இசையின் மலரானவன்…!!!
தனது அறையின் மூலையில் தன் கால்களை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள் மலரிசை.. விழிகள் கண்ணீரில் நனைந்திருக்க இப்போதே தன் உயிர் சென்று விடாதா என கடவுளிடம் விநாடிக்கு விநாடி மனு அனுப்பிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் பாவம் கடவுளுக்கு அவளின் வேண்டுதல் கேட்கவில்லை போலும்.. அவளின் கோரிக்கை அவர் செவிகளை தீண்டவில்லை…
சிறு வயதிலே தன்னை விட்டுவிட்டு, கடவுளிடம் சென்றுவிட்ட அன்னையின் மடிக்காக ஏங்கியது அந்த இளங்குருத்து. இந்த ஒரு வாரத்தில் தனது வாழ்க்கையில் நடந்துவிட்ட சம்பவங்களை நினைக்கும் போது மனம் ரணமாக வலித்தது. தான் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லையே ஆனால் தனக்கு மட்டும் ஏன்???? இந்த கேள்வியை, இந்த வாரத்தில் எத்தனை முறை நினைத்தாள் என்று அவளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு இந்த ஒரு வாரமும், அவள் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது..!!
தனது எண்ணங்களில் மூழ்கி, விடை தெரியா கேள்விகளுடனும்… கேள்விக்கான பதிலை யாரிடம் தேடுவது என தெரியாமலும், அவளது பிஞ்சு மனம் ஒடிந்து போனது தான் மிச்சம்.. கண்களை மூடி அனைத்தும் கனவாக இருக்காதா என எண்ணியவளின் காதில் சிற்றன்னையின் காட்டுக் கத்தல் விழுந்து, இது கனவில்லை நனவுதான் என்னும் உண்மையை அவள் முகத்தில் அடித்தாற் போல் புரிய வைத்தது.
“சனியனே… இன்னும் என்னடி தூக்கம்.. எங்க எல்லாரோட தூக்கத்தையும் கெடுத்துட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்குறியா???” கட்டாந்தரையில் படுத்திருந்தவளின் மேல் இரக்கம் பிறப்பதற்கு பதிலாக கோபம் பிறக்க, கையில் வைத்திருந்த பக்கெட்டில் இருந்த தண்ணீரை அவள் மீது அப்படியே கொட்டினார் அவளது சிற்றன்னை…
குளிர்ந்த நீர் தன்மேல் படவும் பதறியடித்து எழுந்தாள் மலரிசை… குளிரில் உடம்பு வெடவெடக்க, தன் முன்னே பத்ரகாளியாக நின்றிருந்த சித்தியின் தோற்றத்தில் பயந்து சுவரோடு ஒன்றினாள் அந்த மெல்லிய தேகம் படைத்தவள்.
“இன்னும் என்னடி தூக்கம் வேண்டிகிடக்கு… போ போய் கிளம்பு” என்றவர் அவளை முறைக்க, அவளோ சிற்றன்னையை பாவமாக பார்த்தாள்.
“சித்தி… வேண்டாம் சித்தி… நான் எந்த தப்பும் பண்ணல சித்தி… எனக்கு நிறைய படிக்கணும் சித்தி… என்னை கல்யாணம் செஞ்சு குடுக்காதிங்க சித்தி…” உள்ளுக்குள் பயம் இருந்தாலும் தன் லட்சியத்தின் மேல் அவள் வைத்திருக்கும் தீராக் காதல் அவளை பேச வைத்தது.
