என் கோடையில் மழையானவள்-2

0
444

“எத்தனை தடவை சொல்றது .. இதுக்கு மேலேயும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ”

“…………………”

“என்னால அந்தாளு கிட்ட பேச முடியாது..நீங்களே சொல்லிடுங்கனு சொல்றேன்ல..” என்று தன் உட்சபட்ச தொணியில் இரைந்து கத்தியவன் தனது கைப்பேசியை தூக்கித் தரையில் அடிக்க அவன் அடித்த வேகத்தில் துண்டாக்கப்பட்டது.

பக்கத்தில் அவனையே பார்த்தபடி கை கட்டிய வண்ணம் அமைதியாக நின்று கொண்டிருந்தான் சுகீர்த்தன். தன் நண்பனை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருக்கும் ஒரே ஜீவனாயிற்றே.

கீழே சிதறிக் கிடந்த அவனது ஸ்மார்ட் போனின் பாகங்களை பொறுக்கிக் கொண்டே,
“இது ஒன்பதாவது… இன்னும் எத்தனை போன் இவன் கோபத்துக்கு பலியாகப் போகுதோ?.. கடவுளே இந்த போனை எல்லாம் இவன் கிட்ட இருந்து காப்பாத்துப்பா…” என வாய்க்குள் முனுமுனுத்த வண்ணம் குருவை நோக்கினான்.

தலையை கைகளால் தாங்கிய வண்ணம் மஞ்சத்தில் அமர்ந்திருந்தவனை ஏதேதோ பல நினைவுகள் வந்து அவனை அலைக்கழித்தது. குருவின் தற்போதைய மனநிலையை ஊகித்தவன் அவனருகில் அமர்ந்து கொண்டவன்,

“குரு இன்னும் எவ்வளவு நாளைக்கு தான்டா இதையே நினைச்சிக்கிட்டு இருப்ப? இதில் உன்னோட தப்பு எதுவுமே இல்லையேடா.. ” என்று ஆறுதலாக தோளில் தட்டியவன் குருவை கூர்ந்து நோக்க இன்னும் அவன் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு,

“டேய் உன் தாத்தாக்கு கோல் பண்ணி பனம் அனுப்பச் சொல்லுடா.” என்று அவனது போனை நீட்ட,

“எதுக்குடா..” என முதலில் புரியாமல் கேட்க,

“வேற எதுக்கு பத்தாவது புது போன் வாங்க தான்.. வழமையா நடக்குறது தானே..
எங்க வீட்டு ஹிட்லர் இந்த டப்பா செல்லை வாங்கி கொடுத்ததுக்கே என்னா பில்டப் தெரியுமா? இனி படிச்சு முடியுற வரைக்கும் போனே கேட்க கூடாது.. அப்படி தேவைன்னா வேலைக்கு போய் நீயே வாங்கிக்கோன்னு சொல்லிட்டாருடா.. உனக்கெல்லாம் பாரு ஒரு வருஷத்துக்கே நாலு அஞ்சு போன்.. எனக்கு இப்படி ஒரு தாத்தா இல்லாம யோயிட்டாரே…” என்று முகத்தில் போலிக் கவலையை பூசிக் கொள்ள, சுகீர்த்தனின் முகம் போன போக்கை பார்த்து குருவின் உதடுகள் தானாக மலர்ந்தன.

நண்பனின் முகத்தில் புன்னகையை கண்டு கொண்டவன் “ஹப்பாடா சிரிச்சிட்டான்..” என்று நெஞ்சின் மத்தியில் கை வைத்து பெருமூச்செறிய அவனை நோக்கி,

“மச்சி தண்ணி அடிக்கலாமா..?” என்று கேட்க அதன் அர்த்தம் புரிந்து கொண்டவன் முகத்தில் மீண்டும் ஒரு குறு நகை எட்டிப் பார்த்தது.

