அந்த நகரம் ஒரே வண்ணத்தால் உருவாக்கப்பட்டது.மிக உயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது .அங்கே மனிதர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறார்கள்.மஞ்சள் நிற உடை அணிந்த காவலர்கள் அனைவரையும் கண்காணிக்கிறார்கள்.நகரின் நடுபகுதியில் இருந்த அந்த கட்டிடம் தான் தலைமையகமாய் இருந்து வருகிறது .காலை சரியாக ஒன்பது மணிக்கே தலைமை அதிகாரி தனது அறைக்குள் நுழைந்தார்.சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் கெளசிக் சித்திரகுப்தன் நுழைந்தார் .தீபக் எமதர்மராஜன் அவருக்காக காத்திருந்தார் .கெளசிக் தனது கையில் இருந்த லேப்டாப்பில் இருந்து நேற்று வந்தடைந்த நரன்கள் விவரமும் இன்று வர வேண்டிய நரன்களை பற்றிய விவரங்களை காட்டினார் .பின்பு கோல்ட் ரூம் ,சில்வர் ரூம் ,டார்க் ரூம் நரன்களை பற்றி விசாரித்தார் .புதிய நரன்களின் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தனித்தனியே பிரித்தனுப்ப அந்தந்த துறைக்கு ஒப்புதல் அளித்து விட்டு அறையில் இருந்து வெளியேறினார்.
எங்கும் அமைதி நிலவும் நகரம் .மாலை வேளையில் தனது மனைவியுடன் நடைப்பயிற்சி போகும் போது தினமும் அந்த இளம் பெண் இவர்கள் வரும் பாதையில் காத்திருப்பாள் .அதை இவரும் கவனிப்பார் ஆனால் நரன்களுடன் எமலோக தலைமை அதிகாரிகள் நேரடியாக பேச தடை இருப்பதால் இவர் பேச முன்வருவதில்லை.இவருடைய மனைவி ஒரு நாள் அவரிடம் “அந்த பொண்ணுகிட்ட பேசி பாக்கலாமே .ரோம்ப பாவமாய் இருக்கு.கோல்ட் ரூம்ல இருக்குற பொண்ணு.அவ்ளோ சுகங்கள் இருந்தும் அவ எதுக்காகவோ உங்கள தேடி வர்றா .எனக்காக உங்க மேலிடத்துல அனுமதி வாங்கி பேச முயற்சி பண்ணுங்க “என்றதும் தீபக்கும் சம்மதித்தார் .முறையான அனுமதி கிடைத்த உடன் தனது வீட்டிற்கு அழைத்து வர செய்து மனைவியின் முன்னிலையில் பேச ஆரம்பித்தார் .
“உனக்கு என்ன வேணும்?என்றதும் அவள் தலை நிமிர்ந்து “சார் இன்னும் இரண்டு நாள்ல என்னோட இறந்த நாள் வருது .அப்போ நான் அங்க இருக்கணும் .என்னோட ஞாபகங்கள் இன்னும் எத்தனை பேர்க்கு இருக்குனு தெரிஞ்சுக்கனும்.இரண்டு நாள் மட்டும் அனுப்பி வையுங்க சார் ப்ளிஸ் “என்றதும் தீபக் “நீ வாழும் எந்த பாவமும் செய்யல அதனால தான் இப்ப கோல்ட் ரூம்ல இருக்க.இந்த உலகத்த விட்டுட்டு பூமியில் என்னம்மா இருக்கு?என்றதும் அவள் “சார் நான் வாழும் போது ஏதோ ஒரு உணர்வ புரிஞ்சுக்கலைன்னு தோணுது .என் மனசு அலை பாயுது.எனக்கு இரண்டு நாள் மட்டும் அனுப்பி வையுங்க ப்ளிஸ் “என்றதும் தீபக் தனது அறையில் இருந்து ஒரு சிகப்பு கலர் கார்டை அவளிடம் கொடுத்து “இதை வச்சுக்கோ லிப்டில் இறக்கி விடுவாங்க .இந்த கார்ட் இருந்தா மட்டும்தான் நீ யார் வீட்டுக்குள்ளும் போக முடியும் .இரண்டு நாள்ல நீ வரலைன்னா அப்புறம் உனக்கும் தண்டனை இருக்கும் .போய்ட்டு வா”என்றதும் அவள் பூமியில் அந்த பரபரப்பான சாலையின் மத்தியில் இறக்கிவிடப்பட்டாள்.
சாலையில் இறங்கிய அடுத்த நிமிடம் அவளுக்கு அந்த நொடிகளில் நான்கு வருடங்களுக்கு முன்பு இதே சாலையில் இவள் கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் நொடி பொழுதில் இவள் மீது மோதி இரத்த வெள்ளத்தில் துடித்து இறந்ததை நினைவு கொள்கிறாள் .அவள் உடல் சிலிர்க்கிறது.இப்போது சாலையை கடந்து தனது வீட்டை நோக்கி புறப்படுகிறாள்.
