கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

2
2483

அத்தியாயம் 3

விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி.

‘அவன் இங்கே வந்தது எதேச்சையாகவா அல்லது திட்டமிட்டா? திட்டமிட்டு வருவதென்றால் அவனுக்கு இந்த இடம் எப்படித் தெரியும்? கண்டிப்பாக நிவேதிதா சொல்லி இருக்க மாட்டாள்’.

அப்பொழுதும் தோழி மீது இருந்த நம்பிக்கை அவளுக்கு குறையவில்லை.

‘எதேச்சையாகத் தான் வந்திருக்க வேண்டும்… நான் தான் அவனைப் பார்த்ததுமே பயந்து நடுங்கி இப்படி ரூமுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்’ என்று தன்னை நினைத்து வெட்கிப் போனாள்.

‘அவன் ஒரு ஆளு.. அவனுக்கு எல்லாம் பயப்படணுமா?’ என்ற எண்ணம் தோன்ற வேகமாக அறையை விட்டு வெளியேறினாள். அதே நேரம் அடுப்படியில் இருந்து வெளியேறிய அன்பழகி மகளைப் பார்த்ததும் வாத்சல்யத்துடன் புன்னகைத்தார்.

“எழுந்துட்டியா தங்கம்… காபி குடிக்கறியா?”

“கொடுங்கம்மா… அப்பா எழுந்துட்டாரா?”

“இன்னும் இல்லை அபி… வழக்கமா ஊரில் இருக்கும் பொழுது தூக்கமே இல்லாம பொழுதுக்கும் ஓடிட்டே இருப்பார்.. இப்பவாவது கொஞ்சம் ஓய்வா இருக்கட்டும்”

“பாருடா… ம்ம்ம்… நடத்துங்க.. நடத்துங்க…”

“ஏய்! வாலு… என்னையே கிண்டல் செய்றியா? சரி… இன்னிக்கு எங்கே போகலாம்? ஏதாவது யோசிச்சு வச்சு இருக்கியா?”

“அதெல்லாம் எந்த ஐடியாவும் இல்லைமா… அப்பா முதல்ல எழுந்திரிக்கட்டும்.. அவர் எங்கே சொல்றாரோ அங்கே போகலாம்”

“சரியான அப்பா கோண்டு”

“ம்ஹும்… நான் எங்கம்மா செல்லம் தான்…”

“கதை விடாதே… காலையில் எழுந்ததில் இருந்து ராத்திரி தூங்குற வரை அப்பா பத்தி தான் பேசிட்டு இருக்கே.. அவரைப் பத்தி தான் அக்கறை பொங்கி வழியுது… இதுல அம்மா செல்லமாம்..”

“அம்மா… உங்களுக்கு விவரமே பத்தல..”

“எதே!… எனக்கு விவரம் பத்தலையா?” இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கித்தாய்ப்பாக கேட்டார் அன்பழகி.

“ஆமா… பின்னே…”

“கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க மேடம்”

“நீங்க திருவிளையாடல் படம் பார்த்து இருக்கீங்களா?”

“ஓ… நிறைய தடவை பார்த்து இருக்கேனே”

“அதுல அந்த ஞானப்பழம் சீன் நியாபகம் இருக்கா?”

“மறக்குமா?”

“அதுல பிள்ளையார் என்ன சொல்வார்? அம்மா, அப்பாவை சுத்தினா உலகத்தை சுத்தின மாதிரின்னு சொல்லி பழத்தை வாங்குவார்ல”

“ஆமா..”

“அதே மாதிரி அப்பாவோட சந்தோசம் தானே உங்க சந்தோசம்… அவர் ஜாலியா இருந்தா உங்களுக்கும் ஜாலி தானே… அப்போ உங்களை குஷிப்படுத்தணும்னா அப்பாவை நல்லா கவனிச்சுக்கிட்டா போதும் தானே?” என்று கேட்டவள் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொள்ள அன்பழகிக்கு சிரிப்பு வந்தது.

“ஒரு வழியா தலையை சுத்தி மூக்கை தொட்டுட்ட போல” என்று மகளை வாற… அதில் பொய்யாக கோபித்துக் கொண்டவள் கிருஷ்ணன் கீழே இறங்கி வந்ததும் தாயைப் பற்றி புகார் பத்திரம் வாசிக்கத் தொடங்கினாள்.

“பாருங்கப்பா… இந்த அம்மாவை… நான் உங்க கிட்டே ரொம்ப செல்லம் கொஞ்சுறேனாம்.. அதுல இவங்களுக்கு பொறாமை” என்றவள் பாசத்துடன் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு அவரது தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

பெற்றோர்களிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காலை உணவை உண்டு முடித்தாள்… அன்று எங்கே செல்லலாம்? என்று மூன்று பேரும் கலந்து பேசிக் கொண்டு இருந்த பொழுது அழையா விருந்தாளியாக வந்து சேர்ந்தான் விஷ்வா. அபிநய வர்ஷினியின் கல்லூரித் தோழன்.

“ஹாய் விஷ்வா… என்னடா இந்தப் பக்கம்? உனக்கு எப்படி நான் இங்கே இருக்கிறது தெரியும்?”

“உன்னைப் பார்க்கிறதுக்காக உன் வீட்டுக்கு போனேன்… அங்கே தான் சொன்னாங்க.. அதான் கிளம்பி இங்கே வந்துட்டேன்”

“வா விஷ்வா… சூடா இரண்டு இட்லி சாப்பிடுப்பா” மகளின் நண்பனாக ஏற்கனவே பலமுறை வீட்டுக்கு வந்து இருப்பவனை முகம் சுளிக்காமல் உபசரிக்கத் தொடங்கினார் அன்பழகி.

“இல்லை ஆன்ட்டி… இப்போ தான் சாப்பிட்டேன்…”

“அப்பா, அம்மா எல்லாரும் சவுக்கியமா?”

“அம்மா அக்காவோட பிரசவ நேரம்ங்கிறதால உதவிக்காக அமெரிக்கா போய் இருக்காங்க… இனி குழந்தை பிறந்து ஆறு மாசம் கழிச்சு தான் வருவாங்க.. அப்பா எப்பவும் போல பிஸியா  இருக்கார்”

“அபி மேல படிக்கப் போறா… நீ என்ன செய்யலாம்னு இருக்கே விஷ்வா” கிருஷ்ணனிடம் இருந்து கேள்விகள் பறந்தது.

“மேலே படிக்கிற ஐடியா எல்லாம் இல்லை அங்கிள்.. அப்பா இப்பவே பிசினஸை வந்து பார்த்துக்கோனு ரொம்ப அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்… பிசினஸை நான் பார்த்துகிட்டா அவரும் அம்மா கூட சேர்ந்து அமெரிக்காவிற்கு போய் அக்கா கூட இருக்க பிளான்… பொண்டாட்டியை விட்டு பிரிஞ்சு இருக்க வேண்டியது இருக்காம்” என்றான் சின்ன சிரிப்புடன்.

“அதுவும் சரி தான்… உங்க அப்பா பிசினஸை நீ பார்த்துகிட்டாலே போதுமே… மேற்கொண்டு படிச்சாலும் எப்படியும் அங்கே தானே போயாகணும்…”என்றார் அவனது தந்தையின் மனநிலை புரிந்தவராய்…

“உனக்கு இந்த வீடு இன்னும் நியாபகம் இருக்கா விஷ்வா?” ஆச்சரியமாக கேட்டாள் அபிநய வர்ஷினி.

“ஏன் இல்லாம… உன்னோட போன வருச பிறந்த நாளை இங்கே தானே கொண்டாடினோம்… பிரண்ட்ஸ் எல்லாரும் வந்து இருந்தோமே”

“சரி சரி… இப்போ என்ன விஷயமா இங்கே இவ்வளவு தூரம் வந்து இருக்கே?” வேறு வேலையாக எதுவும் ஊட்டிக்கு வந்து இருப்பானோ என்று எண்ணியே அவ்வாறு கேட்டாள் அபிநய வர்ஷினி.

“உன்னைப் பார்க்கத் தான் வந்தேன் அபி…”

“என்னைப் பார்க்கவா? என்ன விஷயம்?” போன வாரம் வரை பலமுறை நண்பர்களோடு சேர்ந்து அவனை சந்தித்து இருக்கிறாள். அப்பொழுதெல்லாம் எதுவும் சொல்லாமல் ஊட்டிக்கு குடும்பத்தோடு செலவழிக்க எண்ணி கிளம்பி வந்து இருக்கும் இந்த நேரத்தில் வந்து இவன் இப்படி சொன்னால் அவளுக்கு ஆச்சரியமாகத் தானே இருக்கும்..

“அது… கொஞ்சம் தனியா பேசணுமே” தயக்கத்துடன் இழுத்தவனைக் கண்ட அபியின் பெற்றோர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“தோட்டத்துக்கு அழைச்சிட்டு போய் பேசிட்டு இருடா… நான் விஷ்வாவுக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று மறைமுகமாக சம்மதம் தெரிவித்த அன்னைக்கு கண்களால் நன்றி செலுத்திய அபிநய வர்ஷினி விஷ்வாவை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்.

“என்ன விஷயம் விஷ்வா?” என்று கேட்க… அவனிடம் உடனடியாக எந்த பதிலும் இல்லை. அவனது பார்வை தோட்டத்தில் இருந்த பூச்செடிகள் மீது சில நொடிகள் நிலைத்து… பின்னர் அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த செயற்கை நீரூற்று மீது சில நொடிகள் நிலைத்து… அதன் பின்னாக வானம், பூமி… என்று ஒவ்வொன்றாக சுற்றி கடைசியில் அபிநய வர்ஷினியின் மீது நிலைத்தது.

“அபி… உனக்கே நல்லாத் தெரியும்… காலேஜ் ஆரம்பிச்சதில் இருந்து நாம எல்லாருமே பிரண்ட்ஸ்… நம்ம கேங்ல எல்லாரையும் விட நீ எனக்கு  ரொம்ப ஸ்பெஷல்…”

“…”

“காலேஜ் படிக்கும் பொழுதே எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் உனக்கு பிரபோஸ் செஞ்சு இருக்காங்க… ஆனா நீ யாரோட லவ்வையும் ஏத்துக்கவே இல்லை… எல்லார் கிட்டயும் ஒரே பதில்… படிப்பு முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்னு…”

“ஆமா… எனக்கு என்னவோ காலேஜ் டைமில் வர்ற லவ் மேல அவ்வளவா நம்பிக்கை இல்லை விஷ்வா… தினமும் பார்க்கிற ஒரு நபரை நம்ம மனசு நம்மையும் அறியாம விரும்ப ஆரம்பிச்சுடும்… அது நம்ம மனசோட வீக்னெஸ்… பார்க்காம இருந்தும் லவ் இருந்துச்சுன்னா தான் அது உண்மையான லவ்… எனக்கு பிரபோஸ் செஞ்ச பசங்க முக்கால்வாசி பேருக்கு இந்நேரம் வேற லவ் செட் ஆகி இருக்கும்… மிச்சம் இருக்கிறவங்க என்னோட பேரையே மறந்து இருப்பாங்க…” என்றாள் புன்னகை மாறாமல்…

“இருக்கலாம்… அதான்…”

“தயங்காம சொல்லு விஷ்வா”

“ஐ லவ் யூ அபி” அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தபடி விஷ்வா சொல்ல.. அபிநய வர்ஷினி உள்ளுக்குள் லேசாக அதிர்ந்தாள்.

“விஷ்வா… நாம நல்ல பிரண்ட்ஸ்…”

“இது நாள் வரை அப்படி இருந்தோம்… இனியும் அப்படியே இருக்கலாம்… காதல் வந்தா நட்பு போயிடணும்னு எந்த கட்டாயமும் இல்லையே…” இலகுவாகவே பேசினான் விஷ்வா.

“நான் உன்னை போர்ஸ் பண்ணல அபி… நல்லா யோசி… டைம் எடுத்துக்கோ… அதுக்கு அப்புறம் உன் முடிவை சொல்லு”

“நான் மேலே படிக்க பாரின் போறேன் விஷ்வா…”

“தெரியும் அபி… அங்கே உன்னை இன்புளுயன்ஸ் செய்ய நான் பக்கத்தில் இருக்க மாட்டேன்… பாரின் போனதுக்கு அப்புறம் டைம் எடுத்து யோசி… அதுக்கு அப்புறம் பொறுமையா உன் முடிவை சொன்னாப் போதும்… நல்ல முடிவா இருந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்”

“கல்யாண விஷயத்தில் என்னோட முடிவு மட்டும் முக்கியமில்லை விஷ்வா… இது இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம்”

“புரியுது அபி… நீ என்னோட காதலை ஏத்துக்கிட்டு அதுக்கு சம்மதம் சொன்னா மட்டும் போதும்.. இரண்டு வீட்டிலும் பேசி சம்மதிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு… என்னோட காதல் உனக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காம நான் பார்த்துக்கிறேன்”

“நான் யோசிக்கணும் விஷ்வா…”

“தாராளமாக…” என்றவன் விடைபெறும் விதமாக அவளிடம் கைகளை நீட்ட… மனதில் எந்த கல்மிஷமும் இல்லாமல் அவனது கைகளைப் பற்றிக் குலுக்கினாள் அபிநய வர்ஷினி.

அதே நேரம் ஏதோவொரு ஒவ்வாத உணர்வு… குத்தூசி போல குத்த… வேகமாக பார்வையைத் திருப்பியவளின் உள் உணர்வுகளை பொய்யாக்காமல் எதிர்வீட்டில் இருந்து அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிசேஷன்.

அவனது முகத்தில் எப்பொழுதும் போல புன்னகை… ஆனால் அதற்கு மாறாக அவனது பழுப்பு நிற கண்கள் இரை தேடும் சிங்கமென ஜொலித்துக் கொண்டிருந்தது.

அவனது பார்வை இணைந்திருந்த அவர்களின் கரங்களின் மீதே ஒரு வித அலட்சியத்துடன் படிந்தது.

அதே நேரம் காபியை எடுத்துக் கொண்டு அன்பழகி அங்கே வரவும் அவரிடமும் சற்று பேசி… காபியை அருந்தி விட்டு அங்கிருந்து விஷால் கிளம்பி விட  அபிநய வர்ஷினியின் முகம் சிந்தனைக்குள் ஆழ்ந்தது.

‘அந்த கிறுக்கனோட பார்வையே சரியில்லையே… ஏதோ தப்பா இருக்கிற மாதிரி இருக்கே’

“என்ன விஷயம் அபி? ஏன் என்னவோ போல இருக்க…” என்று தாய் கேட்க.. கனவில் இருந்து விழிப்பதைப் போல ஆதிசேஷனைப் பற்றிய குழப்பத்தில் இருந்து வெளியே வந்தாள் அவள்.

‘அவனைப் பத்தி சொல்லி வீணா இவங்களை கலவரப்படுத்த வேண்டாம்’

“ஒண்ணுமில்லைம்மா.. இந்த விஷ்வா.. இருக்கான்ல…”

“ஆமா… அவனுக்கென்ன?”

“எனக்கு பிரபோஸ் பண்ணிட்டான்மா” என்று கொஞ்சம் தயக்கத்துடனே சொன்னாள்… தாயிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை தான். ஆனால் இதை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கம் அவளுக்கு இருந்தது.

“அவ்வளவு தானா? இதை முன்னாடியே எதிர்பார்த்தேன்” என்று அவர் அசால்ட்டாக குண்டை வீச… அவளது தயக்கம் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது.

“என்ன மம்மி சொல்றீங்க?”

“நான் உன் அம்மாடி… ஒரு பையன் உன்னை எந்த கோணத்தில் பார்க்கிறான்னு கூடவா என்னால கண்டுபிடிக்க முடியாது… விஷ்வா வரும் பொழுதெல்லாம் நான் கவனிச்சு இருக்கேன்… அவன் பார்வை எப்பவும் உன்னையே தான் சுத்தி வரும்… எப்படியும் படிப்பு முடிஞ்ச பிறகு உன்கிட்டே சொல்லிடுவான்னு நினைச்சேன்.. அதே மாதிரி தான் நடந்து இருக்கு”என்றவர் பேசிக் கொண்டே வீட்டினுள் செல்ல… ஆட்டுக்குட்டியாய் அவரை பின் தொடர்ந்தாள்.

“நான் என்னம்மா செய்யட்டும்?” குழந்தையாய் தடுமாறி நின்றாள் அவள்.

“என்னடா… எப்பவும் என்கிட்டே தான் ஐடியா கேட்ப… இப்போ என்ன அம்மாகிட்டே…” என்று கேட்டபடி அங்கே வந்த கிருஷ்ணனைக் கண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் திணற… மகளின் உதவிக்கு வந்தார் அன்பழகி.

“அது ஒண்ணும் இல்லைங்க… அந்த விஷ்வா.. நம்ம பொண்ணுக்கு பிரபோஸ் பண்ணிட்டு போய்ட்டான்.. அதை நினைச்சு தான் மேடம் குழம்பிப் போய் நிக்குறாங்க” என்று சொல்ல… தந்தையின் முகம் யோசனையானது.

“என்னடா உனக்கு அந்த பையனை பிடிச்சு இருக்கா?”

“ம்ச்! அதெல்லாம் இல்லைப்பா.. அவனே இப்ப தான் சொல்லிட்டு போய் இருக்கான்.. நான் இனிமே தான் அதைப் பத்தி யோசிக்கணும்…”

“எனக்கு அவங்க அப்பாவைத் தெரியும் அபிம்மா… காசு இருக்குனு அலட்டல் இல்லாத மனுஷன்… நம்மை விட கொஞ்சம் வசதியான குடும்பம் தான்… ஆனா… குடும்பத்தில் எல்லாருமே ரொம்ப நல்ல மாதிரி… உனக்கு ஓகேனா சொல்லு… நானே அவங்க அப்பா கிட்டே பேசுறேன்”

“அப்பா… என்னப்பா… நீங்க பாட்டுக்கு அடுக்கி கிட்டே போறீங்க! கொஞ்ச நாள் எனக்கு டைம் கொடுங்கப்பா… நான் யோசிச்சு சொல்றேன்”

“சரிடாம்மா…”

“அபி… அந்த பையனை உனக்கு பிடிச்சு இருந்தா… அப்பா கிட்டே சொல்லு… பிடிக்கலைனா அம்மா கிட்டே சொல்லு”

“வேற யாரையும் பிடிச்சு இருந்தா யார்கிட்டே சொல்லணும்மா” என்று அப்பாவியாக விழி விரித்து கேட்க… அவளை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு நெருங்க… தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து தப்பித்துக் கொண்டாள் அபிநய வர்ஷினி.

“சரி… சரி… அப்புறம் செல்லம் கொஞ்சிக்கலாம்.. இப்படியே விளையாடிட்டே இருந்தா பொழுது போய்டும்… அப்புறம் எங்கேயும் வெளியே போய் சுத்த முடியாது”

“அம்மா… இன்னிக்கு பொட்டானிக்கல் கார்டன் போகலாமே… ப்ளீஸ்!” என்று தாயின் தாடையைப் பிடித்து கெஞ்சலாக கேட்க… அடுத்த சில நொடிகளில் மொத்த குடும்பமும் அந்த இடத்தில் இருந்தது.

பொட்டானிக்கல் கார்டனுக்குள் நுழைந்து ஒரு அரை மணி நேரம் தான் ஆகி இருக்கும். குடும்பமாக ஆங்காங்கே எல்லாரும் பேசி மகிழ்ந்து கொண்டிருக்க… அபிநய வர்ஷினி பெற்றோருடன் விதவிதமாக செல்பி எடுத்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

“நான் பாரின் போனதுக்கு அப்புறம் இதை எல்லாம் பார்த்து ரசிச்சுட்டே இருப்பீங்களாம். எல்லா போட்டோவும் பார்த்து முடிக்கிறதுக்குள்ள நான் படிப்பை முடிச்சுட்டு வந்துடுவேனாம்”

பெற்றவர்கள் மனதில் மகளைப் பிரியப் போகும் வருத்தம் இருந்தாலும் மகளின் மகிழ்ச்சிக்காக அவர்களும் முகத்தை மலர்ச்சியாகவே வைத்துக் கொண்டார்கள்.

‘அவர்கள் வருந்தினால் அவளும் வருந்துவாளே’

நிவேதிதாவிடம் இருந்து அழைப்பு வரவும் விளையாட்டுத் தனத்தை மறந்தவளாய் போனை எடுத்து பேசினாள்.

‘அவளை வேலையில் இருந்து தூக்கிட்டானோ’

“சொல்லு நிவி… எப்படி இருக்க?”

“அபி இப்போ நீ ஊட்டியில தானே இருக்க?” என்று பதற்றமாக பேச… அவளின் பதற்றம் அவளையும் தொற்றிக்கொண்டது.

“ஆமா நிவி… ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க… என்ன விஷயம்?”

“நம்ம விஷ்வா வுக்கு ஊட்டியில் பெரிய ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்… மலர் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்களாம்… அவங்க அப்பா ஏதோ பிசினஸ் மீட்டிங்காக டெல்லி போய் இருக்காராம்… உடனே பிளைட் இல்லையாம்… அவர் வர்றதுக்கு எப்படியும் நைட் ஆகிடுமாம்… அதுவரைக்கும் நீ போய் கொஞ்சம் விஷ்வாவை பார்த்துக்க முடியுமா?” என்று கேட்க… பதில் சொல்லும் மனநிலையில் கூட அவள் இல்லை.

அவள் இருந்த அதே இடத்தில் இருந்து சில அடிகள் தள்ளி போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் கையில் இருந்த ஜூஸை பருகியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சாட்சாத் ஆதிசேஷனே தான்.

அவன் கண்கள் பேசும் பாஷை என்ன?

‘நான் தான் இதை செய்தேன்…’இறுமாப்புடன் ஒளிர்ந்தது.

அருவறுப்பான பார்வை ஒன்றை அவன் புறம் செலுத்த அவனது புன்னகையோ மேலும் விரிந்தது. உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.

“ரியலி”

கந்தகம் எரிக்கும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here