காதல் கருவறை 5

0
1005

வணக்கம் தோழமைகளே நான் சில மாதங்களாக இங்கு என் தொடரை நிறுத்தி இருந்தேன் காரணம் என் உடல்நலம் இறைவன் அருளால் இப்பொழுது தேறி உள்ளேன் இருந்தாலும் உங்களை காக்க வைத்ததற்கு மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருவேன்..

கரு 5:
அந்தக் கோவிலின் பிரகாரத்தில் ஸ்வாமியை கூட தரிசனம் செய்யாமல் ஓர் ஓரமாய் அதிர்ந்து அமர்ந்திருந்த குணாவை தேற்றும் வழி தெரியாமல் பார்த்திருந்தாள் தாருண்யா அவள் கண்ணில் கண்ணீர் நிற்கவே இல்லை,

அந்த பெண்மணியிடம் தங்களால் முடிந்தவரை இதை சரிசெய்வதாய் தேற்றிவிட்டு, தாங்கள் வந்ததை சந்தோஷியிடம் சொல்லவேண்டாம் என்றும் தேவைப்படும் பொழுது உதவிபுரியுமாறு கூறிவிட்டு வந்தவள் நேராக குணாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு வந்துவிட்டாள்.

“குணா, நீயே இப்படி இடிஞ்சிட்டா எப்படி சொல்லு? இன்னும் விஷயம் என்னனு நமக்கு முழுசா தெரியல, நெறய வேலை இருக்கு மனச கட்டுபடுத்திக்க , நம்ம இப்படி இடிஞ்சு உக்கார்ந்தா விஷயம் தெரியும் பொழுது பெரியம்மாவை யார் சமாதானப்படுத்துவாங்க,”

அதுவரை மௌனமாக இருந்தவள் பெரியம்மா என்றதும் அலறினாள் “ஐயோ அக்கா, பெரியம்மா இடிஞ்சு போய்டுவாங்களே, நான் இதை என்னனு சொல்றது, அவ அம்மா அப்பா இறந்ததுனால தான் இப்படி நடந்துக்கறான்னு தான் எல்லாருமே நினைச்சாங்க, ஆனா இப்படி அவளே ஒரு குழந்தைக்கு அம்மாவா அதையும் ஒரு ஆசிரமத்துல வெச்சு வளர்க்கிறது தெரிஞ்சா அவங்க நிலைமை என்னாகும், அதுவும் பரத் அண்ணாக்கு தெரிஞ்சா அவ்ளோதான் கொன்னே போட்ருவாங்க” என்று அழுதவளிடம்

“குணா, சந்தோஷி நிலைமையும் பெரியம்மா நிலைமையும் என் மனசுலயும் ஓடிட்டுதான் இருக்கு , உங்க பரத் அண்ணா பிசினஸ் அளவு குடும்பத்தையும் யோசிச்சிருந்தாருன்னா இதை எப்பயோ கண்டுபிடிச்சிருக்கலாம், பெரியம்மா சந்தோஷிய கவனிக்க சொன்னப்பல்லாம் அதை கண்டுக்காம அவளே சரியாயிடுவான்னு சொல்லி, கொஞ்சம் கூட அக்கறை இல்லாம பிசினஸ்தான் முக்கியம்னு இருந்துருக்கார் அதான் அவளால் பெரியம்மாவை ஏமாத்தி இவ்ளோ நாள் இருக்க முடிஞ்சிருக்கு” என்று முகம் தெரியாத அந்த பரத்திடம் கோபம் கொண்டாள்.

“இல்லக்கா, அவர்க்கு எல்லார் மேலயும் ரொம்பப பாசம் அதுவும் சந்தோஷின்னா ரொம்ப பிடிக்கும், அவர் தன்கிட்ட இருந்தே தப்பிக்க தான் முழு நேரமும் பிஸினெஸ்ன்னு அலையராறு அந்த காரணமும் தெரியாம, இவளோட நிலைமையும் புரியாம பெரியம்மா எவ்வளவோ தவிச்சிருக்காங்க” என்றவள் மறுபடியும் அவள் பேச ஆரமிக்கும்முன் தாருண்யாவின் கையை பிடித்து கொண்டு

