வளைவுகள் கொண்ட பாதையில் குருவின் பைக் சற்று வேகமாகவே பயணித்தது. இத்தனை நெருக்கமாக தன்னவனுடனான பைக் பயணம் அவளுக்கு ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பளீரிட்ட புன்னகை முகத்துடன் அவன் பின்னே அமர்ந்திருந்தவளுக்கு அந்நேரம் குருவை சீண்டும் எண்ணம் உதிக்க, அவனை சற்று நெருங்கி அமர்ந்து அவன் இடுப்பை கிள்ளினாள்.
அவளது தொடுகை அவனை மின்சாரமாய் தாக்கியது. ஒரு கணம் துள்ளி எழுந்து அமர்ந்தவன், வண்ணடியை ஓரமாக நிறுத்தினான்.
“ஏய் சும்மா வர மாட்டியா? இப்படியே ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்த ரெண்டு பேரும் பரலோகம் தான் போய்ச் சேரணும்.. ஒழுங்கா வருவதா இருந்தா எங்கூட வா இல்லைனா இங்கேயே உன்னை இறக்கி விட்டுடுவேன்.. “ என சிடுசிடுக்க,
“ஓகே ஓகே.. ஒன்னும் பண்ண மாட்டேன்.. இப்போ போகலாமா?” என்று கூற அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை கிளப்பினான்.
வெண்பாவின் சித்தி வீட்டுக்கு செல்வதற்கான வழியை கூட இவள் கூற வேண்டிய தேவையே இல்லாமல் அவனது வண்டி சரியான பாதையிலே சென்றது. ஒரு கணம் குருவை ஆச்சரியமாக பார்த்தாலும் இவள் ஏதையாவது கேட்கப் போய் அவன் கோபம் கொண்டு விட கூடாது என அமைதியாகவே வந்தாள்.
அந்தத் தெருமுனையில் வண்டியை நிறுத்தியவன், அவளை அங்கே இறங்குமாறு சைகை காட்ட இங்கே ஏன் ? என புரியாமல் எதுவும் கூறாது இறங்கினாள்.
அவள் இறங்கியதும், “உன் வீடு அங்கே தானே இருக்கு இந்த கொஞ்ச தூரத்தை நடந்தே போ…” என்று கூறிக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்ய அவனை கூர்ந்து நோக்கி,
“ஏன் குரு.. இவ்வளவு தூரம் வந்துட்டு எங்க வீட்டுக்கு வராம போறீங்களே..?” என்று அவனிடன் கேட்டாள்.
“ஏன் அங்கேயும் வந்து என்னை தான் லவ் பண்றனு என் மானத்தை வாங்கவா.. பேசாம வீடு போய் சேரு” என எரிச்சல் குரலிலேயே பதிலளித்தான்.
“வாவ்.. சூப்பர் ஐடியா குருஊஊஊ.. எங்க சித்திக்கு எப்படியும் உன்னை பார்த்ததுமே பிடிக்கும்.. அப்புறம் அவங்களே எங்க அம்மா கிட்ட பேசி நம்ம லவ் மேட்டரை ஓகே செஞ்சிடுவாங்களே… வா குரு..” என குதூகலமான குரலுடன் அவன் கையை பிடித்து இழுக்க, அவள் செய்கையில் அதிர்ந்தவன், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கைகளை உதறி விட்டான்.
“லூசா வெண்பா நீ? நீ இப்படி செய்யுறதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? மரியாதையா முதல்ல இங்கிருந்து கிளம்பு..” என்று கடிந்தவன் அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
பைக்கை ஓட்டிச் செல்லும் குருவையே நோக்கிக் கொண்டிருந்தவளின் இதழ்கள் மலர்ந்தே இருந்தன.
மறுநாள் காலை எழுந்ததும் கல்லூரி செல்ல தயாரானவள் கவின் வரும் வரை ஃபோனை குடைந்த வண்ணம் ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு பிடித்த ஏலக்காய் காபியை அவளிடம் கொடுத்து விட்டு பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார் இளமதி.
