இந்தி சாமியார்

0
489

சனிக்கிழமை எப்பவும் போல திருச்சியில் அம்மா வீட்டில் இருந்து குளித்தலை செல்லும் ட்ரைன் ஏறி மகனுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. ஆறு மணி ட்ரைன் என்பதால் உட்காருவதற்கு இடம் கிடைத்தது. ட்ரையினில் ஏறும் பொழுது அவனை முன்னால் ஏற்றிவிட்டு பின்னால் நான் ஏறுவதற்குள் அங்கே இருந்த ஒரு சாமியார் அவனது தலையில் ஆசிர்வதிப்பது போல கையை வைக்க… இடம் பிடிக்க வேண்டிய அவசரத்தில் அங்கே நிற்காமல் வேகமாக அவனது கையை பிடித்து இழுத்துக்  கொண்டு வந்து , நல்லதாக ஒரு சீட்டை பிடித்து அமர்ந்து கொண்டேன்.

அதிசயத்திலும் அதிசயமாக என்னுடைய ஐந்து வயது மகன் திருவாளர். பரத் அவர்கள் சீட்டில் அமர்ந்து சில நிமிடங்களிலேயே என்னுடைய  மடியில் படுத்து சட்டென உறங்கிப் போனார். எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். அவன் அப்படி தூங்குபவன் அல்ல… ட்ரைன் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும் வரையிலும் ட்ரெயினில் குதித்துக் கொண்டும்… ஆடிக் கொண்டும்… என்னுடயை தலையை கலைத்தும்… உடையை பிடித்து இழுத்தும்…. கதைகள் பல சொல்லியபடியும் தான் நேரத்தை கழிப்பார்.

இது அனைத்தையும் தாண்டிய ஒரு முக்கியமான விஷயம் ட்ரெயினில் விற்கும் தின்பண்டங்கள் அவருக்கு கண்டிப்பாக வாங்கிக் கொடுக்க வேண்டும். வீட்டில் இருந்து கிளம்பும் வரை எத்தனை முறை பசிக்கிறதா என்று கேட்டாலும் அவரது பதில் பசியே இல்லை தான். அது என்ன மாயமோ தெரியாது ட்ரையினில் ஏறியதும் அவருக்கு பசி கட்டுக்கடங்காமல் வந்து விடும்.

அவரைப் பற்றி தெரிந்து கொண்டே வீட்டில் இருந்து உணவுகளை எடுத்து செல்லத் தொடங்கினேன். ஆனால் அவையெல்லாம் அவரின் பசியை தணிக்காது. அவற்றை திறந்து பார்க்கக் கூட மறுத்து விடுவார்.

 “கொஞ்சம் பொறுத்துக் கொள் வீட்டுக்கு போய் சாப்பிடலாம்” என்று சொன்னாலும் அவரிடம் அந்த பதில் எடுபடாது.( பயணம் ஒரு மணி நேரம்)

மொத்த  கூட்டமும் என்னை திரும்பிப் பார்க்கும்படி அழத் தொடங்கி விடுவார். நம் மக்கள் ஒரு பச்சை குழந்தை அழுவதைப் பார்த்தால் மனம் பொறுப்பார்களா?… கண்டிப்பாக இல்லை… எல்லாரும் ஆளுக்கு ஒவ்வொரு விதமான அட்வைசுடன்(வசையுடன்) வந்து விடுவார்கள்.

“ஏன்மா… குழந்தை இப்படி அழுகிறான்… வாங்கிக் கொடேன்”

“பத்து ரூபாய் தானே” என்பதில் தொடங்கி… “பத்து ரூபாய் இல்லையா உன்னிடம்” என்பது வரை பேச்சுக்கள் வந்து நிற்கும். இதனால் இப்பொழுதெல்லாம் அந்த பெரிய மனிதர் கேட்கும் பொருளை வாங்கிக் கொடுத்து விடுகிறேன். இல்லையென்றால் சுற்றி உள்ள எல்லாரும் என்னை பார்வையாலேயே  ‘அடி கொலைக்கார பாவியே’ என்ற ரீதியில் லுக் விடுவதை ஏற்கனவே சில முறை அனுபவத்தில் கண்டு இருப்பதால் இந்த முடிவு.

