“என்ன இசை சொல்ற?? நான் எப்போ அப்படி சொன்னேன்???” என்றவன் அவளை சமாதனம் செய்ய முயல, அவளோ அவன் சொல்வதை கேளாமல் அவனை அடித்து துவம்சம் செய்தாள்…
நந்தன் தான் ஓடிச்சென்று அவள் தூக்கி போட்ட பத்திரத்தை பார்க்க, அது அவனது மற்றொரு க்ளைன்ட்டுக்காக தயார் செய்திருந்த விவாகரத்து பத்திரம்.. தன் தலையில் அடித்துக் கொண்டவன் அமுதனிடம் விரைந்தான்.
அவனோ மனைவியிடம் புரிய வைத்துக் கொண்டிருந்தான்… “இசை… என்னடி சொல்ற??? டிவோர்ஸ் பண்ண போறேனா?? நீ என் உயிர்.. உன்னை கனவுல கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுடி..” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள, அவள் அவனை விட்டு விலக எத்தனித்தாள்..
“டேய் அமுதா.. மன்னிச்சிடு டா.. உன் பேர்ல இருக்கிற மில்லை இவங்க பேருக்கு மாத்த சொன்ன பத்திரத்தை எடுத்துட்டு வர்றதுக்கு பதிலா மாத்தி விவாகரத்து பத்திரத்தை எடுத்துட்டு வந்துட்டேன்..” அப்பாவியாக கூறியவன் விவாகரத்து பத்திரத்தில் இருந்த வேறு பெயர்களை சுட்டிக்காட்ட, இசைக்கு சக்தியிருந்தால் அவனை பஸ்பமாக்கியிருப்பாள்…
“போடா வெளியே…” இசை கத்த.. அமுதன் அவனை செல்லுமாறு கூறினான்.. வேகமாக சென்று தனது ஃபலை எடுத்தவன் அங்கிருந்து செல்லும் முன், “நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி டா” என்று நண்பனிடம் கூறிவிட்டே சென்றான்…
நந்தன் சென்றதும் அமுதனின் அணைப்பில் இருந்து திமிறியவள், கோபமாக திரும்பிக் கொள்ள, அவன் அவளை பின்னாலிருந்து அணைத்தான்.. “என்னை அவ்வளவு பிடிக்குமா இசை???” என்றவன் அவளை தன்னோடு சேர்த்தணைக்க, இசை அவன் பக்கம் திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்…
“ஹேய் என்ன.. இசை.. எதுக்காக அழற??? இசை.. என்னடா???” என்றவன் அவள் அழுகை குறையாமல் இருக்கவே அவளை சோபாவில் அமர வைத்து அவள் முதுகை நீவிக் கொண்டிருந்தான்…
சற்று நேரம் அவளை அழவிட்டவன் அவளது அழுகை மட்டுப்பட்டதும், “நான் உன்னை தான்டி விரும்புறேன்… அந்த பைத்தியம் மாத்தி பத்திரத்தை குடுத்திடுச்சு” என்க,
அவள் அவனை முறைத்தாள்..
“அப்புறம் ஏன் டா என்னை கடமை கடமைன்னு சொல்ற?? அன்னைக்கு கூட இப்படி தான்.. என்னை பெரியாளக்கினதும் உன் கடமை முடிஞ்சிடும்னு சொன்ன…” என்றவள் தேம்ப ஆரம்பிக்க, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,
“ம்ம் கடமை முடிஞ்சிடும் தான்.. என் அக்கா பொண்ணை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து என் கடமை முடிஞ்சா தானே.. அடுத்து என் பொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்க முடியும்” என்க, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“என்ன பார்க்கிற.. உன்னை தான் சொல்றேன்… கடைசி வரைக்கும் எனக்கு அக்கா பொண்ணா இருந்திடலாம்னு பார்க்கிறியா??? பிச்சிடுவேன்.. சீக்கிரம் டிரைனிங் முடிச்சிட்டு. இந்த மாமாவோட பொண்டாட்டிய வந்து சேரு..” என்றவனின் கண்களில் குறும்பு மின்னியது..
