காதலை சொன்ன கணமே 3

0
276

காதலை சொன்ன கணமே 3

அந்த வீடே பரபரப்பாக இருந்தது. இருக்காதா பின்னே. அந்த வீட்டின் இளவரசி சுபத்ராவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் பத்து நாட்களுக்குள் முகூர்த்தமும் குறிக்கப்பட்டுவிட்டது. முத்துராமனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தன் ஒரே மகளின் திருமணம், இந்த ஊரே அதிர அதை நடத்த வேண்டும். அவரிடம் இருக்கும் செல்வத்திற்கு மற்றும் செல்வாக்கிற்கும் அது ஒன்றும் இயலாத காரியம் இல்லையே. நிச்சயம் முடிந்த நிமிடம் முதல் ஆரம்பித்த பரபரப்பு தான். மேனகா கூட கிண்டலடித்தார், “கல்யாணம் உங்களுக்காக? இல்லை உங்கள் மகளுக்காக? இவ்வளவு பரபரப்பு ஏன் மாமா?” என்று.

என்ன லூசுத்தனமான கேள்வி என்பதாய் அவரை ஒரு பார்வை பார்த்த முத்துராமன் “என் மகளுடைய திருமணமாக்கும். சும்மா யாரோடதோ இல்லை. இந்த ஊரே பார்த்து ஆச்சரியப்படனும். அப்படி நடத்தப் போறேன் இந்த கல்யாணத்தை. எப்பேற்பட்ட மாப்பிள்ளை! சபையிலே என்னென்ன செய்யப் போறோம்னு சொல்லும் போதே, எதுவும் வேண்டாம் மாமா, உங்க பொண்ணை மட்டும் கொடுங்க போதும்னு சொன்னாரே! யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு மாப்பிள்ளை! அவருக்காகவாவது இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தனும் மேனா” என்றார் குதூகலமாக.

அப்போது தான் உணவருந்த அங்கே வந்த சுபத்ராவின் காதில் அப்பாவின் பேச்சு விழ அவளுக்குப் பெருத்த ஆச்சரியம். அவனா அப்படி சொன்னான். அவ்வளவு நல்லவனா அவன். ஆள் பார்வைக்கு தான் அழகன் என்று நினைத்தோமே குணத்திலும் அப்படித்தானோ? புரிந்து கொள்ள முடியவில்லையே இவனை. தன்னிடம் வந்து இந்த திருமணத்தில் இஷ்டமா என்றான். தானும் இப்போதைக்கு அவசரமில்லை என்று தானே சொல்ல வந்தோம், அதற்குள் அந்த குதி குதித்தானே. எப்படி இருக்கப் போகிறதோ தன் திருமண வாழ்வு என்று பயமாக இருந்தது அவளுக்கு.

மேனகாவும் முத்துராமனும் தங்களது வருங்கால மாப்பிள்ளையின் புகழ் பாடத் தொடங்கினர். தான் செல்லமாய் இருந்த வீட்டிலே இன்று தன்னைவிட இனி வரப்போகிறவனுக்கு எவ்வளவு பாராட்டு மழை என்று எண்ணினாள் அவள். அவளுடைய தோழி பவானியுமே “சுபா! உங்கப்பா உனக்கு சூப்பர் மாப்பிள்ளை பார்த்திருக்காங்கடா. அவருக்கு உன்னிடம் இருந்து பார்வையை இந்த பக்கம் அந்த பக்கம் அகற்ற முடியவில்லையே. நீ கொடுத்து வச்சவ தான்.” என்றாள். எங்கே கொடுத்து வைத்திருக்கிறோமோ? எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோமோ என்று தான்‌ பயமாக இருந்தது சுபத்ராவிற்கு.

வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் முத்துராமன் தன் வருங்கால மாப்பிள்ளையின் புகழ் பாடித் தள்ளினார். அடுத்து வந்து நாட்களனைத்தும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. திருமணத்திற்கான சாமான்கள் வாங்க, நகைகள் எடுக்க, துணிமணிகள் வாங்க, பந்தல்காரனுக்குச் சொல்ல, சமையலுக்கு ஆள்பிடிக்க, சத்திரம் ஏற்பாடு செய்ய, தெரிந்தவர் அறிந்தவர் என் அத்துனை பேருக்கும் பத்திரிக்கை வைக்க, காய்கறிகள், பழங்கள், பூ என்று அத்துனைக்கும் ஏற்பாடு செய்ய, திருமணத்திற்கென வருபவர்களுக்கென தங்குவதற்கான ஏற்பாடுகள் என ஆளுக்கொரு பக்கமாய் பறந்தனர்.

