காதலை சொன்ன கணமே 12
தனக்குத் தானே பேசிக் கொள்ளும் கணவனையே வெறித்துப் பார்த்த சுபத்ரா அவன் மெல்ல இவளின் முன்னுச்சி முடியினை ஒதுக்க கைநீட்டவும் கைகளைத் தட்டிவிட்ட படி அவனையே வெறித்துப் பார்த்தாள். அவளுக்கு இருந்த கோபத்தை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் தன் காரியத்தை சாதித்துக் கொண்ட இந்தக் கள்ளனை என்ன செய்யலாம் என்று எண்ணினாள்.
அதற்காக நடந்த விஷயத்தில் தனக்கு பங்கில்லை என்றோ அதற்கு தான் உடன்பாடில்லாமல் ஏற்றுக் கொண்டதாகவோ அர்த்தம் இல்லை. ஆனால் தன் மனைவி கோபமாக இருக்கிறாள் என்றால் அவளுக்கு எதனால் கோபம் என்று கேட்டு விஷயத்தை சரிசெய்யும் எண்ணமின்றி தன் காரியம் சாதிக்கும் நடப்பு தான் பிடிக்கவில்லை.
சுபத்ராவிற்கு சூர்யாவை ரொம்பவே பிடித்தது. எதையும் உணர்ச்சிவசப்பட்டு நோக்காமல் நிதானமாக யோசித்து செய்யும் அவன் பழக்கம் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன் விஷயத்தில் மட்டும் ஏன் அந்த நிதானம் இல்லை இவனுக்கு. இது என்ன இவர்களுக்குள் நடக்காமலா போய்விடும்? இன்று இல்லை என்றால் நாளை.
இப்படியே இதை விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். தனக்கு பழக்கமில்லாத சூழலில் தான் தன்னுடைய வாழ்க்கை இனி எனும் போதே சுபத்ரா பல விஷயங்களைப் பற்றி நன்கு யோசித்து முடிவு செய்திருந்தாள்.
ஒற்றைப்பிள்ளையாக இதுவரை பாதிகாலத்தை விடுதியிலே கழித்த தான் இனி பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழப் போவதால் அனைவரையும் அனுசரித்துப் போக முயற்சிக்க வேண்டும். அதே சமயம் தனக்குச் சம்மதமில்லாத ஒரு விஷயத்தை யாருக்காகவும் ஒத்துக்கொள்ளக் கூடாது என்று.
தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு முடிந்தளவு உதவ வேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் இந்தக் குடும்பத்தில் சிறு மனக்கசப்புகூட தன்னால் ஏற்பட அனுமதிக்க கூடாதென்றும் நினைத்திருந்தாள். எப்படி சூர்யா தன்னுடைய அப்பா அம்மாவை மதிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோமோ அதைப் போல தானும் அவனது தாய் தந்தையை தன்னவர்களாக நினைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
எல்லாவற்றுக்கும் மேல் தன் இல்லற வாழ்வை ஆரம்பிக்கும் முன் தன்னவனிடம் மனம்விட்டுப் பேசி ஒரு நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதன்பின் தான் வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று உறுதியாக எண்ணியிருந்தாள்.
ஆனால் நம்ம ஹீரோ தான் எங்கே நாளை என்பதே இல்லவே இல்லை என்பது போல் இன்று நடந்து கொண்டாரே. ஒருபக்கம் குழந்தை போல் காரியம் சாதித்துக் கொண்ட தன்னவனின் மேல் பாசம் தோன்றினாலும் மறுபுறம் இதென்ன பழக்கம். சந்தோஷமோ அல்லது கோபமோ இருவரும் இணைந்த மனநிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டாமா.
நீ எப்படி இருந்தால் என்ன? எனக்கு என் வேலை ஆக வேண்டும் என்பதாய் என்ன பழக்கம் இது? இதற்கு பேசி ஒரு முடிவெடுக்காவிட்டால் பின்னாட்களில் கஷ்டமாகிப் போகும் என்பது உறுதியாகத் தெரிந்தது அவளுக்கு.
“என்ன ஜில்லு!! மாமாவ இப்படி பார்க்கிற?” என்று கேட்ட சூர்யாவிடம் இருந்து சற்று விலகி அமர்ந்து கொண்டவள் “நாம கொஞ்சம் பேசிக்கலாமா?” என்றாள். அதுவரை சிரித்தபடி இருந்த சூர்யாவுக்கு ஏதோ தோன்ற நிமிர்ந்து அமர்ந்து கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
தான் ஏதோ தவறு செய்து விட்டோம் என்று புரிந்தது தான் சூர்யாவுக்கு. ஆனால் என்ன என்று புரியவில்லை. “என்ன சுபாம்மா! என்ன ப்ரச்சனை?” என்றான். “நாம் சில விஷயங்களை பற்றிப் பேசிக் கொண்டால் நம்ம வாழ்க்கை ப்ரச்சனை இல்லாம போகும்னு தோணுது” என்றாள் சுபத்ரா.