“குட்டிம்மா.. அடுத்த மாசம் லீவுக்கு உன்னோட இந்திரா அக்கா பசங்க கூட வர்றேன்னு சொல்லி இருக்காங்க..”
“என்னது இந்திரா சித்தியா..?” என்று ஒரு நொடி திகைத்து விழித்தாலும் மறு நொடியே, “அடுத்த மாசம் தானே..” என எண்ணியவள் ஒரு பெரு மூச்சுடன் கவினையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
வெண்பாவின் அன்னை இலக்கியாவின் தங்கைகளே இந்திரா, இளமதி. இந்திரா பொலன்னறுவை பிரதேசத்தில் தனது இரு பிள்ளைகள் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். இந்திரா என்றாலே எப்போதும் வெண்பாவுக்கு சிறு உதறல் எடுக்கும். இளமதியை போலல்ல இவர் கொஞ்சம் கண்டிப்பானவர். அவர் இருந்தால் இப்போது இருப்பது போல் அவளால் சுதந்திரமாக இருக்க முடியாது. அதற்கு பயந்தே அதிகமாக பொலன்னறுவைக்கு போவதில்லை.
கல்லூரி வளாகத்தில் நுழைந்தவள், “நேற்று இல்லாத மாற்றம் என்னது…” என்ற பாடலை ஹம் செய்து கொண்டே துள்ளல் நடையுடன் சென்று கொண்டிருக்க, திடீரென கால் இடறி விழ, அவளை விழ விடாமல் கையை பிடித்து இழுத்தான் சிவா.
சிவா தன் கையை பற்றி இழுப்பதை உணர்ந்தவள் தீச் சுட்டதை போல கையை உதற முயல, அவன் பிடியை மேலும் இறுக்கினான். சற்று முன் அவள் விழ நேர்ந்ததை எண்ணிப் பார்த்தவளுக்கு வேண்டுமென்றே அவன் கால்களை தட்டி விழச் செய்தது அப்போது தான் அவளது ஏழாம் அறிவுக்கு எட்டவே, கைகளை உறுவிக் கொள்ள முயன்றவாறே,
“சிவா கையை விடு..” என அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அழுத்தமாக கூறினாள்.
மேலும் அழுத்தத்தை அதிகரித்தவன் அவளை நோக்கி, “ஓ.. அப்படியா? அந்த குருவோட கையை நீ பிடிக்கும் பேது உனக்கு இனிச்சுதுல.. இப்போ நான் பிடிச்சா மட்டும் எதுக்கு சும்மா சீன் போடுற…?” என பதிலுக்கு அவனும் கடுப்பாய் வினவினான்.
என்ன… நேற்று அவனது கையை பிடித்ததை இவன் பார்த்தானாமா? அப்படியென்றால் இவன் எங்களை பின் தொடர்ந்திருக்கிறான். அவன் முகத்தை ஆராயந்தவள் , தன் மறு கையின் ஆட்காட்டி விரலை அவள் முகத்துக்கு நேரே நீட்டி,
“அபப்டீன்னா.. நீ எங்களை ஃபாலோ பண்ணி வந்திருக்கல்ல..” என கேள்வியாய் வினவ நக்கலாய் சிரித்தான்.
“ஆமா.. நான் அவ்வளவு சொல்லியும் எங்கூட வராம அவன் கூப்பிட்டதும்… இழிச்சிக்கிட்டே போயிட்டல்ல..” என்று நிறுத்தி, மீண்டும் தொடர்ந்து,
“இப்போ சொல்றேன் இதோட அவன் பின்னாடி சுத்துறதை விட்டுடு.. இனி நீ என்னை தான் லவ் பண்ணனும்..” என்றவன் அவன் பற்றியிருந்த கையின் மேல் வேண்டுமென்றே அழுத்தத்தை கூட்டினான்.
அவன் அழுந்தப் பற்றியிருப்பது வலித்தாலும் கோபத்தில் சிவந்து போனவள் ,
“உன்னை மாதிரி பொம்பளை பொறுக்கியை நான் லவ் பண்ணனுமா? உங்கப்பா மினிஸடர்னா பெரிய இவனா நீ?” என கோபமாக அதே சமயம் அலட்சியம் நிறைந்த குரலில் கூற அவனது கோபம் பன்மடங்கானது.
