“இங்கே பாரு பானு உனக்கு பிடிக்கலைங்குறதுக்காக என்னால அரசியலை விட முடியாது. அப்படி உனக்கு என்ன குறை வச்சிருக்கேன்னு சொல்லு?
“என்ன குறையில்லைனு கேளுங்க. நீங்க செய்றதெல்லாமே ரொம்ப தப்பா இருக்கு. அரசியலில் வேணும்னா இதெல்லாம் சகஜமாக இருக்கலாம் ஆனா அது நமக்கு வேணாம் தயவு செய்து இந்த அரசியலை விட்டுடுங்க..” என்று வேதநாயகத்திடம் கெஞ்சி கொண்டிருந்தான் அவரது மனைவி பானுப்பிரியா .
அவர் எவ்வளவு எடுத்துக் கூறியும் புரிந்து கொள்ளாமல் அரசியல் வாழ்க்கையை விட்டு விடுமாறு வற்புறுத்த அவருக்கு தன் மனைவியின் மேல் கட்டுக்கடங்கா கோபம் வந்தது. அவர் மிகவும் கஷ்டப்பட்டு அரசியலில் அடைந்திருக்கும் இந்த இடத்தை எதற்காகவும் விட்டுத் தர தயாரில்லை.
குருவின் தந்தை வேதநாயகம் பானுப்பிரியாவும் காதலிக்க, பானுப்பிரியாவின் முழு குடும்பம் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தன் மனைவி மற்றும் குழந்தையை எவ்விதத்திலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். பானுவிற்கு நல்ல கணவனாக குருப்பிரகாஷிற்கு நல்ல தந்தையாகவே இருந்தார்.
அப்படியே அரசியலில் குதித்து விட ஆரம்பத்தில் சிறந்த அரசியல் வாதியாகவே இருந்தார். அரசியல் மோகம் அவரை விட்டு விட வில்லை.. அதனை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு சில தவறுகளையும் செய்ய ஆரம்பித்து விட அதை அவரது மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஆரம்பத்தில் அன்பாய் கூறினார். கேட்கவில்லை. பிறகு சிறிது சிறிதாக சண்டை போட இன்று அது பெரிதானது.
“அரசியலை விடுவதா? நீ என்ன முட்டாளா? உளறாதே பானு.. அரசியல் வாழ்க்கை இப்படி தான்.. இந்த விஷயத்தில் நீ தலையிடாதே..” என்று கறாராக கூற,
“நான் தலையிடக் கூடாதா ? இந்த அதிகாரம், சொத்து, அந்தஸ்து இருக்குனு பெருமையாக சொல்றதை விட என் கணவன் நல்லவர்னு சொல்றது தான் எனக்கு சந்தோஷம்.. நீங்க தப்பு செய்வதை பார்த்து நான் சும்மா இருக்க முடியாது. இதுக்கு ஒரு முடிவு கட்டாம விடப் போறதில்லை. இந்த கேவலமான வேலைகளை பார்ப்பதற்கு பதிலாக நீங்க ஜெயிலுக்கு போகலாம்..” என்று அவர் ஆவேசமாக கத்த, மறுநொடி அவர் அறைந்திருத்தார்.
“என்னடீ.. நானும் பார்க்குறேன் ரொம்ப கத்துற.. அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே மறந்துடு.. இல்லை நானே உன்னை ஆக்ஸிடன்ட் செஞ்சு போட்டுத் தள்ளிட்டு அந்தப் பலியை எதிர்க்கட்சி காரர்கள் மேலே திருப்பி விட்டு அடுத்த மாத தேர்தலில் உன்னை வைத்தே அனுதாப வாக்குகள் வாங்கிடுவேன்.. என்னை மிருகமாக்காதே..” என்று அழுத்தமாக கூறியவர் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் சென்று விட்டார்.