நீங்க நினைக்கிற மாதிரி நம்ம ஹீரோவுக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லைங்க. குரு ஒரு டீடோட்டலர். சுகீர்த்தன் மாத்திரம் எப்போதாவது குடிப்பான்.

குருவுக்கு எப்போதெல்லாம் ஒருத்தரை திட்டத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தன் நண்பனுக்கு ஒரு ஃபுல்லை வாங்கிக் கொடுத்தால் போதும். கலர்கலராக அவன் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி தன் நண்பனின் சோகத்திற்கு காரணமானவர்களையெல்லாம் திட்டித் தீர்த்து விடுவான் சுகீ. இவனது செய்கை குருவிற்கு சுவாரசியமாக இருக்கும். காலையில் அவனிடம் இரவில் பேசியதெல்லாம் கூறினால் அவனாலேயே நம்ப முடியாது போகும். அந்த அளவுக்கு அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பவர் ஃபுல். குருவின் மனதை புரிந்து நடப்பதில் சுகீர்த்தனை மிஞ்ச முடியாது. அந்தளவுக்கு தன் நண்பனை பற்றி அங்குல அங்குலமாக அறிந்து வைத்திருக்கிறான்.

குருப்பிரகாஷ் வேதநாயகம். இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வேதநாயகத்தின் ஏகப் புத்திரன். இத்தனை நேரம் தன் வெறுப்பை கக்கியது தனது தந்தையின் பி.ஏ ரவிக்குமாரிடம் தான். பேராதனை பல்கலைக்கழகத்தில் வணிகத்துறை இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கிறான். குருவின் தாய் இவனது பதிநான்காம் வயதில் ஆக்ஸிடன்டில் தாய் பானுப்பிரியாவை இழந்து நின்றவனுக்கு அவனது தாத்தா பாட்டியே உலகமாகிப் போனார்கள்.

தற்போது சுகீர்த்தனும் அவனுமாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி வருகின்றனர். பல்கலைக்கழக விடுமுறை நாட்கள் அவனுக்கு பொலன்னறுவை தாத்தா வீட்டில் தான்.


பல்கலைக்கழக வளாகத்தின் புற் தரைக்கு அப்பால் இருந்த மனற் தரையில் குச்சியால் எதையோ கிறுக்கிய வண்ணம் வெண்பாவும் அவளை சூழ அவளது தோழிகள் குழாமும் நின்று கொண்டிருந்தனர்.

“ஏய் திவி.. பாரு சரியா தான் கவுண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேனா..? என தரையை கூர்மையாக ஆராய்ந்தவாறு தன் தோழி திவ்யாவிடம் வினவ,

“ம்..ஆமாடி.. சீக்கிரம் பண்ணு..” என அவளும் பதற்றமாகவே இருந்தாள். சுற்றி இருந்த மற்ற மூவருக்கும் கூட அதே பதற்றம்.

அதே நேரம் தன் பைக்கை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு சுகீர்த்தனுடன் கதை அளந்த வண்ணம் வந்து கொண்டிருந்தவன் அங்கே வெண்பா ஏதோ குச்சியை வைத்துக் கொண்டு தரையில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதும் அதன் பின் துள்ளிக் குதித்ததையும் அவனது லேசர் கண்கள் கண்டு கொண்டன. சுற்றியிருந்த அவளது தோழிகள் வேறு நிரம்பி வழிந்த புன்னகையுடன் அவளுக்கு கை குலுக்குவதும் தெரியவே அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் பட்டது.

அதையே சுகீர்த்தனும் அவதானித்துக் கொண்டிருக்க அவனுக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது மட்டும் புரியவே இல்லை. மெதுவாக குருவின் பக்கம் தலையை திருப்பி நோட்டம் விட அவனது பார்வையும் அதே திசையில் நிலைத்திருந்தது.