அவள் பேசுவது முழுவதுமாகப் புரியவில்லை என்றாலும் தான் இன்று அவசரப்பட்டு விட்டோம் என்பதும் புரிய “என்னை மன்னிச்சுரு ஜில்லு! நான் வந்து ….. எதிர்பார்க்கல…… அது….. வந்து….முதல் தடவையா?….. அதனால்……” இழுத்து இழுத்து அவன் சொல்ல, அவன் சொல்ல வந்த விஷயம் புரிய சுபத்ராவுக்குமே கன்னங்கள் சிவந்தன.
பல்லைக் கடித்தபடி பார்வையை வேறு புறம் திருப்பி தன்னிலைக்கு வந்து பின்பு அவனிடம் “இங்க பாருங்க! நாம் ரெண்டு பேரும் வேறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்தவங்க. நம்மை இந்த கல்யாணம் என்கிற பந்தம் தான் இணைச்சிருக்கு. நாம் இனி எது செஞ்சாலும் அது ரெண்டு பேரோட வாழ்க்கையையும் பாதிக்காத வண்ணம் பார்த்து தான் செய்யனும். புரிஞ்சுதா?” என்றாள்.
அழகான மனைவி, அன்பான துணைவியும் கூட, அவள் பேசுவதை கேட்கவே நன்றாக இருக்க அவன் வேறு பேசாமல் தலையை மட்டும் ஆட்டியபடி அவளையே பார்த்திருந்தான். “எனக்கு இங்கே உண்டான பழக்க வழக்கங்கள் புரிய கொஞ்சம் நாள் எடுக்கும். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா கத்துக்கறேன். அதுக்கான நேரமும் ஒத்துழைப்பும் வேணும் சரியா?” குடை ஜிமிக்கி அசைய அழகாக இருந்தது சுபத்ரா கேட்ட விதம். சரியென்பதாய் தலையசைத்தான் சூர்யா. அவள் சொல்வதில் எந்த தவறும் இல்லையே.
“எங்கப்பா அம்மாவை நீங்க மதிக்கனும்னு நான் எப்படி நினைக்கிறேனோ அதே போலத்தான் நீங்களும் எதிர்பார்ப்பீங்க? நாம் ரெண்டு பேரும் ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவானவங்க. அதனால் நான் இந்த குடும்பத்தைப் பிரிச்சிருவேனோ அப்படினு நீங்க பயப்படவே வேணாம். சரியா?” என்றாள்.
‘இவள் எனது தேவதை. எவ்வளவு தெளிவான சிந்தனை. தான் கூட இப்படி யோசிக்கவில்லையே. தன் குடும்பத்தை இவள் பிரிக்கக் கூடாதென யோசித்தேனே தவிர இவளுமே இவள் பெற்றோருக்கு ஒரே மகள் எப்படி பிரிந்து இருப்பாளென சிந்திக்கவில்லையே’ என்ற குற்றவுணர்வு தோன்றியது சூர்யாவுக்கு.
“கரெக்ட் தான் கண்ணம்மா. நானும் அப்படித்தான் யோசித்திருக்கனும். இனி அப்படியே செய்யலாம்” என்றான் சூர்யா. “அடுத்து முக்கியமான விஷயம். நம்ம வீட்டிலயும் வயசுப் பொண்ணு இருக்கா. அவளை வச்சுகிட்டு வெளியில் என்னைச் சீண்டறதோ விளையாடுவதோ கூடாது. அவளுக்கு நாம் தான் ரெண்டாவது அம்மா அப்பா. அவளைப் பொறுப்பான முறையில் நல்லபடியா கல்யாணம் செஞ்சு கொடுக்கனும். புரியுதா?” என்றாள் அவன் இதயராணி.
‘இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்ற நிலை தான் சூர்யாவுக்கு. தன் தங்கையை அவள் மகவாகப் பார்த்து அவளது திருமணத்தைப் பற்றிக் கூட யோசிக்கும் இவளை தன்னுயிருக்கும் மேலாகவே நேசிக்கத் தொடங்கினான் சூர்யா.
“நம்ம ரெண்டு பேர்ல யாருக்கு கோபம் வந்தாலும் சரி முதல்ல பேசித் தீர்த்துக்கலாம். சரியா. இந்த ரூமுக்குள்ள வரும்முன் நம்ம கோபங்களை பேசி தீர்த்திடனும். இந்த ரூம் நம்ம சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்துக்கிற இடமாக இருக்கட்டும். சரிதானா?” என்றாள்.
சூர்யாவின் மனதில் சுபத்ரா உயர்ந்து கொண்டே இருந்தாள். தான், திருமணம் என்றால் எதற்காக பயந்து போய் வேண்டவே வேண்டாம் என்றோமோ அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதாய் இவள் இருக்கின்றாளே. வாழ்க்கை என்பது இவ்வளவு தான். இதில் போய் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொண்டு ப்ரச்சனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை கடினமாக்கிக் கொள்கிறார்களே என்று தோன்றச் செய்தாள் அவன் தேவதை.