“நி..நிஜம்மாவா சொல்றிங்க மாமா?? அப்போ என்னை உங்களுக்கு பிடிக்குமா???” கண்களை விரித்து கேட்டவளின் கண்ணில் முத்தத்தை வைத்தவன், “உன்னை மட்டும் தான்டி பிடிக்கும்.. மேடம் கல்யாணமான முதல் நாள் ராத்திரி என்னை பார்த்து ஒரு லுக் விட்டிங்களே அதுலயே மாமா ஃப்ளாட்..” என்றவன் அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்…
அவன் கூறுவதை நம்ப முடியாமல் பார்த்தவள், “அப்புறம் ஏன் டா என்னை பார்க்க வரவே இல்ல… நான் உன்னை எவ்வளவு தேடினேன் தெரியமா??? உனக்கு என்மேல அக்கறையே இல்லை” அவன் மார்பிலே கைக் கொண்டு குத்தினாள் அவள்.
அவளது அடியை தாங்கிக் கொண்டவன், “உனக்கு என்னை இப்போ தான் தெரியும் மலர்.. ஆனா எனக்கு உன்னை சின்ன வயசுல இருந்து தெரியும்…” என்றவன் தன் சிறுவயதில் நடந்ததை கூற, அனைத்தையும் திகைப்பாக கேட்டுக் கொண்டாள் அவள்.
மேலும் தொடர்ந்தவன், “யாருமே இல்லாத அந்த ஊர்ல நான் இருந்ததுக்கு காரணமே நீ தான்.. அப்போ அது காதலான்னு எனக்கு தெரியாது ஆனா உன்னை தனியா விட்டுட்டு போகக்கூடாதுன்னு மனசு சொல்லிட்டே இருக்கும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சதும் நம்ம வயல் எல்லாத்தையும் உன் பேர்ல மாத்தி எழுதி வச்சிட்டு அந்த ஊரை விட்டே போய்டலாம்னு இருந்தேன் ஆனா என்னைக்கு அந்த பையன் உன் பின்னாடி வர ஆரம்பிச்சானோ அப்போ புரிஞ்சிக்கிட்டேன் என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு. ஆனா உனக்கு ஒரு வேளை அந்த பையனை பிடிச்சிருந்தா நானே உங்களை சேர்த்து வச்சிடலாம்னு இருந்தேன் அதுக்கு அவசியமே இல்லாத மாதிரி நீயே அவனை விரட்டி விட்டுட்ட.. அந்த சந்தோஷத்துல தான் அன்னைக்கு உன்னை அப்படி அழுத்தமா பார்த்தேன்..” என்றவன் அவளது விரலோடு தன் விரலையும் கோர்த்துக் கொண்டான்.
தந்தையை பற்றி தெரியும் தான், ஆனால் திருமணத்திற்கு பின் இன்னொரு பெண்ணோடு தொடர்பு.. ச்சீய்.. நினைக்கும் போதே அருவுறுத்தது அவளுக்கு.. தன் தாயை பூரணி திட்டுவதில் இருந்து அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று தெரியும். ஆனால் தந்தை தான் அதற்கு காரணம் என்று தெரிந்த பின் அவளாள் தாங்க முடியவில்லை..அதோடு ஒரே ஊரில் இருந்த பின்னும் தன் பாட்டியை பார்க்க முடியாத நிலையை நினைத்து கண்ணீர் பெருகியது.. அமுதனை கட்டிக் கொண்டு கதறிவிட்டாள்..