ஆனால் அவள் சித்திக்கு அவள் பேசியது ரசிக்கவில்லை போலும், பத்ரகாளியாக நின்றிருந்தவர் காட்டேரியாக மாறி அந்த சிறு பெண்ணின் கூந்தலை கற்றையாக பிடித்து இழுத்தார். அதில் உயிர் போகும் அளவிற்கு வலியெடுக்க “ஆஆஆ….” வென்று கத்திய சிறியவளின் முகத்தில் அறைந்தவர்.,
“என்னடி சொன்ன கல்யாணம் வேண்டாமா??? ஒழுங்கு மரியாதையா வந்து நாங்க சொல்றவனுக்கு கழுத்தை நீட்டு. இல்லாட்டி என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நீ பண்ணின காரியத்துக்கு உன்னை கொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சந்தோஷப்படு… நீ ஆசைப்பட்டது தானேடி??? உடம்பு சுகத்துக்கு தானே ஆசைப்பட்ட.. அதுக்கு நாங்களே இப்போ வழி பண்றோம்… அப்புறம் என்ன???” சாட்டையாக சொற்களை சுழட்டியவர் மேலும் சில கெட்ட வார்த்தைகளால் அவளை வதைக்க, அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் கூட சரியாக தெரியாதவள் அவர் கூறியதை கேட்க முடியாமல் காதை பொத்திக் கொண்டு கண்ணீர் வடித்தாள்…
அவளின் அழுகையை கண்டு அவளை உதறித் தள்ளியவர், கட்டில் மேல் வைத்திருந்த பட்டுப்புடவையை அவள் மேல் தூக்கி வீசிவிட்டு., “பத்து நிமிஷத்துல கிளம்பியிருக்கணும்” என்று எச்சரித்துவிட்டே சென்றார்.
அவர் சென்றதும் மனம் மீண்டும் துவண்டுவிட, தரையில் சரிந்து அழுதாள் மலரிசை.. ஆனால் அழுதுக் கொண்டே இருந்தால் இதற்கான தீர்வு கிடைத்துவிடாதே… ‘தீர்வு என்றால்??? ம்ம் அது தான் சரி… இனி வாழ்ந்து, எந்த பிரயோஜனமும் இல்லை.. இந்த துன்பத்தில் வாழ்வதை விட சாவதே மேல்..’ அவளுக்கு வாழ்வு மீது பற்றுக் கொடுத்ததே அவளது லட்சியம் தான். ஆனால் இன்று அதுவே தவிடுபொடியாக சிதறப்போகும் போது இந்த வாழ்க்கை மட்டும் எதற்கு.. பதினெட்டு வயதில் வாழ்வை வெறுத்து சாகும் முடிவை எடுத்தது அந்த சிட்டுக்குருவி.
சாகும் முடிவை எடுத்ததும் அனைத்தும் சரியாகியது போல் தோன்ற தைரியாமகாவே சென்று சிற்றன்னை கொடுத்த புடவையை கட்டிக்கொண்டாள். சாகும் முன்பு அவளால் முடிந்த சிறு சந்தோஷத்தையாவது அவர்களுக்கு கொடுத்துவிடுவோம் என்று எண்ணியது அவளின் மனம்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சென்பகபுதூர் கிராமத்தில் மாசி மற்றும் வசுமதி தம்பதியருக்கு பிறந்தவள் தான் மலரிசை.. பரம்பரையாகவே மாசியின் குடும்பம் வசதியானவர்கள் என்பதால் அவருக்கு எப்போதும் அந்த தலைக்கனம் உண்டு. அதோடு அவர் எடுப்பார் கைப்பிள்ளையும் கூட. மலரிசை பிறந்த இரண்டாண்டுகளில் அவள் தாயார் இறந்துவிட, அடுத்த இரண்டாம் மாதமே, பூரணியை மணந்துக் கொண்டார் மாசி.
ஆரம்பத்தில் பூரணியும் ஊராரின் வாய்க்கு பயந்து இசையை நன்றாக பார்த்துக்கொள்வது போல் நடித்தார். ஆனால் என்று அவரது மகள் இந்த பூவுலகத்தில் கால் பதித்தாளோ அன்றிலிருந்து அவள் அவருக்கு வேண்டாதவளாகி போனாள். தாயை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பூரணியின் மகள் குழலிக்கும் இசை மீது பாசம் என்பது துளிக்கூட கிடையாது.
இருவருக்கும் நான்கு வருட வித்தியாசம் இருந்தாலும் இசையை தனக்கு கீழாகவே நடத்துவாள் குழலி.
சிறு வயதிலே அவர்களுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று புரிந்துக் கொண்ட இசையும் அவர்களை விட்டு ஒதுங்கியே தான் இருப்பாள். இந்த உலகில் அவளுக்கென இருக்கும் சந்தோஷம் என்றால் அது பள்ளிக்கூடம் தான். இயல்பிலே புத்திசாலி என்பதால் பள்ளியில் அனைவருக்கும் அவள் செல்ல பிள்ளை. சிற்றன்னையின் கடுஞ்சொற்கள் இல்லாமல் அவள் நிம்மதியாக கழிக்கும் அந்த ஏழு மணி நேரமும் தான் அவள் வாழ்வின் பொண்ணான நேரம்.
