காலை 8 மணி அவசர அவசரமாக கள்ளிக்காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் 6 வயது சிறுவன் மாறன்.. தலையில் பள்ளிக்கூடத்துக்கு துணிப்பையை சுமந்தபடி…
வேர்த்து விருவிறுப்புடன் ஓடி வருகிற தன் பேரனை கண்டவுடன் தன் கணவனை நோக்கினார் அவனுடய பாட்டி செல்லம்மா…
தள்ளாத வயதிலும் தன் மனையாளின் பார்வையை உணர்ந்து கொண்டு தான் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில்லறையில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து செல்லாம்விடம் நீட்ட அதை வாங்கியவர்..
தன் பேரன் தன் அருகில் வந்தவுடன்.. தன் பொக்கை வாயுடன் “எய்யா ராசா இங்க வா…பள்ளியோடத்துத்துக்கு கெளம்பிட்டியாலா” என்று தன் பேரனை ஆர தழுவி அந்த ஒத்த ரூபாயை அவனிடம் நீட்ட அதை வாங்கிய அவன் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பாத்து பூரித்துதான் போனார் செல்லம்மாள்..
மாறன்,”அப்பத்தா நான் இப்போ தான் கஞ்சி குடிச்சுட்டு வரேன்… நீயும் ஐயாவும் சாயங்காலம் வெரசா வீட்டுக்கு வந்துருங்கனு என்று ஒரு அவசர முத்தத்தை தன் அப்பத்தாவிற்கு குடுத்து விட்டு வரேணுங்க ஐயா என்று கூறிவிட்டு சிட்டாக ஓடினான்..
அந்த மழலையின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பாத்த படியே செல்லம்மாள் தன் கணவனிடம்,”ஏனுங்க நம்ம பேரன் அப்டியே ராசா கணக்கா இல்ல இருக்கான்.. புள்ள கோட்டு சூட்டு போட்ட பெரிய ஆளா வருவான் நீங்க வேணாம் பாருங்களேன்னு தன் பேரனை பாத்து மெச்சி கொண்டிருந்தார்”.
அவரோ, “ஏலேய் என்னடியவ பேசரவ,அவன் யாரு இந்த வீரமறவன் பேரனாக்கும் எப்படி சிங்க குட்டி கணக்கா இல்லா இருக்கான்”என்று தன் பங்குக்கு தானும் மெச்சிக்கொண்டார் வீரமரவர்…
வீரமரவர்-செல்லம்மாள் தம்பதியரின் மகன் செங்கோடன்-சாந்தியின் மகன் தான் மாறன்.. அழகான குக்கிராமத்தில் விவசாயம் பாத்து கொண்டிருக்கும் அழகான குடும்பம் இவர்களது தன் மகனை விட தன் பேரன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தனர் அவர்கள்..
எப்போடா மணி அடிக்கும் வீட்டுக்கு போவோம் என்று காத்திருந்த மழலைகள், மணி சத்தம் கேட்ட உடனேவே தத்தம் பையுடன் பள்ளியை விட்டு வெளியே விரைந்தனர்..
மாறன் தன் பையை எடுத்துக்கொண்டு வெளியே வர வீரமறவர் தன் பேரனுக்காக வெளியே காத்துக்கொண்டிருந்தார்.
அவரை கண்டவுடன் அவர் அருகில் ஓடிய
மறவன் மூச்சு வாங்க,”ஏனுங்க ஐயா இம்புட்டு தூரம் வந்துருக்கீக…”என்று வினவ
வீரமரவரோ,”ஏலேய்…இந்த பக்கமா ஒரு சோலியா வந்தேன் பள்ளிக்கூடம் மணி அடிக்கறது கேட்டுச்சு அதாம்ல நீ வருவனு இங்கன நிக்குறேன்”னு உரைத்தவர் ஏதோ நியாபகமாய் தன் இடுப்பில் சுற்றி வைத்திருந்த பொட்டலத்தை தன் பேரன் கையில் திணித்தார் வீரமரவர்..
அதை கையில் வாங்கிய மாறனுக்கு அப்போது தான் தெரிந்தது தன் தாத்தா எதேச்சையாக இந்த பக்கம் வரவில்லை.. தனக்காக தான் வந்திருக்கிறார் என்பது அவனும் தன் தாத்தாவை நோக்கியபடியே அந்த பொட்டலத்தை பிரிக்க அதில் அவன் விரும்பி சாப்பிடும் கடலை மிட்டாய் இருந்தது…
மாறனோ அதை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டு,”ஏனுங்க ஐயா இதை குடுக்கவா இம்புட்டு தூரம் வந்தீக.. நீங்க வூட்டுலயே வச்சுருக்கலாம்ல நான் வந்து வாங்கிருப்பேன்ல”
வீரமரவரோ,”ஏலேய் ராசா..உனக்கு புடிக்குமேனு இதை முன்னமே வாங்கிட்டேன் நீ வர வரைக்கும் வச்சுக்கிட்டு இருக்க முடியல அதான் உங்க அப்பத்தா கிட்டே கூட சொல்லாம ஓடி வந்துட்டேன்யா” என்று கூறினார்.
அந்த மழலை பொட்டலத்தை பிரித்து அதிலிருந்த கடலை மிட்டாயை தனது சட்டையில் வைத்து கடித்து துண்டுகளாக்கி ஒரு துண்டை எடுத்து வீரமரவருக்கு ஊட்டிவிட்டு தானும் ஒரு துண்டை வாயில் போட்டுக்கொண்டான்.
பேரன் அன்பில் நெகிழ்ந்து போனவர் தன் பேரனை தன் தோல்மேல் சுமந்து கொண்டு வீடு வரைக்கும் சென்றார்..செல்லம்மாளும் அந்த ஆலமரத்தின் அடியில் கட்டிலில் அமர்ந்தபடியே வீதியை பாத்து கொண்டிருந்தார் அவர்கள் இருவரின் வருகைக்காக…
அவர்கள் இருவரும் கண்ணில் தென்பட்டவுடன் இமைக்காமல் பாத்து கொண்டிருந்தவரின் அருகில் வந்த மாறனோ அப்பத்தா என்று கட்டிபிடித்துக்கொண்டு தன் சட்டைப்பையில் இருந்த ஒரு கடலை மிட்டாய் துண்டை நீட்டினான்… அவனை மடியில் அமர்த்திக்கொண்டு அதை வாங்கி வாயில் போட்ட செல்லம்மா தன் கணவனை பாத்து,”இதுக்கு தான் இம்புட்டு அவரமா போனீரோ”என்க அவரோ சிரிப்பை பதிலாக தந்தார்.
இது இவர்களுக்குள் நடக்கும் ஒன்று தான் தன் பேரனுக்கு கடலை மிட்டாய் என்றால் கொள்ளை பிரியம் என்பதற்காகவே எங்கு வெளியில் சென்றாலும் வாங்கி வருவது அவர் வழக்கம்…
அந்த கிராமத்தில் பொதுவாக சித்திரை மாதத்தில் ஊரில் நடக்கும் பெரிய திருவிழா வீரபாண்டி அம்மன் திருவிழா.. இது சித்திரையின் வருகையை ஒட்டி சிறப்பாக அந்த கிராமத்துல நடக்கும் அப்போ கூட தன் பேரனுக்காக வீட்டுலயே கடலை மிட்டாய் தான் செய்வார் செல்லம்மாள்… அவனுக்காக தேடி தேடி பொருள் வாங்கி அவனுக்கு பிடித்த கடலை மிட்டாயை செய்து குடுத்து அவன் போக வர சாப்பிடுவதை ரசித்து கொண்டிருப்பார்கள் அந்த மூத்த தம்பதிகள்..
செல்லம்மாவின் மருமகளோ வருசவருசம் அத்தை இந்த வருசமாச்சும் அதிரசம் முறுக்குன்னு ஏதாவது பண்ணலாம் என்பார்..
செல்லம்மாவோ அட போடி என் பேரனுக்கு என்ன புடிக்குமுன்னு தெரியுமுல என் ராசாவுக்கு என்ன புடிக்குதோ அதாம்ல எப்பவுமே செய்வோம்.. என் கட்டை காடு போயி சேர வரைக்கும் இப்டிதாம்லனு முடிச்சுருவார்..
அவங்களோட வாழ்க்கை காலை கள்ளிகாட்டில் தொடங்கி சாயங்காலம் ஆலமரத்தடியில் தன் பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டு அன்றைய நாட்களின் கதையை பேசிக்கொண்டு இரவும் உண்டு முடித்து பாட்டியின் மடியிலேயே தூங்கிவிடுவான் எப்போது அவன் அன்னை வந்து தூக்கி செல்கிறார் என்பது அவனுக்கும் தெரியாது..
இன்று சித்திரை திருவிழா மாறன் 29 வயது இளைஞனாய் தன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வருகிறான் இன்று தன் பாட்டியை போல் யாருமில்லை கடலை மிட்டாய் செய்து கொடுப்பதற்கு…அவனது மனைவியும் எத்தனை முறை முயற்சி செய்துவிட்டால் இருந்தும் மாறன் சொல்லும் ஒரே வார்த்தை தன் பாட்டியின் கைப்பக்குவம் இல்லை என்பதே..அவளும் சலித்துக்கொள்வாள்… இருக்காதா பின்ன திருமணம் ஆன புதிதே அவள் உங்களுக்கு என்ன புடிக்கும் என கேட்க அவனோ யோசிக்காமல் கடலை மிட்டாய் என்றான் சிறு குழந்தையை போலே..
அதை கேட்டு சிரித்தவளின் முகத்தை நோக்கி உனக்கு செய்ய தெரியுமா என அடுத்த கேள்வி கேட்க அவனிடம் தெரியாது ஆனா கத்துகிறேன்னு சொன்னவ இன்னிக்கு வரைக்கும் கத்துகிட்டு தான் இருக்கா…
இத்தனை வருடத்தில் அவன் எவ்ளோ வளந்திருந்தாலும் எதை மறந்தாலும் அவன் மறக்காமல் இருப்பது தன் தாத்தா பாட்டியின் நினைவுகளையும்,கடலை மிட்டாயையம்,இந்த சித்திரை திருவிழாவையும் தான்..
அந்த நினைவுகளுடனே அவன் தன் ஆலமரத்தை நோக்கி சென்று அதனடியில் நிற்க சில்லென்ற காத்து தென்றலாய் வீச விழுதுகள் காற்றில் ஆடி அவனை தழுவின.. அந்த தழுவளில் அவன் உணர்ந்தது தன் தாத்தா பாட்டியின் அணைப்பையே கண்மூடி அதை ரசித்தவனின் கண்களின் ஓரம் கண்ணீர்துளி…
இந்த சித்திரையும் வழக்கம் போலே அவனுக்கு அவனுடைய பசுமையான நினைவுகளையும் கடலைமிட்டாயையுமே தந்தது….
பழமையான நினைவுகள் மிகவும் பசுமையான நினைவுகள்…..