ட்ரெயினில் விற்பதில் எல்லாவற்றையும் அவருக்கு வாங்கிக் கொடுக்க மாட்டேன்.

சமோசா, டீ முதலியவை எப்படிக் கேட்டாலும் கிடைக்காது அவருக்கு…

அதற்கு பதிலாக வேறு சில தின்பண்டங்கள் மட்டுமே வாங்கிக் கொடுப்பேன்.

வேக வைத்த கடலை, சுண்டல்… காரப் பொறி… இது மட்டும் தான் வாங்கிக் கொடுப்பேன். இதே உணவுகளை வீட்டில் சமைத்துக் கொடுக்கும் பொழுது சார் கொஞ்சமும் சீண்டவே மாட்டார் என்பது நான் மட்டுமே  அறிந்த ரகசியம். இப்படியாவது இதை எல்லாம் சாப்பிடட்டுமே என்று ஒரு சப்பைக்கட்டு வேறு இருக்க… வேற என்ன வேண்டும். ஒவ்வொரு முறையும் ட்ரைன் பயணத்தில் இது ஏதாவது கண்டிப்பாக சாருக்கு வாங்கிக் கொடுத்து விடுவேன்.

கடந்த வாரம் அப்படி எதுவுமே நிகழாமல் வண்டி ஏறியதுமே அவர் உறங்கியதும் நம்ம கதைகளின் ஹீரோவைப் போல எனக்கும் புருவம் உச்சிக்குப் போனது ஆச்சரியத்தில்…

ஒரு வழியாக சார் தூங்கி விட்டார்…

‘இப்போ நான் என்ன செய்றது?…’

பயணங்களின் பொழுது பெரும்பாலும் மொபைல் நோண்டுவது கிடையாது… சில நொடிகளிலேயே தலைவலி ஆரம்பித்து விடும் என்பதால் வெறுமனே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

மூன்று பேர் அமர்ந்து வரக் கூடிய சீட்டில் எனக்கு எதிரில் ஒரு பெண்மணியும் எனக்கு அருகில் ஒரு பெண்மணியும் அமர்ந்து இருக்க… அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் போலும்.. கட்டிட வேலை செய்பவர்கள் என்பது அவர்களின் பேச்சில் இருந்து எனக்கு புரிந்தது. வேலை நேரத்தில் நடந்தவைகளைப் பற்றி கதை பேசிக் கொண்டே வந்தார்கள். இடையிடையே என்னைப் பார்த்து ஒரு சிநேகமான சிரிப்பு வேறு…

“குழந்தை நன்றாக தூங்கி விட்டான் போலவே… இங்கே படுக்க வைமா” எதிர் சீட்டில் இருப்பவர் கேட்க.. சிரித்த முகமாகவே மறுத்து விட்டேன்.

“ட்ரைன் வேகமாக போகும் பொழுது பிள்ளை தூக்கம் கலையும்… இப்படியே இருக்கட்டும்… நடுவில் முழிக்கும் பொழுது என் முகம் தெரியலைனா பிள்ளை பயப்படுவான்” என்று சொல்ல அவர்களும் மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டனர்.

ஒரு பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும்… வேறு ஒரு பெட்டியில் இருந்து ஒரு பெண் வேகமாக ஓடி வந்தார் எனக்கு எதிரில் இருந்த பெண்ணை நோக்கி.

“அக்கா… இந்தா உன் தோடை நீயே போட்டுக்கோ… என்னோடதை கழட்டிக் கொடு…” என்று சொன்னவர் அவரின் அருகிலேயே அமர்ந்து மெல்ல அவருடைய காதில் இருந்த தோட்டை கழட்டிவிட்டு… தன்னுடைய கைகளில் வைத்திருந்த அவரது தோடை நிறுத்தி நிதானமாக அணிவித்து விட்டார். அவரின் கைகளில் இருந்த தன்னுடைய தோடை எடுத்து மீண்டும் அணிந்து கொண்டவரைப் பார்த்து  மற்ற இரு பெண்மணிகளும் சிரிக்கத் தொடங்கினர்.