“சாரி மாமா.. எனக்கு இதெல்லாம் தெரியாது.. என்னை எப்போவும் வெளியே விட மாட்டாங்க.. நான் வெளி உலகத்தை பார்த்ததே பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்ச அப்புறம் தான். நான் பெரிய பொண்ணாதும் அதுக்கும் சித்தி திட்டிச்சு. அப்போ பேச்சு வாக்குல உங்களை பத்தி சொல்லும் போது தான் எனக்கு இப்படி ஒரு சொந்தம் இருக்குன்னே தெரியும் மாமா.. அப்போவும் உங்க மேல கோவம்.. என்னை இந்த நரகத்துல இருந்து ஏன் காப்பாத்த வரலன்னு..” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்த விசும்ப,
“தெரியும் மலர்.. உன்னை அந்த பொம்பளை கஷ்டப்படுத்துறத கேள்விபட்டு அவ்வளவு கோவம் வரும்.. எப்படியாச்சும் உன்னை காப்பத்தணும்னு தோணும். ஊரை விட்டு ஒதுக்கிவச்சிருக்கது எல்லாம் யோசிக்காமா உன்னை கடத்திடலாமான்னு கூட யோசிச்சிருக்கேன் ஆனா அப்போ நீ சின்ன பொண்ணு. நான் சொன்ன நம்புவியா இல்லையான்னு தெரியாம என்னால எதவும் பண்ண முடியலை..” என்றவன் இப்போது அவளை காப்பது போல் அணைத்துக் கொண்டான்.
அவன் சொல்வதும் சரி தான் என்று ஒத்துக் கொண்டவள், “எனக்கு ரொம்ப நாளா டவுட் மாமா.. அன்னைக்கு எப்படி அந்த பையன் வந்தப்போ நீயும் ஊருக்குள்ள வந்த??” மூன்று வருடமாக தனக்குள் குடையும் கேள்வியை அவள் கேட்க,
“அவன் உன் பின்னாடி வர்றதை நானும் கொஞ்ச நாளா கவனிச்சிட்டு தான் இருந்தேன்.. அன்னைக்கு தூக்கம் வராம வயல்ல நின்னுட்டு இருக்கும் போது, இவன் பதுங்கி பதுங்கி போய்ட்டு இருந்தான். கண்டிப்பா உன்னை தேடி தான் வரான்னு தோனிச்சி அதான் நானும் அவனை தொடர்ந்து வந்தேன்… என்றவன் புன்னகைக்க, அவள் அலுத்துக் கொண்டாள்..
“போங்க மாமா.. லவ் பண்றேன்னு சொல்லிட்டு போன அவனைவிட, என்னை குறுகுறுன்னு பார்த்துட்டு போன நீங்க தான் அடுத்த இரண்டு மாசம் என்னை தூங்க விடல.. ஏன் அப்படி பார்த்தாங்கன்னு யோசிச்சே தலை வெடிச்சிடும்..” என்றவள் அவன் தலை முடியை கலைத்துவிட்டாள்.. பின் சட்டென்று அமைதியானவள், “அவன் ஏன் மாமா அப்படி பண்ணினான்??? என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு..” என்றவளுக்கு கல்லூரியில் தான் பட்ட அவமானங்கள் நிழலாடியது..
“எல்லாத்துக்கும் காரணம் அந்த சந்தோஷ் தான் மலர்..” என்றவன் பல்லை கடிக்க, அவள் புரியாமல் பார்த்தாள்..
“அந்த நாய் தான் இவனை உசுப்பேத்தி விடுறதே.. ஒரு நாள் நீ அவனை அடிக்க கை ஓங்கவும் அதை பார்த்துட்டு, கண்ணனை இவன் ரொம்ப கிண்டல் பண்ணிருக்கான்.. அதுல தான் அவன் குடிச்சிட்டு சுத்திட்டு இருந்தான்.. நீ ஒரு கோழை.. ஒரு பொண்ணை கூட உன்னால மடக்க முடியலைன்னு அவன் உசுப்பேத்தவும் இவன் செத்து போய்ட்டான்.. முதுகெழும்பில்லாதவன்..” என்றவன் கண்ணனையும் சந்தோஷையும் மனதுக்குள் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க, இசையோ அதிர்ச்சியுடன் பார்த்தாள்..
