காதலை சொன்ன கணமே 2
“இது தானா..இது தானா… எதிர்பார்த்த அந்நாளும் இது தானா…” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். சுபத்ரா வின் தோழிகள் கிண்டல் செய்வதாக எண்ணிக் கொண்டு அவள் எரிச்சலை வாரிக் கொட்டிக் கொண்டனர். திருவாளர் முத்துராமன் எல்லாரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது, அவருடைய வருங்கால மாப்பிள்ளையை நினைத்து. நண்பனுடைய மகன் தான் என்றாலும் பையனைப் பற்றி விசாரித்த வரையில் ஏகத் திருப்தி.
தன் மனைவியிடம் சூர்யாவின் பெருமை பாடினார். மேனகாவிற்கும் திருப்தியே. ஒரே மகள், அழகியும் கூட. சொந்தபந்தத்திலே கூட நான் நீ என்று போட்டி போட்டனர் சுபத்ராவைப் பெண் கேட்டு. மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற பயம், கவலை இருந்தது. ஆனாலும் கூட்டுக் குடும்பத்தில் மகள் எப்படி சமாளிப்பாளோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. பெண் பார்க்கவென்று சூர்யாவின் தாய் தந்தை வந்த போது அந்த கவலையும் அடியோடு மறைந்தது. தன் மகளை அவர்கள் தன்னைக் காட்டிலும் நன்கு பார்த்து கொள்வர் என்ற நம்பிக்கை பிறந்தது. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று மனம் நூறு முறை ப்ரார்த்தித்தது.
திடிரென வாயிலில் பரபரப்பு. முத்துராமன் “மேனா அவங்கள்ளாம் வந்துட்டாங்க பாரு. வா வா வாசலுக்குப் போகலாம்” பரபரத்தார். எல்லோரும் வரவேற்கச் சென்றனர். வழக்கமான முகமன்களுக்குப் பின் சூர்யா மற்றும் குடும்பத்தார் உள்ளே வந்தனர். வீட்டைச் சுற்றிப் பார்வையை ஓட்டினான் சூர்யா. “என்ன மாப்பிள்ளை! மாமனார் வீடு எப்படி இருக்குனு பார்க்குறியா? குடுத்து வச்சவன்டா நீ. ஹ்ம்ம் என்தலையில் பொறந்த வீடு புகுந்த வீடு எல்லாம் ஒன்னுதான்னு எழுதியிருக்கே” அனல்மூச்சை பெருமூச்சாக விட்டபடி பொறுமினான் சுதர்சன்.
“இங்கே யாரோ இவுகள கட்டிக்கிறதுக்கு ஒத்தக் காலுல நிக்கிறா மாதிரியே பேசறது. நினைப்பு தான் பொழப்பு கெடுக்குமாம்” என்றபடியே அண்ணனுடன் நெருங்கி நடந்தாள் சுமித்ரா. “அப்படியெல்லாம் சொல்லி என்னோட ஹார்ட்ட ஹர்ட் பண்ணிடாதே தாயே. நீயில்லாம என்னால் எப்படி வாழ முடியும்?” ரொம்பவே நாடகத்தனமா வசனம் பேசினான் சுதர்சன். “டேய் நீங்க ரெண்டு பேரும் அடங்க மாட்டீங்களாடா? இங்க வந்தும் உங்க சேட்டை தாங்கலியே” சூர்யா சுதர்சனின் கையைப் பிடித்து இழுத்தபடி நகர்ந்தான்.
எல்லோரும் அந்த அகன்ற ஹாலின் ஸோஃபாக்களில் செட்டிலாக சூர்யாவின் பார்வையோ அலை மோதியது. அவனுக்குள் பல கேள்விகள் மற்றும் உணர்ச்சிப் போராட்டம். ஒரு வேளைத் தன்னைப் போல் அந்த பெண்ணும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு தான் இந்த பந்தத்தில் தள்ளப்படுகிறாளோ? தன்னைப் போன்ற கிராமத்துவாசியைப் பட்டணத்தில் படித்த பெண் எப்படி மணக்கச் சம்மதிப்பாள்? எப்படித் தெரிந்து கொள்வது? அவளிடம் பேச முடியுமா? யாரிடம் கேட்பது?.
“மாப்பிள்ளை பொண்ணு இப்போ வந்துரும். ஓவரா அலையறா மாதிரி காட்டிக்காதே” காதைக் கடித்தான் சுதர்சன். “மவனே அறை வாங்கப் போற எங்கிட்ட” அடிக்குரலில் சூர்யா தன் கடுப்பை வெளிப்படுத்தினான்.இவர்கள் ஒருவர் காதை ஒருவர் கடித்துக் கொள்வதைப் பார்த்த முத்துராமன் தன் மனைவியிடம் சைகை செய்தார். மேனகாவும் கணவனின் குறிப்பறிந்து சுபத்ராவை அழைத்து வரச் சென்றார்.
பட்டுச் சேலை சரசரக்க மெல்லிடையாள் அன்னநடை பயில நடந்து வந்தாள் அன்னையுடன். சூர்யா கீழே குனிந்தபடி ஏதோ யோசனையில் இருந்தான். அவனுடைய விலாவில் இடித்த சுதர்சன் “அங்க பாருடா மாப்பிள்ளை. தங்கச்சி வந்தாச்சு. கீழே என்னத்த பார்த்திட்டிருக்க?” என்றான். மெல்ல நிமிர்ந்து பார்த்த சூர்யாவுக்கு மூச்சை அடைத்தது. என்ன அழகு! இப்படி ஒரு அழகி எப்படி தன்னை மணக்க சம்மதிப்பாள்?
இவ்வளவு நேரம் வேண்டாம் என்று தோன்றிய திருமணம் இப்போது பரவாயில்லை பண்ணிக்கலாம் என்று தோன்றத் தொடங்கியது. சுமித்ரா தனது வருங்கால அண்ணியினருகில் சென்று அமர்ந்து கொண்டு “அண்ணி கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க. எங்க அண்ணா எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று முகவாய் பிடித்து நிமிர்த்தினாள். ஒருவித தயக்கத்துடனே தான் நிமிர்ந்து பார்த்தாள் சுபத்ரா. எதிரே இருந்த ஸோஃபாவில் ஆஜானுபாகுவாக பார்த்தவுடன் மனதில் பதியும் உருவமாக அமர்ந்திருந்தான் சூர்யா.
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய வெட்கம் வந்தது. தலையைக் குனிந்து கொண்டாள். மனதுக்குள் ஒரு சேர ஓராயிரம் ரஹ்மான்கள் இசையமைக்க எங்கோ பறந்த உணர்வு. தன்னைப் போலவே அவனும் உணருகிறானா தெரியவில்லையே! எப்படித் தெரிந்து கொள்வது. இதுவரை இந்த திருமணம் தேவை இல்லை என்று யோசித்தவள் இப்போது அவனுக்குத் தன்னைப் பிடிக்க வேண்டுமே என்று தோன்றத் தொடங்கியது.
எப்படித் தெரிந்து கொள்வது? குழப்பமும் வெட்கமும் போட்டி போட்டது. “கண்ணு உனக்கு எங்க புள்ளகிட்ட ஏதாவது பேசனும்னா நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசிட்டு வர்றீங்களா?” சரசு கேட்டதும் அவர் சுபத்ரா விற்கும் தெய்வமாக தோன்றினார். ஆனால் அப்பா எதுவும் மறுத்து சொல்லுவாரோ என்று அவர்களைப் பார்க்க அவரும் “சுபா நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் நம்ம தோட்டத்தை காட்டுமா. அப்படியே உங்களுக்கு எதாவது பேச வேண்டியிருந்தா பேசி தெளிவுபடுத்திக்கோங்க.” என்றார்.
