அது மட்டும் இரகசியம் – 17

0
213

காரை காளையென விரட்டியவன் சற்று நேரத்திற்க்கெல்லாம் காலையில் தான் சென்ற அதே கோவிலுக்கு செல்லும் வழியில் செலுத்திக்கொண்டிருந்தான் .

சில நிமிடங்களில் அக்காட்டுப்பிரதேசத்தினில் காரை நிறுத்தி அக்கோவில் உள்ள திசையில் சென்றான் . அந்த நேரத்தில் அப்பிராந்தியத்தில் மையம் கொண்டிருந்த மையிருட்டு சற்று அச்சத்தைக்கொடுத்தாலும் அதையெல்லாவற்றையும் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த கோவிலை நெருங்கினான் .

கோவிலை அடைந்து அந்த பாதாள அறைக்கும் வந்துவிட்டான் . விஷ்ணு தன் டார்ச்சினால் ஒளியைப் பீய்ச்சி அடித்து காலையில் தான் பார்த்த அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தான் . அவன் கண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் அங்கு ஏதும் புலப்படவில்லை . எனவே சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முன்னே சென்றான் .

விஷ்ணுவும் வேதாவும் காலையில் அங்கு சென்றிருந்த பொழுது சிறிது தூரம் வரைதான் சென்றிருந்தனர் . ஆனால் அங்கு அவர்கள் செல்லாத இடங்களிலும் காலடித்தடங்கள் இருந்தன . இதைக் காலையில் வேதா செய்த பிரச்சனையால் கவனிக்கத் தவறியவனின் சிந்தையில் அமைதியாக யோசித்த பிறகு படம் பிடித்து காட்டியதைப் போன்று பளிச்சென தெரிய ஆரம்பித்தது .

தன் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யவே யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் இங்கு வந்தான் . பகற்பொழுதில் வந்திருந்தால் நிச்சயமாக எங்கே செல்கிறாய் ? எதற்க்குச் செல்கிறாய் என்ற வீண் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமாகையால் இரவு நேரத்தை தேர்ந்தெடுத்தான் . அவன் எதிர்பார்த்தது போலவே காலடித்தடங்கள் அங்கு பதிந்தபடி இருக்கவே அதைத்தொடர்ந்து சென்றான் . பத்தடி தூரம் வரைப் பதிந்திருந்த காலடித்தடங்கள் அதன்பிறகு இல்லாமல் போனது . சற்று கூர்ந்து கவனித்ததில் ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு புரிந்தது .

யாரோ தனக்கு முன்னால் இங்கு வந்து அந்த லிங்கத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவானது . அதை நினைக்கும் போதோ அவனின் நெஞ்சம் பதறியது .

அதற்க்குமேலும் சற்று நேரம் கூட விரயம் செய்ய எண்ணாதவன் அருகில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என தேட ஆரம்பித்தான் . இவனின் கையிலிருந்த டார்ச்சின் ஒளிபட்டு தரையில் ஏதோ மினுமினுப்பது போல் தோன்றவே அதன் மீது அவனின் கவனம் பதிந்தது .

அதைச் சற்று தயக்கத்துடன் கையில் எடுத்தவனுக்கு அது ஒரு மோதிரம் என்பது தெளிவாகியது .” எப்பேற்ப்பட்ட புத்திசாலியாக இருந்தாலும் ஏதாவது ஒரு குற்றம் செய்யும்பொழுது தன்னை அறியாமலேயே ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான்” என்று எங்கோ படித்தது விஷ்ணுவிற்க்கு அந்த நிலையிலும் ஞாபகத்திற்க்கு வந்தது .

அந்த மோதிரத்தைக் கவனமாக தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டவன் மேலும் அந்த இடத்தில் கவனமாக தேடத் துவங்கினான் . மேற்க்கொண்டு ஏதும் இல்லாமல் போகவே அங்கிருந்து கிளம்பினான் .

விஷ்ணுவின் எண்ணமெல்லாம் யார் அந்த லிங்கத்தை எடுத்திருப்பார்கள் என்ற கேள்வியிலேயே உழன்று கொண்டிருந்தபோது தன்னிச்சையாகவே இரண்டோரு நாள் முன்னர் தான் பூங்காவில் பார்த்த வளவனின் சாயல் கொண்டவனை நினைவு கூர்ந்தது .

” ஒரு வேளை அவன்தான் வளவனா இருப்பானா ? நமக்கு முன்னாடியே இங்க வந்து லிங்கத்தை எடுத்திருப்பானோ ? அப்படி அவன்தான் எடுத்ததா இருந்தா நாம எங்கன்னு அவனைப் போய் தேட்றது ? அவன் எங்க இருப்பான்? எந்த ஊரில இருப்பான் ? எப்படி கண்டுபிடிக்க முடியும் ? ” என்று நெஞ்சமெல்லாம் கேள்விகள் நெருஞ்சி முல்லாய்க் குத்திக்கொண்டிருந்தன .

வீட்டிற்க்கு வரும் வழியிலெல்லாம் இந்த சிந்தனையிலேயே அவன் மனம் உழன்றது . வீட்டிற்க்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டிருந்தது . காரை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்க்குள் வந்தான் . தான் கிளம்பும்போது கதவின் தாழை விடுவித்தது தான் வரும் வரையிலும் அப்படியே இருந்தது .

” நல்ல வேளை யாரும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கலை ” என்று அவன் சிறிது ஆறுதலடைந்தான் . வேகவேகமாக தன் அறைக்கும் வந்து சேர்ந்தான் .

தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த மோதிரத்தை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் அதை நன்றாக வெளிச்சத்தில் பார்த்தான் .

அது ஆண்கள் அணிந்து கொள்ளும் மோதிரம் என்பது பார்த்த மட்டிலேயே உண்ர்ந்து கொண்டான் விஷ்ணு . அதனுடைய வடிவமைப்பு சற்று விசித்திரமாகவே இருந்தது . அதன் முன்பக்கத்தில் ஒரு சதுரத்தை குறுக்கு வாக்கில் ஒரு கோடு பிரித்தது . அதன் மேல்பக்க முக்கோணத்தில் நட்சத்திரம் போன்ற குறியீடு பொறிக்கப்பட்டு அதன் நடுமையத்தில் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருந்தது . கீழ்ப்பக்க முக்கோணத்தில் பாம்பின் உருவம் பொறிக்கப்பட்டு அதன் கண்கள் இருக்கும் பாகத்தில் இரு வெண்ணிறக்கற்கள் வைக்கப்பட்டிருந்தது .

அழகான தனித்தன்மையுடன் விளங்கிய அம்மோதிரத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு . ” இதை வச்சு லிங்கத்தை எடுத்தது யார்னு எப்படி கண்டுபிடிக்கிறது ? இது ஒருவேளை பிக்னிக்ல பார்த்த வளவனோடதா இருக்குமா ? கடவுளே !!!! கேள்விகளை மட்டும் வஞ்சனையே இல்லாமா கொடுத்த உனக்கு அந்த கேள்விக்கான பதிலை மட்டும் தர ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் ? ” என அந்த கடவுளையும் நிந்திக்க செய்தான் நம் விஷ்ணு .

பிறகு அந்த மோதிரத்தை ட்ரஸ்ஸிங் டேபிள் ட்ராயரில் பத்திரப்படுத்தி வைத்தான் . அன்று இரவு முழுவதும் தூங்காமலேயே கழித்தான் நம்மவன் . அவன் உறங்க பிரயத்தனப்பட்டாலும் அது லேசில் வருவதாக இல்லை .

காலை ஏழு மணிவாக்கில் தன் அறையிலிருந்து வெளிவந்தான் .வெளிவந்த கூடத்தில் அமர்ந்துகொண்டு அன்றைய ஹிண்டுவைப் புரட்டிக்கொண்டிருந்த பாலா அவன் வருவதைக் கவனித்தவுடன் ” குட் மார்னிங் விஷ்ணு . என்ன கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு … சரியா தூங்கலையா நேத்து .” எனக் கேட்டான் .

” ஹ்ம்ம் ஆமாடா … ஒரு கெட்ட கனவுடா … அதான் தூக்கம் பிடிக்கல ” சுரத்தே இன்றி வந்தது விஷ்ணுவின் குரல் .

” கனவா…என்ன கனவு ? என்ன பார்த்த கனவுல ? அந்தக் கனவு எத்தனை மணிக்கு வந்திச்சு ? ” எனக் கேட்டுக்கொண்டே அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் ஜீவா .

” ஏன்டா ? அதை தெரிஞ்சிகிட்டு என்ன பண்ண போற ” எனக்கேட்டான் பாலா .

” இல்லடா … ஒவ்வொரு கனவுக்கும் அது வர நேரத்துக்கும் ஒவ்வொரு பலன் இருக்கமாம் அதான் கேட்டேன் “என்றான் ஜீவா .

” மச்சி… பக்கா ஜோஸியக்காரன் போல பேசற மச்சி….Astrology and Oneirology ல எக்ஸ்பர்ட்னு நினைப்பா உனக்கு ? அவனே பாவம் தூங்காம இருக்கான் . நீ வேற மொக்கை போட்டு அவனை காண்டாக்காத… அப்புறம் கடிச்சு குதறிடுவான் உன்னை ” என பாலா கூறவும் ” இந்த கேப்ல நீ விஷ்ணுவை “நாய்”னு ஜாடைமாடையா சொல்றியா ? ” என பாலாவின் வார்த்தையை வைத்தே அவனை சீண்டினான் ஜீவா .

” அடப்பாவி …. நீ ஒருத்தன் போதும்டா ஒரு வீட்டை நாலு வீடு ஆக்கிடுவ … சாமி ஆள விடு நான் போறேன் ” என அங்கிருந்து நகர்ந்தான் பாலா .

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் முகமோ நிர்ச்சலனமாய் இருக்கவே சந்தேகம் கொண்ட ஜீவா ” டேய் … டேய்..என்னடா அமைதியா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க … இந்நேரம் உன்பங்குக்கு நீயும் ஏதாச்சு கலாய்ச்சிருக்கனும் … ஆனா நீ இப்படி சைலண்ட்டா இருக்க? என்னடா உடம்புக்கு முடியலையா ? என பரிவுடன் கேட்டான் .

” அதெல்லாம் ஒன்னும் இல்லைடா . நீயா எதையும் கற்பனை பண்ணிகிட்டிருக்காதே . எனக்கு ஒன்னும் இல்ல … ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் . என்று கூறினான் .

மனோ கொண்டு வந்து கொடுத்த காஃபியை பருகியவுடன் ” சரிடா …நான் போய் குளிச்சிட்டு வந்துட்றேன் “. என்று கூறி தன் அறைக்குள் வந்தான் .

அவன் செல்வதையே சந்தேகக் கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஜீவா . அரைமணி நேரம் கழிந்த நிலையில் குளித்து முடித்து தலையை டவலால் துவட்டிய வண்ணம் மீண்டும் தான் ட்ரஸிங் டேபிள் ட்ராயரில் வைத்திருந்த அந்த மோதிரத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு .

அப்போது தன் அறைவாயிலில் ஏதோ நிழலாடுவது போன்று தெரியவே அவசர அவசரமாக அந்த மோதிரத்தை அதே ட்ராயரில் போட்டு மூடினான் .

விஷ்ணுவின் நடத்தையில் இருக்கும் வித்தியாசத்தையும் அவனின் வாடிய ஜீவனில்லாத முகத்திலும் ஏதோ பிரச்சனை இருப்பதாய் உணர்ந்து கொண்ட ஜீவா மனம் பொருக்காமல் அவனிடமே கேட்டுவிடலாம் என விஷ்ணுவின் அறைக்கு வரும்பொழுதுதான் விஷ்ணு அவசர அவசரமாக மோதிரத்தை மறைத்துவைத்தான் .

