இருக்கக் கூடாது என்று யாரும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை சரியா… அது சரி எவனாவது வேறு ஏதும் புரியாத மொழியில் எழுதிப் போட்டு விட்டானா? இப்படி முழிக்கிறீர்கள்… ஒருவேளை தமிழ் படிக்கத் தெரியாதா? தெரியாவிட்டால் கேட்க வேண்டியது தானே… அடிக்கவெல்லாம் மாட்டேன் ‘ என்று கலகலவென்று சிரித்தவளை வெறித்துப் பார்த்தான் முகுந்தன்…
அவனது விழிகளில் தெரிந்த ஏதோவொன்று அவளது சிரிப்பைத் துணி கொண்டு துடைத்துத் தூரத் தள்ளியது…‘ சரி சரி வெட்டிப் பேச்சு வேண்டாம் ‘ என்றபடி அங்கு வேலை புரியும் இன்னொரு தொகுப்பாளினியைத் தன்னறைக்கு அழைத்தாள்…
தாங்கள் நடாத்த இருக்கும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பது பற்றி அந்தப் பெண்ணுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தவளை முகுந்தனின் ‘ பேசாமல் காதலும் கத்தரிக்காயும் என்று வையேன் படு ஜோராக இருக்கும் ‘ என்ற குரல் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது…
திரும்பிப் பார்த்தவள் சிறு முறுவலுடன் ‘ ஓ அப்படியா சிரிப்பே வரவில்லை எனக்கு, ஒரு வேளை நீங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக இருந்திருந்தால் அந்தப் பெயரையே வைத்திருக்கலாம்… ஆனால் நானும் அல்லவா நிகழ்ச்சியில் இருக்கிறேன் அதனால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் ‘ என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்று விட்டாள்…
சரியாக அந்த வாரத்தில் வந்த ஞாயிற்றுக் கிழமையிலேயே நிகழ்ச்சி நேரலையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது… அதற்காக முகுந்தனைத் தயார்ப் படுத்திக் கொள்வதற்கு மிருதுளா தலையாலே நடக்க வேண்டியதாகப் போயிற்று… ஆனால் அவள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாள்… நிகழ்ச்சிக்கான பெயரைத் தேர்வு செய்வதில் பெரும்பாடு படவேண்டியதாகப் போயிற்று… ஒரு வழியாகக் ‘ காதலெனும் சாரலிலே ‘ என்ற பெயரைத் தேர்வு செய்து விட்டு ஆசுவாசப் பெருமூச்சுடன் நிமிர்ந்தவளுக்கு ஏராளமான வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன…
நிகழ்ச்சியின் முதலாவது ஜோடியாக பிரபலமான நடிகர் ஒருவரை அழைத்துத் தங்கள் நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்திருந்தாள்… முதல் நிகழ்ச்சியே மக்களிடையே நல்லதொரு வரவேற்பைத் தேடிக் கொடுத்திருந்தது…
அதைத் தொடர்ந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பங்கு கொள்ளும் ஜோடியாகப் புவியரசு ஸ்ருதி தம்பதிகளை முகுந்தனுக்குத் தெரியாமல் அழைத்திருந்தாள்… அதற்கு அவள் அதிகமாகச் சிரமப் படவில்லை, ஏற்கனவே ஸ்ருதி ஒரு பாட்டு நிகழ்ச்சியில் இங்கு நடுவராக இருந்ததால் மிருதுளா அதனைப் பயன்படுத்திக் கொண்டாள்… இதைப் பற்றி முகுந்தனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை… நிகழ்ச்சிக்கு யாரை இந்த முறை அழைத்து இருக்கிறாய் என்று கேட்டவனிடம் அதை நிகழ்ச்சியின் போது தெரிந்து கொள்ளலாம் என்றவளை அவனால் முறைக்கத் தான் முடிந்தது…
ஞாயிற்றுக்கிழமையன்று தங்கள் அழைப்பை ஏற்று வந்தவர்களை முகுந்தனும் மிருதுளாவும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க வாசலுக்குச் சென்ற போது, ஸ்டூடியோவிற்குள் வந்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்த முகுந்தனுக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது… வழமை போல மிருதுளாவுக்கு முறைப்பு ஒன்றைப் பறக்க விட்டு, அதே முறைப்பை ஸ்ருதி தம்பதியர் மீதும் பறக்க விட, மிருதுளாவோ அவனது காதுக்குள் ‘ உங்கள் கோபத்தைக் காட்ட இது தருணம் கிடையாது, சுற்றி ஹமரா இருக்கிறது முகத்தை முழு நீளத்திற்குத் தூக்கி வைக்காமல் கொஞ்சமே கொஞ்சம் சிரித்தபடி பூங்கொத்தைக் கொடுங்கள் ‘ என்று கிசுகிசுத்தாள்… முகுந்தனைப் பார்த்ததும் ஸ்ருதி கூட ஒரு கணம் பயத்தை முகத்தில் காட்டியவள் பின்பு பக்கத்தில் தன் புவி இருக்கும் தைரியத்தில் உடனே சுதாரித்துக் கொண்டபடி வணக்கம் என்றாள் மெல்லிய புன்னகையுடன், இறுகிப் போய் நின்று புவியரசும் தன் ஸ்ருதியே சிரிக்கும் போது எனக்கு மட்டும் என்ன வந்தது இவனை வெளியேவந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்புடன் தானும் முறுவலுடன் வணக்கம் தெரிவித்தான்…
மிருதுளா ஸ்ருதிக்கும், முகுந்தன் புவியரசுக்கும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க அன்றைய நிகழ்வு ஸ்டூடியோவில் ஆரம்பமானது…
வெளியில் கெத்தாக நடந்து கொண்டாலும் மிருதுளாவிற்கு உள்ளூர உதறலாகவே இருந்தது… முகுந்தன் என்னும் எரிமலை எப்பொழுது வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை…
அடிக்கடி முகுந்தனின் முகத்தைப் பார்த்தவளுக்கு அங்கிருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை…
புவியரசு மற்றும் ஸ்ருதியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள், இருவரதும் காலேஜ் வாழ்க்கை அதன் பின்னரான திருமணம் எனப் பூரிப்புடன் ஸ்ருதி பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்…
இடையிடையே கணவன் மனைவி இருவருக்கும் சிறு சிறு போட்டிகளும் வைக்கப்பட , அதில் ஒருவர் மற்றவர் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்…
அந்தத் தருணத்தில் மிருதுளாவின் கண்கள் லேசாகக் கலங்க, அதை முகுந்தன் கண்டு கொண்டு விட்டான்…
ஆயினும் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை…
ஸ்ருதி புவி இருவரிடமும் உங்களுடையது திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா என்று மிருதுளா கேட்டாள்
அப்பொழுது ஸ்ருதி புவியை நிமிர்ந்து பார்த்தாள்
அவனது விழிகளில் எதையோ புரிந்து கொண்டவள்
தாமதிக்காமல் ‘ எங்களுடையது காதல் திருமணம்’ , ‘ அவர் என்னைக் காலேஜ் படிக்கும் காலத்திலேயே நேசிக்கத் தொடங்கி விட்டார், நான் தான் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை… ‘என்று பதிலளித்தாள் ஸ்ருதி
அவளது பதிலுக்கு லேசாக முறுவலித்தபடியே இருந்தான் புவி
அவனது முறுவலைப் பார்த்தவாறே ‘ நான் தான் அவரது காதலை ஏற்கவில்லையே தவிர, அவர் எனக்காக எப்பொழுதும் தீராத அன்புடன் காத்துக் கொண்டு தான் இருந்தார்…
எனது வாழ்க்கையில் புவி வருவதற்கு முன்பு நான் அனுபவித்த சோதனைகள் ஏராளம் பயம் மட்டுமே என்னிடம் இருந்தது