“என்னடி செல்வி இப்போ தான் ரொம்ப பாசமா உன்னோட தோடை கொடுத்து போட சொன்ன…பத்து நிமிஷம் கூட தாண்டலை… மறுபடியும் வந்து தோட்டை மாத்திட்ட என்ன விஷயம்? அக்கா உன்னோட தங்கத்தோட்டை தூக்கிட்டு ஓடிடுவேன்னு பயம் வந்துட்டா… என்னோடதும் தங்கம் தான்டி ஆத்தா…”என்று கிண்டலடிக்கத் தொடங்கினார்.

(அந்தப் பெண் செல்வி தன்னுடைய சேமிப்பில் புதிதாக வாங்கிய தங்க தோட்டை வீட்டுக்கு அணிந்து சென்றால் அவருடைய குடிகார கணவன் குடிப்பதற்காக அதை பிடுங்கி சென்று விடுவார் என்ற காரணத்தை சொல்லி சில நிமிடங்களுக்கு முன்பு தான் அந்த பெண்ணே அதை அவருக்கு அணிவித்து இருக்கிறார்… வீட்டில் கேட்டால் காதில் அணிந்து இருப்பது எதிர் சீட்டு அக்காவின் தோடு என்று சொல்லி விட வேண்டும் என்று இருவருக்கும் பேச்சு)

“அட நீ வேற அக்கா… நானே பதறிட்டு வந்து இருக்கேன்.. நீ என்னடான்னா சிரிப்பு மூட்டிக்கிட்டு இருக்க… என்று சொல்ல… மற்ற இரு பெண்களுக்கும் ஆர்வம் அதிகமானது…(ஹி.ஹி… என்னையும் சேர்த்து தான்)

“கொஞ்ச நேரம் முன்னாடி இங்கே யாரும் சாமியார் வந்தாரா?”

“யாரு… ஓ.. அந்த இந்திக்காரனை சொல்றியா?”

“ஆமாக்கா… அவரே தான்…உங்க கிட்டே எதுவும் பேசினாரா?”

“ஆமா… அந்தாளு காசு கேட்டான்… அப்புறம் இந்தியில் ஏதோ சொன்னான்…எங்களுக்கு புரியலை… அப்புறம் காசு கேட்டான். நாங்க காசு இல்லைன்னு சைகை பண்ணிட்டு முகத்தை இப்படி திருப்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். கொஞ்ச நேரம் நின்னு பார்த்தான்… நாங்க திரும்பலையா… அப்புறம் வேற பெட்டிக்கு போய்ட்டான்…”

“ஆமா..இதெல்லாம் எதுக்கு கேட்கிற…” என் அருகில் இருந்தவர்…

“அந்த ஆளு இப்போ நான் இருக்கிற பெட்டியில் தான்க்கா இருக்கான்… வந்தவன் என்னைப் பார்த்து இந்தியில் ஏதோ சொன்னான்…”

“ம்ம்ம்”

“நானும் அந்தாளு கிட்டே..இந்தி நெயி மாலும்னு கத்தி கத்தி சொன்னேன்க்கா.”

“அப்படின்னா?”

“எனக்கு இந்தி தெரியாதுன்னு சொன்னேன்க்கா”

ஓ… அந்த அளவுக்கு இந்தி பேச தெரியுமா உனக்கு?”

“அட நீங்க வேறக்கா… அந்த ஒரு வார்த்தை தான் இந்தியில் தெரியும்…”

“சந்தோசம் மேல சொல்லு…”

“அவன் நகரவே இல்ல…”

“மூஞ்சியை திருப்பிக்க வேண்டியது தானே…”

“ஆமா..நீங்க ரெண்டு பேரும் ஜன்னல் பக்கம் இருக்கீங்க… மூஞ்சியை திருப்பிக்கலாம்.. நான் அப்படி இருக்க முடியுமா… அதுவும் இல்லாம நான் எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்தப் பக்கம் மூஞ்சியை கொண்டு வந்து என்னமோ சொன்னான் அக்கா…”

“என்ன சொன்னான்?”