தந்தையின் இந்தப் பேச்சை கேட்டு மின்சாரம் தாக்கியது போல் நின்றிருந்தான் குருப்பிரகாஷ். இத்தனை காலம் அன்பாக பேசும் பெற்றோர்களை பார்த்துப் பழகிய குருவிற்கு தந்தை தாயின் செயல் அதிர்ச்சியை அளித்ததென்றால் இறுதியாக தந்தையின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
மறுநாள் காலை பானுப்பிரியா கோயிலுக்கு சென்று திரும்பி வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் செய்தியை கேட்டு மயங்கி விழுந்தான் குரு.
வேதநாயகம் மனதளவில் உடைந்து போனார். அவர் கோபத்தில் சொன்னார் அதற்காக காதல் மனைவியையே கொல்லும் அளவுக்கு தரமிறங்கி விடவில்லை.
தந்தை தான் நேற்று சொன்னதை உண்மையிலேயே செய்து தன் தாயை கொன்று விட்டதாகவே கருதி தந்தையின் எல்லையற்ற கோபமும் வெறுப்பும் உருவானது. பானுப்பிரியா இறந்த செய்தியை கேட்டு வந்திருந்த தாத்தாவுடன் அவரது ஊருக்கே சென்று விட்டான்.
பத்து வருடங்களாக வேதநாயகம் இருந்த திசையே தலை வைத்து படுக்கவில்லை. அவர் உண்மையை கூற பலவாறு முயன்றும் அவரது பேச்சை கேட்க அவன் தயாரில்லை. தன் காதால் கேட்ட தந்தையின் பேச்சே அவனது வெறுப்பை மேலும் வளர்த்தது.
இதை செய்தது எதிர்கட்சி காரர்கள் தான் என்று நிரூபணமாகி விட அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அப்போதும் அவன் தன் தந்தையை நம்புவதாய் இல்லை. அவன் தந்தையை வெறுத்தே வாழப் பழகினான்.
அன்று பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அவர் கண் முன் தோன்ற அவரறியாமலே அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்துக் கொண்டார் வேதநாயகம்.
“டாட்.. டாட்..” என்று கத்திக் கொண்டே அவர் முன் வந்து நின்றான் குரு.
“என்னப்பா.. என்ன வேணும்”
“நிஷாவும் நானும் பொலன்னறுவை தாத்தா வீட்டுக்கு போறோம்… இப்போ அறுவடை காலம் வேற நானே போய் பார்த்துக்கனும் அப்படியே நிஷாவுக்கும் அந்த ஊரை சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்..” என்று அவன் விளக்க, சிறிது நேரம் யோசித்தவர் சம்மதம் தெரிவிக்க அவனும் நிஷாவை அழைத்துக் கொண்டு பொலன்னறுவை நோக்கி பயணம் செய்தான்.
அப்போது அவன் அறிந்திருக்க மாட்டான் இந்தப் பயணம் அவன் வாழ்க்கையில் எத்தகைய குழப்பத்தை உண்டாக்க போகிறதென்று.
அங்கு பொலன்னறுவையில தன் தந்தையின் மடியில் படுத்திருந்தாள் வெண்பா. அவளது களையிழந்த அமைதியான தோற்றம் அவள் தந்தையை சிந்திக்க தூண்டியது.
வெண்பாவின் தாய் தந்தை பிரிந்து வாழ்ந்தாலும் அவளது கடமைகளை செய்ய இருவரும் தவறியதில்லை. அவளது தந்தைக்கு வேலை நிமித்தமாக பொலன்னறுவைக்கு மாற்றலாகி வந்திருந்தார்.
தந்தையோடு சில காலம் தங்கியிருந்து வருவதாக கூற அவளது தாய் தடுக்கவில்லை.
கடந்த ஒரு வாரமாக தந்தையின் அன்பும் அரவணைப்பும் அவளை ஓரளவு தேற்றியிருந்தது. முழுவதுமாக இல்லை. அது அவளால் முடியாததும் கூட.
ஒரு வேளை குருவின் தந்தை தான் அவனை ஏதாவது சொல்லி கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் ..? கடவுளே குருவுக்கு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது.. அந்த நிலையிலும் காதல் கொண்ட பெண் மனம் அவனுக்காக பிரார்த்திக்க,
காயம்பட்ட அவள் மனமோ இல்லையில்லை.. அவன் என்ன சின்ன குழந்தையா கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க? நாடகமாடி என்னை ஏமாற்றி விட்டான் என்றது.