சும்மா விடுவானா சுகீர்த்தன்..“மச்சி.. அதுங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்குதுங்க? அந்த மேகி மண்டை வேற இந்த குதி குதிக்குறா. நீ வேற அவளையே லுக்கு விட்டுக்கிட்டு இருக்க.. சம்திங் சம்திங்..” என ஏதோ தீவிரமான யோசனை குரலில் நாடியை அழித்த வண்ணம் அங்கேயே பார்த்தபடி கேட்க, அதை வைத்து தன் நண்பன் தன்னை கலாய்க்க முனைவதை உணர்ந்தவன் அவன் முதுகில் படாரென்று ஒரு அடியை போட,

“என்னடா பட்டுனு அடிச்சுட்ட?.. வா என்ன நடக்குதுனு அங்கே போய் பார்க்கலாம்” என சுகீ முன்னேற அவனை காலரால் பிடித்து பின்னோக்கி இழுத்தவன் தன் ஒரு கையால் தனது வாயை பொத்திக் காட்டி மூடிக் கொண்டு போகுமாறு கூற நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் பேசாமல் குருவோடு நடந்தான்.

வெண்பாவும் அவளது தோழியரும் இருந்த வழியை தாண்டி செல்ல முற்பட யாரோ “உனக்கும் குருவுக்கும்…” என குருவின் பேரை உச்சரிப்பது அவன் காதுகளுக்கு விழ சட்டென திரும்பி அவர்களை நோக்கி வந்தான்.

அவன் வந்தது கூட தெரியாமல் அவளது கவணம் தரையிலே பதிந்திருந்தது. சுற்றியிருந்த அவளது தோழியர் கும்பல் விறைப்பாக நின்ற குருவை கண்டதும் வெலவெலத்து போய் “ஐயோ சீனியர்டி மாட்டினா அவ்வளவு தான்” என தங்களுக்குள் முனுமுனுத்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

“திவி இப்போ சொல்லு…இ..” என்றவாறு தலையை உயர்த்திப் பார்க்க இடுப்பில் கையை வைத்த வண்ணம் அவளை முறைத்தான் அவன். குருவை கண்ட அவளது முகத்தில் கோடி பிரகாசம்.

“ஐ.. குரு டைமிங்ல வந்துட்ட.. இங்கே பாரு பாரு.. “ என தரையை காட்ட, அதை பார்த்தவனது கோபம் இரு மடங்கானது.

குருப்பிரகாஷ், வெண்பா என இருவரது பெயரையும் எழுதி ஃப்ளேம்ஸ் (FLAMES) பார்த்திருக்க அதன் பக்கத்தில் ஒரு ஹார்ட் வரைந்து அதனுள் ஜீவீ (GV) என எழுதப் பட்டிருந்தது. இவளது சிறு பிள்ளைத் தனமான செயலை எண்ணி அழுவதா? சிரிப்பதா? என சுகீர்த்தன் குழம்பிப் போயிருக்க குருவோ அவளை என்ன செய்தால் தகும்? என தன் கோபத்தை அடக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

“லூசு என்ன பண்ணி வச்சிருக்க?” என கோபத்தை கடினப்பட்டு கட்டுப்படுத்திய குரலில் வினவ, தன் ஒரு கையை இடுப்பில் வைத்த வண்ணம் மறு கையில் இருந்த குச்சியை நீட்டிக் கொண்டே,

“ஹாஹா.. இது கூட தெரியலையா? ஃப்ளேம்ஸ் பார்த்து இருக்கேன்..பாரு சூப்பர் ஜோடிப்பா” என்றவள் அவன் முகத்துக்கு நேரே சற்று எம்பி, “உனக்கும் எனக்கும் மேரேஜ்னு வந்து இருக்கு..” என மெல்லிய குரலில் இயம்ப அவனுக்கோ அவளது செய்கை பெரும் அவஸத்தையாய் போயிற்று.

“லூசாடி நீ.. உனக்கு வ்வேற வ்வேலையே இல்லையா.. எந்தக் கேனையன் சொன்னான் உனக்கு இதெல்லாம்.. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா? ச்சே.” என்று பெரும் சினம் கொண்டு கத்த அவளோ இது அவனது வழமையான டயலொக் தானே என சிறிதும் பொருட்படுத்தாது கை கட்டி நின்று கொண்டிருந்தாள்.

“ஐயோ ஆரம்பிச்சுட்டான்யா.. இந்த மேகி மண்டை வேற இந்த மாதிரி ஏதாவது பண்ணி கடைசியில நம்மளை மாட்டி வச்சிடுமே இப்போ என்ன பண்ணலாம்..? என தீவிர யோசனையில் இறங்கியிருந்தான் சுகீர்த்தன்.

ஆனால் அங்கே குருவின் திட்டல் தொடர்ந்து கொண்டிருந்தது.

“நான் தான் உன்னை பிடிக்கலைனு சொல்றேன்ல பின்னே ஏன் உயிரை வாங்குற? எப்போதும் இப்படி பொறுமையாவே பேசிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சிட்டு இருக்காதே.. இதோ..” என தரையை காட்டி “ இதோ இதெல்லாம் கனவுல கூட நடக்காது..” என தன் ஷூக் கால்களால் தாறுமாறாக அதனை அழித்து விட்டு நிமிர்ந்தவன்,

“உன் காதலும் இப்படி தான் அழிந்து போயிடும்..” என்று கூறி அவன் திரும்பி நடந்தான்.

இத்தனை நேரம் வாங்கிய திட்டுக்களை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் இறுதியில் உதிர்த்துச் சென்ற வார்த்தைகள் காயப்படுத்தவே வேதனையில் அவளது முகம் கூம்பிப் போனது. அவளது முக வாட்டத்தை பார்த்த சுகீர்த்தனுக்கே என்னவோ செய்தது.

மறு கணம் புன்னகையுடனே நிமிர்ந்தவள் அவனருகே ஓடிச் சென்று,

“அப்போ அழிக்க முடியாத மாதிரி இருந்தா ஓகே தானே..?” என அவனைப் பார்த்து வினவ, எரிப்பதை போல அவளை முறைத்து தன் கையை அவள் முகத்துக்கு நேரே நீட்டி ஏதோ கூற வாயை திறந்தவன் பின் ஏதும் பேசாமல் வேகமான எட்டுக்களுடன் அவ்விடம் விட்டும் நகர்ந்தான்.

அவன் ஏன் ஒன்றும் பேசாமல் போய் விட்டான்? எனப் புரியாமல் திரும்ப அவளை முறைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் சுகீ. இவளோ என்ன என்பதைப் போல் பார்த்து வைக்க,

“உனக்கு நிஜமாவே கிறுக்கு பிடிச்சிருச்சா..? அவன் தான் இவ்வளவு திட்டுறானே ஏன்மா இப்படி பண்ணுற?” என பரிதாபமாய் கேட்டான்.

அவளோ தன் ஷிபான் துப்பட்டாவை காற்றில் ஆட விட்ட வண்ணம் அவனை நோக்கி,
“ஏன்னா நான் குருவை காதலிக்கிறேன்..அவ்வளவு தான் சிம்பிள்..”

“அப்புறம் சுக்குண்ணா.. இப்போ குரு கொஞ்சம் அப்செட்டா இருப்பான்..” என தன் பையை திறந்து சாக்லேட் ஒன்றை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு,

“இதை மை மலிங்கிக்கு கொடுத்துடுங்க…” என மறுபடியும் தன் துப்பட்டாவை காற்றில் பறக்க விட்ட வண்ணம் நடந்தாள்.

அவள் பேசிச் சென்றது அவன் மூளைக்கு சரிவர புரியாமல் “என்னது மங்கீயா…? என சற்று குரலை உயர்த்தி கேட்க,

“மங்கி இல்லை சுக்குண்ணா மலிங்கீஈஈஈஈ…”என் திரும்பிப் பாராமலே கத்திக் கொண்டே ஓடினாள். இம்முறையும் குழம்பிப் போனது என்னவோ சுகீ தான்.

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here