அமுதன் கூறியது எல்லாம் அவளுக்கு புதிய செய்தி.
“என்ன மாமா சொல்றிங்க.. அப்போ சந்தோஷ் தான் காரணமா?? உங்களுக்கு எப்படி மாமா இதெல்லாம் தெரியும்??” படபடவென்று கேள்விகளை தொடுத்தவள், விடைக்காக அவன் முகம் பார்க்க,
“அவங்க ரெண்டு பேரும் பேசுறதை கண்ணணோட அக்கா கேட்டுருக்காங்க.. ப்ரெண்ட்ஸுக்குள்ள சதாரண கிண்டல் கேலின்னு நினைச்சிருக்காங்க ஆனா அடுத்த நாள் அவன் விஷம் சாப்பிட்டு சாகவும் தான் அவங்களுக்கு இந்த விஷயத்தோட சீரியஸ்நெஸ் தெரிஞ்சிருக்கு.. அதுவும் இதுல உன் பேர வேற அவன் இழுத்துவிடவும் அவங்களுக்கு தம்பி மேல கோவம்.. சுயபுத்தி இல்லாம செத்தவனுக்காக யாரும் கஷ்ட படக்கூடாதுன்னு தான் நான் போய் கூப்பிட்டதும் அவனோட அம்மா அப்பா உன்னை காப்பாத்த ஓடி வந்தாங்க..” என்றவனுக்குள்ளும் அன்றைய நினைவில் ஆத்திரம் பொங்கியது. அவனால் இசை எத்தனை அவமானங்களை சந்தித்தாள் என்று அவனுக்கு மட்டும் தானே தெரியும்..
“அந்த சந்தோஷை சும்மா விட்டுட்டாங்களா மாமா???” தவறே செய்யாமல் தான் தண்டனை அனுபவித்திருக்க, ஒருவனை தூண்டிவிட்டு சாகவைத்த குற்றவுணர்ச்சி கூட இல்லாமல் தன்னை கல்லூரியில் எப்படியெல்லாம் காயப்படுத்தினான் என்று விம்மியது அவள் உள்ளம்.
“அவன் மேல கேஸ் கொடுக்கிறதுக்கு கண்ணணோட அப்பா ஒத்துக்கல.. சாதரன மிடில் க்ளாஸ் இசை.. அவன் படிச்சி குடும்பத்தை காப்பாத்துவான்னு எதிர்பார்த்தாங்க.. அவன் ஏமாத்திட்டான்.. பொண்ணுங்க வாழ்க்கையாச்சும் நல்ல படியா அமைச்சு கொடுக்கணும்னு, இந்த கேஸ்ல இருந்து ஒதுங்கிட்டாங்க.. ஆனா என்னால அப்படி விட முடியல.. அவனை அடிச்சி நொறுக்கி அவனோட வீட்ல எச்சரிச்சிட்டு தான் வந்தேன்.. அவங்களும் இனி பையனை ஒழுங்க பார்த்துக்கிறதா சொன்னாங்க…” என்றவன் பெருமூச்சு விட,
“அவன் என்னையும் காலேஜ்ல எவ்வளவு கொடுமைபடுத்தினான் தெரியுமா மாமா??” என்றவள் கண்ணீருடன் நடந்த அனைத்தையும் கூறினாள். அதில் அமுதனின் ரத்தம் கொதித்தது..
“உன்கிட்ட சொல்லி அழணும் போல தோணும் மாமா.. ஆனா நீ தான் என்னை பார்க்கவே வரலை..” என்றவள் அவன் மீது குற்றம் சுமத்த,
“யார் சொன்னது நான் பார்க்க வரலைன்னு.. மாசம் ஒரு தடவை உன்னை பார்க்க வருவேன்..” ரோஷமாக கூறியவன் அவளை பார்க்க, அவள் அவனை அடியில் மொத்தி எடுத்தாள்..
