அன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா என்று அவளுக்கு சரியாக புரிபடவில்லை.
இரவு முழுவதையும் அவள் வாழ்வில் கால்பதித்துள்ள இரு ஆண்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவள் சற்றே சோர்ந்திருந்தபோதும், ஆராய்ச்சியின் முடிவு தந்த புத்துணர்வு அவள் உள்ளத்தில் மட்டும் அல்லாமல் முகத்திலும் ஒரு தேஜஸை உண்டு செய்திருந்தது.
முற்பிறவி போன்ற தனது இளம்பிராயத்து நினைவுகளை அசை போடத் தொடங்கியவள் மெதுவே ரகுவும் முகுந்த்தும் தனது வாழ்வின் பாதையில் வந்த விதங்களை சிந்திக்க தொடங்கினாள்.
அன்பு அத்தானாக எதிர்கால கணவனாக பால்ய ஸ்நேகிதனாக இளந்தளிரின் நெஞ்சத்தில் முதல் மொட்டாய் மலர்ந்து காதல் மணம் பரப்பிய கண்ணனாக ரகு சிரித்தான். அவனது காதல் பார்வைகளும் அதன் அச்சாரமாய் தந்த மோதிரமும் அவளை சிந்திக்க தூண்டியது. சிந்திக்க சிந்திக்க தன் மனம் கவர்ந்தவன் பொய்த்து போனது ஏனோ என்ற ஏக்கமும் அவளை அறியாமல் அவளை வாட்டியது.
நம்பிக்கையின்மை சந்தேகம், இரண்டையும் தாண்டி அவைகளின் ரிஷிமூலம் அவள் மீது அவன் கொண்ட அளவுகடந்த நேசமோ என்ற எண்ணம் தோன்றிய நொடி அவளுக்கு மகிழ்ச்சி ஊற்றாக பெருகதான் செய்தது. ஆனால் அதே நேரம் அளவுகடந்த அந்த நேசம் தான் அவன் வாயில் எமனாக அமர்ந்து அவளது பெற்றோரின் உயிரை பறித்துவிட்டதோ என்ற உண்மை உரைக்கவும் மகிழ்ச்சி அமிழ்ந்து இதழ் கடையில் இகழ்ச்சி குடிகொண்டது.
உண்மை நேசம் இருப்பின் அவன் ஏன் தன்னை சந்தேகிக்க வேண்டும்? அவள் மீது நம்பிக்கை இல்லை என்றால் அது உண்மை நேசமே தானா? அல்லது வேசமா? இந்த வாதத்தில் அவனது காதலே பொய்யோ என்ற அச்சம் கூட அவளை நிரப்பியது.
மெய், பொய் கடந்து அதீத அன்பு அதன் காரணமாக எங்கே தன்னை இழந்துவிடுவோமோ என்ற பயம் அவனை அவ்வாறு இயங்க செய்திருக்குமோ என்ற எண்ணம் அவளை பாடாய்படுத்தியது. அதற்கு சான்றும் அவள் வசம் இருக்கத்தானே செய்தது.
நந்தினியின் கூற்றை வைத்து பார்த்தால் முகுந்தன் முன்பே அவள் மீது காதல் கொண்ட காரணமாகத்தான் அவளை அவனது நிறுவனத்தில் பல சலுகைகள் கொடுத்து சேர்த்தானோ என்று தோன்றியது ! அதேபோல ரகு அத்தான் பற்றி, அதாவது அவளுக்கு எதிர்கால கணவன் என்று ஒருவன் முடிவாகிவிட்டான் என்று அறிந்தபின் தானே பொது இடத்தில் முகுந்தன் அவ்வாறு நடந்துகொண்டான். மற்றவர்கள் முன் ஸ்ருதியும் முகுந்தனும் காதலர்கள் என்று பொய்த்தோற்றம் ஒன்றை உருவாக்கிவிட்டான்.
