அந்த ‘ரசிக ரஞ்சன சபா’.. கச்சேரியில் களை கட்டியிருந்தது. இதில் ஸ்ருதியின் ஸ்ருதி பிசகாத தேன் குரலைக் கேட்கவென்றே வந்த கூட்டம் தான் அதிகம்.
மெரூன் நிற பட்டுப் புடவையில், அளவான நகைகளோடு.. அழகின் திருவுருவாக வந்தமர்ந்தவளைப் பார்த்த கூட்டத்தினர் இமைக்க மறந்தனர்.
கண்மூடி இறைவனை ஒரு நிமிடம் ப்ரார்த்தித்து விட்டு.. முதற்கண் கடவுளாம் விநாயகர் பாமாலையைப் பாடியவள்.. அடுத்து கண்ணனை நினைத்து மனமுருக பாட ஆரம்பித்தாள்.
“என்ன தவம் செய்தனை யசோதா…
என்ன தவம் செய்தனை..
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை..”
அவளின் ஒவ்வொரு வரியிலும் அவள் முகம் காட்டும் பாவனைகளைப் படித்த படியும்.. அவளின் இனியக் குரலை ரசித்த படியும்.. அமர்ந்திருந்த பார்வையாளர்கள் சற்று நேரம் உலகையே மறந்திருந்தனர்.
கச்சேரி முடிந்த பின் தந்தையுடன் வெளியேற எத்தனித்தவளை.. சூழ்ந்து கொண்டு வாழ்த்து மழை பொழிந்தது, ரசிகர்கள் கூட்டம்..!
அனைவருக்கும் நன்றியையும், புன்னகையையும், செல்ஃபீக்களையும் பரிசளித்து விட்டு.. தந்தையுடன் கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்தவர்கள் கண்டது காயத்ரியின் முகத்தில் தெரிந்த பரபரப்பை தான்.
“என்னம்மா.. ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க?”
“ஆமா ஸ்ருதி..” என்று மகளுக்கு பதிலளித்து விட்டு.. சுந்தரத்தின் புறம் திரும்பி, “என்னங்க.. அண்ணன் இப்ப தான் ஃபோன் பண்ணினார்.. ரகு இன்னும் ரெண்டு நாளைல டெல்லில இருந்து வர்றானாம்” என்றார், உற்சாகமாக..!
“ஓ.. சந்தோஷம்.. வேற எதுவும் சொன்னாரா காயத்ரி..?”
“ஆமாங்க.. ஸ்ருதிக்கும் ரகுவுக்கும் இந்த முறை நிச்சயம் பண்ணிடலாமானு கேட்டார்.. நான் உங்கள பேச சொல்றதா சொல்லிருக்கேன்.. பேசறீங்களா..?”
“ஹ்ம்ம்.. பேசுவோம்..”
“ஸ்ருதி.. நீ என்னடி சொல்ற? ரகுவ உனக்கு பிடிச்சிருக்கு தான? அப்பாவ பேச சொல்லுவோமா?”
“எதுனாலும் உங்க இஷ்டம்மா.. நீங்களும் அப்பாவும் பேசிக்கோங்க..” என்று தந்தையிடம் கூறிய பதிலையே அன்னையிடமும் கூறி விட்டு உள்ளே சென்றாள்.
கணவனைப் பார்த்த காயத்ரியிடம், “நான் கேட்டதுக்கும் இப்டி தான் சொன்னா.. நமக்காக தலையாட்டறாளா என்னனு தெரியலயே..” என்று தாடையைத் தடவினார்.
“அப்டிலாம் இல்ல.. பிடிச்சிருக்குனு சொல்றதுக்கு கூச்சப்பட்டுட்டு உங்க இஷ்டம்னு சொல்றா.. நீங்களா எதையாவது குழப்பிக்காம.. ரகு வந்ததும் அண்ணன்கிட்ட பேசற வழியப் பாருங்க..”
