இசை திகைத்துப்போய் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துவிட்டான்..
“இவளா??? இங்க தான் காலேஜ் சேர்ந்திருக்காளா?? உன்னால தான்டி என் குடும்பம் முன்னாடி அவமானப்பட்டு இங்க வந்து சேர்ந்திருக்கேன்… உன் புருஷன் பண்ணிணதுக்கு நீ அனுபவிக்க வேண்டாம்??? உன்னை சும்மா விட மாட்டேன் டி..” வன்மமாக நினைத்தவன் அவளை முறைத்து பார்க்க,
அவனின் பார்வையை கண்டுக்கொள்ளாதது போல் அவள் தன் வகுப்பறையை கண்டறிந்த சென்றுவிட, அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்தது.
ஆனால் மறுநாளே அவளை பற்றி போஸ்டர் ஒட்டாத குறையாக கதை கட்டியிருந்தான் சந்தோஷ். அவளால் தான், தனது ஜுனியர் மாணவன் இறந்ததாகவும், பணக்கார பையன்களிடம் மட்டுமே பழகி ஏமாற்றுவாள் என்றும் அவன் தனது சக தோழர்களிடம் கதை கட்ட, முதலில் நம்பாதவர்கள் அவன் காண்பித்த பத்திரிக்கை செய்தியில் நம்பினார்கள்.. அதில் அவள் பெயரும் வந்திருந்தது.. அன்று அவள் கவனிக்காமல் விட்டதை அவளுக்கு எதிராக திருப்பினான் சந்தோஷ்.
அடுத்தடுத்த நாட்களில் அவள் வாழ்க்கை வரலாறு அங்கு அலசி ஆராயப்பட, அவளிடம் யாரும் பேச முன் வரவில்லை.
அனைத்து மாணவர்களும் அவளை ஒரு மாதிரி பட்ட பெண் என்று சில பல பட்டங்களை அவளுக்கு சூட்டி அவளை அழைக்க, அதில் அவள் உடமெல்லாம் கூசியது. மாணவிகளும் அவளை ஓதுக்க ஆரம்பிக்க, அவள் தனிமைபடுத்தப்பட்டாள். மொத்தத்தில் அவளது கல்லூரி வாழ்க்கையை சூனியமாக்கினான் சந்தோஷ்.
கல்லூரி அருகே இருந்த கோவிலில் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் இசை.. தவறு செய்யாமல் தன்னை தொடர்ந்து வரும் பழி சொல்லை துடைக்கும் வழி தெரியாமல் அழுதவாறு இருக்க, மனம் அமுதனை தேடியது.
அவனையே நினைத்துக் கொண்டிருந்தவள் கண் மூட, கண்களுக்குள் அமுதனின் “நான் இருக்கேன் உனக்காக” என்ற வார்த்தை ஒலிக்க, சட்டென்று கண்களை திறந்தாள்.
இவ்வளவு நேரம் ‘என் மேல் தவறில்லை என்று எப்படி புரிய வைப்பேன்’ என்று குழம்பியவள் தன் மனதில் ஒலித்த அமுதனின் வார்த்தைகளுக்கு பிறகு, ‘எதற்காக புரிய வைக்க வேண்டும்??’ என்று தன்னை தேற்றிக் கொண்டாள். கண்களை அழுத்த துடைத்தவள் இனி அழக்கூடாது என்று முடிவு செய்தவளாக தன் லட்சியத்தை மட்டுமே இலக்காக கொண்டு முன்னேற துவங்கினாள்.
என்ன தான் அவள் ஒதுங்கி சென்றாலும் வலிய சென்று வம்பு செய்தான் சந்தோஷ்.. அவளை காணும் போதெல்லாம் அவன் “கொலைகாறி” என்று அழைக்க, ஒரு நாள் கோபத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் இசை..
“ராஸ்கல்.. இன்னொருக்கா என்னை பத்தி எதாச்சும் பேசின???” ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவள், அவனை பார்வையாலே எரிக்க, அங்கிருந்த அனைவருமே அவளின் கோபத்தில் அதிர்ந்தனர். அனைவரையும் ஒரு முறை பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
சரியாக ஒரு வாரத்தில் சந்தோஷிற்கு விபத்து என்று கேள்விபட்டவள் அடுத்த இரண்டு நாட்களில், டீ.சி வாங்கிவிட்டு சென்றுவிட்டான் என்று மற்றவர்கள் பேசியதில் அறிந்துக்கொண்டாள்.. ஏன் என்று யோசித்தாலும் அவள் அதை கண்டுக்கொள்ளவில்லை.. அவன் இல்லாது போன பிறகு மற்றவர்களும் அவளை கேலி செய்வதை குறைத்துக் கொண்டனர். அதற்கு முக்கிய காரணம் அன்று சந்தோஷை அடித்த அடியும் அதில் தெரிந்த அவளது ஆக்ரோஷமுமே!!
அமுதனோடு காரில் பயணம் செய்துக்கொண்டிருந்தாள் மலரிசை. இந்த நான்காண்டும் அவளை நிறைய மாற்றியிருந்தது.. மூன்று வருட கல்லூரி வாழ்க்கை அவளை தைரியமாகவும் தனித்து நிற்கும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தது என்றால் அடுத்து இந்த ஒரு வருட வாழ்க்கை, பேச்சாக அல்லாமல் செயலில் அவளது திறமைகளை காட்ட வைத்தது..
மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் அமுதன் அவளை ஒருமுறை கூட வந்து சந்திக்கவில்லை.. முதல் வருட செமஸ்டர் விடுமுறையில் அவள் ஊருக்கு கிளம்ப, அவளது ஹாஸ்டல் வார்டன் வந்து அவளை அங்கேயே தங்குமாறு, அமுதன் போன் செய்து கூறியதாக கூறினார்.. அதில் அவள் பெரிதாக அதிர்ந்தாலும் தன்னை தேற்றிக் கொண்டு விடுமுறை நாட்களையும் கல்லூரி ஹாஸ்டலிலே கழித்தாள்..
அடிக்கடி அமுதனின் நினைவு வந்து அவளை வதைக்கும், அதுவும் அவன் மேல் மொட்டுவிட்டிருந்த காதல் இப்போது விருட்சமாக வளர்ந்து அவள் மனதில் வேர்விட்டிருந்தது.. எப்போது அவனை காதலிக்க துவங்கினாள் என்று அவளுக்கே தெரியாது ஆனால், என்று அவளை ஹாஸ்டலில் சேர்க்கப்போவதாக கூறினானோ அன்று புரிந்துக் கொண்டாள், அவள் அவனை காதலிப்பதை…
அவளது படிப்பு முடிந்ததும் சரியாக வந்தவன், சென்னையிலே மற்றொரு ஹாஸ்டலில் அவளை சேர்த்துவிட அவள் அதிர்ந்தாள்..
சிவில் சர்வீஸ் எக்ஸாம் முடியும் வரை இங்கேயே கோச்சிங் சென்டரில் படிக்குமாறு.. கூறி சென்றவன் அதன் பின் அவள் ப்ரிலிம்ஸ் பாஸாகி, மெயின்ஸ் எழுதிய பின்னரே அவளை ஊருக்கு அழைத்து செல்கிறான்.
தன் பக்கவாட்டில் அமர்ந்து அவன் கார் ஓட்டும் கம்பீரத்தை பார்க்க சொல்லி தூண்டிய மனதை கடிவாளமிட்டு அடக்கியவாறு வந்தாள் இசை.. அவளை அழைக்க வந்த போது அவன் நடையிலும் முகத்திலும் தெரிந்த கம்பீரம், அதை விட அவன் முகத்தில் தெரிந்த ஆளுமை எல்லாமே அவளை அவன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தது.. ஆனாலும் அவனிடம் அதிகம் பேசாமல் மௌனத்தை கையில் எடுத்துக் கொண்டாள் அவள்.
ஹாஸ்டலில் இருந்த நாட்களில் ஒரு நாள் கூட அவன் அவளை பார்க்க வந்ததில்லை.. சரியாக ப்ரிலிம்ஸ் எக்ஸாம் எழுதிய அன்றும், ரிசல்ட் வந்த அன்றும் அவளுடன் இருந்தான்.. அவள் ப்ரிலிம்ஸ் பாஸாகிய போது அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி… இதுவரை அவள் கண்டிராதது.. அந்த மகிழ்ச்சியே அவளை மெயின்ஸ் நன்றாக செய்ய வேண்டும் என்ற உறுதியை அவளிடத்தில் விதைத்தது..
மெலிதாக அணைத்தவாறும், பரிட்சை எழுத போகும் முன் நெற்றியில் அவன் இட்ட முத்தமும் இப்போது நினைக்கையிலும் அவளுள் சில்லென்ற உணர்வை ஏற்படுத்தியது.
அவனிடம் பேச வேண்டும்.. கல்லூரியில் தான் அனுபவித்ததை எல்லாம் சொல்லி அழ வேண்டும் என அவள் இதயமும் உடலும் துடித்தாலும், அவன் சொன்ன கடமை என்ற வாக்கியமே அவளை அவனிடம் நெருங்கவிடவில்லை..