அதன் பயனாக ரகு அவளை எச்சரித்தப்போதும், ரகு மீதான கோவத்தில் முகுந்தன் செய்ததை அவள் பெரிய குற்றமாக பாவிக்கவில்லையே? ஒருவேளை ரகுவின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்திருந்தால் பின் நடந்த அசம்பாவிதங்கள் நடக்காது தடுத்திருக்கலாமோ?
அவளது பெற்றோரின் மரணத்திற்கு ரகு காரணம் என்றால், ரகுவை தூண்டிவிட்டது முகுந்தனின் செயல் தானே !
இருவருமே தவறு புரிந்தவர்கள் தான் !
ரகு தன் காதலி கைவிட்டு போய்விடக்கூடாது என்ற பயத்தில்? அவனை மதியாது முகுந்த்தோடு பழகிய கோவத்தில்?
முகுந்தன், மாற்றானின் மனையாள் ஆகப்போகிறவள் என்று அறிந்தும், அவளை தன் காதலி ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற வெறியில்?
இருவரும் தவறு செய்ததற்கான காரணம் காதல். அவள் மீதான காதல். ஆனால் இருவருமே சிந்திக்காது விட்டது அவளை. அவள் மனதை.
ரகு தன் சொல்லால் செயலால் அவளை நோகடித்துவிட்டான் என்றால், முகுந்தன் அவன் எண்ணம் நிறைவேற அவளுக்கு தெரியாமலேயே அவளை பகடைக்காயாக பயன்படுத்தி கொண்டான். அவள் மான அவமானம் குறித்த எண்ணம் அவனுக்கு துளியும் இருக்கவில்லை.
சிந்திக்கசிந்திக்க ரகுவின் தட்டு தராசில் மேலோங்கியது.
அவனது விளக்கங்களுக்கு கூட வாய்ப்பளிக்காமல் துக்கத்தில் தூரமாய் ஓடிவந்த தனது கோழைத்தனத்தை எண்ணி வெட்கினாள்.
அதுபோக முகுந்தன். என்றுமே அவன் வாய் சாமர்த்தியசாலி தான்.! குற்றங்கள் அவன்புறம் இருப்பினும் பணமும் இருந்ததால் அதை மறைக்கவும் அவனால் முடிந்துள்ளதே.
அவனாகவே அவளிடம் வந்து பேசி, அவளையும் பேசவைத்து, அவளையே கோவிலில் கொஞ்சம் தன்னிலை மறக்கவும் செய்துவிட்டானே. !அதுபோக அவள் வாயால் அவன் எதிரிலேயே அவள் அத்தானையும் அவமானப்படுத்தவும் செய்துவிட்டானே.
கெட்டிக்காரன் தான். காரியவாதியும் கூட.
அவளை சுற்றியும் அவன் ஏதோ மாயவலை பின்னிவிட்டதாக சுருதிக்கு பிரம்மை தோன்றியது.
அவனது கண்காப்பில் எப்பொழுதும் அவள் இருப்பதுபோல. மற்றபடி இத்தனை வருடங்கள் வராதவன் ரகு தன்னை நெருங்கியதும் வருவானேன்? அன்று கோவிலுக்கு கூட எதேர்ச்சியாக அவன் வரவில்லையோ?
காரணகாரியங்கள் ஆராய ஆராய அவள் மனம் தெளிய தொடங்கியது.
இருவரையுமே ஒரேயடியாக நம்பவும் தோன்றவில்லை.