சுபத்ராவுடன் அவள் தோழி பவானியும் சூர்யாவுடன் சுதர்சனும் பின்பக்க தோட்டத்தை நோக்கி நடந்தனர். பினபுறத்து தோட்டம் பச்சைப் பசேலென கண்ணைப் பறித்தது. தென்னை மரங்களும் மாமரங்களுமாக குளிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது. “டேய் உங்க மாமனார் வீட்ல வெளிலேருந்து காயே வாங்க மாட்டாங்க போலடா. உன்னை மாதிரியே அவரும் மரம் செடின்னு தான் இருப்பார் போல” என்றான் சுதர்சன். “காசு இருக்கிறவங்க தோட்டக்காரனை வச்சுப் பாத்துப்பாங்கடா. அவர் ஏன் தோட்டவேலை எல்லாம் செய்ய போறாரு.” என்றான் சூர்யா.
அங்கே மரநிழலில் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் சென்று சூர்யா அமர்ந்து கொண்டான். சுதர்சன் மரங்களைப் பார்ப்பது போல மெதுவாக தோட்டத்தின் மறுபுறத்திற்கு சென்றான். பவானியுடன் வந்த சுபத்ரா சூர்யா அமர்ந்திருந்த கல்பெஞ்சின் மறுமுனையில் அமர்ந்தாள். பவானி மெதுவாக அங்கிருந்து சற்று தள்ளி சென்று நின்று கொண்டாள். இருவரும் சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. மற்றவர் பேசுவார் என்று இருவருமே காத்திருந்தனர்.
இப்படியே வெகு நேரம் அமர இயலாது என்பதால் மெதுவாக “உங்களுக்கு இந்த தோட்டக்கலையில எல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்கா?” என்றான் சூர்யா. வேறெப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. “அப்பாக்கு தான் இதுல எல்லாம் ஆசை. எனக்கு தோட்டம் பிடிக்கும் ஆனா இதில் எல்லாம் நான் எதுவும் செஞ்சதில்லை” தயக்கத்துடன் சுபத்ரா சொன்னாள். ‘ஹப்பா என்ன குரல்டா. சூர்யா நீ இப்படியா ஃப்ளாட்டாவ?’ அவன் மனசாட்சி சிரித்தது.
‘டேய் சூர்யா இதுதான் சான்ஸ். இப்போவே கேட்டுரு. இவங்க பிடிச்சு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்களா, இல்லை அவங்க அப்பா அம்மா கட்டாயத்துக்காக ஒத்துகிட்டாங்களான்னு தெளவுபடுத்திக்கோ’ உள்ளுக்குள் உட்கார்ந்திருந்த மனசாட்சி சொல்ல தைரியத்தை வரவழைத்தபடி “ஏங்க உங்க அப்பா ரொம்ப ஃபோர்ஸ் பண்றாரா இந்த கல்யாணத்துக்கு?” என்றான். ‘இவன் என்ன இப்படி கேட்கிறான் என்பதாய் பார்த்தவள் புரியாமல் முழிக்க “இல்லைங்க, அது வந்து உங்களுக்கு இந்த கல்யாணத்தில் முழுமனசோட சம்மதம் தானே?” தட்டுத்தடுமாறி கேட்டு வைத்தான்.
என்ன தான் தைரியமாக கேட்டு விட்டாலும் உள்ளுக்குள் அவள் இல்லை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவாளோ என்ற பயம் வேறு மனசுக்குள் பேயாய் அடித்துக் கொண்டது. என்ன சொல்லப் போறாளோ என்ற டென்ஷன் வேறு. சுபத்ராவோ இவன் ஏன் அப்படிக் கேட்டான் என்பது புரியாமல் ‘சரி நம்ம படிக்கனும்கிற ஆசையை இவன்கிட்ட சொன்னா இவன் நமக்கு மேற்படிப்புக்கு உதவுவானோ என்ற நினைப்பில் “எனக்கு இப்போ உடனே கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா அப்பா தான் நல்ல இடம், நல்ல மனுஷங்கன்னு சொல்லி ஏற்பாடு பண்றாரு.” என்றாள். சூர்யாவுக்கு எதிலோ தோற்றுப் போனது போல் இருந்தது. ‘இவளுக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை, இவள் அப்பாவின் கட்டாயத்திற்கு கட்டுப்பட்டு தான் இவள் சம்மதித்திருக்கிறாள்.’ என்று எண்ணிக் கொண்டான்.
அவள் இப்போ கல்யாணம் வேண்டாம் என்று தான் சொன்னாளே ஒழிய உன்னுடனான இந்த கல்யாணமே வேண்டாம் என்று சொல்லவில்லை என்பதை யார் அவனுக்குப் புரிய வைக்க? “சரி இப்போ நான் உள்ளே போய் அவங்ககிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி நிறுத்திடறேன்” என்றான். முகத்தில் அடிவாங்கிய உணர்வு சுபத்ராவிற்கு. இதுவரைக்கும் எந்த ஆண்மகனிடமும் அவள் இப்படி பக்கத்தில் அமர்ந்து பேசியதெல்லாம் கிடையாது. சிட்டியில் படித்திருந்தாலும் சுபத்ரா ரிஸர்வ்ட் டைப் என்று சொல்லப்படும் அமைதியான குணம். அனாவசியமாக யாருடனும் எதுவும் அவளாகப் போய் பேசியதில்லை.
இன்று திருமண நிச்சயிக்கப் போகும் நிலையில் தனக்கு என்ன தோன்றியது என்று சொல்ல வந்தால் இவன் என்ன இப்படி பேசுகிறான். இதற்கே இப்படி என்றால் இவனுடன் காலம் முழுதும் எப்படிக் கழிப்பது? அப்பா அவசரப்பட்டு விட்டாரா? இப்போது என்ன செய்ய? கேள்விகள் அம்புகளாக மாறி அவளைத் தாக்க செய்வதறியாது முழித்து நின்றாள்.
கலக்கத்துடனே நிமிர்ந்து பார்த்தால் சூர்யா அங்கிருந்து அகன்றிருந்தான். அவன் நகர்வதைக் கண்ட சுதர்சனும் விரைந்து அவனுடன் இணைந்து கொண்டான். பவானி சுபத்ராவை நெருங்கி “என்னடி கேட்டாங்க? ரெண்டு பேரும் ரொம்ப நேரமா ஒரே ரொமேன்டிக் லுக்கு தான் போ” அலுத்துக் கொண்டாள். ‘இவ வேற நேரம் காலம் தெரியாமல் கடுப்பேத்தறாளே’ என்று தோன்றியது சுபத்ராவிற்கு. அவளை முறைத்தபடி நடந்த அத்தனையும் அவளிடம் சொன்னாள். “இப்போ உள்ளே போய் கல்யாணத்தை நிறுத்திருவாங்களோ பவா? ச்சே நானும் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாம். இப்போ என்னடி பண்றது?” பாவமாக கேட்டாள்.
“சிக்கிட்டியா சுபா? உனக்கு அவங்களைப் பிடிச்சிறுச்சு தானே. அதான் நிறுத்திருவாங்களோன்னு பயப்படற” என்றாள் பவா என்றழைக்கப்படும் பவானி. ஊரிலிருக்கும் அத்தனை கடவுளையும் துணைக்கு அழைத்து இந்த திருமணத்தை நிறுத்தக்கூடாது என்று வேண்டியபடி உள்ளே சென்றாள் சுபத்ரா. அங்கே சூர்யாஅவன் தந்தையிடம் ஏதோ சொல்ல அவர் அவனை ஒருமுறை ஊன்றிப் பார்த்துவிட்டு முத்துராமனை அழைத்து ஏதோ சொன்னார். முத்துராமனும் தலையை ஆட்டிக் ஆட்டி கேட்டுக் கொண்டார். இங்கு சுபத்ரா வின் வயிற்றுக்குள் பயம் பந்தாய் உருட்டியது.
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிச்சய பத்திரிக்கை படிச்சிறலாமா?” என்று சரசு கேட்க மேனகா சந்தோஷமாக அதற்கான ஏற்பாட்டினைச் செய்யத் தொடங்கினார். ‘இங்க என்ன நடக்கிறது? இவன் திருமணத்தை நிறுத்தப் போறான்னு தானே நினைச்சோம். இல்லையா?’ என்றெண்ணியபடி அவனைப் பார்க்க அவனோ இவள் பக்கம் திரும்பி கூடப் பார்க்காமல் நிச்சயப் பத்திரிகை வாசிப்பதை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இவனுடனான வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற குழப்பத்தில் சுபத்ரா ???
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…