காரிலும் இருவரின் நடுவிலும் கணத்த அமைதி நிலவியது. அவள் எதாவது பேசுவாள் என்று அமுதன் அவள் முகம் பார்த்துக் கொண்டிருக்க.. அவள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்..
காரிலே அவர்கள் மதுரையை நோக்கி பயணப்பட அவள் ஆச்சரியமாக பார்த்தாளே தவிர வேறொன்றும் கேட்கவில்லை… சிறிது நேரத்தில் அசதியில் சீட்டில் சாய்ந்தவாறு தூங்கியும் விட்டாள்.
இசை கண்விழித்த போது கார் ஒரு வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தது. என்ன இடம் என்பது போல் பார்த்தவாறே இறங்கியவள்,
“நாம எங்க இருக்கோம் மாமா???” என்க,
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “மதுரை தான் இசை.. கொஞ்ச நாளைக்கு நாம இங்க தான் இருக்க போறோம்.. இது என்னோட ப்ரெண்ட் வீடு..” என்றவனுக்குள் சிறிது நாட்களாக அவள் தன்னிடமிருந்து ஒதுங்கியிருப்பது போன்ற தோற்றம். தன்னோடு இருந்த போது அவளிடமிருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை என்று உணர்ந்தான்.
ஏன் என்ற கேள்வி தோன்றினாலும் அவள் கேட்கவில்லை.. அதற்குள் அவளது செல்ல பிராணிகள் ஓடி வந்து அவளது காலை சுற்றினர்..
“அழகா..!! அழகி..!!” நான்கு வருடம் கழித்து அவைகளை பார்த்ததில் மகிழ்ந்தவள் அவர்களோடு விளையாட துவங்க, அமுதன் அவளை மென்னகையோடு பார்த்திருந்தான்..
“சரி சரி.. உள்ள வாங்க மூணு பேரும்..” என்றவள் அவளது பொருட்கள் அடங்கிய பையை தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, இசை அவர்களோடு அவன் பின்னே சென்றாள்..
சிறிய ஹால், இரண்டு பெட் ரூம் ஒரு பூஜை ரூம் கிட்சன் என்று சகல வசதிகளோடு இருந்தது அமுதனின் ப்ரெண்ட் வீடு.. ஏனோ அவளுக்கு அந்த இரண்டறை கொண்ட அவர்களது வீடே அவளுக்கு பிடித்தது..
இசை வீட்டையே சுற்றி பார்த்துக் கொண்டிருக்க, அமுதன் அவளது பொருட்களை கொண்டு ஒரு அறையில் வைத்தான்…
“அது உன்னோட ரூம் இசை.. உனக்கு பிடிச்ச மாதிரி செட் பண்ணிக்கோ.” என்றவன் போன் அழைப்பு வரவும் அதையேற்று பேசியபடியே வெளியே சென்றுவிட, இசை அவன் முதுகையே வெறித்தாள்..
“ம்ஹ்ம் நான் அவனோட கடமை மட்டும் தான்… அதுக்க மேல அவன்கிட்ட எதிர்ப்பார்க்க கூடாது…” தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவள் அறைக்கு சென்றுவிட்டாள்…
அவள் ஹாஸ்டல் செல்லும் முன் அவள் போடும் உடைகளும் அங்கு இருக்க, வீட்டில் எப்போதும் அவள் அணியும் பாவாடை சட்டையை எடுத்துக் கொண்டவள் குளித்துவிட்டு அதை அணிந்துக் கொண்டாள்.. கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.. அன்று தொள தொளவென்று இருந்த உடை இன்று அவளுக்கு சற்று இறுக்கமாக இருந்தது… அதை அணிந்துக் கொண்டவள் வெளியே வர, அவளை அப்படி பார்க்கவும் அமுதன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை..
“இ..இசை.. என்ன டிரெஸ் இது????” பார்வையை திருப்ப முடியாமல் அவன் கேட்க,
“நீங்க வாங்கி கொடுத்த டிரெஸ் தான் மாமா.. நல்லா இல்லையா???” அறியா பிள்ளையாக அவள் பாவாடையை பிடித்துக் கொண்டு அப்படியும் இப்படியும் சுற்றிக் காண்பிக்க, அவன் தான் தடுமாறிப்போனான். மூன்று வருடத்திற்கு முன்பே அவள் என் மனைவி என்று அவன் மனம் சண்டையிடும் இன்று மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல் இருந்தவளின் தோற்றத்தில் அவனுக்கு மூச்சடைத்தது.
இசையின் மலராவான்……