என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் என்னை அழ வைத்தவர்களுக்கு நடுவில் என்னைக் காத்துக் கொள்ள வந்தவர் என் கணவர் தான் என்றவாறு முகுந்தனை ஒரு பார்வை பார்த்தாள் ஸ்ருதி
அவளது குற்றம்சாட்டும் பார்வையை பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டான் முகுந்தன்
ஸ்ருதியின் பதிலில் அவளது கரங்களை லேசாகத் தட்டியபடி ‘ ஸ்ருதியின் நேசம் எனக்குக் கிடைத்தது கடவுள் எனக்குக் கொடுத்த வரம் ‘ என்றான் புவி
ஆனால் அவளோ கலங்கிய கண்களுடன் ‘ இல்லை இல்லை நீங்கள் தான் எனக்காகவே கடவுள் கொடுத்த வரம் ‘ என்று புன்னகைத்தாள்…
அவர்கள் இருவரினதும் ஆழமான அன்பை இமைக்க மறந்து பார்த்திருந்தான் முகுந்தன்
நிகழ்ச்சியின் இறுதியில் இப்போதைய நபர்களுக்குக் காதல் மற்றும் திருமணம் பற்றிய அறிவுரையாக நீங்கள் சொல்ல நினைப்பது என இருவரிடமும் கேட்கப் பட்டது, அதற்கு ஸ்ருதி ‘ஆண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது பிடித்த பெண்ணைத் திருமணம் செய்ய நினைப்பது தவறில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கும் உங்களைப் பிடித்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை நோகடிப்பது பெரிய தவறு ‘ என்று சொல்ல முகுந்தன் அதிர்ந்து போய் நிமிர்ந்தான்…
தொடர்ந்து ‘யாராக இருந்தாலும் ஒருவர் மற்றவரது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்’ என்று சொன்னாள்… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அன்பான வாழ்க்கைத் துணையை இறைவன் படைத்து இருப்பான் மறந்தும் கூட அந்தத் துணையை வேறு ஒருவர் கையிலும் கொடுக்க மாட்டான்… ஒருவேளை நீங்கள் இவர் எனக்கானவர் தான் என்று நினைத்த ஒருவர் வேறு யாரையும் திருமணம் செய்தால் , நிச்சயமாக அவர் உங்களுக்காகப் படைக்கப் பட்டவர் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து அவரை அவரது வாழ்க்கையை வாழ விட்டு விலகி , உங்கள் சந்தோசம் எங்கே என்று தேடுங்கள்… என்று நீளமாகப் பேசியவள் தன் கணவனைப் பார்த்து, எனக்காக இறைவன் கொடுத்த பொக்கிஷம் என் கணவன் தான் என்றபடி அவனது கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு கூறினாள்… அவளது பதிலைச் சந்தோஷமாக மிருதுளா கேட்க, முகுந்தனோ யோசனையாகக் கேட்டுக் கொண்டிருந்தான்…
அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் கோரஸாக ‘விட்டுக் கொடுத்து வாழுங்கள் ஏனெனில் விட்டுக் கொடுக்கும் உறவுகள் என்றும் கெட்டுப் போவதில்லை’ என்று கூறிக் காதலெனும் சாரலிலே என்ற நிகழ்வை இனிதே முடித்துக் கொடுத்து விட்டு இன்முகத்துடனேயே விடைபெற்றார்கள்… அவர்கள் இருவரும் முகுந்தன் உட்பட வேறு யாரையும் கண்டு கொள்ளவில்லை தனியாக ஒரு காதல் வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மற்றவர்களைக் கண்டு கொள்ள முடியாது தானே…
நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும் ஓய்வெடுக்கும் அறையில் தலையைத் தாங்கியபடி முகுந்தன் அமர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்த மிருதுளாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது, ஆயினும் இப்பொழுது சென்று பேச்சுக் கொடுத்தால் இவளுக்குக் கட்டாயம் கைலாயம் தான் எதற்கு வம்பு என்று நழுவி ஓடி விட்டாள்… எந்தவொரு செயலும் உடனடி மாற்றத்தைக் கொடுக்காது விட்டாலும் சில தினங்கள் செல்லச் செல்ல ஏதும் மாற்றத்தைக் கொடுக்கும் என்று அவள் நம்பினாள்… முகுந்தனின் மனக் குளத்தில் ஏற்கனவே மிருதுளா ஒரு கல்லெறிந்து இருக்க, இப்பொழுது ஸ்ருதி புவியரசு என மாற்றி மாற்றிக் கல்லெறிந்து இருந்தார்கள் சும்மா இருக்குமா மனக்குளம் அதில் ஏகப்பட்ட சஞ்சலச் சுழலிகள்… நான் செய்வது என்ன? இது சரியான பாதையா ? என்று ஏகப்பட்ட சுழலிகள்… அந்தச் சஞ்சலத்திற்கு நடுவில் மிருதுளாவுடன் அடிக்கடி கோழிச்சண்டை, குடுமிப்பிடிச்சண்டை என்று நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன… இதற்கு இடையில் முகுந்தனிடம் சிறு சிறு மாற்றங்களும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கின…
தங்களது கம்பெனிக்காக இப்பொழுது நிஜமாகவே அலுத்துக் கொள்ளாமல் உழைத்தான், முசுட்டுக் கோபம் இல்லாமல் இயல்பாகப் பழகினான், தந்தை ராகவனுடன் சமரசம் செய்து கொண்டு அவரோடு ஓய்வு நேரத்தைச் செலவழித்தான்… எல்லாவற்றுக்கும் உச்சாணியாக ஸ்ருதிக்குப் பின்னால் அவளைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவனை அறியாமலேயே விட்டு விட்டான் அதற்கு அவனுக்கு நேரமே இருக்கவில்லை என்பதுவும் ஒரு காரணம்… இவை எல்லாவற்றையும் பார்த்த மிருதுளாவுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது… ஆனாலும் இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும் ஒன்று மட்டும் மாறாமல் முன்னை விட அதிகமாக இடம் பெறத் தொடங்கியது… அது வேறொன்றுமில்லை மிருதுளாவுடனான முகுந்தனின் சண்டை தான்… சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கூட சிறு பிள்ளை போலச் சண்டைக்கு வந்தான்…
இப்படியே ஐந்து மாதங்கள் அது பாட்டில் ஓடி இருக்க , மிருதுளாவுக்கும் முகுந்தனுக்கும் நாளொரு கோழிச் சண்டையும் பொழுதொரு குடுமிச் சண்டையுமாக மாதங்கள் ஓடியிருந்தன…
ஒரு வியாழக்கிழமை அன்று மிருதுளா தன் தந்தையோடு பேசிக் கொண்டு இருந்தாள் அவளுக்கு நாளைய தினம் பிறந்தநாள் என்பதால் வேண்டிய தொழிலதிபர்கள் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து விருந்து கொடுக்குமாறும், முக்கியமாக முகுந்தனையும் ராகவனையும் அழைக்குமாறு சொல்லிக் கொண்டிருந்தார்… எல்லாவற்றுக்கும் தலையை ஆம் ஆம் என ஆட்டிக் கொண்டிருந்தவளின் மனது மட்டும் முகுந்தனைச் சுற்றிச் சுற்றி வந்தது… தனது பிறந்தநாளுக்கு அவன் வாழ்த்துச் சொல்லுவானா என்று காதல் கொண்ட மனது கேட்டது… வாழ்த்துக் கூடச் சொல்ல வேண்டும் என்றில்லை நினைவு வைத்திருந்தால் போதாதா என்று மனசாட்சி கேள்வி கேட்டது…
வெள்ளிக்கிழமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது… மிருதுளாவுக்கோ ஒரு எதிர்பார்ப்புடன் விடிந்தது… என்றும் போலில்லாமல் அன்று வாடாமல்லி நிறத்தில் மஞ்சள் கரையிட்ட பட்டுப் புடவை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப்பூச் சரம் வைத்து வந்தவளைக் கேள்வியாக முகுந்தன் நோக்க, சிறு புன்னகையுடன் ‘ ராகவன் சேர் உங்களை உடனடியாக அழைத்து வரச் சொன்னார் ‘ என்றபடி அவனை வெளியே அழைத்துச் சென்றவளை நிறுத்தி, ‘ நான் உன் காரில் எல்லாம் ஏற மாட்டேன் நீ வேண்டுமானால் என் காரில் வா ‘ என்று விட்டுத் தன் வேக நடையில் முன்னே சென்றவனைப் புன்னகையுடன் தொடர்ந்தாள் மிருதுளா…
காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தவனை ஓரக் கண்ணால் இரசித்தவள் ‘ இன்று என்ன நாள் என்று தெரியுமா? முகுந்தன் ‘ என்றாள் அவனது கோபக் குரலை எதிர்பார்த்தபடி, ஆனால் அவனோ ‘ இன்று வெள்ளிக்கிழமை’ என்றான் சாதாரணமாக… பிறகு தானாகவே ‘ஒரு அடங்காப்பிடாரி பிறந்த தினமும் இன்று தான் நீயெல்லாம் பிறக்கவில்லை என்று யார் அழுதார்கள்’ என்று அவளைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான்… அவனது பதிலை இரசித்தபடி தெருவோரமாக இருந்த கோவிலின் அருகில் காரை நிறுத்தச் சொல்லி விட்டு அவனருகில் வந்து ‘ இன்று வெள்ளிக்கிழமை தானே வாருங்களேன் சுவாமி தரிசனம் செய்து விட்டு வரலாம் ‘ என்றவளை முறைத்தான் முகுந்தன்…
அவனது முறைப்பைப் பார்த்து விட்டு ‘ சரி சரி மூக்கால் முறைக்க வேண்டாம் ‘ என்று விட்டுக் கவனம் இல்லாமல் திரும்பிக் கோவிலை நோக்கி நகர்ந்தவளை வேகமாக வந்த பெரிய லொறி ஒன்று மோதித் தூக்கித் தூர எறிந்து விட்டு நிற்காமல் சென்று விட்டது… கண்ணெதிரே நடந்த விபத்தைப் பார்த்த முகுந்தனுக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டது… மக்கள் கூட்டம் அதிகமாகவே சுயநினைவுக்கு வந்தவன் தன்னையறியாமல் ‘ மிருதுளாஆஆஆ ‘ என்று கத்தியபடி அவளருகில் ஓடி வந்து, அவளைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டான்… அவளது புடவையின் வாடாமல்லி நிறம் செக்கச் செவேலென சிவந்து போகும் அளவுக்கு இரத்தம் ஓடிக் கொண்டிருக்க, அவளோ தனது கையினால் அவன் கன்னத்தை அழுத்திப் பிடித்தபடி மயங்கிச் சரிந்தாள்,தன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்து அந்த இரத்தத்தின் சூட்டைக் கைகளில் உணர்ந்தவன் ஓவென்று கத்தினான்… அந்த நொடியில் முகுந்தன் என்ற இரும்பு மனிதனின் இதயம் மிருதுளாவுக்காக அதி வேகமாகத் துடிக்கத் தொடங்கியது…
வைத்தியசாலையில்அவசரப் பிரிவுப் பகுதியில் அனுமதிக்கப் பட்ட மிருதுளாவுக்கு முகுந்தன் இரத்தம் வழங்கினான்… அவள் கண் விழிக்கும் வரை தனக்கு நம்பிக்கை இல்லாத கடவுளிடம் மன்றாடினான்… மிருதுளாவைப் பார்க்க யார் யாரோ வந்தார்கள், ஸ்ருதி கூட வந்து போனாள்… அவை எல்லாம் அவன் கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை… இரண்டு வாரங்களுக்கு பிறகே மிருதுளா வாய் திறந்து பேச முயற்சித்தாள்… முகுந்தன் அவளைக் கவனமாகப் பார்த்துக் கொண்டான்…
‘ மாத்திரையைப் போட்டுக் கொள் மிது ‘ என்ற முகுந்தனின் குரல் அவளை நடப்புக்குக் கொண்டு வந்தது… அவள் மாத்திரை போட்டதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன் ‘ தூங்க முயற்சி செய், ஒருவேளை போரடித்தால் ரைட்டர் மதுமதி பரத்தின் புத்தகங்கள் கொஞ்சம் வைத்திருக்கிறேன் (?♥?) படித்துக் கொண்டிரு ‘ என்று விட்டு அவளின் தலையில் கை வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்… முகுந்தனின் மனதில் மிருதுளா வேர் விடத் தொடங்கி விட்டாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை… ஆனால் எப்போது விருட்சமாக மாறுவாளோ பார்ப்போம்… ?????