காதலை சொன்ன கணமே 10

எங்கோ விட்டத்தை வெறித்தபடி அமரந்திருந்த சுபத்ராவின் மனதில் பந்தயக்குதிரையாய் எண்ணங்களின் ஓட்டம். எதனால் தன்னை அவன் திட்டினான், எங்கே சென்றான், எதுவும் விளங்கவில்லை. தன்னிடம் என்னவோ அவன் சொல்லிவிட்டு சென்றதைப் போல் அனைவரும் தன்னிடம் வந்து “சூர்யா எங்கே?” என்று கேட்கும் போது ஆத்திரமாக வந்தது.

‘இவனை என்ன செய்தால் தகும் என்று தோன்றியது. ‘நீ வாடி இன்னிக்கு வீட்டுக்கு. இருக்கு உனக்கு. இதுவரை யாருமே என்னிடம் குரலை உயர்த்தி கூடப் பேசியதில்லை. இவன் என்னிடம் என்னவென்று கூட சொல்லாம கத்திட்டுப் போறானே. டேய் காட்டான் போனால் போகுதுனு பாவம் பார்த்து கல்யாணம் பண்ணா ஓவரா பண்றியே. இருக்கட்டும் இன்னிக்கு வரட்டும் வந்து பாருடா வட்டப் பாறைக்குனு சொல்ல வேண்டியது தான்.’ மனசுக்குள் கறுவியபடி நடைபோட்டாள் அறைக்குள்.

மனசாட்சி இடித்தது அவளுக்கு. ஏன் சுபா பொய் சொல்ற? போனால் போகுதுனு பார்த்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? ஆளைப்பார்த்ததும் ஃப்ளாட்டாகிப்போனியே. இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு லென்த்தியா டயலாக்?’ என்று இடித்தது.

வெளியே சூர்யாவும் சுதர்சனும் உள்ளே போகலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்திய படி நின்றிருந்தனர். சுதர்சன் மெதுவாக சூர்யாவிடம் “டேய் மாப்பிள்ளை. நீ போய் என்னனு பாரு. ஏதாவதுனா என்னைக் கூப்பிடு, நான் ஓடி வந்திருவேன். ஆனா மாப்பிள்ளை, என்ன கோவம் வந்தாலும் கையை மட்டும் ஓங்கிராதே. பாவம் அந்தப்புள்ள. பச்சமண்ணு. சரியா” என்று நகரப் பார்த்தான்.

சூர்யாவோ “அடேய் சுடர். எங்கேடா என்னை மட்டும் விட்டுவிட்டு நீ தப்பிக்க பார்க்குற? என்கூட வா. ஒருவேளை அவ அழுது கிழுது வைச்சா சமாளிக்கனும்ல. வா என்கூட” சுதர்சனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இழுத்தான். “என்னண்ணா ரெண்டு பேரும் இன்னும் உள்ள போலயா? இங்க என்ன பண்றீங்க? ஆமா உன் ரூமுக்கு போறதுக்கு எதுக்கு இந்த அட்டாச்மெண்ட் உனக்கு?” சுதர்சனை ஓரப்பார்வை பார்த்தபடியே கேட்டாள் சுமித்ரா.

“இந்தா சொல்லிட்டாங்கள்ள கலெக்டரம்மா. போப்பா போய் உங்க வீட்டம்மாவ சமாளி. என்னை ஆளை விடுங்க. நான் பாவம். காலைல நீ உருப்படியா எந்த சேதாரமும் இல்லாம வெளில வந்தா பார்க்கலாம். வரட்டா?” என்றான் சுதர்சன். சூர்யாவோ அவன் பிடியை விடாமல் “இருடா அப்புறமா போகலாம். ஏன்மா சுமி உங்கண்ணி ரொம்ப அழறாளா? ஏதாவது சொன்னாளா?” என்றான் சுமித்ராவிடம் படபடப்புடன்.

