கரு 17:

முதலில் தோழியை சமாதானம் செய்வது முக்கியம் என்று நினைத்தவள் மித்து நீ இப்படி அழுது கொண்டே இருந்தால் எனக்கு நீ சொல்ல வந்தது எப்படி புரியும் , என்னன்னு சொல்லு டி

மெதுவாக தன் அழுகையை நிறுத்தியவள் அவள் பக்கத்தில் அமர்ந்து மனோ என்னை ஏமாற்றிவிட்டான் , அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது தரு

அதிர்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்று தோழி சொன்ன வார்த்தையில் தெரிந்தது தனக்கே அது பெரிய அதிர்ச்சியென்றால் தோழி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்று மனம் அவளுக்காக பரிதாபப்பட்டது ,

இல்லை டி அவசரப்பட்டு ஏதோ யோசிக்கிறாய் நீங்கள் இருவரும் உயிராய் இருப்பது பிடிக்காது யாரோ செய்த புரளி வேலையாய் இருக்கும்

அவன் சரியான ஆள்மயக்கி டி எந்த பெண்ணையும் விடுவதில்லையாம் நான்தான் அது தெரியாமல் காதல் என்று ஏமாந்திருக்கிறேன்

யாரோ சொன்னதை வைத்து

யாரோ இல்லை , அவள் அவனிடம் பழகி என்னை போல் இல்லை என்னை விட மோசமாக அவனால் கருவுற்று அதை அழித்து அவனால் ஏமாந்து நின்றவள் என்று அடுத்த குண்டை தூக்கி போட்டாள்

யாரோ ஒருவர் வார்த்தையை வைத்து நம்பியவர்களை எப்படி மித்து தப்பாக எண்ண முடியும்

கண்களை துடைத்தவள் யாரோ அல்ல தரு , அவள் என் அண்ணனின் தோழி எங்கள் விஷயத்தை கேள்வி பட்டு அவளாக கூறிய உண்மை இது , கொஞ்சம் யோசி தரு அவள் இப்பொழுது கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கிறாள் என்னிடம் உண்மை கூறி அவளுக்கு ஒரு லாபமும் இல்லை , இருந்தாலும் தெரிந்தே ஒரு பெண் ஏமாறக்கூடாது என்று எனக்காக பார்த்து அண்ணனிடம் கூறி இருக்கிறாள்

இப்பொழுது தாருண்யாவிற்குமே சந்தேகம் எட்டி பார்த்தது ஆனாலும் அவள் வாழ்க்கை பிரச்னை ஆயிற்றே என்று யோசித்தவள் அந்த பெண்ணின் நம்பர் வைத்திருக்கிறாயா

அண்ணா அவசியம் என்றால் மட்டும் பேச சொல்லி சொன்னான் என்று ஒரு செல் நம்பர் கொடுக்க அதில் முயன்றவள் எதிரில் குரல் கேட்க ஸ்பீக்கரில் போட்டு பேச்சை தொடர்ந்தாள்

ஹலோ நான் மித்திலாவின் தோழி தாருண்யா பேசுகிறேன்

யார் மித்திலா எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றவரின் பேச்சை இடையிட்டு மித்திலா

ஹலோ கலா அக்கா வைத்து விடாதீர்கள் நான்தான் மித்திலா , அண்ணா அவசியம் என்றால் உங்களுடன் தொடர்பு கொள்ள சொன்னார் ப்ளீஸ் எனக்காக என் தோழியுடன் பேச முடியுமா என்றதும்

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நான் ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்றவரின் அழைப்புக்காக காத்திருந்தனர்

மறுபடியும் அழைத்ததும் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு பேசினாள்

வீட்டில் எல்லாரும் இருக்கிறார்கள் அதான் தள்ளி வந்து பேச வேண்டி இருந்தது , நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் நீ விஜயின் தங்கை அது மட்டுமில்லாமல் என்னை போல் இன்னொரு பெண்ணை ஏமாறாமல் தடுப்பதற்காக பேசுகிறேன் , இதை பற்றி இன்னொரு முறை என்னால் கண்டிப்பாக பேசமுடியாது

மனுவும் நானும் காலேஜில் இருந்து பழக்கம் உன் அண்ணாவிற்கும் மனுவை காலேஜில் இருந்து தெரியும் ஆனால் நாங்கள் காதலித்தது தெரியாது நாங்கள் வெவ்வேறு பிரிவு என்றாலும் கோ ஆர்டினேடர்கள் என்பதால் அடிக்கடி பழகுவோம் அப்படிதான் எங்கள் நட்பு ஆரமித்து காதலாகியது , காலேஜில் அவனிடம் மயங்காத பெண்களே இல்லை இருந்தாலும் அவன் எண்ணிடம் மட்டுமே காதல் இருப்பதாக காட்டி ஏமாற்றினான் அப்படி நான் உச்சபட்ச மயக்கத்தில் ஏமாந்த ஒரு நாள் , என் வீட்டில் வேறு காலேஜில் ஒர்க்ஷாப் என்று பொய் கூறி அவனுடன் மகாபலிபுரம் சென்றேன்

அவனின் வார்த்தை ஜாலத்தில் , திமிரில் அவன் கொடுத்த நம்பிக்கையில் என் மனதை மட்டுமல்ல எல்லாவற்றையும் பறிகொடுத்தேன் , விஷயம் தெரிந்ததும் அவனிடம் கல்யாணம் செய்து கொள்ள கேட்ட பொழுது மறுத்து விட்டான் தவிர நான் கோர்ட்டுக்கு போவேன் என்றதற்கு இது என் குழந்தை என்று நீ போராடி ஜெயிக்க எப்படியும் நாட்கள் ஆகும் அதுவரை உன்னால் அசிங்கப்படப்போகிறவர்களை நினைத்து பார் இல்லை என்றாலும் எனக்கு ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்று சொன்னான்

நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறை மீண்டும் சரி செய்ய முடியாது , ஆனால் என்னை போன்ற மிடில் கிளாஸ் பெண் என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன் என் பாவத்தின் சம்பளமாக அந்த சிசு சிலுவை சுமப்பதை விட நான் அதை அழித்து விட்டேன் , என் விஷயம் என் சித்தியை தவிர யாருக்கும் தெரியாது அவர்தான் என்னை பார்த்துக்கொண்டார் , இப்பொழுது எதிர்பாராவிதமாக உன் அண்ணன் விஷயம் சொன்னதும் என்னால் எப்படியோ போகட்டும் என்று விட முடியவில்லை , யாரை வேண்டுமானாலும் நம்புங்கள் ஆனால் அந்த மனுபரதன் மிருகத்தை விட கொடியவன் , என் பேச்சை நீ எடுத்துக்கொள்வாயா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் எடுத்துக்கொண்டால் உன் வாழ்வு பிழைக்கும் இல்லை என்றால் என்னை போல் பட்ட பிறகு புரிந்து கொள்வாய் , என் புகுந்த வீட்டில் எனக்கு நடந்த எதுவும் தெரியாது தெரியப்படுத்தி என் வாழ்க்கையை அழிக்க நான் தயாராக இல்லை , ஜாக்கிரதை மித்திலா நிச்சயம் அவன் நச்சு பாம்பு விலகிவிடு என்று போனை துண்டித்தாள்

சிறிது நேரம் இருவரும் மௌனத்தில் கழித்தனர் , தாருண்யாவிற்கு எல்லாமே குழப்பத்தை தந்தது அவன் அவ்வளவு மோசமாக இருப்பான் என்று அவள் நினைக்கவே இல்லை உள்ளுக்குள் ஏதோ அடைப்பது போல் உணர்ந்தவளுக்கு அதன் காரணம் தோழியின் நிலையை நினைத்த கவலை தான் என்று தேற்றிக்கொண்டு அவளை பார்க்க ,

அவள் ஒரு முடிவெடுத்தவள் போல் பேசினாள்

தரு , நான் அவனை விட்டு விலக போகிறேன் இங்கிருந்து ஒரேடியாக போகிறேன் இல்லை என்றால் அவன் என்னை வாழ விடமாட்டான் , எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்வாயா என்றவளை கேள்வியாக பார்க்க

தரு நான் இருக்கும் நிலையில் என்னால் இதையெல்லாம் அவனிடம் சொல்லி விலக முடியாது இனி எங்களுக்குள் ஒன்றுமில்லை என்று இப்பொழுதே அவனிடம் சொல்லிவிடு நான் சென்றுவிட்டேன் என்றும் கூறிவிடு

நான் …. நானா நான் எப்படி டி அந்த ஆளுடன் பேசுவது

ப்ளீஸ் டி எனக்காக இது மட்டும் செய் நான் உன்னிடம் கேட்கும் கடைசி உதவி என்றதும் அவளுக்கும் அழுகை வந்தது

தப்பையெல்லாம் அவனிடம் வைத்து கொண்டு அவனே சுதந்திரமாக அலைகிறான் அப்படிப்பட்டவன் உன்னை என்னடி செய்துவிடுவான் அவனிடம் ஓடி ஒளிய நீ என்ன தவறு செய்தாய் மித்து

இல்லை டி அண்ணா வெளியூர் போய் விடுவது தான் நல்லது என்று சொல்கிறான் , இங்கு பிசினஸ் எல்லாம் அண்ணா மாற்று ஏற்பாடு செய்துவிட்டான் என் அண்ணனிற்காக , நான் அவனை காதலித்த பாவத்திற்காக இங்கிருந்து போகிறேன் என்றவளிடம் எவ்வளவு சொல்லியும் மனதை மாற்ற முடியவில்லை எனவே தோழி சொன்னபடி அவள் மனுபரதனுக்கு போன் செய்தாள்

ஹலோ என்ற மனுபரதனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் வாய்க்கு பூட்டு போட அதை அடக்கி ஸ்பீக்கரில் போன் போட்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள்

நான் தாருண்யா ””

மறுபக்கம் ஒரு சிறிய அமைதிக்கு பின் நான் கான்பரன்சில் இருக்கிறேன் , எது சொல்வது என்றாலும் சீக்கிரம் சொல்

பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடிவிட்டு பெரிய இவன் மாதிரி பேசுகிறான் பார் என்று நினைத்தவள் உங்களுக்கு என்னை பிடிக்காது என்று எனக்கு தெரியும் அதை விட அதிகமாக எனக்கு உங்களை பிடிக்காது இருந்தாலும் என் தோழி உங்களோடு சந்தோஷமாக வாழப்போகிறாள் என்று நான் விலகி இருந்தேன் இன்று அதுவும் இல்லாமல் போய்விட்டது உங்களால் , உங்கள் நடத்தையால் அவள் இந்த ஊரை விட்டே சென்றுவிட்டாள் எல்லாம் முடிந்து போய்விட்டது இனி நீங்களாக அவளை தேடி அவள் வாழ்க்கையோடு விளையாட நினைத்தால் நான் போலீஸிற்கு சென்றுவிடுவேன் என்றதும் மறுபக்கம் அவன் கத்துவான் இல்லை மிதிலாவிற்காக கெஞ்சுவான் என்று நினைத்தவளுக்கு அவன் கேள்வி அதிர்ச்சியை கொடுத்தது

அவள் வாழ்க்கையோடு இல்லை இனி உன் வாழ்க்கையோடு விளையாடுகிறேன் சரியா என்றான் நக்கலாக

நீ என்ன வேலை செய்தாய் என்று நான் அறிய முயற்சிக்கவில்லை தன்யா ஆனால் இதற்கான தண்டனை உனக்கு நிச்சயம் உண்டு என்றவன் போனை கட் செய்துவிட்டான்

என்ன தரு இப்படி பேசுகிறான் நான் என்னை காப்பாற்றி கொள்ள உன்னை மாட்ட வைத்துவிட்டேனா என்ன எதற்கும் நீயும் ஜாக்கிரதையாக இரு இல்லை என்றால் எங்கேயாவது கொஞ்ச நாள் உன் அம்மாவை அழைத்துக்கொண்டு போகிறாயா என்று பயந்தவளிடம்

நான் உன்னையே போகாதே என்கிறேன் போடி லூசு , நான் பார்த்துக்கொள்கிறேன் அவனால் என்னை எதுவும் செய்யமுடியாது என்று தோழிக்கு தைரியம் சொல்லி அவள் தாயிடம் அவள் அண்ணாவின் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும் கூடவே மித்திலா செல்வதாகவும் கூறினாள் மனுபரதனை பற்றி கூறி தாய் கலக்கம் கொள்வதை அவள் விரும்பவில்லை , மித்திலாவிடம் இருப்பிடம் கேட்டதற்கு எங்கு போகிறாள் என்பது அவளுக்கே தெரியாது அண்ணா போகும்வழியில் தான் ஏற்பாடு செய்யப்போவதாகவும் போனதும் அவளுக்கு அழைப்பதாகவும் சொல்லி பிரியாவிடை பெற்று சென்ற தோழியின் கண்ணீர் முகம் தான் அவள் கடைசியாக பார்த்தது அதன்பின் அவளை பற்றி யோசிக்க கூட விடாமல் அவளை மனுபரதன் என்ற சூறாவளி சுற்றி அடித்தது .

மித்திலா சென்ற நான்காம் நாள் அவள் வீட்டின் அருகிலேயே அவளை சந்தித்தான் மனுபரதன்

என்னம்மா தோழியின் மனதை கெடுத்து பேக் செய்து அனுப்பிவிட்டாய் போல எங்கே அவள் ?”

தெரியாது , தெரிந்தாலும் உங்களிடம் சொல்வதற்கு இல்லை நீங்கள் அவள் வாழ்க்கையில் இனி காதல் என்ற பெயரில் விளையாட முடியாது

என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் நீ சொல்வதெல்லாம் நம்பி முட்டாள் தனமாக ஓடி இருப்பவளிடம் காதலை நானும் எதிர்பார்க்கவில்லை ஆனால் நீ யார் என்பதை அவள் தெரிந்து கொள்ளாமல் போனது தான் உறுத்துகிறது

நான் யார் என்பதை அவள் அறிந்து கொண்டதால் மட்டுமே அவள் என்னிடம் வந்தாள் , சும்மா பூச்சி காட்டாதீர்கள் சார் , என்னிடம் வாலாட்ட நினைத்தால் போலீஸிற்கு போக நான் தயார்

அவளை பார்த்து இடி இடியென்று சிரித்தவன் அவளை நெருங்கி தன்யா ….” என்று அழைத்தான்

அந்த அழைப்பில் முதுகு சொல்லிட நிமிர்ந்தவளிடம் பயம் வராது என்று சொல்லமுடியாது மானம் போய் விடும் இல்லை உனக்கு நெருக்கமானவர்களுக்கு ஆபத்து என்றால் பயம் வரத்தான் செய்யும் இல்லையா என்றவனை கேள்வியாய் பார்க்க

நன்றாக கவனி இன்று இரவு நீ உன் வீடு செல்லக்கூடாது , சென்றால் என் ஆட்கள் உன் வீடு புகுவார்கள் அப்புறம் உன் உடமைகளுக்கு நான் பொறுப்பில்லை சிறு கூச்சல் போட்டால் கூட அவர்களின் நடவடிக்கையை என்னால் தடுக்க முடியாது என்றபடி அவன் காரை பார்க்க அதில் திடகாத்திரமாக இரண்டு ஆண்கள் அமர்ந்திர்ந்தனர் அவர்கள் அதிலிருந்து இறங்கியதும் அவன் அவளை அதில் ஏற சொன்னான்

சுற்றிலும் நடப்பதை புரிந்து கொள்ள கூட சூரணை வராது அவன் சொல்படி காரில் ஏறினாள் . இரவு முழுவதும் காரில் அவளை ஏற்றி சுற்றியவன் காலையில் அவள் வீடுமுன் கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் இறக்கிவிட்டு நான் உன்னை எதுவும் செய்யாமலேயே பழி வாங்க முடியும் என்பதை காட்டிவிட்டேன் இனி அடிக்கடி வெவ்வேறு வகையில் என்னிடம் அடிபடுவாய் என்று கூறி சென்றுவிட்டான்

அக்கம் பக்கத்தினரின் பார்வை தவறாய் அவள் மீது படிய அதை உணர்ந்தவள் அவன் தன்னை எப்படி ஒரு இக்கட்டில் மாட்ட வைத்திருக்கிறான் என்று புரிந்தவள் மெதுவாக உள்ளே சென்று அவள் அன்னையை பார்த்தாள்

சுவாமி அறையில் கண் மூடி அமர்ந்த தாயின் கோலம் அவள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை சேர்த்து அம்மா என்று கதறினாள் மகளை பார்த்ததும் பயமெல்லாம் போய் கண்ணு என்று அழுத அந்த தாய்

நான் பயந்துட்டேன் டா ராஜாத்தி உன் உயிருக்கு ஏதோ என்னமோ ஆயிடுச்சின்னு , நல்லவேளை நான் வேண்டிய அந்த தெய்வம்தான் காப்பாற்றியது என்ற தாயிடம்

அம்மா நான் எந்த தப்பும் செய்யவில்லை

இல்லம்மா நீ நிச்சயம் தப்பாக வழிமாறி போயிருக்க மாட்டாய் என் வளர்ப்பு எப்படி கண்ணு பொய்க்கும் , எதுவாக இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லு டா என்ன நடந்தது கண்ணு

இதற்கு மேல் மறைக்க பிடிக்காமல் ஒன்று விடாமல் சொல்ல இதில் மித்திலா எந்த அளவு உண்மை கூறி இருக்கிறாள் என்று யோசித்தாயா அம்மா , நீ அவசரமாக அந்த பையனிடம் பேசி இருக்க கூடாது

மித்து பாவம் மா அவள் அண்ணன் கூறிய பிறகுதான் அவளே என்னிடம் வந்தாள்

இருந்தாலும் என்று ஆரம்பித்தவர் எப்படியோ அந்த பையன் ஊரார் மத்தியில் உன்னை பழிவாங்க இப்படி செய்ய நினைத்து தப்புதான் , விடு கண்ணு இப்போது நாம என்ன செய்யலாம்னு நான் சொல்கிறேன்

என்னால் வீட்டு பெரியவளாய் உனக்காக இங்கிருந்தே போராட முடியும் ஆனால் நாணயத்திற்கு இரு பக்கம் உண்டு கண்ணு அது தெரியாமல் இதில் இனி இறங்கவோ இல்லை உன்னை மேலும் வருத்தவோ எனக்கு இஷ்டமில்லை , அது தவிர இனி நம் அக்கம் பக்கம் எல்லாம் உன்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்னதான் நாளடைவில் சரியாகும் என்றாலும் கூட எனக்கு அவர்களின் அந்த இரக்க பார்வை ஏளன பார்வை வேண்டாம் தப்பு செய்யாமல் நீ ஏன்மா தண்டனை அனுபவிக்கணும் , தவிர அந்த பையன் இன்னும் அடிவாங்கிய வெறியோடு இருக்கிறான் உன்னை பழிவாங்க சுற்றுவான் தந்தை இல்லாது நிற்கும் நம் நிலைமையில் தினமும் உனக்கு என்ன ஆயிற்று என்று என்னால் நிம்மதி இழந்து இருக்க முடியாது எனவே நாம் இங்கிருந்து நல்லவிதமாகவே ஊர் பக்கம் போகலாம் சிதம்பரம் அண்ணா கிட்ட நான் பேசறேன் ஏற்பாடெல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்றவர் அதை நடத்தியும் காட்டினார்

சாதாரணமாக இருந்த பொழுது தெரியாத தாயின் அருமை அவள் கஷ்டப்படும் பொழுது தூணாக தெரிந்தது , அக்கம் பக்கத்தில் பேசி ஓரளவு சரி செய்தவர் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து அவளை அழைத்து சென்று விட்டார் , எதை பற்றியும் யார் என்ன சொல்வார்கள் என்று அதற்கேற்றாற் போல் வாழாமல் தன் பெண்ணிற்காகவே வாழ்ந்த அந்த நல்ல நெஞ்சம் ஊரில் மூன்று வருடம் கழித்து ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனது , தன் தாய் இருந்திருந்தால் இந்த நிலைமை நிச்சயம் வந்திருக்காது , முன் இவனால் ஓடினாள் இப்பொழுது இவள் தாயின் ஆசையை காப்பாற்ற ஓடி வந்தாள் புலிகளுக்கு பயந்து பாம்பிடம் சிக்கிய கதையாகி போன தன் வாழ்வை நினைத்து உதடுகளில் ரத்தம் காய உறைந்து உறங்கினாள் நாயகி

கண்ணாடியில் முகம் பார்த்தவளுக்கு உதட்டில் பட்ட காயம் ஆற தெரிந்தது ஆனால் மனதில் பட்ட காயம் என்று யோசித்தவள் மனம் ரணமானது அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு மனுபரதனை அவள் பார்க்கவில்லை மறுநாள் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாக பெரியம்மா கூற அவளை பார்த்து காயம் எப்படி என்று கேட்டவர்களுக்கு அவசரத்தில் உதடு கடித்துக்கொண்டதாக சமாளித்தாள் , அவன் வெளியூர் சென்றது சாதகமாக தோன்ற அவசரமாக தத்தெடுக்கும் படலத்தை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்தாள் , சரணும் தன் பங்கிற்கு லீகல் பார்மாலிடீஸை முடித்தான் .

அன்று அனைவரும் ஆசிரமத்திற்கு தனி தனியாக செல்ல ஏற்பாடு செய்தவள் குணாவை அழைத்துக்கொண்டு அங்கு விரைந்தாள் , அனைத்தும் அவர்கள் ஏற்பாடுபடி நடக்க உள்ளூர ஒரு பயம் இருந்தாலும் இன்று எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் வந்தது

குணாவிற்கும் அதே மனநிலைதான் எல்லாம் நன்றாக நடந்துவிட்டால் தோழிக்கு இந்த மனகஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்துவிடும் அவள் பழையபடி மாறி அவள் நிலையில் இருந்து வெளிகொண்டு வந்துவிடலாம் என்று யோசித்தவள் , எல்லாம் நினைத்தபடி சென்றால் கடவுள் என்று ஒருவர் உள்ளதை மறந்து விடுவோம் அல்லவா அதுபோல்தான் சந்தோஷி வந்து கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் வாய் அடைத்து போயினர் .

அந்த கார் வேகமாக ஆசிரமத்திற்குள் நுழைந்தபொழுதே அனைவருக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது நிதானமாக நடந்து வந்தவள் நேரே ஆசிரம தலைவியின் அறைக்கு சென்றாள் பக்கவாட்டு அறையில் இருந்தவர்களை கவனிக்கவில்லை .

வணக்கம் மா

சந்தோஷி வாம்மா , என்ன சர்விஸ் பண்ண வந்தியா ?”

ம்ம் இல்லை அது வந்து அந்த குழந்தையை தத் …. ஏதோ கேள்விப்பட்டேன் மேடம்

அடடே ஆமாம் அந்த குழந்தையை தான் நீ எப்பவும் வந்து பார்த்துப்ப , இப்போ அதற்கு ஒரு நல்ல பெற்றோர் கிடைக்கப்போறங்க , நீயும் அது தெரிஞ்சுதான் வந்தியா ?”

அதிர்ந்து நின்றவள் ஏதோ சொல்லவேண்டும் என்று தலையாட்டினாள்

நான் அவங்களை பார்க்க முடியுமா மேடம்

அவளை பார்த்து புன்னகைத்தவர் எதற்கம்மா ?, நீயும் அந்த குழந்தையின் நலனை தெரிந்து கொள்வதற்காகவா .., சரி இவ்வளவு நாள் அதை பார்த்துக்கொண்டிர்ந்திருக்கிறாய் , போய் பாரம்மா என்று அந்த பக்க கதவை காட்ட சிறு தலையசைவுடன் அங்கு சென்றாள் .

அங்கு நுழைந்ததுமே அவளுக்கு மொத்த உலகமும் தன் சுழற்சியை நிறுத்தியது போன்று தோன்றியது , யாருக்கெல்லாம் தன் விஷயம் தெரிய கூடாது என்று இருந்தாளோ அவர்கள் அனைவரும் அங்கு இருந்தனர் , சிறிது நேரம் யோசனையாக அவர்களை பார்த்தவள் சுதாரித்துக்கொண்டாள்

எல்லாருக்கும் இவளை பற்றி தெரியும் இல்லையா ?” என்று தாருண்யா , சரண் , குணா மூவரை கேட்டாள் சோனாவை பார்த்து

என் வாழ்வுக்கு வழி செய்ய பார்த்தாயா சோனாக்கா ? , அப்படி ஒன்று இனி இல்லை என்பது தெரியாமலே ?”

உன் வாழ்வு என்னுடன் என்று வாழ்ந்தேன் ஆனால் இப்படி நடந்திருக்கும் பொழுது உனக்கு வழி செய்யவேண்டும் என்று எனக்கு எப்படி எண்ணம் இல்லாமல் போகும் , சொல் சஷி நீ உண்மை சொல்லியே ஆக வேண்டும் இல்லை என்றால் நானும் ..” என்று தயங்கியவன் நானும் தாருண்யாவும் இவளை தத்து எடுக்கப்போகிறோம்

அவனை பார்த்து விரக்தியாய் சிரித்தவள் நீங்கள் என்ன நினைத்தீர்கள் சரண் , தாருண்யாவை விட்டு இந்த குழந்தையை தத்து எடுத்தால் நான் தடுப்பேன் அப்பொழுது இவளின் தந்தையை பற்றி கூறிவிடுவேன் என்று நினைத்தீர்களா ?” என்ற அவளின் கேள்வியில் எல்லாருமே திகைத்தனர்

நான் தாருண்யா தத்தெடுப்பாள் என்றால் சந்தோஷமாக கொடுப்பேன் ஆனால் எக்காரணத்தை கொண்டும் உங்களிடம் இவளை கொடுக்கமாட்டேன் என்றாள் கண்களில் கண்ணீர் வழிய

எல்லாருக்குமே அவளின் பதில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது , அவளை மெதுவாக தொட்ட குணா சந்து , ஏண்டி இப்படி செய்கிறாய் உன்னை உன் இயல்பை தொலைத்து இப்படி ஆக்கியது யார் என்று சொல்லு ப்ளீஸ் கொஞ்சம் அண்ணா பெரியம்மாவை பற்றி யோசி , நான் சொல்வதை கேளு டி என்றவளை பார்த்து ரொம்ப நாட்களுக்கு பிறகு உண்மையாக சிரித்தாள்

அவர்கள் இருவர் மேலும் சில காரணங்களுக்காக . தான் நான் இவளை ஆசிரமத்தில் விட்டு வளர்க்கிறேன் குணா , நீ என்ன கேட்டாலும் நான் எதையும் சொல்ல மாட்டேன் , சொல்லவும் முடியாது என் நிலைமை இனி யாருக்கும் வரவேண்டாம் என்று அந்த கடவுளை வேண்டி கொள்கிறேன் என்று அவளின் கண்ணீரை துடைத்தவள்

தாருண்யாவை பார்த்து பரவாயில்லை தாருண்யா நீங்கள் என் வேஷத்தையெல்லாம் கண்டுகொண்டீர்கள் புத்திசாலிதான் , என்னுடன் இருந்தவர்களே நான் மாறிவிட்டேன் திமிர் பிடித்தவள் என்று சொன்னப்பொழுதும் கூட நான் நடிக்கிறேன் என்று கண்டுபிடித்துவிட்டீர்களே

சரண் இனியாவது இந்த வேலையையெல்லாம் விட்டு உங்கள் வேலையை பாருங்கள் தத்தெடுக்க அவள் அனாதை இல்லை , அவளுக்கு தந்தை என்று ஒருவர் இல்லையே தவிர தாய் நான் இருக்கிறேன் , நான் அவளை காப்பாற்ற நிறைய விலை கொடுத்துவிட்டேன் , அவள் வாழ்வு சிறக்கும் வரையும் அவளை நான் காப்பாற்றிக்கொண்டே வருவேன் என் உயிர் வரை என்றவள் ஆசிரம தலைவி வாசலை நோக்கி நடக்க நில்லு சஷி என்றவன் அவளிடம் விரைந்தான்

