சித்திரை மாதம் கதிரவன் சீக்கிரம் எட்டிப்பார்க்கும் வேளையில் அந்த ஊரின் ஒளிவிளக்கு அணைந்த செய்தி ஊரே பரவியது.
காசு பணம் இருந்தால் போதும் என்று ஓடி ஓடி உழைத்து சேர்ந்துகொண்டிருந்த கூட்டத்திடம் படிப்பின் அவசியத்தை ஊர் மக்கள் மனதில் விதைத்தவர் இன்று புதைக்கப்பட வேண்டிய நேரம் வந்திருந்தது.
அன்றைய காலகட்டத்தில் அந்த ஊரின் ஆதிக்க சாதியில் பிறந்த இவர் படிப்பு என்பது அனைவருக்கும் சமம் என்று கல்வி புரட்சி செய்தவர்.
அன்றைய இளைய சமுதாயத்தினரிடம் தீண்டாமை தவறு என்றும் சாதி என்பது தொழிலை குறிக்கும் வார்த்தை மட்டும் தான் என்றும் சாதியில் உயர்வு தாழ்வு என்பது இல்லை என்றும் உணர்த்திய மாமனிதர்.
அதன்படியே வாழ்ந்த மனிதர் அவர். அந்த ஊர் மட்டும் இல்லை. சுற்றி இருக்கும் பல ஊர்களில் உள்ள மக்களுக்கு இவர் தான் கடவுள்.
அடிமை சாதி என்று ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரின் மகன்களும் மகள்களும் இந்த நாட்டின் உயர்ந்த அதிகார பதவிகளிலும் உலக அரங்கில் பல சாதனைகளையும் செய்ய காரணமாக இருந்த கந்தசாமி வாத்தியார் இறந்த செய்தி கேட்டு அந்த மாவட்டமே கதிகலங்கி நின்றது.
வயது 80ஐ தாண்டி இருந்தாலும் அவரின் முகமும் உடலும் 40வயதை போல தான் இருக்கும். அந்த அளவுக்கு உடல்நலம் மீது அக்கறை கொண்ட மனிதர்.
சொந்த பந்தங்கள் வீட்டை நோக்கி வரவும் மற்ற வேலைகளும் தொடர்ந்து நடந்தது.
கந்தசாமி வாத்தியாரின் மறுபக்கம் மிகவும் கொடூரமானது.
பள்ளியில் ஆண் பெண் என்றெல்லாம் பார்க்கமாட்டார். அடிப்பதில் டாக்டர் பட்டம் பெற்றவர் போல இருக்கும் அவரின் அடி.
அவர் ரோட்டில் வருவதை பார்த்தால் மாணவர்கள் மட்டுமில்லை. அவரிடம் படித்து தங்கள் மகனை படிக்க வைக்கும் முன்னாள் மாணவர்கள் கூட பயத்தில் ஓடி ஒழியும் அளவுக்கு கோபக்காரர்.
அவரை தட்டிக்கேட்க அன்றைய பெற்றோர்களால் முடியவில்லை. காரணம் தன் பிள்ளை எப்படியாவது படிக்க வேண்டும். இன்னொன்று அவரின் சாதியும் செல்வாக்கும்.
அவரின் அடிக்கு பயந்து பள்ளிக்கூடம் பக்கமே வராமல் போனவர்கள் பலர் உண்டு. இதில் ஊரைவிட்டு ஓடியவர்கள் தனி கணக்கு. (பள்ளிக்கூடம் போகவில்லை என்றால் அப்பா அடிப்பார். போனால் கந்தசாமி வாத்தியார் அடிப்பார்)
6.5 அடி உயரம். உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டு. புல்லட் வண்டி. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து பள்ளிக்கு வருவார்.
இன்று அதே உடையில் அவரின் உடல் அசைவற்று தரையின் மீது இருந்தது. சுற்றியும் பெண்களின் ஒப்பாரி சத்தம் ஊரின் தலைவாசல் வரை கேட்டது.
பல ஊர்களில் இருந்து பலரும் வந்துகொண்டிருந்தனர்.
இறந்தவர் வீட்டில் அடக்கம் செய்வதற்கு முன் செய்யும் சில சம்பிரதாய வேலையை செய்யும் செல்லமுத்து வாத்தியாரின் கை கால் வாய்க்கட்டு கட்டிவிட்டு மற்ற வேலைகளை கவனித்து வந்தார். அவரின் மகன் ரவி விசயம் கேட்டு அப்பாவுக்கு உதவி செய்ய வந்துகொண்டிருந்தான்.
ரவி மிகவும் நன்றாக படித்த மாணவன். குடும்ப வறுமையிலும் 10வரை படித்தான். அதற்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை. வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த காரணத்தால் தன் தந்தையின் தொழிலையே செய்ய ஆரம்பித்தான். ரவியும் கந்தசாமி வாத்தியாரின் முன்னாள் மாணவன் தான்.
கந்தசாமி வாத்தியார் உடலை குளிப்பாட்டி பேரன் பேத்திகள் நெய்பந்தம் பிடித்து சீர்கள் முடிந்துவிட தேர்கட்டி அவரின் உடல் இடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல தயாரானது.
“டேய் ரவி.. நீ காட்டுக்கு போ. அங்க காரியத்தை நீ பாத்துக்க. இங்க ஆக வேண்டியதை நான் பாத்துக்கிறேன்” என்று செல்லமுத்து சொல்ல, தேர்வலம் தெற்கே நோக்கி நகர துவங்கியது.
அவரின் உடலை தகனம் செய்ய தயாராக இருந்தது எரிமேடை.
காட்டில் செய்யும் சம்பிரதாயங்களை ரவி செய்து முடித்தான். அவரின் உடல் விறகுகள் மீது வைக்கப்பட்டு இறுதி வாய்க்கரிசியும் போடப்பட்டது.
“ஏனுங்க இன்னும் யாராவது இருந்தா வந்து அரிசி போட்டுடுங்க” என்று கத்தினான் ரவி.
“டேய் அவ்வளவு தான். கட்டெல்லாம் அவுத்து விட்டுரு. ஆக வேண்டியத பாக்கலாம்” என்றார் கூட்டத்தில் இருந்த பெரியவர்.
ரவியும் கால் கட்டு கைகட்டை அவிழ்த்து விட்டான். அவரின் வாய்க்கட்டை அவிழ்க்க சென்ற போது அவனின் கை தானாக பின்னோக்கி இழுத்தது.
மீண்டும் அவன் முன்னேற கைகள் மீண்டும் இழுத்தது.
“ஏன்டா. வாய்க்கட்ட அவுக்காம என்னடா பண்ணிட்டு இருக்க. வானம் கருக்கல் போடுது. சீக்கிரம் வேலைய முடி” என்றார் பெரியவர்.
அப்போது கந்தசாமி வாத்தியாரின் முகத்தை பார்த்தான் ரவி. அவன் முகத்தில் வேர்வை சட்டென்று துளிர்த்தது.
வாத்தியாரின் அந்த முகம் அவனுக்கு உயிர்ப்போடு இருப்பதை போல உணர்ந்தான். அவன் கைகள் நடுங்க ஆரம்பித்தது. ஆனால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொண்டை அடைத்தது. அந்த நிமிடம் அவன் சிந்தையில் வந்து சென்றது 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம்.
இன்று மதிய சத்துணவு சாப்பாடு அரசு பள்ளிகளில் வழங்குவது போல அன்றைய காலகட்டத்தில் பள்ளிகளில் பால் பவுடர் மூலம் தயாரிக்கப்பட்ட பால் அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துக்காக தரப்படும்.(அப்போது சத்துணவு திட்டம் இல்லை)
ஒருநாள் பல மாணவர்கள் அந்த பால் குடிக்கவில்லை. பால் நிறைய மிச்சம் ஆகிவிட்டது.
வந்தார் கந்தசாமி வாத்தியார். மிச்சம் இருக்கும் பாலை பார்த்தார். பால் குடிக்காத மாணவர்களை அழைத்தார். மொத்தம் 13 பேர்.அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் ரவியும் ஒருவன்.
அதில் ஒரு மாணவனை அழைத்து தன் டேபிள் அருகில் இருக்கும் மூங்கில் குச்சி கட்டை எடுத்து வர சொன்னார்.
வரிசையாக ஒவ்வொருவருக்கும் தன் பாணியில் குச்சி உடையும் வரை உள்ளங்கையில் அறிவுரை கூறினார்.
ரவி வந்தான். “நீட்டுடா கை”
அங்கே வேணாம் சார். இனிமேல் பண்ண மாட்டேன். ஒரு தடவ மன்னிச்சிடுங்க சார் என்று கேட்க வாய்ப்பில்லை. அடி கட்டாயம் வாத்தியாரிடம்.
கையை நீட்டினான் ரவி. அவனுள் இருந்த பயமே அவனின் இரத்தத்தை உடலில் உறையும் அளவுக்கு செய்தது. முதல் அடி கையில் விழுந்தது. துள்ளி குதித்து கத்தினான். கண்ணில் நீர் அருவியாக வந்தது.
ஆனால் இதெல்லாம் கந்தசாமி வாத்தியாரிடம் எடுபடாது. குச்சி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா அடிவாங்குபவன் காலி.
மீண்டும் அடித்தார். ரவி வலியால் துடித்தும் பயனில்லை. அடிகள் தொடர்ந்து குச்சி உடைந்த போது அவன் கை சுண்டுவிரலில் முங்கில்கணு பட்டு இரத்தம் வந்தது. இது அவனுக்கே தெரியாது.
அடித்த அடியில் கை கீழ் நோக்கி போக அப்படியே சிலையாகி நின்றான். அடித்த அடியின் வலியில் சதை கிழிந்து இரத்தம் வரும் வலியை அவன் உணரவில்லை.
அங்கு இருந்த ஒரு மாணவன் இதை பார்த்து சொல்ல துணி வைத்து கட்டப்பட்டது. பிறகு மற்ற மாணவர்களை அதே பாணியில் கவனிக்க தொடங்கினார் வாத்தியார்.
தன் 10வருட பள்ளி படிப்பில் முதல் முறையாக ஒரு ஆசிரியரிடம் அடி வாங்கினான் ரவி. அந்த அடியில் அவனுக்கு ஒரு வாரம் காய்ச்சலே வந்துவிட்டது.
காய்ச்சல் சரியாகி மீண்டும் பள்ளி சென்ற போது வாத்தியார் மீது ஏற்பட்ட பயம் அவன் மனதில் ஆணிவேராக பதிந்தது.
அந்த பயமே இன்று எழ முடியாமல் படுத்துகிடந்தாலும் அவரின் முகத்தை தொடும் அளவிற்கு தைரியத்தை அவனுக்குள்ளே தர மறுத்தது.
மீண்டும் வாய்க்கட்டை அவிழ்க்க முயற்சிக்க முடியவில்லை.
“என்னடா ரவி யோசிச்சிட்டு இருக்க. உங்க வாத்தியார் செத்துட்டாருனு வருத்தப்படுறியா? சீக்கிரம் வாய்க்கட்டை அவுருடா. நெறைய வேலை இருக்கு” என்றார்.
மனதில் தைரியத்தை வரவழைத்து மீண்டும் முயற்சி செய்ய கட்டை தொட மட்டுமே முடிந்தது. பயம் அதிகமாக உடல் வியர்த்து கொட்டியது.
தனக்குள்ளே அவர் இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்று கூறிக்கொள்ள ஆரம்பித்தான். இரண்டே நொடியில் கட்டை அவிழ்த்துவிட்டான் ரவி.
அவரின் முகம் மிரட்டும் தொனியில் இருக்கவே சட்டென்று விலகி வந்தான் ரவி.
அக்னி சுவாலை அவரை அணைக்க தொடங்கியது. ஊராரும் திரும்பினார்கள் வீட்டுக்கு. வானமும் தன் பங்கிற்கு கண்ணீர் துளிகளை சிந்தியது.
வீட்டுக்கு வந்த ரவி இரவு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு உறங்கினான். காலையில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது…
அவனால் எழ முடியவில்லை. உடல் வலித்தது. அனலாய் கொதித்தது. அதே பயத்தில் வந்த காய்ச்சல்.
சிரமப்பட்டு எழுந்தான். தன் இடது கை சுண்டுவிரலை பார்த்து ஒரு புன்னகை புரிந்தான்.
“மனுசன் செத்த அப்புறம் கூட நமக்கு காய்ச்சல் வர வச்சுட்டாரு பாரு” என்று நினைத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட தயாரானான்.
- சேதுபதி விசுவநாதன்