“அக்கா, பிளீஸ் இன்னும் ரெண்டு நாள் இந்த விஷயத்தை பத்தி பேச வேணாம் , நாளை மறு நாள் பெரியம்மா அவங்ககிட்ட வேலை செய்யிறவங்களுக்கு விருந்து கொடுப்பாங்க, தொழிலாலளிங்களுக்கும் பெரியம்மாவுக்கும் இந்த நாள் ரொம்ப முக்கியம், எங்க அய்யாவோட நினைவு நாள், நாம அது முடிஞ்ச பிறகு பேசலாம்கா” என்று கெஞ்சியவளிடம்

“நானும், இப்பவே பெரியம்மாகிட்ட இதை பேசலாம்னு நினைக்கல, முதல்ல சந்தோஷிகிட்ட விசாரிச்சிட்டு அப்புறம் எதுவானாலும் அவங்ககிட்ட பேசலாம் நீ தைரியமா இருக்கணும்” என்று தன் கோபத்தை கைவிட்டபடி அவளுக்கு ஆறுதல் கூறினாள்..

“அக்கா, உங்க தைரியதுல தான் நானே இருக்கேன், இதோட ஆரம்பத்தை கண்டுபிடிச்சமாதிரி, இந்த விஷயம் முடியர வரைக்கும் நீங்க தான் எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும், நடுவுல எந்த காரணத்துக்காகவும் எங்களை விட்டுட்டு போய்டாதீங்கக்கா” என்று அழுதவளிடம்

“சீச்சீ குணா என்னடா இது முதல்ல கண்ணை துடை, பெரியம்மாகிட்ட சொன்ன சொல்ல காப்பாத்தாம நான் போகமாட்டேன், நேரம் ஆயிடுச்சு இப்ப வா வீட்டுக்கு கிளம்பலாம்” என்றபடி வீட்டுக்கு புறப்பட்டனர்.

வீட்டு வாசலில் அவர்களுக்காக காத்திருந்த பெரியம்மா அவர்களிடம் வந்து “உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப அலைச்சல் இல்லையாம்மா” என்றவர் தாருண்யாவிடம் “ நான் கேட்டேங்கிற ஒரு காரணத்துக்காக நீ அலையறது பார்க்க கஷ்டமா இருக்கு உன்னால முடியலன்னா வேணாம்மா இதை விட்டுடலாம்”

தன் வேதனையை மறைத்த குணா பெரியம்மாவிடம் “அது எப்படிம்மா , அக்கா சந்தோஷிக்கு நல்லது பண்ணாம கண்டிப்பா ஓயமாட்டேன்னு சபதமே போட்டிருக்காங்க அதனால, அவ்ளோ சீக்கிரம் இதை விடலாம் மாட்டோம், என்னக்கா” என்றவளிடம் ஒரு சிரிப்பை தந்தவள் பெரியம்மாவிடம்

“அம்மா நீங்க கவலைபடாதீங்க சீக்கிரமாவே இந்த பிரச்சனை சரியாயிடும் “ என்றாள். அவளுடன் சிரித்தவர் “இரண்டு நாளைக்கு உங்க வேலைக்கு லீவு கொடுத்துருங்க , குணா நாளை மறுநாள் என்னன்னு தருக்கிட்ட எல்லாம் சொலிட்டியா?”

“ஆஹா.. அதை சொல்லாமயா, எனக்கு புது ட்ரெஸ் சூப்பர் சாப்பாடு எல்லாம் கிடைக்குற நாள்னு சொல்லியிருக்கேன் அக்காவுக்கும் சேர்த்து இந்த தடவை வாங்கணும் அதானே” என்றவளிடம்

“ஆமாண்டி, வாயாடி மணி இப்பவே ஏழு நாளைக்கு போய் உங்களுக்கு தேவையானதுலாம் வாங்கிட்டு வந்துடுங்க உங்க அப்பாகிட்ட காசு வாங்கிக்கோ, நான் சில முக்கியமானவங்கள கூப்பிடணும் அப்படியே அவர்கிட்ட ஏற்பாடெல்லாம் சரிபார்த்துடுவேன்” என்றவள் தாருண்யாவின் மறுப்பை சட்டை செய்யாமல் அவளுக்கும் துணி வாங்க சொல்லி சென்றார்.

