அதிகாலை 4.30 மணி
அலாரம் “க்ரீச் க்ரீச்” என ஒலியெழுப்பி, தன் கடமையை செவ்வனே செய்ய, அதில் லேசாக துயில் கலைந்து, புரண்டு படுத்தாள் பிருந்தா. மறுபடியும் தன் தூக்கத்தை தொடர முற்பட்ட பொழுது, அலாரமும் தனது தூக்கம் தடை பட்ட எரிச்சலில், மீண்டும் கதற ஆரம்பிக்க, அதில் முற்றும் முழுதாக தூக்கம் கலைய, அடித்து பிடித்து எழுந்தாள், பெண்.
பக்கத்தில் அவள் கணவன் முரளி தூக்கத்தில் லேசாக புரண்டு படுக்க, அலாரத்தை வேகமாக எழுந்து அணைத்தாள். இல்லையென்றால் காலையிலே கணவனிடம் யார் சுப்ரபாதம் கேட்பது. மெதுவாக தன் தலையை திருப்பி, கணவனை நோக்க, அவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான். அதில் அவள் லேசாக ஒரு பெருமூச்சை வெளியிட, கணவனின் நினைவை தொடர்ந்து, செய்ய வேண்டிய வேலைகளும் அணிவகுத்து நிற்பது ஞாபகம் வந்தது.
உடலும், இமைகளும் அவளிடம் ஓய்வுக்கு கெஞ்ச, அதன் மொழிகளை காது கொடுத்து கேட்காமல், அவசர அவசரமாக, சத்தமின்றி வேகமாக எழுந்தாள். இல்லையென்றால் அதற்கும் பாட்டு வாங்க வேண்டி வருமே!
மெதுவாக வார்டுரோபை திறந்து, தனது துணிகளை அள்ளிக்கொண்டு குளியலறை சென்று, காலை கடன்களை முடித்து அவள் திரும்பி வர அரை மணி நேரம் எடுக்க, தலையை காய வைக்க நேரம் இல்லாமல் அம்மியா அம்மியா என பேருக்கு துவட்டும் போது, “பிருந்தா! இன்னும் சின்ன குழந்தையா நீ? பாரு எப்படி தலை காயாம இருக்கு!” என, சிறு கண்டிப்போடு துண்டை அவளிடம் இருந்து வாங்கி, துவட்டி விடும் அன்னையின் முகம் ஞாபகம் வந்தது. தாயின் நினைவில் மனம் கலங்க, முயன்று தன்னை சமன் செய்து கொண்டாள்.
கண்ணாடி முன் சென்று, ஓரு முறை தலையை துவட்டி, பின் காய்ந்ததும் காயாமலும் இருந்த கூந்தலின் இரு புறமும் சிறு முடி எடுத்து நடுவே சிறு கேட்ச்கிளிப் குத்தி, எந்த வித ஒப்பனையும் செய்து கொள்ளாமல், ஒரு பொட்டை ஒட்டிக்கொண்டு சத்தமே வராமல் கதவை சாத்தி விட்டு கிளம்பினாள்.
அவளுக்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகள் அவளுக்காக கியூவில் காத்துக்கொண்டு இருந்தது. அப்போதே
மணி 5.10 சற்றும் சலிக்காமல், தனது அன்றாடப் பணியை மேற்கொள்ள ஆரம்பித்தாள் பிருந்தா. அவர்கள் வீட்டில், காலை சாமி கும்பிட்டு விட்டு தான் அடுப்பே பற்ற வைக்க வேண்டும்.
வெளி வாசலை வேலை செய்பபவர் கூட்டி பெருக்கி கோலம் போட்டு விடுவார். இவள் தோட்டத்திற்கு சென்று அன்றைய பூஜைக்கு தேவையான பூக்களை பறித்து,
விளக்கேற்றி, இவள் பூஜை செய்ய ஆரம்பிக்கும் போது, அவள் மாமியார் சாரதா அங்கு வந்து சேர்ந்தார்.
பூஜைக்கு பூ பறிப்பது தொடங்கி, ஏற்பாடுகள் அனைத்தும் செய்வது பிருந்தா தான். ஆனால் கடைசி நேரம் மட்டும் வந்து பந்தா காட்டுவது மட்டும் அவர் வேலை. ஆரத்தியை கண்ணில் ஒற்றிவிட்டு, அவள் தனது வேலையை பார்க்க சென்றாள்.
இன்னும் அரை மணி நேரத்தில் கணவன் எழுந்து விடுவான். அவன் ஒரு மணி நேரம் ஜாகிங் சென்று திரும்பி வரும் போது அவனுக்கு சூடான காபி இவளே கலந்து, அவனிடம் தர வேண்டும்.
இவள் கிச்சனிற்கு செல்லும் போது அங்கே வேலை செய்யும் கோமதி அம்மாள் இவளை பார்த்து வரவேற்கும் விதமாய் புன்னகை புரிந்தார்.
“ அம்மா இன்னைக்கு பூரி போடணும் அதனால ஒரு அரை மணி நேரம் கழிச்சு மாவு பெசஞ்சு வச்சுடுங்க. கிழங்கு வேக வச்சு வைங்க” என, அவருக்கு வேலை ஒதுக்கி கொடுக்க, இவள் முகமோ புன்னகையை தத்து எடுத்து இருந்தது.
ஏனென்றால் நேற்று அவளது மகள் பூரி வேண்டும் என கேட்டு செய்த அலப்பறை அப்படி. மணி 6 ஆக வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக எழ ஆரம்பித்து விடுவர்.
அவர்கள் அனைவருக்கும் அவரது ரசனை கேற்ப இவள் தான் காலை காபி தயாரித்து முடித்து, இவள் காபி அடங்கிய ட்ரேயுடன் வெளியே வர, அவளது மாமனார் வைத்தியநாதன், அவரது தாய் அமிர்தம் பாட்டி ஆகியோர் எழுந்து, ஹாலில் உட்கார்ந்து இருந்தனர்.
அவர்களை கண்டதும் அவளது முகம்
புன்னகையை தத்து எடுத்துக்கொள்ள,
“ குட் மார்னிங் மாமா!” , “குட் மார்னிங் பாட்டி!” என்ற படியே காபி ட்ரேவை அவர்களிடம் நீட்ட, அவர்களும் புன்னகை முகமாக, “குட் மார்னிங் மா!” என்ற படியே எடுத்துக் கொண்டனர். “ முரளி எழுந்துட்டானா மா?” என வைத்தியநாதன் அவளிடம் வினவ, “அவர் எழுந்து ஜாகிங் போயிட்டு வர நேரம் தான் மாமா!”
என அவரிடம் பதில் அளித்து விட்டு,
மாமியார் சாரதாவிடம் நீட்ட, அவர் ஒரு கொணட்டலுடன், அவளிடம் இருந்து வாங்கி கொண்டு மாமியார் அருகில் போய் அமர்ந்தார்.
“தன்யாவும், ராகுலும் எழுந்துட்டாங்களா மா?” என பாட்டி வினவ, “இல்ல பாட்டி! இனிமே தான் அவங்கள எழுப்பனும்! நயிட் ரெண்டு பேரும் தூங்கவே நேரம் ஆகிட்டாங்க “ என பாட்டியிடம் பதில் தந்தவள், காலி கோப்பைகளை அவர்களிடம் இருந்து வாங்கி கிட்சேனில் வைத்து விட்டு அவர்கள் அறை நோக்கி சென்றாள்.
கணவன் வர இன்னும் நேரம் இருக்க, ஆதலால் அவர்கள் அறை ஒரு வித அமைதியோடு இருந்தது. அவர்கள் அறைக்குள் நுழைந்து, இடது புறம் திரும்பினால், ஒரு ஆஃபீஸ் ரூம் போல முதலில் வரும் அதற்கு அடுத்து அறைக்கு செல்லும் போது, “கடவுளே என்ன காப்பாத்து! “ என வேண்டிய படியே தான் சென்றாள்.
அங்கே இன்னும் இருள் கவிழ்ந்து இருக்க, மெதுவாக ஜன்னல் அருகே சென்று அங்கிருந்த திரை சேலையை விலக்க, இளங் கதிர் அந்த அறைக்குள் பிரவேசித்தது. பின்னாடி திரும்ப அங்கே கட்டிலில் இரு உருவங்கள் அசையாமல் அப்டியே இருந்தது.
மெல்ல கட்டிலின் அருகே சென்று, போர்வையை மெல்ல விலக்கி, “ராகுல் கண்ணா எழுத்துரு பா!” என,அந்த சின்ன கண்ணனின் தலை கோதி, சிறு முத்தம் வைக்க, அந்த குட்டி வாண்டோ மம்ம்ம்ம் என திரும்பி படுத்து
விட்ட தூக்கத்தை தொடர, “பிலீஸ் டா என்
செல்லம் ல எழுந்திரிமா!” என அதுவும்
அடம் செய்யாமல் அழகாக தன் கண் மலர்
திறந்து, தன் அரிசி பல் சிரிப்பை சிந்தி,
தனது தாயை கண்டு “அம்முமா குட் மார்னிங்!” என கூறியது.
“குட் மார்னிங் டா பட்டு குட்டி!”என மீண்டும்
ஒரு முத்தம் அதன் குண்டு கன்னங்களில்
பதித்து விட்டு, அவன் போர்த்தி இருந்த
போர்வையை மடித்து வைக்க, அடுத்து அவள் பார்வை அருகே இருந்த கட்டிலில்
இருந்தது. அவளது கால் அங்கே செல்ல,
மெல்ல அதே போல் போர்வையை விலக்க,
முகத்தில் வந்து விழுந்த அந்த இளங் கதிரின் வெளிச்சம் அதன் முகத்தில் விழ,
தனது தூக்கம் தடை பட்ட எரிச்சலில்,
தனது கண்ணை மூடிய படியே, “ அம்மா!
உங்களை யாரு இப்போ விண்டோவ் ஓபன் பண்ண சொன்னது?” என தனது கீச்சு குரலில் அந்த வீடே அதிரும் படி கத்தினாள், அந்த குட்டி ராட்சசி.
அவள் கத்திய சத்தம் கீழே ஹாலில் இருப்போரின் காதில் விழுந்தாலும், இது எப்போதும் வழக்கம் தான் என்பதால், கீழே ஹாலில் இருந்த அனைவரும் அவர் அவர் வேலையை கவனிக்க, பிருந்தா தான் “தன்யா ஏன் இப்படி கத்துற?” என மகளை சிறு குரலில் கண்டிக்க, “ நீ தான் இப்போ வந்து என்ன எழுப்புற! நான் வந்து என்னை எழுப்ப சொன்னேனா?” என கட்டிலில் மீது ஏறி நின்றுக் கொண்டு அவள் கத்த, அவளது பதிலில் சிறு சினம் துளிர்க்க,
“என்ன மரியாதை இல்லாம பேசுற?”
என்றபடி அவளை நெருங்க, அவள் அங்கிருந்து வேகமாக வெளியே ஓட, இவள் பின்னே துரத்திக் கொண்டே வர,
அதற்குள் அவள் அந்த அறையை தாண்டி அவர்களது அறையில் இருந்து வெளியே செல்லும் கதவின் அருகே சென்று விட்டு இருந்தாள்.
“ஏய்! ஓடாத நில்லு!”என்ற படியே இவள் பின்னே வர, மகளோ அதற்குள் கதவின்
கைப்பிடியில் கை வைக்க போக, அதற்குள்அவர்களது அறைக் கதவின் கைபிடி குமிழ் திருகும் ஓசையும், அதனை தொடர்ந்து, அப்போது தான் ஜாகிங் முடித்து விட்டு வீட்டுக்குள் வந்த அவளது கணவன் முரளியின் மேல் மோதி நின்றாள், அந்த குட்டி ராட்சசி.
தன் மேல் திடீரென வந்து மோதிய மகளை, கீழே விழுந்து விடாமல் பிடித்தவன் மகளிடம் குனிந்து, “என்னடாமா ஏன் இப்படி ஓடி வரிங்க?” என மகளிடம் கேட்க, பார்வையோ மனைவியிடம் இருந்தது.
அந்த குள்ள பிசாசோ, “அப்பா இந்த அம்மா என்ன அடிக்க வராங்க!” என அவனிடம் தீக்குச்சி இல்லாமலே பத்தி வைக்க, அவனது பார்வையோ, சற்றென்று தெலுங்கு பட ஹீரோ போல் சிவக்க!, பின் அது பொய்யோ எனும் வகையில், ,அவன் முகம் கனிவே உருவாக, மகளிடம் குனிந்து,அவளை தூக்கி முத்தமிட்டு, “நீங்க பாட்டி கிட்ட போய் ரெடி ஆகுங்க! போங்க! போங்க!”என மகளை தன் தாயிடம் அனுப்பி வைத்தவன், மகள் அறையை விட்டு வெளியேறும் வரை புன்னகை முகமாக இருந்தவனின் முகம் திரும்பும் போது சடுதியில் மிக கடுமையாய் உருமாறி இருக்க, அவளை நோக்கி கூர்மையான பார்வையுடன், அமைதியாக அதே நேரம் அழுத்தமான காலடியுடன் வந்தவன் முகம் அவளுள் குளிரை பரப்ப,
அருகில் வந்தவன் அவள் என்ன! ஏது? என உணரும் முன்னரே, அவனது கை அவளது கன்னத்தில் , “பளார்” என, அழுத்தமாக பதம் பார்த்து இருந்தது.
சாரல் அடிக்கும்…