ஆனால் அதற்க்குள் ஜீவா, விஷ்ணு எதையோ மறைப்பதையும் அவன் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும் கவனித்துவிட்டான் ” விஷ்ணு…. என்ன அது ? எதை மறைக்கிற என் கிட்ட இருந்து …? எனக்கு நல்லா தெரியுது உன் பிரச்சனை கனவு மட்டும் இல்லை … அதையும் தாண்டி எதுவோ இருக்கு .. மரியாதையா சொல்லிடு என்ன விஷயம் ” . கோபமாகவே வந்தது ஜீவாவின் குரல் .

” இங்க பாரு ஜீவா ! நான்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன்ல … அப்புறம் என்ன ? சொல்லு சொல்லுன்னா நான் என்ன சொல்லுவேன் ” விஷ்ணுவும் பதிலுக்கு பேசினான் .

” ஹ்ம்ம் சரி நீ எதுவும் சொல்லாதே ! நானே பார்த்துக்குறேன் என்ற ஜீவா நொடியில் விஷ்ணுவைத்தாண்டிச்சென்று டேபிளின் ட்ராயரை இழுத்து உள்ளே இருந்ததைப் பார்த்தான் .

அந்த மோதிரத்தை கையில் எடுத்துப் பார்த்து ஆச்சரியத்துடன் ” என்னடா நீ இதை வச்சிருக்க … ? இது ராம் மோதிரமாச்சே ! உன் கைக்கு ஏப்படி வந்துச்சு ? ” வினவினான் ஜீவா .

” வாட் !!! இது ராமோட ரிங்கா ? என்னடா சொல்ற ? ஏன் உளர்ற ? அவன் விரல்ல இந்த ரிங்க போட்டு நான் பார்த்ததே இல்லேயேடா ? ” என விதிவிதிர்த்தான் விஷ்ணு . குழப்பத்தின் சாயல்கள் முகத்தில் அப்பட்டமாக பரவியதை அவனால் சிறிதளவிற்க்கும் மறைக்க இயலவில்லை .

விஷ்ணுவின் இந்த படபடப்பும் அவனின் செய்கையும் ஜீவாவினுள் அநாமதேய அனிச்சையான பயத்தை உருவாக்கியது .

தன் நிலையை ஒருவாறு சமன்படுத்திக்கொண்டு தன்னெதிரே நின்றிருந்த ஜீவாவிடம் மறுபடியும் அதே கேள்வியை சற்று அமைதியாக கேட்டான் விஷ்ணு .

” நான் இங்க இருந்து ஊருக்கு போறதுக்கு ஃப்யூ டேஸ் முன்னாடி ஒருநாள் நைட் சரியா தூக்கம் வரல … சோ ஹால்ல சுத்திட்டு இருந்தேன் . அப்போ அங்க ராம் வந்தான் . நான் தூங்காததை பார்த்துட்டு ,

” ஏன்டா இங்க சுத்திட்டு இருக்க … தூக்கம் வரலைன்னா டிவி பார்க்க வேண்டியதுதானே”ன்னு சொன்னான் . நான் , டி.வி ல எல்லாம் போரிங்கா இருக்குடான்னு சொன்ன உடனே அவன் அவங்க வீட்ல உள்ள ஆல்பம்ஸ்லாம் என்கிட்ட கொடுத்து வேணும்னா இதை பாருடானு சொல்லி என்கிட்ட கொடுத்தான் .

அந்த ஆல்பம்ல உள்ள போட்டோஸ்ல தான் அவன் இந்த ரிங்க போட்டுட்டு இருந்ததைப் பார்த்தேன்டா . டிசைன் யுனிக்கா இருக்குறதுனால எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு … இது ராமோட ரிங்தான்டா ” .

ஜீவா சொல்ல சொல்ல விஷ்ணு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here