“அப்புறம் ஏன் டா, என் முன்னாடி வரலை??? உன்னை…” என்றவள் அவனை சோபாவில் இருந்து தரையில் தள்ளி அவன் மீதே ஏறி அமர்ந்து அடி பிண்ணியெடுத்தாள்..
அனைத்தையும் வாங்கிக் கொண்டவன், தரையில் நன்றாக படுத்தவாறே அவளை தன்னோடு சேர்த்தணைத்தான்..
“உன்னை பார்த்தா எனக்கு உன்னை விட்டு பிரியவே மனசு வராது இசை.. அதுலயும் நான் உன் பக்கத்துல வரும் போது மருண்டு போய் பார்ப்ப பாரு, அப்போவே எனக்கு உன்னை முத்தம் கொடுக்கணும் போல இருக்கும்.. உன் படிப்புல நான் தொந்தரவு பண்ணக்கூடாதன்னு தான் நான் தூரமா நின்னு பார்த்துட்டு போவேன்.. ஆனா அன்னைக்கு நீ அழுதுட்டு இருக்கவும் என்னால சும்மா போக முடியலை.. என்னன்னு விசாரிச்சப்போ தான் அந்த சந்தோஷோட திருவிளையாடல் தெரிஞ்சிது.. அதான் ஸ்கெட்ச் போட்டு அவனை தூக்கிட்டேன்” என்றவன், அன்று அவளை அணைத்து ஆறுதல் படுத்த முடியாத வேதனையை இப்போது அணைத்து ஆறுதல் படுத்தினான்.
“அப்போ அது உங்க வேலை தானா மாமா??” என்றவள் தன் கண்களை விரிக்க, அவளை எழுப்பி தன்னருகில் அமர வைத்தவன், அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு,,
“ஆமா.. என் பொண்டாட்டிகிட்ட வாலாட்டினா நான் சும்மா விட்டுடுவேனா?? ஆக்ஸிடென்ட் பண்ணி இனி உன் பக்கமே தலைவச்சி பார்க்க கூடாதுன்னு மிரட்டினேன்.. அவனும் பயந்து ஓடிட்டான்..” என்றவனை அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் இசை.. அதில் அவன் வியப்பாய் பார்க்க,
அவள் சட்டென்று அவனை முறைத்தாள், “அப்புறம் ஏன் மாமா என்னை ஒதுக்கி வச்ச???” தன் மீது இத்தனை காதலை வைத்திருப்பவன் எதற்காக தன்னிடமிருந்து விலகி நிற்கிறான் என்று புரியாமல் இசை கேட்க,
அவன் அவள் கண்களை சந்திக்க முடியாமல், “அது என்னால உன்னை அக்கா மகளா மட்டும் பார்க்க முடியல…” தலையை அழுத்த கோதியவாறு அவன் கூற, இசை அதிர்ந்தாள்..
தான் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையோ என்று அவள் எண்ணியிருக்க இப்போது அவன் கூறுவதை கேட்கும் போது தானாக நாணம் வந்து ஒட்டிக் கொண்டது..
“நீ புடவை கட்டிட்டு என் முன்னால வந்தாலே என்னால உன்னை விட்டு பார்வையை மாத்த முடியாது மலர்.. நீ என்னோட மனைவி.. எனக்கு சொந்தமானவன்னு மனசு அடிச்சிக்கும் அதுக்காக தான் உன்னை புடவை கட்ட நான் அனுமதிக்கிறதே இல்லை.. ஆனா அதையும் மீறி அன்னைக்கு உன்கிட்ட எல்லை மீற பார்த்தேன்..” அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவன் பேச, அவள் தன் மாமவா இப்படி பேசுவது என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளுக்குள்ளும் அன்றைய நாளின் தாக்கம் வந்திருந்தது.. அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்..