பெருமூச்சுடன்.. மனைவியின் பேச்சிற்கு தலையாட்டி விட்டு நகர்ந்தார், சுந்தரம்
*****
அன்று காலை தன் அலுவலகத்தில் இருந்த முகுந்தனிடம் அன்றைய தின நியமனங்கள் பற்றி கூறிக் கொண்டிருந்த சுதா.. “சார், கம்மிங் வெட்னஸ்டே மிஸ்டர் நந்தகுமார் சார்.. நம்ம ‘விவாத மேடை’ ப்ரோக்ராம்க்கு டேட் குடுத்துருக்கார் சார்..” என்றாள்.
“ஓ..! குட்.. அவர ஏர்போர்ட்ல இருந்து நம்ம கேர் பண்ணிக்கனும் சுதா.. ஸ்டே பண்றதுக்கு நல்ல ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணுங்க.. எந்த குறையும் இருந்துடக் கூடாது. அண்டர்ஸ்டாண்ட்?”
“எஸ் சார்..”
“அவர் வர அன்னிக்கு எனக்கு ரீமைண்ட் பண்ணுங்க.. நான் நேர்ல போய் ரிசீவ் பண்ணனும்..”
“ஷ்யூர் சார்..”
“அப்புறம் அவருக்கு ரிட்டர்ன் டிக்கெட்டும் இப்பவே ஏர்லைன்ஸ்ல புக் பண்ணிடுங்க..”
“ஓகே சார்..”
“கார்த்திக்கிட்ட இந்த பொறுப்ப குடுத்துடுங்க.. பக்காவா பண்ணிடுவான்.. அவனை என்னை வந்து பார்க்க சொல்லுங்க.. மத்தத நான் பேசிக்கறேன்..”
கார்த்திக் தான் முகுந்தனின் டிரைவர், பாடிகார்ட், வலக்கை எல்லாமே..! முகந்தனின் பி.ஏ. சுதாவாக இருந்தாலும்.. எந்த ஒரு விஷயத்திற்கும் முகுந்தன் தேடுவது கார்த்திக்கை தான்..!
“ஓகே சார்..”
இன்னும் விளம்பர ஒப்பந்தங்கள் பற்றியும், அவர்கள் நடத்திய நடனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விழா நடத்துவது பற்றியும், பாட்டு போட்டிக்கான ஆடிஷன் எந்த அளவில் உள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகக் கேட்டு கொண்டு.. “ஓகே.. நௌ, யூ மே கோ..” என்றான்.
ஒரு வழியாக அவளின் வேலையில் ஒரு பகுதியான தலையாட்டல்களை முடித்து விட்டு கேபினை விட்டு வெளியேறுகையில் சுதா ஒரு வழியாகிப் போனாள்.
அவள் வெளியேறியதும் அலைபேசியை எடுத்தவன்.. தன் தந்தைக்கு அழைத்தான். முகுந்தனின் தந்தை ராகவன்.. திரைப்பட தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்.. எனப் பன்முகம் கொண்டவர்.
எடுத்த உடனேயே.. “டாட்.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..” என்றான்.
“குட் நியூஸா..? இரு ஸ்வீட் எடுத்து பக்கத்துல வச்சுக்கறேன்..”
“நோ டாட்.. உங்களுக்கு ஸ்வீட் நாட் அலோவ்டு.. சுகர் ஜாஸ்தி ஆகிடும்..”
“டேய்.. மொதல்ல குட் நியுஸ சொல்லுடா..”
“எய்ட்டீஸ்ல சினி ஃபீல்ட கலக்கின ஹீரோ, உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்.. நந்தகுமார் நம்ம சேனல்ல ஒரு ப்ரொக்ராம்க்கு ஜட்ஜா வரதுக்கு ஒத்துக்கிட்டு கால்ஷூட் குடுத்துருக்கார்..”
“யாரு? ஆக்டர் நந்து வரானா..? எப்ப வர்றான்? எத்தன நாள் சென்னைல ஸ்டே பண்ண போறான்?” என்று ஆனந்த ஆச்சர்யத்தில் கேள்விகளை அடுக்கினார்.
“ஒரு நாள் தான் டாட்.. ப்ரொக்ராம் முடிஞ்சதும் கிளம்பிடறதா சொன்னார்.. இன்னும் டூ டேஸ்ல வர்றார்..”