வீட்டில் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு தான் அவளால் பள்ளிக்கு செல்ல முடியும். எப்போதும் மனைவியின் பேச்சை கேட்டு நடக்கும் மாசி கூட இசையின் படிப்பு விஷயத்தில் பூரணியை தலையீடாமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால் அதற்கும் வேட்டு வைத்துவிட்டார்களே.!!!.
சித்தியிடம் வாங்கிய அடி கொடுத்த வலியில், அவர் கூறியது போலவே புடவையை கட்டினாள் மலரிசை, எவ்வளவு தடுத்தும் கண்களில் இருந்து அருவி கொட்ட, தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தன்னையே பிடிக்கவில்லை.. போன வாரம் தான் அவளது பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளி வந்திருந்தது. பள்ளியில் முதல் மாணவியாக தேர்வாகியிருந்தாள்.. தன் லட்சியத்தை நோக்கி செல்ல போகிறோம் என்று துடிப்புடனும் கனவுகளுடனும் இருந்தாளே… எல்லாம் ஒரே நாளில் ஏன் மாறிப்போனது..
தன்னை நினைத்தே கழிவிரக்கத்தில் அழுதவளின் பார்வையில், ஒரு மூலையில் தன்னை போலவே அனாதையான நிலையில் கசங்கி கிடந்த செய்தித்தாள் தெரிய, அதை கைகள் நடுங்க எடுத்து பார்த்தாள்.
“காதல் தோல்வியில் மாணவன் மரணம்“ கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் இருந்த வாசகம் அவளின் வெறியை கூட்ட… அந்த செய்தி தாளை முடிந்த மட்டும் கசக்கி தூர எறிந்தாள். அதில் இருக்கும் எழுத்துக்கள் அவளின் தலையெழுத்தையும் சேர்த்து அல்லவா மாற்றிவிட்டது.
“என்னடா பாவம் பண்ணினேன்??? நீ என் பின்னாடி சுத்தின போது கூட, வேண்டாம்னு தானேடா சொன்னேன். இப்படி செத்து என் வாழ்க்கையையும் சாகடிச்சிட்டியேடா…” முழங்காலில் முகத்தை புதைத்து அழுதவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
சந்தோஷமாக பனிரெண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள் மலரிசை. வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவள் முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒட்டியிருக்கும். மிகவும் தைரியசாலி. தப்பென்றால் தட்டி கேட்கும் துணிவு அவளிடத்தில் சிறுவயதிலே இருந்தது. ஆனால் அதுவே அவளுக்கு எதிரியாகி போகும் என்று கனவில் கூட அவள் நினைத்தது இல்லை.
ஒரு நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தவள், வழியில் ஒருவனை நான்கு பேர் சேர்ந்து அடிக்கவும் பதறிப்போய் அவர்கள் அருகில் சென்றாள்.
“எதுக்காக டா அவனை அடிக்கிறிங்க??? விடுங்க”,
ஒருவனை கீழே தள்ளி அவனை காலால் மிதித்துக் கொண்டிருந்த நால்வரும் அவளது அதட்டலில் யாரென்பது போல் பார்த்தனர்.
வயது பதினெட்டு தான் என்றாலும் நெடுநெடுவென இருந்த அவளின் உயரமும், பார்ப்பவரை கட்டியிழுக்கும் அவளது அழகும் அவளை குமரியாக காட்ட, நால்வரின் பார்வையும் அவளை மொய்த்தது. அவர்கள் தன்னை தவறாக பார்க்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டவள் நால்வரையும் முறைக்க,
“யார்டா நீங்க? எதுக்காக இவனை அடிக்கிறிங்க??? ஒழுங்கு மரியாதையா அவனை அடிக்கிறதை விட்டுட்டு, இங்க இருந்து ஓடிப்போய்டுங்க” கண்முன் ஒருவன் அடிவாங்குவதை அவளால் தாங்க முடியவில்லை.. வீட்டில் அவளும் சிற்றன்னையிடம் தினமும் இது போல் வாங்குவதால், அடிவாங்குபவனுக்காக இரக்கப்பட்டது அவளது பூமனம்.