“வெண்பாமா..” என்ற தந்தையின் குரலில் சுயம் பெற்றவள்,
“ஹாங்..என்னப்பா?.” என்று கேட்டுக் கொண்டே அவர் மடியை விட்டும் எழுந்து அமர்ந்தாள்.
“நேரமாச்சு நான் கிளம்பட்டுமா? கமலா வந்ததும் உனக்கு பிடித்ததை சமைக்க சொல்லு.. எங்கேயாவது போகனும்னா அவங்களை கூடவே கூட்டிட்டு போ மா..” என்றவர் அவளிடம் விடை பெற்று கிளம்பினார்.
அன்று அவள் மனம் ஏனோ படபடத்துக் கொண்டே இருந்தது. ‘கடவுளே இருக்கும் துன்பம் போதாதென்று இன்னும் ஒன்றை தந்து விடாதே.. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது..’ என மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.
பச்சை கம்பளம் விரித்தாற் போன்று எங்கும் பசுமையான வயல் வெளி. நீர் சலசலத்து ஓடும் அருவி. அருகே ஓர் சிறிய கற்பாறையின் மீது சோகச் சித்திரமாய் அமர்ந்திருந்தாள் வெண்பா.
அவளது செவிகளை தீண்டியது குருவின் அரிதான சிரிப்பொலி. அது பிரம்மையோ..? என்று தோன்றினாலும் அவள் உள்ளுணர்வு ஏதோ உறுத்த திரும்பி பார்த்தாள்.
ஆம் அங்கு யாருடனோ கைப்பேசியில் உரையாடியபடி சத்தமிட்டு சிர்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தது குருவே தான். இத்தனை நாட்களாட அவன் மீதிருந்த கோபமும் வெறுப்பும் அவனை கண்ட நொடி மாயமாய் மறைய இதயம் குத்தாட்டம் போட தாயை கண்ட குழந்தையின் உற்சாகத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தாள்.
குருவின் தோற்றத்தில் எத்தனை மாற்றம்? இது வரை ஓர் கல்லூரி மாணவனாக சாதாரணமான மிடில் கிளாஸ் தோற்றத்தில் காணப்பட்டவனது இன்றைய தோற்றம் அவளை வியக்க வைத்தது.
முன்பிருந்த அதே கம்பீரத் தோற்றம் .. இல்லை அதை விட அதிகமாக. அந்த ஸ்லீம் பிட் டீ சர்ட்டில் முறுக்கேறித் தெரிந்த அவன் தசைகள். அதே ட்ரேட் மார்க் புன்னகை. அவனது மாநிறம் கூட சற்று வெளுத்திருந்தது. மொத்தத்தில் அவள் கண்களுக்கு ஆணழகனாகத் தெரிந்தான் அவன்.
“குரு.. குரு..” என்று மலர்ந்த முகத்துடன் அவன் முன்னே சென்று நிற்க, கைப்பேசியை காதில் வைத்த வண்ணமே திரும்பி பார்த்தான்.
அவன் விழிகளில் அவளை போல் ஆர்வமில்லை. அவளை கண்ட மகிழ்ச்சியில்லை யார் என்பது போல் பார்த்தான். அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவள் இருக்கவில்லை.
“குரு எப்படி இருக்க? இவ்வளவு நாள் எங்கேடா போன? நீ இல்லாம எவ்வளவு துடிச்சு பேனேன் தெரியுமா ?” என்று அடுக்கடுக்காய் பல கேள்விகளை அடுக்கினாள். அப்போது கூட அவளுக்கு நிஷாவை பற்றி கேட்கத் தோன்றவில்லை. அதை அவள் மறந்தே போனாள்.
அவளது பேச்சை கேட்டு திகைத்தவன் , கைப்பேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டு விட்டு அவளை புரியாத பார்வை பார்க்க, அவளது பதற்றம் அதிகமானது..
“யார் நீ..?”
“குரு..???”அதிர்ந்தாள் வெண்பா
“ஆமா நான் குரு தான்.. நீ யார்?”
‘என்னை பார்த்து நீ யார் என்று கேட்டு விட்டானே.. ஐயோ என்னவாயிற்று என் குருவுக்கு..? ஒரு வேளை தன்னுடன் விளையாடிப் பார்க்க முனைகிறானோ?’
“குரு நான் வெண்பா.. விளையாடாதடா..”ஆவலாய் அவனையே பார்த்திருந்தாள்.
“எனக்கு வேற வேலை இல்லைனு நினைச்சியா உன் கூட விளையாடிக்கிட்டு இருக்க? அப்படி யாரையும் எனக்கு தெரியாது..தயவு செய்து வழியை விடு..” என்று நகர முற்பட்டவனை கையை பிடித்து தடுத்து நிறுத்தி, அழுத்தமாக அவனை பார்த்தாள்.
“குரு நான் உன்னுடைய மனைவி..” என்றாள்.
அவ்வளவு தான் ‘பளார்” குருவின் கை அவள் கன்னத்தில் பதிந்தது. கலங்கிய விழிகளுடன் கன்னத்தை தாங்கியபடி மிரண்டு போய் அவனை பார்க்க, அவன் கண்களோ கோபத்தில் சிவந்திருந்தன.
“ச்சீ.. என்ன மாதிரி பெண் நீ? இப்படி ரோட்ல போறவன் கையை பிடித்து இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்துக்குற.. இதுல நீ என் மனைவினு சொல்ல உனக்கு எந்தளவு தைரியம் இருக்கனும்? இப்போதெல்லாம் பணத்துக்காக பட்டப்பகல்லேயே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டு அவள் மீது கேவலமான ஓர் பார்வை வீசினான்.
அவ்வளவு தான் அவள் மனம் உடைந்தாள். அடித்தது கூட வலிக்கவில்லை. குருவின் வார்த்தைகள் கூரிய அம்புகளாய் அவளுடைய இதயத்தை துளைத்தன. கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு இரும்புக் குண்டாய் கணக்க, எதிர்பாராத அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்தாள் வெண்பா.
“ஹேய் ஹனி யார் கூட பேசிக்கிட்டு இருக்க?” என்று கொண்டே ஒயிலாக நடந்து அவன் அருகே வந்து நின்ற அல்ட்ரா மாடர்ன் பெண் ஒருத்தி அவன் கையோடு தன் கையை கோர்த்து நின்றாள்.
“தெரியாது நிஷா.. இந்த மேடமுக்கு நான் புருஷனாம்..” அந்த புருஷன் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து எள்ளலாய் கூற,
“வாட் ..” என்று பொய்யாய் அதிர்ந்தவள், ஹாஹா என்று வாய் விட்டு நகைத்தாள்.
“குரு என்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறான். நிச்சயதார்த்தமே நடந்துருச்சி.. இதுல உன் புருஷானாம்.. வாட் அ ஜோக்..? மீண்டும் அதே சிரிப்பு.
“பணக்காரப் பையன் ஒருத்தன் கண்ணுல பட்டுட கூடாதே. அப்படியே அவனை வளைச்சு போட்டுக்க பார்ப்பீங்களே. உன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் உன்னை மாதிரி அலையுற கேஸ் இருப்பாங்க அப்படி ஒருத்தனை ட்ரை பண்ணு..” என்று அவளை அருவருப்பான ஓர் பார்வை பார்த்து வைத்தாள்.
அவளது வாத்தைகளில் எரிமலையின் அடிவாரத்தில் நிற்பது போல் தகித்தது அவளுக்கு. அந்த அருவருப்பான பார்வையில் அவர்கள் முன் ஆடையில்லாமல் நிற்பது போல் உடல் கூச குருவை ஏறிட்டு பார்த்தவள், அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் அழுது கொண்டே ஓடினாள்.
தொடரும்..
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…