மோகன் அந்த அலுவலகத்தில் 10 வருடங்களாக பணிபுரியும் குழு அதிகாரி (team leader) திருமணம் ஆகி இரண்டு வாரிசுகள் இருக்க, இவன் காம களியாட்டங்கள் கணக்கில் அடங்காதவை இவனை போல் உத்தமன் இல்லை என நம்பும் மனைவி வீடு திரும்பியதும் மேலே தொத்தி விளையாடும் மக்கள் என எல்லாம் கிடைத்தும் கிடைக்காத எதோ ஒன்றை தேடி பல பெண்களை நாடும் பேடி.
அந்த அலுவகத்தில் பணிக்கு அமரும் எந்த பெண்ணையும் இவன் கணைகள் தீண்டாமல் இருந்தது இல்லை சில பெண்கள் மறுக்காமல் அடிபணிந்து விட, மறுத்தவர்கள் இவன் மிரட்டலுக்கு ஆளாவார்கள். “விருப்பம் இல்லாம தொட்டு ருசி பாக்க விருப்பம் இல்ல. இனி நா இத பத்தி பேச மாட்டேன். நீ யார்கிட்டயாவது பேசுனா நீ மட்டும் இல்ல உன் குடும்பமே இருக்காது புரிஞ்சுதா?” என சொல்லி விட்டு விடுவான் பின் அலுவலக பணிகள் அதிகம் குடுத்து அதிக நேரம் வேலை வாங்கி இன்னும் சில தொல்லைகள் தந்து அவர்களாக பணியை விட்டு செல்லும் படி செய்து விடுவான்.
இருந்தும் அலுவலத்தில் எப்படி தெரியாமல் போகும்? அனைவருக்கும் தெரியும் இவன் செயல்கள். அத்தனையும் தெரிந்தும் ஒன்னும் செய்ய முடியாமல் இருந்தார் நாதன் காரணம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சந்துரு வின் மகன் தான் இவன் ‘புலி எட்டு அடி பாஞ்ச குட்டி பதினாறு அடி பாயும்’ இந்த பழமொழியை பொய்யாக்க வந்தவர்கள் இந்த தந்தை மகன். மோகனிடம் உள்ள ஒரு பண்பு மட்டும் அவன் தந்தையிடம் இல்லை அந்த நேரத்தில் இடையூறு இல்லாமல் பெண்களை அனுபவிக்க நினைப்பவன் மோகன். அவன் தந்தை அவனுக்கு செய்யும் உபதேசம் என்னவென்றால் “வேட்டையாடி சாப்பிட்டு பாருடா மகனே அதோட ருசியே தனி.”
“ஒவ்வொருத்தரோட ரசனையும் வேற வேற நீ உன் வேலைய பாரு.”
“ஹூம் நல்லதுக்கு காலம் இல்லடா.”
அலுவலகத்தில் சேர்ந்து கொஞ்சம் நாட்களில் மோகனின் பார்வையையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டாள் அபி… அவனை எவ்வளவு தொலைவில் வைக்க வேண்டுமோ அவ்வளவு தொலைவில் வைத்தாள். கல்லூரியில் கண்ட சில மனிதர்களை வைத்து இவனையும் எடை போட்டு விட்டாள் பேதை… இந்த மிருகத்தால் அவள் வாழ்வில் சந்திக்க போகும் இன்னல்களை அவள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அவள் அம்மாவிடம் மட்டும் சொல்லி வைத்தாள் அவன் பார்வை மற்றும் அவளை தொட்டு பேச முயன்றதை பற்றி.
“நீ வேற வேலைய பாருமா”
“இல்ல மா நா கல்லூரிலயும் இந்த மாதிரி பசங்கள பாத்துருக்கேன் வேற இடம் போனாலும் அங்கேயும் இந்த மாதிரி ஆளுங்க இருக்க மாட்டாங்களா மா? நீங்க கவல படாதீங்க பாத்துக்கலாம் இந்த காலத்துல பொண்ணு அனுமதி இல்லாம யாரும் எதுவும் செய்ய முடியாது.”