சிந்தித்து கொண்டிருந்தவளுக்கு தீடிரென சிரிப்பு பீறிட்டது. மிருகம்பாதி மனிதன்பாதி கலந்து செய்த கலவை நான் என்று வசனம் பேசும் கமலுக்கு பதிலாக அவளது கற்பனையில் முகுந்தனும் ரகுவும் நின்றனர். சிரிப்பினூடே ஆளவந்தான் கமல் மனநலம் பாதிக்க பட்டவர் என்பது நினைவு வர, அடுத்தநொடி ரகுவும் முகுந்தனும் காதல் பட கிளைமாக்ஸ் பரத் கெட்டப்பில் அவள் கற்பனையில் காட்சி அளித்தனர். ஆக எப்படி பார்த்தாலும் பைத்தியம் தான் போல? என்று கிண்டலாக எண்ணியவள், இரு பைத்தியங்கள் இடையே தான் மாட்டிக்கொண்டு முழிப்பது போன்ற தோற்றத்தில் சற்றே திடுக்கிட்டாள்.
உண்மை தானோ? இவர்களை பற்றிய குழப்பத்தில் இப்படி அர்த்தஜாமத்தில் சிந்தித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தால் அவளை பைத்தியம் என்றுதானே சொல்வார்கள்?
அதன் பின் ஒரு முடிவோடு படுத்து உறங்க முயன்றால் ஸ்ருதி. என்ன முயன்றும் நித்திராதேவி அவளை அணைக்க முன் வரவில்லை. அருகே படுத்து அடித்துப்போட்டது போல தூங்கிய தோழியை காண பொறாமையாக இருந்தது. மனதில் தெளிவு வந்தகாரணம், பழைய குறும்பும் தலைதூக்க, நந்துவின் காதில் உஊஊ என்று அலறிவிட்டு கப்சிப்பென போர்வையை இழுத்துப்போர்த்தி கொண்டு படுத்துவிட்டாள் ஸ்ருதி.
ஆனால் நொடிகள் நிமிடங்கள் ஆகியும் நந்துவிடம் ஒரு அசைவும் இல்லை. மகிழின் நிலைமையை எண்ணி சிரித்துக்கொண்டே படுத்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள் .
காலை காபியோடு இரவின் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தவளை நந்துவின் குரல் கலைத்தது.
சோம்பல் முறித்தவாறே படுக்கையில் இருந்து எழுந்தவள், வேகமாக ஸ்ருதியிடம் ஓடிவந்தாள். அவள் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்தவள், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கிசுகிசுப்பான குரலில் “நேத்து என்னாச்சு தெரியுமா? ” என்று ஏதோ மர்மக்கதை சொல்பவள் போல வினவினாள்.
‘என்ன’ என்று புருவம் உயர்த்தி ஸ்ருதி வினவ, “நைட் நாய் தூரத்துல எங்கையோ ஊளை இட்டுச்சு டி… நான் பயத்துல கண்ண தொறக்கலையே ! உனக்கு ஏதும் கேட்டுச்சா? ” என்றாள் ஆராய்ச்சியோடு. ஸ்ருதிக்கு சிரிப்பு பீறிட்டது.
“காதில் கத்தியதே தூரத்தில் ஊளையிடுவதாக தோன்றுவதானால் மகிழ் பாடு திண்டாட்டம் தான் டி ” என்று நினைத்தவள் , “ஓ.இசை அறிந்தவள் நானல்லவா? கத்தியது கூட சுரம் கூட்டி ஊளையாக கேட்டதுபோல ” என்று தொடங்கியவள் சட்டென்ன பேச்சை நிறுத்தி “அதற்கு ஏன் மகிழ் பாவம் என்றாய்? ” என்று வினவினாள்.
மகிழ் தன்னிடம் சொல்லிய விஷயம் குறித்து நந்துவிடம் இன்னும் தொடங்காத நிலையில், வாயை விட்டு மாட்டிக்கொண்ட தன் மட்டித்தனத்தை எண்ணி அவள் நொந்துகொண்டிருக்கும்போதே, அவளை காக்கும் பொருட்டாக கால்லிங் பெல் அலறியது.
ஸ்ருதியை முறைத்துவிட்டு நந்து குளியல் அறைக்குள் புகுந்துகொள்ள, தப்பித்த நிம்மதியோடு ஸ்ருதி சென்று கதவை திறந்தாள்.