அவளது கையை உடைத்து விடுவது போல் பிடிக்க வலியில் கத்தியவாறே உதவிக்கு யாராவது வருவார்களா என சுற்றியும் நோட்டம் விட, சற்று தொலைவில் குருவும் சுகீர்த்தனும் இவர்களை நோக்கி ஓடி வருவது தெரிந்தது.
புயல் வேகத்தில் அவளருகில் வந்தவன் அவளது கையை பற்றியியிருந்த சிவாவின் கையை பிடித்து இழுத்து முறுக்கியவன் அப்படியே அவன் முகத்துக்கு ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் அடித்ததால் சிவாவின் முன் கடைவாய் பல் உடைந்து குபுகுபுவென இரத்தம் வழிய முகத்தை கையால் தாங்கிய வண்ணம் இரண்டாக மடிந்து அமர்ந்தான்.
மேலும் அடிக்க முன்னேறியவனை பிடித்து தடுத்தான் சுகீர்த்தன்.அதற்குள் கூட்டம் கூடியிருந்தது.
ஒருவாறு குருவை அமைதிப்படுத்தி விட்டு சுற்றியிருந்த கூட்டத்தையும் அனுப்பி வைத்தான். அவன் பற்றிய இடம் கன்றிச் சிவந்திருக்க அதை அழுந்தத் தேய்த்தவாறு நின்றவளது கண்கள் வலியில் கலங்கியிருந்தன.
என்னாச்சு.. சைகாயால் சுகீர்த்தன் அவளிடம் வினவ கீழே விழுந்திருந்த சிவாவை காட்டி சைகையின் மூலம் நடந்ததை விளக்கினாள் வெண்பா.
தன் தலையை அழுந்தக் கோதி தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் கீழே கிடந்த சிவாவை நோக்கி, “ஸ்சிவ்வா..இந்த மாதிரி நடக்குறது இது தான் கடைசி தடவையா இருக்கனும் இதுக்கப்புறம் வெண்பாவை தொந்தரவு செய்தனு வச்சிக்க.. அடுத்த அடி இதை விட பலமா இருக்கும் .. மைன்ட் இட்…” என கர்ஜித்தவன் அந்நேரம் தகிக்கும் தனலாய் எரிந்து கொண்டிருந்தான்.
அதே கோபத்துடன் அவளை திரும்பிப் பார்க்க அந்த அனல் பார்வையை சந்திக்க தைரியமற்று தலை கவிழ்ந்து நின்றவளிடம்,
“இப்போ சந்தோஷமா? இதே மாதிரி பைத்தியக்காரத்தனமான வேலை செய்து சும்மா வம்பை விலை கொடுத்து வாங்காதே.. உனக்கும் இது தான் லாஸ்ட் வார்ணிங்.. லவ்வு கிவ்வுன்னு வந்த நடக்குறதே வேற..” என கடுமையான குரலில் எச்சரித்துச் சென்றான்.
அந்த சம்பவத்தின் பின் மூன்று தினங்களாக குருவையும் சுகீர்த்தனையும் காணவேயில்லை. அவர்களது சக தோழர்களிடம் வினவிய போது கூட தெரியாது என்றே பதில் கிடைத்தது. அந்த மூன்று நாட்களும் அவனை பாராமல் ஏதோ ஒன்றை இழந்ததை போல் உணர்ந்தாள் வெண்பா. சுகீர்த்தனது ஃபோனும் அணைத்து வைக்கப்பட்டிருக்க ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனாள்.
அன்று அவளை எச்சரித்துச் சென்ற பின் இனி தன்னைப் பார்க்கவே கூடாது என இங்கிருந்து போய்விட்டானா? என பலவாறு யோசனையில் ஆழந்திருந்த வேளை அவளது செல்போன் அலறியது.
திரையில் சுக்கு அண்ணா என்ற பெயரை பார்த்ததும் மறுநொடி, “ஹலோ அண்ணா… குருவுக்கு என்னாச்சு? ஏன் காலேஜ் வரலை? நான் உங்களுக்கு எத்தனை தடவை கால் பண்றது.. உங்க ஃபோன் வர்க் ஆகலை… ஏன் அண்ணா?” என அவன் பேசத் துவங்கும் முன்னரே கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
“வெண்பா லிஸன்.. கொஞ்சம் சொல்றதை கேளு.. நீ அவனை காணாமல் டென்ஷனா இருப்பனு தான் உனக்கு கால் பண்ணனேன் அதுக்காக இங்க வந்துடாதேமா..” என்றவன் தொடர்ந்து குருவுக்கு அன்று என்ன நேர்ந்தது என்பதை கூற அவள் அதிர்ந்து போனாள்.
“அ..அண்ணா…எ.. என்..ன சொ..ன்னீ..ங்க..”என தன் பதற்றத்தை மறைக்க முயன்றவாறு வினவியளுக்கு இது பொய்யாக இருக்கக் கூடாதா? என்றிருந்தது.
மீண்டும் அதே விடயத்தையே அவன் சற்று அழுத்தமான குரலில் கூறக்கேட்டு திக்பிரமை பிடித்தவள் போல பேச்சின்றி நின்றாள் வெண்பா.
“வெண்பா.. வெண்பா..” என்று அவன் இருமுறை அழைக்கவும் தன்னுணர்வு திருமுபினாற் போல் அவள் புலன்கள் செயல்பெற்றன.
“நான் இப்பவே வருகிறேன் அண்ணா..” என்று கலக்கம் நிறைந்த குரலில் கூற, “வேண்டாம்மா.. இப்போ வராதே..” எனத் தடுத்தான் சுகீர்த்தன்.
“ஏன்..அண்ணா?”என மீண்டும் அதே குரலில் வினவ, சுகீர்த்தனுக்கு அவளது நிலை புரிந்தாலும் கூட தற்போது அவள் இங்கே வந்தால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அத்தோடு நில்லாது குருவிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி வரும் என வெண்பாவை வர வேண்டாம் எனத் தடுத்து விட்டான்.
இக்கணமே குருவை காண வேண்டுமென அவள் மனம் துடிக்க போனை அணைத்து தன் பையில் போட்டுக் கொண்டவள் இயந்திரதியில் செயல்பட சித்தியிடம் கூட கூறத் தோன்றாது இதயம் தாறுமாறாக துடிக்க கலங்கிய விழிகளுடன் வீட்டிலிருந்து வெளியேறினாள். அவள் நேரம் அத் தருணம் வீட்டில் யாரும் இல்லாமல் போனது.
மூன்று நாட்கள் கல்லூரிப் பக்கமே வரவில்லையே இதனால் தானா? பின்னர் ஏன் யாரும் தனக்குத் தெரியப்படுத்தவே இல்லை? நடந்தவற்றை சுக்கு அண்ணா கூட மறைத்து விட்டாரே? என சுகீர்த்தன் மேல் இன்ஸ்டன்ட்டாய் ஒரு கோபம் முளைத்தாலும்..ஏற்பட்ட களேபரத்தில் என்னிடம் கூறவா தோன்றியிருக்கும்? பாவம் அவர் என சுகீர்த்தன் நிலையை எண்ணி பரிதாபம் கொண்டாள்.
கடந்த இரு தினங்களாக தன்னைப் பார்த்து வித்தியாசமாக புன்னகைத்துச் சென்ற சிவாவின் முகம் நினைவில் வந்தது. இதற்காகத் தானா? இப்படி செய்து விட்டானே பாவி.. அன்று சுகீர்த்தன் சொன்ன போதே அவள் கேட்டு நடந்திருக்க வேண்டும்.. விளையாட்டுத்தனமாக தான் செய்த செயல் இன்று விபரீதமாகி விட்டதே.. அவளால் தானே தன் குருவுக்கு இந்த நிலைமை என அவளையே நொந்து கொண்டாள்.
ஓட்டமும் நடையுமாக தெரு முனைக்கு வந்தவள் ஓர் ஆட்டோவை பிடித்து வைத்திய சாலைக்கு விரைந்தாள்.
தொடரும்..