இதுவரை கெத்தாகவே சுற்றிய தன்‌ அண்ணன் இப்போது பாவமாக கேட்பதைப் பார்த்து சுமித்ராவிற்கு சிரிப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாக இருந்தது. “பாவம் அண்ணா. ஏன் இப்படி பண்ணினா. போ போ போய் என்னனு பாரு.” அவனது கேள்விக்கான பதிலைச் சொல்லாமல் அவனை அறைக்கு இழுத்துச் சென்றாள். சூர்யா தன் இன்னொரு கையில் பிடித்திருந்த சுதர்சனின் கைகளை விடாமல் இழுத்துக் கொண்டு சென்றான்.

இவர்கள் அறை வாயிலை அடைந்ததும் சுமித்ரா சூர்யாவை உள்ளே தள்ளிவிட்டு சுதர்சனை தடுத்து நிறுத்தினாள். அவனிடம் “அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. அங்கே எதுக்கு இலவச இணைப்பா நீங்க போறீங்க?” என்றாள். “அம்மா தாயே உங்க நொண்ணன் தான் என்னை இழுத்துட்டு போனான். எனக்கொன்னும் ஆசையில்லை. ஆளவிடுங்கடா சாமி. என்னவோ எங்களுக்கு வேற வேலையில்லாத மாதிரி பேச்சைப் பாரேன்” என்றான் முறுக்கிக் கொண்டு.

“சரிதான் ஜில்லா கலெக்டரே! போங்க போங்க போய் மக்களுக்கு சேவை செய்யுங்க. இந்தப் பேச்சு மட்டுமில்லைனா உங்களையெல்லாம் யாரு பார்ப்பாங்களாம் அத்தான்” என்றாள். “மகாராணி பார்ப்பீங்கள்ள. அது போதும் எனக்கு. வேற யாரு பார்க்கனும்” என்றான் அவளைப் பார்த்து மந்தகாசப் புன்னகையுடன். சுமித்ரா வெட்கத்துடன் ஓடியே போனாள் அங்கிருந்து.

அறைக்குள் தள்ளப்பட்ட சூர்யா வெட்டுப்பட நிறுத்தப்பட்ட ஆடுபோல திருதிருவென முழித்தான். ஒருநிமிடம் சுதாரித்து அறையைச் சுற்றி பார்வையை ஓட்டினான். சன்னலோரமாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுபத்ரா. அந்தப் பக்கமாக திரும்பி இருந்ததால் இவள் அழுகிறாளா என்று கணிக்க முடியவில்லை.

‘ரொம்ப அழுதுட்டாளோ? எப்படி சமாளிக்க? என்னனு சொல்ல? ஐயோ முதல் தடவையே இப்படியா? முன்னப்பின்ன இப்படியெல்லாம் சமாதானப்படுத்தி பழக்கம் வேறு இல்லையே. இவ என்ன சின்னபிள்ளையா இருக்காளே. இதுக்கெல்லாமா அழுவாங்க? கருப்பராயா! காப்பாத்துப்பா. இன்னிக்கு ராத்திரி மட்டும் ஒப்பேத்திட்டா நாளைக்கு இவளை உன் கோவிலுக்கு தள்ளிட்டு வரேன்பா’ எல்லா தெய்வங்களையும் துணைக்கழைத்தான் சூர்யா.

அறைக்குள் நிழலாடுவது தெரிய சுபத்ரா நிமிர்ந்து அமர்ந்தாள். வந்திருப்பது இவன் தான் என்று புரிந்து போயிற்று. ‘வாடி மாப்பிள்ளை! ஜில்லுனா கூப்பிட்ட என்னை? இரு இன்னிக்கு காட்டறேன் இந்த ஜில்லு யாருன்னு’ நறநறவென பற்களைக் கடித்தபடி இருந்தாள்.

நிலவரம் கலவரமாகப் போவது தெரியாமல் நம்ம சூர்யா “ஹ்க்கும்” என்று தொண்டையை செறும, அவளிடம் எந்த அசைவும் இல்லை. கேட்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டு இன்னும் சற்று பலமாகவே செறுமினான். அப்போதும் அவளிடம் எந்த அசைவுமின்றி போக சூர்யாவுக்கு அடுத்து என்ன செய்ய என்று புரியவில்லை.