முகூர்த்தப் புடவை எடுக்க என்று சூர்யாவின் குடும்பத்தினர் அன்று வந்திருந்தனர். சுபத்ராவையும் மேனகாவையும் அழைத்துச் சென்றனர். சூர்யாவும் வருவானோ என்று ரொம்பவே எதிர்பார்த்தாள் சுபத்ரா. அவனைக் காணவில்லை என்றதும் ‘சரியான மாக்கான். வந்தா என்னவாம். பெரிய கலெக்டர் வேலை செய்யறாரு. இவர் போகலைனா அங்கே வேலையெல்லாம் அப்படியே நின்று போயிடும். வரட்டும் இந்த கல்யாணம் முடியட்டும் அப்புறம் இருக்கு அந்த காட்டானுக்கு.’ என்று மனதுக்குள் அவனை துவைத்து எடுத்தாள்.

இவள் முகவாட்டத்தை பார்த்தோ என்னவோ சூர்யாவின் அம்மா சரஸ்வதி “வயல்ல இன்னிக்கு களையெடுக்க ஆள் வராங்கடா. பொறுப்பா ஆளிருந்து பார்த்தா தான் முடியும். அதான் தம்பி சொல்லியனுப்பிச்சான் நீங்க போங்கம்மா. நல்லா மாம்பழக்கலரிலே சிகப்பு கலர் பெரிய அகலமான பார்ட்ர் போட்டு பட்டுப்புடவை எடுங்கம்மா சுபாக்கு. அவ கலருக்கு அதுதான் அழகா இருக்கும்னான். நாமே போய் எடுப்பமா? இல்லை அவனையே ஃபோன் போட்டு வரச்சொல்லுவமா?” என்றார் சீண்டலாக.

முகம் அந்தி வானமாக சிவந்து போனது சுபத்ராவுக்கு. இந்த காட்டானுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா என்று தோன்றியது. பார்ப்பதற்கு நல்ல ஐயனார் மாதிரி இருந்து கொண்டு இவனுக்கு இரசனையைப் பாரேன் என்று வியக்கத் தோன்றியது. மனசுக்குள் இதுவரை இருந்த பயம் கொஞ்சம் குறைந்தது போலத் தான் இருந்தது. சூர்யாவுடனான வாழ்க்கை அப்படி ஒன்றும் பயங்கரமாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தாள் சுபத்ரா.

மொத்த பட்டாளமும் துணிக்கடைக்குள் புகுந்து அதை எடுங்க, இதை எடுங்க என்று படுத்த விற்பனைப் பிரிவில் இருந்தவர்கள் குழம்பித்தான் போனார்கள். ஆளாளாளுக்குத் தேடிப் பார்த்தும் இவர்கள் கேட்ட கலரில் மட்டும் புடவை கிடைக்கவில்லை. வெகு நேரம் கடையையே புரட்டிப் போட்டும் அந்த கலர் கிடைக்கவில்லை என்றதும் சுபத்ரா முகம் வாடிப்போனது. அவ்வளவு நேரம் இருந்த ஆர்ப்பாட்டம் அடங்கி ஆளாளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் முழித்தனர்.

மேனகா தான் சுதாரித்து “அதனாலென்ன அண்ணி இப்போ வேற கலர்ல புடவை எடுக்கலாம். அப்புறமா வருஷம் முழுக்க வருகிற பண்டிகைகள்ள எதுக்காவது அந்த கலர்ல புடவை எடுத்து கொடுக்கிறலாம். இதுக்காக இப்போ நல்ல நேரத்தை தவற விடலாமா?” என்றாள். சரி வேறு வழியில்லாமல் எல்லாரும் தேறிக் கொண்டு ஆளாளுக்கு கையில் ஒரு புடவையை எடுத்து வந்து காட்டினர். ஆனால் சுபத்ராவிற்கு எதிலுமே நாட்டமின்றி போனது.

அந்த காட்டான் அவன் பாட்டுக்கு ஏதோ ஒரு கலரைச் சொல்லி நம்மைக் குழப்பி விட்டுட்டான். இப்போ எந்த புடவையைப் பார்த்தாலும் நமக்குப் பிடிக்கலையே. என்ன செய்ய?” என்றபடி குழம்பித் தவித்தாள். “என்ன அக்கா உங்களுக்கு இதுல எந்தப் புடவையும் பிடிக்கலையா? நல்ல நேர்த்துல புடவை எடுக்கனும்னு சொல்றாங்களே!” என்றபடி அவளிடம் தன் பங்குக்கு ஒரு புடவையை எடுத்து வந்து காட்டியபடி கேட்டான் சுதர்சன்.

அவன் கையில் எந்த புடவையிருக்கிறதென்று பார்க்க கூட செய்யாமல் “இல்லை பிடிக்கல. இங்க எந்த புடவையுமே பிடிக்கல. வேற கடைக்குப் போகலாமா?” என்றாள் சுபத்ரா. “அதெப்படிக்கா! என்னோட கையில் என்ன கலர் புடவை இருக்குனு கூட பார்க்காமலே நீங்க பிடிக்கலைனு சொல்றீங்க? கொஞ்சம் இந்த பக்கம் திரும்பித் தான் பாருங்களேன்!” என்றான்.

திரும்பினா மட்டும் என்னடா நான் ஆசைப்பட்ட மாதிரியா இருக்கப் போகுது? என்று மனசுக்குள் புலம்பிய படியே திரும்பினாள் சுபத்ரா. அங்கே அதே மாம்பழ நிறப்பட்டில் அரக்கு கலரில் பெரிய ஜரிகைப் போட்டு ஜகஜோதியாக ஜோலித்த புடவையை கையில் வைத்துப் பிரித்துப் பார்த்தபடி நின்றது சூர்யா.

அவனுமே அந்தப் புடவையின் அழகைத் தான் பார்த்தபடியே நின்றான். ‘இந்த காட்டான் எப்போ வந்தான். இவ்வளவு நேரம் எல்லாரும் தேடியும் கிடைக்காதது, இவனுக்கு மட்டும் எப்படி கிடைத்தது? அது சரி வயல்ல களையெடுக்க நிற்க வேண்டிய ஆள் எப்படி இங்கே வந்தான்?’ அடுக்கடுக்காக கேள்விகள் எழும்பியது மனதில்.

“என் மாப்பிள்ளையோட ராசியே ராசிதான். பாருங்கக்கா! இவ்வளவு நேரம் எல்லாரும் தேடினோமே, யாருக்காவது கிடைச்சுதா? இவனுக்கு மட்டும் தான் கிடைச்சுது பாருங்க” என்று சுதர்சன் சூர்யாவின் புகழ் பாடினான். அவனுக்கு சூர்யா தான் வாழ்க்கையில் ஹீரோ. அவன் எது செய்தாலும் சுதர்சனுக்கு பெருமை தாளாது. தன் மாப்பிள்ளையை பற்றிப் பீற்றிக் கொள்வான்.

சுபத்ராவிற்கு இவ்வளவு நேரம் இருளடித்திருந்த கடை இப்போது பளீரென்று இருந்தது. இவன் ஏதாவது சொல்லமாட்டானா என்று சூர்யாவின் முகத்தையே பார்த்தபடி நின்றாள் சுபத்ரா. மறந்தும் சூர்யா இவள் இருக்கும் திசையின் பக்கம் கூடத் திரும்பியும் பார்க்கவில்லை. “டேய் காட்டான்! இருடா! ஸீனா போடறே? இந்த கல்யாணம் முடியட்டும் அப்புறமா இருக்குடி உனக்கு” மனசுக்குள் கருவிக்கொண்டாள்.

அவளுக்கே அவள் மனப்போக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு வரை கல்யாணத்தை வெறுத்த அவள், அவள் அப்பா இந்த சம்பந்தத்தைப் பற்றி சொல்லியதும் ஐயோ நம்மை ஒரு வரப்பட்டிக்காட்டுல கொண்டு தள்ளப் போறாரே என்று அழுதாள். அவளா இப்போது சூர்யாவுடனான இந்த திருமணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறாள்?

மனித மனம் மிகவும் விந்தையானது. எது தனக்கு வேண்டாம் என்று முன்பு அலறி மறுத்தோமோ அதையே இன்று சீக்கிரமாக நடந்து விடாதா என்று ஏங்குவது மிகவும் வியப்பான ஒன்று தான். ஒருவேளை நமக்கு இந்த காட்டானை பிடித்து விட்டதோ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் சுபத்ரா. ச்சே ச்சே அப்படி எல்லாம் நடக்க சான்ஸே இல்லையே என்றது மனது.