“எனக்கு பயந்து தான் நான் உன்னை தள்ளி வச்சேன்.. அதோட நானும் வாழ்க்கைல முன்னுக்கு வரணும்.. உன் அப்பா முன்னாடி நாம தலை நிமிர்ந்து நிக்கணும் அப்படிங்கறதுக்காக தான் இத்தனை நாள் பாடுபட்டேன்…” அவன் அவளிடம் அனைத்தையும் விலாவரிக்க.. அவள் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..
“சாரி மாமா.. உங்களை பத்தி புரிஞ்சிக்காமா நான் உங்க மேல கோபப்பட்டுட்டேன்..”
“உனக்கு என்னோட மனசை புரிய வைக்காம விட்டது என்னோட தப்பு தான்.. உன் லட்சியத்தை அடைஞ்சதும் எல்லாத்தையும் சொல்லி உன் மனசுல என்ன இருக்குன தெரிஞ்சிக்க நினைச்சேன்.. ஒருவேனை நான் உன் மனசுல இல்லாட்டி உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சி கொடுக்கலாம்னு இருந்தேன்..” என்றவனுக்கு தொண்டையடைத்தது..
அவன் வாயை பொத்தியவள், “எனக்கு உன்னை தவிர வாழ்க்கையே கிடையாது மாமா.. என்னோருக்க இப்படி விட்டு கொடுப்பேன்னு சொல்லாத…” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்…
“ஆனா இசை உன் கழுத்துல தாலி கட்டின அப்புறம் கூட எனக்கு பயம் தான்.. எங்க என்னை புரிஞ்சிக்காம போய்டுவியோன்னு.. “
“அந்த நரகத்துல இருந்து என்னை காப்பத்தினவங்க மாமா நீங்க.. அதோட எனக்கு நம்ம வீட்ல இருக்கும் போது வேற வீட்ல இருக்கேன் அப்படிங்கற மாதிரியே தோணாது.. நான் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தேன்.. ஆனா உங்களுக்கு உடம்பு முடியலைன்னதும் நான் ரொம்ப பயந்துட்டேன் மாமா..” என்றவள் அவன் நெஞ்சுக்கூட்டுக்குள் புதைந்துக் கொள்ள,
அவளை அணைத்தவன், “என்னாலையும் மறக்க முடியாது இசை.. அன்னைக்கு எனக்காக நீ அந்த ஆள் கால்ல கூட விழ துணிஞ்சிட்ட…அப்போ தான் அவ்வளவு நாள் என் மனசுக்குள்ள ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருந்த நீ அங்கேயே தங்கிட்ட” என்றான் காதலாக…
அவன் காதலில் நெகிழ்ந்தவள், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மாமா.. ஆனா அது காதல்னு அப்போ தெரியாது..எப்போ நீ ஹாஸ்டல்ல விடப்போறேன்னு சொன்னியோ.. அப்போ புரிஞ்சிக்கிடேன்…” என்றவள் அந்த நாளுக்கே சென்று தான் உணர்ந்ததை கூறினாள்…
அதன்பின் இவ்வளவு நாட்கள் பேசாத கதையெல்லாம் இருவரும் பேச, அடுத்த இரண்டு நாட்களும் போனதே தெரியவில்லை..
அந்த இரண்டு நாட்களும் இசையை ஒரு வழியாக சமாளித்து அவன் சம்பாதித்ததை அவள் பெயரில் மாற்ற அவன் முயல, அவளோ திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.. கடைசியில் இருவரது பெயரிலும் எழுதும் ஐடியாவை நந்தன் வழங்க, அதற்கு இருவரும் உடன்பட்டனர்.
இன்னும் இரண்டு நாட்களில் இசை கிளம்ப வேண்டும் என்பதால் ஏற்கனவெ அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்பவன் மேலும் அவளை தாங்கினான்.. என்ன தான் அவளை தாங்கினாலும் இருவருமே கணவன் மனைவி என்ற எல்லைக்குள் செல்லவில்லை… அவளின் லட்சியத்தை அடையும் வரை அவளுக்காக காத்திருந்தான் மலர் அமுதன்.
இசையின் மலராவான்………