அங்கே நின்றிருந்தவன் ரகு.
முகம் திருப்ப முடியாது, மனதில் மகிழ்ச்சி ஒருபுறமும், அவனுக்கு அவனை விளக்க வாய்ப்பளிக்கலாமா என்ற பரபரப்பு ஒருபுறமுமாக அவள் தவித்துக்கொண்டிருக்க, அவளது தவிப்பையும் மௌனத்தையும் தவறாக யூகித்துக்கொண்டான் ரகு.
இறங்கிவிட்ட குரலில் “வானு கூட கூப்பிடமாட்டியா ஸ்ருதி? ” என்றவன் வினவ, சட்டென கதவை நன்கு திறந்து “வாங்க அத்தான்” என்று இன்முகமாகவே அவனை பால்கனி பக்கம் அழைத்துச்சென்றால் ஸ்ருதி.
அவளது “அத்தான் ” அழைப்பு அவனுள் மடிந்து ஏதோ ஒன்றை நிமிரச்செய்தது. வேறு ஒன்றும் இல்லை. காதலை தான். அவள் தன்னை முழுதாக வெறுத்துவிடவில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு பெரும் ஆறுதலை அளித்தது.
“ரொம்ப நன்றி ஸ்ருதி “
“எதுக்கு அத்தான்? “
“அத்தான்னு இன்னமும் என்னை அழைக்கறதுக்கு “
“முறை அதுதானே? “
“முறைக்காக மட்டும் தான் இந்த அழைப்பா ஸ்ருதி? “
பதில் சொல்லமுடியாது உதட்டை கடித்தவள், வேகமாக சிந்தித்து “முறை தவறுவது நம் பண்பு அல்லவே அத்தான் ” என்றால் அழுத்தமாக.
ஒருகணம் அவளை கூர்ந்து பார்த்தவன் ” உண்மை தான். தவறுவது நம் பண்பு அல்ல தான். நீ தவறியிருக்க மாட்டாய் என்று நான் நம்பிஇருக்க வேண்டும் தான். முடிந்தால் என்னை மன்னிக்க முயற்சி செய் ” என்று தாழ்ந்த குரலில் அவன் மன்னிப்பு கோர, அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
அவள் அறிந்து ரகு இப்படி பணிந்துபோனவன் அல்லவே !
“ஆனால் சில தவறுகளால் மனித உயிரே தவறிவிடுகின்றனவே அத்தான் ” என்று கரகரத்தக்குரலில் அவள் உரைக்க, தன்னெதிரே இறுகி அமர்ந்திருந்தவளின் மனதின் வேதனை புரிந்தவனாய் அவளை அணைத்து ஆறுதல் படுத்தவேண்டுமென துடித்த தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு கையாலாகாதனத்துடன் அமர்ந்திருந்தான் ரகு.
சில நொடிகளிலேயே தன்னை சமாளித்துக்கொண்டவள், பேச்சை மாற்றும் முயற்சியாக “வந்த காரணம் என்ன அத்தான்? ” என்று தெளிவான குரலில் வினவினாள்.
நேரடி கேள்வி. அவன் எதிர்பார்த்ததுதும் தான். ஆனால் சொல்லத்தான் தயக்கமாக இருந்தது. இது தயங்கும் நேரமும் அல்ல. ஒருமுறை தன் முட்டாள்தனத்தால் ஸ்ருதியை இழந்தது போல மீண்டும் அவனால் இழக்க முடியாது. எனவே பேசித்தான் ஆகவேண்டும். ஒரு பெருமூச்சோடு அவன் பேச வாய்திறக்க, உள்ளே இருந்து சலசலத்தபடி வந்தாள் நந்தினி.