ஆனால் உள்மனதின் நேர்மை குத்தியது. பொய் சொல்லாத சுபத்ரா! நீ தான் அவங்க நிச்சயத்திற்கு வந்தப்போவே பார்த்து அப்படி சைட் அடிச்சியே! இப்ப என்னவோ பிடிக்காத மாதிரி பேசறியே என்று கேள்வி கேட்டது. “ஏய் மனசாட்சி! நீ யாரோட செட்டு. எனக்கு சப்போர்ட் பண்ணாம அவனுக்கு சப்போர்ட் பண்றியே” என்று அதன் தலையில் தட்டி அடக்கினாள்.

யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சூர்யாவைப் பார்த்தாள். அன்று நிச்சயத்திற்கு வந்ததனால் பட்டு வேட்டியில் மிடுக்காகத் தெரிந்தவன், இன்று சிம்பிளான கருப்பு நிற பேன்ட்டிலும், சந்தன நிற ஷர்ட்டிலும் கம்பீரமாகத் தெரிந்தான். கருகருமீசையும் காலைச் சவரத்தில் பளபளத்த கன்னங்களுமாக ஆளைக் கிறங்கடித்தான்.

இவள் தான் வாய்பிளந்து அவனை சைட் அடித்தபடி நின்றாளே தவிர அவன் இவள் புறம் மறந்தும் திரும்பவில்லை. அவன் கவனம் எல்லாம் அவன் கையிலிருந்த அந்த பட்டுப் புடவையிலேயே இருந்தது. அவன் அந்த புடவையின் தரம் பார்ப்பவன் போல அதனை தடவிப் பார்த்தபடி நின்றான்.

‘இவருக்கு அப்ப்டியே பட்டுப்புடவையின் தரமெல்லாம் பார்க்கத் தெரியுமாக்கும். என்னவோ வாரத்துக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிய அனுபவம் மாதிரி அந்த புடவையை அலசி ஆராய்வதைப் பாரு. டேய் காட்டான்! இங்கே கொஞ்சம் திரும்பித் தான் பாரேன்’ அவனைச் சட்டியில் போட்டு வறுக்காத குறையாக மனதுக்குள் வறுத்தெடுத்தாள் சுபத்ரா.

இவளின் மனம் அறிந்தோ என்னவோ சுதர்சன் மெதுவாக “சூப்பர் செலக்சன் மாப்பிள்ளை. எங்க அக்காவுக்கு சூப்பரா இருக்கும்பா. எப்படி மாப்பிள்ளை இப்படி தேடி பிடிச்சே?” என்றான். இதற்கு அவனிடம் என்ன பதில் வரும் என்று ஆவலாக காத்திருந்தாள் சுபத்ரா. “உங்கக்கா இல்லைடா. யாருக்கு போட்டாலும் நல்லாதான் இருக்கும். கலர் அப்படி. வா போலாம்.” எனறபடி திரும்பியும் பாராமல் சுதர்சனை இழுத்தபடி சென்று விட்டான்.

அவ்வளவு நேரமிருந்த உற்சாகம் எல்லாம் காற்று போன பலூனாகிப் போயிற்று சுபத்ராவிற்கு. ‘அவ்வளவு தானா? நாம் தான் என்னவெல்லாமோ நினைத்து கற்பனையை வளர்த்துக் கொண்டோமா? போடா இவனே! உன்னை எல்லாம் பார்த்தேன் பாரு. என்னைச் சொல்லனும். காட்டான். இனி நீயா வந்து என்கிட்ட கெஞ்சினா தான் நான் உன்கிட்ட பேசறதைப் பத்தி யோசிப்பேன்.’ மனசுக்குள் சூளுரைத்துக் கொண்டாள். வாடிப் போன முகத்துடன் போய் தன் தாயுடன் இணைந்து நின்று கொண்டாள்.

“என்ன மாப்பிள்ளை, இப்படி பேசிட்ட? அந்த பிள்ளை முகமே வாடிப் போச்சே! எவ்வளவு ஆசையா பார்த்துச்சு உன்னை? இப்படி பண்ணிட்டியே?” புலம்பித் தள்ளினான் சுதர்சன். “டேய் அடங்கு! அங்கே அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. அவளுக்கு இந்த கல்யாண்த்துல இஷ்டமே இல்லையாமாம். இதுல என்னை ஆசையா வேற பார்க்கிறாங்களாக்கும்! போவியா?” என்று டண்கணக்கில் கடுப்புடன் நகர்ந்தான் சூர்யா. யாரைக் குறை சொல்ல? வாழ்க்கை என்னவெல்லாம் வைத்துக் காத்திருக்கிறதோ இவர்களுக்கு? பார்க்கலாம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here