“ஓ..! சூப்பர் குட் நியூஸ் மை சன்.. வரும் போது சொல்லு.. நான் கண்டிப்பா மீட் பண்ணனும்.. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..” என்று உற்சாகமானார்.
“ஷ்யூர் டாட்.. சந்தோஷத்துல நீங்க பாட்டுக்கு ஸ்வீட்ல கைய வச்சிடாதீங்க.. பீ கேர்ஃபுல்..” என்று தந்தையிடம் செல்ல அதட்டல் ஒன்றைப் போட்டு விட்டு.. அலைபேசியை அணைத்து விட்டு.. அன்றைய தின வேலைகளை கவனிக்க லேப்டாப்பைத் திறந்து ஆன் செய்தான்.
திறந்தவனின் கண்களுக்கு விருந்தானது அந்த புகைப்படம்.. இடக்கையை மேலே உயர்த்தி.. வலக்கையை மடியில் தாளம் போடும் தினுசில் வைத்துக் கொண்டு.. இதழ் பிரித்து.. கண்கள் மூடி அமர்ந்திருந்த ஸ்ருதியின் புகைப்படம்..!
********
மறுநாள் காலை.. என்றும் போல் அன்றும் பூஜையறையில் அன்றைய பூஜையில் ஈடுபட்டிருந்த மகளை ஹாலில் இருந்து ரசித்திருந்தார், சுந்தரம்.
இன்று காயத்ரியின் அண்ணன் வீட்டில் போய்.. ஸ்ருதி – ரகு திருமணம் குறித்து பேசப் போகிறார். மனதில் இனம் புரியாத கவலை ஒன்று வந்து சூழ்ந்து கொண்டது. மகள் வளர்ந்து விட்டாள்.. திருமணம் முடிந்து தன்னை விட்டு கண்காணா தூரம் செல்ல போகிறாள். இதுவே அவர் மனம் அலைப்புறப் போதுமானதாக இருந்தது.
‘ம்ஹூம்.. ரகுகிட்ட எப்டியாவது பேசி.. இங்கயே வேலை மாத்திட்டு வர சொல்லணும்.. குழந்தையப் பார்க்காம நம்மளால இருக்க முடியாது..’ மனதில் தீர்மானித்துக் கொண்டு.. தன் மச்சினனை சந்திக்கக் கிளம்பினார்.
ஜீவானந்தம்.. காயத்ரியின் உடன் பிறந்த மூத்த சகோதரர்.. ரகுராமின் தந்தை. காலை உணவை முடித்து விட்டு.. தன்னை சந்திக்க வருவதாகக் கூறியிருந்த தங்கை கணவருக்காக.. ஹாலில் காத்துக் கொண்டிருந்தார். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும்.. வேகமாக எழுந்து சென்று.. காரை விட்டு இறங்கி கொண்டிருந்த சுந்தரத்தை வரவேற்றார்.
“வாங்க.. வாங்க மாப்பிள்ளை.. வீட்டுக்கு இன்னிக்காவது வந்தீங்களே..”
“என்ன பண்ண அத்தான்.. வேலையே சரியா இருக்குது..”
உள்ளே வந்ததும்.. ஜீவானந்தமின் மனைவி தேவிகா.. “வாங்க அண்ணா.. நல்லாயிருக்கீங்களா? அண்ணி எப்டி இருக்காங்க? ஸ்ருதி என்ன பண்றா?” என்று நலம் விசாரித்தார்.
“எல்லாரும் நல்லா இருக்கோம்மா.. அதான் ரெண்டு பேரும் டெய்லி பேசறீங்களே.. நீ எப்டி இருக்க..?”
“ஃபோன்ல பேசுனா நேர்ல விசாரிக்க கூடாதுனு இருக்கா என்ன..? என்று கேட்டு கொண்டே.. “காபி போடட்டுமா? ஜூஸ் கொண்டு வரவா அண்ணா?” என்று உள்ளே செல்ல திரும்பினார்.
“மோர் இருந்தா கொண்டு வாம்மா..”
அவர் உள்ளே சென்றதும்.. ஜீவானந்தமிடம் திரும்பி, “ரகு எப்ப வர்றான் அத்தான்?” என்று கேட்டார்.
“நாளைக்கு வர்றதா சொன்னான் மாப்பிள்ளை.. வந்தா எப்டியும் வாரம், பத்து நாள் இருப்பான்.. நீங்க என்ன சொல்றீங்க? இந்த முறை நம்ம ஸ்ருதிக்கும், ரகுவுக்கும் நிச்சயம் பண்ணிடுவோமா?”
“அது பத்தி பேச தான் நானும் வந்தேன்.. தாராளமா பண்ணுவோம்.. ஆனா..” என்று சுந்தரம் இழுத்து கொண்டிருக்கும் போதே.. தேவிகா கையில் மோர் டம்ளருடன் வந்தார்.
“இந்தாங்க அண்ணா.. குடிச்சிட்டு பேசுங்க..”
மோரை வாங்கி அருந்தியவர்.. மேற்கொண்டு பேச சற்று தயங்கினார்.
“சொல்லுங்க மாப்பிள்ளை.. எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க.. நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி..?” என்று ஜீவானந்தம் அவரைப் பேச ஊக்கினார்.
“அது வந்து அத்தான்.. ரகுவ இங்கயே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வர சொல்லலாமே.. உங்களுக்கே தெரியும்.. நான் ஸ்ருதி மேல எவ்ளோ ப்ரியம் வச்சிருக்கறேன்னு.. கல்யாணம் முடிச்சு அவ்ளோ தூரம் அனுப்பிட்டு.. குழந்தையப் பார்க்காம…. என்னால எப்டி முடியும் தெரியல.. அதான்……” என்று தயங்கி தயங்கி தான் கேட்க நினைத்ததை ஒரு வழியாக கேட்டு முடித்தார்.
“என்ன அண்ணா நீங்க.. இது எல்லார் வீட்லயும் நடக்கறது தான? கல்யாணம் ஆகி பொண்ணுங்க புருஷன் இருக்கற இடத்துக்கு வாழப் போறது என்ன புதுசா..?”
“தினமும் காலைல அவ முகத்தப் பார்த்தா தான் எனக்கு வேலையே ஓடும் தேவி.. இப்ப அத்தன தூரத்துக்கு அனுப்பிட்டு.. எப்டி..?”
“மாப்பிள்ளை.. கூடவே இருந்த பொண்ணு வேற வீட்டுக்கு போகும் போது முதல்ல அப்டி தான் இருக்கும்.. அப்புறம் பழகிடும்.. இங்க ஃப்ளைட்டப் புடிச்சா.. மூணு மணி நேரத்துல நீங்க உங்க பொண்ணு முன்னாடி நிக்கப் போறீங்க.. இதுல என்ன இருக்குது..?” என்றார், பெண்ணைப் பெறாத.. அப்பா மகளின் பாசம் புரியாத அந்த தந்தை..!
“அப்டி இல்ல அத்தான்….”
“சரி.. உங்க திருப்திக்கு ரகு வந்ததும் நீங்களே அவன்கிட்ட பேசிடுங்க.. நானும் உங்களுக்காக பேசி பார்க்கறேன்.. என்ன தான் அப்பாவா இருந்தாலும் பசங்க வளர்ந்துட்டா ஒரு சில விஷயத்துல ரொம்ப தலையிட முடியாது பாருங்க..”
அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்றெண்ணி.. முகம் மலர்ந்து, “அதுவும் சரி தான் அத்தான்.. ரகுகிட்ட நான் பேசி பார்க்கறேன்..” என்று கூறி.. இருவரிடமும் விடை பெற்று கிளம்பினார்.
புதன்கிழமை காலை அலுவலகத்தில் மிகுந்த பரபரப்புடன் இருந்தான், முகுந்தன்.
“எத்தன மணிக்கு ஃப்ளைட்?” எதிரில் இருந்த தன் பி.ஏ. சுதாவிடம் கேட்டு கொண்டிருந்தான்.
“லெவன் ட்வென்ட்டி ஃபைவ்க்கு சார்..”
“ப்ரொக்ராம் அவர் சொன்ன நேரம் தான நடக்குது?”
“எஸ் சார்..”
“ஸ்டார் ஹோட்டல்ல ரூம் ரெடியா இருக்குதா? எல்லாம் பக்காவா இருக்கணும்.. எதுவும் குறை இருக்கக் கூடாது சுதா.. வீட்டுக்கு கூப்பிட்டா மனுஷன் வர மாட்டேனுட்டார்..”
“எல்லாம் சரியா இருக்குது சர்.. கார்த்திக் காலைலயே போய் செக் பண்ணிட்டு வந்துட்டார்..”
“எங்க அவன்?”
“பார்க்கிங்ல காரோட ரெடியா இருக்கார் சார்..”
“ஹ்ம்ம்.. குட்..” என்று விட்டு.. தனக்கே உரிய வேக நடையுடன் பார்க்கிங்கை நோக்கி சென்றான்.
சென்னை விமான நிலையம்.. தரையிறங்கும் விமானத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள், மேலேறக் காத்திருக்கும் விமானத்தை எட்டி பிடிக்க வந்திருப்பவர்கள், அவர்களை வழியனுப்புபவர்கள் என எங்கெங்கும் மனிதர்கள் கூட்டமே..!
முகுந்தன் கார்த்திக்கிடம் பேசிக் கொண்டே.. காரிலிருந்து இறங்கி தன் கம்பீர நடையுடன் விறுவிறுவென உள்ளே சென்றான். நந்தகுமார் வரும் விமானம் தரையிறங்கும் சரியான நேரத்திற்கு.. தான் வந்ததில் நிம்மதி மூச்சு விட்டு கொண்டு.. வந்தவரை வரவேற்க கையில் கார்த்திக் தந்த பூங்கொத்துடன் நின்றான்.
விமானத்தில் இருந்து இறங்கி.. இமிக்ரேஷன் போன்ற ஃபார்மாலிட்டிகளை முடித்துக் கொண்டு.. சூழ இருந்த மீடியா ஆட்களையும், ரசிகர்களையும் விலக்கிக் கொண்டு வந்த நடிகர் நந்தகுமாரின் கையைப் பற்றிக் கொண்டு வந்தாள், ஓர் மாடர்ன் யுவதி..!
வந்தவர் முகுந்தனை அடையாளம் கண்டு.. “ஹாய் மை டியர் பாய்.. ஹவ் ஆர் யூ..? ஹவ் இஸ் மை ஃப்ரெண்ட் ராக்..?” என்று எந்தவித பந்தாவும் இல்லாமல்.. முகுந்தனின் தோளில் கை போட்டு கொண்டார்.
“ஃபைன் சார்..” என்று புன்னகைத்தவனிடம்..
“மீட் மை டாட்டர் அஷ்ரிதா..” என்று அந்த பெண்ணை அறிமுகப்படுத்தினார்.
“ஹாய்..” என கை நீட்டியவளின் கைப்பற்றி குலுக்கி விட்டு.. பூங்கொத்தை நந்தகுமாரிடம் நீட்டினான்.
அவள், “எனக்கு தர மாட்டீங்களா..?” என்று சிறுபிள்ளையாய் கேட்டதும்.. சிரிப்புடன் அவளிடம் தருவதற்காய் திரும்பியவனை.. ஒருவர் இடித்ததால் அவன் கையில் இருந்த பூங்கொத்து கீழே விழுந்து சிதறியது.
இடித்தவனைக் கடுங்கோபத்துடன் திரும்பி பார்த்தான்.
தன் முதுகிலிருந்த பேக்கினால் ஒருவரை இடித்து விட்டோம் என்பதை உணர்ந்து.. சாரி சொல்லத் திரும்பியவனிடம்.. “நான்சென்ஸ்.. ஆள் நிக்கறது தெரியல..” என்று பல்லைக் கடித்தான்.
முகுந்தனின் பேச்சால்.. திமிராய் முகத்தை வைத்துக்கொண்டு “தெரியல..” என்றான், ரகுராம்..!