அவர் சென்றதும் “விஷயம் தெரிந்தால் இந்த சந்தோஷமெல்லாம் அவர்களை விட்டு போய்விடுமே அக்கா “ என்று கலங்கியவளை தேற்றுவது முக்கியமான வேலையாய் இருந்தது தாருண்யாவிற்கு.

மறுநாள் காலையிலேயே இருவரும் தயாராகி டவுனுக்கு சென்று துணி எடுத்தனர், குணாவின் வற்புறுத்தலால் பெரியம்மாவின் பணத்தில் குணாவிற்கு பொருத்தமாய் அழகான இளம் பச்சையில் தரை வரை தொடும் மசக்களியை எடுத்தவள் தனக்கு எலுமிச்சை மஞ்சளில் புடவை எடுத்தாள் அதற்கு பொருத்தமாய் அணிகலன்களை தன் சேமிப்பில் தனக்கும் குணாவிற்கும் எடுத்தவள் கண்ணில் அந்த கோல்டன் கலரில் சிவப்பு பூக்கள் சிதறியது போல் இருந்த புடவை கண்ணை கவர அதை சந்தோஷிக்காக வாங்கியவள் சிறிது தள்ளி இருந்த கடைகளை பார்த்தவளுக்கு அருள் தெய்வமாய் தோன்றிய பாண்டிச்சேரி அன்னையின் படம் சட்டென்று ஈர்க்க அதை பெரியம்மாவிற்காக வாங்கினாள்,

அவளின் மனம் உலக அமைதிக்காகவும் எளியோருக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தவரிடம் பெரியம்மாவுக்கு அமைதி கிடைக்க பிரார்த்தித்தது.

முன்தினம் கிடைத்த அதிர்ச்சியில் இருந்து இருவரும் மீளாததால், மௌனமாகவே பயணித்து வீடு வந்தனர், தனக்கு வீட்டில் வேலை இருப்பதாக குணா கிளம்ப தன் ரூமிற்குள் வந்தவள் நாளை பரிசுகளை கொடுக்க எண்ணி எடுத்து வைத்துவிட்டு, அங்கிருந்த தையல் மெஷினை எடுத்தாள் அவள் அங்கு வந்த மறுநாள் அதை பார்த்தவள், எவரும் உபயோகிக்காத நிலையில் இருந்ததும் தனக்கு உபயோகப்படும் என்று நினைத்தவள் பெரியம்மாவிடம் கேட்டு அதற்கு எண்ணை போட்டு சரி செய்ததும் ஞாபகம் வந்தது, என்னமோ இங்கு எதையும் கண்காணித்து பராமரிக்க சரியான ஆள் இல்லை பெண்ணில் இருந்து பொருள் வரை, பெரியம்மா மட்டும் நல்ல உடல் நிலையில் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் நடந்து இருக்காது என்று தோன்றியவளுக்கு இன்று வழக்கத்துக்கும் அதிகமாக தாயின் நினைவும் அதை தொடர்ந்து இவளவு நாள் சந்தோஷி விஷயத்தால் குறைந்து போய் இருந்த தன் அன்னையின் நினைவும் அதிகமாய் அவளை வாட்டியது,

அதிலிருந்து மீள தன் புடவைக்கு பிளவுஸ் தைக்க உட்கார்ந்தவள் அழகாக லேஸ் வைத்து சிம்பிளாக தைத்து முடித்து புடவைக்கு ஓரம் அடித்து பால்ஸ் வைத்துவிட்டு குணாவின் சுடித்தாருக்கு கை அடித்து முடிக்க, மூன்று மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.

முகம் கழுவி தன்னை சரிசெய்தவள் தங்கம் கொடுத்த சிற்றுண்டியை தோட்டத்து பெஞ்ச்சில் அமர்ந்து சாப்பிட்டாள் மறந்தும் கூட மண்டபத்தில் அருகில் செல்லவில்லை, என்னதான் சந்தோஷியின் பேச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தாலும் கூட தன் சுயமரியாதையை அந்த பெண் சோதித்து பார்த்தது ஞாபகம் வர கவனமாய் அதை தவிர்த்தாள், யோசித்துக்கொண்டே சாப்பிட்டு முடிக்க தங்கம் வந்து அவளை பெரியம்மா அழைத்தாக கூப்பிட்டாள்.

“என்னம்மா, என்னை அம்மா மாதிரி நினைக்கிறேன் என்று சொன்னது சும்மா வாய் வார்த்தைக்கு சொன்னதுதானே, இல்லையென்றால் ட்ரெஸ் வாங்க கணக்கு பார்த்திருப்பாயா, எல்லாம் குணா சொன்னாள்” என்று கூற தன்னை போட்டுக்கொடுத்த குணா மேல் கோபம் வந்தது இவளை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் பெரியம்மாவிடம்

“இல்லம்மா அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை , எனக்கு பிடித்த புடவை தான் எடுத்தேன், அதற்குமேல் என் சொந்த விருப்பத்திற்கு அதை உபயோகப்படுத்த எனக்கு இஷ்டமில்லை”

“ம்ம்…, அப்படியென்றால் சரி, ஆனால் அடுத்த முறை உன் காசுன்னு எடுத்து செலவு செய்யக்கூடாது இது என் பிள்ளைகளுக்கு நான் எடுப்பது “ என்று பாசமாய் அதட்டினார்.

சிறிது நாளாக தன் அன்னையின் பாசத்திற்காக ஏங்கிய தாருண்யாவின் மனம் அவர்களின் வார்த்தையைக் கேட்டு நெகிழ்ந்தது. அவர்களிடம் பார்ட்டிக்கான ஏற்பாடு பற்றி கேட்டவள் சிறிது நேரம் பேசிவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்க சென்றாள்.

அன்று காலை மெதுவாய் எழுந்து தலைகுளித்து அதை காயவைக்க தோட்டத்தில் சுற்றி வந்தவள் கண்ணில் தோட்டத்தின் மறுபுறம் உள்ள சிமெண்ட் பெஞ்ச்சில் சந்தோஷியின் சோகம் தோய்ந்து அமர்ந்திருந்த தோற்றம் கண்ணில் பட சிறிது நேரம் அவளை பார்த்துக்கொண்டிருந்தவள் அவளிடம் சென்றால் வீண் விவாதமும் கோபமுமே மிஞ்சும் என்று யோசித்தவள் மெதுவாக திரும்பி சென்றாள்.

பெரியம்மாவை தேடி சென்றவள் அவர் பூஜை அறையில் கண் மூடி கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்ததை பார்த்து அவர் அருகில் சத்தமில்லாமல் நின்றாள் சிறிது நேரம் அப்படியே இருந்தவர் பிறகு கண் திறந்து தாருண்யாவை பார்த்து “அவர் என்னை விட்டு போய் இரண்டு வருடமாகுது மா எப்பவும் என்னிடம் சொல்வது இதுதான் சொர்ணம்மா, வீடும் சரி தொழிலும் சரி அதில் இருக்கிற மனிதர்களின் மனதை போல் வளர்வதும் தாழ்வதும் நடக்கும் அதனால எப்பவுமே நமக்காக நல்லது செய்து வாழும் தொழிலாளர்களை எப்பொழுதும் போற்றி தெய்வமாய் நினைக்க வேண்டும் என்பார் அதனாலதான் அவர் நினைவாக இதை செய்யறேன்”என்றவரிடமும் தான் பார்த்தே அறியாத இறந்து போன அந்த நல்ல மனிதரிடமும் மதிப்பு வந்தது, அவர்களுடன் ஆதரவாய் பேசியவள் குணா வருவதை பார்த்து பெரியம்மாவை தள்ளி கொண்டு வெளியே வந்தாள்.
“என்ன பெரியம்மா, வீடே மிதக்குது என்னால நடந்து வரவே முடியலை இவ்ளோ பாச மழையில் இரண்டு பேரும் நனையவைக்கரீங்க , பார்த்து வெள்ளம் வராம இருந்தா போதும்பா” என்று சிரிக்க. போடி வாயாடி என்று திட்டயும் வாங்கிக்கொண்டு தாருண்யாவிடம் சிரித்தவள்