யோசிக்காமல் உதவ வந்துவிட்டாலும் அவளுக்கு அடிமனதில் பயம் இருக்கவே செய்தது, உதவிக்கு அருகில் யாரெனும் இருக்கிறார்களா என்று மெதுவாக கண்களை சுழட்டியவளின் பார்வையில், சற்று தொலைவில் ஒருவன் வயலில் உழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் கூப்பிடும் தொலைவில் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் அவர்களின் பார்வையை தாங்கி நிற்கவே செய்தாள்.
“எங்களை கேட்கிறதுக்கு முன்னாடி நீ யாருடி???” நால்வரில் ஒருவன் எகத்தாளமாக கேட்க, மற்றவர்களின் பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை அளந்தது. அதில் அருவெறுப்புற்றவள் முகத்தை சுழிக்க., நான்கு பேரும் அடிப்பவனை விட்டுவிட்டு அவளை நெருங்கினர்.
“பார்க்கிறதுக்கு நல்லா தான்டா இருக்கா.. ஆனா என்ன?? மேடம் எங்க அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பாங்க போல இருக்கு.” ஒருவன் அவளை பற்றி மற்றவனிடம் கிண்டலடிக்க, அப்போதும் அவள் நிமிர்வாகவே நின்றாள்.
“என்னடா வம்பு பண்றிங்களா??? நான் கத்தி ஊரை கூட்டுவேன் அப்புறம் நீங்க தான் அடி வாங்கணும்.” ஒற்றை விரலை நீட்டி அவள் மிரட்ட, நால்வரில் ஒருவன் வெண்டை பிஞ்சு போல் நீண்டிருந்த அவள் விரலை பற்ற வந்தான். அதற்குள் அவள் சுதாகரித்து நகர்ந்து விட, அவளை தொட வந்தனின் கையை பிடித்து முறுக்கியது மற்றொரு வலிய கரம்.
மலரிசை யாரது என்பது போல் திரும்பி பார்க்க, முகத்தில் கடுமையை பூசிக் கொண்டு அந்த நால்வரையும் உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன்… இசையின் தாய்மாமன்..
இசையே சராசரி பெண்களை விட வளர்த்தி தான்.. இவன் அவளை விட வளர்த்தியாக இருந்தான். அவள் பின்னால் அவன் நின்றிருந்ததால் அவளை மொத்தமாக தனக்குள் அடக்கிக் கொண்டு நிற்பவன் போல் அவன் நின்றிருக்க, இசை பதறி அவனை விட்டு விலகினாள்.
மாநிறத்தில் அடர்த்தியான சிகையுடனும் கூர்மையான நாசியுடனும், தென்னாட்டு மன்னவன் போல் இருக்கும் அவன் தோரனை நிச்சயம் அவன் எதிரே நிற்பவர்களை கதிகலங்க வைக்கும்.
அவனை அங்கு காணவும் அவ்வளவு நேரம் இல்லாத பயம் மலரிசைக்கு அப்போது தான் வந்தது. அமுதனை அவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாது அவனிடம் யாரும் பேசக்கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது. அவள் அவனோடு நிற்பதை யாரவது பார்த்து சிற்றன்னையிடம் போட்டுக் கொடுத்தால், சும்மாவே அவளை அடிக்க காரணம் தேடுபவர் நிச்சயம் சூடு வைத்துவிடுவார். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் கலவரமாக அவனை பார்க்க,
அவனுக்கு அந்த பயமெல்லாம் இல்லை போலும், அந்த நால்வரின் கன்னத்திலும் மாறி மாறி அடித்தான். உழைத்து உரமேறியிருந்த உடம்பும் ஆறரை அடியில் இருந்த அவனது தோற்றமும் அவன் முன்னால் அவர்களை சுண்டெலி போல் காட்டியது.
“என்னடா சொன்ன?? சொல்வியா இனி சொல்வியா??? இனி ஒரு தடவை எதாச்சும் பொண்ணு பின்னாடி உங்களை பார்த்தேன் அவ்வளவு தான்” கண்களில் கோபத்தோடு கர்ஜித்தவனை கண்டு இசைக்கே குளிரெடுத்ததெனில் அந்த நால்வரின் நிலையை கேட்கவும் வேண்டுமா??? அடுத்த நிமிடமே அங்கிருந்து ஓடியிருந்தார்கள்.
நன்றி சொல்வதா வேண்டாமா என இசை மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த, அதை எதையும் அவளிடம் எதிர்பாராதவன் அவளை திரும்பி கூட பாராமல் சென்றுவிட்டான். அவள் தான் செல்லும் அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள்.