“என்னோட நெத்தியில் இருக்கிற பொட்டையும், காதில் போட்டு இருக்கிற தோட்டையும் காட்டி மறுபடி மறுபடி ஏதோ சொல்லிட்டே இருந்தான்… எனக்கு பயமாகிடுச்சு”

“அடி கூறு கெட்டவளே… இதுல பயப்படும்படியா என்ன இருக்கு…”

“இல்லக்கா… இப்போ எல்லாம் நியூஸ்ல இந்திக்காரங்க பணம்,நகைக்காக கொலை செய்றதா  காட்டுறாங்க இல்ல… அதான்…”

“அடிப்பாவி.. அந்தாளு சாமியாருடி”

“இருக்கட்டும் அக்கா… அந்தாளைப் பத்தி நமக்கு என்ன தெரியும்? உங்க தோடைக் காட்டி பேசவும் எனக்கு பயமாகிடுச்சு… எனக்கு ஏதாவது ஆனாலும் கூட உங்க பொருளுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு தோணுச்சுக்கா.. அதான் ஓடி வந்து உங்க பொருளை உங்க கிட்டே கொடுத்துட்டேன்.”

“இப்போ உன்னோட தோடை வாங்கி மாட்டி இருக்கியே.. இதுவும் தங்கம் தானே… அதுவும் புத்தம் புதுசு… வாங்கி ஒருநாள் கூட ஆகல… இது போனா பரவாயில்லையா?”

“போனா போகட்டும்க்கா… இது என்னோடது… நான் மாசக்கணக்கில் கஷ்டப்பட்டு காசு சேர்த்து வச்சு வாங்கினது… இது திருடு போனா ஒரு ரெண்டு நாள் அழுவேன்.. அப்புறம் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சுடுவேன்… ஆனா உங்களோடது திருடு போனா என்னால நிம்மதியா தூங்க முடியாது…சோறு திங்கவும் முடியாது…உறுத்திட்டே இருக்கும்..அதான் கொடுத்துட்டேன்.” என்று சொல்லி முடித்த பெண்ணின் கண்களில் அத்தனை நிம்மதி.

தினமும் கூலி வேலைக்கு செல்லும் பெண்… குடிகார கணவன்… அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாத அந்த குணம்… இதை விடவும் வேறென்ன அழகு வேண்டும்?…

இறங்கும் இடம் வந்ததும் தூங்கிக் கொண்டிருந்த பையனை எழுப்பி நான் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

எல்லாம் சரி தான்… அந்த தலைப்புக்கும் இந்த பெண்ணை நீ பாராட்டினதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது…

அந்த சாமியார் முகத்தை நான் பார்க்கவே இல்லைன்னு பீல் பண்ணி தான் இப்படி பக்கம் பக்கமா எழுதி தள்ளுறேனாக்கும்… யாராவது ட்ரையினில் அவரைப் பார்த்தா அவர் அந்த பொண்ணுகிட்டே என்ன சொல்ல முயற்சி செஞ்சார்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க மக்கா…

அவரைப் பத்தின அடையாளம் சொல்றேன் கேட்டுக்கோங்க…

  • அவர் ஒரு சாமியார்
  • தாடி வச்சு இருந்தார்.
  • காவி நிறத்தில் உடையும்,தலைப்பாகையும் அணிந்து இருந்தார்.
  • இந்தி பேசுவார்.

எனக்கு தெரிஞ்ச அடையாளத்தை எல்லாம் தெளிவா சொல்லிட்டேன்..யாராவது பார்த்தா… விசாரிச்சு சொல்லுங்க…

ப்ரியங்களுடன்,

மதுமதி பரத்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here