அம்மா,அப்பா,அண்ணன் ,அண்ணி எல்லோரையும் பார்க்கும் ஆர்வத்தில்.இத்தனை வருடத்தில் ஏராளமாக மாறி இருக்கும் அவளுடைய தெரு.புதிதாய் பெயிண்ட் பூசப்பட்ட அவளுடைய வீடு. அவள் சறுக்கி சறுக்கி விளையாடிய அந்த இரும்பு கேட்டை கடந்து வீட்டிற்குள் நுழைகிறாள்.அப்போது சமையல் அறையில் இருந்து அவளுடைய அம்மா வெளியேறுகிறாள் அப்பா டி.வி பார்த்தப்படியே”என்னம்மா ?”என்றதும் அம்மா “இல்லைங்க யாரோ வந்த மாதிரி இருந்துச்சு “என்றதும் அப்பா “நான் இங்க தான் இருக்கேன் யாரும் வரலையே .”என்றதும் மீண்டும் சமையல் அறை திரும்பினாள் .
தனது பெற்றோரை பார்த்த மகிழ்ச்சியில் அவள் கண்கள் குளமாகியது.உருவமே தெரியாத தனது வரவை உணர்ந்த தாயுள்ளம் கண்டு நெகிழ்ந்தாள்.கொஞ்ச நேரத்தில் அவளது அண்ணனும் ,அண்ணியும் ஆபிஸ் முடிந்து வீடு திரும்பினர் தனது மகள் காவ்யாவுடன் .அம்மா அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்தார் .அப்பா பேத்தியுடன் விளையாடிக்கொண்டு இருந்தார் .அவள் இறக்கையில் காவ்யா கைக்குழந்தையாக இருந்தாள் .தனது கையில் தவழ்ந்த குழந்தை இன்று மழலை பருவத்தில் இருப்பதை கண்டு ரசித்தாள் .அப்போது அம்மா அவளது அண்ணனிடம் “அருண் நாளைக்கு அவந்திகா இறந்த நாள் வருது .அவளுக்கு செய்ய வேண்டியத செய்யணும் “என்றதும் உள்ளிருந்து வந்த அண்ணி “வருஷா வருஷம் இது பெரிய தலைவலியா இருக்கு.இந்த வருஷம் ஒண்ணும் வேணாம் .உங்க பொண்ணு வந்து கேட்டாளா?”என்றதும் அம்மா வாயடைத்து போனாள் .அருணும் தலை குனிந்தான் .அவந்திகா அம்மாவின் கண்ணீர் கண்டு தவித்தாள்.நான் மட்டும் இருந்திருந்தால் என் அம்மா ,அப்பாவை கெளரவமா வச்சிருப்பேன் என்று எண்ணி கலங்கினாள் .இரவு அம்மாவும் அப்பாவும் தூங்கும் போது அவர்கள் காலடியில் அமர்ந்து “எனக்கு எதுவும் வேண்டாம்மா.நீங்க நிம்மதியாக இருங்க எனக்கு அது போதும் .அடுத்த ஜெண்மத்தில் மறுபடியும் உங்களுக்கே மகளா பொறக்கணும் .உங்க காலம் முழுவதும் கண்கலங்காம பாத்துக்கணும் ” என்று அப்பாவின் கால்களை தொட்டு கண் கலங்கினாள் .
காவ்யாவின் அறைக்குள் சென்று அவள் தூங்குவதை ரசித்தாள் .காற்றில் அசையும் அவள் தலை முடிகளை ரசித்தாள் .பின்பு தனது வீட்டை விட்டு வெளியேறினாள் .தன்னோட உறவுகள் ,நண்பர்கள் அனைவரையும் பார்த்து அவர்களது தற்போதைய நிலைகண்டு மகிழ்ந்தாள்.அவள் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதை உணர்ந்து அவள் இறந்த அதே சாலையில் காத்திருந்தாள் .காலையில் கல்லூரி சாலை பரபரப்பானது .
அப்போது அவளின் எதிர்ப்புறத்தில் ஒரு இளைஞன் வேகமா நடந்து வந்து அவள் இறந்த அந்த இடத்துல பூக்களை தூவி சிறிது நேரம் கண்களை மூடி அஞ்சலி செய்தான் .அவன் அருகில் சென்று அவன் முகத்தை பார்த்தாள் .அவன் அவளோட நண்பன் அரவிந்த் .பள்ளிக்காலம் முதலே நெருங்கிய நண்பர்கள் இவர்கள் .தன்னுடைய நண்பன் மனதில் தான் இன்னும் அழுத்தமாக பதிந்திருப்பதை பார்த்து நெகிழ்ந்தாள் .கண்களை திறந்த அவன் வெறிபிடித்தவன் போல் எதிரே வேகமாய் வந்து கொண்டு இருந்த பேருந்தில் மீது பாய்ந்தான் .சற்றும் எதிர்ப்பாக்காத அவந்திகா நிலை குலைந்தாள்.அவள் இறந்த அதே இடத்தில் அவன் துடித்து கொண்டு இருந்தான் இரத்த வெள்ளத்தில் .ஆம்புலன்ஸ் வந்ததும் அவனை ஏற்றினார்கள்.அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டு இருந்தது .அவன் கண்கள் மூடியதும் சட்டேன மீண்டும் திறக்கையில் எந்தவித காயமும் இன்றி அவன் அஞ்சலி செய்த அதே இடத்துல நின்று கொண்டு இருந்தான் .அவன் எதிரே அவந்திகா நின்று கொண்டு இருந்தாள் .அப்போது அவன் நிலை உணராது நின்றான் .அப்போது அங்கு லிப்ட் வந்து நின்றது .இருவரும் உள்ளே ஏறினர்.அப்போது அவந்திகா அவனை ஓங்கி அறைந்தாள்
.அழுதப்படியே”ஏன்டா இப்படி பண்ணிக்கிட்ட ?இது பெரிய பாவம் .இதுக்கு டார்க் ரூம் தான் கிடைக்கும் .செத்ததுக்கு அப்புறமும் தண்டனை அனுப்பவிக்க போற “என்று தலையில் அடித்து கொண்டு அழுதாள் .அவன் மெதுவாக அவள் கைகளை பிடித்தபடி “நீ இல்லாம வாழ்றது தான் பெரிய தண்டனை “என்றதும் அவள் எதுவும் புரியாமல் “நீ என்னடா சொல்ற ?”என்றதும் அவன் அவளிடம் “உனக்கு நான் நண்பன் .எனக்கு நீ அதுக்கும் மேல .ஸ்கூல்ல இருந்தே உன்னை லவ் பண்ணிட்டு தான் இருந்தேன் .உன்கிட்ட பழக நட்ப பயன்படுத்திகிட்டேன்.நண்பனா இருந்தேன் ஆனா காதலனா வாழ்ந்துட்டு இருந்தேன் .ஸ்கூல் முடிஞ்சு வேற வேற காலேஜ் போனலும் உன்ன நிழல் மாறி தொடர்ந்துட்டு தான் இருந்தேன் .நீ என்னை எதார்த்தமா சந்திச்சதுன்னு நினைச்சது எல்லாம் நான் திட்டப்படி நடந்தது .உன்னை எனக்கு அவ்ளோ புடிக்கும் .ஒரு காலகட்டத்திற்கு மேல என்னால நண்பனா நடிக்க முடியல .
எப்படியாவது காதல சொல்லிறனும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்திருக்கேன்.நண்பனா பழகிட்டு காதலனா மாறும் போது ஏற்படுற தடுமாற்றம் எனக்கும் இருந்துச்சு .கடைசியா ஒரே முடிவா காதல சொல்லியே ஆகணும்னு அதே ரோட்டுல காத்திருக்கும் போது என் கண் முன்னாடியே நீ சாகுறத பாத்தேன் .அப்பவே நானும் செத்திருக்கணும்.ஒவ்வொரு நாளும் நீ இல்லாம வாழ்றது தான் சாவவிட கொடுமையா இருந்துச்சு .”என்று அவள் கைகளை பிடித்து கதறி அழுதான் .லிப்ட் வந்தடைந்தது .வாசல் காவலர்கள் அவனிடம் கருப்பு கலர் கார்ட தந்து டார்க் ரூம் போகும் வாகனத்தில் ஏற சொல்லும் போது அவந்திகா ஓடி வந்து அவனை கட்டியணைத்து “ஸாரிடா உன்னோட காதல உணராம இருந்துட்டேன்”என்று கண்ணீர் சிந்தினாள்.இருவரும் தங்களது வண்டிகளில் ஏறி பிரிந்து சென்றனர் .
அவந்திகா பூமிக்கு சென்றது முதல் நடந்தது அனைத்தையும் தீபக் தனது மனைவியுடன் லேப்டாப்பில் பார்த்து கொண்டு இருந்தார் .தீபக்கின் மனைவி இறுகிய மனதுடன் அமர்ந்திருந்தார் .அப்போது தீபக் “என்னங்க மேடம் பூலோக காதல் கலங்க வைக்குதோ?உணர்ந்தபடாத காதலும் உணராத காதலும் கடைசியில் முடிவு இப்படி தான் இருக்கும் “என்று சொன்னார் .மறுநாள் ஆபிஸ் போனதும் டைம் மிஷின் ரூம்க்கு போய் அதில் அவந்திகா ,அரவிந்த் இருவரின் கடந்த காலத்த முன்னோக்கி நகர்த்தினார்.
அடுத்த நொடி பரபரக்கும் சாலையில் அவந்திகா ரோட்டை தாண்டும் போது அவளின் பின்னால் இருந்து அரவிந்த் அவள் கையை பிடித்து நிறுத்தி “ஐ லவ் யூ அவந்திகா “என்றதும் அவள் அதிர்ச்சியில் திகைத்து போய் நின்றாள் .
தீபக் எமதர்மராஜன் சிரித்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினார் .
[முற்றும் ]
நன்றிகள் !
வணக்கங்களுடன் !
நான்
உங்கள்
கதிரவன் !
[என்னோட வாட்ஸ்அப் நம்பர் 9600532669 ]