அவர்களிடம் அடி வாங்கி கீழே விழுந்திருந்தவன் எழுந்து அவளிடம் நன்றியுரைக்க, அந்த குரலில் தான் அவள் பார்வையை அமுதனிடமிருந்து அகற்றினாள்.
தன் முன்னே பாவமாக நிற்பவனை பார்த்தவள்., “அவங்க அடிச்சா உனக்கு திருப்பி அடிக்க தெரியாதா?? ஆம்பிளை தானே நீ??? இனியாச்சும் தைரியமா இரு..” அவனிடம் எதற்கென்றே தெரியாமல் சிடுசிடுத்தவள் தன் வீட்டை நோக்கி செல்ல, அத்தோடு அவள் அவனை மறந்தும் விட்டாள்.
ஆனால் அவளால் காப்பற்றப்பட்ட கண்ணன் மறக்காமல் போனது தான் பிழையாகி போனது.
கண்ணன் நல்லவன் தான் என்றாலும் பயந்த சுபாவமுடையவன். இப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தான். அவனின் பயந்த சுபாவம் அறிந்து சீனியர் மாணவர்கள் அவனை ரேகிங் செய்ய, தினமும் அவர்களிடம் இருந்து தப்பித்து பின்வாசல் வழியாக வீட்டிற்கு செல்பவன், இன்று மாட்டிக் கொண்டான்.
இசை மட்டும் சரியான நேரத்திற்கு வராது போயிருந்தால் நிச்சயம் அவன் கை காலை முறித்திருப்பார்கள். தன்னை காப்பாற்றியதோடு அவனிடம் அறிவுரையும் கூறிவிட்டு சென்றவளை அந்த நிமிடம் அவனுக்கு பிடித்து போனது. அவளை பற்றி விசாரிக்க தொடங்கினான் கண்ணன்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழிந்த நிலையில், அன்று தனது பள்ளியின் முன் நின்றிருந்த கண்ணனை கண்டு புருவத்தை சுருக்கினாள் இசை. முதலில் அவனை அவளுக்கு அடையாளம் கூட தெரியவில்லை ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவன் தினமும் அங்கு காட்சியளிக்கவும் அவளுக்கு சந்தேகம் தோன்றியது அதோடு அவன் யார் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.
தனக்கு அவன் பிரச்சனை தரவில்லை எனும் போது அவளும் அவனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்படியே மூன்று மாதங்கள் கழிந்திருக்க, கண்ணன் அடுத்த கட்டமாக அவளை பின் தொடர்ந்து அவள் ஊர் வரை செல்வதை வழக்கமாக்கி கொண்டான்.
அவன் தன்னை பின் தொடர்ந்து வரவும் இசைக்கு எரிச்சலாக வந்தது. அவனிடம் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று விசாரிக்க அவள் நின்றால், அவளை பார்த்து பயந்து ஓடுபவன் அடுத்த ஒரு வாரத்திற்கு வர மாட்டான்..
இப்படியே நாட்கள் செல்ல இசையின் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கியது.. இசையும் தீவிரமாக தனது படிப்பில் கவனத்தை செலுத்தினாள். பகல் முழுவதும் வீட்டு வேலைகள் அவளை இழுத்துக் கொள்ளும் என்பதால் தினமும் நடு இரவில் தன் வீட்டு மாடியில் விளக்கு ஏற்றி வைத்து படிப்பது தான் அவளது வழக்கம். அவள் அறையில் இருந்து படிக்கலாம் தான், ஆனால் கரண்ட் செலவை இழுத்துவிட்டுவிட்டாள் என பூரணி அவளிடம் ஆடி விடுவார் என்பதால் இந்த ஏற்பாடு.
அன்றும் அப்படி அவள் பௌர்ணமி நிலவொளியில் படித்துக் கொண்டிருக்க, அவள் முகத்தில் பட்டு தெரித்தது டார்ச் லைட் வெளிச்சம். இந்த நேரத்தில் யார் டார்ச் லைட் அடிப்பது, அதுவும் தன் மேல் என்று யோசித்தவள் வெளிச்சம் வந்த பக்கம் பார்க்க, அங்கு கண்ணன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவனை அந்த நேரத்தில் அங்கு பார்க்கவும் இசைக்கு இதயம் பந்தயக்குதிரையாக துடித்தது. வெளிச்சத்தை பார்த்து தந்தையோ சிற்றன்னையோ வந்து விட்டால் என்ன செய்வது என யோசித்தவள் வேகவேகமாக மாடிப்படிகளில் இறங்கி அவனை நோக்கி கோபத்தோடு வந்தாள்.
அவனை நோக்கி வந்தவள் அவனை அடிப்பது போல் பாவனையில் வர, அவன் பயந்து பின்வாங்கினான்.
“என்னடா எதுக்கு இங்க வந்த?? எதுக்கு ஆறேழு மாசமா என் பின்னாடி சுத்திட்டு இருக்க???” இவனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் தனக்கு ஆதரவாக இந்த உலகில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியே அவளை தினமும் பாடாய் படுத்துகிறது. இதில் இவன் வேறு இப்படி நடுவிரவில் வந்து நிற்கிறானே என்று ஆத்திரமாக இருந்தது இசைக்கு.
அவளின் கோபத்தில் பயந்தவன், கையில் தயாராக கொண்டு வந்திருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினான். அதை வாங்காமல் அவள் அவனை வெட்டி வீழ்த்திவிடும் நோக்கில் பார்க்க, அவனோ.,
“ப்ளீஸ் மலரிசை வாங்கி பாரு…” ஆண்மகன் என்பதையும் மீறி கெஞ்சினான்.
“அவனை சீக்கிரம் அனுப்பிடு இசை” மனம் கூக்குரலிட வெடுக்கென்று அந்த கடிதத்தை பிடுங்கி அதை வாசித்தாள். அதை முழுதாக கூட வாசித்திருக்க மாட்டாள் அதற்குள் அந்த கடிதம் சொல்ல வருவதை கிரகித்துக் கொண்டவளின் முகம் கோபத்தில் சிவந்தது. அந்த கடிதத்தை சுக்குநூறாக கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தவள்.,
“எனக்கு உன் மேல காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை.. போடா இங்க இருந்து… அன்னைக்கு உன்னை காப்பாத்தியிருக்கவே கூடாது.. பாவம்னு நான் உதவி செஞ்சா நீ இப்படி நடுராத்திரி வந்து என் உயிரை வாங்குவியா??? என் வீட்ல தெரிஞ்சிது உன்னை…” என்றவள் தன் வீட்டில் சொன்னால் தன் மேல் தான் தவறு என சிற்றன்னை குதிப்பார் என்பது தெரிந்தவளாய் அமைதியானாள்.
அவள் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன், அவளிடம் தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்ச., இசை தலையில் அடித்துக் கொண்டாள். ஒரு வேளை பொறுமையாக எடுத்து சொன்னால் புரிந்துக் கொள்வானோ என்று நினைத்தவள்.,
“இங்க பாரு நீ யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது. எனக்கு என் படிப்பு தான் ரொம்ப முக்கியம் தயவு செஞ்சு என்னை தொந்தரவு பண்ணாத… புரிஞ்சிக்கோ.. எனக்கு உன் மேல எதுவும் இல்லை…” பொறுமையை இழுத்து பிடித்து அவள் கூற, அவனோ விட்டால் அவள் காலில் விழுந்து கெஞ்சுபவனை போல் கெஞ்சினான்.
இதற்கு மேல் பொறுத்தால் நிச்சயம் வீட்டில் யாரவது சத்தம் கேட்டு எழுந்து வந்துவிடுவார்கள் என உணர்ந்து அவள் மிரட்ட, அது வேலை செய்தது. போலீஸில் புகார் அளித்துவிடுவேன் என இசை மிரட்டவும், பயத்தில் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் செல்லவும் நிம்மதி பெருமூச்சுவிட்டவள் மாடிக்கு செல்ல திரும்ப, அங்கு தென்னை மரத்தில் சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் மலர் அமுதன்.
அவனை பார்த்ததும் அவள் மூச்சு நின்றுவிட இவன் எங்கே இங்கே என கண் சிமிட்டாமல் பார்த்தாள் இசை. ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பவன் எப்படி ஊருக்குள் வந்தான் என்று புரியாமல் அவள் பார்க்க.. அவன் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். செல்லும் முன்பு அவளை திரும்பி பார்த்த அவனின் பார்வையில் என்ன இருந்தது????
இசையின் மலரானவன்……
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…