“எனக்கு சிட்டி வாழ்க்கை பிடிக்கும் தான். ஆனால் அதுக்காக அங்கே தான் போகனும்னு சொல்வேன்னு எதிர்பார்க்காதீங்க. எனக்கு இந்த ஊர், இங்க இருக்கிற நம்ம வீட்டு மனுஷங்க எல்லாரையும் பிடிச்சிருக்கு. அவசியம் ஏற்படாத வரைக்கும் நான் இங்கே எல்லார்கூடவும் சந்தோஷமா இருப்பேன். அதனால் இவ நம்மளை நம்ம குடும்பத்திலேருந்து பிரிச்சிருவாளோங்கிற பயம் வேணாம். சரியா!” என்றாள்.
“ஏன் ஜில்லு!! நீ மட்டும் தான் இப்படியா? இல்லைனா எல்லா பொண்ணுங்களும் இப்படித்தானா? வாழ்க்கையை இவ்வளவு ஈஸியா எடுத்துக்கறியே” என்றான் சூர்யா. “எல்லாரும் இப்படித்தான். என்ன!! நாங்க உங்களுக்கு மரியாதை குடுக்கனும்னு நினைக்கிற நீங்க எங்களுக்கு அதே மரியாதை குடுக்கிறதில்லை. எங்களை நீங்க சக மனுஷியாக பார்க்க ஆரம்பிச்சா அப்புறமா எங்கிருந்து ப்ரச்சனை வரும்?” என்றாள் சாதாரணமாக.
சரிதானே! தானே இவ்வளவு நேரம் அவள் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், தன் குடும்பத்தை பிரிக்கக்கூடாது என்றெல்லாம் தான் மோசித்தோமே தவிர அவளது குடும்பத்தை பற்றியோ அவளது விருப்பு வெறுப்புகளை பற்றியோ யோசிக்கவே இல்லையே.
சுரீலென்று உரைத்தது சூர்யாவிற்கு. தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்! அவள் ஏதோ கோபத்தில் இருந்தாளே. அவளிடம் என்னவென்று கூடக் கேளாமல் தன் ஆசையைத் திணித்து விட்டோமே என்று குன்றிப் போனான்.
“ஜில்லு!!! என்னை மன்னிச்சிடு!! தப்பு பண்ணிட்டேன். நீ ஏதோ கோபத்தில் இருந்தியே. எதுக்கு கோபமா இருந்த?” என்றான். அதுவரை நடந்த அத்தனை விஷயங்களையும் அவள் சொல்ல சூர்யா கலகலவெனச் சிரித்தான். ‘லூசாப்பா நீ’ என்பதாய் முறைத்துப் பார்த்தாள் சுபத்ரா.
“என்ன ஜில்லு!! மத்ததெல்லாம் எவ்வளவு தெளிவா யோசிக்கிற நீ, என் விஷயத்துல இப்படி கோட்டை விட்டுட்டியே. என்னைப் பார்த்தா மன்மதராசா மாதிரியா இருக்கு? அந்த மஞ்சு ஸ்கூல் படிக்கும் போது வந்து லவ்வுனு சொன்னப்போவே எனக்கு சரியான உதறல் தான். தீப்தின்னு என்கூட ஒரு பொண்ணு படிப்பதே இப்போ தான் தெரியும். நானெல்லாம் அதுக்கான ஆளில்லை ஜில்லு. எனக்குத் தெரியும் எங்கய்யா எனக்கு அம்சமா தேவதை மாதிரி பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பாருனு. அதுக்குள்ள என்ன அவசரம்? நான் இந்த லவ்வுக்கெல்லாம் செட்டே ஆக மாட்டேன் ஜில்லு” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி அவளைப் பார்த்துச் சொன்னான்.
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். இந்த மூஞ்சிக்கு எங்களை விட்டால் வேறு யாரும் வாழ்க்கை கொடுக்க மாட்டாங்கனு. இருந்தாலும் அந்த மஞ்சு சொன்னப்போ கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்த்துச்சு தான். என்ன இருந்தாலும் என்னோட காட்டான் எனக்கு மட்டும் தான்னு நினைக்கிறது தப்பா?” என்றாள் மிதப்பாக.
“தப்பே இல்லை ஜில்லு!! நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்தக் காட்டான் உனக்கு மட்டும் தான். என்னோட காதல் உனக்கு மட்டும் தான் சொந்தம். இந்த உயிருள்ளவரை நான் உனக்காவன் மட்டும் தான்” என்ற சூர்யா அவளை உரிமையாக அணைத்துக் கொண்டு தன் மீது சாய்த்துக் கொண்டான்.
இந்தக் கணம், இவர்கள் காதலைப் பகிர்ந்து கொண்ட கணம் இவர்களுக்கான உலகத்தை உருவாக்க இவர்கள் முயலும் நேரம் பொன்னானது. இவர்களது காதலை சொன்ன கணம் இவர்களின் வாழ்க்கையின் இனிய தொடக்கம். இந்த சந்தோஷமும் காதலும் என்றென்றும் இவர்களது வாழ்வில் நிரம்பி வழிய வாழ்த்தி நாம் விடைபெறுவோம் மக்களே.
நன்றிகளுடன் உங்களின் நான் ????
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…