“ஏஏஏ.. ஸ்ருதி.. உன் ஆளு முகுந்தனுக்கு இன்னிக்கு பிறந்தநாளாம்.அதுக்கு நாம பார்ட்டிக்கு வரணும்னு கூப்பிடறாரு ” என்றபடி வந்தவள், அங்கே ரகு அமர்ந்திருப்பதை கண்டதும் திகைத்தாள்.
ரகுவும் திகைத்து தான் இருந்தான்.
ஸ்ருதியின் ஆருயிர் தோழி நந்தினி. அவளே சகஜமாக முகுந்தனை தன் ஸ்ருதியின் ஆள் என்று உரைக்கவும் அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. கோவிலில் ஸ்ருதியும் முகுந்தனும் அருகருகே அமர்ந்திருந்த விதம் அசந்தர்ப்பமாக கண்முன் தோன்றி அவனை அலைக்கழித்தது.
காலம் கடத்திவிட்டோமோ? என்ற எண்ணமே அவனை தகித்தது.
யாதொன்றும் பேசாது அமைதியாகவே இருக்கையை விட்டு எழுந்தான்.
“அத்தான் ” என்ற ஸ்ருதியின் அழைப்பு அவனை அசைத்தது.
அவளை ஏறிட்டவனின் பார்வையில் இருந்த ஏக்கமும் தோற்றுவிட்ட பாவனையும் அவளை உலுக்க, சட்டென முடிவெடுத்துவிட்டாள் ஸ்ருதி.
“நான் வரல நந்து. இன்னிக்கு அத்தான் கிட்ட நிறைய பேசணும். மிஸ்டர். முகுந்தன் கிட்ட பார்ட்டிக்கு வரமுடியாதற்காக நான் வருத்தம் தெரிவித்ததாக சொல்லு ” எனவும், ரகுவின் முகம் பளிச்சென பிரகாசம் பெற்றது.
சுருதியின் கடுப்பும் கனிவும் கலந்த முகத்தையும் ரகுவின் காதல் நிறைந்த முகத்தையும் கண்ட நந்தினிக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
ஒரே இரவில் தன் தோழிக்கு சூனியம் வைத்துவிட்டார்களோ என்றவள் தீவிரமாக சிந்திக்க, மின்னல் பொழுதில் தயாராகி ஒரு தலை அசைப்புடன் ரகுவையும் அழைத்துக்கொண்டு ஸ்ருதி சென்றுவிட்டாள்.
சாஸர் போல விரிந்த கண்களுடன் நின்ற நந்தினியை கார்த்தியின் அழைப்பு சுதாரிக்க செய்தது.
“என்ன நந்தினி.? நீங்க ரெண்டு பேரும் எப்போ வாறீங்கன்னு சொன்னா அதுக்கு ஏத்தமாரி கூட்டிட்டுப்போக நான் வரேன் ” என்றவன் தொலைபேசியில் உரைக்க, சலித்த குரலில் நடந்ததை அவனிடம் கூறினாள் நந்து.
செய்தி முகுந்தனை அடைந்தது.
‘இனி ஸ்ருதி விஷயத்தில் பொறுமை கைகொடுக்காது’ என்பதை உணர்ந்தவன், தீவிரமாக அதே நேரம் வேகமாக சிந்திக்க தொடங்கினான். முடிவில் அவன் முன் ஒரு அற்புதமான திட்டம் விரிந்தது.
கார்த்தியை அழைத்து தன் திட்டத்தை அவன் விவரிக்க, கொஞ்சம் பயம் கலந்த ஆர்வத்தோடு அதை கேட்டவன் ஸ்தம்பித்துவிட்டான்.
ரகுவை அழைத்துக்கொண்டு ஸ்ருதி சென்றது கோவிலுக்கு தான். கண்மூடி கண்ணனை பிராத்திக்க தொடங்கியவள் கண்முன் அவள் தந்தை சிரித்தார்.
கண்கள் கசிய மனம் உருக தன் மென்குரலில் பாடத்தொடங்கினாள் ஸ்ருதி.
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா