மாளவிகாபுர நாட்டை ஒட்டிய அடர்ந்த காட்டில், வீரபத்திரர் என்ற கிழவரும், மிக அழகான பதினாறு வயது நிரம்பிய சந்திரஹாசினி என்ற அவருடைய பேத்தியும், ஒரு குடிசை அமைத்து வசித்து வந்தனர்.
நாம் தன்னந்தனியாக காட்டில் ஏன் வசிக்க வேண்டும் என்று சந்திரஹாசினி அடிக்கடி தாத்தாவை கேட்பதுண்டு. பலமுறை பதில் சொல்லாத அவர், ஒருநாள் அந்த உண்மையைக் கூறினார். மாளவிகாபுரநாட்டு மன்னரான தீரசிம்மனிடம் ரதம் ஓட்டுபவராக அவர் வேலை செய்து வந்தார்.
ஒருமுறை தீரசிம்மனுக்கும், அயல்நாட்டு அரசனுக்கும் நிகழ்ந்த போரில், மன்னருடைய ரதத்தை தாத்தா போர்க்களத்தில் செலுத்திக் கொண்டிருந்தபோது, எதிரியின் ஈட்டி ஒன்று தீரசிம்மனை தாக்கிக் காயப்படுத்திவிட்டது. போரின் இறுதியில் தீரசிம்மன் வென்றாலும், ரதம் சரியாக ஓட்டாததால் தான் ஈட்டி தன் மீது பட்டது என்று கருதி, தீர விசாரிக்காமல் அவரை நாடு கடத்தி விட்டார். அப்போதிலிருந்து தாத்தா, தன் பேத்தியுடன் காட்டில் வசிக்கிறார்.
ஒருநாள், தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த ஒரு சிட்டுக்குருவி சந்திரஹாசினியின் கண்களில் பட்டது. அதை நெருங்கிப் பார்த்ததும், அது காயமுற்றுப் பறக்க முடியாமல் இருப்பதைக் கண்டாள். உடனே, அந்தக் சிட்டுக்குருவியை தன் குடிசைக்கு எடுத்து வந்து, அதன் காயத்திற்கு மருந்திட்டு, அதற்கு உணவளித்துப் பராமரித்தாள். அவளுடன் கூடவே அந்தக் சிட்டுக் குருவியும் இருக்கத் தொடங்கியது.
ஒருநாள் திடீரென மன்னர் தீரசிம்மன், தன் வீரர்களுடன் சந்திரஹாசினியின் குடிசைக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயம் தாத்தா எங்கோ வெளியில் சென்றிருந்தார். மன்னர் அவளை நோக்கி,
“”பெண்ணே! சில நாட்களுக்கு முன் என்னுடைய ஒரே மகன் இந்தக் காட்டில் வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மரத்தடியில், ஒரு யோகி அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதை என் மகனும், அவனுடன் வந்த வீரர்களும் பார்த்தனர்.
“”வீரர்களில் ஒருவன், வேண்டுமென்றே இறந்த ஒரு சிட்டுக்குருவியை அந்த யோகியின் தலையில் வைத்தான். தவம் கலைந்து விழித்த யோகியின் கண்களில் என் மகன் தான் முதலில் தென்பட்டான். என் மகன் தான் இவ்வாறு திமிராக செய்தவன் என்று தவறாக நினைத்த யோகி, அவனை ஒரு சிட்டுக்குருவியாக மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். அதிலிருந்து என் மகன் இந்தக் காட்டில் சிட்டுக்குருவியாகத் திரிந்து கொண்டிருக்கிறான். நீ இந்தக் காட்டிலேயே இருப்பவள். ஆதலால், உன் உதவி கொண்டு அவனைக் கண்டுபிடிக்க முடியும் என நினைக்கிறேன்,” என்றார்.
“”மகாராஜா! கவலைப்பட வேண்டாம். காயமடைந்த அந்தக் சிட்டுக் குருவிக்கு நான்தான் சிகிச்சை அளித்தேன். அது இங்குதான் அருகில் இருக்கிறது,” என்று கூறி, சிட்டுக்குருவியை கைத்தட்டி அழைக்க, சிட்டுக் குருவி பறந்து வந்து அவள் தோள் மீது அமர்ந்தது. இவ்வளவு எளிதில் சிட்டுக்குருவி தென்பட்டவுடன், தன் மகனே மீண்டும் கிடைத்துவிட்டது போல் தீரசிம்மன் பெரு மகிழ்ச்சி அடைந்தான்.
