காதலை சொன்ன கணமே 9

0
367

எதற்காக வந்து தன்னிடம் இவன் இப்படி கத்திவிட்டுப் போகிறான் என்று புரியாமல் பார்த்த வண்ணம் திகைத்து நின்றாள் சுபத்ரா. சுற்றிலும் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது. எல்லோரும் கல்யாண வீட்டு மும்முரத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். இவள் ‌நல்ல நேரம் இவள் ‌சுமித்ராவின் அறையில் தனியாக இருந்ததால் பெரிதாக ஒன்றும் இல்லை.

நாம் எப்போது இவனிடம் கிராமத்தில் இருக்க முடியாதென்றோ அல்லது இந்தக் குடும்பத்தில் இருக்க முடியாதென்றோ சொன்னோம் என்ற குழப்பத்தில் இருந்தாள். சொல்லப் போனால் அவளுக்கு இந்த அமைதியான கிராமத்து சூழல் பிடித்தே இருந்தது. தான் ஒன்றுமே சொல்லாத போது இவன் ஏன் தன்னிடம் இப்படி வந்து புகைந்து விட்டுப் போகிறான் என்ற கேள்வி உள்ளுக்குள் குடைந்தது.

இவளிடம் கத்திவிட்டு அங்கே நிற்காமல் வெளியே ஓடி வந்த சூர்யாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. வண்டியை எடுத்துக் கொண்டு இவன் கிளம்ப முயல்வதைக் கண்ட சுதர்சன் இவன் வண்டியின் பின் தொற்றிக் கொண்டான். கோபமாகத் திரும்பி முறைத்த சூர்யாவிடம் “முறைக்காத மாப்பிள்ளை. எங்கே வேணாலும் போகலாம். ஆனா நானும் வருவேன்.” என்று சட்டமாய் அமர்ந்து கொண்டான்.

வெளியில் நின்று எல்லோரின் பார்வைக்கும் காட்சிப் பொருளாக ஆக விரும்பாமல் வண்டியை எடுத்து விருட்டென்று கிளம்பினான். நேராக தோப்புக்கு வண்டியை விட்டவன் அங்கே இருந்த வீட்டிற்குள் சென்று முன்னறையில் இருந்த பெரிய கட்டிலில் படுத்து விட்டான். இவன் பின்னே வந்த சுதர்சனுக்கு ஒரே குழப்பம்.

‘திருமணம் முடிந்து சிலமணி நேரங்களே ஆகியுள்ளது. இதற்குள் இவன் இப்படி யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் இங்கே வந்து விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி படுக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும். ஒருவேளை புது மாப்பிள்ளை முறுக்கு என்பதை நம்ம மாப்பிள்ளை தப்பா புரிந்து கொண்டானோ’ என்றே தோன்றியது.

“டேய் மாப்பிள்ள! என்னடா ஆச்சு? இங்கே வந்து அசோகவனத்து சீதை மாதிரி படுத்துக் கிடக்குறியே என்ன விஷயம்? யாரும் எதுவும் ப்ரச்சனை பண்ணிட்டாங்களா? ஒருவேளை இன்னிக்கு நைட்டு சமாச்சாரத்தை தள்ளி வச்சிட்டாங்களா? நம்ம வீட்டு பெருசுங்க வில்லங்கம் பிடிச்சதுங்க. செஞ்சாலும் செய்யும்” என்றான்.

சுதர்சனைக் கொலைவெறியோடு பார்த்து வைத்தான் சூர்யா. ‘இவன் வேற கருநாக்கு. இவன் சொல்லி அது மாதிரி ஏதாவது நடந்திரப் போகுது. ஆண்டவா பார்த்து செய்’ வேண்டிக் கொண்டான் மனதிற்குள். “ஏய்யா ராசா இந்த கண்ணால் பேசற டெக்னிக்கெல்லாம் உன் பொண்டாட்டி கிட்ட வச்சுக்கோ. மரியாதையா இப்போ சொல்லப் போறியா இல்லையா. என்னதான்டா உன் ப்ரச்சனை?” வெறுத்துப் போனக் குரலில் கேட்டான் சுதர்சன்.

“டேய் சுடர்! இன்னிக்கு காலைல இருந்து ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டா. மொதல்ல ஐயா இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னப்போ பயந்தேன். படிச்சபிள்ளை நம்ம ஊர் பழக்கவழக்கமெல்லாம் ஒத்துப் போகுமோன்னு பயந்தேன். அப்புறமா சுபத்ராவைப் பார்த்ததும் கொஞ்சம் மனசு தெம்பாச்சு. இன்னிக்கு அவ மாமா பையன் கல்யாணத்துக்கு வந்தவன் சொல்றான், அவளுக்கு அமெரிக்கால போய் செட்டில் ஆகனும்னு ஆசையாம். அதனால் அவள் இங்கெல்லாம் இருக்க மாட்டாளாம். என்னைய பிரிச்சு கூட்டிட்டு போறதா ப்ளானாம்” என்றான் கோபமாய்.

அவன் குரலில் தன் ஆசையில் லாரி லாரியாய் மண் விழுந்து போச்சே என்று வருத்தம் டண்கணக்கில் இருந்தது. சுதர்சன் இவன் சொல்வதையே பொறுமையாக கேட்டுவிட்டு “ஏண்டா மாப்பிள்ள, இந்த விஷயத்தை உங்க வீட்டம்மா உங்கிட்ட சொன்னாங்கன்னா தானேடா நீ வருத்தப்படனும்? எவனோ சொன்னதுக்கே இந்த துள்ளு துள்ளற?” என்றான்.

“இவ சொல்லாமயாடா அவன் வந்து என்கிட்ட சொல்லுவான். நல்லா ப்ளான் பண்ணியிருக்காங்க. இருக்கட்டும் பார்த்துக்கறேன். எப்படி இவ போறா அமெரிக்காவுக்குனு” பொறுமினான் சூர்யா. சற்று நேரம் மோவாயை தடவியபடி ஏதோ யோசித்து நின்ற சுதர்சன் “எனக்கென்னவோ நீ கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்றியோன்னு தோணுது. கொஞ்சம் பொறுமையா அவங்ககிட்ட பேசிப் பாரு. எனக்கு அவங்களைப் பார்த்தா அப்படி தெரியல.” என்றான் உறுதியாக.

“அப்படியா சொல்ற?” என்றான் சூர்யா. குழப்பத்துடன் குழந்தைபோல் முழிக்கும் அவனைக் கண்டு பாவமாக இருந்தது சுதர்சனுக்கு. எங்கோ ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பதும் புரிந்தது. ‘இருந்திருந்து இவனுக்கே இப்போ தான் ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு. அது பொறுக்கலையே. யாரு இப்படி பீதியை கிளப்பிவிட்டுறுப்பா’ சிந்தித்தபடி நின்றவன் “வா மாப்பிள்ள வீட்டுக்கு போகலாம். நீ பாட்டுக்கு கத்திட்டு வந்திட்ட, அங்க அந்த பிள்ள மனசு வருத்தப்பட்டுட்டு இருக்கும்.” என்று சூர்யாவை வீட்டுக்கு அழைத்தான்.

“ஆமாம் டா நான் கோபத்துல கத்திட்டு வந்துட்டேன். பாவமா தான் இருந்துச்சு. அழுதுருப்பாளோ?” சந்தேகமாகக் கேட்டான் சூர்யா. ‘இவனை எந்தக் கணக்கில் சேர்க்க?’ என்பதாய் பார்த்துவிட்டு “ரொம்ப திட்டிட்டியா மாப்பிள்ளை?” என்றான் சுதர்சன். “ஆமான்டா நல்ல கத்திட்டேன். நான் வேற கோவக்காரனா! என்ன பேசறோம்னு தெரியாம கத்திட்டு வந்திட்டேன். இப்போ அந்த பிள்ளை அழுது வச்சு நம்ம ஐயா என்னைக் கூப்பிட்டு கேப்பாங்களோ? நான் வேணா இங்கயே இருக்கேன். நீ போய் பார்த்திட்டு வர்றியா?” என்றான் சூர்யா.

“உன்னை இங்கே விட்டுட்டு நான் மட்டும் போய் திட்டு வாங்கவா? அது நடக்காது. வா போகலாம்” என்றான் சுதர்சன். சூர்யா நகர்வதாய் இல்லை. என்ன சொன்னால் இவன் கிளம்புவான் என்று யோசித்து “மாப்பிள்ள இப்போவே போனா அந்த பிள்ளை போய் ஐயாகிட்ட போட்டு கொடுக்கிறதுக்கு முன்னாடி நாம சமாதானப் படுத்திறலாம். இல்லைன்னா பெரிசுங்கள்ளாம் ஒன்னா சேர்ந்து இன்னிக்கு நைட்டு மேட்டர்ல கைய வச்சிருவாங்க பாத்துக்கோ” என்றான்.

அம்பு குறியில் சரியாக பட்டது. “அதுவும் சரிதான்டா சுடர். வா போகலாம்.” என்று உடனே கிளம்பிவிட்டான். இம்முறை சுதர்சன் வண்டியோட்ட சூர்யா பின்னால் அமர்ந்து வந்தான். “இப்போ நான் திரும்ப போறதால என்னமோ அவளுக்கு இளப்பமா போகுமோ சுடரு. ஐயா என்னைத் தப்பா நினைக்க கூடாதேன்னு தான் வர்றேன். இல்லைன்னா நான் வரமாட்டேன்” என் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாய் பேசியபடி வந்தான்.

வண்டியின் கண்ணாடி வழியாக சூர்யாவைக் கண்ட சுதர்சன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். ‘எவ்வளவு கெத்தா சுத்திட்டிருந்தான் என் மாப்பிள்ளை. அவனை இப்படி ஒருத்தி வந்து சாச்சுட்டாளே. என் மாப்பிள்ளை நல்லாருக்கனும். எனக்கு அது போதும். ஒருவேளை சுபத்ரா அப்படி பேசியிருந்தால் கூட அவங்ககிட்ட நாம் ஒருதரம் பேசிப் புரிய வைக்கனும்” மனசுக்குள் உறுதி செய்து கொண்டான்.

இவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்த போது வீட்டுப் பெரியவர்கள் அத்தனை பேரும் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தது கண்ணில் பட்டது. சூர்யா முடிவே செய்து விட்டான் தன்னைப் பற்றி சுபத்ரா போட்டுக் கொடுத்து விட்டாளென. ‘ஜில்லு! போட்டா குடுக்கிற? இரு இன்னிக்கு இருக்கு உனக்கு’ மனசுக்குள் கருவியபடி உள்ளே நுழைந்தான். இவர்களின் கேள்விகளுக்கு வேறு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் ஒருபுறம்.

“ஏன்பா ராசா! எங்கப்பா போன? உன் ஃபோனை வேற எடுத்திட்டுப் போல? அந்தப் பிள்ளைகிட்டயும் சொல்லிட்டுப் போலியா?” சரசு மகனிடம் விசாரித்தார். சூர்யா பதில் சொல்ல தொடங்கும் முன் சுதர்சன் முந்திக் கொண்டு “நாந்தான் அத்தை மாப்பிள்ளையை கூட்டிட்டு போனேன். ஒரு சின்ன விஷயம். அதான்” என்றான்.

“அடேய் சின்னவனே! நல்ல நேரம் பாத்த இவனை கூட்டிட்டு போக! இங்க ஆளக்காணோம்னு தேடியலையறோம். அவனுக்கு இனி ஆளு வந்தாச்சு. உன்னிஷ்டத்துக்கு இழுத்துட்டு போகமுடியாது. ஏப்பா சூர்யா! அந்த பிள்ளைக்கு மேலுக்கு முடியலையாம். கொஞ்சம் டாக்டரை கூட்டிட்டு வாய்யா” அப்பத்தா சொல்ல ‘யாருக்கு முடியலயாம்’ என்று குழம்பிப் போய் பார்த்தான் சூர்யா.

இவனை உள்ளே கையைப் பிடித்து இழுத்துச் சென்ற சுமித்ரா “எங்கண்ணா போன நீ? ஃபோனும் எடுத்திட்டு போகல. உன்னை ஆளக்காணோம்னு ஆளாளுக்கு டென்ஷன் பண்ணிட்டாங்க. அண்ணி பாவம் பயந்து போய்ட்டாங்க. போ முதல்ல அவங்களை போய் பாரு. அழுதுட்டாங்க. கண்ணுல்லாம் சிவந்து போச்சு. அப்பத்தாகிட்ட அண்ணிக்கு உடம்பு முடியலன்னு சொல்லி வச்சிருக்கு. போய் சமாளி” என்றாள் கோபமாக.

‘இங்க பாருடா. கல்யாணம் ஆனதும் ஆளாளுக்கு என்னை அதிகாரம் பண்றாங்க. எல்லாருக்கும் பயம் போச்சு போலவே. இவ எதுக்கு அழுதா? அவ அழற அளவுக்கா நம்ம திட்டிட்டோம்? அவ்வளவா பயமுறுத்திட்டோம்?’ யோசனையாக உள்ளே நடந்தான் சூர்யா.

இவனுடன் வந்து இணைந்த சுதர்சன் “ஏன் மாப்பிள்ளை நிசமாவே நல்லா திட்டிட்டியா? நான் கூட சும்மா கெத்து காட்டறேன்னு தான் நினைச்சேன். இப்படி பண்ணிட்டியே மாப்பிள்ளை? இன்னிக்கு நைட்டுக்கு இவனுங்க கேட்டை போட்ருவானுங்களே இப்போ? என்ன பண்ண போற?” என்றான்.

‘இவன் வேற அப்பப்போ இதை ஞாபகப் படுத்திட்டே இருக்கான். மொதல்ல ஜில்ல பார்க்கனுமே. ஏன் அழுதா? ரொம்ப காயப்படுத்திட்டோமோ? பாவம் தான். இப்படி பச்சபுள்ளயா இருக்காளே. இதுக்கெல்லாமா அழுவாங்க? எப்படி சமாதானப் படுத்த?’ யோசனைகள் ஓட எட்டி நடையை போட்டான் சூர்யா.

“மாப்பிள்ளை! போய் சண்டைகிண்டை போட்றாத. பாவம் அந்த பிள்ளை. அவசரப்படாதே சரியா” சுதர்சன் சூர்யாவின் கையைப் பிடித்து நிறுத்தி சொன்னான். “சுடரு இவ எதுக்கு அழுதுருப்பா? ஒருவேளை இப்படி அழுது புரண்டு இங்கே இருக்க முடியாதுன்னு சொல்லுவாளோ? அதுக்குத்தான் இவ்வளவு பில்டப்போ?” என்றான் ப்ரேக்கடித்து நின்றார் போல் நின்று. சுதர்சனுக்கு கூட இப்படியும் இருக்குமோ என்று ஒருநிமிடம் தோன்றியது.

இருவரும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஓரிரு நிமிடங்கள் கரைய “என்ன ஆனாலும் சரி, அவ இதப்பத்தி மட்டும் பேச விடவே கூடாது. பார்க்கலாம் அவளா இல்லை நானானு” என்றபடி வீரநடை போட்டான் நம்ம காட்டான்.

வாடி மாப்பிள்ளை…. உனக்கு ஜில்லுனு ஜில்லு வெயிட்டிங் ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here