“அக்கா இன்னைக்கு நான் உங்கக்கூடதான் இருப்பேன் எனக்கு நீங்க தான் அலங்காரம் பண்ணனும்” என்றவளை கூட்டிக்கொண்டு தன் ரூமிற்குள் வந்தவளை பார்த்து ”அக்கா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சீங்களா எனக்கு ராத்திரி முழுக்க தூக்கம் வரலை”

“இப்ப எனக்கு எந்த யோசனையும் வரல முதல்ல இந்த ஃபங்க்ஷன் முடியட்டும் அப்பறம் பாக்கலாம் “ என்றவள் சிறிது நேரம் குணாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சிறிது நேரம் அவளுடன் அவளது வீட்டில் மேனேஜர் சந்திரனுடன் கணக்குகளை கற்றாள், உண்மையான விசுவாசியாய் இருந்தார் அந்த மனிதர் அதுவும் பெரியம்மா குடும்பத்தை பற்றி சொல்வது என்றால் நேரம் காலமே இல்லை என்பது போல் பேசினார் அதுவும் பரத் என்றால் இன்னும் அதிக புகழாரம் இருந்தது, அவரின் பேச்சுக்களை கேட்டவள் மதியம் நான்கு மணி அளவில் குணாவை அழைத்துக்கொண்டு அவளது ரூமிற்கு சென்று அவளை தயார் செய்து முடித்தாள்

அந்த உடை குணாவை மேலும் எடுப்பாக காட்டியது பொதுவாக தாருண்யா உயரம் என்றாலும் குணா அவளை விட உயரமாக இருந்தாள் அவளது பூசினார் போன்ற தோற்றத்திற்கும் உயரத்துக்கும் அது மிக எடுப்பாக இருந்தது, அவளுடைய அணிகலன்கள் அவளின் மாநிறத்திற்கு அதிகமான சிகப்பு அதாவது வீட்டிஷ் பிரவுன் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது அவளின் அடர்த்தியான கூந்தலை இரண்டாக மடித்து முடியின் நுனியில் கொண்டை போல் வடிவமைத்து பூ வைத்தாள்.

“அக்கா நான் இவ்வளவு அழகா எனக்கே ஆச்சரியமா இருக்கு ரொம்ப தேங்க்ஸ் “ என்று அவளை முத்தமிட்டு வெளியே சென்றாள்.

அவளை அனுப்பியதும் தாருண்யாவும் முகம் கழுவி தன் மஞ்சள் நிற மேனிக்கு அந்த எலுமிச்சை மஞ்சள் நிற புடவையை நேர்த்தியாக கொசுவியவள் தலையை தளர பின்னி தனக்கு பிடித்த ஜாதிமல்லியை வைத்தாள், தன்னை மிதமாக அலங்கரித்தவள் தன் பெரிய விழிகளை மையிட்டு அழகாக்கியவளின் நேரான நாசியில் சின்ன வைரக்கல் ஜொலிக்க தான் வங்கி வந்த சிறிய தோடையும் நெக்லெஸ்சையும் அணிந்து நெற்றி திலகமிட்டவள் வெகு நாள் பிறகு தன்னை அலங்கறித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்ற அதற்கு காரணமான பெரியம்மாவிடம் பாசமும் கூடவே தாயின் நினைவுகளும் அதிகமாயிற்று.

கீழே இறங்கிவந்தவளை பார்த்த குணா “ப்பா.. அக்கா சான்சே இல்லை செம்ம அழகாய் இருக்கீங்க இன்னைக்கு ஃபுல்லா உங்களதான் நான் சைட்டிங் பண்ணப்போறேன் “

“நீ மட்டும் என்னவாம் அழகே பொறாமைப்படும் பேரழகிதான்” என்று பாகுபலி வசனத்தை குணாவை பார்த்து சொல்லி சிரித்தாள்.

“நீங்க ரெண்டுபேரும் உலக அழகி மாதிரி தான் இருக்கீங்க, என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு, அதுவும் தரும்மா உன்னை முதன் முதலில் புடவையில் பார்க்கிறேன்டா ஏதோ தேவதைதான் நம்ம வீட்டுக்கு வந்துட்டான்னு நெனச்சேன்” என்றவரிடம் சிரிப்பை பதிலாக தந்தவள் தான் வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்தாள்.அதை பார்த்து ஆனந்தப்பட்டவர்

“எனக்கு அன்னை ரொம்ப பிடிக்கும் மா யோசிச்சு இப்படி ஒரு பரிசு தந்திருக்க நான் பிகுவெல்லாம் பண்ணவே மாட்டேன் நீ எது கொடுத்தாலும் வாங்கிப்பேன்” என்றவர் அதை உடனே பூஜை அறையில் வைத்து வழிபட்டார்.

“இதை நீ கொடுத்த வேளை உங்களை போல சந்தோஷியும் சாதாரணமாய் மாறி இந்த வீட்டுலயும் நிம்மதி நிலைச்சு இருக்கணும்னுதான் மா நான் அந்த ஆண்டவனை வேண்டிக்கறேன், சரி தொழிலாளர்களாம் அவங்க குடும்பத்தோட வர ஆரமிச்சிட்டாங்க அது தவிர நம்ம பிஸினஸ் ஆளுங்களும் வந்துட்டாங்க நான் அங்க போறேன் குணாவிற்கு எல்லாரையும் தெரியும் அவ உனக்கு அறிமுகப்படுத்துவா” என்று சென்றார்.

“வார்த்தைக்கு வார்த்தை அவளோட பேச்சும் யோசனையுமாதான் இருக்காங்கக்கா எப்படி சரியாகுமோ தெரியல, ஆனா அவ மட்டும் இந்த ஃபங்க்ஷன்ல கலந்துக்கவே மாட்டா எப்பவும் இந்த நேரத்துக்கு கிளம்பி ஆசிரமத்துக்கு போய்டுவா இப்பதான தெரியுது அவ பெண்ணை பார்க்கத்தான் போரான்னு” என்று ஆதங்கப்பட்டாள்.

“சரி வாங்கக்கா எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன் “ என்று ஒருஒருவரிடமும் அவள் புதிதாக வேலைக்கு வந்தவள் என்றும் பெரியம்மாவுக்கு பிடித்தமானவள் என்று கூறியதும் அனைவரும் அவளை மரியாதையாக பார்த்தனர.

அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பங்களாவின் வாசலில் கார் ஒன்று நிற்கும் சத்தம் கேட்டு “ பரத் அண்ணா “ என்ற கூவலுடன் குணா ஓட இவ்வளவு நாள் வீட்டை பார்க்காமல் இருந்தவன் என்ற தன் கோபத்திற்கு காரணமானவனை பார்க்க தாருண்யாவும் வீட்டிற்க்கு வெளியே வந்தாள் அவர்களை தேடி தோட்டத்தின் மறுபுறம் வந்தவளின் புடவையின் முனை எதிலோ மாட்ட செடியின் முள்ளில் நன்றாக சிக்கி இருக்க அதை விடுவிக்க குனிந்து சிக்கை பிரிக்க முயன்றாள்.

“புடவை மட்டுமில்லை நீயும் என்னிடம் சிக்கிவிட்டாய் உனக்கு தண்டனை கொடுக்க நான் உன்னை தேடி ஊர் ஊராய் சுற்ற நீ என்னிடம் சாக என் கோட்டைக்கே வந்துவிட்டாய்” கண்களில் ஆத்திரம் குரோதம் வழிந்தோட பேசியவனின் நிழலிலேயே உணர்ந்துவிட்டாள் அவன் யார் என்று…..

குனிந்திருந்தவளின் கண்களில் நீர் வழிந்தோட கல்லாய் சமைந்தாள் தாருண்யா…. யாரால் அவள் இந்த நிலைமைக்கு வந்திருந்தாளோ, எவனை திரும்பி பார்க்கவே கூடாது என்று தன் ஊரை விட்டு தாயுடன் சென்றாளோ , அதற்கும் பின்னால் ஆயிரம் அவஸ்தைகளை அனுபவித்து தன் ஒரே துணையான தாயையும் இழந்து ஊரரியா இடத்தில் வாழும் நிலமைக்கு கொண்டுபோனவன்
,அவன் , மனுபரதன்…..

முன்னைவிட பலமடங்கு ஆத்திரத்துடன், அவளை கொன்றுவிடும் வெறியுடன் அங்கு நின்றிருந்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here