தன் பொண்ணு மேல் இருந்த நம்பிக்கை தாயின் வாயை அடைத்து விட்டது. பெண் குழந்தையாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வேட்டையாடும் மிருகங்கள் வாழும் இடம் தான் இந்த உலகம் என்பதை அந்த இருவரும் ஏன் மறந்தனர் அந்த நிமிடம்? அவள் விதி அவளை அடைய அந்த நிமிடம் பாதை ஏற்பட்டது.
அலுவலகத்தில் அவன் எவ்வளவு அம்பு வீசியும் வேலைக்கு ஆகவில்லை. அவன் பொறுமை எல்லை கடந்தது. அன்று “அபிநயா நாளைக்கு ‘night shift’ வந்துருங்க உங்க வேலை பகுதி நாளைக்கு முடிஞ்ச ஆகணும் அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்”
“தெரியும் மோகன் ஆனா பகல் பொழுதிலேயே வேலைய முடிச்சிடலாம் நா இரவு 10 மணியானாலும் முடிச்சிட்டு கிளம்புறேன்” 10 மணி என்பது அவனுக்கு போதுமானது. மற்றவர்கள் கிளம்பி விடுவார்கள் தனிமை கிடைக்கும் என்பது அவன் கணக்கு இவை அனைத்தையும் நாதன் கவனிக்க தவற விடவில்லை. அபியின் தொலைபேசிக்கு நாதனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. “அபி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்…” என முதல் வரி இருக்க ச்சீ இந்த ஆளும் இவ்ளோ தானா?…” என தொலைபேசியை அனைத்து வைத்துவிட்டு வேலையை பார்கலானாள்.
அடுத்த நாள் காலை அவள் வீட்டில் தான் வர தாமதம் ஆகும் என்பதை தெரிவித்து விட்டு அமீருக்கு அழைப்பு விடுத்தாள்… அமீர், அவள் கல்லூரி தோழர்களில் ஒருவன் நல்ல நண்பன்… இப்போது அவன் ‘வேலையில்லா பட்டதாரியாக இருக்கிறான்.
“டேய், எங்கடா இருக்க?”
“வீட்டுல தான் என்ன புதுசா கேக்குற?”
“சரி வா வந்து என்ன அலுவலகத்துல விட்டுட்டு வா…”
“cab ல தான போவ?”
“முடியுமா? முடியாதா?”
சிரித்துக்கொண்டே “குட்டி சாத்தான்… வை வரேன்…”
வண்டியில் செல்லும் போது “டேய் வேல பாக்கிற இடத்துல ஒருத்தன் கொஞ்சம் அதிகமா போறான் டா இன்னைக்கு எனக்கு எதோ மாதிரி இருக்கு அவன் வேற இன்னைக்கு வேலைய முடிச்சே ஆகணும்னு ஜாடையா பேசுறான் அதான் இன்னைக்கு அதிக நேரம் வேல பாக்க சொல்லிருக்கான்”
“அவன் சொன்னா நீ ஏன் கேக்குற குழு தலைவர் (team lead) கிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“மாக்கான்… அவன் தான் டா குழு தலைவர்… மேலாளர் கிட்ட சொல்லலாம்னா நேத்து அவனே ‘உன்ன பிடிக்கும்னு’ குறுஞ்செய்தி அனுப்புறான்”
“வந்து ரெண்டு பேரு மண்டையயும் உடைச்சுடவா?”
“இப்போ வேணாம் ராத்திரி கூப்பிட வா… நிலைமைய பாத்துட்டு பேசிக்கலாம்” அவளை இறக்கி விட்டு
அமீர் “எத்தன மணிக்கு வர?”
“மதியத்துக்கு மேல சொல்றேண்டா…” என்று சொல்ல அவன் கிளம்பி விட்டான்.
( தொடரும் …)