மெல்ல பூனை நடை நடந்து சுபத்ராவின் முன் சென்று நின்றான். அவளோ வெளியே ஒரு உணர்ச்சியற்ற வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். “ஜில்லு!!!!! சாப்பிட்டியா?” என்றான் சற்றே பணிந்த குரலில். பதிலே இல்லை. மெதுவாக அவளுடைய கைகளை பற்றினான். மெல்ல பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

‘மீ பாவம். கோவப்படாதே என்னிடம்’ என்பதாய் ஒரு அப்பாவிப் பார்வை பார்த்தான் சூர்யா. அவனிடம் எதுவும் பேசாமல் பார்வையை பழையபடி வெளியே செலுத்தினாள். “ஜில்லு! எதுக்கு அழுத? என்னை எல்லாரும் நல்லா திட்டினாங்க தெரியுமா? இதுவரைக்கும் எங்க ஐயாவும் அம்மாவும் திட்டினதே இல்லை. இன்னிக்கு எங்கம்மாவுக்கு என்‌மேல ரொம்ப வருத்தம். சொல்லு ஜில்லு, எதுக்கு அழுத?” என்னவோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாய் இருந்தது அவன் பேச்சு.

சட்டென்று எழுந்தவள் விடுவிடுவென அறை வாயிலை நோக்கிப் போனாள். இவள் வெளியே போனால் அடுத்து என்ன ப்ரச்சனை வருமோ என்று பயத்தில் சூர்யா “அவசரப்படாத ஜில்லு. எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம். பேசினா தீராத ப்ரச்சனையே இல்லை. ப்ளீஸ் இங்க வா” என்றான். அவன் பேசவே இல்லை என்பது போல அவள் சென்று அறை வாயிலில் நின்று பின் திரும்பிப் பார்த்தாள். பின்பு மெதுவாக அறைக்கதவை மூடி தாளிட்டு அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டாள்.

சூர்யாவையே முறைத்துப் பார்த்தபடி நின்றாள் சுபத்ரா. ‘இவ எதுக்கு இப்போ கதவை தாளிட்டுவிட்டு இப்படி முறைத்துக் கொண்டிருக்காளோ தெரியலையே! சீரியல் ரொம்ப பார்ப்பாளோ? இப்போ இவ அழுதா என்ன செய்ய?’ என்பதாய் யோசித்து நின்றான் சூர்யா. மெல்ல இவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அவனை நெருங்கி வந்து அவனிடம் “எப்படி எப்படி? பேசித் தீர்த்துக்கலாமா? இன்னிக்கு தீர்த்துட்டு தான் பேசனும். இந்த பேசித் தீர்க்கிறது ஏன் அப்போ எங்கிட்ட கத்தும் போது தெரியல. அதென்ன கழுத்துல தாலிகட்டியாச்சுனா உங்க இஷ்டத்துக்கு திட்டுவீங்களா? திட்டறதுக்கு முன்னாடி காரணம் சொல்லனும்னு கூடவா தெரியாது? இதுல இவரு பெரிய மன்மதராசாவாம். இவருக்கு ஆயிரம் பொண்ணுங்க ஃபேன்ஸாம். என்ன ஹீரோ! இதுலாம் நல்லாவா இருக்கு?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனிடம் அமர்ந்த குரலில் கேட்டாள்.

‘என்னடா இவ அழுதானு எல்லாரும் சொன்னாங்க. இவ என்னடான்னா நம்மள அழவிடுற ரேன்ஜுக்குப் பேசறா. ஐயாவும் அம்மாவும் பொண்ணு ரொம்ப அமைதியானவன்னு சொன்னாங்களே. இவ ரௌடி ரங்கம்மா மாதிரி இருக்காளே. குரலை உயர்த்தல, கையை ஓங்கல, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணல. ஆனா என்ன நிமிர்வு.’ வியந்து போனான் சூர்யா.