என்ன என்று அவள் பார்க்கும் பொழுதே , தன் கைக்குட்டையில் வைத்திருந்ததை எடுத்தவன் அவள் சுதாரிக்கும் முன் அந்த தாலியை எடுத்து மூன்று முடிச்சு போட்டான் , பார்த்த அனைவரும் ஒருவொரு விதத்தில் அதிர்ந்தனர் அவன் நிதானமாக

எனக்கு இவ்வளவு நாள் இருந்த பயம் நீ இந்த குழந்தையின் தந்தைக்காக காதிருக்கிறாயோ என்றுதான் அவளுக்கு தந்தை இல்லை என்று நீ சொன்ன வார்த்தையில் என் பயம் போய் விட்டது அவளுக்கு நீ தாய் என்றால் நான் தந்தை அவளை மட்டும் அல்ல உன்னையும் என் உயிர் இருக்கும் வரை காப்பாற்ற எனக்கு தெரியும் , இந்த தாலியை என் சாவிற்கு பிறகு கழட்டி போடு என்றான்

தாருண்யா இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மனம் அமைதியானது இனி சந்தோஷியை சரண் விடமாட்டான் என்று நிம்மதியானது , குணாவுக்கு தலை கால் புரியவில்லை தோழி வாழ்வு மலர்ந்துவிட்டதாகவே நினைத்தாள் , சோனா ஒரு படி மேலே போய் அவன் காலிலேயே விழுந்துவிட்டாள்

ஐயா எங்கம்மா வாழ்வு போய்டுச்சின்னு நான் அழாத நாளே இல்லை ஆனால் இப்போ நான் நிம்மதியா இருக்கேனுங்க , நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும்

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று மயங்கி சரிந்தாள் சரணின் கை வளைவில் , சரண் சந்தோஷியை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தான் அவள் சரியும் பொழுது அவளை தாங்கியவன் மெதுவாக படுக்க வைத்து ஈரம் கொண்டு முகத்தை துடைத்தவன் சிறிது தண்ணீர் கொடுத்து அவள் மயக்கத்தை தெளிவித்தான் , கண் விழித்தவள் சுற்றுப்புறம் உறைத்ததும் தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை பார்த்தாள் , எதெல்லாம் நடக்க கூடாது என்று நினைத்தாளோ அது அனைத்தும் நடந்து விட்டது யோசிக்க யோசிக்க நெஞ்சு வெடித்தது

மெதுவாக அமர்ந்தவள் அனைவரையும் உட்கார சொன்னாள் சரணை பார்த்து இந்த குழந்தை யாருக்கு பெறப்பட்டது என்று உங்களுக்கு தெரியாது அதை தெரிந்து கொள்ளத்தான் இத்தனை முயற்சிகளும் இல்லையா ?”

மெதுவாக அவள் தோளை தொட்ட தாருண்யா நீ ஒரு குழந்தையை பெற்று அதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாய் அதன் தகப்பன் யாரென்று தெரிந்து உன் வாழ்வை சீர் செய்ய நினைத்தோம் ஆனால் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது இதற்கு தந்தை சரண் தான் சந்தோஷி

அவள் கையை ஆதரவாக பற்றியவள் எதெல்லாம் தெரியக்கூடாது என்று நினைத்தேனோ அது அனைத்தும் தெரிந்துவிட்டது இனி இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்றவள் சரணை பார்த்து

நீங்கள் தாலி காட்டியதால் உங்களை உடமையாகிக்கொள்ள என்னால் முடியாது காரணம் இந்த குழந்தை , ஏனெனில் இந்த குழந்தை உங்களுக்காக பேசப்பட்ட விலை சரண் , இதற்கு தந்தை இல்லை என்று அவனை பார்த்தவள் ஒரு தடவை கண்களை இறுக்க மூடி திறந்து சொன்னாள்

நிஜமாகவே இவளுக்கு தந்தை என்று ஓருவன் இல்லை

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago