அனைத்துக் காட்சிகளும் மெல்ல மெல்ல விஷ்ணுவின் கண்முன்னே தெளிவற்ற காட்சிகளாகி மறைந்தன . உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த விஷ்ணு சட்டென தன் கண்களைத்திறந்தான் . தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவன் தான் இருக்கும் இடத்தை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான் . தான் இன்னும் குகைக்குள்தான் இருக்கிறோம் என்று தெளிந்தவன் தான் இதுவரைக் கண்டது அனைத்தும் என்னவென்று ஒரு கணம் யோசித்தான் . ஏனெனில் அவன் காட்சிகளாக கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தனக்கே தத்ரூபமாக நிகழ்ந்தது போல் இருக்கவே அவனால் எளிதாக சுயநிலைக்கு வர இயலவில்லை .
தன்னை சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டவனுக்கு அப்போதுதான் அனைத்தும் நினைவிற்க்கு வந்தது . தான் குகைக்கு வந்தது , சந்நியாசியை சந்தித்தது என்று வரிசையாக நினைவிற்க்கு வந்தது . அப்போதுதான் தனக்கு எதிரே அமர்ந்திருந்த சந்நியாசியை காணவில்லை என உரைத்தது .
அந்த சந்நியாசி அமர்ந்நிருந்த இடத்தின் அருகில் ஒரு வெள்ளைக்காகிதம் சடசடத்துக்கொண்டிருந்தது . அதை எடுத்துப்பிரித்தவன் அதைப்படிக்கலானான் . “ என்னுடைய வேலை முடிந்துவிட்டது விஷ்ணுவர்மா . நீ உரைத்த சத்தியத்தின்படி இறைவனை அவனின் பீடத்தில் அமரவைக்கும் பொறுப்பு இனி உன்னுடையதாகும் . இப்பொழுது குகையின் வாயிற்கதவு திறந்திருக்கும் , நீ செல்லலாம் “ என எழுதியிருந்ததைப் படித்தவன் மந்திரத்திற்க்கு கட்டுண்டது போல அப்படியே செய்தான் .
குகையின் வாயிலை அவன் தாண்டியவுடன் பழையபடி குகைக்கதவு மூடிக்கொண்டு அங்கு அப்படி ஒரு குகையே இருந்த சுவடு தெரியாத அளவிற்க்கு மாற்றியது .
பல்வேறு எண்ணங்கள் மனத்தினிலும் , உணர்ச்சிகள் முகத்திலும் நர்த்தனம் ஆட தன் காரை நோக்கி நடந்தான் விஷ்ணு.
நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது . இருளை மருதாணிபோல பூசியிருந்த சுற்றுப்புறமோ அல்லது அந்த இருளிலும் தூங்காமல் இருக்கும் மிருகங்களின் சப்தங்களையோ அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை . இதே சாதாரண நாட்களாக இருந்திருந்தால் இவன் இப்படி தைரியமாக திக்குதிசை தெரியாத இடத்தில் தன்னந்தனியாக நள்ளிரவில் சென்றிருப்பானா என்பது சந்தேகமே ! ஆனால் இப்பொழுதோ அவன் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை .
வெளிச்சத்தை உண்டாக்குவதற்க்காக தன் மொபைலில் உள்ள டார்ச்சை உபயோகப்படுத்திக்கொண்டான் . அந்த ஒளிக்கற்றையானது இருளைக்கிழித்துக்கொண்டு சென்று அவனின் கார் நிற்க்கும் இடத்தை அவனுக்கு காட்டிக்கொடுத்தது .
தன் காரை அடைந்தவன் அதனுள் தன்னைப்பொருத்திக்கொண்டான் . காரை ஸ்டார்ட் செய்தவுடன் அது உதறலுடன் உயிர்ப்பெற்று அவனின் கட்டுக்குள் வந்தது .
அவனின் எண்ணமெல்லாம் தான் கண்ட காட்சிகளிலேயே லயித்திருந்தது . தான் தான் அந்த விஷ்ணுவர்மன் என்பதை அவனின் ஆழ்மனது அடித்துச்சொன்னது . இந்தப்பிறவியின் நோக்கமே அந்தமரகதலிங்கத்தை அதன் உரிய இடத்தில் அமர்த்துவதற்க்குத்தான் என எண்ணும்போதே அவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது .
எப்படியும் நாளை காலை அந்த லிங்கத்தை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற நினைப்புடன் தன் காரை வீட்டினை நோக்கி விரட்டினான் .
காரின் வேகத்திற்க்கு இணையாக விஷ்ணுவின் எண்ண ஓட்டமும் வேகமாக சென்றது . அந்த குன்றைப்பார்க்கும்போதும் அதைப்பற்றி பேசுவதைக்கேட்கும்போதும் தனக்கு ஏன் ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றியது என்பது அவனுக்கு அப்பொழுதுதான் விளங்கியது . தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வு நடந்த இடம் அல்லவா ? அதனால்தான் அதைப்பார்க்கும்போது அம்மாதிரி உணர்வு தோன்றியது போலும் என உணர்ந்துக்கொண்டான் .
சிறிது தூரம் சென்றதும் ராமின் நினைவு வர தன் மொபைலை ஏரோபிளேன் மோடிலிருந்து விடுவித்தவனின் கண்கள் மொபைலில் வந்த நோட்டிஃபிகேஷனை ஆராய்ந்தது . ராமிடமிருந்து மொத்தம் 145 மிஸ்டு கால் வந்திருந்தது . அதுவரை ராமை மறந்தே விட்டிருந்த விஷ்ணு அவசர அவசரமாக ராமின் மொபைலிற்க்கு அழைத்தான் . அவனிடம் தன் பதட்டத்தைக் காட்டக்கூடாது என்று திண்ணமாக முடிவெடுத்தவன் எப்பொழுதும்ப்போல் சகஜமாக பேச தன்னைத் தயார்படுத்திக்கொண்டான் .
முதல் ரிங்கிலேயே அழைப்பு ஏற்க்கப்பட ராமினால் பொழியப்பட்ட வசைமாரியில் சிறிதுநேரம் விஷ்ணு ஆனந்தமாக குளித்தான் . “ டேய் …டேய் ….கொஞ்சம் மூச்சு விட்டுக்கோடா . இப்படி மூச்சுவிடாம திட்றியே …நான் வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கேன் . வந்த உடனே நீ மறுபடியும் உன் புராணத்தை ஆரம்பிக்கலாம் . இப்போ என்னால பேசிகிட்டே கார் ஓட்ட முடியாது. இப்போ நான் வைக்கிறேன் “ என ராமின் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான் .
அடுத்த அரைமணிநேரத்தில் வீட்டினை அடைந்த விஷ்ணுவின் கண்களில் முதலில் தென்பட்டது சோஃபாவில் கோவமாக அமர்ந்திருந்த ராம்தான் .
விஷ்ணுவைக்கண்டவன் கோபத்துடன் எழுந்து அவன் அருகில் வந்தான் . ராமிடம் சமாதானம் கூற வாயெடுத்த விஷ்ணுவை அமர்த்தி “ இங்க எதுவும் பேச வேண்டாம் . ரூமுக்கு போய் பேசலாம் வா “ என விஷ்ணுவின் கையை இழுத்துக்கொண்டு அவனின் அறைக்குச்சென்றான் .
அறைக்குச்சென்றவுடன் கதவை மூடி தாளிட்டவன் . “ டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க நீ . நானும் நீ இங்க வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் . என்னவோ மந்திரிச்சுவிட்ட கோழி போல சுத்திட்டு இருக்க . மார்னிங் வீட்ட விட்டு போன இப்போ மிட் நைட்ல பேய் மாதிரி வந்து நிக்கிற . அம்மாவும் வேதாவும் நீ எங்க போயிருக்கனு கேட்டுட்டே இருந்தாங்க . நான் என்ன பதில்டா சொல்லமுடியும் ? எனக்கே தெரியலைன்னா சொன்னா அவங்க என்னை சும்மா விட்ருவாங்களா ? ஏதேதோ சொல்லி சாமாளிச்சேன்டா கிராதகா “ என போனில் விட்ட மீதியையும் கொட்டிமுடித்தான் ராம் .
விஷ்ணுவிற்க்கோ தனக்கு நேர்ந்த அனுபவத்தை யாரிடமும் கூற விருப்பமில்லை . எனவே என்ன கூறலாம் என ஒரு நொடி யோசித்தவன் . “ இல்லைடா ..நீ யோசிக்கிற மாதிரி ஒன்னும் இல்லைன்னு நான் பலமுறை சொல்லிட்டேன் . இன்னைக்கு ஏதோ கொஞ்சம் மூட் அவுட்டா இருந்துச்சுன்னு வெளியே போனேன் .
ரொம்பதூரம் ஓட்டிட்டு போனபிறகு அங்க ஒரு லேக் தெரிஞ்சது . அந்த வியூவ் ரொம்ப அழகா இருந்ததுடா . கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துட்டு இருக்கும்போது ஒரு வயசானவர் வந்தாரு அவர்கிட்ட பேசிகிட்டே இருக்கும்போது நேரம் போனதே தெரியலைடா . அங்க சிக்னலும் இல்லடா அதான் இன்ஃபார்ம் பண்ண முடியல . சாரிடா … ஐ ஸ்வேர் இனி கண்டிப்பா இப்படி செய்யமாட்டேன்டா “ என பொய்யை அழகாக உண்மை போலவே பரிதாபமாக முகத்தைவைத்துக்கொண்டு கூறினான் விஷ்ணு .
ராமும் அதற்க்கு மேல் அவனைத்திட்டாமல் “ ஹ்ம்ம் … போதும் செய்யற எல்லாத்தையும் அமுக்குனி போல செய்துட்டு பாப்பா மாதிரி போஸ் கொடுக்காத …. சாப்டியா நீ ? என கேட்டான் .
அவன் கேட்டவுடன்தான் தான் காலையில் இருந்து சாப்பிடாத விஷயமே விஷ்ணுவின் மூளைக்கு உரைத்தது . இல்லை என தலையாட்டியவனை ஒரு கோபப்பார்வையால் தீண்டிய ராம் “ இரு நான் இங்கேயே எடுத்துட்டு வரேன் , சேர்ந்து சாப்பிடலாம் “ என கூறினான் ராம் .
“ஏன்டா நீ இன்னுமா சாப்பிடலை ? எனக்கேட்ட விஷ்ணுவிடம் “ எருமை ….எருமை…. நீ எங்க போய் தொலைஞ்சன்னு யோசிச்சே என் மண்டை காஞ்சிப்போய்டுச்சு . எப்படி எருமை எனானால நிம்மதியா சாப்பிட முடியும் “ எனக்கேட்டவனை இடைநிறுத்தி “ டேயப்பா போதும்டா …. முடியலை … மறுபடியும் ஆரம்பிக்காத …பசிக்குதுடா , போ போய் முதல்ல சாப்பாடு கொண்டுவா எனக்கூறி அனுப்பிவைத்த பிறகுதான் மூச்சே விட்டான் விஷ்ணு .
ராமிடம் உண்மையை மறைத்தது விஷ்ணுவிற்க்கு சற்று வருத்தத்தை அளித்த அதே நேரம் தன் நண்பன் தன் மீது கொண்டுள்ள பாசம் அவனின் உதட்டில் புன்னகையை அமரச்செய்தது .
உணவினைக்கொண்டுவர வெளியில்சென்ற ராம் அடுத்த ஐந்து நிமிடத்திற்க்குள் கையில் தட்டுக்களுடன் அறைக்கு வந்தான் . இடியாப்பமும் அதற்க்குத் தோதாக செய்திருந்த கடலைகறியின் மணமும் நாசியை பதம்பார்க்க இருவரும் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தனர் .
சாப்பிட்டு முடித்தவுடன் “ மச்சி டேய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுடா … நாளைக்கு மார்னிங் ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு போகப்போறோம் “ என ராம் கூறியவுடன் “ நாளைக்கு மார்னிங்கேவா ? அப்படி என்ன ஸ்பெஷல் இடம் ? என வினவினான் விஷ்ணு .
“ அதை நீ அங்க வந்த பிறகு தெரிஞ்சிக்கோ . இவ்வளவு நேரம் என்னை என்ன பாடு படுத்தின . அதுக்கு கொஞ்சமாச்சும் உன்ன பழிவாங்க வேணாம் . எங்க போறோம்னு யோசிச்சே உனக்கு மண்டைவலி வரனும் “ என பொறிந்தவன் அறையினின்று வெளியேறினான் .
அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவன் சென்றதும் “ அட போடா ஏற்கனவே மண்டைக்காய்ச்சல்லதான் இருக்கேன் . இனி புதுசாதான் வரனுமா ? என தனக்குள்ளே கேட்டுக்கொண்டான் “ அவன் சென்ற பிறகு கட்டிலில் பரவிய விஷ்ணு கதவு சாத்தப்படாமல் இருப்பதைக்கண்டு அதை மூடுவதற்க்காக எழுந்து சென்றான் . அப்போது அங்கு யாரோ வரும் அரவம் கேட்கவே வெளியே எட்டிப்பார்த்தான் . அங்கே யாரோ மொட்டைமாடிக்குச் செல்லும் படியில் ஏறிக்கொண்டிருந்த மாதிரி தெரியவே யார் என்று உற்றுக்கவனித்தான் . அது வேதா என தெரியவே “ இவ ஏன் இந்த நட்ட நடு ராத்திரியில் மாடிக்கு போய்ட்ருக்கா … தூங்காம அப்படி என்ன வேலை மொட்டைமாடியில “ என நினைத்தவன் அத்தோடு நில்லாமல் அவளைபின்தொடர்ந்து செல்லவும் செய்தான் .
இவன் மொட்டைமாடியை தளத்தை அடையும்போது அவள் மாடியின் சுவற்றில் கைவைத்தபடி காற்றின்வேகத்திற்க்கு ஏற்ப அலைபாயும்கூந்தலோடு இளம்மஞ்சள் நிற குர்தி மற்றும் கருப்பு வண்ண பட்டியாலா பேண்ட்டையும் தனது இரவு நேர உடையாக அணிந்துக்கொண்டு நின்றிருந்தவளைக்காணும்போது சற்றே கிறங்கித்தான் போனான் நம்மவன் .
யாரோ தன்னை ஊன்றிக்கவனிப்பது போல் உணரவே வேதா சுற்றும்முற்றும் பார்த்தாள் . தனக்கு பக்கவாட்டில் சில அடி துரங்களில் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த விஷ்ணுவைக்கண்டதும் நாவற்பழக்கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிய “ ஹாய் விஷ்ணு …. என்ன இந்த நேரத்தில இங்க வந்திருக்கிங்க? … எப்போ வந்திங்க “ என்று கேட்டவளின் மென்மையான குரலில் கலைந்தவன் “ இல்ல சும்மா தூக்கம் வரலை அஅஅதான் வந்தேன் “ என்று திக்கி திணறி கூறினான் .
அவன் கூறும் விதத்திலேயே அவன் கூறுவது பொய்தான் என உணர்ந்த இவள் சிரித்தமுகத்துடனே “ அப்படியா ! சரி சரி நான் நம்பிட்டேன் ….இன்னும் சமாளிக்காதிங்க “ என நக்கலடித்தாள் .
தன் குட்டு வெளிப்பட்டதை உணர்ந்த விஷ்ணுவோ அதை சமாளிக்கும் பொருட்டு “ என்னை விடு … நீ இந்த நேரத்தில இங்க என்ன பண்ணிட்டு இருக்க . நீ தூங்கலையா ? “ கேட்டான் .
அவன் இப்படி சட்டென்று கேட்டவுடன் “ இல்ல விஷ்ணு எனக்கு தூக்கமே வரலை … ஒரு மாதிரி மனசு பாரமா இருந்தது …இன்னதுன்னு சொல்ல முடியலை …. காலையில இருந்து உங்களை பார்க்காமா இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு …. ஏதோ என்னை விட்டு போன மாதிரி ஒரு ஃபீலிங்க் ….“ என கூறக்கொண்டே வந்தவள் சட்டென்று தான் கூறியதன் பொருள் உணர்ந்து நாக்கை கடித்து தலையில் அடித்துக்கொண்டாள் .
அவள் அப்படி சொன்னவுடன் அகமகிழ்ந்த விஷ்ணு கண்களில் குறும்பு மின்ன “ வேதா … இப்போ நீ என்ன சொன்ன … என்னைப்பத்திதான் நினைச்சிட்டு இருந்தியா ! “ என அவன் கேட்டவுடன் வெட்கத்தில் அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பிநின்றுகொண்டாள் . அவளை மேலும் சீண்டிப்பார்க்கும் விதமாக “ இப்படித்தான் உங்க ஊர்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவாங்களா ? ஒழுங்கா நீ என்ன சொன்னேன்னு சொல்லிடு “ என அவள் காதருகே குனிந்து சொன்னான் .
அவன் செய்கையில் சிலிர்த்த அவள் அவன் புறம் திரும்பி “ golden words are not repeated sir … நான் ஒரு முறைதான் சொல்லுவேன்… இன்னொரு முறை என்னால சொல்லமுடியாதுப்பா… என கூறினாள் .
அவளின் முகத்தை தன்னை நோக்கி உயர்த்திய விஷ்ணு “ வேதா … எனக்கு உன்னை பார்த்த முதல் பார்வையிலேயே உன்னை பிடிச்சிடுச்சின்னு பொய் எல்லாம் சொல்லமாட்டேன் . உன்னோட ஒவ்வொரு செய்கைகள் , நீ பேசற விதம் , பார்வையாலேயே ஆயிரம் அர்த்தம் சொல்லும் உன்னோட இந்த கண்கள்னு நீ கொஞ்சம் கொஞ்சமா என் மனசுக்குள்ள என்னையும் அறியாம நுழைஞ்சிட்டடா “ என வசனம் பேசிச்சென்றவன் அவள் விழிகளில் துளிர்த்த நீரைக்கண்டு பதட்டத்துடன் “ ஹே … என்னாச்சு ஏன் கண் கலங்குது … உனக்கு பிடிக்கலையா ? என வருத்ததுடன் கேட்டான் .
அவனின் வாயை தன் நீண்ட விரல்களினால் மூடியவள் “ இல்ல விஷ்ணு … என் மனசுக்குள்ள இருந்ததைதான் நீங்க சொன்னீங்க … ஆக்ட்சுவலி நானும் … “ எனக்கூறியவள் அவனின் கண்களைக்காண வெட்கப்பட்டு சிரம் தாழ்த்தினாள் . மீண்டும் அவளின் சிரம் உயர்த்தி அவளின் பார்வையோடு தன் பார்வையை ஒன்றிணைத்தவன் “ நீயும்? சொல்லவந்ததை முழுசா சொல்லுடா … “ என கண்ணைச்சிமிட்டிக்கூறியவனிடம் நாணப் புன்னகையை மஞ்சளைப்போல் முகத்தில் பூசிக்கொண்டு “ i am in love with you vishnu …நானும் உங்களை விரும்பறேன் “ என கூறி அவன் நெஞ்சினில் சாய்ந்துகொண்டாள் . “ எனக்கும் நீங்க எப்போ என் மனசுக்குள்ள வந்தீங்கன்னு சரியா சொல்ல முடியலை . ஆனால் உங்களைப் பார்க்காத நேரம் எல்லாம் உங்களை மறுபடியும் எப்போ பார்ப்போம்னு என் மனசு கேட்டுக்கிட்டே இருக்கும் . முதல்ல இது வெறும் ஆர்வக்கோளாறா கூட இருக்கலாம்னு நினைச்சேன் பட் இன்னைக்கு என்னால ஒரு வேலையில் கூட கான்ஸன்ட்ரேட் பண்ண முடியல . நல்லா யோசிச்ச பிறகுதான் இது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் இல்லை உங்களை மனசார நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்னு உணர்ந்தேன் எனக்கூறி மேலும் அவன் நெஞ்சில் நன்றாக சாய்ந்துகொண்டாள் .
எதிர்பார்க்காத அவளின் இந்த திடீர் செயலினால் ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடியவன் அவளின் தலையில் மென்மையாக வருடி “ ஐ லவ் யூ டா “ என்ற வார்த்தையை உதிர்த்து அவளை மென்மையாக தன்னோடு அணைத்துக்கொண்டான் .
இதுவரையும் மனக்குழப்பத்தில் உழன்றவன் தன்னவளின் அருகாமை தந்த புத்துணர்ச்சியில் அதற்க்கு சிறிதுநேரம் விடுமுறையை அளித்துவிட்டு அவளின் இடையை சுற்றிவளைத்து அவளின் நெற்றியில் தன் முத்திரையை பதித்தான் .
அவர்களின் இந்த நிலையைக்கண்டு விண்ணில் உள்ள நட்சத்திரங்களும் நாணத்தில் மேகப்போர்வையை தன்னகத்தே போர்த்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டன .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…