“”ஆனால் மகாராஜா! இளவரசருக்கு சுய உருவம் மீண்டும் எப்படி கிடைக்கும்?” என்று சந்திரஹாசினி கவலையுடன் கேட்டாள்.
“”கவலை இல்லை… சாபம் கொடுத்த யோகியை நேரில் சந்தித்து, என் மகன் குற்றமற்றவன் என்பதையும், தீர விசாரிக்காமல் அவர் சாபம் கொடுத்து விட்டார் என்பதையும் அவருக்கு விளக்கிக் கூறினேன். தன் தவறை உணர்ந்த யோகி, இந்த மந்திர நீரை என்னிடம் கொடுத்து, சிட்டுக் குருவியின் மீது தெளித்தால் இளவரசன் சுய உருவம் பெறுவார் என்று சொல்லியுள்ளார்!” என்று கூறி, நீர் தெளிக்க மன்னர் முன் வந்தார்.
“”கொஞ்சம் நில்லுங்கள்…” என்று அவரைத் தடுத்த சந்திரஹாசினி, “”மன்னரே! சற்றுப் பொறுங்கள். இப்போது நீங்கள் முன்பு செய்த தவறுக்கு பிராயசித்தம் கிடைத்துவிடும்,” என்றாள்.
“”நீ என்ன சொல்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் மன்னர் கேட்க, “”மகாராஜா! நான் தங்களுடைய தேரோட்டி வீரபத்திரரின் பேத்தி. முன்பு போர்க்களத்தில் ரதம் சரியாக செலுத்தவில்லை என்று தீர யோசிக்காமல் ஒரு முடிவு செய்து அவரை நாடு கடத்தினீர்கள். அதே போன்ற யோகியின் எண்ணத்தால், உங்கள் மகனுக்கு இந்த நிலை ஏற்பட்டது. என் தாத்தா குற்றமற்றவர். அவரது கையால் இந்த மந்திர நீரை சிட்டுக்குருவி மீது தெளிக்கச் செய்யுங்கள். அவரை மன்னித்து, மீண்டும் எங்களுக்கு வாழ்வு அளியுங்கள்,” என்று கெஞ்சினாள்.
அந்த சமயம், வெளியில் சென்றிருந்த அவளது தத்தா திரும்பிவிட்டார். தனது மன்னரைக் கண்டதும் விழுந்து வணங்கினார்.
“”வீரபத்திரா! என் தவறுக்கு வருந்துகிறேன். இதற்குப் பரிகாரமாக, உனது கையால் இந்த நீரை சிட்டுக்குருவி மீது தெளித்து, என் மகனுக்கு சுயஉருவம் கொடு,” என்றார்.
நடந்ததையறிந்த தாத்தா, “”நீங்கள் கொடுத்த தண்டனையால் தான் இன்று இளவரசனைக் காப்பாற்ற முடிந்தது. எல்லாம் நன்மைக்கே,” என்று கூறி, நீரைத் தெளித்து சிட்டுக்குருவியை பழையபடி இளவரசன் ஆக்கினார்.
பழைய உருவம் பெற்ற இளவரசன், சந்திரஹாசினிக்குத் தன் நன்றியை தெரிவித்துவிட்டு, “”தந்தையே! என் உயிரை இவள்தான் காப்பாற்றினாள். என்னை கண்ணுங் கருத்துமாய் அன்புடன் பராமரித்தாள். இப்படிப்பட்டவளையே மனைவியாக அடைய விரும்புகிறேன்,” என்றான்.
“”சந்திரஹாசினிக்கு சம்மதமா என்று கேள்!” என்று மன்னர் கேலி செய்ய, அவள் நாணித் தலை குனிந்தாள். விரைவிலேயே இளவரசன் சந்திரஹாசினியை மணம் செய்து கொள்ள, தாத்தாவும், பேத்தியும் காட்டை விட்டு நாட்டில் குடி புகுந்தனர்..