“நான் மன்மதராசா தான் ஜில்லு. அதிலென்ன உனக்கு சந்தேகம். அதான் இந்த அத்தானைப் பார்த்ததுமே நீ ஃப்ளாட் ஆகிட்டியே. அப்போவே புரியலையா?” என்றான் கெத்தாக. “யோவ் காட்டான்! ரொம்பத்தான் நினைப்பு உனக்கு. போனா போகுது அப்பா சொன்னாரேனு கல்யாணம் பண்ணினா என்ன ஒரேயடியா சீனைப் போடுறீங்க? நாங்களா வந்து உங்ககிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களானு கேட்டோம். அன்னிக்கு பொண்ணு பார்க்க வந்தப்போவே அப்படி சைட் அடிச்ச ஆளுதானே நீங்க. யாருகிட்ட அலப்பறை பண்றீங்க?” என்றாள் அவளும்.

“யாரு நாங்க? சைட் அடிச்சோமா? நீ தானே ஜில்லு நாங்க கிளம்பிற வரைக்கும் அன்னிக்கு என்னையே பார்த்திட்டு இருந்த. அதுமட்டுமா, அன்னிக்கு முகூர்த்த பட்டு வாங்குற அன்னிக்கு கடையில் வச்சு என்னை அப்படி பார்த்தியே. அதுமட்டும் சைட் இல்லியா?” என்றான் சூர்யா. ‘அடப்பாவி! இவன் எல்லாத்தையும் பார்த்திருக்கானே. இப்படி சொதப்பிட்டயே சுபா’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

“இப்போ அதுவா முக்கியம்? என்னைக் காரணமே சொல்லாம திட்டமிட்டு போனதுமில்லாம வந்து ஏன் அழறன்னு கேள்வியா கேட்கறீங்க? அது மட்டுமா, அதென்ன டயலாக்? பேசித் தீர்த்துக்கலாமா? வாங்க தீர்த்துருவோம் இப்போ” என்றாள் கைமுட்டிகளை மடக்கியபடி.

“நோ வயலன்ஸ் ஜில்லு. அத்தான் பாவமில்லையா? நான் என்ன பண்ணட்டும், உங்க மாமா பையன் தான் சொன்னான், நீ அமெரிக்கால போய் தான் செட்டிலாகனும்னு சொன்னியாம். இந்தப் பட்டிக்காட்டுல எல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டியாம். என்னால எல்லாம் என் வீட்டை இந்த மண்ணை விட்டு வரமுடியாது. அந்த நினைப்பு இருந்தா மறந்துரு சொல்லிட்டேன்.” விளையாட்டாக ஆரம்பித்து சற்றே கோபமான குரலில் முடித்தான் சூர்யா.

“நான் சொன்னேனா? உங்களுக்கு நீங்க ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா? யார் என்ன சொன்னாலும் உடனே இப்படித்தான் நம்பி என்கிட்ட வந்து கேப்பீங்களா? சொன்னவன்கிட்ட அது நானும் என் ‌பொண்டாட்டியும் பேசி முடிவெடுத்துக்கறோம்பான்னு சொல்லத் தெரியாதா? என்கிட்ட வந்து இப்படி கேள்விப்பட்டேன், இது உண்மையான்னு கேட்டா கூட நான் தப்பா நினைச்சிருக்க மாட்டேன். அதெப்படி அவன் சொன்னான் இவன் கேட்டான்னு எங்கிட்ட வந்து கத்தலாம்?” சூர்யாவை நெருங்கியபடி கோபமாக கேட்டாள்.

இவள் நெருங்க நெருங்க பின்னோக்கி நகரந்த சூர்யா சுவற்றில் போய் தட்டி நின்றான். “தப்பு தான் ஜில்லு. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். ஏற்கனவே இந்தக் கல்யாணப் பேச்சு எடுத்ததுலேர்ந்தே ஒரே குழப்பம்டா. நீ சிட்டியிலேயே வளர்ந்தவ. எப்படி உனக்கு இந்த ஊர் வாழ்க்கை செட்டாகும்னு எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருந்தது. அதனால வந்தது தான் இந்த குழப்பம். மன்னிச்சிடு. இனி எந்த சந்தேகம் வந்தாலும் உங்கிட்ட நேர்ல கேட்டு தெளிஞ்சுக்கறேன். சரியா” என்றபடி மெல்ல அவளைச் சுற்றி தன் கையை படற விட்டான்.

“நீங்க தான் என்கிட்ட பேசறதுக்கே தயாரா இல்லையே அத்தான். எங்கே என்னைப் பார்த்தா பேச வேண்டி வந்திருமோன்னு என்பக்கம் திரும்பாமலே தானே இருந்தீங்க. பேசியிருந்தா தெரிஞ்சிருக்கும். ” என்றபடி பேச்சோடு பேச்சாக மெல்ல அவனது கைகளில் இருந்து விடுபட்டு நகர்ந்தாள்.

“எல்லாம் பயந்தான். எங்கே உன்கிட்ட பேசினா நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேனா? அதுக்கு தான் பேசவே இல்லை. அதுசரி என்ன பேச்சோடு பேச்சா என்னை காட்டான் காட்டான்னு சொல்ற?” என்றான். “ஆமாம் எப்போ பார்த்தாலும் ஐயனார் மாதிரி உர்ருனு முகத்தை வச்சுகிட்டு இருந்தா காட்டான்னு தான் சொல்லத் தோணும். அதென்ன ஜில்லுனு கூப்பிடறீங்க?” என்றாள்.

“அதுவா! உன்னைப் பார்த்தாலே மனசுக்கு ஜில்லுனு இருக்கா. அதான் ஜில்லுனு கூப்பிட்டேன். என்னைப் பார்த்தா நிஜமா காட்டான்னா தோணுது?” என்றான் சூர்யா அப்பாவியாக. பக்கென்று சிரித்துவிட்டாள் சுபத்ரா. “அப்படி இருக்கோ இல்லையோ நான் உங்களை காட்டான்னு தான் கூப்பிடுவேன்.” என்றாள் அவனது மீசை முறுக்கி விட்டபடி.

“தாயி! நல்லாருப்ப நீ. இங்க ரூமுக்குள்ள எப்படி வேணும்னா கூப்பிடு. ஆனா வெளியில வச்சு மட்டும் அப்படி கூப்பிடாத. சரியா?” என்றான். “அதெல்லாம் நீங்க நடந்துக்கிற‌ முறையை வச்சு தான் முடிவெடுக்கப்படும். பார்க்கலாம்” என்றாள் சிரிப்பை அடக்கிய படி.

“ஜில்லு! இன்னிக்கு அந்த முகூர்த்தப்பட்டுல அப்படியே தேவதை மாதிரி இருந்த தெரியுமா? என்னால உன்னைவிட்டு பார்வையை அகற்றவே முடியல.” மெல்ல இடையோடு சேர்த்து அணைத்து அவளது தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசம் பிடித்தபடி ஜொள்ளினான் சூர்யா. கணவனின் அணைப்பில் தன்னிலை மறந்து அவன்‌ மேல் சாய்ந்து நின்றாள் சுபத்ரா.

“ஆமாம் எல்லாம் சரிதான். எதுக்கு என்னைய கல்யாணம் பண்ண என்னவோ நிறைய பேர் க்யூல நிக்கிற மாதிரி பேசின?” என்றான்.

இந்த வாயில வாஸ்து சரியில்லைன்னு சொல்லுவாங்களே மக்களே. அதுதான் நம்ம ஹீரோவுக்கு. அவன் கேட்டதும் அவன் மேல் சாய்ந்து நின்ற சுபத்ரா துள்ளி எழுந்து தள்ளி நின்றாள். ஏதோ மறந்த கோபம் நினைவிற்கு வந்தது போல். மாட்டிகிட்டயா காட்டான்.!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago